கட்டுரை, அரசியல், கலாச்சாரம், சமஸ் கட்டுரை, நிர்வாகம் 5 நிமிட வாசிப்பு

இந்துத்துவம் ஒரே இந்துத்துவம்தான்

சமஸ்
26 Jul 2022, 5:00 am
1

ந்தர்ப்பூர் பாண்டுரங்கன் - ருக்மணி சிலையுடன் தன்னைச் சந்தித்த மஹாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவிடமும், முன்னாள் முதல்வர் - இந்நாள் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸடமும் பிரதமர் மோடி என்ன செய்தியைச் சொல்லியிருப்பார் என்ற ஹேஷ்யங்கள் மஹாராஷ்டிரத்தில் பேசப்படுகின்றன. மோடி தன்னுடைய சீடர்களுக்குச் சொல்லியிருக்கக்கூடிய செய்தி அப்படி ஒன்றும் நாட்டுக்கு முக்கியமானதாக இருந்துவிடப்போவது இல்லை. மாறாக, இந்த ஆட்சி மாற்றத்தின் ஊடாக பாஜக மறைமுகமாகச் சொல்லும் செய்திகள் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளுக்கும் முக்கியமானவை. நாட்டு மக்கள் விவாதிக்க வேண்டியவை.

எப்போதும் பசியோடு காத்திருக்கும் மிருகம்போல் ஆகியிருக்கிறது இன்றைய பாஜக. அதிகார வெறி மிக்க அரசியல் கட்சியின் முன் எந்த ஜனநாயக மாண்பும் ஒரு பொருட்டு இல்லை. மஹாராஷ்டிரத்தையும் சேர்த்து, இதுவரை 10 மாநில அரசுகளைத் தன்னுடைய விருப்பத்துக்கு ஏற்ப மாற்றி அமைத்திருக்கிறது மோடி அரசு. 

மஹாராஷ்டிரத்தில் ஆட்சியை இழந்ததோடு ‘மகா விஹாஸ் கூட்டணி’யில் இருந்த சிவசேனை, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மூன்று கட்சிகளுமே அடுத்து கட்சி என்னவாகும் என்ற கலக்கத்தில் இருக்கின்றன. நாளுக்கு நாள் நிலைமை மேலும் மோசமாகலாம். இதுதான் இன்றைய அரசியல் நிதர்சனம். கேள்வி என்னவென்றால், எதிர்க்கட்சிகள் இதை எப்படி எதிர்கொள்ளப்போகின்றன?

சித்தாந்த முரண்பாடான கூட்டணி. ஆளுங்கட்சிக்குள் குடும்ப, வாரிசுகளின் நிழல் அதிகார மையங்கள். ஆட்சித் தலைமைக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையேயான இடைவெளி. சிவசேனையின் தலைவர் உத்தவ் தாக்கரேவின் வீழ்ச்சிக்கு இப்படி அவருடைய சில பலவீனங்களும் காரணம் என்றாலும், ஒரு விஷயத்தை அவருடைய எதிரிகளும் அங்கீகரிப்பார்கள்; நல்ல ஆட்சி நிர்வாகியாக உத்தவ் இருந்தார்.

தன் கட்சியினரைவிடவும் கூட்டணிக் கட்சியினரின் தொகுதிகளுக்குத் திட்டங்களையும் நிதியையும் அள்ளிக்கொடுத்தவர் உத்தவ். சாதி, மதரீதியிலான பிளவு அரசியல், சமூகரீதியிலான பாகுபாடு அணுகுமுறை ஒப்பீட்டளவில் முந்தைய தேவேந்திர பட்நவீஸ் ஆட்சியைவிடவும் இந்த ஆட்சியில் குறைந்திருந்தன. சட்டம் ஒழுங்கு நிலை மேம்பட்டிருந்தது. மஹாராஷ்டிரத்துக்கு ஒன்றிய அரசிடமிருந்து வரக்கூடிய நிதியை விட்டுவைக்காமல் வெளிப்படையாக விமர்சித்துப் பெற்றார். மிக முக்கியமாக, கரோனா காலகட்டத்தில் நாட்டிலேயே அதிகம் சிக்கலை எதிர்கொண்ட பிராந்தியமான மஹாராஷ்டிராவை அவருக்கு சாத்தியப்பட்ட அளவில் திறம்பட நிர்வகித்தார்.

பத்தாண்டுகளாக இதய நோயுடன் போராடும் உத்தவ் 8 ஸ்டென்ட்டுகளுடன்தான் உயிர் வாழ்கிறார். பெருந்தொற்று காலகட்டத்தில் அவர் தன்னையும் பாதுகாத்துக்கொண்டபடி, ஜனநெருக்கடி மிகுந்த மும்பையையும் அதன் மிகச் சிக்கலான பகுதியான தாராவியையும் நோய்த் தாக்குதலிலிருந்து கூடுமானவரை அவர் பாதுகாத்தது நல்ல நிர்வாகி என்ற பெயரை அவருக்குப் பெற்றுத்தந்தது.

இந்திய அரசியலில் நல்ல நிர்வாகம் என்பது அரசியலில் செல்லுபடி ஆகக்கூடிய ஓர் உத்தியாக ஒரு காலகட்டம் வரை இருந்திருக்கிறது. இன்றைய முதல்வர்களையே எடுத்துக்கொண்டால் நவீன் பட்நாயக், நிதீஷ் குமார் முதல் பினராயி விஜயன், அர்விந்த் கேஜ்ரிவால் வரை பலர் ‘நல்ல நிர்வாகம்’ என்பதையே ஓர் அரசியல் கதையாடலாக மாற்றித் தங்களை நிலைநிறுத்திக்கொண்டிருக்கின்றனர். தங்களது எதிரிகளில் கவர்ச்சியான ஆளுமைகள், சித்தாந்தத் தலைவர்கள் என்று பலரைக் கட்சிக்குள்ளும் வெளியிலும் இப்படியானவர்கள் வீழ்த்தியிருக்கிறார்கள். பாஜக முன்னெடுக்கும் இன்றைய அரசியலில் அது தனக்கென்று ஒரு பெரும் கட்டமைப்பையும், செல்வாக்குள்ள உள்ளூர் தலைவரையும் வைத்திருக்கும் இடங்களில் இனி ‘நல்ல நிர்வாகி அரசியல்’ போதாது என்பதையே உத்தவின் வீழ்ச்சி சொல்வதாக இருக்கிறது. ஒரு சித்தாந்த அரசியலை எதிர்கொள்ள இன்னொரு சித்தாந்த அரசியல் தேவைப்படுகிறது. ஒரே சித்தாந்தத்தைப் பேசும் இருவரும் எதிர் எதிரே நின்று இனியும் நீடிக்க முடியாது. 

சிவசேனை இதற்கு முன் பிளவுகளைச் சந்தித்திருக்கிறது. மூன்றுமே அதன் நிறுவனர் பால் தாக்கரே காலத்தில் நடந்தவை. கட்சியின் ஆட்சி பிரதிநிதிகள் வெளியேற்றமும் அதற்குப் புதிய அனுபவம் இல்லை. கட்சிக்காரர்கள் உறுதிபட பால் தாக்கரேவின் பின் அணிவகுத்து நிற்பார்கள். ஒவ்வொரு பிளவின்போதும் கட்சியோடு சேர்ந்து மும்பை நகரமும் தகிப்பை உணரும்.

நாட்டிலேயே பெரியதான மும்பையில் தனக்கென்று ஒரு செல்வாக்கை அரை நூற்றாண்டு காலமாக சிவசேனை கொண்டிருக்கிறது. மஹாராஷ்டிரத்தின் ஆட்சியில் யார் இருந்தாலும், பிரஹன்மும்பை மாநகராட்சியைக் கால் நூற்றாண்டுக்கும் மேலாகத் தன்னுடைய கைகளிலேயே வைத்திருக்கிறது. ஏக்நாத் ஷிண்டேவின் கிளர்ச்சிக்குப் பிறகு மஹாராஷ்டிர முதல்வருக்கான அதிகாரபூர்வ வீட்டைக் காலிசெய்துவிட்டு உத்தவ் வெளியேறியபோது மக்களிடமும் சரி, கட்சியினரிடமும் சரி; அப்படி ஒரு பெரிய சலனம் வெளிப்படவில்லை. மக்களிடம் ஒரு பச்சாதாபம் இருந்தது. அரசியலர்கள் பச்சாதாபத்தால் வாழ முடியாது.

பாஜகவுக்கு எதிர்த் தரப்பு எனும் ஒற்றை நோக்கத்துடன் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனை மூன்றும் இணைந்து ‘மகா விகாஸ் கூட்டணி’யை உருவாக்கின. இப்படியான உத்தி மோடி ஆட்சிக்கு வந்தது முதலாக வெவ்வேறு மாநிலங்களில் தொடர்ந்து முயற்சிக்கப்படுகிறது. இந்த நிர்ப்பந்த நட்பானது கருத்தியல் உள்ளீடற்றதாக இருப்பதை இப்படி இணைபவர்கள் உணராததால் வெகு சீக்கிரம் அது உருக்குலைந்தும் போகிறது. உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதியும் காங்கிரஸுமேகூட இணைந்து பணியாற்ற முடியாத சூழலில், எங்கிருந்து மஹாராஷ்டிரத்தில் அரை நூற்றாண்டு காலமாக களத்தில் எதிரெதிராக நின்றவர்கள் ஓர் இரவில் நடந்த இணைவைக் கருத்தியல் உள்ளடக்கமின்றி உத்தரவாதப்படுத்திக்கொள்ள முடியும்?

முக்கியமான ஒரு விஷயத்தை உத்தவுடைய வீழ்ச்சி தீர்க்கமாகச் சொல்கிறது. இந்துத்துவம் ஒரே இந்துத்துவம்தான். ‘இந்து – இந்தி – இந்துஸ்தான்’.  இந்த மூன்று சொற்களை உள்ளடக்கிய இந்துத்துவப் பண்பை வேறு சொற்கள் கொண்டு மாற்ற முடியாது. சிவசேனை நீண்ட காலமாக மராத்திய அரசியலுக்குத் தலையையும் இந்துத்துவ அரசியலுக்கு வாலையும் காட்டிக்கொண்டிருந்தது. இந்துத்துவத்தின் ஒற்றைத்தன்மையை மோடியின் பாஜக உறுதிப்படுத்தியிருக்கிறது.

உத்தவ் முன் இப்போது இரு வாய்ப்புகள்தான் இருக்கின்றன. ஒன்று: இந்துத்துவத்தோடு சேர்ந்து கரையும் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனையை அவர் வேடிக்கை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் அல்லது தன்னுடைய தந்தை பால் தாக்கரேவின் காலத்துக்கும் முன் சென்று தன்னுடைய தாத்தா கேஷவ் சீத்தாராம் தாக்கரே காலத்து மராத்தி அரசியல் உள்ளடக்கத்தைத் தன்னுடைய கட்சிக்குக் கொடுக்க வேண்டும். சிவசேனைக்கு மட்டும் இல்லை; பாஜகவை எதிர்கொள்ளும் எந்தக் கட்சியும் இன்று எதிர்கொள்ளும் சவால் இது!

- குமுதம், ஜூலை, 2022

சமஸ்

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘அருஞ்சொல்’ இதழின் ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


3

4


1



பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Periasamy   1 year ago

காமராஜர் என்னும் நல்ல நிர்வாகியை தோற்கடித்து ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்னும் கவர்ச்சி வாக்குறுதி அளித்து அதை நிறைவேற்ற முடியாமல் மூன்று படி லட்சியம் ஒரு படி நிச்சயம் என்று எதுகை மோனைகளால் ஆட்சியை பிடித்த வரலாற்றின் நீட்சிதான் தற்போதைய அரசியல் ..

Reply 3 1

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

முதல் பிரெஞ்சு பெண் எழுத்தாளா்பெரும்பான்மையினம்மனித உணர்வுகள்இரு உலகங்கள்ஒருங்கிணைந்த நவீனப் பொதுப் போக்குவரத்து முறைசசிகலாபாரத் சாது சமாஜ்denugaசங்க காலம்மாநிலங்கள்பொதுப் பயண அட்டைநாடகீய பாத்திரம்தவில் கலைஞர்ஒரு முன்னோடி முயற்சிகோர்பசெவின் கல்லறை வாசகம்ஆவணமாகும் புகைப்படத் தொகுப்புஎதிர்காலம்: நம்பிக்கையுடனாதலைமைச் செயல் அதிகாரிதிரை பிம்பங்கள்தேசிய நிறுவனங்கள்துப்புரவுப் பணியாளர்கள்எழுத்துராமேசுவரம்இந்துக்கள்சீனப் படையெடுப்புசத்தியாகிரகம்பயனாளர்கள்வெள்ளியங்கிரி மலைஎழுத்தாளர்இந்த வேலையும் சம்பளமும் நிச்சயம்தானா?

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!