கட்டுரை, அரசியல், கலாச்சாரம், சமஸ் கட்டுரை, ரீவைண்ட் 5 நிமிட வாசிப்பு

எல்லா பிராமணர்களையும் ஒழித்துவிடுவோம், சாதி அழிந்துவிடுமா?

சமஸ் | Samas
10 Nov 2007, 5:00 am
0

நான் பிறந்த ஊரான மன்னார்குடியிலிருந்து அதிகபட்சம் இரண்டு மணி நேரப் பயணத் தூரத்துக்குள் இருக்கிறது கீழவெண்மணி. கூலி உயர்வாக ஒரு படி நெல்லை இரு படி நெல்லாக உயர்த்திக் கேட்டுப் போராடினார்கள் என்பதற்காக 20 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட 44 பேர் உயிரோடு கொளுத்தப்பட்ட ஊர் அது (1968, டிசம்பர் 25). 

அவமானகரமான விஷயம் என்னவென்றால், கல்லூரிப் படிப்பை முடிக்கும் வரை  கீழவெண்மணியைப் பற்றியோ, அங்கு நடந்த படுகொலையைப் பற்றியோ பெரிதாக அறியாதவன் நான். இத்தனைக்கும் திராவிட இயக்கப் பின்னணியைக் கொண்டது என்னுடைய குடும்பம். சாதி, மத, இனப் பாகுபாடுகளுக்கு எதிரான உணர்வுகளுடனேயே நான் வளர்ந்தேன்.

பலரையும்போல, ‘சாதி இல்லை’ என்று சொல்வதாலும் எல்லோருடனும் பரஸ்பரம் சகஜமாகப் பழகுவதாலும் மட்டுமே சாதி ஒழிந்துவிடும் என்றும் நம்பிக்கொண்டிருந்தேன். ஒருமுறை கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனைச் சந்திக்கச் சென்றேன். சாதியின் முழுக் கொடூர முகத்தையும் எனக்கு அறிமுகப்படுத்தியது அவருடனான உரையாடல்தான்.

கஞ்சிக்காகத் தன் தாயுடன் பண்ணையாரம்மாவின் முன் அவர் கூனிக்குறுகி நின்ற தருணங்கள், ஆரம்பக் கல்வி ஆசைக்காக அவர் வாங்கிய அடி, உதைகளிலிருந்து தன்னுடைய கதையைத் தொடங்கினார் கிருஷ்ணம்மாள். அவர் வாழ்க்கையையே புரட்டிப்போட்ட, அவருக்குள் இருந்த சத்தியாகிரகப் போராளியை வெளிக்கொணர்ந்த கீழவெண்மணி படுகொலைச் சம்பவத்தை அவர் விவரிக்கத் தொடங்கியபோது, அவருடைய வார்த்தைகள் என்னைச் சுக்குநூறாக உடைக்கலாயின. அன்றைக்கு வரை எனக்கு அது ஒரு சம்பவம்; இறந்த உயிர்களெல்லாம் வெறும் எண்ணிக்கை.

அப்படித்தான் இருந்தது. ஆனால், ரத்தமும் சதையுமாக கிருஷ்ணம்மாள்  அந்தச் சம்பவத்துக்குள் நுழைந்தபோது என்னுடைய மனசாட்சி என்னைத் தீயிலிட்டு வாட்டலானது. இந்த நாட்டின் ஒவ்வொரு நரம்பும் எப்படிச் சாதியோடு இணைக்கப்பட்டிருகிறது; காணி நிலம் எவ்வளவு அதிகாரம் மிக்கது, அந்த அதிகாரம் சாதியக் கட்டமைப்பின் பின்னணியில், பல நூறு ஆண்டுகளாக எப்படிக் கோடிக் கணக்கான மக்களை நசுக்கிப் புதைத்து அதன் மீது நிற்கிறது, பூதான இயக்கத்தை ஒரு பெரும் புரட்சித் திட்டமாகத் தான் ஏன் பார்த்தார் என்றெல்லாம் தொடர்ந்தார்.

கிருஷ்ணம்மாள் அப்போது ஒரு தகவலைச் சொன்னார். “தமிழ்நாட்டோட விவசாயத் தொழிலாளர்கள்ல அஞ்சுல மூணு பேர் தலித்துகள். நிலம் வெச்சிருக்குற தலித்துகளை எடுத்துக்கிட்டா, தொண்ணூறு சதவிகிதம் பேர் ஒரு ஹெக்டேருக்கும் கீழ நெலம் வைச்சிருக்குறவங்க; இவ்வளவு ஏன், தலித்துகள்ல நால்ல ஒருத்தருக்குக் கையெழுத்துப் போடத் தெரிஞ்சா அதிகம். ஆனா, இன்னமும் ஒரு நாளைக்கு சராசரியா மூணு தலித் பெண்கள் பலாத்காரத்தை எதிர்கொள்றாங்க, ரெண்டு பேர் தாக்கப்படுறாங்க; எங்க? சமூகநீதியில நாட்டுலேயே முன்னேறுன மாநிலமான தமிழ்நாட்டுல. அப்படின்னா, நம்ம நாடு முழுக்க உள்ள நிலை எப்படி இருக்கும்? சுதந்திரம் அடைஞ்சு 50 வருஷங்களுக்கு அப்புறமும் இதுதான் நிலைமைன்னா, முன்னாடி எப்படி இருந்திருக்கும்? சாதி ஒழிப்பைப் பத்திப் பேசுறவங்க எல்லாரும் இதெல்லாம் எங்கேயோ யாராலேயோ நடத்தப்படுறதாவும், தங்களுக்கு இதுல எந்தச் சம்பந்தமும் இல்லைன்னும் நெனைக்கிறாங்க. ஆனா, ஒவ்வொருத்தருக்கும் இதுல ஏதோ ஒரு வகையில தொடர்பு இருக்குங்கிறதுதான் உண்மை.”

காந்தியரான கிருஷ்ணம்மாள் என்னுடைய சாதியைக் கேட்கவில்லை; அதன் ஆதிக்கத்தைப் பற்றிப் பேசவில்லை. ஆனால், எதை உணர்த்த வேண்டுமோ, அதை உணர்த்திவிட்டார். “பிராமணியம் ஒழியும் வரை இந்தியாவில் சமூக விடுதலை சாத்தியம் இல்லை” என்று பெரியார் சொல்லியிருந்ததை அதுவரை நான் ஒரு சின்ன எல்லைக்கு உட்பட்டே புரிந்துவைத்திருந்தேன். எனக்கு மேல் ஒரு கூட்டம் இருப்பதையும், அது உருவாக்கிய பிராமணியம்தான் இந்திய சாதியத்தின் மையப் புள்ளி என்பதையும் உணர்ந்திருந்த நான், ‘பிராமணியம் என்பது பிராமணர்களை மட்டுமே உள்ளடக்கியது அல்ல; அது என்னையும் உள்ளடக்கியிருக்கிறது; நானும் எனக்குக் கீழ் ஒரு பெருங்கூட்டத்தை மிதித்து நசுக்கிக்கொண்டிருக்கிறேன்’ என்பதை மிக ஆழமாக உணர்ந்த நாள் அது.

அடுத்து என்னை உருக்குலைத்த சம்பவம் 29.9.2006இல் நடந்த கயர்லாஞ்சி படுகொலை. மஹாராஷ்டிர மாநிலம், பண்டாரா மாவட்டத்தில் உள்ள சின்ன கிராமம் கயர்லாஞ்சி. இந்த ஊரைச் சேர்ந்த பையாலால் போட்மாங்கே தலித்  சமூகத்தைச் சேர்ந்தவர். தனக்குச் சொந்தமான நிலத்தில், வீடு கட்டிக்கொள்ள விரும்பினார் பையாலால். இதைப் பொறுக்காத ஆதிக்கச் சாதியினர் கிராமத்தின் பொதுப் பாதைக்கு வேண்டும் என்று சொல்லி, பையாலாலின் நிலத்தின் ஒரு பகுதியைப் பறித்துக்கொண்டனர். இந்த நிலப்பறிப்பை எதிர்த்ததன் தொடர்ச்சியாக, ஒன்றுதிரண்ட ஆதிக்கச் சாதியினர் பையாலாலின் மனைவி சுரேகா, பிள்ளைகளை அடித்து நிர்வாணமாக்கி, தெருக்களில் இழுத்துவந்தார்கள். ஊரின் பொதுப் பகுதிக்குக் கூட்டிவந்து, கொடூரமாகத் தாக்கி, பையாலாலின் மனைவியையும், மகள் பிரியங்காவையும் பலரும் சேர்ந்து பாலியல் வன்முறைக்குள்ளாக்கினர். கொடுமையின் உச்சகட்டமாக , தாயுடனும் தங்கையுடனும் பாலுறவு கொள்ளுமாறு பையாலாலின் மகன்கள் ரோஷன், சுதிர் இருவரையும் மிரட்டியவர்கள், இதை ஏற்க அவர்கள் மறுக்கவும் இருவரின் ஆண் உறுப்புகளையும் வெட்டித் தூக்கி வீசினார்கள். பின்னர், அந்த இரு பெண்களின் பெண்ணுறுப்புகளுக்குள்ளும் மாட்டு வண்டியின் நுகத்தடிக் கம்புகளைச் செருகிக் குத்திக் கொன்றார்கள்.

நான் செய்தி அறிந்த இரவு என்னைக் கொன்றுபோட்டது. சுற்றிலும் காட்டுமிராண்டிகள் சூழ்ந்து, சம்மட்டியைக் கொண்டு சராமாரியாகத் தாக்குவதுபோல இருந்தது. கொடூரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். மீண்டும் மீண்டும் அந்த உண்மை உணர்த்தப்படுகிறது: ‘பிராமணியம் என்பது பிராமணர்களை மட்டுமே உள்ளடக்கியது அல்ல; நானும் அதில் உள்ளடங்கியிருக்கிறேன்; எனக்குக் கீழ் ஒரு பெருங்கூட்டத்தை மிதித்து நசுக்கிக்கொண்டிருக்கிறேன்.’ 

என்னுடைய சகாக்களில் பலர் சாதி எதிர்ப்பு நிலைப்பாட்டில் உறுதியாகப் பேசக் கூடியவர்கள். பெரும்பாலும், சாதியம் தொடர்பான விவாதங்கள் எழும்போதெல்லாம், எங்கள் பேச்சு இறுதியாகச் சென்றடையும் இடம் பிராமணியமும் பிராமணர்களுமாகவே இருக்கும் . முதல்முறையாக அன்றைக்கு ஒரு கோரிக்கையை முன்வைத்தேன்: “இன்றைக்கு நாம் ஒவ்வொருவரும் அவரவர் சாதிகளின் அயோக்கியத்தனங்களை மனம் திறந்து பேச முயன்றால் என்ன?” 

யாரும் ஆட்சேபிக்கவில்லை. தொடங்கினார்கள். தொடர முடியவில்லை. பிராமணர் அல்லாதவர் என்கிற கூரையின் கீழ் வசதியாக அதுவரை ஒன்றுபட்டிருந்த எல்லோரும் மிக விரைவில், அவரவர் சாதியின் கீழ் பதுங்க இடம் தேடினார்கள். விவாதம் சண்டை ஆனது. 

சங்கடமான மனநிலையில் எல்லோரும் அங்கிருந்து விடுபட்டோம். அதன் பின், வெவ்வேறு சந்தர்ப்பங்களில், பல்வேறு மனிதர்களிடமும் நான் அந்த அனுபவத்தைப் பெற்றிருக்கிறேன்: அவர்களைப் பொறுத்தவரை பிராமண எதிர்ப்பு மட்டுமே சாதி எதிர்ப்பு.

ஊர் போய் ஒருபோதும் சேர முடியாத பயணம் இது.

சாதியக் கட்டமைப்பின் வரலாற்றில் பிராமணியத்துக்கு எவ்வளவு நெருக்கமான தொடர்பு இருக்கிறதோ, அதற்கு இணையான பிணைப்பு பிராமணியத்துக்கும் பிராமணர்களுக்கும் இடையே இருக்கிறது;  அவர்களுடைய குற்றங்களைக் குறைப்பது என்னுடைய நோக்கம் அல்ல. எவராலும் அப்படிக் குறைத்துவிடவும் முடியாது. ஆனால், இந்து மதத்தின் 10இல் ஒரு பங்கு மக்கள்தொகையைக்கூடத் தொட முடியாத ஒரு சாதியின் குற்றங்களை மட்டுமே பேசிக்கொண்டு, ஏனைய 9 பங்கு சாதிக்காரர்கள் வசதியாக, நம்முடைய சுயசாதி விமர்சனங்களிலிருந்து தப்பித்துக்கொள்வதும், நம்முடைய சாதிகளை அவற்றின் அநீதிகளிலிருந்தும் கொடுஞ்செயல்களிலிருந்தும் மறைத்துவிடுவதும் ஒருபோதும் சாதி ஒழிப்புக்கு உதவாது என்று நினைக்கிறேன். மேலும், இது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் என்றும் நினைக்கிறேன்.

இந்தியாவில் சாதியின் தோற்றுவாய், அதன் வரலாறு, போக்கு ஆகியவற்றை ஓரளவுக்கு நாம் அனைவருமே உணர்ந்திருக்கிறோம். ஆதியில், பழங்குடிக் குழுக்களாக அலைந்தவர்கள் தத்தமது குழுக்களை ஓர் இனமாக அடையாளம் கண்டதே சாதியின் தொடக்கம் என்பதை நாம் அறிவோம். போட்டிக் குழுக்களிடமிருந்து தம்மைக் காத்துக்கொள்ள ஒரு குழுவிலுள்ள ஆட்களின் எண்ணிக்கை முக்கியம் என்பதால், அந்த எண்ணிக்கையைத் தக்கவைத்துக்கொள்ள இனத்துக்குள் அகமணமுறை உருவானது என்பதையும் பின்னர், அதுவே சாதியின் அடிப்படைக் கட்டுமானமாக மாறியது என்பதையும் நாம் அறிவோம். பின்னாளில், நிலவுடைமைச் சமுதாயக் கட்டமைப்பில், இந்தியாவில் சாதிகளே வர்க்கங்களாக உருமாறியதையும் நாம் அறிவோம். இந்தச் சாதி அமைப்பைத் தத்துவமயமாக்கி, அதன் உச்சபீடத்தில் அமர்ந்து இன்றளவும் ஆதிக்கம் செலுத்தும் பிராமண சாதி - மனிதர்களையல்ல, சாதியைக் குறிப்பிடுகிறேன் - அழிக்கப்பட வேண்டியது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதே பீடத்தில், அதற்குக் கீழ் உள்ள அத்தனை அடுக்குகளிலும் நிரம்பி ஆதிக்கம் செய்யும் ஏனைய சாதிகளை, நம்முடைய சாதிகளை - மனிதர்களையல்ல, சாதியைக் குறிப்பிடுகிறேன் - அழிக்கும் போர்களை எப்போது தொடங்கப்போகிறோம்?

இன்றைக்கும் சாதி ஒழிப்பைப் பற்றிப் பேசும்போது, மனுதர்மத்தை இழுத்து கதையை மனுவிடம் தொடங்கி மனுவிடமே முடித்துவிடுபவர்கள் உண்டு. ஆனால், வரலாற்றில் மனுவை எங்கே நிறுத்த வேண்டும் என்பதையும் சாதி ஒழிப்பின் உண்மையான மையம் எது என்பதையும் அம்பேத்கர் 1916இல் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஆற்றிய ‘இந்தியாவில் சாதிகள், அதன் அமைப்பியக்கம், தோற்றுவாய் மற்றும் வளர்ச்சி’உரை சுட்டிக்காட்டுவதாக எனக்குப் படுகிறது. 

அம்பேத்கர் அந்த உரையில் குறிப்பிடுகிறார்: 

“சுருக்கமாகச் சொல்வதானால், சாதியின் சாராம்சமான ஒரே இயல்பு அகமணம். வேறு விதமாகச் சொல்லப்போனால், மாற்று சாதித் திருமணங்களின் இன்மையே சாதியின் சாரம்சமாக இருக்கிறது... சாதியப் பிரச்சினை என்பது இறுதியாகப் பார்த்தால், தன் குழுவுக்குள் இருக்கும் திருமண வயதைக் கொண்ட இருபாலருக்கு இடையிலான சமமின்மையை ஒழுங்குபடுத்துவதைச் சுற்றியே இருக்கிறது.”

“நான் உங்களிடத்திலே வலியுறுத்திச் சொல்ல ஒரு உண்மை உண்டு: சாதிச் சட்டத்தை மனு வழங்கவில்லை. அவனால், அதை இயற்றவும் முடியாது என்பதே அந்த உண்மை. மனுவுக்கு நெடுங்காலத்துக்கு முன்பே சாதி நின்று நிலவியது. அவன் சாதியை உயர்த்திப் பிடிப்பவனாக இருந்தான். எனவே, அவன் சாதியைத் தத்துவத்தன்மை கொண்டதாக ஆக்கினான். ஆனால், மிக நிச்சயமாக அவன் இந்து சமூகத்தின் இன்றைய நிலையை ஏற்படுத்தவில்லை; அவனால், அப்படி ஏற்படுத்தியிருக்கவும் முடியாது. 

சாதி தர்மத்தைப் போற்றிப் புகழ் பாடுவதோடும், இன்றளவும் நிலைத்து நிற்கும் சாதி விதிகளைத்  தொகுத்து அமைத்ததோடும் மனுவுடைய பணி நிறைவடைந்தது.

சாதி அமைப்பின் வளர்ச்சியும் பரவுதலும் மிகப் பிரம்மாண்டமானது. எந்தத் தனிமனிதனின் இயந்திரத்தாலோ சக்தியாலோ அல்லது எந்த ஒரு வர்க்கத்தின் சக்தியாலோ சாதிக்கப்பட முடியாதது அது. பிராமணர்கள்தான் சாதியை உருவாக்கினார்கள் என்ற பேச்சுக்கும் இந்தப் பதில் பொருத்தமானது. பிராமணர்கள் சாதியை உண்டாக்கினார்கள் எனும் கோட்பாடு எண்ணத்தில் தவறானது; நோக்கத்தில் வன்மம் கொண்டது என்பதைத் தவிர வேறில்லை. பிராமணர்கள் எவ்வளவோ கொடுமைகளை இழைத்திருக்கிறார்கள் என்று துணிந்து நான் கூறுவேன். ஆனால் , பிராமணர்கள் அல்லாதவர்கள் மீது சாதி அமைப்பைத் திணித்தல் என்பது அவர்களுடைய துணிச்சலுக்கு அப்பாற்பட்டது. 

சாதி முறைகளைத் திணிக்க பிராமணர்கள் தங்கள் சொல் வளம் கொண்ட தத்துவங்களின் மூலம் துணைபோயிருக்கலாம். ஆனால்,  அவர்களால் நிச்சயமாக தங்களுடைய திட்டத்தைத் தங்கள் எல்லையைத் தாண்டி உந்தித் தள்ளியிருக்க முடியாது.”   

இதே உரையில், மனு உருவாக்கிய மிகப் பெரிய ஆபத்தையும் அவர் குறிப்பிடுகிறார்:

“மனு நீதி இறந்தாலும், மனு மறக்க முடியாத வண்ணம் எல்லோருடைய நெஞ்சிலும் நீக்கமற நிறைந்திருப்பான் என்பது எவ்வகையிலும் உயர்வு நவிற்சி அல்ல. ஏனெனில், ஒரு மனிதனின் எழுத்தாணியினாலேயே ஒரு வர்க்கத்தை எழுநிலை மாடத்தின் மேல் ஏற்றிவிடும் பொருட்டு, மற்றொரு வர்க்கத்தை மிருகங்களின் நிலைக்குத் தள்ளி, அதை ஏங்கச் செய்த வர்க்கம் எத்தகையதாக இருக்கக் கூடும்? 

மனு எல்லா மக்களையும் அடக்கி ஆளும் கொடுங்கோலனாய் இருந்தாலொழிய தன் பரிபாலனத்தை இந்த அளவு அநியாயமான முறையில் நடைமுறைப்படுத்த அவன் அனுமதித்திருக்க மாட்டான். அவனுடைய நிறுவனங்களை மேலோட்டமாகப் பார்த்தால்கூட இதை எளிதில் உணரலாம். நான் மனுவை மிகக் கடுமையாகச் சாடுகிறேன் என்று தோன்றலாம். ஆனால், அவனுடைய ஆவியைக் கொல்லக்கூட எனக்குப் போதுமான சக்தி இல்லை என்றே நான் உறுதியாகக் கூறுவேன். உடலற்ற சூட்சம வடிவிலான ஆவியாக அவன் வாழ்கிறான். இன்னும் நெடுங்காலத்துக்கு வாழ்ந்திருக்குமாறும் வேண்டப்படுகிறான்; அப்படி வாழ்வான் என்றே நான் அஞ்சுகிறேன்.” 

பிராமணர்களிடமே அகமணமுறை பிறந்ததாகச் சொல்லும் அம்பேத்கர், அவர்களிடமிருந்தே ஏனையோருக்கும் அகமணமுறை பரவியதாகவும் அதுவே சாதியப் பரவலாக்கலுக்கு வழிவகுத்ததாகவும் குறிப்பிடுகிறார். சாதியின் மையமாக அம்பேத்கர் சுட்டிக்காட்டுவது அகமணமுறையை. பெரியாரும் அதையே குறிவைத்தார். சாதியின் உயிர்நாடி உறைந்திருக்கும் இடம் அகமணமுறை என்பதாலேயே, சாதியை மறுக்கும் புறமணமுறையைச் சாதி ஒழிப்புக்கு எதிரான ஒரு முக்கியமான ஆயுதமாக அவர் கையில் எடுத்தார். காந்தியும் பின்னாளில் இதை உணர்ந்தார். அதனால்தான், தலித் அல்லாதவர்கள் - தலித்துகளிடையே நடக்கும் திருமணங்களுக்கு மட்டுமே தன்னுடைய ஆசி உண்டு என்று அறிவித்தார்.

அப்படியென்றால் , காலமெல்லாம் காந்தி , அம்பேத்கர், பெரியார் பெயர்களை உச்சரிப்பதையும் சாதி ஒழிப்புக்கு எதிராகப் பேசுவதையும்விட முக்கியமான காரியம் அல்லவா, அகமணமுறையை  அழித்தொழிப்பது? 

நமக்குள் இருக்கும் மனுவை, நம்முடைய சுயசாதியை அழித்தொழிக்க வாழ்க்கையில் நம் ஒவ்வொருவருக்கும் காலம் அதற்கான வாய்ப்பை அளிக்கும்போது, நாம் என்ன செய்கிறோம்? அம்பேத்கர் அஞ்சிய வகையிலேயே, இன்றைக்கும் மனுவின் வாழ்க்கை தொடர்கிறது, நம்முடைய உடல்களின் வழியாக. நாம் அன்றைய மனுவைப் பற்றி மட்டும் பேசிக்கொண்டு, நமக்குள் வாழும் மனுவைத் தப்பவைக்க முடியாது.

சாதியை ஒழிக்க முடியுமா? பெரிய சவால்தான். ஏனெனில், உளவியல்ரீதியாக, வலியவர்களைவிடவும் பலவீனர்களுக்கே சார்ந்து நிற்கப் பின்னணி தேவைப்படுகிறது. அவரவர் சுய அடையாளங்களில் தொடங்கி பண்பாட்டு அடையாளங்கள் வரை சாதிகளில் நிலைகொண்டிருப்பதாக ஆழமாக நம்பப்படும் இந்த நாட்டில், சாதியை அழிக்க முடியுமா? கொடூரமான இந்தச் சாதியக் கட்டுமானத்துக்கு எதிராகத் திரள்வதும், அதிகாரத்தை நோக்கி நகர்வதும்கூடச் சாதி அடிப்படையிலான ஒன்றுபடல் மூலமாகவே நடக்கும் இந்த நாட்டில், சாதியை அழிக்க முடியுமா?

நம் தலைமுறையில் அல்ல; இன்னும் பல தலைமுறைகளுக்கு சாதி ஒழிப்பு  சாத்தியம் இல்லை என்றே நினைக்கிறேன். ஆனால், சாதி அழிப்பை நோக்கிய பயணம் முக்கியம். சுயசாதி விமர்சனமும் சுயசாதி  அழித்தொழிப்பும் அதன் அடிப்படைக் காரியங்கள். 

மனசாட்சியைத் திறந்து நாம் பேச முயலுவோம் என்றால், இன்றைக்கு மிக அரிதாக, விரல் விட்டு எண்ணிவிடத் தக்க அளவில் பொதுத் தளத்தில் வலுவாக ஒலிக்கும் சுயசாதி விமர்சனக் குரல்கள் பிராமணர்களுடையவை என்பதை  ஒப்புக்கொள்வதில் நமக்குத் தயக்கம் இருக்க முடியாது. சமகாலத் தமிழகத்தில் பார்ப்பனியத்துக்கும் பிராமணர்களுக்கும் எதிரான, வலுவான அரசியல் குரலாக ஒலிக்கும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் மருதையன், வீராச்சாமி இருவரும் பிறப்பால் பிராமணர்கள். ஊடகங்களில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், பார்ப்பனியத்துக்கு எதிராகப் பேசிவரும் ஊடகவியலாளர்கள் சின்ன குத்தூசி, ஞாநி இருவருமே பிறப்பால் பிராமணர்கள். மருதையனைப் போல, சின்ன குத்தூசியைப் போல நான் பிராமண சாதியைத் தாண்டி, என்னுடைய சாதியையோ, பிராமணர் அல்லாத ஏனைய சாதிகளையோ எதிர்த்துப் பொதுத் தளத்தில் இன்றைக்குப் பேசவோ, எழுதவோ முடியுமா? எங்கேனும் அதற்கான இடம் இருக்கிறதா? அப்படிப் பேசினாலோ, எழுதினாலோ குறைந்தபட்சம் அது சகித்துக்கொள்ளவாவதுபடுமா? 

நான் சாதி இல்லை என்று சொல்லி என் குழந்தைகளை வளர்க்கப்போவது இல்லை. அப்படிச் சொல்வது பெரிய ஏமாற்று வேலை. நான் அவர்களிடம், இந்த நாட்டின் சகல கட்டுமானங்களும் சாதியை உள்ளுக்குள் ஒளித்துவைத்திருப்பதைச் சொல்வேன். காந்தியையும் பெரியாரையும்  அம்பேத்கரையும் படிக்கச் சொல்வேன். என்னுடைய சாதியின் சகல அயோக்கியத்னங்களையும் இழிசெயல்களையும் சொல்வேன். அவர்களுடைய முன்னோர்களால் பல நூற்றாண்டு பாவம் அவர்களுடைய தலை மேல் ஏற்றப்பட்டிருப்பதைச் சொல்வேன். சாதியற்ற சமூகத்தை நோக்கி அவர்களுடைய தந்தையும் தாயும் ஒரு அங்குலமேனும் அடி எடுத்துவைத்ததைச் சொல்வேன். அவர்கள் தங்கள் வாழ்வில், மேலும் சில அடிகளேனும் எடுத்துவைத்து, அந்தப் பயணத்தைத் தொடர வேண்டும் என்று கோருவேன்!

- 2007

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com








சாவர்க்கர் ராஜன் குறை பி.ஏ. கிருஷ்ணன்அரசின் திணிப்பு நடவடிக்கைவிவசாய அமைப்புகள்பாரத ஒற்றுமை நடைப்பயணம்நகரங்களுக்காகக் கிராமங்கள் வேண்டும்காங்கிரஸ் வளர்ச்சிஎலும்பு மஜ்ஜைஅருஞ்சொல் குஹாபுல்புல் பறவைபஞ்சாபின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைகள்உமர் அப்துல்லா உரைவணிகச் சந்தைபஜாஜ் பல்ஸர்கிகாகுஎதிர்கட்சிகள்தயாரிப்புவிழித்தெழுதலின் அவசியமா?கேசிஆர் எழுச்சிதாமஸ் பெய்ன்கெட்டதுமந்திர்ஸரமாகோ நாவல்களின் பயணம்பிரச்சாரங்கள்வாக்குப்பதிவு இயந்திரத்தை நம்பவைக்க சில யோசனைகள்காருண்யம்காந்தி ஏன் தேவை என்பதற்கு 10 காரணங்கள்சமூகப் பிரதிநித்துவம்திருநாவுக்கரசர் பேட்டிஆவின்கட்சித்தாவல்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!