கட்டுரை, கல்வி, மொழி 7 நிமிட வாசிப்பு

இந்திய மொழிகளுக்கு எதிர்காலத் திராணி இருக்கிறதா?

பிரதாப் பானு மேத்தா
27 Oct 2022, 5:00 am
3

ந்தியாவின் மொழியியல் பன்முகத்தன்மை இரண்டு வெவ்வேறு சவால்களை முன்னிறுத்துகிறது. 

முதலாவது, பெரிதும் எதிர்க்கப்படும் ஒன்றிய அரசின் முயற்சியான நாட்டின் முதல் மொழியாக ‘இந்தியைத் ‘திணிக்கும் முயற்சி’.

இலங்கையின் கசப்பான வரலாற்றுப் போக்கு இந்தியாவில் எதிரொலிக்காமல் நாம் தப்பித்த காரணம், இந்தியா கடைப்பிடித்துவரும் மும்மொழிக் கொள்கையும், மாநிலங்களின் மொழிவாரி மறுசீரமைப்பும், அறுபதுகளின் லோஹியாவாதிகளும் பாஜகவும் நீங்கலாக, ஆட்சியாளர்கள் ஒருமொழிக் கொள்கையினைப் பெரிய அளவில் திணிக்காமல் இருந்ததாலும்தான். 

இது ஒருபுறம் இருக்க, பிரதமர் மோடி, ‘ஆங்கிலமானது அறிவுக்கான அளவுகோள் அல்ல, வெறும் மொழி மட்டுமே’ என்று அண்மையில் பேசியதும், இந்தியில் கொண்டுவரப்பட்ட மருத்துவப் பாடப்புத்தங்கள் தொடர்பாக எழுந்த சர்ச்சைகளும், கூடவே தொழிற்படிப்புகளுக்கும் இந்தி உள்ளிட்ட உள்ளூர் மொழிகளைப் பயன்படுத்த ஊக்குவிக்கும் நாடாளுமன்ற அறிக்கையுமாகச் சேர்ந்து மொழி அரசியலை மறுபடியும் மேடையேறச் செய்துவிட்டன.

‘இந்தித் திணிப்பு’க்கு எதிராகப் புகைந்துவரும் வாதங்களுக்குள் தேடினால் உலக அரங்கில் நம் தாய்மொழிகளின் அவலநிலை எனும் நுண் நெருப்பு புலப்படும்.

இரண்டாவது சவால், இந்தியாவின் பன்மொழிச் சோதனையிலும் சீரின்மைகள் ஏராளம். அரசமைப்பின் அடிப்படையில் பன்மொழிகளுக்கு இடம் அளிக்கப்பட்டிருந்தாலும், ஆங்கிலம் –  இந்தி – உள்ளூர் மொழிகள் இம்மூன்றும் ஒரே படிநிலையில் வைக்கப்படுவது இல்லை. 

அதிகாரத்திற்கும் அறிவுப்புலத்திற்கும் உயர் சலுகைகளுக்கும் பயன்படும் ஆங்கிலத்திற்கு முதற்படி. அடையாளத்திற்கும் பண்பாட்டிற்கும் மட்டுமே பயன்படும் தாய்மொழிக்கு அதற்கடுத்த படி. 

இதன் அடிப்படையில் பார்த்தால், இந்தி மொழி எதிர்கொள்ளும் உச்ச சவால், அதைத் தென்னகத்தில் திணிப்பதில் அல்ல. ‘திணிப்புச் சவால்’ எளிதில் எதிர்கொள்ளக் கூடியது. அப்படியென்றால், வேறன்ன? இந்தி மொழியில் இயங்குவோருக்கு, அறிவியல் மட்டுமின்றிக் குடிமை அறிவு, உயர் சட்ட அறிவு உட்படப் பல அறிவுச் சாளரங்கள் மூடி இருப்பதுவே பெரும் சவால். 

ஆங்கிலப் புலத்தினர், இந்தியை ஏதோ ஒரு வித மனக்குறுகலுக்கும், தாழ்நிலைக்கும் குறியீடாகக் கருதிவந்துள்ளனர். தமிழ், கன்னடம், வங்காளம் ஆகிய ஏனைய பல இந்திய மொழிகளுக்கு இந்தக் குறை அவ்வளவு ஆழமாக இராவிட்டாலும், முற்றிலும் இல்லை எனச் சொல்லிவிட முடியாது. 

இருவகை இந்தியர்கள்

இந்திய மொழிச் சோதனையின் சீரின்மை, அதன் பன்மைத்துவத்தின் விளைவு அல்ல. அடையாளத்திற்கும் பண்பாட்டிற்குமான மொழி வேறு; அறிவுக்கும், சலுகைக்கும், உலகை அணுகுவதற்குமான மொழி வேறு எனும் போக்குதான் இந்தச் சீரின்மைக்கு உண்மைக் காரணம்!

இந்தச் சீரின்மை நாடெங்கிலும் பேரளவில் ஊறியிருக்கிறது. இது நிலைக்குமா? வட மாநிலங்களில் பாஜக அடைந்துவரும் பெரும் வெற்றிகளுக்கு அவர்கள் முன்வைக்கும் இந்தித் திணிப்புத் திட்டம் காரணம் அல்ல. இரண்டாம் தரத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டதாக உணரும் இந்திப் பண்பாட்டிற்குள் புரையோடிவிட்ட தாழ்வு மனப்பான்மையை அறுவடை செய்ததே அவர்களது வெற்றிக்கு வழிவகுத்தது. ‘ஆங்கிலம் அறியாததால் அறிவுப் புலத்திலும் ஆட்சியாதிகார வட்டங்களிலும் தாங்கள் பின்தங்கிவிட்டோம்!’ என்ற எண்ணம் கோடிக்கணக்கான இந்தியர்களின் நெஞ்சங்களில் குடிக்கொண்டுள்ளது திண்ணம்.

அடுத்ததாக, மொழிப் பன்மைத்துவத்தினைச் சீராகச் செயல்படுத்த ஆட்சியாளர்கள் தவறிவிட்டார்கள். இந்தியாவின் இருமொழி முறைமை வெறும் மேற்பூச்சு மட்டுமே. நாம் அனைவரும் இரண்டோ மூன்றோ மொழிகளில் பேசக் கற்றுக்கொண்டாலும், இரு மொழிகளில் சமவீச்சுடன் அறிவுப் புலங்களில் செயல்பட முடிவதில்லை. 

இப்படியிருக்க, மூன்றாம் மொழியாக ஒன்றை வேறு கற்று நேரத்தை வீணடிக்கிறோம். நேரு காலம் தொட்டு இந்தியப் பண்பாட்டினைப் புறந்தள்ளிவிட்டனர் என்ற புலம்பலும் தொடர்ந்து ஒலிக்கிறது. ஆனால், சம்ஸ்கிருதம் ஒதுக்கப்பட்டதல்ல சிக்கல்; பள்ளிகளில் ஆண்டுக்கணக்கில் சம்ஸ்கிருதத் தேர்ச்சி பெற்றும், உண்மையில் திறனற்றவர்களாகத்தான் பெரும்பான்மையினர் வெளிப்படுகின்றனர்.

இலக்கியம் தவிர பிற இயல்களில் இந்திய மொழிகளுக்குச் சொற்ப அளவில்தான் மொழிபெயர்ப்புகள் சேர்ந்துள்ளன. எனவே, மொழித் திறன் அடிப்படையில் இந்தியர் இருவகைப்படுவர்: தாய்மொழியைக் காட்டிலும் ஆங்கிலத்தில் கூடுதல் புலமை பெற்றோர் முதல் வகை, ஆங்கிலம் சரிவரத் தெரியாமல் தடுமாறுவோர் இரண்டாம் வகை. 

முந்தைய தலைமுறையினர், தாய்மொழிவழிக் கல்வியில் உறுதிமிகுத் தேர்ச்சி பெற்றதனால், பின்னாட்களில் பணிச்சூழல் காரணமாக ஆங்கிலத்திற்கு அவர்களால் எளிதில் தங்களைத் தகவமைத்துக்கொள்ள முடிந்தது. இன்றைய இந்தியாவில் பெரும்பான்மையான மக்களுக்கு ஆங்கில வழிக் கல்வி எட்டாக்கனியாகவும், தாய்மொழிக் கல்வியில் ஆழமாக வேரூன்ற இயலாத கையறுநிலையும் இருப்பதால், இந்திய மொழிகள் பேசுவோர் (குறிப்பாக இந்தி) தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

ஆங்கிலமும் இந்தியப் பெற்றோரும்

இந்திய பெற்றோர், தங்களது குழந்தைகளுக்கு ஆங்கிலவழிக் கல்வியைப் பெரிதும் நாடுவது தற்செயலான நிகழ்வன்று. பல தலித் மக்கள், தாங்கள் சந்திக்கும் ஒடுக்குமுறையில் இருந்து விடுதலை பெற உதவும் பாதையாக ஆங்கிலத்தைப் போற்றுகின்றனர். 

பல மாநிலங்கள் இன்று தங்களுடைய கல்வி அமைப்புகளில் ‘மாணவர்கள் மேல் வகுப்புகளை எட்டும் வரை  அவர்களுக்கு ஆங்கிலம் கற்பித்தலை ஒத்திவைப்பது’ எனும் திட்டத்தினை பின்னிழுத்துக்கொண்ட. நாடெங்கிலும் ஆங்கிலவழிக் கல்விக்கான ஆதரவுப் போக்கு உச்சத்தில் இருக்கிறது. எதிர்ப்பார் யாரும் இருப்பதாகப் புலப்படவில்லை. 

மக்களுடைய நாட்டம் இப்படியிருக்க, மாநிலங்கள், அரசுப் பள்ளிகள் உட்பட தங்கள் கட்டமைப்புகளின் மூலம் ஆங்கிலக் கல்வியைச் சீராக வழங்கிட முடியவில்லை. இதன் காரணமாகப் பெரும் ஏற்றத் தாழ்வுநிலை  விளைந்துள்ளது.

இப்படி மொழித் தனிமையில் சிக்கியோருக்கு ‘அனைவருக்கும் ஆங்கிலம் இயக்கம்’ வெளிச்சம் காட்ட தவறிவிட்டது. தாய்மொழி அறிவில் பெரும் தேர்ச்சி பெற்றிருப்பினும் ஆங்கிலம் அறியாமையால் உலக அரங்கில் வாய்ப்புகள் குன்றுவது ஒருபுறம்; உயர்தர ஆங்கிலப் படிப்பினை எட்ட முடியாதச் சூழல் பலருக்கும் நிலவுவது ஒருபுறம்; மொழியாளுமை தழுவிய அடையாள நுட்பங்கள் ஒருபுறம் எனப் பல சிக்கல்கள்... 

இன்று ஆங்கிலமும் இந்திய மொழியே. ஆங்கிலத்திற்கு அந்நியச் சாயம் பூசி ஒதுக்கி வைத்தல் பெரும் தவறாகும். எனினும், ஆங்கிலத் தேடலால் தாய்மொழிகள் புறந்தள்ளப்படுகின்றன என்பதும் சரியல்ல.

தாய்மொழியைக் கடந்த காலத்தின் பெட்டாகமாகத்தான் கருதுகிறோமே தவிர, வருங்காலத்தை எதிர்கொள்ளத் தேவையான கலங்கரை விளக்கமாக  நாம் கருதுவதில்லை. மொழிப் பெருமை பேசி மேடைகளில் முழங்குவோர் அனைவருமே மொழியின் வரலாற்றினைப் பறைசாற்றுகின்றனரே தவிர, அதன் எதிர்காலத்தைக் குறித்துக் கவலை கொள்வதில்லை. 

உள்ளூர் மொழிகள் பண்பாட்டு விழுமியங்களைச் சுமக்கின்றன. ஆனால், உயர் அறிவுக்கும், பொதுமைக்கும், பகுத்தறிவுக்கும் பயன்படாமல், தற்பிடித்தத்திற்கும் உணர்ச்சிகளின் வெளிப்பாடுகளுக்குமே பயன்பட்டுவருவது அவலம்.

சரி, இந்தித் திணிப்பை நிறுத்திவிட்டோம், ஆங்கிலத்தைக் காலனிய, ஆதிக்க மொழியாகக் கொள்ளாமல் நம் மொழியாகவே அரவணைத்துக் கொண்டுவிட்டோம் என்றே வைத்துக்கொள்வோம். இப்போதும் இந்திய மொழிச் சிக்கல்கள் தீர்ந்துவிடுமா என்றால் இல்லை!

தாய்மொழியின் தகைமையை அலச வேண்டும். ஆங்கிலப் புலமையை நாடும் முயற்சியில் நம் தாய்மொழிகளை என்ன செய்யப்போகிறோம்? இரண்டாம் தரத்திற்கு அவற்றைத் தாழ்த்தாமல் ஆங்கில அறிவை நாடுவது எப்படி? நாம் சிந்திக்க வேண்டும். 

அப்படிச் செய்யாமல், சில மாநிலங்களில் தாய்மொழியின் வீழ்ச்சியையும், தேக்கத்தையும், ஆங்கிலத்தின் முன் அது பின்னடைவைச் சந்தித்ததையும் சமாளிக்க, ‘இந்தி எதிர்ப்பு’ எனும் போர்வை போர்த்திய ‘தாய்மொழி அடையாள அரசியல்’ முன்னிறுத்தப்படுகிறது. இந்த எதிர்வினையைத் தாண்டி, உண்மையில் நம் தாய்மொழிகளால், உலக அறிவரங்கில் முழு வீச்சுடன் இயங்க முடியுமா? 

இதுவே நாம் கேட்க வேண்டிய கேள்வியாக இருக்க வேண்டும்.

தொடர் உரையாடல்கள் தேவை

எனவே, அரசியல் தவிர்த்து மொழிச் சிக்கல்களைக் குறித்த கல்விசார் உரையாடல்கள் நிகழ்த்தப்பட வேண்டும். ஒவ்வொரு நாளும் முன்னேறிவரும் மருத்துவத் துறையில் இடைவிடாது வெளிவரும் ஒவ்வொரு கருத்தினையும் ஆய்வினையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஆங்கில அறிவு மருத்துவர்களுக்கு அவசியம். சில மருத்துவப் பாடநூல்களை மட்டும் மொழிபெயர்த்துவிட்டால் போதுமா? இது ஒருபுறம் இருக்க, மறுபுறம், தாய்மொழி அறிவு நம் சுற்றத்தாரோடு உரையாடவும் உறவாடவும் பேருதவி புரிவதால் சிறப்பிடம் பெறுகிறது.

இவற்றோடு, ஆங்கிலவழிக் கல்வி கிடைக்கப் பெறாத மக்களுக்கு, தாய்மொழிக் கல்வியினைத் தொடர்வதன் மூலம் வேறு பல நல்ல வாய்ப்புகள் பெறவும் வழிவகை செய்ய வேண்டும். இவற்றில் எல்லாம் ஆகப்பெரும் சிக்கலே, நம் கல்வி அமைப்புகள், இருமொழிகளில் ஒருமொழியையும் முழுமொழியாக்கும் ஆயத்த வேலைகளைச் செய்யாமல் காலம் தாழ்த்துவதுதான். 

இந்தி மட்டுமல்ல, எந்த இந்திய மொழியிலும் மருத்துவமோ, பொறியியலோ கற்பித்தலில் நிலவும் நம்பிக்கையின்மைக்குக் காரணம், நம் அறிவுக் கட்டமைப்பு, அதை எதிர்கொள்ளும் திறன் இன்றி நாம் தவிக்கும் நிலையே ஆகும்.

ஆங்கிலவழிக் கல்வியின் மேலெழும் ஐயமோ, அது பெரும்பான்மையான இந்தியர்களைப் புறந்தள்ளிவிட்டது என்பதே ஆகும். வரலாற்றளவில் இந்தியாவின் பெருமைகளில் ஒன்று, நாம் என்றுமே மொழியியல் இருமைகளில் சிக்கிக்கொள்ளாமல் பன்மைத்துவத்தினைப் போற்றியுள்ளோம் என்பதுவே! 

இன்னும் சற்று முயன்றால், ஆக்கபூர்வமான கற்றல் முறைகளை வரைந்து, நம் பன்மைத்துவப் பெருமையினை நம்மால் மீட்டெடுக்க முடியும். இன்னோக்கில் மொழி அரசியலைப் புறந்தள்ளினால் மட்டுமே அறிவு வளர்ச்சியிலும், தேசிய ஒருமைப்பாட்டிலும் வெற்றி கிட்டும்!

© இந்தியன் எக்ஸ்பிரஸ்

 

தொடர்புடைய கட்டுரைகள்

ஆங்கிலத்திலிருந்து உள்ளூர் மொழி: ஏன் அவசியம்?

உள்ளூர்மொழிக் கல்வி வரவேற்புக்குரிய முன்னெடுப்பு

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பிரதாப் பானு மேத்தா

பிரதாப் பானு மேத்தா, கல்வியாளர். அரசியல் விமர்சகர். அசோகா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும், அரசியல் ஆய்வு மையத்தின் தலைவராகவும் இருந்திருக்கிறார். ஜேஎன்யுவிலும் கற்பித்திருக்கிறார். ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் தொடர்ந்து எழுதிவருகிறார்.

தமிழில்: ராம் குமார் ராமசாமி

4

1

பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   1 year ago

அருஞ்சொல் கட்டுரைகளை படிப்பவர் எண்ணிக்கைக்கும் like போடுபவர்களின் எண்ணிக்கைக்கும் உள்ள வேறுபாடு மிக அதிகம். இது கட்டுரையின் பாதிப்பை புரிந்துகொள்ள உதவாமல் போகலாம்.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

N. SENTHIL KUMAR   1 year ago

வணக்கம். நேற்று வெளிவந்த திரு.யோகேந்திர யாதவ் அவர்களின் கட்டுரைக்கு நான் வழங்கிய பின்னூட்டத்தில் குறிப்பிட்ட விஷயத்தை மீண்டும் இந்த கட்டுரையின் ஆசிரியர் திரு. பிரதாப் பானு மேத்தா அவர்களும் “முந்தைய தலைமுறையினர், தாய்மொழிவழிக் கல்வியில் உறுதிமிகுத் தேர்ச்சி பெற்றதனால், பின்னாட்களில் பணிச்சூழல் காரணமாக ஆங்கிலத்திற்கு அவர்களால் எளிதில் தங்களைத் தகவமைத்துக்கொள்ள முடிந்தது” என்று வெளிப்படுத்தியுள்ளார். மிக்க மகிழ்ச்சி. கற்றல் மற்றும் கற்பித்தல் குறித்து இன்றைய தலையாய பிரச்சனை யாதெனில், தொடர்பு மொழியையே பயிற்று மொழியாக மாற்றுவது அல்லது மாற்றியிருப்பதாகும். ஒரு மொழியில் உள்ள அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் கலைச்சொற்களை நன்கு அறிந்திருந்தால் மட்டுமே மற்றொரு மொழியை எளிதில் கற்றுக்கொள்ள முடியும். அதாவது, தாய்மொழியில் கற்றால் மற்றும் கற்பித்தால் மட்டுமே பயில்வது /பயிற்றுவிப்பது எளிமையாக இருக்கும். அது அச்சத்தையும் தயக்கத்தையும் போக்கி சிந்தனையைத் தூண்டும். விவாதத்தை உருவாக்கி தெளிவடைய முடியும். மாறாக, இன்றைக்கு தனது தாய்மொழியில் உள்ள கலைச்சொற்களை அறிந்துகொள்வதற்கு முன்பே தொடர்புமொழியில் கற்பதால் அல்லது கற்பிப்பதால் இன்றைய தலைமுறை மாணவர்களுக்கு சிக்கல் உருவாகிறது. இதனால் கலைச்சொற்களை தெரிந்துகொள்வதற்கே அதிக காலம் விரயமாகிறது. திரு.யோகேந்திர யாதவ் அவர்களின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்ததைப் போல, இன்றைக்கு ஆங்கில வழியில் கல்வி கற்கும் மாணவர்கள் “அவர்களுடைய பாடங்களைப் புரிந்துகொள்ள எவ்வளவு முயற்சிகளை எடுக்கின்றனரோ அதே அளவுக்கான முயற்சியை அதைப் படிக்க தேர்ந்தெடுக்கும் ஆங்கிலத்தைப் புரிந்துகொள்ளவும் செலவிடுகின்றனர்.” இதுபோன்ற தொடர் உரையாடல்கள் மூலம் தெளிவு உருவாகும் என்று நம்புவோம். நன்றி.

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

செல்வம்   1 year ago

மத்தளத்துக்கு இருபக்கமும் இடி என்பதுபோல தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தொடர்பு மொழி, பயிற்று மொழி என இரண்டு பக்கமும் போராட்டம். தொடர்பு மொழிப் பிரச்சினையை பிற மாநில அறிவுஜீவிகள் நிரந்தரத் தீர்வை நோக்கி நகர்த்தினால் பயிற்றுமொழி விசயத்தில் தமிழ்நாடு இந்திய நாட்டுக்கே முன்னுதாரணமாகச் செயல்படும் வல்லமை வாய்ந்தது. வணிக நலன் சார்ந்து ஹிங்கிலீஷ் போன்றவை முன்னெடுக்கப்பட்டால் பன்மைத்துவத்துக்குப் பாடை கட்டவேண்டியதுதான்.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

கங்கைச் சமவெளிகிங் மேக்கர் காமராஜரால் ஏன் கிங் ஆக முடியவில்லை? சுயாட்சி – திரு. ஆசாத்விழிஞ்சம்தொல்.திருமாவளவன்விளம்பர வருவாய்சட்டப்பேரவை தேர்தல்அரசியல் கணக்குகரிசல் கதைகள்கரைகடல்பரப்புப் பாதுகாப்பு ஆய்வுநீலகண்ட சாஸ்திரிமனோகராஎதிர்புரட்சிசனாதனம் என்றால் என்ன?: சமஸ் பேட்டிவளர்ச்சித் திட்டப் போதாமைமாநில மொத்த உற்பத்தி மதிப்புதகுதித்தேர்வுஆசாதிஇந்திய ஜனநாயகம் பெரியார் இருவருக்கும் இடம் உண்டு: ச.கௌதமன் பேட்டிஅரசியல் ஸ்திரத்தன்மை என்னும் ஆபத்தை உணர்த்தியவர்காது அடைப்புபல்ஜாதிய படிநிலைவாசிஉலக வங்கிதமிழில் அர்ச்சனைஇந்திய ஜனநாயகம்!ஜேம்ஸ் பால்ட்வின் பேட்டி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!