கட்டுரை, அரசியல், கல்வி, மொழி 10 நிமிட வாசிப்பு

ஆங்கிலத்திலிருந்து உள்ளூர் மொழி: ஏன் அவசியம்?

யோகேந்திர யாதவ்
26 Oct 2022, 5:00 am
4

ங்கிலம் தொடர்பாக நம் நாட்டில் நடைபெறும் விவாதங்கள் அனைத்துமே ஒருவித ‘தீண்டாமை’ மனப்பான்மையை வெளிச்சமிட்டுக் காட்டுவதாகவே இருக்கின்றன. நல்ல சிந்தனையுள்ளவர்கள்கூட இதில் ஆய்வு மனப்பான்மையைக் குப்புறக் கவிழ்த்துவிட்டுப் பேசுகிறார்கள். அவரவருடைய மன ஊகங்கள் - உண்மையான அனுபவத்தைப் புறக்கணித்துவிடுகின்றன. ஆளும் வர்க்கத்துக்கும் அதன் ஆதிக்கச் சிந்தனைக்கும் எதிராக நிற்பது எவ்வளவு சவாலான வேலை என்பதை அப்போதுதான் உணர முடிகிறது.

உயர்கல்வியில் பயிற்றுமொழியாக ஆங்கிலம் இருப்பதைப் படிப்படியாக நீக்கிவிட்டு அவரவர் தாய்மொழி அல்லது மாநில மொழிகளில் கற்றுத்தர வேண்டும் என்ற இந்திய அரசின் யோசனை இப்படித்தான் விவாதிக்கப்படுகிறது.

ஆங்கிலம் பயிற்றுமொழியாக இருக்கக் கூடாது என்றவுடனேயே, நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுவதில் வல்லவர்களான கான் மார்க்கெட் மேதைகளும், ஆங்கிலத்திலேயே புழங்கும் இடதுசாரி – வலதுசாரி அறிவுஜீவிகளும் வெறிநிலைக்கே போய்விடுகின்றனர். “உலகப் பாடங்களை அவரவர் தாய்மொழியில் கற்றுக்கொள்வதா, என்ன ஆபத்தான முயற்சி இது?” என்று அதிர்ச்சி அடைகின்றனர்.  “இந்திய மொழிகளில் மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பக் கல்வியா?” என்று ஏளனம் பொங்கக் கேட்கின்றனர்.

பெண்களுக்கும் வாக்குரிமை தரப்பட வேண்டும் என்றபோது ஆண்களிடம் ஏற்பட்ட எதிர்வினைகளுக்கு ஒப்பானவை இந்த எதிர்ப்புகள். ‘இப்போதிருக்கும் கல்விமுறையில் என்ன குறைச்சல், நன்றாகத்தானே போய்க்கொண்டிருக்கிறது?’ என்றும்கூடக் கேட்கின்றனர்.  

எது உண்மையான கேள்வி?

இந்த விவாதத்தில் உண்மையான கேள்வி எது என்பதில் நாம் தெளிவாக இருப்போம்.

கல்விக் கொள்கையை வகுத்தவர்களுடைய ஆழமான உள்நோக்கம் எதுவென்று இப்போது நாம் விவாதிக்கவில்லை.

நாம் இப்போது கொள்கையைப் பற்றி மட்டுமே விவாதிக்கப்போகிறோம். ஆங்கிலம்தான் பயிற்றுமொழி என்பதை ஒரே இரவில் மாற்றுவிடுவது குறித்து இப்போது விவாதிக்கவில்லை. அது பயனற்ற எதிர்விளைவையே ஏற்படுத்தும். படிப்படியாக – நீண்ட கால அவகாசம் தந்து, ஆங்கிலம்தான் பயிற்றுமொழி என்பதைப் படிப்படியாக மாற்றுவது குறித்தே நாம் விவாதிக்கப்போகிறோம்.

இப்போதுள்ள நடைமுறையின் சாதகமான அம்சங்கள் குறித்தோ, உயர்கல்விக்கென்று இப்போது இந்திய மொழிகளில் தயாராகியிருக்கும் சில பாடநூல்களின் தரம் குறித்தோ இப்போது விவாதிக்கவில்லை. இவற்றில் பெரும்பாலானவை குப்பைகள்தாம் – சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்தி மொழியில் எழுதப்பட்ட மருத்துவப் பாடநூல் உள்பட; அதனால், இந்திய மொழிகளில் தரமான மருத்துவப் பாடநூல்களை எழுதவே முடியாது என்பது பொருள் அல்ல. அரசின் உத்தேசக் கொள்கை குறித்துத்தான் இப்போதைக்கு விவாதிக்க வேண்டும்.

ஆங்கிலம் கற்கலாமா என்றல்ல; ஆங்கில வழிக்கல்வியையே விவாதிக்கிறோம்

மிக முக்கியமாக நாம் இப்போது, ஆங்கிலம் கற்கலாமா என்பது குறித்து விவாதிக்கவில்லை.  ஆங்கில மொழி கற்பதை ஊக்குவிக்க வேண்டும் என்பதே சரி. நாம் இப்போது பிரதானமாக விவாதிப்பது - ஆங்கிலம் பயிற்றுமொழியாக இருக்க வேண்டும் உயர்கல்வி கற்க வேண்டும் என்றால் கட்டாயமாக ஆங்கிலத்தில்தான் படிக்க வேண்டும் என்று இன்றுள்ள நிலையைப் பற்றி மட்டுமே!

வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு மொழிகளைப் பேசும் மக்கள் வாழ்கிறார்கள், ஆங்கிலத்தை மட்டுமே பேசும் சிறுபான்மையினரும் இருக்கின்றனர் என்பதையெல்லாம் மனதில் கொள்ள வேண்டும். நாம் இப்போது பொதுவான நிலை குறித்துத்தான் பேசுகிறோம், விதிவிலக்குகள் குறித்து அல்ல.

ஆங்கிலம் மட்டுமே மிகவும் விரும்பப்படும் பயிற்றுமொழியாகத் தொடர வேண்டுமா? வகுப்பறையில் கற்றுத் தரவும் மாணவர்களின் விவாதங்களிலும் ஆங்கிலம் மட்டுமே தொடர வேண்டுமா? மாணவர்கள் பாட அறிவைப் பெறவும் தேர்வுகளிலும் ஆங்கிலம் மட்டுமே இருக்க வேண்டுமா? இதையே நாம் விவாதிக்க வேண்டும்.

இந்த விவாதம் தொழில்நுட்பம் பற்றிய கல்வி தொடர்பானது - உயர்கல்வி பற்றிய முழுமையான விவாதம் அல்ல.

உண்மையான சூழல் என்ன?

மேல்தட்டு மக்கள் பயிலும் மிகச் சில கல்விக்கூடங்களைத் தவிர, பெரும்பாலான உயர்கல்வி நிலையங்களில் அவரவர் மாநில மொழிகள்தான் பயிற்றுமொழியாக இருக்கின்றன. டெல்லி பல்கலைக்கழக மாணவர்களில் பெரும்பாலானவர்கள் பயிற்றுமொழியாக ஆங்கிலத்தில் படித்தாலும், தேர்வுகளை இந்தியில்தான் எழுதுகிறார்கள்.

ஆங்கிலமே பயிற்றுமொழி என்பது தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், ஒன்றிய அரசின் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில்தான் தொடர்கின்றன. அங்கெல்லாம் தொழில்நுட்பங்களும் தொழில்சார் படிப்புகளும் கற்றுத்தரப்படுகின்றன.

இதுதான் விவாதத்தின் மையப் பொருள்.

அப்படியென்றால், உயர்கல்வியில் பயிற்றுமொழியாக (மீடியம்) ஆங்கிலம் இருப்பதை, படிப்படியாக அகற்றத்தான் வேண்டும்.

உயர்கல்வி பயில வரும் மாணவர்களில் பெரும்பாலானவர்கள், ஏதாவதொரு இந்திய மொழியில்தான் பள்ளிக்கூடங்களில் அனைத்துப் பாடங்களையும் படிக்கின்றனர். பள்ளிக்கூடத்தில் சில ஆண்டுகள் ஆங்கிலமும் படிக்கின்றனர், ஆனால் பெரும்பாலானவர்களுடைய வீடுகளிலும் அக்கம்பக்கங்களிலும் ஆங்கிலம் புழக்கத்திலேயே கிடையாது. அவர்களால் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவோ, எழுதவோ, ஏன் படிக்கவோகூட முடியாது.

இப்படிப்பட்ட மாணவர்களுக்கு உயர்கல்வியை ஆங்கில வழியில் கற்றுத்தருவது என்பது கற்பிப்போருக்கே உள்ள பெரிய வலி – வேதனை!

இரட்டைச் சுமை

இந்த மாணவர்கள் அவர்களுடைய பாடங்களைப் புரிந்துகொள்ள எவ்வளவு முயற்சிகளை எடுக்கின்றனரோ அதே அளவுக்கான முயற்சியை அதைப் படிக்க தேர்ந்தெடுக்கும் ஆங்கிலத்தைப் புரிந்துகொள்ளவும் செலவிடுகின்றனர். ஆங்கிலத்தை நன்றாகப் புரிந்துகொண்டால்தான் அவர்களுடைய பாடத்தையும் புரிந்துகொள்ள முடியும். அவர்களுடைய பாடம் எதுவாக இருந்தாலும் - ஆங்கிலத்தை எளிதாகப் புரிந்துகொள்ள முடிந்தால்தான் பாடங்களையும் அவர்களால் புரிந்துகொள்ள முடியும்.

ஆங்கிலத்தில் எளிதாக எழுத முடிந்தால்தான், தேர்வுகளில் நன்றாகத் தேர்ச்சி பெற்று பட்டம் வாங்க முடியும். சரளமாக ஆங்கிலத்தில் உரையாற்ற முடிந்தால், சமூகத்தில் நல்ல மதிப்பு நிச்சயம். இதன் முடிவு என்னவென்றால் – கல்விக் கொலை!

லட்சக்கணக்கான மாணவர்கள் உயர்கல்வியில் ஆங்கிலத்தை வெற்றிகொள்ள முடியாததால் தேர்வுகளில் தவறுகின்றனர் அல்லது படிப்பையே பாதியில் கைவிடுகின்றனர். ஆங்கிலப் பயிற்றுமொழி என்கிற காட்டுமிராண்டித்தனமான சூழலே அதற்குக் காரணம்.

யார் பாதிக்கப்படுகிறார்கள்?

இந்தப் பேரழிவில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படுகிறவர்கள் யார் என்றால் சமூக – பொருளாதாரரீதியாக பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள்தான். பொருளாதாரரீதியாக ஏழைகள், முதல் தலைமுறையாக உயர்கல்வி கற்க வருகிறவர்கள், பட்டியல் இனத்தவர் – பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்டவர்கள், காலங்காலமாகக் கல்வி மறுக்கப்பட்டவர்கள்தான் ஆங்கிலவழிப் பயிற்றுமொழியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

ஆங்கில மொழியின் மகிமை காரணமாகவே புதிய வகை மேல்தட்டு மக்களை நாம் உருவாக்கியிருக்கிறோம்; பெருமளவில் அவர்கள் கலாச்சாரரீதியாக கல்வியறிவு ஏதும் இல்லாதவர்கள், புத்தாக்க சிந்தனையோ திறமையோ ஏதும் அற்ற ‘ஆங்கிலப்பாட கிளிப்பிள்ளைகள்’. ஆங்கிலத்தில் படிக்க, பேச, எழுத முடிவதாலேயே தங்களைத் தனி வகுப்பினராகக் கருதி, ஏனையோரிடமிருந்து விலகி வாழ்கின்றனர். அதேசமயம், மேற்கத்தியச் சமூகத்துடன் தங்களை ஒப்பிட்டுப் பார்த்து அதனால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மையால் மேற்கத்திய சமூகத்தினரைப் போலவே நடை – உடை – பாவனைகளைக் கைக்கொள்கின்றனர், அவர்களுடைய வாழ்வியல் பழக்கங்களை அப்படியே பின்பற்றுகின்றனர்.

சுருக்கமாகச் சொல்வதென்றால், ஆங்கிலப் பயிற்றுமொழிக் கல்வியானது கற்பிக்கவும் – கற்கவும் வேதனைகள் தருவது; சமூக – கலாச்சாரரீதியாக பேரழிவை ஏற்படுத்தவல்லது ஆகும். இதைப் படிப்படியாக நீக்க வேண்டும். ஆனால், அதைப் புத்திசாலித்தனமாகச் செய்ய வேண்டும். தரமான கல்வியைப் பெறவும் புத்தாக்க சிந்தனைகளை வளர்க்கவும் சமூக சமத்துவத்தை ஏற்படுத்தவும் உதவும் வகையில் இந்த மாற்றங்கள் இருக்க வேண்டும்.

இந்திய மொழிகள் தயாரா?

இதைச் செய்வது எளிது அல்ல. உயர்கல்வியில் ஆங்கிலத்தைப் படிப்படியாக நீக்க வேண்டும் என்றால், படிக்கவும் படிப்பிக்கவும் ஏற்ற வகையில் இந்திய மொழிகளைத் தயார்படுத்த வேண்டும்.

தேசிய அளவில் இதை ஓர் இயக்கமாக அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும். மிகுந்த தரத்தில் பாடப் புத்தகங்களை எழுத வேண்டும். தொழில்நுட்ப வார்த்தைகளுக்கான விளக்க அகராதிகள், மொழிபெயர்க்கப்பட வேண்டிய பாடங்கள் தயாரிக்கப்பட வேண்டும். மின்னியல் நூலகங்கள் உருவாக்கப்பட வேண்டும். ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சிகளை அளிக்க வேண்டும். உயர்கல்விக்கு வருவதற்கு முன்னால் மாணவர்களின் திறனையும் கூட்ட வேண்டும்.

ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் மெனக்கெடுவதை நிறுத்திவிட்டு, ஆங்கிலத்தில் படிக்கவும் - படித்ததைப் புரிந்துகொள்ளவும் முக்கியத்துவம் தர வேண்டும். உயர்கல்வி என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளால் படிக்கப்பட வேண்டும். வகுப்பறைகளில் தாய்மொழி அல்லது மாநில மொழியில் படிக்க வேண்டும். தேர்வுகளில் மாணவருக்கு விருப்பமான எந்த இந்திய மொழியிலும் எழுதும் சுதந்திரம் தரப்பட வேண்டும்.

இந்திய மொழியென்றால் நவீன இந்திய மொழிகள் (கன்னடம், வங்காளி, மராத்தி, இந்தி போன்றவை). இந்த மொழிகள் கோடிக்கணக்கான மக்களால் பேசப்படுபவை மொழிக்கான அடித்தளக் கட்டமைப்பு நன்கு உருவாக்கப்பட்டவை, நூலகங்கள், செய்தித்தாள்கள், பல்கலைக்கழகங்களில் இந்த மொழியை நன்கு கற்றுக்கொள்ள முடியும். ஆரம்பக் கல்வியை மக்களுடைய பேச்சு வழக்கில் இருக்கும் மொழியிலேயேகூட கற்றுத்தரலாம். துளு, காம்டாபுரி, கொங்கணி, பிலி, போஜ்புரி போன்றவை உதாரணங்கள். இந்த மொழிகளில் மேல்நிலைப் பள்ளிக்கூடப் பாடங்களை உருவாக்க மேலும் சில ஆண்டுகள் பிடிக்கக்கூடும்.

இப்படி கல்விப்புலத்தில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படுவதற்கான முயற்சிகள், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சந்தையிலிருந்துதான் தொடங்கப்பட வேண்டும். ஆங்கில வழி பயிற்றுமொழியில் இப்படி எல்லோரும் போய் விழுவது அறிவுள்ள செயல் அல்ல.

இப்படி வேலைக்கான சந்தையில் மொழி காரணமாக ஒதுக்கும் தீண்டாமையைப் போக்காமல், சாமானியர்களுக்கு ஆங்கிலம் படிப்பதற்கான வாய்ப்பை மறுப்பதும் கொடூரமாகும். இது இப்போதிருக்கும் பாரபட்சமான ஒதுக்கல்களை மேலும் தீவிரப்படுத்திவிடும். வேலைவாய்ப்பு, அதிகாரம், சமூகத்தில் மரியாதை ஆகியவற்றுக்கு ஆங்கிலப் புலமை அவசியம் என்ற நிலை நீடிக்கும் வரையில், ஆங்கிலத்தை எளிதாகவும் முறையாகவும் படிக்கும் வாய்ப்பு அனைவருக்கும் வழங்கப்படல் வேண்டும். அந்த நிலையிலும்கூட தரமான ஆங்கில மொழிப் பயிற்சிதான் முக்கியமே தவிர, ஆங்கிலவழிக் கற்றல் அல்ல.

அடிப்படையில் இன்றைய இந்தியாவில் ஆங்கிலம் தொடர்பான விவாதமானது, மொழி அடிப்படையிலானது இல்லை. அது அரசியல் அடிப்படையிலானது. இந்த நாட்டை ஆள்வது யார்? எதன் அடிப்படையில் ஆள்கிறார்கள்? காலனியாதிக்கக் காலத்தில் நாம் 'சுயமிழப்புக்கும் சுயத்தை மீட்டெடுத்தலுக்கும்' உள்ளானது கலாச்சாரம் சார்ந்து நமது மிக முக்கியமான சவாலாகத் தொடர்கிறது என்பதை ஆஷிஸ் நந்தி நமக்கு நினைவூட்டினார்.

பிரிட்டனின் மெத்தப் படித்தவர்களின் ஆங்கிலமானது இந்திய நவீனத்துவத்துக்கான முதன்மையான வாகனமாக இருக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்டால் ஒழிய ஆங்கிலம் என்றொரு விஷயத்தை எதிர்கொள்ளவோ அதை அதற்கு உரிய இடத்தில் வைக்கவோ நம்மால் இயலாது.

தொடர்புடைய கட்டுரைகள்

உள்ளூர்மொழிக் கல்வி வரவேற்புக்குரிய முன்னெடுப்பு

 

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
யோகேந்திர யாதவ்

யோகேந்திர யாதவ், சமூக அறிவியலாளர், அரசியல் செயல்பாட்டாளர். ஸ்வராஜ் இந்தியாவின் தேசியத் தலைவர்.

தமிழில்: வ.ரங்காசாரி

2

2

பின்னூட்டம் (4)

Login / Create an account to add a comment / reply.

Porpadham.T Thiruchitrambalam   1 year ago

படித்து அறிந்து கொள்ளும் மொழி, அவரவர் தாய்மொழியில் அமைந்திட வேண்டும். அறிவு வேறு, ஆங்கில மொழித் திறன் வேறு. கட்டுரை ஆசிரியருக்கும், அருஞ்சொல் இணைய பத்திரிகை ஆசிரியர் திருமிகு. சமஸ் அவர்களுக்கும், இதயங் கனிந்த நன்றி.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   1 year ago

பிரச்சினையை சரியாக அடையாளப்படுத்தி உள்ளீர்கள். ஆனால் இந்தி மொழி பயன்பாடு சரியான தீர்வல்ல. ஆங்கிலத்தை போல் இந்தியும் பெரும்பாலான இந்தியர்களுக்கு அயல்மொழிதான். உபியில் பெரும்பாலான மாணவர்கள் இந்தியிலேயே தேர்ச்சி பெறவில்லை. தொழில்நுட்ப படிப்புகளில் உள்ள ஆங்கில வார்த்தைகளை இந்திய மொழிகளில் மாற்றினாலும் அது தேர்ச்சி பெற பெரியளவில் பயன்படாது. உலகமே ஒரு கிராமம் என்று நினைக்கும் இந்த காலகட்டத்தில் ஆங்கிலத்தை ஒதுக்குவது சரியல்ல. இப்போது முன் வைக்கப்படும் தீர்வுகள் மேலும் புதிய பிரச்சினைகளை உருவாக்கலாம்.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

N. SENTHIL KUMAR   1 year ago

எனக்கு தெரிந்தவரையில், ஆங்கில மொழி மோகம் தொடர்பாக, என்னுடைய உள்ள குமுறலை வெளிப்படுத்திய இதுபோன்ற ஒரு தரமான கட்டுரையை இதுவரை நான் படித்ததாக நினைவில்லை. திரு. யோகேந்திர யாதவ் அவர்களுக்கு ஒரு மாபெரும் வணக்கம். குறிப்பாக தமிழில் மொழிபெயர்த்த வழங்கிய திரு.வ.ரங்காசாரி அவர்களுக்கு மிக்க நன்றி. சில பத்தாண்டுகளுக்கு முன்பு, ஏதாவதொரு இந்திய மொழியில் (தாய்மொழியில்) பள்ளிக் கூடங்களில் அனைத்து பாடங்களையும் (ஆங்கிலப் பாடம் தவிர்த்து) கற்ற மாணவர்கள் உயர்கல்விக்கு சென்றபோது அவர்கள் தாய்மொழியில் புரிந்து படித்திருந்த காரணத்தினால் வெகு விரைவில் ஆங்கிலத்தைப் புரிந்து கொண்டு தாங்கள் தேர்ந்தெடுத்த பாடங்களில் சிறந்து விளங்கினார்கள். இதைத் தான் அப்துல் கலாம், சிவன், மயில்சாமி அண்ணாதுரை மற்றும் தற்போதைய சி.எஸ்.ஐ.ஆர். தலைவர் உட்பட பல்வேறு விஞ்ஞானிகள்/அறிஞர்கள் மற்றும் இந்திய குடிமைப் பணியில் உயர் பொறுப்பில் இருக்கும் பல்வேறு அலுவலர்கள் தாய்மொழி (இக்கட்டுரையின் ஆசிரியரின் கூற்றுப்படி இந்திய மொழி) வழியாக கல்வி கற்பதைப் பற்றி வலியுறுத்தி வருகிறார்கள். இக்கட்டுரையின் ஆசிரியர் தெளிவாக கூறியுள்ள மிக சிறந்த விஷயம் யாதெனில், புரிந்துகொள்ளுதல். இதுதான் இன்றைய பிரச்சனை. ஆங்கிலத்தை யாரும் புரிந்துகொள்ளவில்லை. புரிந்துகொள்ளுதல் என்பதையே யாரும் நன்றாக விளங்கிக்கொள்ளவில்லை. ஒரு விஷயத்தை நன்றாக புரிந்துகொண்டால் மட்டுமே அதில் தெளிவடைய முடியும். அதுபோலவே, ஆங்கிலத்தை புரிந்துகொண்டால் / அல்லது பள்ளி/கல்லூரி ஆசிரியர்கள் புரியவைத்தால் மட்டுமே அதில் மாணவர்கள் தெளிவடைவார்கள். தெளிவடைந்தால் எழுதுவதும் / பேசுவதும் மிகவும் எளிமையான காரியம். தற்போதைய கல்வி நிலைமை மிக சுருக்குமாக ஆசிரியர் விளக்கியுள்ளார். அதாவது, “ஆங்கிலப் பயிற்றுமொழி கல்வியானது கற்பிக்கவும் – கற்கவும் வேதனைகள் தருவது;”. கடந்த 2 அல்லது 3 பத்தாண்டுகளுக்கு மேலாக இந்த கூற்று உயர்கல்வியைவிட பள்ளிக் கல்வியில் மோசமான தாக்கத்தை / விளைவை ஏற்படுத்திக்கொண்டிருந்திருக்கிறது. இன்றைய ஆங்கில வழி பள்ளிகளில் இயல்பாக வினவப்படும் வினாக்களையே ஆசிரியர்களிடம் மாணவர்களால் கேட்கமுடியவில்லை. பிறகு எவ்வாறு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே விவாதங்கள் ஏற்படும். இதைப் பற்றி இக்கட்டுரையின் ஆசிரியர் மேலும் ஆராய்வார் என்று நம்புகிறேன். மிக்க நன்றி.

Reply 21 0

Login / Create an account to add a comment / reply.

Malathipackyaraj   1 year ago

இதனால் மாணவர்களின் தன்னம்பிக்கை கூடுகிறது, பேச்சாற்றல் வளர்கிறது மற்றும் ஆக்கத்திறன் கூடுகிறது.திரு யோகேந்திர யாதவ்வின் கட்டுரை தீர்க்கமானது.இது, நிச்சயம் இந்தியா வின் முன்னேற்றம் குறித்து யோசிக்கும் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம்.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

ஷேக் அப்துல்லாபுவியைக் காக்க அக்கறை செலுத்துவோம்சர்வதேச நட்புறவுசர்வாதிகார வல்லரசுஅலைக்கற்றை விவகாரம்ஆசிம் அலி கட்டுரைகிபுட்ஸ்துர்நாற்றம்சியாமா சாஸ்திரிகள்கிறிஸ்தவர்ராம்நாத் கோயங்காபூர்ணேஷ் மோடிநந்தினிதகுதிவிமர்சனங்களே விளக்குகள்ஆளுநரைப் பதவி நீக்க முடியுமா?தொழில்நுட்பத் துறைவெற்றியின் சூத்திரம்ஹிஜாப் விவாதம் அருஞ்சொல்தமிழ் உரிமைவேலை வாய்ப்புஅறிஞர்கள்தனுஷ்கோடிதலைவர்கள்மாத்ருபூமிபாலசுப்ரமணியன்ஏற்பாடுசெய்யப்பட்ட குற்றங்கள் தடுப்புச் சட்டம்சாரு நிவேதிதாஇலக்கியத் தளம்குடும்ப விலங்கு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!