கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு
தான் வைத்த கண்ணியில் தானே சிக்கிய மஹாராஷ்டிர பாஜக
மஹாராஷ்டிர நிதியமைச்சர் அஜீத் பவார் தாக்கல் செய்த மாநில நிதிநிலை அறிக்கை, பிரதமர் நரேந்திர மோடியின் வார்த்தைகளில் கூறுவதானால் ‘ரேவடிகளின் தொகுப்பு’. அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1,500, மின் கட்டணம் ரத்து, குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 3 எல்பிஜி சிலிண்டர்கள் இலவசம் என்று அதில் பல அறிவிப்புகள்.
‘இப்படி இலவசங்கள் அளிப்பது நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது’ என்று மோடி எச்சரித்திருந்தார். “பொது நன்மைகளுக்கான நிதியை மானியங்களுக்குச் செலவிட்டுவிட்டால் அனைவருக்குமான வளர்ச்சிக்கு, புதிய நெடுஞ்சாலைகளை அமைக்க, புதிய விமான நிலையங்களை உருவாக்க, ராணுவத்துக்குத் தேவைப்படும் கருவிகளையும் ஆயுதங்களையும் தயாரிக்க - பணத்துக்கு எங்கே போவது?” என்று அவர் கேட்ட காலம் ஒன்று உண்டு. அது, உத்தர பிரதேசத்தில் 2022 ஜூலை மாதம்.
ஓராண்டுக்குப் பிறகு, கர்நாடக சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி, குடும்பத் தலைவிகளுக்கு ரொக்க உதவி, இலவச எரிவாயு சிலிண்டர், நகர அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் என்று அறிவித்தது. “ஒரு நாடு இப்படி இலவசங்களை அளிக்க முடியாது, இந்த கலாச்சாரம் எதிர்கால சந்ததிகளின் வளத்துக்கான நிதியை விரயமாக்கிவிடும். அடுத்த 25 ஆண்டுகளில் நாடு அடைய வேண்டிய இலக்குகளை பாஜக சிந்திக்கிறது, நாடு முன்னேற்றம் அடைய குறுக்கு வழிகள் ஏதும் இல்லை” என்று மீண்டும் வலியுறுத்தினார் மோடி.
சில மாதங்களுக்குப் பிறகு இலவச திட்டங்கள் குறித்துப் பேசுவதை நிறுத்திவிட்டார். மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான், ‘லட்லி பெஹன் யோஜனா’ என்ற மகளிருக்கு நேரடி நிதி மானியம் அளிக்கும் திட்டத்தை அறிவித்தார். இதர மாநிலங்களிலும் இதைப் போன்ற ரொக்க மானிய அறிவிப்புகளை பாஜக அறிவித்தது. அது தேர்தலில் வாக்குகளை அறுவடை செய்யவும் உதவியது. மோடியும் பேசாமலிருந்தார்.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
தன்னம்பிக்கை இல்லை
மஹாராஷ்டிரத்தை ஆளும் ‘மகாயுதி’ கூட்டணி அரசின் சார்பில் இப்போது இந்த இலவசங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸைப் பிளந்துகொண்டுவந்த அஜீத் பவார் கட்சி, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனையை உடைத்துக்கொண்டுவந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை ஆகியவை பாஜகவுடன் இந்தக் கூட்டணியில் உள்ளன.
இதில் ஷிண்டே முதல்வர், அஜீத் பவார் துணை முதல்வர் - நிதியமைச்சர். தங்களுடைய நிர்வாகத்தின் மூலம் மட்டுமே தொடர்ந்து மக்கள் ஆதரவைப் பெற முடியாது என்று தன்னம்பிக்கையை இழந்துவிட்ட ‘மகாயுதி’, இந்த இலவசங்களை அறிவித்திருக்கிறது. இதற்குப் பிறகும் அது ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்புகள் குறைவே. தன்னம்பிக்கை இல்லை என்பதுடன் அரசு நிர்வாகத்தை எப்படி நடத்த வேண்டும் என்ற தெளிவான சிந்தனைக் குறைபாடும் இதற்குக் காரணம்.
இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு
மாநிலக் கட்சிகளின் வாரிசுத் தலைமைகளுக்கு ஒரு சேதி
04 Aug 2023
தோல்வி தந்த பாடம்
இதற்குக் காரணங்களும் இல்லாமல் இல்லை. நடந்து முடிந்த மக்களவை பொதுத் தேர்தலில் மொத்தமுள்ள 48 இடங்களில் பாஜக தலைமையிலான மகாயுதியால் 17 இடங்களை மட்டும்தான் வெல்ல முடிந்தது. 2019 மக்களவை பொதுத் தேர்தலில் பாஜக கூட்டணிக்குக் கிடைத்த 41 தொகுதிகளுடன் இதை ஒப்பிட, இது பெரும் சரிவாகும்.
உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை 9 மக்களவைத் தொகுதிகளிலும், ஷிண்டே தலைமையிலான சிவசேனை 7 தொகுதிகளிலும் வென்றன. அந்த ஏழிலும் ஒன்றில் 48 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெல்ல முடிந்தது. சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 56 எம்எல்ஏக்களில் 40 பேரையும், 18 எம்பிக்களில் 13 பேரையும் தன்னுடன் அழைத்துவந்த ஷிண்டேவுக்கு, மக்களிடையே ஆதரவு போதாது என்பது தெரிகிறது.
மக்களவைக்கான தேர்தல் என்பதால் மோடியின் செல்வாக்கில் தோழமைக் கட்சிகள்கூட வெற்றிபெறலாம் என்ற நிலை இருந்தது; ஆனால் மஹாராஷ்டிர மக்கள், மகாயுதியைக் கடுமையாகவே தண்டித்துள்ளனர். 2019 தேர்தலில் 23 இடங்களில் வென்ற பாஜக இம்முறை 9 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது. அஜீத் பவார் கட்சிக்கு ஒரேயொரு மக்களவை உறுப்பினர்தான் தேறினார்.
இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு
மகாராஷ்டிரம் - கர்நாடகம் எல்லையில் என்ன பிரச்சினை?
15 Dec 2022
அக்டோபரில் சட்டமன்ற தேர்தல்
மஹாராஷ்டிர சட்டமன்றத்துக்கு வரும் அக்டோபரில் பொதுத் தேர்தல் நடக்கவிருக்கிறது. சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், இந்திய தேசிய காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான அசல் சிவசேனை ஆகிய மூன்றும் ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணியைத் தொடரப்போவதாகவும், தொகுதி உடன்பாடு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்றும் அறிவித்துள்ளன.
மஹாராஷ்டிர மாநிலத்துக்குள் நடைபெறும் தேர்தல் என்பதால், மோடியின் செல்வாக்கு எதுவும் பாஜக கூட்டணிக்குச் சாதகமாக இருக்காது. நிதிநிலை அறிக்கையில் கூறியதை வரும் மூன்று மாதங்களுக்குள் அமல்செய்தால் ஒருவேளை வாய்ப்பு கிடைக்கலாம்.
முதல்வர் பதவி பாஜகவுக்குக் கிடையாது என்பது நிச்சயமாகிவிட்டதால், பிஹாரில் நிதீஷ் குமார் முதல்வராவதற்கு ஒத்துழைத்த பிஹார் பாஜகவினரைப் போல - மோடியின் ஹனுமான் என்று தன்னை அழைத்துக்கொண்ட சிராக் பாஸ்வானைப் போல - மஹாராஷ்டிரத்திலும் முன்வருவார்களா என்பது பெரிய கேள்விக்குறி. இப்போதே பாஜக தொண்டர்களும் இடைநிலை நிர்வாகிகளும் சுரத்து இல்லாமல் இருக்கிறார்கள். அத்துடன் உள்கட்சிப் பூசலும் தொடர்கிறது.
பவன்குலே போட்ட குண்டு
மஹாராஷ்டிர மாநில பாஜக தலைவரான சந்திரசேகர் பவன்குலேவிடம், ‘இதே கூட்டணியும் முதல்வர் பதவியும் அப்படியே தொடரும்தானே?’ என்று நிருபர்கள் கேட்டனர். “மகாயுதி வென்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால், முதல்வர் பதவி யாருக்கு என்று அப்போது தீர்மானிக்கப்படும்” என்று பதில் அளித்தார். அது தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, “கட்சியின் தேசியத் தலைமையும், தோழமைக் கட்சித் தலைவர்களும் கூடி முடிவெடுப்பார்கள்” என்று அதே மூச்சில் தெரிவித்தார்.
மக்களவை பொதுத் தேர்தலில் மஹாராஷ்டிரத்தில் கூட்டணிக்கு ஏற்பட்ட பெருந்தோல்விக்குப் பிறகு, துணை முதல்வர் பதவியிலிருந்து விலக பாஜக தலைவர் தேவேந்திர பட்நவீஸ் முன்வந்தார். கட்சியை வலுப்படுத்த சாதாரணத் தொண்டனாக சேவை செய்ய விரும்புகிறேன் என்று அறிவித்தார்.
முதல்வராக ஐந்தாண்டுகள் பதவி வகித்தவர், கட்சித் தலைமை கேட்டுக்கொண்டதாலும் உத்தவ் தாக்கரேவை முதல்வர் பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்பதற்காகவும், அதிக நிர்வாக அனுபவம் இல்லாத ஏக்நாத் ஷிண்டேவுக்கு அடுத்த நிலையில் துணை முதல்வராக பதவி வகிக்க கட்சித் தலைமை வற்புறுத்தியதால் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து ஷிண்டேவின் விருப்பப்படி நடக்க வேண்டிய சங்கடமும் அவருக்குத் தொடர்கிறது.
மனோஜ் ஜாரங்கே பாடீல்
மராத்தா சமூகத்தவர்களுக்கு தனி ஒதுக்கீடு தேவை என்று கோரி மனோஜ் ஜாரங்கே பாடீல் நடத்திவரும் போராட்டம், மகாயுதியின் தோல்விக்கு முக்கிய காரணமாகத் திகழ்கிறது. சட்டமன்ற பொதுத் தேர்தலிலும் இது எதிரொலிக்கும் என்பது உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் மராத்தா சமூகத்தைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவை அவமதிக்கும் வகையில் பாஜகவால் நடந்துகொள்ள முடியாது.
மராத்வாடா பகுதியில் மகா விகாஸ் அகாடி மொத்தமுள்ள 8 மக்களவைத் தொகுதிகளில் 7இல் வெற்றிபெற, மனோஜ் ஜாரங்கே பாடீல் முக்கிய காரணம். வலிமையான மராத்தா தலைவர் தங்களுக்குக் கிடைக்கும் வரை ஏக்நாத் ஷிண்டேவை வைத்துத்தான் மக்களை அணுக முடியும் பாஜக. மக்களவையிலாவது பாஜகவுக்கு மட்டும் 272 இடங்களுக்கு மேல் கிடைத்திருந்தால், மஹாராஷ்டிரத்தில் களத்தைத் தங்களுக்கு சாதகமாக வளைத்திருக்கும். இப்போது அதற்கும் வாய்ப்பில்லை.
சட்டமன்ற பொதுத் தேர்தலில் மகா விகாஸ் அகாடி வெற்றிபெற்றுவிட்டால் அது பாஜகவுக்குத்தான் பெரிய இழப்பாகிவிடும். மீண்டும் கட்சியை அடிநிலையிலிருந்து அது வளர்த்தாக வேண்டும். மஹாராஷ்டிர பாஜகவில் தலைவர்களும் அதிகம், கோஷ்டிப் பூசல்களும் அதிகம். மராத்தா – ஓபிசி - பட்டியல் இனத்தவரை அதிக எண்ணிக்கையில் கொண்ட மஹாராஷ்டிரத்தில், இந்த மூன்று பிரிவுகளுமே வலுவானவை என்பதால் மாற்று ஏற்பாடாக பிராமண சமூகத்தைச் சேர்ந்த பட்நவீஸை முதல்வராக்கியது கட்சி.
ஐந்தாண்டுகள் அவருடைய ஆட்சி நடந்திருந்தாலும் எல்லாத் துறைகளிலும் நிர்வாகம் சிறப்பாக இருந்தது என்று சொல்ல முடியாது. பல பிரச்சினைகள் அப்படியே தொடர்ந்தன. ஆனால், அவரும் சும்மா இல்லாமல் கட்சிக்குள் தனக்குப் போட்டியாக யாரும் வந்துவிடக் கூடாது என்று ஏக்நாத் கட்சே, வினோத் தாவ்டே, பூனம் மகாஜன் ஆகியோருக்கு முக்கித்துவம் வராமல் பார்த்துக்கொண்டார். இப்போது அவர்கள் அவரை மன்னிக்கத் தயாரில்லை.
யார் போட்டியாளர்?
மஹாராஷ்டிர சட்டமன்றத்தில், 2014 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு 122 இடங்களைப் பெற்ற பாஜக, 2019இல் 105 இடங்களுக்குக் குறைந்தது. 2014இல் பாஜக, சிவசேனை இரண்டுமே தனித்தனியாகத்தான் போட்டியிட்டன. பாஜக மொத்தம் 260 தொகுதிகளில் போட்டியிட்டது. பிறகு 2019இல் பாஜக 164 இடங்களில் போட்டியிட்டு 105 இடங்களை வென்றது. பாஜகவுக்கு இடங்கள் குறைந்ததற்குப் பட்நவீஸும் முக்கிய காரணம். அவர் மட்டும் அனைவரையும் அரவணைத்துச் சென்றிருந்தால் இப்போது பத்தாவது ஆண்டாக முதல்வராகவே நீடித்திருப்பார்.
பட்நவீஸ் மிகவும் எதிர்த்த வினோத் தாவ்டே இப்போது டெல்லியில் பாஜகவின் தேசிய பொதுச் செயலாளராக செல்வாக்கு மிக்க பதவியில் இருக்கிறார். கட்சேவின் மருமகள் இப்போது மோடி அரசில் அமைச்சர் பதவி வகிக்கிறார். கட்சே மீண்டும் கட்சியில் சேரவிருக்கிறார். கூடையில் இருக்கும் நண்டுகள் ஒன்று இன்னொன்றின் காலைப் பிடித்து மேலே ஏறிவிடாமல் தடுத்துக்கொண்டே இருப்பதைப் போல பாஜக மராட்டியத் தலைவர்கள் மற்றவர்கள் செல்வாக்குப் பெறாமல் தடுத்ததால் கட்சி இப்போது வலிமையில்லாமல் சுருங்கிவிட்டது.
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடித்துவிட்டால் பாஜகவுக்குச் செல்வாக்கு இருக்காது. ஒருவேளை பாஜக கூட்டணி வென்றாலும், முதல்வர் பதவிக்குக் கூட்டணி கட்சிகளுக்கிடையே கடும் போட்டிதான் நிலவும். ஏக்நாத் ஷிண்டே அரசியல் நிர்வாக அனுபவம் இல்லாததால் பட்நவீஸுக்கு அடங்கி நடப்பார் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது, அவரோ, அரசியல் சாமர்த்தியங்கள் அனைத்தும் கைவரப் பெற்றவராக இருக்கிறார்.
ஒருவேளை அவர் மீண்டும் முதல்வராகிவிட்டாலும் பாஜகவின் எதிர்காலம், மோடி வருகைக்கு முன்னால் இருந்த நிலைக்குப் போய்விடும். அப்போது பால் தாக்கரேவுக்கும் உத்தவ் தாக்கரேவுக்கும் அடங்கிக் கிடந்தது பாஜக.
சுருக்கமாகச் சொல்வதென்றால், எந்தக் கூட்டணி மஹாராஷ்டிரத்தில் ஆட்சிக்கு வந்தாலும் பாஜகவின் நிலைமை பரிதாபம்தான்.
தொடர்புடைய கட்டுரைகள்
மாநிலக் கட்சிகளின் வாரிசுத் தலைமைகளுக்கு ஒரு சேதி
மகாராஷ்டிரம் - கர்நாடகம் எல்லையில் என்ன பிரச்சினை?
இந்துத்துவம் ஒரே இந்துத்துவம்தான்
என்னால் என்னுடைய சாதியை மாற்றிக்கொள்ள முடியாது
இன்று மும்பை, நாளை சென்னையா?
தமிழில்: வ.ரங்காசாரி
2
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.