கட்டுரை, அரசியல், சமஸ் கட்டுரை, ஆளுமைகள், கூட்டாட்சி 10 நிமிட வாசிப்பு

திமுகவுக்கு உதயநிதி செய்ய வேண்டியது என்ன?

சமஸ் | Samas
27 Dec 2022, 5:00 am
3

பிரெஞ்சுக்காரர்களும் டச்சுக்காரர்களும் முட்டி மோதிக்கொண்டிருந்த 1670இல் சென்னைக்கு வந்து பிற்காலத்தில் ஆளுநரான வில்லியம் லாங்ஹோர்ன், “இந்தச் சிறு வனம் ஏராளமான ரகசியங்களையும் மாற்றங்களையும் புதைத்து வைத்திருப்பதாகத் தோன்றுகிறது” என்று சொன்னதாக ஒரு கதை உண்டு. லாங்ஹோர்ன் கண்கள் ஊடுருவிய அந்த இடத்தில்தான் இன்றைய ‘ராஜ்பவன்’ அமைந்திருக்கிறது. லாங்ஹோர்னுக்குப் பிந்தைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மன்ரோ, எல்பின்ஸ்டன், ட்வீடலல், ஹாரீஸ், ஹென்றி என்று பலரும் அதன் வசீகரத்தில் சுருட்டப்பட்டார்கள்; கொஞ்சம் கொஞ்சமாக அங்கிருந்த கட்டிடம் வளர்ந்து விரிந்தது. 1920இல் அதை ஆளுநரின் அதிகாரபூர்வ இல்லமாக மாற்ற வெலிங்டன்  முற்பட்டார். 1947இல் பிரிட்டிஷாரின் வெளியேற்றத்துக்குப் பிறகு இந்திய அரசால் ஆளுநர் மாளிகையாக ஆக்கப்பட்டபோது முன்பு காலனிய ஆட்சிக் காலத்தில் இருந்த அதிகாரங்களை ஆளுநர் இழந்திருந்தார். தமிழக முதல்வரின் அதிகாரபூர்வ இல்லமாக அது எப்போது மாறும் என்ற எதிர்பார்ப்பு இங்குள்ள மக்களிடம் உண்டு. எப்படியும் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த பிராந்தியம் வேகமாகப் பார்த்துவரும் ஜனநாயக மாற்றங்களுக்கு அது ஒரு சாட்சியம்.

ஜனநாயகம் கொஞ்சம்போல இங்குள்ள மக்களுக்கு பிரிட்டிஷாரால் பகிரப்பட்டபோது 1920இல் இந்த மாகாணத்தின் முதல் அமைச்சரவையை இன்றைய திமுகவின் முன்னோடியான நீதிக் கட்சி அமைத்தது. அடுத்த ஒரு நூற்றாண்டுக்குள் நிறையக் காட்சி மாற்றங்கள் நடந்திருக்கின்றன. பிரிட்டிஷாரின் யூனியன் ஜாக் கொடி 1947இல் இறக்கப்பட்டு இந்தியாவின் மூவர்ணக் கொடி பறக்கலானபோது, அதை அரை சுதந்திரம் என்று சொன்னார் இன்னும் உருவாகியிருக்காத திமுகவின் நிறுவனரான அண்ணா. ‘பரிபூரண கூட்டாட்சியே முழு சுதந்திரம்’ என்று பிற்பாடு வரையறுத்தது சாமானியர்களின் கட்சியாக உருவெடுத்திருந்த திமுக.

அடுத்த இரு தசாப்தங்களில் திருக்குவளை போன்ற ஒரு குக்கிராமத்தில் இருந்து வந்த சாமானியர் மு.கருணாநிதி தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றதும், தமிழ்நாட்டின் மிக நீண்ட நாள் முதல்வர் - எதிர்க்கட்சித் தலைவராக உருவெடுத்ததும், இந்தியாவில் பிரதமரைத் தீர்மானிக்கும் இடம் வரை நோக்கி  நகர்ந்ததும், அடுத்த அரை நூற்றாண்டு கழித்து அவருடைய மகன் மு.க.ஸ்டாலின் முதல்வரானதும், அதில் இருந்து ஒரு வருடம் கழித்து அவருடைய மகன் உதயநிதி அந்த அமைச்சரவையில் அமைச்சராகப் பதவி ஏற்று அடுத்த தலைமை நோக்கி நகர்வதும் என்று வேகமாக நடந்துவரும் மாற்றங்கள் இந்த மண்ணில் ஜனநாயகம் உள்ளடக்கியிருக்கும் வெவ்வேறு பண்புகளை வெளிப்படுத்துகின்றன.

நாம் ஒரு அரைக் கூட்டாட்சியில் வாழ்கிறோம் என்றாலும், ஜனநாயகம் உயிர்ப்போடு இருப்பது உறுதியாகிறது. கேள்வி என்னவென்றால், பதிலுக்கு ஜனநாயகத்திற்கு நாம் எப்படி பங்களிக்கிறோம், எவ்வளவு பொறுப்பாக இருக்கிறோம்?

லகின் பெரும்பாலான பகுதியில் குடும்ப - வாரிசு அரசியலுக்கும் ஓர் இடம் இருக்கிறது. அதேசமயம், ஒரு வாரிசு என்ற அடிப்படையில் அரசியல் உட்பட எந்தத் துறையிலும் உள்நுழையும் ஒருவரும் அவர் எடுத்துக்கொண்டிருக்கும் பொறுப்புக்கு எவ்வளவு பொருத்தமாகச் செயல்படுகிறார் என்பது மிகத் தீவிரமாக கவனிக்கப்படுகிறது. சரியான விளைவுகளைத் தருபவர்கள் வேகமாக மேலே உயர்த்தப்படுகிறார்கள்; தராதவர்கள் ஈவிரக்கமற்ற முறையில் தூக்கிக் கீழே அடிக்கப்படுவதோடு, சம்பந்தப்பட்ட அமைப்பும் நிலைக்குலைவுக்கு ஆளாக்கப்படுவதைப் பார்க்கிறோம். பிரதான விஷயம், குடும்ப – வாரிசு நிர்வாக முறையானது ஒரு சில தலைமுறைகளுக்குப் பலன் தரும் அதேசமயம், ஒரு தொடர் வெற்றி அணுகுமுறையாக உலகில் எந்த நாட்டு அரசியலிலும் இல்லை. முற்றிலுமான கருப்பு – வெள்ளைச் சட்டகத்தில் இதை அடைக்க முடியாது; ஆதரிப்போர், எதிர்ப்போர் இரு தரப்பினரும்.

கருணாநிதி உடல் தளர்ந்து கட்சி தன்னுடைய கைக்கு வந்தபோது அன்றைய எதிர்க்கட்சித் தலைவரும் இன்றைய முதல்வருமான ஸ்டாலின் அவராகவே அறிவித்தார், “என்னுடைய மகனோ, மகளோ அரசியலுக்கு வர மாட்டார்கள்.” திமுகவில் குடும்ப அரசியல் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளை முழுமையாக உணர்ந்திருந்தவராக அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

திமுகவின் செயல் தலைவராக அவர் பொறுப்பேற்ற தருணத்தில் அவரைப் பேட்டி கண்டிருக்கிறேன். நீண்ட உரையாடல் அது. இத்தகு நீண்ட உரையாடல்களுக்கு ஸ்டாலின் அரிதாகவே சம்மதிப்பவர் என்றாலும், அப்படி அமையும் உரையாடல்களில் கேள்விகளுக்கு வெளிப்படையாகப்  பதில் அளிக்கக் கூடியவர். முதல் குடும்பம் முதல் கடைசி குடும்பம் வரை வாரிசு அரசியலானது கட்சிக்குள் ஊடுருவி இருப்பதையும் அடுத்தடுத்த தலைமுறைகளிலிருந்து உத்வேகம் மிக்க தலைவர்கள் மேலேறி வருவதை இது தடுப்பதையும் அவர் பெரும் சிக்கலாக அடையாளம் கண்டார்.

உள்ளார்ந்த கவலையுடன் ஸ்டாலின் பேசினார். “நான் நியாயப்படுத்தலை. ஆனா, இது நம்ம கலாச்சாரத்தோட ஒரு பகுதியாவும்  இருக்கு… திமுக மாதிரி கட்சிக்கு இது பெரிய சவால். இன்னிக்கு அப்பா, நாளைக்குப் பிள்ளைன்னு கட்சிக்கு உழைக்கிறவங்களை அவங்க குடும்பமா இருக்கிறதை மட்டும் காரணம் காட்டிப் புறக்கணிச்சுட முடியாது. அதேசமயம், அப்பா, பிள்ளை, பேரன்னு நியாயம் இல்லாம வாரிசு அரசியல் தொடர்கிற சூழலையும் அனுமதிக்க முடியாது!” பேட்டி முடித்துப் புறப்படும்போது சொன்னார், “என் குடும்பத்துலேர்ந்து இனி யாரும் வர மாட்டங்க!” இதற்கு முன்னரே இதை அவர் அறிவித்திருந்தார் என்றாலும், திரும்பவும் பல பேட்டிகளில் இதைச் சொன்னார்.

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

தலைவர் என்றொரு அப்பா - மு.க.ஸ்டாலின் பேட்டி!

சமஸ் | Samas 17 Oct 2017

தலைமைப் பொறுப்பை ஸ்டாலின் ஏற்ற பிறகு, கட்சிக்குள் அதுவரை இருந்த பல முனை அதிகார மையங்களின் எண்ணிக்கையும், குடும்ப உறுப்பினர்களுக்குக் கட்சிக்குள் இருந்த செல்வாக்கும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. அந்தக் காலகட்டத்தில் உதயநிதிக்கும்கூட அரசியலுக்கு வரும் ஒரு திட்டம் இருந்ததா என்று தெரியாது.

உதயநிதியை அரசியல் நோக்கி நகர்த்தியதில் ஜெயலலிதா மறைமுகப் பங்காற்றினார் என்று சொல்லலாம். ஜெயலலிதாவின் மரணமும் அதற்குப் பின் அதிமுகவுக்குள் நடந்த நிலைக்குலைவுகளும் திமுகவில் பெரும் அச்சத்தை உருவாக்கியதைப் பார்க்க முடிந்தது. பாஜக தன் இஷ்டத்துக்கு அதிமுகவை வளைக்க முடிந்ததையும் அன்றைய தமிழ்நாடு அரசின் முடிவுகளைத் தனக்கு ஏற்றபடியெல்லாம் திருப்ப முடிந்ததையும் திமுகவின் எதிர்காலத்தோடு பொருத்தி அதன் பிரதான தலைவர்கள் பதற்றத்தோடு பேசிக்கொண்டதைக் கேட்க முடிந்தது. திமுகவின் முதல் குடும்பத்திலும் இதே பேச்சு இருந்ததாகத் தெரிகிறது.

இந்தியாவில் அரசியல் கட்சிகளுடைய செயல்பாடு வெளியிலிருந்து பார்க்கப்படுவதற்கும் உள்ளே அதன் நிர்வாகிகளால் இயக்கப்படுவதற்கும் இடையே பாரிய வேறுபாடு உண்டு. வெளியிலிருப்போருக்கு கட்சிகள் வெறும் அரசியல் இயக்கங்கள்; உள்ளிருப்போருக்கு அவை நிறுவனங்களும்கூட. பல கோடி சொத்துகள் அரசியல் கட்சிகளுக்கு இருக்கின்றன. அன்றாடம் அரசியல் நடத்த பெரும் செலவுகளையும் அவை எதிர்கொள்கின்றன. கட்சியின் அடுத்தடுத்த நிர்வாகிகளின் வரிசையானது நிதியாள்கையையும் உள்ளடக்கி இருக்கிறது.  

காங்கிரஸார் ஏன் திரும்பத் திரும்ப நேரு குடும்பத்தினரைக் கட்சி நோக்கி இழுக்கிறார்கள் என்றால், ஏற்கெனவே இருக்கும் அமைப்பை அவர்களால்தான் அப்படியே தக்கவைக்க முடியும் என்று கட்சி நிர்வாகிகள் நம்புகிறார்கள்; ஏனைய தலைவர்களைக் காட்டிலும் சித்தாந்தத்தில் வாரிசுகள் உறுதியாக இருப்பார்கள் என்று தொண்டர்கள் நம்புகிறார்கள். நேரு குடும்பத்தின் வரலாறு, செல்வாக்கு இவற்றின் ஊடாக அது பெற்றிருக்கும் இன்னோர் அனுகூலத்தையும் அவர்கள் பெரிதாகக் கருதுகிறார்கள். இந்தியாவில் சாதி, மத, பிராந்திய சார்புக்கு அப்பாற்பட்ட குடும்பம் அது. காங்கிரஸின் மையக் கொள்கைக்கும் அதன் அரசியல் சந்தைக்கும் அக்கட்சியின் தலைவர் பெற்றிருக்கும் இந்தப் பண்பு முக்கியமானது.

பாஜக இப்படி இருக்க வேண்டியது இல்லை. பாஜகவின் மையக் கொள்கைக்கும் அதன் அரசியல் சந்தைக்கும் இந்து – இந்தி அடையாளம் கொண்ட ஒரு தலைவர் கூடுதல் அனுகூலம் கொண்டவராக இருப்பார். விளைவாகவே மோடி உத்தர பிரதேசத்துடனும் வாராணசியுடனும் தன்னைப் பிணைத்துக்கொண்டிருக்கிறார். 

காங்கிரஸில் நேரு குடும்பத்துக்குள்ள அதே அனுகூலங்கள் திமுகவில் கருணாநிதி குடும்பத்துக்கு இருக்கிறது. சாதி, மத, பிராந்திய சார்பு எல்லைக்கு அப்பால் தன் குடும்பத்தைக் கொண்டுசென்றுவிட்டார் கருணாநிதி. தேசிய அளவில் காங்கிரஸுக்கு எதிரான அணுகுமுறையை இந்த விஷயத்தில் பாஜக கொண்டிருந்ததுபோல அல்லாமல், தமிழகத்தில் அதிமுகவும் இதே அணுகுமுறையைப் பெருமளவில் பிரதிபலித்தது. எம்ஜிஆர், ஜெயலலிதா இருவருமே சாதி, மத, பிராந்தியசார் எல்லைக்குள் தங்கள் அரசியலை அடைத்துக்கொண்டவர்கள் இல்லை.

இயல்பாக தமிழ்நாட்டு அரசியலின் பெரும் போக்கு இந்தப் பண்பைப் பிரதிபலிக்கிறது. ஜெயலலிதாவுக்குப் பின் அதிமுக தலைமை எதிர்கொள்ளும் பெரும் பின்னடைவுகளில் ஒன்று, பழனிசாமி — பன்னீர்செல்வம் இருவருமே அப்படி ஒரு சார்பு வட்டத்துக்குள் சிக்கிக்கொண்டார்கள். 

சமூகத்தில் இதெல்லாம் எத்தகைய விளைவுகளை உண்டாக்குகிறது என்பதைத் திமுக கவனித்தது. நாடு முழுக்க எதிர்க்கட்சிகளை பாஜக கபளீகரிக்கும் சூழலில், இருக்கும் கட்சி அமைப்பைத் தக்கவைக்கவும் அதை அடுத்துவரும் காலத்துக்குக் கைமாற்றவும் பல கட்சிகளையும்போல வாரிசு அரசியலின் நீட்சியைத் திமுகவும் தீர்வாக்கிக்கொண்டது. 

இன்று இந்தியாவில் நாடு முழுக்க பிராந்திய கட்சிகள் இப்படிப்பட்ட பாதையைத் தேர்ந்தெடுப்பது ஒரு போக்காகி இருப்பதை நாம் கவனிக்க வேண்டும். ஆக, இன்றைய சூழலில் குடும்ப / வாரிசு அரசியலைப் பெரும்பான்மை இந்திய அரசியல் கட்சிகள் வரித்துக்கொள்ளும் போக்கையும் இதற்குப் பின்னணியில் உள்ள நெருக்கடிகளையும் புரிந்துகொள்ள முடிகிறது. கேள்வி என்னவென்றால், இது சரியான தீர்வுதானா?

திமுகவின் இளைஞர் அணித் தலைவராக உதயநிதிக்கு முடிசூட்டப்பட்டபோது, ‘வாரிசு அரசியல் ஒரு சமூகத்தில் ஏற்படுத்தும் பாதிப்பு என்ன?’ என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதில் குறிப்பிட்டிருந்த வரிகள் இவை: “நாம் ஒரு கேள்வியைக் கேட்டுக்கொள்வோம். இன்றைய காங்கிரஸில், அதன் சித்தாந்தம் மற்றும் பண்புகளுக்கு ஏற்ற ஒருவர் மோடிபோலக் கீழிருந்து மேலே வருவதற்கான சாத்தியம் இருக்கிறதா? மோடி போன்று கீழிருந்து வரும் ஒருவர் கட்சியில் உச்சத்தைக் கனவு காண்பதற்கான, கற்பனைக்கான இடமே காங்கிரஸில் இல்லை... உண்மையில், இந்திராவும் ராஜீவும் சோனியாவும் காங்கிரஸிடமிருந்து சூறையாடிய பெரும் சொத்து அதுதான்; இந்திரா குடும்பத்தின் நேரடி வாரிசு அரசியலானது காங்கிரஸாரின் கற்பனையைக் களவாடிக்கொண்டது. காங்கிரஸ் என்றால், காங்கிரஸ் மட்டும் அல்ல; கூடவே, காங்கிரஸ் பிரதிநிதித்துவப்படுத்தும், காங்கிரஸின் மனவோட்டத்தை ஒட்டிய இந்திய சமூகத்தின் ஒரு பெரும் மக்கள் திரளின் அரை நூற்றாண்டு தலைமைத்துவக் கற்பனையையும் தொலைநோக்கையும் இந்திரா குடும்பத்து நேரடி வாரிசு அரசியல் உட்செரித்துவிட்டது. இன்றைய திமுகவில் கீழிருந்து ஒரு கருணாநிதி மேல் நோக்கி வர அதில் இடம் இருக்கிறதா? கிடையாது. இன்றைய திமுக கைக்கொள்ளும் நேரடி வாரிசு அரசியலால் உதயநிதிகளைத்தான் உற்பத்திசெய்ய முடியும்; கருணாநிதிகளை அல்ல. ஏன்? ஏனென்றால், கருணாநிதிகளைக் கீழேயே பலியிடுவதன் வாயிலாகத்தான் உதயநிதிகள் மேலே நிற்க முடியும்!”

வாரிசுகளின் நுழைவு இயல்பான நுழைவாக இருப்பதில்லை என்பதை அவர்களுக்கான அசாதாரண உயர்த்தல்கள் வெளிப்படுத்துகின்றன. கட்சிக்குள் நுழைந்த மூன்றாண்டுகளில் சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி, அடுத்த ஒன்றரை ஆண்டுக்குள் இவ்வளவு அவசரமாக  அமைச்சராக்கப்பட என்ன தேவை இருக்கிறது? விளையாட்டுத் துறை ஒதுக்கப்பட்டிருக்கும் இளைய அமைச்சர் எந்த அடிப்படையில் நுழையும் அன்றே  அமைச்சர்கள் முன்வரிசையில் பத்தாவது இடத்துக்கு முன்னகர்த்தப்பட்டிருக்கிறார்? ஒரு கோடிப் பேரைக் கொண்ட இயக்கம் திமுக என்றால், அதில் அதிகாரபூர்வமாகவே பத்தாவது இடமும், அதிகாரபூர்வமற்ற வகையில் இரண்டாவது இடமும் இவ்வளவு வேகமாக அளிக்கப்படும் சூழலும், "அடுத்து இன்பநிதி தலைமை ஏற்க வந்தாலும் நாங்கள் அவர் பின்னால் அணிவகுப்போம்" என்று மூத்த அமைச்சர்கள் துளி லஜ்ஜையின்றி மேடையில் பெருமிதமாகப் பேசும் அவலநிலையும்தான் குடும்ப வாரிசு அரசியலை எதிர்க்க வேண்டியதற்கான அடிப்படை ஆகின்றன.

உதயநிதி நியமனத்தை நியாயப்படுத்த முற்படும் வேகத்தில் குடும்ப வாரிசு அரசியலுக்கு கருத்தியல்ரீதியாகவே முட்டு கொடுக்க முற்படும் எவரும் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும்: சென்னையின் முதல் குடும்பத்தில் ஆரம்பிக்கும் இந்த மூன்றாம் தலைமுறை பிரதிநிதித்துவம் குமரியின் வட்டச் செயலர் குடும்பம் வரை நீடிக்கும். கட்சியில் கனவுகளோடு வரும் புதிய தலைமுறையினரை வெகுசீக்கிரம் வெளியே தள்ளும். கட்சியின் இன்றைய தேவையின் நிமித்தம் உதயநிதி தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்றால், யதார்த்த களத்தில் அதற்கான நியாயத்தை அணுகுவதைக்கூட புரிந்துகொள்ள முடியும்;  கருத்தியல்ரீதியாக வாரிசு அரசியலை நியாயப்படுத்துவது பெரும் ஆபத்தாக முடியும். உதயநிதிக்கான ஆதரவும் குடும்ப அரசியலுக்கான ஆதரவும் ஒன்று இல்லை என்ற புரிதல் திமுகவினருக்கு வேண்டும்.

உதயநிதி அரசியலுக்கு வந்தார். மிகக் குறுகிய காலத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். கட்சியில் மூத்தவர்களிடம் பணிவும், இள வயதினரிடம் சினேகமும் நிரம்பியதான ஓர் அணுக்க அணுகுமுறையை அவர் உருவாக்கிக்கொண்டார். இந்தத் தலைமுறைக்கேற்ற மொழியை அவர் கையகப்படுத்திக்கொண்டார். கூட்டத்தை அவரால் வசீகரிக்க முடிகிறது. மூன்று தேர்தல்களில் அவருடைய பிரச்சாரம் திமுகவுக்கு உதவியது. விமர்சனங்களுக்கு ஆக்கபூர்வமாக முகம் கொடுக்கிறார். அரசியலுக்கு ஏற்ற சில நல்ல பண்புகள் நிச்சயம் உதயநிதியிடம் இருக்கின்றன. அதேசமயம், நாடு எதிர்கொள்ளும் அரசியல் வெப்பத்தையோ, திமுக போன்ற ஒரு பெரும் கட்சியில் அடுத்து அதன் தலைமை நோக்கி நகர்பவர் முன்னிற்கும் வரலாற்றுப் பொறுப்பின் பெரும் கனத்தையோ உணர்ந்தவராக அவர் வெளிப்படவில்லை. முக்கியமாக அவருடைய கவனம் துலக்கமாகவில்லை.

அமைச்சராகப் பொறுப்பேற்ற கையோடு இனி சினிமாவில் நடிக்கப்போவதில்லை என்று உதயநிதி அறிவித்தார். தேவையற்ற அறிவிப்பு அது. படங்களில் நடிப்பது தனிப்பட்ட செல்வாக்குக்கும், கட்சி பிரச்சாரத்துக்கும்கூட உதவலாம். உதயநிதி குறைக்க வேண்டியது எதுவென்றால், சினிமா விநியோகம். உதயநிதியின் ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ மீது பெரிய புகார்கள் ஏதும் இல்லை. சொல்லப்போனால், மிகுந்த தொழில்முறை சார்ந்த நிறுவனமாக அதை நடத்துகிறார் என்றே சினிமா துறையினர் பலரும் சொல்கிறார்கள். ஆனால், உதயநிதி யார் என்பதையும் அவருடைய பிரதான கவனம் எங்கே இருக்க வேண்டும் என்பதையும் சினிமா மறைக்கிறது. 

கருணாநிதியால் “என்னுடைய முதல் பிள்ளை” என்று விளிக்கப்பட்டது ‘முரசொலி’. திமுக சார்ந்து கருணாநிதி காலத்திலேயே உதயநிதி பெற்ற முதல் பொறுப்பு அதன் நிர்வாக இயக்குநர் பணி. ‘முரசொலி’யின் வளர்ச்சி என்பது ஒவ்வொரு திமுக தொண்டரின் சித்தாந்தப் பிணைப்புடன் தொடர்புடையது. சமகால இதழியலோடு எந்தப் பொருத்தப்பாடும் இல்லாத நிலையிலேயே இன்றைக்கு அந்தப் பத்திரிகை இருக்கிறது. பெரும்பான்மைக் கட்சிக்காரர்களுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 

சினிமா விநியோக நிறுவனமான ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ எவ்வளவு தொழில்முறையாக நடத்தப்படுகிறது என்பதைக் காட்டிலும், கட்சிப் பத்திரிகையான ‘முரசொலி’ எவ்வளவு தொழில்முறையாக நடத்தப்படுகிறது என்பதே திமுகவில் உதயநிதி எடுத்துக்கொண்டிருக்கும் பொறுப்புக்கு நியாயம் சேர்க்கும். ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ மேற்கொள்ளும் விநியோக வேலையை இன்னொருவர் செய்யலாம்; ‘முரசொலி’யைத் தூக்கி நிறுத்த வேறு ஒருவர் வர மாட்டார். கருணாநிதியும் சினிமாவில் பங்கெடுத்தார், சினிமா தயாரிப்பு – விநியோகங்களில் பங்கெடுத்தார். ஆனால், அரசியலை எங்கே வைக்க வேண்டும், சினிமாவை எங்கே வைக்க வேண்டும் என்ற தெளிவு அவருக்கு இருந்தது. இந்தச் சுட்டல் ஒரு குறியீடு!

உதயநிதியிடம் வெளிப்படும் இன்னொரு குறைபாடு இந்த ஐந்தாண்டுகளில் அவர் கட்சியின் அடித்தளம் வரை சென்று நிர்வாகிகளுடன் இயல்பான உறவில்  தன்னை ஐக்கியப்படுத்திக்கொள்ள முயற்சிக்கவும் இல்லை; தன்னைக் கேள்விக்குள்ளாக்கும் சக்தி கொண்ட, கருத்து பகிரும் ஓர் அணியைத் தன்னைச் சுற்றி உருவாக்கிக்கொள்ளவும் இல்லை. கட்சியின் மேல் மட்டத்தில் ஓர் அன்பழகன், கீழ்மட்டத்தில் ஒரு அன்பில் தர்மலிங்கம், குடும்பத்தில் ஒரு மாறன், கருத்தியல் புலத்தில் ஒரு சின்ன குத்தூசி, பிற்காலத்தில் கல்விப்புலத்தில் ஒரு நாகநாதன், நேரெதிர்த் தளத்தில் ஒரு சோ… இப்படி எல்லாக் காலங்களிலும் மாறிவரும் ஓர் அணி; முழு நேரமும் அரசியல் பணி என்று உதயநிதி மாற வேண்டும்.

தன்னுடைய 45வது வயதில் அமைச்சர் பொறுப்பை ஏற்றிருக்கும் உதயநிதி இதே வயதில் தமிழ்நாட்டின் முதல்வர் பொறுப்பை ஏற்ற தன்னுடைய தாத்தா கருணாநிதி அவருடைய ஒரு நாளுக்கு எவ்வளவு உழைப்பை வாசிப்பிலும் எழுத்திலும் மேடையிலும் களத்திலும் கட்சித் தலைமையகத்திலும் கொடுத்தார்; எவ்வளவு தரப்புகளோடு அன்றாடம் உரையாடினார் என்ற கேள்வியைக் கேட்டுக்கொண்டால் நான் சொல்ல வருவதன் விரிந்த பொருள் விளங்கும். அவருடைய தந்தை ஸ்டாலினுமேகூட இந்த வயதுக்குள் தமிழ்நாட்டின் சிற்றூர்களில் எல்லாம் இளைஞரணி கிளைகளை உருவாக்கிக் கொடியேற்றி வந்திருந்தார்.

அண்ணா சொல்வாராம், “ஏனைய பிராந்திய கட்சித் தலைவர்கள் உள்ளூர்க்காரர்களோடு போட்டி போட்டால் போதும், திமுக தலைவர்தான் இந்தியாவின் பெரும் தலைவருடன் மோத வேண்டியிருக்கிறது.” ஏனென்றால், ஒட்டுமொத்த இந்திய தேசியத்துக்கும் ஒரு மாற்றுக் கதையாடலை முன்வைத்து திமுக இயங்குகிறது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகான இந்த ஒன்றரை ஆண்டுகளில் உள்ளூர் அரசியலுக்கு உரிய கவனத்தை உதயநிதி கொடுத்திருந்தால்கூட, அண்ணாமலை இவ்வளவு பெரிய பேச்சை உருவாக்கி இருக்க மாட்டார். அண்ணாமலைக்குப் பதில் சொல்லும் நிலை ஸ்டாலினுக்கு ஏற்படாது. உண்மை என்னவென்றால், உதயநிதிக்கு முன் நிற்கும் உண்மையான போட்டியாளர் நரேந்திர மோடி. திமுக முன் நிற்கும் பெருவலை இயக்கம் ஆர்எஸ்எஸ். உதயநிதியின் கவனம் இனியேனும் கூர்மையடைய வேண்டும். சித்தாந்தத் தளத்தில் தன்னை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்தக் காலத்தின் வரலாற்று முக்கியத்துவத்தையும் தான் எடுத்துக்கொள்ள விரும்பும் பொறுப்பின் கனத்தையும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

ந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு குடும்ப / வாரிசு அரசியலின் பிரதிநிதி. நேருவின் தந்தை மோதிலால் நேரு 1919, 1928 என்று இரு சமயங்களில் காங்கிரஸின் தலைவராக இருந்தவர். ஜவாஹர்லால் நேருவின் அரசியல் அறிமுகத்துக்கு மோதிலால் நேருவின் பெயர் பயன்பட்டது என்றால், அவருடைய அரசியல் எதிர்காலத்துக்கு காந்தியின் சொல் பயன்பட்டது. “என்னுடைய வாரிசு நேரு” என்று சொல்லாமல் காந்தி மறைந்திருந்தால் காங்கிரஸ் 1950களிலேயே பிளவுபட்டிருக்கும். இந்தப் பிளவைத் தாண்டியும் நாட்டின் மாபெரும் தலைவராக நேரு திகழ்ந்திருப்பார் என்பதை எவரும் அங்கீகரிப்பார்கள். நேரு தன்னை மாபெரும் ஆளுமையாகச் செதுக்கிக்கொண்டார்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

மு.க.ஸ்டாலின்: நல்ல கவனர்

சமஸ் | Samas 01 Mar 2022

அடுத்து இந்திரா. தன்னுடைய முப்பதுகளில் தந்தைக்கு உதவுபவராக அரசியலில் நுழைந்தவர், நேருவுக்கு அடுத்து உடன் பிரதமராகப் பதவி ஏற்கவில்லை. நேருவுக்கு அடுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் எதிர்பாராத மரணம் இந்திராவை மையம் நோக்கி இழுத்தது. 1966இல் பிரதமர் பதவியில் அமரும்போது குறைந்தது 15 ஆண்டு கால அனுபவம் இந்திராவுக்கு இருந்தது. கட்சியில் இந்திரா இழைத்த பெரும் தவறு, தனக்குப் பின் தன் பிள்ளைகளே தலைமைக்கு வர வேண்டும் என்று திட்டமிட்டு அரசியலை நடத்தியது. இந்திரா கொண்டுவர நினைத்தவர் சஞ்சய் காந்தி; அவருக்குப் பின் வந்தவர் ராஜீவ் காந்தி என்றாலும், எப்படியும் இந்திராவின் திட்டம் பலித்தது.

இன்றைய காங்கிரஸின் பெருவீழ்ச்சி ராஜீவ் காலத்தில்தான் ஆரம்பித்தது. அந்த வீழ்ச்சியிலிருந்து மீண்டெழவே காங்கிரஸால் முடியவில்லை. ஏனென்றால், நல்ல தலைவர்களைப் பலி கொடுக்கும் கலாச்சாரமானது ஏற்கெனவே வேர் பரப்பியிருந்தது. வாரிசு அரசியல் தனித்து வருவது இல்லை; கூடவே அதிகாரமையமாக்கலையும், பல குடும்ப அதிகார மையங்களையும் கூட்டிக்கொண்டு வருகிறது.

ராஜீவ் காலத்திலிருந்து ஓர் இடைவெளிக்குப் பின் தலைமைப் பொறுப்புக்கு வந்த சோனியா, கட்சியில் உருவாகியிருந்த சிக்கலை உணர்ந்திருந்தார். ஸ்ரீநகரில் இருந்து குமரி வரை காங்கிரஸில் கிளை அளவிலும்கூட குடும்பங்களும் வாரிசுகளும் கட்சியை ஆக்கிரமித்திருந்தனர். அதனால்தான் மேலே  ஓர் அணியை சோனியா உருவாக்கினார். மன்மோகன் சிங்கை பிரதமர் ஆக்கினார். காங்கிரஸ் தலைவர் பதவியில் சோனியா துடிப்பாகச் செயல்பட்ட காலத்தின் ஏற்றத்துக்கு இந்த அணிச் செயல்பாடே காரணமாக அமைந்தது.

கட்சி ராகுல் கைக்கு வரலானபோது அவர் எதிர்கொண்ட இரு பெரிய பிரச்சினைகள் என்னவென்றால், தனிப்பட்ட அளவில் முழுநேர அரசியலராக, முழுக் கவனத்தையும் அவரால் கட்சிக்கு ஒப்பளிக்க முடியவில்லை. தன்னைச் சுற்றியும் கட்சிக்குள்ளும் உருப்படியான ஓர் அணியையும் அவரால் உருவாக்க முடியவில்லை.

ராகுல் நல்லவரா? ஆம். ராகுல் திறமைசாலியா? ஆம். ராகுல் தொகைநோக்கரா? ஆம்!

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

காங்கிரஸுக்குத் தேவை புதிய கனவு!

சமஸ் | Samas 22 Sep 2021

சிக்கல் என்னவென்றால், ராகுலைக் காட்டிலும் பல திறமைச்சாலிகளை இந்திய அரசியல் களம் கண்டிருந்தது. மேலும், அவருக்குக் கை கொடுக்கும் அளவில் கீழே காங்கிரஸின் அடித்தள அமைப்பும் நிர்வாகிகளும் இல்லை. ராகுலால் நேருபோலத் தன்னை வளர்த்துக்கொள்ளவும் முடியவில்லை; சோனியாபோல நல்ல அணியை உருவாக்கி கட்சியின் போதாமைகளை இட்டு நிரப்பவும் முடியவில்லை. மோடியின் பாஜகவுடன் தன்னுடைய காங்கிரஸால் ஏன் போட்டியிட முடியவில்லை என்ற கேள்விக்கு, காங்கிரஸைத் தொற்றியிருக்கும் பெருவியாதியான குடும்ப, வாரிசு அரசியல் முக்கியமான காரணம் என்பதையும், தன்னுடைய குடும்பமே இந்தப் பிரச்சினையின் மூல காரணம் என்பதையும் சித்தாந்த அளவில் கட்சியைத் தூக்கி நிறுத்தினால்தான் அது உயிர் பிழைக்கும் என்பதையும் உணர்ந்ததால்தான் காங்கிரஸுக்குள் குடும்ப வாரிசு அரசியலை முடிவுக்குக் கொண்டுவரும் சிகிச்சையை ராகுல் ஆரம்பித்தார். அதற்கான விலையாகக் கட்சித் தலைவர் பதவியைத் துறந்தார். ஒட்டுமொத்த கட்சியும் கேட்டுக்கொண்டும்கூட தலைவர் பதவியை ஏற்க நிராகரித்து மக்கள் இடையே பயணப்படுகிறார். தன்னுடைய உள்வட்டத்தில் ராகுல் சொன்னது இது. “என்னுடைய முடிவு இன்றைக்கு நமக்குத் தோல்விகளைத் தரலாம், காங்கிரஸ் எதிர்காலத்தில் உயிர்த்திருக்கும்.”

அரசியல் களத்தில் மோடி வழுக்கினால் பாஜகவை எதிர்க்கட்சிகள் வீழ்த்திவிட முடியும். பண்பாட்டுத் தளத்தில் இன்று பாஜக உண்டாக்கியிருக்கும் சூழலை மாற்ற இன்னும் அரை நூற்றாண்டேனும் எதிர்க்கட்சிகள் உழைக்க வேண்டும். ராகுல் இதைத் தெளிவாக உணர்ந்திருக்கிறார்.

கருணாநிதியின் காலத்தில் ஐம்பதாண்டுகள் கட்சிக்காகக் கடுமையாக உழைத்து ஸ்டாலினுக்குக் கட்சி நிர்வாகிகளிடம் கிடைக்காத ஆமோதிப்பானது, கட்சிக்குள் நுழைந்து ஐந்தாண்டுகள்கூட ஆகிடாத நிலையில் தனக்குக் கிடைத்திருப்பதைத்தான் உள்ளதிலேயே மோசமான ஆபத்தாக உதயநிதி கருத வேண்டும். அடுத்த வரிசைத் தலைவர்களின் மௌனமும் சம்மதமும் மிக அபாயகரமான செய்தியை உள்ளடக்கியது, “நல்லது தலைவரே, எங்களுக்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள்!”

ராகுல் உணர்ந்ததை ஸ்டாலினும் உணர்ந்திருந்தார் என்றே நம்புகிறேன். இதே பாதையில் பயணப்பட்டால் இன்று காங்கிரஸுக்கு நேர்ந்திருப்பதே நாளை திமுகவுக்கும் நடக்கும் என்பதால்தான் குடும்ப அரசியலை முடிவுக்குக் கொண்டுவர அவர் முற்பட்டார். இன்றைய சூழல் ஸ்டாலினுக்குக் கை கொடுக்கவில்லை. தற்காலிகத் தீர்வைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். உதயநிதிக்கு முன் ஒரு நெடிய காலம் இருக்கிறது. நிரந்தரத் தீர்வுக்கு அவர் முற்பட வேண்டும்.

திமுகவுக்கு உதயநிதி ஆற்ற வேண்டிய வரலாற்றுக் கடமை இதுதான், தன்னுடைய காலத்துக்குள் குடும்ப வாரிசு அரசியலின் ஆதிக்கத்தைத் திமுகவுக்குள் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். தனக்கு அடுத்த தலைவரேனும் குடும்பத்துக்கு வெளியிலிருந்து வர புதிய கலாச்சாரம் ஒன்றுக்கு உதயநிதி உழைக்க வேண்டும். வாழ்த்துகள்!

- ‘குமுதம்’, டிசம்பர், 2022 

 

தொடர்புடைய கட்டுரைகள்

வாரிசு அரசியல் ஒரு சமூகத்தில் ஏற்படுத்தும் பாதிப்பு என்ன?
படிக்க வேண்டிய நேரத்தில் பேப்பர் மடித்த கலைஞரின் பிள்ளைகள்
தலைவர் என்றொரு அப்பா - மு.க.ஸ்டாலின் பேட்டி!
காங்கிரஸுக்குத் தேவை புதிய கனவு!
மு.க.ஸ்டாலின்: நல்ல கவனர்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘அருஞ்சொல்’ இதழின் ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


3

2

1
பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

Veera   1 year ago

Aaga! Onnum payanilla !

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Raja   1 year ago

மிக நல்ல அலசல். வாரிசு அரசியலின் ஆபத்துக்களை நாகரீகமாக சொல்லி உள்ள பதிவு. பொதுவாக நாங்கள் பேசி கொள்வது மற்றும் சராசரி அரசியல் பேசும் நண்பர்கள் உதயநிதியை ஏற்றுக்கொள்ள வில்லை என்பதுதான். நடப்பது எதோ மன்னர் ஆட்சி போலவும் தமிழ்நாடு எதோ பட்டா போட்டு எழுதி வைத்தது போலவும் தான் தோன்றுகிறது. காங்கிரசை எதிர்த்து வாக்களிக்கும் பலர் சொல்லும் காரணம் அது. ராகுல் உண்மையில் தலைமைக்கு மிகவும் தகுதி வாய்ந்தவர், அவருக்கே இந்த நிலைமை! உதயநிதி எந்த விதத்திலும் குறைந்தது ஒரு சதவீதம் கூட ராகுலுக்கு நிகர் அல்ல. எதிர்த்தரப்பு பலம் இல்லாமல் இருப்பது ஒன்றே ஒன்றுதான் இன்று திமுகவின் பலம். நாளை இது போன்ற சூழ்நிலை மாறி ஒரு எதிர்த்தரப்பு உருவாகும் பட்சத்தில் உடனடி விளைவு என்பது திமுகவின் வீழ்ச்சியே! மேகங்கள் கலையாமல் இருக்காது. அரசியலும் அப்படியே!

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Periasamy   1 year ago

கட்சி, ஆட்சி, அதிகாரம் ஒரு குடும்பத்தின் சொத்தாக மாறிவிட்டது...கட்சி தலைவர் பதவி ஒருவருக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் தான் என்று விதிகளில் திருத்தம் செய்ய திமுகாவால் முடியுமா...மூச்சுக்கு முன்னூறு முறை அதிமுகவை அடிமைகள் கட்சி என்று சொன்ன திமுகவின் இன்றைய கொத்தடிமை நிலையை தோழமை சுட்டுதலோடு சொல்லி இருக்கிறீர்கள். மற்றபடி இன்பநிதிக்கும் உங்கள் வாழ்த்துக்களை சொல்ல வாழ்த்துக்கள்😀😀

Reply 8 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

பொறியாளர்கள்மீண்டும் மீட்சிசிதம்பரம்சமஸ் - ஜெயமோகன்பொதுவுடைமைcharu niveditaஆசிரியர்கள்இராணுவ-தொழில்நுட்பம்பிரதாப் சிம்ஹாஜி ஜின்பிங்பாஸ்மண்டாஅரவிந்த் கேஜ்ரிவால்ஜான் பெர்க்கின்ஸ் கட்டுரைவெள்ளியங்கிரி மலைதேசிய வருமானம்வர்க்கரீதியில் வாக்களிப்புபிஎஸ்எல்விஊழியர் சங்கங்களின் இழிநிலைபூச்சிக்கொல்லிநோர்வேஜியன்பார்ப்பனர்களை பெரியார் வெறுத்தாரா?சர்வதேச மொழிஆருஷா பிரகடனம்விரும்பப்படுகின்றன விலை உயர்வும் வேலையின்மையும்!சாதியும் நானும்மாயக் குடமுருட்டி: விந்து நீச்சல் காமெல்கலைஞர் செல்வம்மக்கள் அமைப்பைக் கண்டு அஞ்சுவது ஏன்?இருளும் நாட்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!