கட்டுரை, வரலாறு, கல்வி, ஆசிரியரிடமிருந்து... 3 நிமிட வாசிப்பு

மன்னார்குடி ஸ்ரீநிவாசன்: வரலாற்றிலிருந்து எழுந்து வரும் ஆளுமை

ஆசிரியர்
06 Aug 2022, 5:00 am
0

வாசகர்களோடு ஆசிரியர் பகிர்ந்துகொள்ளும் வகையில், ‘ஆசிரியரிடமிருந்து’ பகுதி வெளியிடப்படுகிறது. கூட்டங்கள், சமூகவலைதளங்கள் வழி ஆசிரியர் பகிர்ந்துகொள்ளும் குறிப்பிடத்தக்க செய்திகள் இங்கே இடம்பெறும்.

நான் 'தி இந்து' தமிழ் நாளிதழிலிருந்து வெளியே வந்து 'அருஞ்சொல்' தொடங்கியதற்குப் பிறகான இந்த 10 மாதங்களில் மேற்கொண்ட ஒரு பெரும் பணி நேற்று நிறைவடைந்தது. 'ஒரு பள்ளி வாழ்க்கை' நூல்.

நண்பர்களிடம் 'அருஞ்சொல் - எடிட்' தொடர்பில் ஏற்கெனவே பகிர்ந்திருக்கிறேன். இதழியல், பதிப்பு சார்ந்த திட்டங்களை அயல்பணி முறையில் செய்து தரும் நிறுவனம் இது. 

அண்ணாவுக்கு ஒரு தொகுப்பு நூல் ஒன்றை உருவாக்குவது என்றால், அதை 'அருஞ்சொல் வெளியீடு' மூலம் நாங்களே கொண்டுவருவோம். அதுவே, டிவிஎஸ் நிறுவனத்துக்கு ஒரு வரலாற்று நூல் கொண்டுவரப்பட வேண்டும் என்றால், அதை 'அருஞ்சொல் - எடிட்' மூலம் கொண்டுவருவோம். 

இரு நூல்களுமே தகுதி வாய்ந்தவை; அவசியம் கொண்டுவரப்பட வேண்டியவை; ஒரு தொழில்முறை அணியின், பல மாதங்கள் ஆய்வு, உழைப்பு, பல லட்சங்கள் செலவு கோரக் கூடியவை என்றாலும், அண்ணா நூலைக் குறைந்தது 10,000 பிரதிகள் விற்க முடியும். அதற்கு அந்தச் சந்தை மதிப்பு இருக்கிறது. அதே, டிவிஎஸ் நூலுக்கு இவ்வளவு செலவை எதிர்கொள்ளத்தக்க சந்தை வாய்ப்புகள் இன்றைய சூழலில் இல்லை. ஆக, இப்படிப்பட்ட நூல்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் / பொது அமைப்புகளுடன் சேர்ந்து மேற்கொள்கிறோம். 

ஆசிரியர் குழுவின் முடிவுகளில் மேற்படி நிறுவனங்கள் தலையிட முடியாது என்பது இரு தரப்பு ஒப்பந்தத்தின் முக்கியமான ஷரத்து. ஆசிரியர் குழு சுதந்திரமாக நூலை உருவாக்கும். நூலாக்கம் முடிந்த பின் அதற்கான பதிப்புரிமை, விற்பனையுரிமை சம்பந்தப்பட்ட நிறுவனங்களைச் சென்றந்துவிடும். நூல் உருவாக்கத்துக்கான செலவை இந்த நிறுவனங்கள் 'அருஞ்சொல் எடிட்' நிறுவனத்துக்கு வழங்கிடும். படைப்புகள் 'அருஞ்சொல்' தளத்தில் வெளியாகும்.

மொத்தம் 13 நூல்கள் இப்படி செய்வதற்கு வந்தன. அவற்றில் எங்கள் ஆய்வுக்குழு இந்த ஆண்டுக்குத் தேர்ந்தெடுத்த மூன்று நூல்களில் முதலாவது, 'ஒரு பள்ளி வாழ்க்கை'.

இந்திய சுதந்திரத்தின் 75ஆம் ஆண்டு தருணம் என்பதால், காந்தியால் ஆரம்பிக்கப்பட்ட இந்திய தேசிய கல்வி இயக்கத்தோடு தொடர்புடைய இந்த நூலைப் பணிக்கு 'அருஞ்சொல் ஆய்வுக் குழு' தேர்ந்தெடுத்தது. 

இந்திய சுதந்திரத்தின் முக்கியமான செயல்திட்டம் என்று காந்தியால் 1920இல் அறிவிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டது இந்திய தேசிய கல்வி இயக்கம். கல்வியை உள்ளூர்மயமாக்குதல் இதன் முக்கியமான லட்சியங்களில் ஒன்று.

பிரிட்டிஷாரின் கல்விமுறை மீதான விமர்சனத்தின் வெளிப்பாடாக நாடெங்கிலும் தேசிய பள்ளிகள், கல்லூரிகள் உருவாக்கப்பட்டன. அப்படி காந்தியால்  தொடங்கப்பட்டவைதான் காசி வித்யாபீடம், குஜராத் வித்யாபீடம், ஜமாலியா இஸ்லாமியா. இவையெல்லாம் 1920களுக்குப் பின்னர் நடந்தவை.

தமிழ்நாட்டில் 1899இல் - காந்தி இந்தியாவுக்கு 1915இல் திரும்புவதற்கு முன்னரே - ஒரு தேசிய பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. அது மன்னார்குடி தேசிய பள்ளி. மாணவர்களுக்கு அரசியல் கூடாது என்று பேசும் இன்றைய காலகட்டத்துக்கு மாறாக, சுயராஜ்யத்துக்காகப் பேசும் மாணவர்களின் போராட்டங்களை ஆதரித்த பள்ளி அது; அப்படி போராட்டங்களில் வளர்ந்த அந்தப் பள்ளியின் மாணவர் ஒருவர் பிற்பாடு மொழிப் போராட்ட தளகர்த்தர்களில் ஒருவராகவும், ஒருங்கிணைந்த தஞ்சையின் திராவிட இயக்கத் தளபதியாகவும் உருவெடுத்தார். முதல் பெரியார் விருது கலைஞரால் அவருக்குத்தான் அளிக்கப்பட்டது. அவர் மன்னை ப.நாராயணசாமி.

காந்தி இந்தப் பள்ளிக்கு வந்திருக்கிறார். இந்திய முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி அவருடைய குடும்பத்தில் அந்தப் பள்ளியில் படிப்பதற்காகவே மன்னார்குடியில் வீடு எடுத்து, தங்கிப் படித்த மூன்றாவது தலைமுறை மாணவர். டாடா இன்டர்நேஷனல் தலைவர் முத்துராமன் பாலசுப்ரமணியம் புனேவிலிருந்து இங்கு வந்து படித்தார். பள்ளியின் புகழ்பெற்ற ஆசிரியர்களில் ஒருவர் எழுத்தாளர் கரிச்சான்குஞ்சு. இவர்களுக்கு எல்லாம் தலைமை ஆசிரியராகத் திகழ்ந்தவர் வி.ஸ்ரீநிவாசன். மன்னார்குடி போன்ற சிறுநகரத்தில் வாழ்ந்ததாலேயே பரவலாக அறியப்படாமல்போன முக்கியமான கல்வியாளர். 

கல்வியானது தேசியமயமாக்கப்படக் கூடாது என்று இன்றைக்குப் பேசுகிறோம். ஆனால், அதற்கான மாற்று என்ன? விமர்சனத்தைத் தாண்டிய செயல்திட்டம் என்ன? உள்ளூர் அளவில் அப்படி ஒன்றைச் செய்து காட்டியவர் ஸ்ரீநிவாசன். 

தேசிய பள்ளியில் தங்கள் நூல்களை, தேர்வுத்தாள்களை அச்சிடவே ஓர் அச்சகம் இருந்தது; கல்வி நிலையத்துக்குள் ஸ்ரீநிவாசன் காலத்தில் காகித உற்பத்திக்கூடம்கூட செயல்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டிலேயே முன்னோடியாகப் பல படிப்புகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவர் காலத்தில் தமிழ்நாட்டிலேயே சிறந்த கல்வி மாவட்டம் ஒருங்கிணைந்த தஞ்சாவூர்; அதில் சிறந்த கல்வி மையம் மன்னார்குடி. அதில் சிறந்த பள்ளி அவருடைய தேசிய பள்ளி.

வரலாற்றில் ஒரு நூற்றாண்டு பின்னோக்கிச் சென்று ஒரு பள்ளிக்கூடத்துக்கான, ஓர் ஆசிரியருக்கான முன்னுதாரணமாகச் சுட்டும்படியாக ஒரு நூலை உருவாக்கியிருக்கிறோம். கல்வி என்றாலே அரசியல்தானே! கல்வி ஏன் மையப்படுத்தப்படக் கூடாது; உள்ளூர்மயமக்கப்பட வேண்டும் என்பதை இந்நூல் அழுத்தந்திருத்தமாகப் பேசுகிறது. ரத்தமும் சதையுமான வாழ்க்கை அனுபவங்களுடன். 'குளோபலியன் அறக்கட்டளை'யுடன் இணைந்து 'அருஞ்சொல் எடிட்' கொண்டுவந்திருக்கிறது. 

வெறும் 272 பக்க நூல். நிச்சயம் கல்வி நூல்களின் வரிசையில் முக்கியமான ஓரிடத்தைப் பெறும் என்று ஒரு வாசகனாகச் சொல்வேன். மிச்ச விஷயங்களை விரைவில் பகிர்கிறேன்.

நண்பர்களுக்கு நன்றி!

- சமஸ், முகநூல் பதிவு

 

நூலைப் பெறுவதற்கு அணுகவும்: 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

1

3

முரசொலி மணி விழாக் கட்டுரைகெளதம் அதானிகுடும்பம்மென்பொருள் துறைகுற்றவியல் நீதி வழங்கல் வடக்குக்குப் பரிசும் பாராட்டும்!சாதி இந்துக்கள்பட்ஜெட் அருஞ்சொல்மனப் பதற்றம்நார்சிஸ்ட்எழுத்தாளர் சங்க மாநாடுமணவிலக்குகமலா பாசின்காந்தி பேச்சுகள் தொகுப்புநடைப்பயிற்சிபிராணிகளின் சூழலியல்எஸ்.பாலசுப்ரமணியன்குத்தகைத் தொழிலாளர் நலம்: கர்நாடகம் புதிய முயற்சிஅகிம்சையை கொல்ல வேண்டிய தேவை என்ன?மங்கோலிய இனத்தவர்சட்டத் திருத்த மசோதாதலைமுறைகாங்கேயம்உள்ளத்தைப் பேசுவோம்தமிழ்நாட்டில் காந்திதிருநெல்வேலி வெள்ளம்தாதுப் பொருள்மேனேஜர்தாலிபான்ஆளுநர் முதல்வர் மோதல்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!