கட்டுரை, பேட்டி, சமஸ் கட்டுரை, கல்வி, ஆளுமைகள், புத்தகங்கள் 5 நிமிட வாசிப்பு

சங்கராச்சாரியார், பெரியார் இருவருக்கும் இடம் உண்டு: ச.கௌதமன் பேட்டி

சமஸ் | Samas
18 Dec 2022, 5:00 am
0

மிழில் உள்ளூர் வரலாறுகளை எழுதும் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் ‘அருஞ்சொல்’ ஆசிரியர் குழுவானது, ‘குளோபலியன் அறக்கட்டளை’யுடன் இணைந்து அப்படி உருவாக்கியிருக்கும் முதல் நூல் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’. இந்திய கல்வியின் மீதான விமர்சனத்தையும், தீர்வாகக் கல்வியை உள்ளூர்மயப்படுத்துவதையும் முன்வைக்கும் இந்த நூலானது, கூடவே உள்ளூர் அளவில் பெரும் பணிகளை ஆற்றிய ஆளுமைகள் தொடர்பான வரலாற்றுப் பதிவுகளையும் ஆவணப்படுத்தியிருக்கிறது. நூலில் அப்படி இடம்பெற்றிருக்கும் ஆசிரியர், கல்வியாளர் ச.கௌதமனுடைய பேட்டி இது.

ஸ்ரீநிவாசனால் தேர்ந்தெடுக்கப்பட்ட, தேசிய பள்ளியின் பெயர் பெற்ற ஆசிரியர்களில் ஒருவர் ச.கௌதமன். அமைதியானவர், அதேசமயம் கறாரானவர்; கண்டிப்பானவர், அதேசமயம் நட்பார்ந்த அணுகுமுறையைக் கொண்டவர் என்கிற மதிப்பீடு மாணவர்கள் இடையே கௌதமன் மீது உண்டு. நல்லாசிரியர், பள்ளி மீதும் மாணவர்கள் மீதும் பெரும் பற்று கொண்டவர் என்பதையெல்லாம் தாண்டி கௌதமனின் முக்கியத்துவம், ஸ்ரீநிவாசனுடைய மகன் சேதுராமனின் போட்டியாளர் அவர் என்பதும் ஆகும். தலைமை ஆசிரியர் பொறுப்புக்கான பந்தயத்தில் சேதுராமனுக்கு ஒரு அடி முன்னே இருந்த மூத்தவர். தலைமை ஆசிரியர் பதவி சேதுராமனிடம் சென்றபோது, தன்னைத் தேடிவந்த உதவித் தலைமை ஆசிரியர் பொறுப்பையும் நிராகரித்தவர். இன்றைக்குத் தன்னுடைய பள்ளியை எப்படி மதிப்பிடுகிறார்?

உங்களுடைய கௌதமன் என்கிற பெயர் ஈர்க்கிறது. வரலாற்றுரீதியாகக் காவிரி பிராந்தியம், பௌத்தம் செழித்து மறைந்த இடம், ஒரு நெடிய இடைவெளிக்குப் பிறகு பெரியார் இயக்கம் இங்கே வேரூன்றியபோது மீண்டும் சித்தார்த்தன், புத்தன், கௌதமன் என்கிற பெயர்களெல்லாம் மேலெழும்பி வந்தன. உங்கள் பெயர் பின்னணி என்ன? 

சந்தேகமே இல்லாமல் பெரியார் செல்வாக்குதான். என்னுடைய தந்தையார் சண்முகம் ஒரு சுய சிற்பி. இளம் வயதிலேயே விவசாயம் உட்பட எல்லாப் பொறுப்புகளையும் சுமந்தவர். ஐந்தாம் வகுப்பு வரை படித்தவர் பன்னிரண்டு வயதில் விவசாயத்துக்கு வந்துவிட்டார். வயலில் விளைச்சல் பிரச்சினை ஆனபோது என்னுடைய பாட்டி, ‘உண்டியலில் சேர்த்து வைத்திருந்த காசைப் பெருமாள் கோயிலுக்குப் போய் காணிக்கை செலுத்திவிட்டு வா; வழி பிறக்கும்!’ என்று சொல்லியிருக்கிறார். இப்படி அவர் சேர்ந்து வைத்திருந்த தொகை 17 ரூபாய்.

என் தந்தையார் யோசித்திருக்கிறார். இந்தக் காசுக்கு உரம் வாங்கினால் இரண்டு சாகுபடிக்கு அது உதவும் என்று உரத்தை வாங்கிக்கொண்டு வந்துவிட்டார். இப்படிபட்ட மனிதர் பெரியாரைத் தலைவராக வரித்துக்கொண்டதில் என்ன விஷேசம் இருக்க முடியும்? 

என் அப்பாவுக்கு கல்யாணம் நிச்சயத்திருந்திருக்கிறார்கள், அதற்கு 16 நாட்கள் முன்பாக என் தாத்தா இறந்துவிட்டார். அப்பா யார் பேச்சையும் கேட்கவில்லை, ‘அது பாட்டுக்கு அது, இது பாட்டுக்கு இது!’ என்று சொல்லி முன்பு திட்டமிட்ட அதே நாளில் - அதாவது தாத்தாவின் கருமாதி நாளில் - கல்யாணம் செய்துகொண்டிருக்கிறார். சொந்தக்காரர்கள் பலர் ‘துஷ்டன்’ என்று இவரைத் திட்டியதோடு, கல்யாணத்துக்கும் வரவில்லையாம். நான் பிறந்தபோது, பெரிய கூட்டம் என்னைப் பார்த்துபோக வந்ததாக என் வீட்டில் சொல்வார்கள். ‘அப்பன் கருமாதி நாளில் கல்யாணம் செய்துகொண்டவனுக்குப் பிறந்த பிள்ளை எப்படி பிறந்திருக்கிறது, கூனா, குருடா, தலையில் கொம்பு உண்டா, வால் முளைத்திருக்கிறதா?’ என்று பார்த்துபோக! 

எனக்கு கௌதமன் என்று என் தந்தையார் பெயரிட்டது ஆச்சரியம் இல்லை. என் தங்கைகளுக்கு சூர்ப்பனகை, நீதி, நேர்மை என்று பெயரிட்டவர் அவர். அம்மாவும் அப்பாவும் ஜாடிக்கேத்த மூடி, சரஸ்வதி என்கிற தன் பெயரைக் குஞ்சம்மாள் என்று மாற்றிக்கொண்டவர் என் அம்மா. அவர் பூ வைத்தோ பொட்டு வைத்தோ நான் பார்த்ததில்லை. 1957 அரசமைப்புச் சட்ட எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்று ஆறு மாதங்கள் சிறையில் இருந்தவர் என் அப்பா. 

இப்படி ஒரு பிராமணிய எதிர்ப்பு பின்னணி கொண்ட நீங்கள் எப்படி பிராமணர்கள் நிரம்பிய, பிராமண சம்பிரதாயங்கள் நிறைந்த தேசிய பள்ளியில் பணியாற்ற தலைப்பட்டீர்கள்? 

தேசிய பள்ளி பிராமணர் ஒருவரும் பிராமணர் அல்லாத ஒருவரும் சேர்ந்து உருவாக்கியப் பள்ளி. ஆசிரியர்களாக பிராமணர்களே மிகுந்து இருந்தார்கள் என்றாலும், இந்து மதச் சடங்கு, சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்பட்டன என்றாலும் எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் இடம் அளிக்கும் ஒரு மரபு இங்கே இருந்தது. 

ஆசிரியர் ஆவதற்கு முன்பே நான் அந்தப் பள்ளியின் மாணவன் நான் என்கிற உறவு இங்கே முக்கியமானது. பிரார்த்தனைக் கூட்டங்கள், சங்கராச்சாரியார் போன்ற சாமியார்கள் வரும் நாட்களில் இந்து மதம் சார்ந்த ஒரு சூழலை உணர முடியுமே தவிர ஏனைய விஷயங்களில் ஒரு மதச்சார்பின்மைத்தன்மையை எங்கள் பள்ளி கொண்டிருந்தது. 

எனக்கு முதலில் வேலை கிடைத்த இடம் அந்தமான் நிக்கோபார். நான் அங்கே வேலையில் இருந்த சமயத்தில்தான் தேசிய பள்ளியிலிருந்து ஆசிரியப் பணிக்கான தேர்வு நடந்தது. நேர்முகத் தேர்வுக்கு நான் வந்தடையவே இரண்டு வாரப் பயண காலம் ஆனது. குறித்த நாளில் நான் நேர்முகத் தேர்வுக்கு வந்தடைய முடியாத நிலை. அன்றைக்கு நடந்த தேர்வில் ஒரு பிராமண ஆசிரியரைத் தேர்ந்தெடுத்துவிட்டார்கள். பிற்பாடு நான் வந்து என்னுடைய சூழலை விளக்கியபோது ஏற்றுக்கொண்டு வாய்ப்பு அளித்து என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். இதற்குக் காரணம் அன்றைய தலைமையாசிரியர் வி.ஸ்ரீநிவாசன். நேர்முகத் தேர்வுக்கு நான் குறித்த நாளில் வர முடியாததையே காரணமாகக் காட்டி ஒரு பிராமணரை அவர் நினைத்திருந்தால் ஆசிரியராகத் தேர்ந்தெடுத்திருக்கலாம். அப்படிச் செய்யவில்லை. பெரிய மனிதர் அவர்! 

பள்ளிக்கூடத்தில் ஒருபுறம் சங்கராச்சாரியார் வந்து பூஜைகள் நடத்திச் சென்றாலும், இன்னொரு புறம் என்னைப் போன்றவர்கள் ‘சாதி இல்லை, மதம் இல்லை; கடவுளும் ஒரு கற்பிதம்தான்!’ என்று வகுப்பறையில் பேசுவதற்கான இடமும் இருந்தது. நான் வகுப்பறையில் கழிப்பறையை எப்படி உபயோகிக்க வேண்டும், டூத் பிரஷை எப்போது மாற்ற வேண்டும் என்றெல்லாம்கூட பேசுபவன். ஒருமுறை பாலியல் கல்வி தொடர்பாகப் பேசிக்கொண்டிருந்தேன், அப்போது தாளாளர் ராமதுரை ரவுண்ட்ஸ் வந்துகொண்டிருந்தார். வயதானவர், மரபார்ந்தவர். ஆகையால், நான் அமைதி ஆனேன் ‘பிரமாதமா வகுப்பு ந டத்திட்டு இருந்த; ஏன் நிறுத்திட்ட? நாம பசங்களுக்கு எல்லா விஷயங்களையும்தான் தெரியப்படுத்தணும், ப்ளீஸ் கேரி ஆன்!’ என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

தேசிய பள்ளியின் தன்மை மட்டுமல்லாது மன்னார்குடியின் தன்மையும்கூட இதுவென்று சொல்வேன். 

தலைமை ஆசிரியர் பொறுப்புக்கான பந்தயத்தில் நீங்கள் முன்னே இருந்திருக்கிறீர்கள். அது கிடைக்காதது உங்களுக்கு அதிருப்தியை உண்டாக்கவில்லையா? 

பணிமூப்பு அடிப்படையில் நான் மூத்தவன், என்னைப் போல நான்கு ஐந்து பேருக்குப் பிறகே சேதுராமன் இருந்தார். ஆனால், பணிமூப்பு மட்டுமே யார் தலைமை ஆசிரியர் ஆக வேண்டும் என்பதை இங்கே தீர்மானிப்பதில்லை. எங்கள் பள்ளியில், நிர்வாகம் வைத்திருக்கும் வரையறைகளும் சேர்ந்த அதைத் தீர்மானிக்கும். சேதுராமன், பள்ளியின் இரு நிறுவனர்களில் ஒருவரின் குடும்பப் பிரதிநிதி. இளையவர் என்றாலும் அவரும் தகுதி வாய்ந்தவராக இருந்தார். மேலும், எங்கள் பள்ளி வரலாற்றில் ஒரு நாயகராக இருந்த முன்னாள் தலைமை ஆசிரியர் வி.ஸ்ரீநிவாசனின் மகன் அவர். தன் மகன் அந்தப் பொறுப்பில் அமர வேண்டும் என்று வி.எஸ் விரும்பினார். இன்னொரு நிறுவனரான உடையார் குடும்பப் பிரதிநிதியான சாமிநாத உடையாரின் விருப்பமும் அதுவாகவே இருந்தது. 

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

மன்னை: மாண்புமிகு மாணவர்

சமஸ் | Samas 23 Aug 2022

இந்தப் பின்னணியில் நாம் தலைமை ஆசிரியர் ஆவோம் என்று ஆசைப்படலாமே அன்றி அப்படி ஒரு வாய்ப்பு இருப்பதாக யாரும் கணக்கிட்டதில்லை. சேதுராமன் பதவிக்கு வரட்டும் என்றே நானும் விரும்பினேன். எனக்கு அவர் நல்ல நண்பரும்கூட. ஆனால், இந்த அதிகார மாற்றம் அவ்வளவு இணக்கமாக நடக்காமல் போனது ஒரு சங்கடம். நிர்வாகம் எங்களைக் கூப்பிட்டு பேசாமல் அறிவித்தது எனக்கு வருத்தத்தை தந்தது. எனக்கு உதவித் தலைமை ஆசிரியர் பொறுப்பு கொடுக்கப்பட்டது. நண்பர் என்றாலும் சேதுராமனின் பார்வைக்கும் என் பார்வைக்கும் கருத்து வேறுபாடுகள் உண்டு என்பதால் நான் ஏற்க மறுத்தேன். ஆனால், இதற்கு பிறகும் எங்களுக்கு இடையிலான உறவிலோ எந்த மாற்றமும் இல்லை. பரஸ்பர மரியாதையுடன் அவரவர் இடத்தில் செயல்பட்டோம். என் மகளுடைய திருமணப் பத்திரிகையை முதல் ஆளாக சேதுராமனுக்குதான் கொடுத்தேன். பத்திரிகை அட்டைப் படமே எங்கள் பள்ளிக்கூடப் படம்தான். அந்த அளவுக்குப் பள்ளிக்கூடம் மீது பெரிய நேசம் எனக்கு உண்டு. அப்படி இருக்க எப்படி அதிருப்தி வரும்? சின்ன வருத்தம் இருந்தது. பிற்பாடு அதுவும் கரைந்துவிட்டது.

ஸ்ரீநிவாசன், சேதுராமன் இருவருடனும் பணியாற்றியிருக்கிறீர்கள். இருவரையும் எப்படி மதிப்பிடுவீர்கள்?

ஸ்ரீநிவாசனுடைய காலம் பொற்காலம் என்பதிலும், மகா ஆளுமை அவர் என்பதிலும் எந்தச் சந்தேகமும் இல்லை. தேர்ந்த நிர்வாகி. நல்லாசிரியர். முன்னுதாரணர். அவர் காலத்தில்தான் நான் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டேன். என்னுடைய ஆளுமையில் அவருடைய பங்கு உண்டு. சேதுராமன் கடுமையான உழைப்பாளி. இன்றைக்குப் பள்ளிக்கூடமாக விரிந்து நிற்கும் பல கட்டிடங்கள் அவர் காலத்தில் கட்டப்பட்டவை. ஆசிரியராகவும் நிறைய மெனக்கெடுவார். நிர்வாகத்தை அணிச் செயல்பாடாக கொண்டுசென்றிருந்தால் இன்னும் அதிகமான காரியங்களை அவர் செய்திருக்க முடியும். தானே இழுத்துப் போட்டுக்கொண்டு ஓடியதால் அவர் தேடிக்கொண்ட சிரமங்கள் அதிகம். எப்படியும் தேசிய பள்ளி வரலாற்றில் முக்கியமான இரு தலைமையாசிரியர்கள் அவர்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை! 

(ஒரு பள்ளி வாழ்க்கை நூலிலிருந்து…)

 

நூலைப் பெற அணுகுங்கள்...

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


3

2

கே.எல்.ராகுல்ஏழைகளே இல்லை - இந்தியாவில்!ராஜன் குறை சமஸ்தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர்கேடுதரும் மருக்கள்அல்சர் துளைஎப்படி இருந்தது பண்டைய தமிழகம்?பால் உற்பத்தியாளர்கள்இந்திய அரசியல்அராபிகாஇயற்கை வேளாண்மைநிதிநிலை அறிக்கை 2023நவீனத் தமிழ்க் கவிதைகூகுள் பிளே ஸ்டோர்நிகர கடன் உச்சவரம்புஹண்டே பேட்டிகண்புரை நோய்சாட்சியச் சட்டம்அ.அண்ணாமலை கட்டுரைமெய்த்திவிவசாயிகள் போராட்டம்இடிப்புஏன் கூடாது ஒரே தேர்தல்?சிவில் உரிமைகளுக்கான மையம்கோர்பசெவ்: வரலாற்றில் ஓர் அவல நாயகர்வகிதா நிஜாம்சிபிஎஸ்இபொருளாதார மேன்மைஆண்களுக்கே உண்டான அவதி!தேசிலு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!