கட்டுரை, வரலாறு, சமஸ் கட்டுரை, வாழ்வியல் 4 நிமிட வாசிப்பு

காந்தி ஆசிரமம்: ஓர் அறைகூவல்

சமஸ்
25 Oct 2023, 5:00 am
1

திருச்செங்கோட்டிலிருந்து எட்டு கிமீ தொலைவில் உள்ள புதுப்பாளையம் கிராமம் இந்த நாட்களிலுமே அப்படி ஒன்றும் ஜொலிக்கவில்லை. நூறாண்டுகளுக்கு முன்பு சாலை, மின்சார வசதிகள் ஏதும் இல்லாத நாட்களில் இந்தப் பகுதி எவ்வளவு பின்தங்கிய பகுதியாக இருந்திருக்கும் என்று எளிமையாக யூகிக்க முடிகிறது. 1925 பிப்ரவரி 6 அன்று இங்கு ராஜாஜியால் ‘காந்தி ஆசிரமம்’ திறக்கப்பட்டபோது, தன் வாழ்வின் பெரிய பரிசோதனைக் களமாகக் கருதியே அவர் இங்கு வந்திருக்க வேண்டும்.

அன்றைக்கு 150 வீடுகளைக் கொண்டிருந்த இந்த கிராமத்தில் அஞ்சல் பெட்டிகூட கிடையாது என்கிறார் ராஜாஜியின் வாழ்க்கை வரலாற்றாசிரியரான ராஜ்மோகன் காந்தி.

காந்தி – ராஜாஜி இருவரும் சென்னையில் 1919இல் சந்தித்தபோது, காந்திக்கு வயது 50; ராஜாஜிக்கு வயது 41. இதற்கு 13 ஆண்டுகள் முன்னரே 1906இல் காங்கிரஸில் இணைந்திருந்தார் ராஜாஜி. கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் திலகர் பேச்சால் வெகுவாக ஈர்க்கப்பட்டிருந்தவர் சுதந்திரப் போராட்டக் களத்தில் கால் பதித்தார். 1911இல் சேலம் நகர்மன்ற உறுப்பினரான ராஜாஜி, 1917இல் அதன் தலைவரானார். இந்தக் காலகட்டங்களிலேயே சாதிய ஏற்றத்தாழ்வுக்கு எதிரான ராஜாஜியின் கலகங்கள் ஆரம்பித்திருந்தன.

தீண்டாமைக்கு எதிரான போராட்டம்

சேலம் நகர சபைத் தலைவராக தலித் குழந்தைகளுக்கு என்று சிறு பள்ளிகளை ஆரம்பித்தார். சேலம் நகரசபை நடத்திவந்த மாணவர்கள் இல்லத்தில் தலித் மாணவர்கள் சேர வழிவகுத்தார். அக்கிரகாரப் பகுதியின் குடிநீர் விநியோகத்தில் தலித் உதவியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவருடைய சொந்த சாதியினரே திரண்டபோதும் அவர்களோடு உடன்பட உறுதிபட மறுத்து எதிர்ப்பைச் சந்தித்தார். சிதம்பரத்தில் தலித் ஆன்மிகர் சகஜானந்தர் ‘நந்தனார் கல்விக் கழகம்’ கட்டுவதற்கு உதவினார். சகஜானந்தரை விருந்துக்கு அழைத்ததற்காக அவருடைய சாதியினர் ராஜாஜியை சாதி பிரஷ்டம் செய்தபோது, அதைப் பொருட்படுத்தாது தன்னுடைய பணிகளில் மேலும் தீவிரமானார்.

சமூகச் சீர்திருத்தத்தின் முக்கியமான கண்ணி தீண்டாமை எதிர்ப்பு என்ற புரிதல் ராஜாஜிக்கு இயல்பாகவே இருந்தது. தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக சமபந்தி போஜன விருந்துகளை நடத்தியதும், சாதி மறுப்புத் திருமணங்களுக்குத் துணை நின்றதும், ஆலய நுழைவுப் போராட்டங்களை ஊக்கப்படுத்தியதும் தீண்டாமைக்கு எதிரான அவருடைய உறுதியான போராட்ட வரைபடத்தின் கோடுகளாகவே அமைந்திருந்தன. 

காந்தியுடனான உறவு ராஜாஜியின் பயணத்தை மேலும் தெளிவாக்கியது. 1917இல் குஜராத்தின் ஆமதாபாத் நகரத்திலிருந்து சுமார் 6 கிமீ தொலைவில் உள்ள சபர்மதியில் தன்னுடைய ஆசிரமத்தை நிர்மாணித்தார் காந்தி. 1924இல் பெல்காம் மாநாட்டில், காங்கிரஸ் தலைவராக காந்தி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, சபர்மதிக்குச் சென்று அவரைச் சந்தித்த ராஜாஜி அதே போன்ற ஓர் ஆசிரமத்தை காந்தியின் பெயரால் நிர்மாணிக்க விரும்பினார். சபர்மதியிலிருந்து திரும்பிய கையோடு அவர் முன்னெடுத்த முயற்சியே புதுப்பாளையம் காந்தி ஆசிரமம்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

ராஜாஜியின் வாழ்க்கையில் இது ஒரு ‘திருப்புமுனை’ என்று சொல்லலாம். சேலத்தில் செல்வாக்கான வழக்குரைஞராக இருந்த ராஜாஜி தன்னுடைய மனைவியின் மரணத்துக்குப் பிறகு, குழந்தைகளோடு இதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்புதான் சென்னைக்கு வந்திருந்தார். வழக்கறிஞர் தொழில் அபிவிருத்திக்காகவே சென்னைக்கு அவரை ‘தி இந்து’ குழுமத்தின் கஸ்தூரி ரங்கன் அவரை அழைத்திருந்தார். ஆனால், சென்னைக்கு ராஜாஜி வந்த இரு வாரங்களில், அவர் வீட்டுக்கு விருந்தினராக வந்த காந்தியின் வருகை அவரது வாழ்வைத் திருப்பிப் போட்டது.

ரௌலட் சட்டத்துக்கும் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கும் எதிராக ‘ஒத்துழையாமைப் போராட்டம்’ காந்தியால் அறிவிக்கப்பட்டது. தேசாபிமானிகள் அரசுடனான தனது உறவை முறித்துக்கொள்வதாக அமைந்தது இது; பள்ளி - கல்லூரி சென்ற மாணவர்கள் படிப்பை விட்டனர்; அரசுப் பணிகளில் இருந்தவர்கள் உத்யோகத்தை விட்டனர்; வழக்கறிஞர்கள் தொழிலை விட்டனர். தன்னுடைய வழக்கறிஞர் பணியிலிருந்து விலகினார் ராஜாஜி. காங்கிரஸில் தீவிரமாகச் செயல்படலானார். அடுத்த சில ஆண்டுகளில் புதுப்பாளையம் வந்தடைந்தார்.

காந்தி - ராஜாஜி

இந்த பிராந்தியத்தைச் சேர்ந்த ஜமீன்தார் பி.கே.ரத்தினசபாபதி கவுண்டர் ராஜாஜியின் ஆசிரம முயற்சிக்குத் துணை நின்றதுடன் நான்கரை ஏக்கர் நிலம் தந்து, மண் சுவரும் ஓலைக் கூரையும் கொண்ட ஆறு  குடிசைகளையும் கட்டித் தந்தார். ஆசிரம திறப்பு விழா விருந்தினர்களில் முக்கியமானவர் பெரியார்.

தன்னுடைய 15 வயது மகன் நரசிம்மன்; 12 வயது மகள் லட்சுமியோடு ஆசிரமத்தில் வசிக்கலான ராஜாஜி இருந்த வீட்டை இன்னமும் அதே நிலையில் பராமரிக்கிறார்கள். பத்துக்குப் பத்தில் ஒரு கூடத்தோடு சின்ன கூடுபோல இருக்கிறது அந்த வீடு. ஆறு ஆண்டு காலம் அங்கு வாழ்ந்தார் ராஜாஜி. இந்தக் காலகட்டத்தில்தான் தீண்டாமை ஒழிப்பு, மது ஒழிப்பு மற்றும் கிராமப்புற மேம்பாட்டுப் பணிகளில் தன்னை முழுமையாக அவர் கரைத்துக்கொண்டார்.

ராஜாஜி இருந்த வீடு.

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

இந்தி ஆதிக்கரா ராஜாஜி?

சமஸ் 09 Dec 2021

ராஜாஜி சாதி ஒழிப்பைப் பேசியவர் இல்லை. சாதி அமைப்பை அழிப்பது அசாத்தியம்; ஆனால், ஏற்றத்தாழ்வையும் தீண்டாமையும் கூண்டோடு ஒழிக்க வேண்டும் என்று பேசியவர். அந்த அளவில் பல தியாகங்களுக்கும் தன் வாழ்வை ஒப்பளித்தவர்.

ராஜாஜியின் சில சீடர்கள், பக்கத்துக்குக் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்று 15 பேருடன் செயல்படலானது ஆசிரமம்; ஆசிரமவாசிகளில் ஐந்து பேர் தலித்துகள். அனைவருக்கும் உடல் உழைப்பில் சேர்ந்து பங்கேற்றனர். நூல் நூற்பில் ஆரம்பித்து, செருப்பு தைப்பது வரை. ஆசிரமவாசி வீரன் செருப்புத் தைக்க ராஜாஜிக்குக் கற்றுக் கொடுத்தார். மாலை வேளைகளில் சுற்றுப்புற ஊர்களுக்கு மாட்டு வண்டியில் சென்று பிரச்சாரம். கல்கி இங்கு தங்கியிருந்த ஆசிரமவாசிகளில் ஒருவர். ராஜாஜியுடன் இணைந்து கல்கி வெளிக்கொண்டுவந்த ‘விமோசனம்’ இதழ் மதுவுக்கு எதிரான பிரச்சார வாகனமாகச் செயல்பட்டது, எளியோருக்குப் புரியும் விதமான ஏராளமான கருத்துப் படங்களுடன்.

எல்லோருக்கும் ஒரே கூரையின் கீழ் சமையல்; ஒரே இடத்தில் உணவு. சமையலர் சின்னான் ஒரு தலித். கூடவே அவருக்கு உதவியவர்களில் முக்கியமானவர் சகன்; அவர் ஒரு முஸ்லிம். இன்றைக் காட்டிலும் பல மடங்கு சாதிய இறுக்கம் நிறைந்திருந்த காலம் அது. ஆசிரம வழக்கங்கள் வெளியே தெரிந்த கொஞ்ச காலத்திலேயே சுற்றுப்புற கிராமத்தினரின் கடும் எதிர்ப்பை ஆசிரமம் எதிர்கொண்டது. பால், காய்கறி விநியோகத்தை நிறுத்திவிட்டார்கள். ஆசிரமத்தைத் தீயிட்டு எரிக்க திட்டமிருக்கிறார்கள் என்ற தகவல் வந்தடைந்தபோதும் ராஜாஜி கலங்கவில்லை; தீயை அணைக்கும் பயிற்சியை ஆசிரமவாசிகளுக்கு அளித்தார்.

சுதேசி பொருளாதாரத்துக்கான கட்டுமானம்

தங்கள் தேவைகளுக்கானதைத் தாங்களே உருவாக்கிக்கொள்ள அவர்கள் தலைப்பட்டார்கள். இதனூடாக ஆசிரமத்துக்கு வந்து பணியாற்றிவிட்டு செல்வோரின் எண்ணிக்கை பெருகலானது. ஆசிரமம் தொடங்கிய சில மாதங்களிலேயே சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் நூற்பதன் மூலம் மாதம் ஒன்றரை ரூபாய் வரை சம்பாதிக்க ஆரம்பித்திருந்தனர். பெரிய காசில்லை என்றாலும், அது புதிய  பொருளாதாரமாக எழுந்தது. சுற்றுப்புற கிராமங்களில் நூல் கொடுத்து, துணி வாங்கியது ஆசிரமம். 1926 இறுதிக்குள் தமிழ்நாட்டில் 30,000 பேர் நூல் நூற்கக் கற்றிருந்ததற்கு ஆசிரமும் ஒரு பங்களிப்பைச் செய்திருந்தது.

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

ராஜாஜி விடுத்த எச்சரிக்கை

ராமச்சந்திர குஹா 29 Apr 2022

சுதேசி பொருளாதாரத்துடன் கூடிய ஒரு சமத்துவச் சமூகத்துக்கான முன்மாதிரியை அந்த ஆசிரமத்தின் மூலம் உருவாக்க அவர்கள் அப்போது அங்கு முயற்சித்தார்கள். இதற்கு வெளியே அவர்கள் மேற்கொண்ட முக்கியமான பணி, தலித்துகள் மேம்பாடு. தலித்துகள் குடியிருப்புகள் பகுதிகளுக்குச் சென்று அங்கு புனரமைப்புப் பணி மேற்கொண்டார்கள். தலித் குழந்தைகளுக்குக் கல்வி கற்பித்தார்கள். தலித்துகள் உரிமையோடு புழங்குவதற்காக ஏராளமான கிணறுகளை அமைத்துக் கொடுத்தார்கள். பள்ளிகளை உருவாக்கினார்கள். மருத்துவச் சேவையும் இப்பணிகளின் ஓர் அங்கமானது.

மருத்துவமனை செயல்பட்ட வளாகம்

1928இல் வளாகத்தினுள்ளேயே மருத்துவமனை கட்டப்பட்டது; பி.சி.ராய் திறந்துவைத்தார். அடுத்து, தொழுநோய் நிவாரணப் பணியைத் தன் கடமையாக ஏற்றது ஆசிரமம்; தொழுநோயாளிகளுக்காக தம் வாழ்வையே அர்ப்பணித்தார்கள் மருத்துவர்கள் ரகுராமனும், ரங்கநாதனும். 1933இல் ஆசிரமவாசிகள் தங்குவதற்கான வீடுகளை அமைக்க இடநெருக்கடி ஏற்பட்டபோது அருகிலுள்ள கிராமத்தில் குடியிருப்பு உருவாக்கப்பட்டது. தலித் தலைவர் எம்.சி.ராஜா அதைத் திறந்து வைத்தார்.

அடுத்த சில ஆண்டுகளில் ராஜாஜி அரசியல் களம் நாடு தழுவியதாக விரிந்தாலும், அவருடைய கவனம் இங்கே எப்போதும் இருந்தது. தன்னுடைய மகன் நரசிம்மனை ஆசிரமப் பொறுப்பாளர்களில் ஒருவராக நியமித்து, நிர்வாகத்தைக் கவனித்தார். 1925 முதலாக வார்தாவிலுள்ள காந்தி சேவா சங்கத்தின் கிளை நிறுவனமாகச் செயல்பட்டுவந்த ஆசிரமம் 1959இல் தனி நிறுவனம் ஆனது. ராஜாஜி 1972இல் மறைந்தார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு படிப்படியாகப் பழைய காந்திய பரிசோதனைக் களப் பாரம்பரியத்தை ஆசிரமம் இழந்துவந்தாலும், ராஜாஜியின் மறைவுக்குப் பிறகும் வெற்றிகரமான ஒரு வணிக நிறுவனமாகத் திகழ்ந்தது. இப்போதும்கூட ஆண்டுக்கு ரூ.12 கோடிக்கு வணிகம் நடப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

சுயராஜ்ஜியத்தின் பிரகடனம்

சமஸ் 22 Sep 2021

புத்தெழுச்சிக்கான காத்திருப்பு

கதர் துணி, பட்டுச் சேலை, போர்வை, மெத்தை, சலவை சோப், குளியல் சோப், ஊதுபத்தி உற்பத்தி நடக்கிறது. ‘காந்தி ஆசிரமம்’ எனும் முத்திரையிடப்பட்ட தேன், குல்கோந்துக்குச் சந்தையில் நல்ல மதிப்பு இருக்கிறது. நயமான வேப்பம்புண்ணாக்கு தயாரிக்கிறார்கள். மற்றபடி கட்டில் – பீரோ உற்பத்தி, ரெடிமேட் துணிகள் உற்பத்தி எல்லாம் முடங்கிவிட்டன. தன்னுடைய புத்தெழுச்சியோடு ஒரு போக்கின் பரவலுக்கும் காத்திருப்பதுபோலத்தான் எனக்கு அந்த ஆசிரமம் தோன்றியது.

ஆசிரமத்திலேயே உள்ள ஒரு விற்பனையகம் போக நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை பகுதிகளில் 19 விற்பனையகங்கள் இருக்கின்றன என்றாலும், பெரிதாகச் சொல்லிக்கொள்ளும் நிலையில் எதுவும் இல்லை. ஜிஎஸ்டி வரி ஒரு பேரிடியாக மாறிவிட்டது என்கிறார் ஆசிரமச் செயலராக இருக்கும் ரவிக்குமார். காலத்துக்கேற்ற மாற்றங்கள் மேற்கொள்ளப்படாததும் வளர்ச்சி முடங்க ஒரு காரணம் என்பதையும் ஒப்புக்கொள்கிறார்.

முடங்கிவிட்ட பர்னிச்சர் பிரிவு

தலைமையகத்தில் வீற்றிருக்கும் காந்தி, ராஜாஜி படங்களுக்குப் பக்கத்தில் காந்தியப் பொருளாதாரத்தின் கணக்கைச் சொல்லும் படமும் சிரிக்கிறது. ஒரு ரூபாயில், கூலி 40 பைசா; மூலப்பொருள் 25 பைசா; நிர்வாகச் செலவு 10 பைசா, மேம்பாட்டுச் செலவு 3 பைசா போக மீதி 22 பைசா உழைப்பவருக்குக் கூலியாகச் செல்ல வேண்டும் என்று சொல்கிறது அந்தப் படம். “இப்போதும் இங்கு தயாராகும் எந்தப் பொருளிலும் 22% தொழிலாளர்களுக்குச் செல்கிறது. யாருமே இங்கே கீழே மேலே கிடையாது. ஊதியம் குறைவு என்றாலும், இங்கு வேலை செய்து ஓய்வு பெறுவோருக்கு இயன்ற தொகையை ஓய்வூதியமாகத் தருகிறோம். பணியாற்றுவோர் குழந்தைகளின் உயர்கல்விக்கு உதவுகிறோம். இப்படி ஒரு பொருளாதாரக் கூட்டு முன்மாதிரியை நாம்தான் தோற்கடிக்கிறோம்” என்கிறார்கள்.

சமூகக் கூட்டு முன்மாதிரியையும் சேர்த்துதானே தோற்கடிக்கிறோம்?

- ‘குமுதம்’, செப்டம்பர், 2013

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

இந்தி ஆதிக்கரா ராஜாஜி?
சூப்பர் ஸ்டார் கல்கி
ராஜாஜி விடுத்த எச்சரிக்கை
சுயராஜ்ஜியத்தின் பிரகடனம்
காலவெளியில் காந்தி
சகஜானந்தா: சனாதன எதிர்க்குரல்
சம்பாரண் சத்தியாகிரகம்: இந்தியப் புரட்சியின் நூற்றாண்டுகள்!

சமஸ்

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘அருஞ்சொல்’ இதழின் ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


3

1

1
பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

S.Elangovan   1 month ago

சின்னான் வண்ணார் வகுப்பைச் சேர்ந்தவர் என்கிறார் ராஜாஜியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ராஜ்மோகன் காந்தி. திருத்தம் பதிவு செய்யப்படுமா?

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

தென்னைமுதல் பதிப்புகள்சவுக்கு சங்கர்ஜேஇஇஅரசுதிரிபுகள்ஸரமாகோவின் உலகில் ஒரு வழிகாட்டிமூல வடிவிலான பாவம்மாஸ்மனம்கிறிஸ்தவர்கள்குடிமைப் பணித் தேர்வுபிலிப் எச். டிப்விக்இந்தியத்தன்மைகோவை கார் வெடிப்புச் சம்பவம்தமிழ் முஸ்லிம்கள்ரௌத்திரம் பழகு!மாபெரும் கார்ப்பரேட் மோசடிதேசத் துரோகிசாதி நோய்க்கு அருமருந்துமன்னர் பரம்பரைகள்ஆறு அம்சங்கள்சர்வதேச உறவுஉதயசந்திரன்கல்வான் பள்ளத்தாக்குஅணிவதாஉம்பெர்த்தோ எகோchennai rainஏன் எதற்கு எப்படி?பேராதைராய்டு ஹார்மோன்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!