கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 7 நிமிட வாசிப்பு

சீரழிவை நோக்கிச் செல்லும் இந்தியக் கட்சிகள்!

ராமச்சந்திர குஹா
28 Jan 2023, 5:00 am
4

ந்திய ஜனநாயகம் கடந்த சில ஆண்டுகளாக நலிவுற்றுவிட்டது என்று இந்தியாவையும் வெளிநாடுகளையும் சேர்ந்த அறிஞர்கள் வாதிட்டுவருகிறார்கள். அதேசமயம், இந்திய ஜனநாயகத்தின் ஓர் அங்கம் சீரழிவை நோக்கிச் செல்வதை அவர்கள் யாருமே உரிய கவனம் செலுத்திப் பார்க்கவில்லை. அது ‘அரசியல் கட்சி’ என்கிற அமைப்பின் சரிவு. பத்திரிகைச் சுதந்திரத்தின் மீது தாக்குதல், சுயேச்சையான அரசு அமைப்புகளை அடிமையாக்குதல், தேர்தல் நன்கொடைகளில் மர்ம முறைகளை அனுமதித்தல் ஆகியவற்றைவிட இந்திய ஜனநாயக நலிவின் சிறந்த எடுத்துக்காட்டு - இந்திய அரசியல் கட்சிகளின் போக்குகளில் வெளிப்படுகிறது.

அண்ணா மறைவுக்குப் பிறகு…

தமிழ்நாட்டு முதல்வர் அவருடைய மகனை மாநில அமைச்சரவையில் சமீபத்தில் சேர்த்துக்கொண்டதையே எடுத்துக்கொள்வோம். இது வழக்கமானதுதானே என்று இளம் வாசகர்கள் கருதக்கூடும்; நீண்ட கால வரலாற்றை மறக்காத வாசகர்கள் இதை, திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர்களின் லட்சியங்களுக்கு நேர்முரணான செயல் என்றே பார்ப்பார்கள். திமுக என்ற இயக்கம் தங்களுடைய இனம், மொழி, வரலாறு, கலாச்சாரம் போன்ற அடையாளங்களைச் சிதைத்து அடிமைப்படுத்த நினைத்த இந்தி மேலாதிக்கத்துக்கு எதிராக வெடித்துக் கிளம்பிய தமிழர்களின் எழுச்சி அடையாளம்; அதிக மக்கள்தொகையைக் கொண்ட இந்தி மொழி பேசும் மாநிலங்களின் அரசியல் செல்வாக்கை எதிர்த்து வீறுகொண்டு எழுந்ததுதான் திமுக.

எவருக்கும் கட்டுப்படாத - தமிழ்க் கலாச்சாரம், சுயமரியாதை – ஆகிய உணர்வுகளை வளர்த்தெடுக்கும் ஆர்வம் ஆகியவை திமுக இயக்கத்தின் முக்கியமான ஊக்க சக்திகள்; வட இந்தியாவை வளைத்து ஆக்கிரமித்திருந்த அன்றைய காங்கிரஸ் கட்சியைப் போல அல்லாமல், சாதி – பாலினம் ஆகியவற்றில் சமத்துவ நோக்கம்கொண்ட முற்போக்கு நிலையைப் பின்பற்றியது திமுக. 1967இல் ஆட்சிக்கு வந்தது முதலே, அதற்கு முந்தையை அரசுகள் அளிக்காமல் விட்ட, நல்வாழ்வுப் பொருளாதார நோக்கிலான நிர்வாகத்தைத் தொடர்ந்து அளிப்பது திமுக.

தென்னகத்தின் கலாச்சாரப் பெருமையாகவும் சமூக சீர்திருத்தப் பாடி வீடாகவும் பெருமை கொண்டது திமுக. ஒரேயொரு குடும்பத்துக்குச் சொந்தமான நிறுவனமாவதற்காக அது உதயமாகவில்லை. அந்தக் கட்சியின் நிறுவனர் – தலைவரும் முதல் முதல்வருமான சி.என்.அண்ணாதுரை பதவிக்கு வந்த சில ஆண்டுகளுக்கெல்லாம் மரணம் அடையாமல் இருந்திருந்தால், அந்தக் கட்சி அப்படி குடும்ப நிறுவனமாக மாறியும் இருக்காது. திமுகவை ஒரு குடும்பத்துக்கு கட்டுப்பட்ட கட்சியாக மாற்றியது, அண்ணாவுக்குப் பிறகு கட்சிக்கும் ஆட்சிக்கும் தலைவராக வந்த மு.கருணாநிதி. தன்னுடைய மகன் மு.க.ஸ்டாலினை தனக்கு அரசியல் வாரிசாகத் தயார்படுத்தினார். தமிழ் இனத்தின் பெருமை காக்க வந்த திமுகவை, அதன் நிறுவனர்கள் எதிர்பார்த்தே இருக்காத திசைக்கு நகர்த்தினார்.

மாநில கட்சிகளும் ன் வாரிசுகளும்

தலைவரின் சொந்தக்காரர்களையே அடுத்தடுத்து தலைவர்களாகவும் ஆட்சியாளர்களாகவும் கொண்டுவந்தது திமுக மட்டுமல்ல. இந்த அம்சத்தில் திமுகவைவிட மூத்த வாரிசுக் கட்சி பஞ்சாபின் அகாலி தளம். சீக்கியர்களின் தனி அடையாளத்துக்கும் பெருமைக்கும் அரணாக விளங்கத் தொடங்கப்பட்ட அகாலி தளம், பிரகாஷ் சிங் பாதல் தலைமையேற்ற பிறகு அவருடைய குடும்பக் கட்சியாகிவிட்டது. மகாராஷ்டிரத்தின் சிவசேனை, தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்டிர சமிதி ஆகியவையும் இதே பாதையில்தான் பயணிக்கின்றன.

உதயநிதியை மாநில அமைச்சரவையில் மு.க.ஸ்டாலின் சேர்ப்பதற்கு ஊக்கம் அளித்த முன்னுதாரணங்களே உத்தவ் தாக்கரே தன்னுடைய மகன் ஆதித்ய தாக்கரேவை அமைச்சராக்கியதும் கே.சந்திரசேகர ராவ் தனது மகனை அமைச்சராக்கி அழகு பார்த்ததும்தான். வட இந்தியாவிலேயே முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி, லாலு பிரசாதின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி, சரண்சிங்கின் பேரன் நடத்தும் ராஷ்ட்ரீய லோகதளம் கட்சி ஆகிய அனைத்தும் லோகியாவின் சீடர்களால் சமூக நீதி பெறுவதற்காகப் புறப்பட்ட கட்சிகள். இந்தக் கட்சிகள் எல்லாமும் கட்சித் தலைமையை, தந்தைக்குப் பிறகு மகனிடம் ஒப்படைத்தவை.

மேலே சொன்ன அரசியல் கட்சிகள் அனைத்துமே இப்படி வாரிசு அரசியலை வளர்த்தெடுக்கும் கட்சிகளாக மாறியிருக்காது, இந்திய அரசியல் வானில் நீண்ட காலமாக நிலைத்திருக்கும் இந்திய தேசிய காங்கிரஸ் இந்திரா காந்தி காலத்தில் குடும்பக் கட்சியாக மாற்றப்படாமல் இருந்திருந்தால். நாட்டின் சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட அன்றைய காங்கிரஸ் கட்சியின் சாயல், சில விஷயங்களில் மட்டுமே காங்கிரஸிடம் இன்னமும் மிச்சம் இருக்கிறது. ஒட்டுப்போட்டாலும் இணைக்க முடியாத ஒரு வித்தியாசம், அசல் காங்கிரஸுக்குத் தலைவர்களாக இருந்த பலரின் குடும்பங்களுடன் - இன்றைய காங்கிரஸ் தலைவரின் குடும்பத்தை ஒப்பிடும்போது கண்ணில் படுகிறது.

மகாத்மா காந்திக்கு நான்கு மகன்கள், அனைவருமே பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றவர்கள்; அவர்களில் ஒருவர்கூட நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைக்கூடப் பெறவில்லை - அமைச்சர் பதவிகளை விடுங்கள்; காந்திஜியின் கடைசி மகன் தேவதாஸ் காந்தியை, அரசியலுக்கு வருமாறு அழைத்தார் நேரு. அந்த அழைப்பை ஏற்க மறுத்த அவர், தான் வகித்துவந்த பத்திரிகை ஆசிரியர் பொறுப்பிலேயே கடைசிவரை வாழ்ந்தார். 1949இல் சோவியத் ஒன்றியத்துக்கு இந்தியத் தூதராக அவரை நியமிக்க விரும்பினார், அடுத்த ஆண்டு மத்திய அமைச்சரவையில் சேருமாறும் அழைப்பு விடுத்தார் நேரு. இது எந்த மாதிரியான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்தவராக இருந்ததால், இரண்டு முறையும் நேருவின் அழைப்புகளை ஏற்க மறுத்துவிட்டார் தேவதாஸ் காந்தி.

காங்கிரஸ் கட்சியில் மட்டும் என்றில்லை, இப்படிப்பட்ட தார்மிக மன உறுத்தல் இன்றைய இந்தியாவில் எந்தக் கட்சியிலும் யாருக்குமே இல்லை என்பது வருத்தம் தருவதாகும். தனக்குப் பிறகு கட்சியில் தலைமையேற்க சஞ்சய் காந்திக்கும் பிறகு ராஜீவ் காந்திக்கும் இந்திரா காந்தி நடத்திய பட்டாபிஷேகம், திமுக - அகாலிதளம் போன்ற கட்சிகளின் தலைவர்களுக்கு வாரிசு அரசியலை கடைப்பிடிக்க ஊக்கம் தரும் முன்மாதிரியாகத் திகழ்ந்தது. ஒரு தலைமுறைக்குப் பிறகு, தன்னுடைய மகன் ராகுல் காந்தியைத் தவிர வேறு எவரையும் கட்சிக்குத் தலைமை தாங்கும் தகுதியுள்ளவராகப் பரிசீலிக்க மறுத்த சோனியா காந்தி, இந்திய அரசியலில் வாரிசு அரசியலுக்கு மேலும் உந்துசக்தியாகத் திகழ்கிறார்.

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

திமுகவுக்கு உதயநிதி செய்ய வேண்டியது என்ன?

சமஸ் 27 Dec 2022

இதர துறைகளும் அரசியல் துறையும் ஒன்றா? 

இந்தியாவில் பல துறைகளில் வாரிசுகள்தான் தங்களுடைய தந்தையார்களுக்குப் பிறகு பொறுப்புக்கு வருகிறார்கள் என்பது உண்மைதான்; தந்தையின் அடியொற்றி தொழில் அல்லது வியாபாரத்தில் கால் பதிக்கும் அடுத்த வாரிசுக்கு மற்றவர்களைவிட விரைவான அறிமுகம், உயர்வு கிடைப்பதெல்லாமும் உண்மைதான். அதற்குப் பிறகு அந்தத் துறையில் நீடிப்பதும் சாதிப்பதும் அந்தந்த குழந்தைகளின் சமர்த்து. சுநீல் மனோகர் காவஸ்கரின் மகன் என்பதால் ரோகன் காவஸ்கரால் மும்பை ரஞ்சிக் கோப்பை அணியில்கூட இடம்பிடித்துவிட முடிந்தது.

அதன் பிறகு நிலைக்கவோ, பேசப்படவோ முடியாமல் திறமை வாய்ந்த பிற ஆட்டக்காரர்களால் மறக்கப்பட்டுவிட்டார் ரோகன். சேதேஷ்வர் பூஜாரா, அவருடைய தந்தைக்குக் கிடைத்த புகழாலும் அறிமுகத்தாலும் கிரிக்கெட் அணியில் இடம்பெற்றார். ஆனால், சொந்தத் திறமை காரணமாக தாக்குப்பிடித்தார். அமிதாப் பச்சனுக்கு இருந்த வானளாவிய புகழ், செல்வாக்கு காரணமாக அவருடைய மகன் அபிஷேக் பச்சனும் பல படங்களுக்கு அரிதாரம் பூசினார், ஆனால் அவருடைய சமகாலத்தவரின் திறமைகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திரைவானில் மங்கிவிட்டார்.

விளையாட்டுத் துறை, திரைப்படத் துறை, சட்டம், இலக்கியம் என்று பல துறைகளில் அப்பா - அம்மாவுக்குப் பிறகு அவர்களின் இடத்துக்கு வரும் வாரிசுகள் அதைத் தங்களுடைய சமூக உரிமையாகவே கருதுகிறார்கள். அரசியலில் வாரிசு வாய்ப்பு பெறுவது மிகவும் மோசமானது, காரணம் அது ஜனநாயகத்தில் அனைவரும் சமம், முன்னுக்கு வர அனைவருக்கும் சம வாய்ப்பு என்ற கொள்கையையே முதலில் ஊனப்படுத்தி, சூழலையே நஞ்சாக்கிவிடுகிறது. அப்படி வாரிசுகள் முன்னுரிமை பெறும்போது, திறமை வாய்ந்த – எளிய குடும்பங்களைச் சேர்ந்த முதல் தலைமுறை இளைஞர்கள் ஒதுக்கப்பட அல்லது பின்னுக்கு இழுக்கப்பட வாய்ப்பாகிவிடுகிறது.

அரசியல் அல்லாத துறைகளில் யார் வாரிசாக வந்தாலும் அவர்கள் தங்களுடைய வேலைகளைச் செய்தாக வேண்டும், தான் செய்யும் செயல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும். அரசியலிலோ வாரிசுகளுக்கு அப்படி எந்தப் பொறுப்பும் இருப்பதில்லை. வழக்கறிஞரான தந்தைக்குப் பிறகு அதே வேலைக்கு வரும் மகன் அல்லது மகள், திறமையற்றவர்கள் என்றால் அவர்களுக்கு வரும் வழக்குகள் எண்ணிக்கை குறைந்து பிறகு ஓய்ந்துவிடும். இதுவேதான் ‘கைராசி’ டாக்டர்களுக்குப் பிறகு படித்துவிட்டு அதே தொழிலுக்கு வரும் அவர்களுடைய வாரிசுகளுக்கும். ஸ்டாலின், உத்தவ், கே.சந்திரசேகர ராவ், சோனியா போன்றோர் தங்களுடைய வாரிசுகளைப் பதவியில் அமர்த்தும்போது – மற்றவர்களுக்கெல்லாம் அது ஓர் எச்சரிக்கை. கட்சிக்குள் உங்களுக்கு எவ்வளவுதான் திறமை அர்ப்பணிப்பு இருந்தாலும் என்னுடைய மகனுக்குத்தான் தலைமைப் பதவியில் முன்னுரிமை என்பதே அந்த எச்சரிக்கை.

ஜனநாயக சீரழிவு

அரசியல் கட்சிகளின் தலைமையைக் கைப்பற்றும் தலைவர்கள், பிறகு அதைத் தங்களுடைய குடும்பக் கட்சியாக மாற்றிவிடுவது இன்றைய ஜனநாயக சீரழிவை அப்பட்டமாக வெளிப்படுத்தும் நிகழ்வு. அடுத்த விஷயம், முழுக் கட்சியும் ஒரு தலைவரின் சர்வாதிகாரத்தை எதிர்த்துக் கேள்வி கேட்காமல் பணிந்துபோவது. இதற்கு கண்கண்ட உதாரணம் பாரதிய ஜனதா கட்சி. மோடி பிரதமராவதற்கு முன்னால் பாஜக இப்படி எந்த ஒரு தலைவருக்கும் கைப்பாவையாகச் செயல்பட்டதே இல்லை. அப்போதெல்லாம் கட்சியானது தனிமனித வழிபாட்டைக் கடுமையாகக் கண்டிக்கும். எங்களுடைய கட்சியில் உள்கட்சி ஜனநாயகம் உயிர்ப்பாக இருக்கிறது, கட்சிக்குத் தலைமை தாங்குவது கூட்டுத் தலைமைதான் என்று பெருமையோடு பேசுவார்கள். அன்றைய பாஜக முதல்வர்கள், பிரதமராக இருந்த வாஜ்பாயை இப்போதுள்ளதைப் போல விதந்தோதி நடைபாவாடை விரித்ததில்லை.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது மத்திய அமைச்சரவையில் எந்த அமைச்சரையும் துறையையும் இப்போது மோடி செய்வதைப் போல, ஆதிக்கம் செய்ததே இல்லை. 2014 மே மாதத்துக்குப் பிறகு ஒன்றிய அரசு, பாரதிய ஜனதா ஆகிய இரண்டின் நிதியாதாரங்கள் உள்பட பலவும் பிரதமரின் பிம்பத்தைத் தேய்த்து மெருகேற்றும் வேலைகளையே செய்துவருகின்றன. இந்திய நாட்டின் – இந்திய நாகரிகத்தின் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றை ஒற்றை ஆளாகத் தனது தோள்களில் சுமக்கும் நாயகனாக, தெய்வப் பிறவியாக மோடியை அவை சித்தரிக்கின்றன.

நரேந்திர மோடி என்ற தனிநபரை வழிபடும் போக்கால் இந்திய ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை ஏற்கெனவே கட்டுரைகளில் எழுதியிருக்கிறேன். இப்போது அது பிற அரசியல் கட்சிகளுக்கும் பரவிவிட்டது பெருங்கவலையாக இருக்கிறது. ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்டபோது, படித்தவர்கள் சேர்ந்து கட்சி தொடங்கியிருக்கிறார்கள், ஊழலுக்கு எதிராகப் பேசுகிறார்கள் என்பதால் மக்களிடையே அதற்கு ஆதரவு பெருகியது. அது மட்டுமல்லாமல் ஏற்கெனவே இருந்த அரசியல் கட்சிகளிடம் காணப்பட்ட ஆணவம், எதையும் தாங்கள்தான் செய்ததாக காட்டிக்கொள்ளும் போக்கு போன்ற எதுவுமில்லாத சாதாரண கட்சியாக இருந்ததால் பெரும்பாலான மக்கள் விரும்பினர்.

ஆனால், சில ஆண்டுகளிலேயே அதுவும் அரவிந்த் கேஜ்ரிவாலின் சொந்த விருப்பு – வெறுப்புகளுக்கு இடம்தரும் கட்சியாகிவிட்டது. மோடிக்கு எப்படி பிற பாஜக தலைவர்கள் அஞ்சி நடக்கிறார்களோ அப்படியே ஆஆக கட்சியிலும் பிற தலைவர்கள் கேஜ்ரிவாலை தனியிடத்துக்கு உயர்த்திவிட்டார்கள். தில்லி மாநில அரசு, கேஜ்ரிவால் என்ற தனிமனிதரின் புகழைப் பாடுவதற்காகவே கோடிக்கணக்கான ரூபாய்களைப் பத்திரிகைகளில் விளம்பரமாகச் செலவிட்டுக்கொண்டிருக்கிறது. ஒன்றிய அரசு மோடியைப் புகழ எடுத்துக்கொள்ளும் முயற்சிகளுக்கு இணையாக, தில்லி மாநில அரசும் செயல்படுகிறது.

அரசியல் கட்சிகளின் வீழ்ச்சி

ஒரேயொரு தலைவரால் ஒரு கட்சிக்குத் தனிப்பெரும் தலைவராக இருந்துவிட முடியும், ஒரு மாநிலத்துக்கு அடையாளமாக மாறிவிட முடியும் என்பது மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியால் வெளிப்படையாக உணர்த்தப்படுகிறது. கேரளத்தில் பினராயி விஜயனும் ஒரு வகையில் இப்போது கட்சியையும் மாநிலத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தனித் தலைவராகிவருகிறார். உள்கட்சி ஜனநாயகம் உள்ள கட்சி என்று பாஜகவைப் போல மார்க்சிஸ்ட் கட்சியும் ஒரு காலத்தில் பெருமைப்பட்டது, அது இப்போது பழங்கதையாகிவிட்டது. கேரளத்தில் இடதுசாரி முன்னணி அரசு 2021இல் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, முந்தைய அரசின் சிறந்த இரண்டு அமைச்சர்களைக் காரணம் ஏதும் கூறாமல் சேர்க்காமல் விட்டுவிட்டார் முதல்வர் விஜயன்.

இந்திய அரசியல் கட்சிகளின் வீழ்ச்சி இப்போது கிட்டத்தட்ட முழுமையாகிவிட்டது. ஒரு வகையான அரசியல் கட்சிகள் வாரிசு அரசியலைக் கூசாமல் ஏற்றுக்கொண்டுவிட்டன; இன்னொரு வகை அரசியல் கட்சிகளோ தங்களுடைய தலைவரை வாழும் தெய்வமாகவே கருதி பூஜை –அர்ச்சனை என்று கொண்டாடி மகிழ்கின்றன. மனதைச் சோர்வடையச் செய்யும் இந்த அடிமைத்தனங்களின் விளைவுகள் நம்முடைய அரசியலுக்கும் சமூகத்துக்கும் செய்யப்போகும் கேடுகள் என்ன என்பதை விரிவாக ஆராய்ந்தாக வேண்டும். நவீன சமூகத்தில் ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு அரசியல் கட்சிதான் முக்கியமான சாதனம். அது ஆரோக்கியமாகவும் நடுநிலையாகவும் இருந்தால்தான் சமூகத்தின் அனைத்துத் தரப்பும் வாய்ப்புகளைப் பெற முடியும்.

ஒரு குடும்பத்தையும் தனியொரு தலைவனையும் நம்பி கட்சி இருந்தால் ஜனநாயகம் எப்படி செழிக்கும்? ஒரு குடும்பத்துக்கும் தனியொரு தலைவருக்கும் ஒரு கட்சியே அடிமைபோல நடந்துகொண்டால் அனைவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டிய அரசியல் கலாச்சாரம் என்னாவது? கட்சித் தோழர்கள் எப்போதும் தன்னைத் துதித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கும் தலைவர், சுதந்திரமான ஊடகங்களை ஊக்குவிக்க வேண்டும் என்று நினைப்பாரா? தான் எதைச் செய்தாலும் கட்சித் தொண்டர்கள் அதைக் கேள்வி கேட்காமல் ஏற்கும் விசுவாசத்துடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் தலைவர், தன்னுடைய தவறான கொள்கைகளையும் செயல்களையும் அதிகார வர்க்கமும் காவல் துறையும், ஊடகங்களும் நீதித் துறையும் கேள்வி கேட்காமல் ஏற்க வேண்டும் என்றே நினைப்பாரா, மாட்டாரா? 

 

தொடர்புடைய கட்டுரைகள்

திமுகவுக்கு உதயநிதி செய்ய வேண்டியது என்ன?
வாரிசு அரசியல் ஒரு சமூகத்தில் உண்டாக்கும் பேரிழப்பு என்ன?
பிஹாரிலிருந்து ஆரம்பிக்கும் 2024 ஆட்டம்
2024 களத்தையே மாற்றிவிட்டது பிஹார் எழுச்சி

ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

தமிழில்: வ.ரங்காசாரி

3

2

பின்னூட்டம் (4)

Login / Create an account to add a comment / reply.

S.Elangovan   10 months ago

ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டுக் கட்சியை வாரிசு அரசியல் பட்டியலில் குறிப்பிட மறந்து விட்டார்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   10 months ago

பல பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. இதுமட்டுமே முக்கிய பிரச்சினை என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி மக்களுக்கு போராடும் தேவைகளை குறைத்துவிட்டது. கம்யுனிஸ்ட் போன்ற கொள்கைப்பிடிப்பு கொண்ட கட்சிகள் தேய்வதற்கு இதுவும் ஒரு காரணம். ரோகன் கவாஸ்கர் உதாரணம் அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும். திறமை இல்லாவிட்டால் கட்சி காணாமல் போய்விடும். நல்ல உதாரணம் ஸ்டாலின்தான். ஏனெனில் அவர் கருணாநிதியை பெரிய வெற்றியை கட்சிக்கு ஈட்டுத் தந்துள்ளார்.

Reply 0 0

Ganeshram Palanisamy   10 months ago

....கருணாநிதியை விட பெரிய.....

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

PRASANNA R   10 months ago

கட்டுரையுடன் முரண்படுகிறேன்...ராஜன் குறை அவர்களின் கட்டுரையையும் தொடர்புடைய கட்டுரையாக இணைத்து இருக்க வேண்டும் ஆசிரியர்...

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

லண்டன் மேயர் பதவிபாஜக மாநில முதல்வர்கள் மாற்றம்முன் தயார்நிலைஅடக்கமான மனிதரின் மிதமான கணிப்புசெயலிபள்ளிப்படிப்பு‘சிப்கோ’ இயக்கம்இந்திய சட்டக் கமிஷன்சமத்துவச் சமூகம்இந்திய வணிகம்‘குடி அரசு’ ஏடுவிவாதம்AFSPAஎண்ணெய் வணிகம்தமிழர் மருத்துவம் ஒரு வரலாற்றுப் பார்வைஜெய்பீம் சூர்யாஅரசியல் கட்சிகள்விரட்டுகிறார் முதல்வர்: பிடிஆர் பேட்டிஉலகச் சூழலைப் புறக்கணித்த பட்ஜெட் உரைதுர்நாற்றம்ஹார்வர்ட் பல்கலைக்கழகம்குப்பைதிட்டங்களும்ஸ்டாலின்: மீண்டும் தலைவரானார்கேசவ விநாயகன்காவிரி டெல்டாஊழல் கர்நாடகம் எல்லைப் பிரச்சினைகுஹா கட்டுரை மொழிபெயர்ப்புசெமி கன்டக்டர் தட்டுப்பாடு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!