கட்டுரை, அரசியல் 5 நிமிட வாசிப்பு

மக்களாட்சிக்கு நன்மை உதயநிதிகளின் தலைமை

ராஜன் குறை கிருஷ்ணன்
28 Dec 2022, 5:00 am
4

வாரிசு அரசியல் தலைமையானது, மன்னராட்சியின் தொடர்ச்சி என்று கருதி அதனை மக்களாட்சிக்கு எதிரானதாகப் பார்க்கக் கூடாது என்று தொடர்ந்து எழுதிவருபவன் நான். சரியாகச் சொன்னால், மக்களாட்சித் தத்துவத்தில், வாரிசு அரசியல் தலைமைக்கு நிச்சயம் இடம் இருக்கிறது. அந்த அடிப்படையிலேயே, சமஸ் ‘அருஞ்சொல்’ இதழில்  எழுதிய ‘திமுகவுக்கு உதயநிதி செய்ய வேண்டியது என்ன?’ கட்டுரைக்கு எதிர்வினை ஆற்றுவது முக்கியம் என்று தோன்றியது.

சமஸ் தன்னுடைய கட்டுரையில் இப்படிக் குறிப்பிடுகிறார், “உதயநிதி நியமனத்தை நியாயப்படுத்த முற்படும் வேகத்தில் குடும்ப வாரிசு அரசியலுக்கு கருத்தியல்ரீதியாகவே முட்டு கொடுக்க முற்படும் எவரும் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும்: சென்னையின் முதல் குடும்பத்தில் ஆரம்பிக்கும் இந்த மூன்றாம் தலைமுறை பிரதிநிதித்துவம் குமரியின் வட்டச் செயலர் குடும்பம் வரை நீடிக்கும். கட்சியில் கனவுகளோடு வரும் புதிய தலைமுறையினரை வெகுசீக்கிரம் வெளியே தள்ளும். கட்சியின் இன்றைய தேவையின் நிமித்தம் உதயநிதி தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்றால், யதார்த்த களத்தில் அதற்கான நியாயத்தை அணுகுவதைக்கூட புரிந்துகொள்ள முடியும்;  கருத்தியல்ரீதியாக வாரிசு அரசியலை நியாயப்படுத்துவது பெரும் ஆபத்தாக முடியும்!”

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

திமுகவுக்கு உதயநிதி செய்ய வேண்டியது என்ன?

சமஸ் | Samas 27 Dec 2022

இந்தியா எதிர்கொள்ளும் பேராபத்து எது?

இங்கே ஆபத்து என்பது யாருக்கானது? வாரிசு அரசியலால் கட்சிக்கு ஆபத்தா, மக்களாட்சிக்கு ஆபத்தா என்பதைத் தன் கட்டுரையில் சமஸ் தெளிவாகக் குறிப்பிடவில்லை. மேலும், ‘கருத்தியல்ரீதியாக ஆதரிப்பதை “முட்டு” என்ற கொச்சை வழக்கில் குறிப்பிடுகிறார். இது வருந்தத் தக்கது. வாரிசு அரசியல் தலைமையை அரசியல் தத்துவ அடிப்படையில் விளங்கிக்கொள்வதும், ஆதரிப்பதும் ஒரு சாத்தியமான தரப்பு என்பதை அவர் அங்கீகரிக்க வேண்டும். பின்னர் அதனுடன் வாதிடுவதே பயன் அளிக்கும். முட்டுக்கொடுக்க வேண்டிய அளவு அது பிழையானது என்ற முன்முடிவு சரியல்ல.   

மக்களாட்சி இந்தியாவில் இன்று சந்திக்கும் மிகப்பெரிய ஆபத்து பெரும்பான்மை இந்து அடையாளவாதமும், அதன் பாசிஸ முனைப்புகளும்தான். அந்த பாசிஸ சக்திகள்தான் வாரிசு அரசியலைக் கடுமையாகச் சாடுகின்றன. இதிலிருந்து என்ன புரிகிறது? பாசிஸம் வாரிசு தலைமை அரசியலைத் தன் மிகப் பெரிய எதிரியாக பார்க்கிறது என்பதுதான். அதற்கேற்றாற்போல பாசிஸம், கம்யூனிஸம் ஆகிய இரண்டு துருவங்களைத் தவிர்த்த எல்லா வெகுஜன கட்சிகளும் இன்று வாரிசு அரசியல் தலைமையை ஏற்கின்றன என்பதுதான் யதார்த்தம். அது ஏன் என்பதை நாம் ஆழ்ந்து சிந்தித்தால்தான் அதற்கான தத்துவ அடிப்படையைப் புரிந்துகொள்ள முடியும்.  

மக்களாட்சியின் உள்முரண் 

மக்களாட்சியின் மிகப் பெரிய உள்முரண் பிற அடிப்படை உரிமைகளுக்கும் சொத்துரிமைக்கும் உள்ள வேறுபாடுதான். பிற அடிப்படை உரிமைகள், பேச்சுரிமை, எழுத்துரிமை எல்லோருக்கும் பொதுவானவையாக, சமமானவையாக இருக்க, சொத்துரிமை மட்டும் ஏற்றத்தாழ்வை உறுதிசெய்வதாக உள்ளது. 

சொத்துரிமையின் முக்கியமான அம்சம் என்னவென்றால், வாரிசுகளுக்கு முன்னோரின் சொத்துகள் உரியவை என்பதுதான். அதனால்தான் ஒரு பெரிய பணக்காரரின் மகன், பிறவியிலேயே பணக்காரனாக இருக்கிறார். பெருமுதலீட்டியம் என்பதும் இப்படி வாரிசு அடிப்படையிலேயே இயங்குவது கண்கூடு. 

இதனால் இருபதாம்  நூற்றாண்டின் மத்தியில் ஓரளவு குறைந்த ஏற்றத்தாழ்வு என்பது, 1990களுக்கு பிறகு உலகெங்கும் அதிகரித்துவருவதாக மிக விரிவான தரவுகளுடன் தாமஸ் பிக்கெட்டி எழுதுகிறார். பெரும்பாலான நாடுகளில் கணிசமான சொத்துகளும் சரி, வருவாயும் சரி; 10% பேரிடமே குவிந்திருக்க, 90% பேர் மீதமுள்ளதைப் பங்கிட்டுக்கொள்ளும் நிலைதான் உள்ளது. அடிப்படையிலேயே இது மறைமுகமான அதிகாரக் குவிப்பிற்கு வகை செய்கிறது. சொத்து என்பதே அதிகாரத்தின் ஒரு வடிவம்தானே? 

இந்த நிலையில்தான் பாசிஸம், குறிப்பாக இந்தியாவில் பாசிஸ முனைப்புள்ள பெரும்பான்மை இந்து அடையாளவாத பாஜக, வெளிப்படையாகவே பெருமுதலீட்டிய ஆதரவுக் கொள்கையைக் கடைப்பிடிக்கிறது. ஏராளமான வங்கிக் கடன்கள், கடன் தள்ளுபடிகள், வரிச்சலுகைகள் என்று பெருமுதலீட்டிய நலன்களுக்கு சேவை செய்கிறது. இவர்கள் ‘வளங்களை உருவாக்குபவர்கள்’ (வெல்த் கிரியேட்டர்ஸ்) என்று நேசத்துடன் அழைக்கப்படுகிறார்கள். 

மோடியின் எட்டாண்டு கால ஆட்சியில் அவர் நண்பர் கெளதம் அதானி உலகின் முதல் பெரும் செல்வந்தராக உயர்வது சாத்தியமானது முக்கிய உதாரணம். அதானியின் வளர்ச்சி நேரடியாக அரசு ஆதரவுடன் தொடர்புடையது. அவர் நிறுவனங்களில் முதலீடு செய்பவர்கள், பங்குகளை வாங்குபவர்கள் எல்லாம் அவருக்கு பிரதமருடன் உள்ள நெருக்கம், ஒன்றிய அரசின் முழு ஆதரவு ஆகியவற்றைக் கருதியே செயல்படுகிறார்கள். 

ஆகவே, சொத்துக்குவிப்பும், அதிகாரக் குவிப்பும் கரம் கோர்த்து மக்களாட்சியின் அதிகாரப் பரவலை முற்றிலும் முடக்க முற்பட்டுள்ளதை காண்கிறோம். 

இதற்கு நேர் எதிர்முனையில் பொதுவுடமைக் கொள்கையின் அடிப்படையில் இயங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பலவீனம் அடைந்துள்ளன. காரணம், பெரும்பான்மையான மக்களை ஒற்றை உழைக்கும் வர்க்கமாக அணி திரட்டுவது சாத்தியமாக இல்லை. அவர்களுக்குள் பல முரண்பட்ட பொருளாதார அடுக்குகள் நிலவுவது மட்டுமின்றி, பல்வேறு அடையாளங்களும் அவர்களை சமூக அலகுகளாகப் பிரிக்கின்றன.

இடதுசாரி வெகுஜனவியத்தின் முக்கியத்துவம் 

இந்த நிலையில்தான்  ‘இடதுசாரி வெகுஜனவியம்’ (left populism) என்று தமிழில் நான் கலைச்சொல்லாக்கம் செய்து அழைக்கும் அரசியல் வகைமையே பாசிஸத்திற்கு மாற்றாக இருக்கிறது. இது மக்கள் நலனைப் பாதுகாக்கும் அதே நேரத்தில், முதலீட்டிய வளர்ச்சியையும் அனுசரிக்க வேண்டி உள்ளது. மக்கள் நல அரசு, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமூக நீதி ஆகிய சாத்தியமான கோட்பாடுகளின் துணையுடன் கூடியவரை உபரியைப் பகிர்ந்தளிக்கவும், அதிகாரப் பரவலைச் சாத்தியமாக்கவும் இந்தக் கட்சிகள் முயற்சிக்கின்றன. 

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

தலைவர் என்றொரு அப்பா - மு.க.ஸ்டாலின் பேட்டி!

சமஸ் | Samas 17 Oct 2017

இந்தக் கட்சிகளின் முன்னால் உள்ள சவால், வலியோர் எளியோர் முரணைத் தொடர்ந்து வலியுறுத்தும்  நேரத்தில், அனைவரையும் ஒருங்கிணைக்கும் பொது நலச் சொல்லாடலையும் முன்னெடுக்க வேண்டும். போட்டியிடும், முரண்பட்ட சமூக அடையாளங்களை ஒன்றிணைக்க வேண்டும். அதற்காக பாசிஸம்போல பொது எதிரியைக் கட்டமைத்து வெறுப்பரசியல் செய்யக் கூடாது. 

இந்த நிலையில்தான் மக்களை அணிதிரட்டுவதில், அவர்கள் மதிப்பைப் பெறுவதில் வெற்றியடைந்த ஒரு தலைவரின் உயிரியல் வாரிசை தொடர்ந்து தலைவராக்குவது இந்தக்  கட்சிகளுக்கு ஒரு தொடர்ச்சியையும் கட்டுக்கோப்பையும் வழங்குகிறது. எளிய மக்கள் தங்கள் அரசியல் உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ள, வாழ்வாதரங்களை மேம்படுத்திக்கொள்ள இந்த அரசியல் கட்சிகள் இன்றியமையாதவை. 

இந்தக் கட்சிகள் பாதுகாப்பு அரணாக விளங்காவிட்டால், அவதார் படத்தில் வருவது போல முதலீட்டியம் எளிய மக்களை இறக்கமின்றி அப்புறப்படுத்தத் தயங்காது என்பதே இன்றைய நிலை. பாசிஸ கட்சிகள் அதைப் பொது நன்மைக்கான தியாகம் என்று கூறிவிடும்.

பலவீனப்படுத்துகிறதா வாரிசு அரசியல் தலைமை?   

உண்மையில் மக்களாட்சி நடைமுறைகள் வலுவடையும்போது தலைமை என்பது வலுவிழக்க வேண்டும். தலைமை என்பது என்ன? ஒற்றை முடிவெடுப்பது. அதாவது ஒரு செயல், அதனைச் செய்ய முடிவெடுப்பது ஆகிய இரண்டுமே தனித்துவமிக்கவை, ஒற்றையானவை. அதன் காரணமாகத்தான் எந்த ஓர் அமைப்பிலும் ஒரு நபர் அந்த முடிவில் கையெழுத்திட, செயலை செய்ய உத்தரவிட தேவைப்படுகிறார். உச்ச நீதிமன்றம் என்றால் ஒரு தலைமை நீதிபதி. காவல் துறை என்றால் ஒரு டி.ஜி.பி. பல்கலைகழகம் என்றால் ஒரு துணை வேந்தர். அரசியலில் கட்சித் தலைவர். அரசு என்றால் முதல்வர், பிரதமர். 

மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படையான கேள்வி யார் அந்தத் தலைவராகிறார் என்பது அல்ல. அதிகாரம் எப்படிப் பகிரப்படுகிறது என்பதுதான். அதிகாரம் ஒரு புள்ளியில் குவிக்கப்படாமல் பிரிக்கப்பட வேண்டும், பல்வேறு அடுக்குகளில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

மக்கள் பிரதிநிதிகளான ஆட்சியாளர்கள், அரசு நிர்வாக இயந்திரம்,  நீதிமன்றங்கள், பொதுமன்றம் என நான்கு பிரிவுகளாக அதிகாரம் பிரிக்கப்படுவதுதான் மக்களாட்சியின் முக்கிய அம்சம். அதேபோல உள்ளாட்சி அமைப்புகள், மாநில அரசு, ஒன்றிய அரசு ஆகிய மூன்று அடுக்குகளுக்கும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். 

இவ்வாறு அதிகாரத்தைப் பிரிப்பதும், பகிர்வதும் மட்டுமேகூட மக்களாட்சியை உறுதி செய்துவிடாது. அது முடிவு, செயல் என்ற ஒற்றை நிகழ்வுகளைத் தொடர்ந்த உரையாடல், விவாதம் ஆகியவற்றின் மூலம் விளைவதாக மாற்றுவதுதான் மக்களாட்சி. ஆங்கிலத்தில் இதை ‘டெலிபரேடிவ் டிமாக்ரஸி’ (deliberative democracy), அதாவது ‘கலந்தாலோசனை மக்களாட்சி’ என்கிறார்கள். உதாரணமாக கலைஞர் ஆட்சியிலும் சரி, இன்று ஸ்டாலின் ஆட்சியிலும் சரி; பத்திரிகைகளில் வரும் கருத்துக்களும், செய்திகளும் ஆட்சியாளர்களின் கவனத்தைப் பெறுவது வழமையான நிகழ்வு.  

இப்படித்தான் கட்சி தலைமை என்பதும். பல்வேறு சமூகப் பொருளாதாரப் பிரிவினரின் குரல்களையும் செவிமடுப்பதும், ஏதோவொரு வகையில் அனைவரின் பங்கேற்பை உறுதி செய்வதும்தான் தலைமைக்கு உறுதித்தன்மையைப் பெற்றுத் தரும், வெற்றியை வழங்கும். 

வாரிசுகளின் சவால் என்ன?

வாரிசு தலைவர்கள் கட்சி அணியினரையும் தன்வயப்படுத்தி, மக்களையும் தன் பக்கம் ஈர்க்க வேண்டும். இது சுலபம் அல்ல. வாரிசு தலைவர்களுக்கு தங்கள் முன்னோர் ஈட்டிய நற்பெயர் ஒரு சமூக மூலதனமாகக் கிடைக்கிறது. அதைக் காப்பாற்றிக்கொள்ள அவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். 

கட்சியின் தலைமை வாரிசு முறையில் அமைந்தால், கட்சியின் அனைத்து மட்டங்களில் பொறுப்பாளர்கள் வாரிசு முறையில் உருவாவார்கள் என்பது அவசியம் அல்ல. உள்ளபடி சொன்னால், வாரிசு தலைமை உறுதிப்பட்ட பின், அவர்களால்தான் அனைத்து மட்டங்களிலும் கட்சித் தேர்தலை நடத்தவும், புதியவர்களின் வருகைக்கு வகை செய்யவும் முடியும். காங்கிரஸில் இப்போது நடந்திருக்கும் தேர்தல்களைப் போல. காலப்போக்கில் இந்த வழிமுறைகள் துலக்கம் பெரும் என்ற நம்ப இடம் இருக்கிறது. ஒரு ஜிக்னேஷ் மேவானியும், ஜோதிமணியும் உருவாகாமல் இருக்க மாட்டார்கள். 

கட்சி அணியினர் எல்லோரும் தலைவராக ஆசை கொண்டிருப்பார்கள், வாரிசுத் தலைமை என்பது அந்தச் சாத்தியத்தை அடைப்பதால் அவர்கள் கட்சியிலிருந்து அந்நியமாகிவிடுவார்கள் என்பது ஒரு விபரீத சிந்தனை. அப்படியொரு நிலை என்றுமே சாத்தியம் இல்லை. 

பல்வேறு பண்பு நலன்களும், ஆற்றல்களும், உழைப்பும் ஒருவரை கட்சி பதவிகளுக்கும், பொறுப்புகளுக்கும் உரியவர் ஆக்கும். பொதுக்குழு, செயற்குழு என்று உயராலோசனைக் குழுக்களிலும் இடம் பெற வாய்ப்பளிக்கும். ஆனால் எல்லோருமே தலைவராக வேண்டும் என்பதே தங்கள் இலட்சியம் என்று நினைத்தால் கட்சி சின்னாபின்னமாகிவிடும். காட்டில் வேட்டையாடித் திரிந்த காலத்திலிருந்து, இன்றுவரை அப்படி அனைவரும் தலைவராகும் சாத்தியம் உருவாகவில்லை. அதற்காக அந்த வாய்ப்புகள் முற்றாக அடைக்கப்படுவதும் இல்லை. 

வாரிசு தலைவர் ஆற்றலுடன் செயல்படாவிட்டால் காலப்போக்கில் வலுவிழப்பார்; அகற்றப்படுவார் அல்லது கட்சி உடைந்து தனி பிரிவு உருவாகி வலுப்பெறும். வி.என்.ஜானகி வெற்றி பெறவில்லையென்றால் ஜெயலலிதா. அவ்வளவுதானே? இதிலென்ன பேராபத்து மக்களாட்சிக்கு நிகழ்ந்துவிடப் போகிறது என்பதே கேள்வி! 

கட்சிகள் வலுவிழப்பது மக்களாட்சியைப் பாதிக்கும் என்று சொல்லி காங்கிரஸை உதாரணமாகக்  காட்டுவது சரி அல்ல. இந்திய தேசிய காங்கிரஸ் வலுவிழந்ததற்கு வாரிசு அரசியல் தலைமை காரணம் அல்ல. அந்த வரிசை அறுபட்டு, நரசிம்ம ராவ் என்ற வெகுஜன ஆதரவில்லாத பிரதமர் ஆட்சிக்கு வந்துதான் முக்கிய காரணம். விரிவஞ்சி இதனை மேலும் விளக்குவதை இங்கே தவிர்க்கிறேன். 

உலகில் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் மக்கள் பிரதிநிதிகளே அரசாளும் அமைப்பு அமெரிக்க ஐக்கிய மாகாணத்தில் தோன்றி 250 ஆண்டுகள்தான் ஆகின்றன. 3,000 ஆண்டுகளுக்கு மேலாக நீண்ட மானுட வரலாற்றில் இது ஒரு பிரம்மாண்டமான பரிசோதனை. இதுவரை இதில் லட்சியங்கள் உருவான அளவு, கோட்பாடுகள் உருவான அளவு, நடைமுறைகள் சாத்தியம் ஆகவில்லை.   

இந்த உலகளாவிய பரிசோதனையில் இந்தியாவின் சாதனை தன்னிகரற்றது. பொருளாதாரத்தில் பின்தங்கிய, 75% மக்களுக்கு எழுதப் படிக்க தெரியாத ஒரு பெரும் மக்கள் பரப்பில் 72 ஆண்டுகளுக்கு முன் ஓர் அரசமைப்பு சட்டத்தை எழுதி, வயது வந்தோர்க்கெல்லாம் வாக்குரிமை என்ற புரட்சிகர நடைமுறையை ஏற்று வெற்றிகரமாக இந்த நாடு அதனைத் தொடர்ந்து செயல்படுத்தியும்வருகிறது. 

அத்தகைய பயணத்தில் நாட்டின் பெரும்பாலான கட்சிகள் வாரிசு அரசியல் தலைமை என்பது தங்கள் செயல்பாட்டிற்கு உதவுவதாகக் கண்டால், அதுவும் இந்தப் பிரம்மாண்ட பரிசோதனையின் அங்கம் என்று கருதி நாம் ஆராய முற்பட வேண்டுமே தவிர, முரட்டு முன்முடிவுகளின்பேரில் வாரிசு தலைமையே கூடாது என்று சாதிப்பது நியாயம் அல்ல. அந்த வழிமுறையின் கூறுகளை ஆராய்வோம். அது எப்படி தொடர்ந்த செயல்படுகிறது என்று அவதானிப்போம். 

ஒரு தத்துவார்த்த மானுடவியலாளனாக நான் பெரும்பான்மை அடையாளவாத பாசிஸமே மக்களாட்சியின் முதன்மை எதிரி என்று கருதுகிறேன். இந்த நேரத்தில் அதன் மேல் கவனத்தைக் குவிக்காமல் வாரிசு அரசியல் தலைமை என்று விமர்சன ஆற்றல் திசை திருப்பப்படுவது மக்களாட்சிக்கு நல்லதல்ல என்றும் உறுதியாக நினைக்கிறேன். ஏனெனில் கட்சி தலைவரானாலும், ஆகாவிட்டாலும், பிரதமரானாலும், ஆகாவிட்டாலும், ராகுல் காந்தி என்ற வாரிசு தலைவரே பாசிஸ எதிர்ப்பின் முகமாக விளங்குவது சாத்தியம். இந்த நாட்டில் மக்களாட்சியை உறுதிப்படுத்திய நான்கு தலைமுறைத் தலைவர்களின் தியாகங்களுக்கும் வாரிசு அவர். பாரத் ஜாடோ யாத்திரை இந்த உண்மையையே நிகழ்த்திக் காட்டுகிறது! 

 

தொடர்புடைய கட்டுரைகள்

திமுகவுக்கு உதயநிதி செய்ய வேண்டியது என்ன?
வாரிசு அரசியல் ஒரு சமூகத்தில் ஏற்படுத்தும் பாதிப்பு என்ன?
படிக்க வேண்டிய நேரத்தில் பேப்பர் மடித்த கலைஞரின் பிள்ளைகள்
தலைவர் என்றொரு அப்பா - மு.க.ஸ்டாலின் பேட்டி!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ராஜன் குறை கிருஷ்ணன்

ராஜன்குறை கிருஷ்ணன், ஆய்வறிஞர். பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி.


3

2


1



பின்னூட்டம் (4)

Login / Create an account to add a comment / reply.

amarnath   2 years ago

//மக்களாட்சி இந்தியாவில் இன்று சந்திக்கும் மிகப்பெரிய ஆபத்து பெரும்பான்மை இந்து அடையாளவாதமும், அதன் பாசிஸ முனைப்புகளும்தான். அந்த பாசிஸ சக்திகள்தான் வாரிசு அரசியலைக் கடுமையாகச் சாடுகின்றன. இதிலிருந்து என்ன புரிகிறது? பாசிஸம் வாரிசு தலைமை அரசியலைத் தன் மிகப் பெரிய எதிரியாக பார்க்கிறது என்பதுதான்// - varisu arasayalai ethirpavargal anaivarum facistugal - ithai muttu endru alaika koodathu ; morattu muttu endru alaika vendum

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

K.R.Athiyaman   2 years ago

//சொத்துரிமையின் முக்கியமான அம்சம் என்னவென்றால், வாரிசுகளுக்கு முன்னோரின் சொத்துகள் உரியவை என்பதுதான். அதனால்தான் ஒரு பெரிய பணக்காரரின் மகன், பிறவியிலேயே பணக்காரனாக இருக்கிறார். பெருமுதலீட்டியம் என்பதும் இப்படி வாரிசு அடிப்படையிலேயே இயங்குவது கண்கூடு. // வாரிசு அரசியலுக்கு காரணம் சொத்துரிமை தான் என்றால், தனியுடைமை முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ள வட கொரியாவில் (அங்கு 1950 முதல் கம்யூனிச பாணியில் அனைத்தும் அரசுடைமை தான், தனியார் நிறுவனங்கள், சொத்துகள், பண்ணைகள் அறவே இல்லை) மூன்று தலைமுறையாக எப்படி ஒரு குடும்ப ஆட்சி, வாரிசு அரசியல் 1950 முதல் இன்றுவரை தொடர்கிறது ? கம்யூனிச கியூபாவில் எப்படி 50 ஆண்டுகாலம் ஒரு குடும்ப ஆட்சி (பிடல் காஸ்ட்ரோ, அவருக்கு பின் அவரின் தம்பி ராவ்ல் கேஸ்ட்ரோ) தொடர்ந்தது ? அங்கு தனியுடைமையே இல்லையே ? மிகத் தவறான கருத்து இது. மனித உரிமைகள், அடிப்படை ஜனனாயகம் மிக வலுவாக உள்ள லிபரல் ஜனனாயக நாடுகளில் இந்தியாவைப் போல வாரிசு அரசியல் கிடையாது. இங்கு இன்னும் நிலபிரத்துவ மதிப்பீடுகள், கருத்தியல் வலுவாக தொடர்வதே அடிப்படை காரணம்.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   2 years ago

பிரச்சினை வாரிசு என்பதல்ல. அரசியல் என்பது சேவை என்பதில் இருந்து அதிகாரமிக்க , பொருளீட்டும் வாய்ப்பாக மாறிவிட்டதுதான் பெரிய சிக்கல். உதாரணமாக கம்யுனிஸ்ட்கள் அரசியலை வைத்து சம்பாதில்லை(பெரும்பாலும்) என்பதால் , அதில் வாரிசுகள் வருவதை யாரும் எதிர்ப்பதில்லை.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

செல்வம்   2 years ago

அரசியல்வாதிகளின் பிள்ளைகள் அரசியலுக்கு வரக்கூடாது என்று யாராவது சொன்னால் விமர்சிக்கலாம். வாரிசு என்பதனாலேயே ஒருவருக்கு உரிய இடம் மறுக்கப்பட்டால் விமர்சிக்கலாம். நடைமுறை சாத்தியங்கள் கருதி சில விதிவிலக்கான தளர்வுகளை நியாயப்படுத்தலாம். வழிவழியாக தலைமைப் பதவி வாரிசுகளுக்குப் போவதில் கருத்தியல்ரீதியாக தவறில்லை என்பதையெல்லாம் எப்படி ஆதரிப்பது? தார்மீக அடிப்படையில் சரியானதாகவோ, பகுத்தறிவின்பாற்பட்டதாகவோ தோன்றவில்லை. பாஜக வந்துவிடும் என்று பயமுறுத்தி முட்டுக்கொடுப்பதற்கும், விமர்சன ஆற்றல் திசைதிரும்பிவிடும் என்று கண்டுகொள்ளாமல் போவதற்கும் வேறுபாடு இல்லை. கெட்டிதட்டிப்போன அதிகார அடுக்குகள், அதிகார மையங்களின் அசுர பலம் போன்றவற்றை எதிர்கொள்ள இடதுசாரி வெகுஜனவியம் என்ன ஆயுதங்களை வைத்திருக்கிறது? நண்பர்களைச் செல்வந்தர்கள் ஆக்குவதை பாசிசவாதிகள் செய்தால் என்ன, வாரிசுத் தலைவர்கள் செய்தால் என்ன? பகிர்ந்தளிக்கப்படக்கூடிய உபரியாக 500 ₹ நீடிக்கிறது, அவ்வாறு பகிர்ந்தளிக்க தேவைப்படும் என்பதற்காகவே அனைத்து மீறல்களும் சகித்துக்கொள்ளப்படுகிறது. இதை 'கண்டுகொள்ளாமை மக்களாட்சி' disregarding democracy என்று அழைக்கிறேன்.

Reply 8 0

Login / Create an account to add a comment / reply.

ஒவைசியை எதிர்க்கும் பாஜகவின் மாதவி லதாஉத்தரப் பிரதேச வளர்ச்சிஇஸ்ரோஅரவிந்தன் கண்ணையன் எதிர்வினைநெருப்பு வட்டத்துக்குள் அண்ணாமலைலலாய் சிங்கருத்துக் கணிப்புAFSPAஇந்தியப் பெருங்கடல்அதிகாரம்ஜல்லிக்கட்டுஇந்தியா - பங்களாதேஷ்விக்னேஷ் கார்த்திக் கட்டுரைநிறவெறிபிரதமர் வேட்பாளர் கார்கேஅமைதிஅருஞ்சொல் சமஸ் கி.வீரமணிசரியா?நிதிநிலைஅடிப்படை உரிமைமருத்துவர் ஆலோசனைஅதீத உழைப்புஜி-20 உச்சி மாநாடுகலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்கட்சித்தாவல்யோகிசெல்வாக்கு பெறாத லலாய்பருவநிலை இடர்கள்கூர்ந்து கவனிக்க வேண்டிய மஹாராஷ்டிர அரசியல் மாற்றமபாரத் ஜாடோ யாத்திரை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!