கட்டுரை, பேட்டி, சமஸ் கட்டுரை, கல்வி, ஆளுமைகள், புத்தகங்கள் 15 நிமிட வாசிப்பு

அன்றாடம் கற்றுக்கொள்கிறவரே ஆசிரியர்: சேதுராமன் பேட்டி

சமஸ் | Samas
08 Nov 2022, 5:00 am
3

மிழில் உள்ளூர் வரலாறுகளை எழுதும் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் 'அருஞ்சொல்' ஆசிரியர் குழுவானது, 'குளோபலியன் அறக்கட்டளை'யுடன் இணைந்து அப்படி உருவாக்கியிருக்கும் முதல் நூல் 'ஒரு பள்ளி வாழ்க்கை'. இந்திய கல்வியின் மீதான விமர்சனத்தையும், தீர்வாகக் கல்வியை உள்ளூர்மயப்படுத்துவதையும் முன்வைக்கும் இந்த நூலானது, கூடவே உள்ளூர் அளவில் பெரும் பணிகளை ஆற்றி அங்கேயே புதைக்கப்பட்டுவிட்ட ஆளுமைகள் தொடர்பான வரலாற்றுப் பதிவுகளையும் ஆவணப்படுத்தியிருக்கிறது. நூலில் அப்படி இடம்பெற்றிருக்கும் கல்வியாளர் எஸ்.சேதுராமனுடைய பேட்டி இது.

சேதுராமனின் வீட்டு வாசல் கதவை நெருங்கும் முன்னரே உள்ளே பிள்ளைகள் வாய்விட்டு வாசித்துக்கொண்டிருக்கும் சப்தம் கேட்கிறது. மெல்ல வாசல் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தால், கூடத்தின் நடுவே ஒரு பெரிய மேஜையின் மத்தியில் உட்கார்ந்திருக்கிறார் சேதுராமன். சுற்றிலும் நாற்காலிகள். ஏழெட்டுப் பிள்ளைகள் அமர்ந்திருக்கிறார்கள். ஒரு குட்டி வகுப்பறைபோலத்தான் இருக்கிறது அது. ‘உட்காருங்கோ, கொஞ்சம் பொறுத்துக்குறீங்களா, வந்திடுறேன்!’ என்கிறார். பிள்ளைகளுக்கான பாடத்தை வேகமாகத் தொடர்கிறார். 

பள்ளிக்கூடத்தில் சராசரி வேகத்தில் செல்ல முடியாமல் பின்தங்கும் பிள்ளைகளுக்கு காலை அல்லது மாலை வேளைகளில் வீட்டில் சிறப்பு வகுப்புகள் எடுப்பது சேதுராமன் இள வயதில் ஆரம்பித்த செயல்பாடு இது. ஓர் ஆசிரியராக, தலைமையாசிரியராக, நிர்வாகியாக என்று எந்தப் பொறுப்பில் இருந்தபோதும், இல்லாதபோதிலும் அவர் இந்தச் செயல்பாட்டை விடவே இல்லை. சேதுராமனுக்கு இப்போது வயது 68. பணி ஓய்வு பெற்று 10 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் கற்பித்தல் தொடர்கிறது. 

நூற்றாண்டைக் கடந்தும் அந்த வீடு ஆசிரியத்துவத்தைத் தக்கவைத்துக்கொள்ள முக்கியமான காரணம், ஊர்ப் பிள்ளைகள்மீதான இந்த ஈடுபாடு. சேதுராமனின் கொள்ளுப் பாட்டனார் ராமதுரை ஐயர் காலத்தில் தொடங்கிய பயணம் இது; பாட்டனார் விஸ்வநாதன் ஐயர், தந்தையார் ஸ்ரீநிவாசன் என நீண்ட இந்தப் பயணம் சேதுராமன் காலத்திலும் தொடர்கிறது. 

இந்திய தேசிய கல்வி இயக்கத்தின் முன்னோடிப் பள்ளிகளில் ஒன்றும், 1899இல் நிர்மாணிக்கப்பட்டதுமான மன்னார்குடி தேசிய பள்ளியோடு பிணைந்த வாழ்க்கை சேதுராமனுடையது. 1954இல் பிறந்த சேதுராமன், பள்ளிப் படிப்பை தேசிய பள்ளியில் முடித்தார். இளநிலைப் பட்டங்களைத் திருச்சி தூய வளனார் கல்லூரி; பூண்டி புஷ்பம் கல்லூரிகளிலும், ஆசிரியர் பயிற்சியை சென்னை மெஸ்டர்ன் நிறுவனத்திலும், முதுநிலைப் பட்டங்களை மதுரை காமராஜர் மற்றும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகங்களிலும், முனைவர் ஆய்வை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் முடித்தவர். 

தேசிய பள்ளியில் 1979இல் ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்தார் சேதுராமன். 1992இல் பள்ளியின் தலைமையாசிரியர் ஆனார். ‘எந்த நிலையிலுள்ள மாணவரையும் தேர்ச்சி அடைய வைத்தே தீரும் வைராக்கியம் கொண்ட ஆசிரியர்’ என்று அவரிடம் பயின்ற மாணவர்களால் குறிப்பிடப்படும் வாழ்க்கையை ஓர் ஆசிரியராக வாழ்ந்தார் சேதுராமன். 

பள்ளித் தலைமையாசிரியராக சேதுராமனின் பல பணிகள் தமிழக அளவில் குறிப்பிடத்தக்கவை. மிக முக்கியமானது, முன்கூட்டி சிந்தித்து புதிய பாடப் பிரிவுகளைப் பள்ளிக்குக் கொண்டுவந்தது. 1990களில், தமிழகத்தில் பல கல்லூரிகளிலேயே கணினிப் பாடத்திட்டங்கள் அறிமுகமாகியிராத சூழலில், 84 கணினிகளுடன் 3,400 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்ட கணினி ஆய்வகத்துடன் பிரமாதமான கணினிக் கல்வியைத் தன்னுடைய மாணவர்களுக்குக் கொடுத்தது இந்தப் பணிகளில் தலையாயது ஆகும். ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான எல்லா மாணவர்களுக்கும் கணினிப் பயிற்சி அளித்தார். 

நூற்றாண்டு கண்ட பள்ளிக்கூடமான தேசிய பள்ளியின் பல தலைமையாசிரியர்கள் அர்ப்பணிப்பு மிக்க பணிகளுக்குப் பேர் போனவர்கள். அந்த வரிசையில் தன் பெயரையும் பதித்தார் சேதுராமன். அவருடைய காலகட்டத்தில்தான் கிட்டத்தட்ட 5,000 பேர் படிக்கும் பள்ளிக்கூடம் ஆனது தேசிய பள்ளி. இதற்கேற்ப கிட்டத்தட்ட பள்ளிக்கூடக் கட்டமைப்பு வசதிகளை இரு மடங்கு ஆக்கினார் சேதுராமன். இன்றுள்ள 61,000 சதுர அடி பள்ளி வளாகத்தில் அவருடைய காலத்தில் மட்டும் கிட்டத்தட்ட 30,000 சதுர அடி கட்டுமானம் கட்டப்பட்டது. 

தேசிய பள்ளியின் ஸ்தாபகர்களில் ஒருவர் சேதுராமனின் கொள்ளுத்தாத்தா என்பதால், பள்ளியின் நிர்வாகப் பணியை சிறு வயதிலிருந்தே தூரத்திலிருந்து கவனிக்கும் வாய்ப்பு சேதுராமனுக்குக் கிடைத்தது. அதேபோல, தாத்தா, தந்தை இருவருமே ஆசிரியர்களாகவும் இருந்தவர்கள் என்பதால், வீட்டுச் சூழலே ஆசிரியத்துவத்துடன் கலந்திருந்த சூழலும் சேதுராமனுக்கு வாய்த்தது. ஓர் ஆசிரியர், தலைமையாசிரியர், உடைமையுரிமை மிக்க நிர்வாகி எனும் மூன்று பாத்திரங்களையும் வகித்த அரிதான அனுபவம் கல்வித் துறையில் ஆழமான பார்வைகளை அவரிடம் உருவாக்கியிருக்கிறது. 

அன்றைய பாடம் முடித்துப் புறப்படுகின்றனர் பிள்ளைகள். ஒரு நூற்றாண்டு நினைவுகளுடன், அடுத்து வரும் காலத்துக்கான கல்வி எப்படி இருக்க வேண்டும் என்று பேசலானார் சேதுராமன். 

இது அரிதான ஓர் அனுபவம். அதாவது ஒரு பள்ளியுடன் 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவருக்கு எல்லா நிலைகளிலும் உள்ள அனுபவம். தேசிய பள்ளி உடனான உங்கள் முதல் ஞாபகம் எது? 

மேளதாளம் முழங்க என் தந்தையார் என்னைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்க அழைத்துச்சென்ற இடம் அது. ஏதோ பெரிய ஊர்வலம், தடபுடல் ஏற்பாடு என்றெல்லாம் எண்ணிவிட வேண்டாம். எங்கள் வீட்டிலிருந்து ஒரு தெரு கடந்தால் பள்ளிக்கூடம். எதிரே ஆனந்த விநாயகர் கோயில். அங்கே மேளதாளம் வாசிப்பவர்களுக்கு அப்பா மீது பெரிய மதிப்பும், பிரியமும் உண்டு. ‘வாத்தியார் பிள்ளைக்கு அட்சராப்பியாசம்’ என்று அவர்கள் உரிமையோடு வந்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் அப்படித்தானே! ஆசிரியர்களுக்கு ஒட்டுமொத்த ஊரும் சொந்தம். 

நான் இயல்பிலேயே பயந்த சுபாவம் கொண்டவன். எல்லாப் பிள்ளைகளையும்போல புதிய சூழல் என்னை மேலும் அச்சத்துக்கு உள்ளாக்கியது. ஆனால், ஆசிரியர்கள் அவ்வளவு அன்பாக என்னை அணைத்துக்கொண்டது பள்ளிக்கூடத்தை இன்னொரு வீடாக எண்ண வைத்தது. இன்றைக்கும் அதுதான் ஒட்டிக்கொண்டிருக்கிறது. என் கையைப் பிடித்து அரிசியில் எழுதினார்கள். அப்போது கோபு சார்தான் ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியர். ராஜலட்சுமி டீச்சர் எனக்கு வகுப்பு ஆசிரியை. பள்ளி தொடர்பான என்னுடைய ஞாபகம் மட்டுமல்ல, என்னுடைய வாழ்க்கை தொடர்பான ஞாபகமும் அங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. 

உங்கள் தந்தை ஸ்ரீநிவாசன் தலைமையாசிரியராக இருந்த காலகட்டத்தில்தான் தேசிய பள்ளி தனித்துவமிக்கதாக உருவாகிவந்திருக்கிறது. நீங்கள் அந்தக் காலகட்டத்தில் மாணவராகவும் இருந்திருக்கிறீர்கள்; ஆசிரியராகவும் இருந்திருக்கிறீர்கள். பள்ளியில் ஒரு தலைமையாசிரியராக உங்கள் தந்தையின் செயல்பாடுகளை எப்படிப் பார்த்தீர்கள்? 

அப்படியெல்லாம் சிறு வயதில் எந்தப் புரிதலும் இல்லை. சொல்லப்போனால், நான் ஒன்பதாம் வகுப்புக்குச் செல்லும் வரை தேசிய பள்ளிக்கும் எங்கள் குடும்பத்துக்கும் பெரிய உறவு உண்டு என்பதுகூட எனக்குத் தெரியாது. அப்பா வேலை பார்க்கும் பள்ளி. அப்படிதான் புரிதல் இருந்தது. வீட்டில் பள்ளி நிர்வாகம் தொடர்பான உரையாடல்களைப் பார்த்ததே இல்லை. அப்பாவுக்குப் பள்ளிக்கூடம்தான் எல்லாமுமாக இருந்தது. ஆனால், பள்ளிக்கூடத்தில் அவரைத் தனியே சென்று பார்க்கக்கூட முடியாது. விசேஷமாக ஏறெடுத்தும் பார்க்க மாட்டார். வீட்டிலேயே அவரது அறையைப் பார்த்தால், பள்ளிக்கூடத்தில் உள்ள அவரது அறைபோல்தான் இருக்கும். யாரையும் அடிக்கவோ திட்டவோ கடிந்து பேசவோ மாட்டார். ஆனாலும், கண்டிப்பும் கறாரும் பார்வையிலேயே இருக்கும். தன்னுடைய நடத்தையையே தனக்கான கவசமாகவும் ஆபரணமாகவும் ஆக்கிக்கொண்டவர் அவர். அதனால், எல்லா மாணவர்களுக்கும் அவர் எப்படி மரியாதைக்குரிய ஒரு தலைமையாசிரியராக தெரிந்தாரோ அப்படிதான் எனக்கும் தெரிந்தார். 

பிற்பாடுதான் மெல்ல அவருடைய ஆகிருதி புரிபடலானது. குறிப்பாக நான் ஆசிரியராகப் பள்ளியில் சேர்ந்த பிறகுதான், பள்ளிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு எத்தகையது என்று தெரிந்தது. பின்லே பள்ளியைத் தாண்டி தேசிய பள்ளியை உயர்த்த வேண்டும் என்பது ஆரம்பத்தில் அவருக்கு இலக்காக இருந்தது. வெறும் பெயர், புகழ் பெறுவதற்கான போட்டி இல்லை அது. உள்ளூர் அளவிலும் அந்தப் போட்டியை அடக்கிவிட முடியாது. ஏனென்றால், அவர் போட்டியாகத் தீர்மானித்துக்கொண்டது பின்லே பள்ளியை; அதன் பொற்கால முதல்வர் அமலதாசன் உருவாக்கிய கட்டமைப்பில் மிக வலுவான இடத்தில், கல்வித் தரத்தின் உச்சத்தில் அப்போது அந்தப் பள்ளி இருந்தது. தமிழ்நாடு அளவில் பின்லே பள்ளியையும், அமலதாசனையும் அப்போது முன்னுதாரணங்களாகச் சொல்வார்கள். எல்லா வகைகளிலும் பின்லே பள்ளியைவிடவும் மேலான இடத்துக்கு தேசிய பள்ளியை அவர் கொண்டுவந்து காட்டினார். அதற்கு அவர் கொடுத்த உழைப்பும் அர்ப்பணிப்பும் சாமானியமானது இல்லை. 

ஆசிரியர் பணியை வாழ்க்கையாகவே ஆக்கிக்கொண்டவர் என் தகப்பனார். தனிப்பட்ட வாழ்க்கை என்று ஒன்று அவருக்கு இருந்ததா என்றே தெரியாத அளவுக்குத் தன்னைச் சுருக்கிக்கொண்டிருந்தார். ஓர் உதாரணம் சொல்கிறேன். எங்கள் வீடு அக்கிரகாரத்தில் இருக்கிறது. உள்ளூர்க்காரர் என்பதால், எங்களைச் சுற்றியுள்ளவர்களில் ஏராளமானவர்கள் உறவினர்கள். ஊரில் செல்வாக்கானவர் என்பதால் எல்லாச் சமூகங்களைச் சேர்ந்தவர்களையும் அடங்கிய பெரிய நட்பு வட்டமும் எங்களுக்கு உண்டு. விசேஷ நாட்கள் என்றால், குறைந்தது 10 அழைப்பிதழ்களாவது இருக்கும். எந்த விசேஷ வீட்டிலும் பத்து நிமிஷத்துக்கு மேல் எங்கள் தகப்பனார் இருந்து நான் பார்த்தது இல்லை. யார் வீட்டிலும் அவர் சாப்பிட்டதும் இல்லை. விருந்து சாப்பிடும் நேரம்கூட ஆடம்பரம் என்று கருதினார். 

பள்ளியில் நிர்வாகத்துக்கு வந்ததால், ஒருநாளும் ஓர் ஆசிரியராக தன்னுடைய வகுப்புகளை அவர் குறைத்துக்கொண்டது இல்லை. இது போக, கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு வீட்டில் சிறப்பு வகுப்புகளையும் எடுத்தார். ஊரே வணங்கக்கூடிய ஆளுமையாக அவர் திகழ்ந்தார். இவ்வளவுக்கும் மிகச் சாதாரணமாக இருப்பார். அவருடைய தேவைகளும் குறைவு. ‘சாப்பிடப் பழையதும், உடுத்திக்கொள்ள ஒரு வேட்டியும் போதும் எனக்கு; அதுதான் ஓர் ஆசிரியருக்கான பெரிய பலம்!’ என்பார். 

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

மன்னை: மாண்புமிகு மாணவர்

சமஸ் | Samas 23 Aug 2022

சரி, ஆசிரியர் ஸ்ரீநிவாசன் வீட்டில் ஒரு தந்தையாக எப்படி இருந்தார்? 

எனக்குத் தந்தையாரைப் பார்த்தாலே பயம். அவர் வீட்டில் இருந்தாலே நான் சுவரோரமாகப் பதுங்கிப் பதுங்கிப் போவேன். எனக்கு ஒரு தங்கையும் அண்ணனும் உண்டு. என் அண்ணன் கல்யாணசுந்தரம் பரம சாது. எப்போதும் ஆனந்த விநாயகர் கோயிலில் போய் உட்கார்ந்துகொள்வான். நானும் என் தங்கை லக்ஷ்மியும் வீட்டில் லூட்டி அடிப்போம். அப்பா முன்கூடத்தில் இருந்தால் நாங்கள் கொல்லைப்புறத்தில் இருப்போம். சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், பயத்தைக் காட்டிலும் பெரிய மரியாதை அவர் மீது இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி எதாவது புத்தகம் அல்லது பத்திரிகைகளை வாசித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருப்பவராகத்தான் அவருடைய நினைவு நெஞ்சில் நிலைத்திருக்கிறது. யாராவது சந்திக்க வந்திருக்கிறார்கள் என்றால், பெரும்பாலும் யோசனை அல்லது தீர்வு சொல்பவராக இவர் இருப்பார். அக்கிரகாரத்தில் ஏராளமான ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் அப்போது உண்டு. ஓய்வுபெற்றவர்களும் இருப்பார்கள். வேலை முடிந்தால் திண்ணைக் கச்சேரி, சீட்டுக் கச்சேரி என்று உட்கார்ந்திருப்பார்கள். ஊர் வம்பு பேசுவார்கள். எங்கள் தந்தையாரை ஒருநாளும் அவர்கள் அருகிலேயே பார்த்தது இல்லை. ‘ஆசிரியர் எல்லோருக்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்; நிறைய எடுத்துக்கொள்வதால் இல்லை; நிறைய ஒறுப்பதால்தான் முன்னுதாரணமாக இருக்க முடியும்’ என்று சொல்வார். 

வீட்டிலும் ஆசிரியராகவே அப்பா இருந்தார் என்றால், உங்கள் அம்மா எப்படி அதைப் பார்த்தார்கள்? உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையிலான உறவு எப்படி இருந்தது? 

என்னுடைய தாயார் ஞானாம்பாள் மூன்றாம் வகுப்பு வரைதான் படித்திருந்தார். ஆனால், தந்தையாரின் ஆகிருதியை முழுமையாக உள்வாங்கியவர் அவர். நாம் ஒரு ஆளுமைக்கு வாழ்க்கைப்பட்டிருக்கிறோம் என்ற எண்ணம் அவருக்கு உண்டு. அதனால், வீட்டுச் சுமை எதையும் தந்தையாரிடம் கொடுக்க மாட்டார். அதேசமயம், வீட்டு நிர்வாகமும் முக்கியமான விஷயம் என்ற புரிதல் தந்தையார் - தாயார் இருவருக்குமே இருந்தது. வீட்டு நிர்வாகம் முழுமையாக தாயாருடையது. அப்பா முழுச் சம்பளத்தையும் அம்மாவிடம் கொடுத்துவிடுவார். அம்மாதான் கடைத்தெருவுக்குப் போய் வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்கி வருவார். வீட்டு சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் தீர்மானிப்பார். எனக்குத் தெரிய பண விஷயமாகத்தான் அம்மா – அப்பாவுக்குள் எப்போதாவது பிணக்கு வரும். அப்போதெல்லாம் ஆசிரியர்களுக்குப் பெரிய சம்பளம் கிடையாது. அதிலும் உதவி கேட்டு வரும் மாணவர்களுக்கு ஒரு பகுதியை ஒதுக்கிவிட்டு மிச்ச சம்பளத்தைத்தான் தாயாரிடம் கொடுப்பார் தந்தையார். சமயங்களில் உதவித்தொகை வழக்கத்தைவிட எகிறும்போது வீட்டில் தட்டுப்பாடும் பிணக்கும் உருவாகும். மற்றபடி அவர்கள் இடையே அருமையான புரிதல் இருந்தது. 

தந்தையார் நேரத்துக்கு எல்லாவற்றையும் செய்யக் கூடியவர். காலை 5.30 மணிக்கு எழுந்துவிடுவார். சந்தியா வந்தனம், மாத்யானிகம், சாயம்சந்தியாவந்தனம் தவறவிட்டதே கிடையாது. தினமும் ராமாயணம் படிப்பார். ‘தி இந்து’ பத்திரிகை அவரோடு ஒட்டியது. ஒரு நாளைக்கு இரண்டு வேளை காபி குடிப்பார். எப்போதும் வீட்டு சாப்பாடுதான். அம்மா என்ன செய்து வைத்தாலும் குறையே சொல்லாமல் சாப்பிட்டுப் போய்விடுவார். உடல் நலம் குறைந்தால் மாத்திரை எடுத்துக்கொள்ள மாட்டார். வயிற்றைக் காயப்போட்டு, உடம்புக்கு ஓய்வு கொடுத்தால் உடம்பு தன்னைத் தானே சரிசெய்துகொள்ளும் என்று நம்பியவர். தந்தையாருக்கு சகிப்புத்தன்மை அதிகம். வாழ்க்கையைத் தத்துவார்த்தமாக அணுகுபவர். அவர் நிதானம் இழந்து நான் பார்த்ததே இல்லை. இந்தத் தனித்துவங்கள் அத்தனையையும் தாயார் அங்கீகரித்தார். சொல்லப்போனால், தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் நிறைய தியாகங்களைச் செய்திருக்கிறார். ஆனால், அவற்றையெல்லாம் தன் கடமைகள் என்று அவர் நினைத்துச் செயல்பட்டார். 

ஆசிரியர் துறை மீதான உங்கள் விருப்பம் இயல்பானதா அல்லது உங்கள் அப்பாவின் வழிகாட்டுதலில் ஏற்பட்டதா? 

மருத்துவர் ஆக வேண்டும். அதுதான் என் கனவாக இருந்தது. ஓரிரு மதிப்பெண்களில் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமல் போய்விட்டது. அதனால், ஆசிரியர் ஆனேன் என்பதே உண்மை. ஆனால், தந்தையார் மூலமாக ஆசிரியர் பணி மீது ஒரு கவர்ச்சி மறைமுகமாக ஏற்பட்டிருக்க வேண்டும். அதனால் இயல்பாக அதைத் தேர்ந்தெடுத்தேன். ஒரு விஷயத்தை அவசியம் சொல்லியாக வேண்டும். ஓர் ஆசிரியரான பிறகு, என்னுடைய முன்னுதாரணர்களில் ஒருவராக அவர் இருந்தார். ஆசிரியத்துவத்தை வாழ்க்கை முறையாகவே அமைத்துக்கொண்டால்தான் ஓர் ஆசிரியர் சிறப்பாகச் செயலாற்ற முடியும் என்பதற்கு அவரே வழிகாட்டியாக இருந்தார். 

உங்களுடைய தந்தையார் தவிர உங்களுக்கு வேறு முன்னுதாரணங்கள் யார்? 

நான் செயின்ட் ஜோசப் கல்லூரியில் படித்தபோது எனக்கு முதல்வராக இருந்த அருட்தந்தை லயோனல், அதேபோல புஷ்பம் கல்லூரியில் படிக்கும்போது அங்கு தாளாளராக இருந்த ஸ்ரீமான் துளசி ஐயா வாண்டையார். மிகுந்த கட்டுப்பாட்டுக்கும் நல்லொழுக்கத்துக்கும் பேர்போனவர்கள் இவர்கள். சொல்லப்போனால், இவர்கள் மூலமாகவும் என்னுடைய தந்தையாருடைய முக்கியத்துவத்தையும் கல்வியாளர்களுக்கு இருக்க வேண்டிய பொறுப்பின் கனத்தையும் நான் உணர்ந்தேன் என்று சொல்லலாம். 

எனக்குப் பிள்ளைகள் பிறந்த பின் என்னுடைய பொறுப்புணர்வு கூடியது. என் மகன் ராஜகோபால், மகள் ஸ்ரீவித்யா இருவருக்கும் ஆசிரியராகவும் நான் போதித்தேன். வீட்டில் அவர்களிடம் என் மனைவி ஜெயலக்ஷ்மி எப்படி நடந்துகொள்கிறார் என்பதை அப்போது கவனிக்கலானேன்; அப்போது அவரிடமிருந்தும் பல நல்ல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். ஓர் ஆசிரியர் புற வெளிப்பாட்டில் தந்தைமையுடனும், அக வெளிப்பாட்டில் தாய்மையுடனும் நடந்துகொள்ள வேண்டும் என்ற புரிதலை அப்போதுதான் அடைந்தேன் என்று சொல்ல வேண்டும். ஆசிரியர் எங்கும், என்றும் கற்றுக்கொள்கிறவராகவே இருக்கிறார். 

தேசிய பள்ளியின் அடையாளங்களின் ஒன்றாக நீங்கள் முன்னெடுத்த கணினி அறிவியல் படிப்பு சொல்லப்படுகிறது; தமிழக அளவில் அது முன்மாதிரியான செயல்பாடு. எப்படி முப்பது ஆண்டுகளுக்கு முன்னே, கணினியின் முக்கியத்துவத்தை உணர்ந்து பள்ளியில் கணினி வசதியை ஏற்படுத்தித்தந்தீர்கள்? மேலும், அது பெரிய முதலீட்டைக் கோரக் கூடியது. ஒரு பொதுப் பள்ளியில் எப்படி அதைச் சாத்தியப்படுத்தினீர்கள்? 

நான் கல்லூரியில் படிக்கும்போதே எனக்குக் கணினி மீது ஈடுபாடு வந்துவிட்டது. இதுதான் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகிறது என்று ஓர் உள்ளுணர்வு. தேசிய பள்ளியில் ஆசிரியராக சேர்ந்த பிறகு, 1982இல் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் புரோகிராமிங் கற்றேன். ஒரு வருடப் பயிற்சி அது. 1984இல் ஒரு கம்ப்யூட்டர் வாங்கி பயிற்சி நிலையம் ஆரம்பித்தேன். ‘சங்கரா கம்ப்யூட்டர் சென்டர்’ என்று பெயர். உள்ளூர் கல்லூரி மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்ற உந்துதல்தான் காரணம். அதன் பிறகுதான் இந்த எண்ணம் தோன்றியது; ஏன் பள்ளி மாணவர்களுக்கும் இதை அறிமுகப்படுத்தக் கூடாது? அப்போது சம்பத் சார் தலைமையாசிரியராக இருந்தார். அவரிடம் கேட்டேன், உற்சாகமாக அனுமதித்தார். பள்ளிக்கு ஒரு கம்ப்யூட்டரை வாங்கிக் கொண்டுவந்துவிட்டோம். அதை வைத்துக்கொண்டு பயிற்சி கொடுத்தோம். நான் 1992இல் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றேன். இதற்குப் பிறகு, பள்ளியில் கணினி ஆய்வகம் கட்டலானோம். 1999இல் தேசிய பள்ளியில் 84 கணினிகள் இருந்தன. 3,400 சதுர அடியில் அமைந்திருந்தது கணினி ஆய்வுக்கூடம். அப்போது தமிழகத்தில் பல கல்லூரிகளில்கூட இந்த அளவுக்கான கட்டமைப்பு கிடையாது. 1992இல் நான் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்கும்போது பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை 2,000; இது 2001இல் 5,000 ஆக உயர்ந்தது. அதற்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் துறைக்கு நாங்கள் கொடுத்த முக்கியத்துவமும் காரணம். தமிழகத்தில் சிறந்த ஆய்வுக்கூடத்துடன் கூடிய பயிற்சி அளிக்கும் பள்ளியாக அன்றைய மத்திய அரசு எங்கள் பள்ளியைத் தேர்ந்தெடுத்தது; துணை பிரதமர் அத்வானி, முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற நிகழ்ச்சியில் இதற்கான விருதை வழங்கியது பள்ளியின் மீதான இந்தக் கவனத்தை மேலும் குவித்தது. இன்னும் மேலே சிந்திக்கலாம் என்ற எண்ணமே மேலோங்கியது. 

நான் எப்போதுமே பணத்தை ஒரு பெரிய தடையாகக் கருதுவது கிடையாது. அப்படியென்றால், ஏதோ பெரிய வசதி உடையவன் என்று எண்ணிவிட வேண்டாம். கல்வி சார்ந்து ஒரு நல்ல காரியம் என்றால், பணத்தைப் பொதுவில் எப்படியும் திரட்டிட முடியும் என்று ஒரு நம்பிக்கை உண்டு. பள்ளிக்கூடங்கள் எதிர்காலத்தோடு நிகழ்காலத்தைப் பிணைப்பவை. ஓர் ஆசிரியர் இந்தப் புரிதலோடு செயல்பட வேண்டும். மற்றவை தானாக நடக்கும். அவ்வளவுதான். இதோ வரும் ஆண்டு முதல் பள்ளியில் ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், மிஷின் லேர்னிங் தொடர்பில் பயிற்சி வழங்கத் திட்டமிட்டு, இது தொடர்பாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தமும் செய்திருக்கிறோம். எல்லாமே நம்முடைய கனவுகள், கற்பனைகள் சம்பந்தப்பட்ட விஷயம்தான்!

உங்கள் குடும்பத்துக்கு ஒரு கல்விப் பாரம்பரியம் இருக்கிறது. மூன்று தலைமுறைகளுக்கு மேலாக உங்கள் குடும்பமானது பள்ளி ஸ்தாபிதம், நிர்வாகம், ஆசிரியம் மூன்று விஷயங்களிலும் சேர்ந்து ஓர் அனுபவத்தைப் பெற்றிருக்கிறது. அந்த அடிப்படையில் மூன்று விஷயங்கள் சார்ந்தும் இன்று நம் பள்ளி அமைப்பில் உள்ள பெரிய பிரச்சினையாக எதைக் கூறுவீர்கள்? 

மிக அடிப்படையான விஷயம், ஒரு பள்ளி என்பது தன்னளவில் சுயாதீனமான இயங்கக் கூடியதாக இருக்க வேண்டும். பள்ளிகள் தன்னாட்சியோடு செயல்பட வேண்டும். தன்னாட்சி என்கிற அளவில் எல்லாம் இல்லை; சுதந்திரமாகக்கூட இயங்க முடியாத நிலையிலேயே பள்ளிகளை நம் சமூகமும் அரசும் வைத்திருக்கின்றன. எங்கள் பள்ளிக்கூடத்தின் வரலாற்று அனுபவத்திலிருந்து பார்த்தாலே நாளுக்கு நாள் பள்ளிக்கூடங்கள் அதிகாரம் இழந்துவருவதையே நான் காண்கிறேன். 

என்னுடைய பாட்டனார் காலத்தில் பள்ளிக்கூட நிர்வாகங்களுக்கு இருந்த அதிகாரம் என்னுடைய தந்தையார் இல்லை; என்னுடைய தந்தையார் காலத்தில் தலைமையாசிரியர்களுக்கு இருந்த அதிகாரம் என்னுடைய காலத்தில் இல்லை; என்னுடைய காலத்தில் ஆசிரியர்களுக்கு இருந்த மிச்ச சொச்ச அதிகாரம்கூட இன்றைய ஆசிரியர்களுக்கு இல்லை. 

இன்று நம் பள்ளிகள் சுதந்திரமாக இயங்குகின்றனவா? பள்ளிக்கூட நிர்வாகத்துக்கோ, தலைமையாசிரியர்கள், வகுப்பு ஆசிரியர்களுடைய கற்பனைக்கோ நாம் ஏதேனும் வாய்ப்பு அளிக்கிறோமா? நல்ல நிர்வாகிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களிடம் கேட்டுப்பாருங்கள். கண்ணீர் வடிப்பார்கள். இதைச் செய்தால், விதிகள் என்ன செய்யும் என்ற கேள்வியுடனேயே இன்றைய ஆசிரிய சமூகம் வேலை பார்க்க வேண்டியிருக்கிறது. இந்த அச்சம் பெரிய அவலம்! 

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

சுவாமிநாத உடையார்: மக்கள் நேசர்

எஸ்.அன்பரசு 01 Sep 2022

தேசிய கல்வி இயக்கம் என்பதே கல்வியை மையப்படுத்துவதற்கு எதிரானதாக ஆரம்பிக்கப்பட்டது. உள்ளூர் மக்களுடைய அறிவு, திறன், கற்பனை, செயல்பாடு இவற்றுக்கெல்லாம் நம்முடைய கல்வி அமைப்பிலும் பாடத்திட்டத்திலும் பள்ளிக்கூடங்களிலும் இடம் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் உருவாக்கப்பட்டது. அதன் மைய லட்சியமே உள்ளூர்த்தன்மை. இன்றும் அது சாத்தியமாகவில்லை என்பதோடு, நேர் எதிரான பாதையில் வேகமாகவும் செல்கிறோம். நீங்கள் இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

முழுமையாக மையப்படுத்திவிட்டோம். இந்த மையப்படுத்துதல் எல்லோருடைய படைப்பாற்றலையும் பாதிக்கிறது. கனவுகளைச் சுருக்கிவிடுகிறது. பள்ளிக்கூடத்தின் முக்கியமான செயல்பாடு படைப்பாற்றல் – கனவுகளுக்கான வெளிப்பாடு. 

பள்ளி அளவில் சுதந்திரம் – தன்னாட்சி என்று எதையெல்லாம் குறிப்பிடுவீர்கள்? 

பள்ளிக்கூடம் என்பது அடிப்படையில் ஆசிரியருக்கும் மாணவருக்குமான உறவை மையமாகக் கொண்டது. ஏனைய எல்லா அமைப்புகளுமே அடுத்த பட்சம்தான். ஆனால், இன்றைக்கு என்ன நடக்கிறது? ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையில் ஏனையோர் உட்கார்ந்திருக்கின்றனர். அரசாங்கம் தொடங்கி ஊடகம் வரை எல்லோரையுமே இதில் நான் குற்றஞ்சாட்டுவேன். 

மிக சாதாரணமான ஒரு விஷயத்தைப் பேசுவோம். 

ஆண்டில் ஒரு பாடத்தைக் கற்பிக்க எத்தனை மணி நேரம் ஒதுக்க வேண்டும் என்பதை யார் தீர்மானிப்பது? பாட ஆசிரியர்தான் தீர்மானிக்க வேண்டும். ஒரு பாடத்துக்கு 10 பீரியட் வேண்டுமா, 5 பீரியட் வேண்டுமா; எவ்வளவு நேரம் தியரி, எவ்வளவு நேரம் பிராக்டிகல் இவையெல்லாம் ஒரு வகுப்பின் மாணவர்கள் தரத்தைப் பொறுத்து தீர்மானிக்கப்பட வேண்டியது. வகுப்பாசிரியரும் தலைமையாசிரியருமே இங்கே கேட்டுக்கொள்ள வேண்டியவர்கள்தான்; பாட ஆசிரியருடைய அதிகாரத்தில் அவர்களே தலையிட முடியாது. என் தந்தையார் எவ்வளவோ அனுபவம் மிக்கவர். ஆனால், புதிதாக வந்த ஓர் ஆசிரியர் ‘எனக்கு இவ்வளவு நேரம் வேண்டும்’ என்று சொன்னாலும் கேட்டுக்கொள்வார். இன்றைய சூழல் என்ன? எல்லாம் மேலிருந்து தீர்மானிக்கப்படுவதை அடியொற்றிச் செயல்படுவதே ஆசிரியரின் தலைவிதி என்று ஆகிவிட்டது. 

இப்போது தலைமையாசிரியருக்கான அதிகாரத்தைப் பேசுவோம். 

பள்ளிக்கூடம் இன்றைக்கெல்லாம் 220 நாட்கள்கூட செயல்படுவது இல்லை; 180 நாட்கள் நடந்தால் அதிகம். பாடத் தேவை அதிகமாக இருக்கிறது என்றால், எப்படி அதைப் பூர்த்திசெய்வது? விடுமுறை எடுக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியரின் கைகளில் தரப்பட்டிருக்கிறது. பள்ளி எப்போது செயல்பட வேண்டும், எப்போது விடுமுறை அளிக்கலாம் என்ற முடிவைக்கூட ஒரு தலைமையாசிரியருக்கு எடுக்க முடியாதா? 

எங்கள் பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் கணினிப் பயிற்சி வழங்குவது என்று நாங்கள் முடிவெடுத்தபோது, கணினிப் பயிற்சி என்பது பள்ளிப் பாடத்திட்டங்களில் கிடையாது. ஆனால், கணினிப் பயிற்சி எங்கள் மாணவர்களின் எதிர்காலத்துக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் முடிவெடுத்து, பயிற்சி வகுப்பை ஆரம்பித்தோம். இதற்கு அன்றைக்கு மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் எவ்வளவு எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருந்தது, யாரிடமெல்லாம் மன்றாட வேண்டியிருந்தது தெரியுமா? பள்ளிப் பாடத்திட்டத்தில் இல்லாத ஒன்றை எதன் அடிப்படையில் நீங்கள் சொல்லிக்கொடுக்கிறீர்கள் என்று கேட்டு சண்டை பிடித்தார்கள். எப்படியோ சமாளித்து அறிமுகப்படுத்தினோம். கேள்வி என்னவென்றால், ஒரு பள்ளி தன்னுடைய மாணவர்களைக் காலத்துக்கு ஏற்ப மேம்படுத்த நினைப்பது தவறா? நான் பேசுவது முப்பதாண்டுகள் கதை. இப்போதைய கட்டமைப்பில் ஒரு பள்ளி புதிய முயற்சிகளை முன்னெடுப்பது மேலும் சிரமம் ஆகியிருக்கிறது. 

இப்போது நிர்வாகத்துக்கான அதிகாரத்தைப் பேசுவோம். ஆசிரியர்களை மையமிட்டே ஒரு பள்ளி செயல்படுகிறது. அப்படியென்றால், ஆசிரியர்கள் இடையே பாகுபாடு இல்லாத சூழல் இருக்க வேண்டும். அப்போதுதான் ஆசிரியர்களை நிர்வாகம் கேள்வி கேட்க முடியும், இல்லையா? 

எங்களைப் போன்ற அரசு உதவி பெறும் ஒரு பள்ளியின் நிலைமையை எடுத்துக்கொள்வோம். ஒரு பள்ளியில் 60 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள் என்றால், அவர்களில் 15 பேர் தற்காலிக ஆசிரியர்களாக இருப்பார்கள். அதாவது, 45 ஆசிரியர்களுக்கு அரசு ஊதியம் கொடுக்கும்; இந்த 15 பேருக்கு அந்தப் பள்ளி நிர்வாகம்தான் ஊதியம் கொடுக்க வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களிடம் கல்விக் கட்டணம் வசூலிக்க முடியாது. எனில், அந்த 15 ஆசிரியர்களுக்கான ஊதியத்தை எங்கிருந்து நிர்வாகங்களால் கொடுக்க முடியும்? முன்பு அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான ஊதியம் மட்டுமல்ல, பள்ளியின் பராமரிப்புச் செலவுகளுக்கும் அரசே பொறுப்பேற்றது. ஆனால், இப்போது அந்தச் செலவுகளையும் அந்தப் பள்ளியின் நிர்வாகமே செய்ய வேண்டியதாக உள்ளது. இந்தச் சூழல் எங்கே கொண்டுபோய்விடுகிறது? 

அரசு ஊதியத்தைப் பெறும் ஆசிரியர்களுக்கான ஊதியத்தில் 20%கூட நிர்வாக ஊதியத்தைப் பெறும் ஆசிரியர்களுக்குக் கொடுக்கப்படுவது இல்லை. தொடக்கப் பள்ளியில் அதிகபட்சமாக ரூ.5,000; மேல்நிலைப் பள்ளியில் அதிகபட்சமாக ரூ.8,000 மாத ஊதியமாக வழங்குகிறார்கள்; அதே பள்ளியில் அரசு ஊதியத்தைப் பெறும் ஆசிரியர் ரூ.1 லட்சம் வரை பெறக்கூடியவராக இருப்பார். இந்தப் பாரபட்சம் எவ்வளவு கொடுமையானது? எனக்கு இது குற்றவுணர்வைத் தருகிறது. மேலும், கல்வியின் தரத்தையும் இது கடுமையாகப் பாதிக்கக்கூடியது. திறன் மிக்கவர்கள் சீக்கிரமே இந்த இடத்திலிருந்து நகர்ந்துவிடுவார்கள். எல்லாவற்றுக்கும் மேல் ஆசிரியரைக் கேள்வி கேட்கும் தார்மிகத்தை நிர்வாகம் இழந்துவிடுகிறது. 

நவீனக் கல்விமுறை வந்து நூறாண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனால், இன்னமும் நம் பள்ளிகளில் ஓர் எழுத்தாளர், ஒரு இசைக் கலைஞர் ஆசிரியராக அமரும் சூழல் உருவாகவில்லை. மாணவர்கள் இடையே ஓர் எழுத்தாளரையோ கவிஞரையோ கலைஞரையோ கண்டுபிடிப்பது எப்படி? அவர்களை வளர்த்தெடுப்பது எப்படி? அப்படிப்பட்ட சூழலை நிர்வாகங்கள் எப்போது உருவாக்குவது? 

இப்படி எவ்வளவோ பிரச்சினைகள்… 

பள்ளித் தேர்வுகளுக்கு ஒருகாலத்தில் அந்தந்தப் பள்ளியிலேயே வினாத்தாள்கள் அச்சடிக்கப்பட்டன. எங்களுடைய பள்ளியையே எடுத்துக்கொண்டால் இதற்கென்று ஓர் அச்சகமே இருந்தது. ஒருமுறை கேள்வித்தாள் லீக் ஆகிவிட்டது. அதற்குப் பின் பள்ளிக்கூட அச்சகத்தில் அடிப்பதையே நிறுத்திவிட்டு, கும்பகோணத்தில் ஓர் அச்சகத்தைப் பிடித்து, அங்கிருந்து அடித்து வாங்கினார்கள். எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், பள்ளிக்கூடத்துக்கு சுதந்திரமும் அதிகாரமும் இருக்கும்போது அவர்களுக்குப் பொறுப்பும் இருந்தது. இன்று பள்ளிக்கூட நிர்வாகங்களும் ஆசிரியர்களும் அதிகாரமற்றவர்களாக ஆக்கப்பட்டிருக்கின்றனர். சுதந்திரமும் கிடையாது, அவர்கள் மீது நம்பிக்கையும் கிடையாது; விளைவாக அவர்களிடமும் பொறுப்புணர்வு குறைந்திருக்கிறது. 

மையப்படுத்தும் அமைப்பின் பெரிய பிரச்சினை என்னவென்றால், அது கீழே உள்ள எல்லோரையும் ஏமாற்றுக்காரர்களாகவோ ஏமாற்றுபவர்களாகவோ பார்க்கிறது. இது ஆபத்தானது. ஒரு சமூகத்தையே வழிநடத்தக் கற்றுக்கொடுக்கும் இடம் பள்ளிக்கூடம். அதை இப்படி ஏமாற்றோடு மறைமுகமாகப் பார்ப்பது அவலம். 

அடிப்படையில் பள்ளிக்கூடம் என்பது ஆசிரியர்கள் – மாணவர்கள் இடையிலான உறவை மையப்படுத்தியது என்று நீங்கள் குறிப்பிட்டது மிக முக்கியமான விஷயம். இந்த உறவு இன்று கடுமையாகச் சீர்குலைந்திருக்கிறது. எப்படி பழைய நிலைக்கு அதை மீட்டெடுப்பது? 

மாணவர்களுக்கு நான் சொல்ல ஏதும் இல்லை. ஏனென்றால், அவர்கள் குழந்தைகள். அப்படியென்றால், ஆசிரியர்களைத்தான் பெரும்பான்மை பொறுப்பு சார்கிறது. ‘ஓர் ஆசிரியர் கற்றுக்கொள்ள வேண்டிய மிக அடிப்படையான கல்வி எதுவென்றால், அவர் 24 மணி நேரமும் ஆசிரியர் என்பதை உணர்ந்துகொள்வதுதான்’ என்று சொல்வார் என்னுடைய தந்தையார். 

வேறு எந்த வேலையில் இருப்பவரும் வீட்டில் ஒரு மாதிரியும், அலுவலகத்தில் ஒரு மாதிரியும் இருக்கலாம். இடத்துக்கு இடம் அவர் பண்பை மாற்றிக்கொள்ளலாம். ஓர் ஆசிரியர் அப்படி இருக்கவே முடியாது. கூடாது. எந்த இடத்திலும் சமூகம் அவரை ஆசிரியராகவே பார்க்கும். தவறான முன்னுதாரணமாக அவர் இருக்கக் கூடாது. 

ஒரு வீடும் பள்ளிக்கூடமும் ஒன்றுபோல இருக்க முடியாது என்றாலும்கூட, ஆசிரியரின் வீடுகூட ஏனையோரின் வீடுபோல இருக்க முடியாது. அது எங்கோ பள்ளிக்கூடத்தின் பண்பையும் பெற்றிருக்க வேண்டும். அப்படி பெற்றிருந்தால்தான் ஆசிரியர் வீடு தனித்துவமானதாக இருக்க முடியும். ஆசிரியர்களுடைய வீடுகளின் முதல் கூடமே மாணவர்களைத் திட்டமிட்டு உருவாக்கப்பட வேண்டும் என்று சொல்வார் என் தந்தையார். ஆசிரியர் பணியில் இருக்கிறாரோ இல்லையோ; மாணவர்களும் பெற்றோர்களும் அங்கு வந்து செல்லத்தக்க இடம் ஆசிரியரின் மனதில் முதலில் உருவாகியிருக்க வேண்டும். ஆசிரியரின் வீட்டில் கண்டிப்பாக நல்ல நூலகம் இருக்க வேண்டும். வீட்டில் அன்றாடம் சில மணி நேரங்களேனும் வாசிக்கவும் எழுதவும் செலவிட வேண்டும். 

வீட்டுக்கே இவ்வளவு வரையறைகள் என்றால், ஆசிரியருக்கு எவ்வளவு வரையறைகள் இருக்கும்? அது தனி வாழ்வியல்! 

பள்ளிக்கூடம் எந்த ஊரில் இருக்கிறதோ, அந்த ஊரில்தான் ஆசிரியர் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு ஊரில் ஐந்து வருஷங்களேனும் அவர் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். அப்போதுதான் மாணவர்களை ஊர்ப் பின்னணியில் புரிந்துகொள்ள முடியும். 

இன்றைக்கு மாதச் சம்பளத்தைத் தாண்டி உற்சாகம் தரும் எதுவும் இந்த வேலையில் இல்லை என்ற நிலையிலேயே பல ஆசிரியர்கள் இருக்கிறார்கள். கல்வி என்பது பாடத்திட்டத்துக்குள் மட்டும் இல்லை. பல ஆசிரியர்களோ பாடத்திட்டத்தில் உள்ளவற்றையேகூட முழுமையாகத் தெரிந்துகொள்ளும் ஆற்றலும் ஆர்வமும் இல்லாதவர்களாக இருக்கின்றனர். உலகில் வேகமாக நிகழ்ந்துவரும் சமூக, பொருளாதார, தொழில்நுட்ப மாற்றங்கள் குறித்து அவர்களுக்குப் பெரிய அறிதல்கள் எதுவும் இல்லை. மாணவர்களோடு ஆத்மார்த்தமான உறவு இல்லை. பெரும்பாலான ஆசிரியர்களிடம் ஆசிரியம் என்பதே இல்லை. ஆசிரியர் என்பவரே ஓர் இனம். மாறாக, இன்று பல ஆசிரியர்கள் தம்மை சாதி, மதம், அரசியல் அடையாளங்களுக்குள் குறுக்கிக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையெல்லாம் மாற வேண்டும். 

மூன்று லட்சம் பேர் இருக்கிறோம்; சங்கம் இருக்கிறது; அதனால் நம் மீது எந்த நடவடிக்கையையும் யாரும் எடுக்க முடியாது; எந்த அரசியல் கட்சியையும் பணிய வைக்கலாம்; அரசைப் பணிய வைக்கலாம் என்று ஆசிரியர்கள் செயல்பட்டால் நம்முடைய மாண்பை இழப்பதைத் தவிர ஆசிரியர்களுக்கு வேறு வழியில்லை. ஒருகாலத்தில் ஆசிரியர் சங்கக் கூட்டங்கள் என்பவை ‘அகடமிக் டிஸ்கஷன்’ நடக்கும் இடங்களாக இருக்கும். இன்றைய நிலை என்ன என்பதை ஆசிரியர் சங்கங்கள் யோசிக்க வேண்டும். 

சமூகமும் அரசும் ஆசிரியர்கள் – மாணவர்கள் உறவுக்கு இடையில் நிற்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். ‘மாணவர்களை ஆசிரியர் அடிக்கக் கூடாது’ என்ற அரசு உத்தரவையே எடுத்துக்கொள்வோம். இது எவ்வளவு மோசமான ஒன்று தெரியுமா? இப்படிச் சொல்லும்போது மாணவர்களை அடித்தால்தான் அவர்கள் உருப்படுவார்கள் என்று நான் சொல்வதாகக் கருதக் கூடாது. நானெல்லாம் அப்படிக் கடுமையாக அடிப்பவனாகவோ மூர்க்கமானவனாகவோ அறியப்பட்ட ஆள் இல்லை. தன்னுடைய நடத்தையாலேயே மாணவர்களிடம் மரியாதையை உருவாக்க வேண்டும் என்பதையே இலக்கணமாகச் சொல்பவன். 

அப்படியென்றால், நான் எதைக் குறிப்பிட விரும்புகிறேன்? பிள்ளைகளைப் பெற்றோர்கள் அடிக்கக் கூடாது என்பது ஒரு நல்ல இலக்கணம்; அப்படிச் சொல்வது வேறு; ‘உன் பிள்ளையை நீ அடிக்கும் உரிமையே உனக்குக் கிடையாது’ என்று உத்தரவிடுவது வேறு. நிச்சயமாக, ஆசிரியர் – மாணவர் உறவில் ஓர் அதிகாரப் படிநிலை வேறு எந்த வேலையில் இருப்பவரும் வீட்டில் ஒரு மாதிரியும், அலுவலகத்தில் ஒரு மாதிரியும் இருக்கலாம். இடத்துக்கு இடம் அவர் பண்பை மாற்றிக்கொள்ளலாம். ஓர் ஆசிரியர் அப்படி இருக்கவே முடியாது. கூடாது. எந்த இடத்திலும் சமூகம் அவரை ஆசிரியராகவே பார்க்கும். தவறான முன்னுதாரணமாக அவர் இருக்கக் கூடாது. இருக்கத்தான் வேண்டியிருக்கிறது. சுதந்திர, தாராளச் சூழல் என்பது ஒழுக்கமும் பண்பாடும் தோய்ந்த சூழலோடு பிணைந்தது. ஒழுக்கத்தைப் பயிற்றுவிக்க அல்லது ஒழுக்கச் சூழல் மோசமாக மீறப்படுவதைத் தடுக்க அச்சம் ஒரு முக்கியமான கருவி. நீங்கள் அதை ஆசிரியர்களிடமிருந்து பறித்துவிட்டீர்கள். இன்று மாணவர்கள் ஆசிரியர்களை அடிக்க வரும் காணொளிகளை டிவியில் பார்க்கிறோம். என்ன செய்யப்போகிறீர்கள்? அவர்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் ஆசிரியரிடமும் இல்லை; சமூகமான உங்களிடமும் இல்லை. 

பள்ளியைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது சுகாதாரக் கல்வியின் பாலபாடங்களில் ஒன்று. என்னுடைய தந்தையார் பள்ளி வளாகத்தில் சின்ன காகிதம் சுருட்டப்பட்டுக் கிடந்தாலும், அதைப் பொறுக்கி எடுத்துக் குப்பைத் தொட்டியில் கொண்டுபோய் போட்டுவிட்டு வருவார். சுத்தப்படுத்துவதற்கு என்று ஒவ்வொரு வகுப்புக்கும் வாரத்தில் ஒரு பிரிவே உண்டு. இன்றைக்கெல்லாம் ஒரு மாணவரை அழைத்து ‘இந்தக் குப்பையைப் பொறுக்கு’ என்று சொல்ல முடியுமா? ‘மாணவரைக் குப்பை அள்ள வைத்துக் கொடுமைக்குள்ளாக்கிய ஆசிரியர்’ என்று யூட்யூபில் காணொளி வெளிவந்துவிடும் இல்லையா? ஆனால், நாம்தான் காந்தி பொதுக் கழிப்பிடங்களை அன்றாடம் சுத்தப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்று பாடமும் நடத்துகிறோம். எவ்வளவு இரட்டைத்தனம் பாருங்கள்! 

சுருக்கமாக நான் ஒன்றைத்தான் சொல்வேன், பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையே சமூகம் நிற்க முடியாது இல்லையா, அதுபோல ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே போய் நிற்காதீர்கள். நம்புங்கள், ஆசிரியர்களும் மனிதர்கள்தான். அவர்களுக்கும் அறிவும் இருக்கும்; அன்பும் இருக்கும்! 

தமிழகக் கல்வித் துறை இன்று மிகப் பெரும் சவாலை எதிர்கொண்டு நிற்கிறது. எல்லா உயர் படிப்புகளுக்கும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் அவசியம் என்ற சூழல் உருவாகிவரும் நிலையில், பள்ளிக்கூடம் என்ற அமைப்பின் தேவையே கேள்விக்குறிக்கு உள்ளாகியிருக்கிறது. நீங்கள் இதையெல்லாம் எப்படிப் பார்க்கிறீர்கள்? எதிர்காலப் பள்ளிக்கூடங்கள் எப்படி  இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்? 

இந்தியாவில் ஏனைய மாநிலங்களை ஒப்பிடும்போது கல்வியில் தமிழ்நாடு எப்போதுமே மேலான இடத்தில் இருந்திருக்கிறது. அப்படியென்றால், என்ன அர்த்தம்? இங்கே பள்ளிக் கல்விமுறை சிறப்பாக இருந்திருக்கிறது என்பதே அர்த்தம். இன்றைக்கும் மத்திய கல்வி வாரியப் பாடத்திட்டத்துக்கு இணையான பாடத்திட்டத்தையே தமிழக அரசு உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. கல்வி என்பது மாநிலத்தின் அதிகாரம் என்றால், தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை ஒரே நேர்க்கோட்டில் செல்லும் சூழல் நிலவ வேண்டும். வெறுமனே நுழைவுத் தேர்வுகள்; அவையும் மாநிலங்களின் பாடத்திட்டத்தையோ, பயிற்றுமுறையையோ அங்கீகரிக்காத நுழைவுத் தேர்வுகள் என்பதை நான் ஏற்க மாட்டேன். உயர்கல்வியில் நுழைவதற்குப் பள்ளிக்கல்வி முக்கியமான தகுதியாகக் கருதப்பட வேண்டும்; பள்ளி இறுதித் தேர்வு மதிப்பெண்களுக்கு அங்கு இடம் இருக்க வேண்டும். என்னைப் பொறுத்த அளவில் கல்வியானது மேலும் உள்ளூர்மயமாக வேண்டும் என்ற கொள்கையை உடையவன் நான். எவ்வளவுக்கு எவ்வளவு பள்ளிகள் உள்ளூர்மயமாகுமோ அவ்வளவுக்கு அவ்வளவு கல்வி மேன்மை பெறும். ஆக, இதுவே கல்விக்கொள்கை சார்ந்த என் நிலைப்பாடு. 

நம்முடைய பள்ளிக்கூடங்கள் எதிர்கொள்ளும் இன்றைய பெரும் சவால் என்றால், கற்பித்தல் முறையில் மாற்றம் வேண்டும். இது ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட விவகாரம். பாடத்திட்ட மாற்றத்துக்கேற்ப கற்பித்தல் மாற்றம் நடக்கவில்லை. அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்; ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்பதோடு, ஆசிரியர்களும் பெரிய அளவில் மாற வேண்டும். பத்தாண்டுகளுக்கு முன் ஆசிரியர் பணிக்கு வந்த ஒரு ஆசிரியருக்கு இன்றைய விஷயங்கள் எல்லாமே புதிது என்கிற சூழலுக்கு அவர் முகம் கொடுக்க வேண்டும். ஆசிரியர் பணி என்பது கற்பித்தல் பணி மட்டுமே இல்லை; ஒவ்வொரு நாளும் கற்றுக்கொள்கிற பணி! 

(ஒரு பள்ளி வாழ்க்கை நூலிலிருந்து…)

 

நூலைப் பெற அணுகுங்கள்...

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘அருஞ்சொல்’ இதழின் ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


4

1

பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

Jotheeswaran V   2 years ago

பெருந்தமிழர் ஸ்ரீமான் பூண்டி துளசி ஐயா வாண்டையார் அவர்களின் கல்வி மற்றும் சமூகப் பணி குறித்து உங்களின் எழுத்து வாயிலாக அறிந்து கொள்ள வேண்டுகிறேன் 🙏

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Thiruvasagam   2 years ago

அரசுபள்ளி ஆசிரியர் சங்கங்கள் எப்படி செயல்பட வேண்டும் என்று ஆசிரியர் சமஸ் பதில் அளித்துவிட்டார்! இக்கட்டுரைக்கு எந்த சங்கமும் பொங்காது… 😂😂

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

ARUNKUMAR   2 years ago

பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையே சமூகம் நிற்க முடியாது இல்லையா, அதுபோல ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே போய் நிற்காதீர்கள். நம்புங்கள், ஆசிரியர்களும் மனிதர்கள்தான். அவர்களுக்கும் அறிவும் இருக்கும்; அன்பும் இருக்கும்! மிகவும் நேர்த்தியான கட்டுரை, நன்றிகள், ஐயா நான் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியம், தடாகம் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியின் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினராக உள்ளேன். எனக்கு எம் பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது உச்சகட்ட மரியாதையும் நம்பிக்கையும் தொடர்கிறது... எங்கள் ஊர் பள்ளியின் ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களின் எதிர்கால வாழ்வினை கருத்தில் கொண்டு பல்வேறு சிரமங்களை தாண்டி கற்பிக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு கண்டிக்கும் உரிமை இன்றி சில மாணவர்களின் ஒழுக்க குறைபாடுகளை அன்பு வார்த்தைகள் மூலம் சரி செய்ய முடியவில்லை நாங்கள் என்ன செய்வது என்று புலம்பும் நிலை நடைமுறையில் உள்ளது என்பதையும் மறுக்க இயலாது. சில நேரங்களில் பிள்ளைகள் செயல் தவறு என்று அறிந்தும் தங்களின் பிள்ளைகள் மேல் உள்ள அதீத அன்பால் பெற்றோர்கள் ஆத்மார்த்தமாக கண்டிக்க தவறி விடுகின்றனர். எனவே இந்த தவறுகள் நாள்தோறும் தொடர்ந்து பிற மாணவர்களுக்கும் தொடர்பு ஏற்படுத்துவது தான் அதீத வருத்தம். பெற்றோர்கள் பிள்ளைகளின் செயல்களை உற்று நோக்குங்கள், தவறு என்றால் நேர்த்தியாக கண்டியுங்கள், அவரவர் பிள்ளைகளுக்காக மட்டுமல்ல மற்ற பிள்ளைகளின் எதிர்காலத்திற்கும் பொருந்தும்......

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

சாவர்க்கர் அருஞ்சொல்பல்வகை மாதிரிகள்புதியன விரும்புஎம்.என்.ஸ்ரீனிவாஸ்சென்னை மேயர்மூட்டு எலும்பு வளைவுஉடற்பருமனைக் குறைக்கும் உணவுகள் என்னென்ன?விசாரணைக் கைதிகள்அண்ணா சமஸ்அய்ஜால்பிற்போக்குத்தனம்சிறப்பு நிர்வாகப் பகுதிஓப்பிபுலம்பெயர்ந்தோர்கார்த்திக் வேலு கட்டுரைஅன்னி எர்னோயோகி ஆதித்யநாத்தந்தை பெரியார்பிரசாந்த் கிஷோர்சண்முகநாதன் கருணாநிதிsamas interviewசிறப்புக் கூடுதல் உற்பத்தி வரிசமூக வலைதளம்நல்ல வாசகர்சேதம்சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன்காஷ்மீர்: தேர்தல் அல்லவைக்கம்மோடி - அமித் ஷாவுக்குப் பிறகு பாஜகவில் யார்?கான்கிரீட்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!