கட்டுரை, தொடர், தமிழ் ஒன்றே போதும் 5 நிமிட வாசிப்பு

சாதி நோய்க்கு அருமருந்து

பெருமாள்முருகன்
15 Apr 2023, 5:00 am
2

நான் பதிப்பித்த ‘சாதியும் நானும்’ நூல் 2013இல் வெளியாயிற்று. அந்நூலின் வயது இப்போது பத்தாண்டுகள். ஆண்டுக்கு ஒரு பதிப்புக்கு மேலாக இதுவரை பன்னிரண்டு பதிப்புகள் வெளியாகியுள்ளன. சாதி சார்ந்த தம் அனுபவங்களை முப்பத்திரண்டு பேர் வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்ட கட்டுரைகளின் தொகுப்பு அது. நூலைப் பற்றிப் பெருந்தேவி எழுதிய கட்டுரை மிகவும் முக்கியமானது. இன்னும் பலரும் கட்டுரையாகவும் மதிப்புரையாகவும் வெவ்வேறு தளங்களில் எழுதியுள்ளனர். நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பும் ‘பிளாக் காஃபி இன் ஏ கோகோனட் ஷெல்’ (Black Coffee in a Coconut shell) என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது. மொழிபெயர்த்தவர் அம்பை. 

சொற்கள் அல்ல அனுபவங்கள்

தமிழ்நாட்டின் சாதிகள் பலவற்றைப் பற்றி இந்நூல் மூலமாகவே தாம் அறிந்துகொண்டதாகவும் பல்வேறு நடைமுறைகள் தமக்குப் புதிதாக இருந்ததாகவும் அம்பை என்னிடம் கூறியுள்ளார். இந்நூலை மொழிபெயர்க்கும் காலத்தில் நாமக்கல்லுக்கு வந்து ஒருவாரம் தங்கியிருந்தார். கட்டுரையாளர் ஒவ்வொருவரையும் நேரில் சந்தித்துத் தம் ஐயங்களைக் கேட்க வேண்டும் என்று விரும்பினார்.

பெரும்பாலான கட்டுரையாளர்கள் நேரில் வந்து சந்தித்தனர். மின்னஞ்சல் மூலமாகவோ தொலைப்பேசி வாயிலாகவோ ஐயம் கேட்டுத் தெளிவது இயலும்தான். ஆனால், நேரில் பார்த்துப் பேச வேண்டும் என்பது அவரது ஆழ்ந்த விருப்பமாக இருந்தது. சலூனில் இருக்கும் சுழல் நாற்காலியில் அமர்ந்து முடிவெட்டிக்கொள்ளும்போது சாதி காரணமாகப் பாதியில் இறக்கிவிடப்பட்ட மு.ஆனந்தனுக்கு ஒரு சுழல் நாற்காலி வாங்கித் தர விரும்பினார். அந்தளவு கட்டுரைகளில் அவர் ஆழ்ந்திருந்தார். 

எனக்குமே இந்த நூல் மீது ஆர்வம் அதிகம். என் பணிகளில் முதல் வரிசையில் இந்நூலை வைத்துப் போற்றுகின்றேன். காரணங்கள் பல. தமிழ்ச் சமூகத்தின் மீது அவநம்பிக்கை ஏற்படும் போதெல்லாம் இந்நூலை எடுத்து ஏதேனும் ஒரு கட்டுரையை வாசிப்பேன். நாம் நினைப்பது போலல்ல, நம்பிக்கை கொள்வதற்கு அனேகக் காரணங்கள் இருக்கின்றன என்று தோன்றும். தெம்பாவேன். சாதியின் கொடுங்கரம் ஒவ்வொருவரையும் பிடித்திருக்கிறது என்றாலும் கல்வி கற்ற தலைமுறையினர் அதிலிருந்து விடுபடவே விரும்புகின்றனர். முப்பத்திரண்டு பேரில் ஒருவர்கூடச் சாதியைப் போற்றி ஒருவரியும் எழுதவில்லை. கட்டுரையாளர்களில் பெரும்பாலானோர் 1980களில் பிறந்தவர்கள்.

அவர்கள் பெற்றோர், முன்னோருடன் ஒப்பிடும்போது கல்வியாலும் பணியாலும் வெவ்வேறு சாதியினருடன் நட்பாக இருப்பவர்கள். சாதி கடந்து நல்ல நண்பர்கள் தமக்கு இருப்பதைப் பலரும் பதிவுசெய்துள்ளனர். கிராமத்திலிருந்து முதல் தலைமுறையாக வெளியே வரும் இவர்கள் சாதிக் கட்டுக்களுக்கு உட்பட்டுப் படும் துன்பங்களையும் இழப்புகளையும் மனத்துயர்களையும் வெளிப்படுத்தியுள்ளனர். வெறும் சொற்களால் அல்ல, தம் அனுபவங்களை விவரிப்பதன் மூலமாக இந்த வெளிப்பாட்டைச் சாத்தியப்படுத்தியுள்ளனர்.

ஒளிவுமறைவானதா சாதி?

இந்நூல் வந்தபோதும் சரி, இப்போதும் சரி வாசிப்போரில் பலர் “மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான் இதில் தங்கள் அனுபவங்களைப் பதிவுசெய்துள்ளனர். இதேபோலத் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதி சார்ந்தும் அனுபவங்களைப் பதிவுசெய்ய வேண்டும். அதற்கு முயலுங்கள்” என்று எனக்கு ஆலோசனை சொல்வார்கள். ஆலோசனை வழங்குவதற்கும் அறிவுரை சொல்வதற்கும் சளைக்காதவர்கள் நாம். எதையும் பிறர் தலைமேல் சுமத்திவிட்டுத் நாம் சுகமாக வாழ்வது எப்படி என்பதை நன்கு கற்றவர்கள். “எனக்கு இதுதான் சாத்தியப்பட்டது. உங்கள் பகுதிக்கு நீங்கள் பொறுப்பெடுத்து ஒரு நூல் கொண்டுவாருங்கள்” என்று சொல்வேன். மழுப்பலே பதிலாக இருக்கும். அப்படிச் சொல்பவர்கள் குறைந்தபட்சம் தம் அனுபவங்களை மட்டும் பதிவுசெய்திருந்தால்கூட இன்னொரு நூல் உருவாகியிருக்கும். சொல்லுதல் யார்க்கும் எளிய. சமீபத்தில் வெளியான திருக்குமரன் கணேசனின் ‘கறி விருந்தும் கவுளி வெற்றிலையும்’ நூல் ஒன்றுதான் இவ்வகைப் பதிவுகளைக் கொண்ட நூல். 

‘சாதியும் நானும்’ நூலுக்குக் கிடைத்த வரவேற்புக்குக் காரணம் அனுபவ அடிப்படையில் சாதியைப் பற்றிப் பேசியதுதான். அன்றாட வாழ்வில் சாதி சார்ந்த நிகழ்வுகள் இல்லாத நாளில்லை. ஒருநாளின் நிகழ்வுகளைத் தொகுத்தால் குறைந்தபட்சம் ஒன்றாவது சாதி சார்ந்த அனுபவமாக இருக்கும். ஒவ்வொரு சாதிக்கும் சமூகப் படிநிலையில் ஒவ்வொரு இடம் இருக்கிறது. அதற்கேற்பவே அனுபவங்கள் ஏற்படுகின்றன. ஆகவே, கட்டுரையாளர் ஒவ்வொருவரும் எந்தச் சாதியைச் சேர்ந்தவர் என்பது கட்டுரையின் ஏதாவது ஓரிடத்தில் வெளிப்படையாக வரும்படி செய்தோம். சாதி ஒருபோதும் ஒளிவுமறைவானது அல்ல. எழுத்தில் ஏன் மறைக்க வேண்டும்? 

தம் சாதியை வெளிப்படையாகச் சொல்லும்போதே பிற சாதியினருடனான உறவு நிலைகளைப் பேச முடியும். அப்படிப் பேசும்போது முடிந்தவரைக்கும் தனிமனிதர்கள் பாதிக்கப்படாத வகையில் ஊர்ப் பெயர், மக்கள் பெயர் ஆகியவற்றைக் கூறாமல் தவிர்த்தோம். சாதி பார்க்கும் குணமுடைய ஒருவர் பெயரைக் குறிப்பிட்டு எழுதினால் ‘நான் அப்படியல்ல’ என்று அவர் தன்னிலை விளக்கம் தரக்கூடும். ‘நான் அப்படியல்ல’ என்று ஒருவர் சொல்வாரேயானால் அவர் மனதில் ‘சாதி பார்ப்பது தவறு’ என்னும் எண்ணம் இருக்கிறது என்றே நான் எடுத்துக்கொள்வேன். என்றாலும் அத்தகைய விளக்கம் கூடினால் கட்டுரையாளர்களின் சமூக உறவு பாதிக்கப்படும் என்னும் நோக்கில் பெயர்களைத் தவிர்த்தோம். 

அப்படியும் கண்ணுக்கு மீறி ஒருசில பெயர்கள் வந்துவிட்டன. ஒரு கட்டுரையில் தம் பெயர் இடம்பெற்றதைச் சுட்டிக்காட்டி எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அது அவருக்கு வருத்தம் தருவதாகவும் பொதுத் தளத்தில் சாதிரீதியான அடையாளம் தனக்கு நன்மை செய்யாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். வருத்தம் தெரிவித்தேன். கட்டுரையாளர் தன் ஆசிரியர் என்றும் அவர் மீது தனக்கு அளவற்ற மதிப்பு இருப்பதாகவும் தெரிவித்தார். தன் வருத்தத்தை ஆசிரியருக்குச் சொல்ல வேண்டாம் என்றும் நீங்களாகவே பெயரை நீக்கிவிடுங்கள் என்றும் அன்போடு கேட்டுக்கொண்டார். நான் நெகிழ்ந்துபோன தருணம் அது. அடுத்த பதிப்பில் அதைச் செய்தேன்.  

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

சிந்திக்கச் சொன்னவர் பெரியார்

பெருமாள்முருகன் 01 Apr 2023

எழுத்து என்றொரு வைத்தியம் 

இந்தத் தொகுப்புக்கான கட்டுரையை எழுதிய பிறகு தாம் குற்றவுணர்விலிருந்து விடுபட்டதாகத் தெரிவித்தோர் உண்டு. வேளாண் சாதியைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தம் நண்பர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்வதில் மிகப் பெரிய தடுமாற்றம் உண்டு. கல்லூரிக் காலத்தில் உடன் பயிலும் நண்பர் வீட்டுக்கு ஏதாவது ஒரு தருணத்தில் கூட்டமாகச் செல்வது வழக்கம். ஊர்த் திருவிழா அப்படிப்பட்ட முக்கியமான தருணம். திருமணம் உள்ளிட்ட விஷேசங்களும் அப்படியானவை. 

பெற்றோரோ தாத்தா பாட்டிகளோ சாதி பார்ப்பவர்களாக இருப்பார்கள். வீட்டுக்கு வருவோரிடம் சாதியைத் தயக்கமில்லாமல் விசாரிப்பார்கள். சாதியை விசாரிக்கவில்லை என்றாலும் அவர்கள் நடந்துகொள்ளும் முறை மிகவும் மோசமானதாக இருக்கும். வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டார்கள். இலையில்தான் உணவு பரிமாறுவார்கள். இச்சூழலில் அழைத்துச் சென்றவர் குற்றவுணர்வுக்கு ஆளாவார்; விருந்தினராகச் சென்றவர் மனம் புண்படுவார். இத்தகைய சம்பவங்கள் நூலில் பல உள்ளன. சாதி நோய்க்கு எழுத்து அருமருந்தாக இருக்கிறது.

ஒருவரின் சாதியை அறிவதற்கு நம் மக்கள் கையாளும் வழிமுறைகள் சுவாரசியமானவை. சாதி என்னும் சொல்லைத் தவிர்த்துவிட்டு இனம், வர்ணம், பிரிவு என்னும் சொற்களை எல்லாம் கையாள்வார்கள். ஊர், தெரு, உறவினர்கள் என விசாரித்து முடிவுசெய்வார்கள். பெயருக்குப் பின்னால் சாதியைப் போட்டுக்கொள்வது அநாகரிகம் எனக் கருதிக் கழற்றிவிட்டோம். அதேபோல ஒருவரின் சாதியைக் கேட்பதும் அநாகரிகம் என்னும் கருத்து எல்லோரின் மனதிலும் ஏறியுள்ளது ஒருவகையில் நல்ல விஷயமே. அறிந்துகொள்ள மறைமுக ஆயுதங்களைப் பிரயோகிக்கிறார்கள். இது எப்போது ஒழியுமோ தெரியவில்லை.

சாதியை அறிந்துகொள்ள முயலும் ஒருவரின் கேள்விகளையும் அதை எதிர்கொள்பவரின் பதில்களையும் கொண்ட கட்டுரை ‘பீ திங்கற மாதிரி.’ எழுதியவர் ஆ.சின்னதுரை. இந்தக் கட்டுரைக்கு ஏராளமான வாசகர்கள். ஏனென்றால், ஒவ்வொருவரும் ஏதோ ஒரு தருணத்தில் எதிர்கொள்ள நேரும் சம்பவம் இதில் உள்ளது. கட்டுரையாளர் பதில் தரும் கோணம் எல்லோருக்கும் உவப்பானதாக உள்ளது. இப்படி இந்நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரை பற்றியும் பேசப் பல விஷயங்கள் உள்ளன. 

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

ராமாயணம் இலக்கியமா; புனித நூலா?

பெருமாள்முருகன் 18 Mar 2023

அந்த ஊரும் இந்த ஊரும்

அன்றாட வாழ்வில் நம் சாதியை அறியும் நோக்கிலும் தம் சாதியை வெளிப்படுத்திக்கொள்ளும் எண்ணத்திலும் நடக்கும் சம்பவங்களுக்குக் குறைவேயில்லை. பிறரைப் புண்படுத்துமோ என்றெல்லாம் பெரும்பாலானோர் யோசிப்பதே இல்லை. இன்று நடந்த நிகழ்வு ஒன்று. இப்போது கோடைகாலம். நாமக்கல் சாலைகளில் கொஞ்ச தூரத்துக்கு ஒன்றாகக் கம்மங்கூழ் தள்ளுவண்டிக் கடைகள் இருக்கின்றன. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கடந்து ஓரிடத்தில் இருந்த கடையில் வண்டியை நிறுத்தினேன். அருகில் உள்ள கிராமத்தில் இருந்து வந்து கணவன் மனைவி இருவர் கடை நடத்திக்கொண்டிருந்தனர். இருவருக்கும் ஐம்பது வயதுக்கும் மேலிருக்கும். கம்மங்கூழும் மோரும் நல்ல மணமாக இருந்தன. கெட்டியான கம்மஞ்சோறு. புளிக்காத மோர். நறுக்கிய வெங்காயம் தூவியதும் வெயிலுக்குக் குடிக்க இதமாக இருந்தது. 

“ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் இருக்கும் கடைகளில் குடித்திருக்கிறேன். அதைவிட உங்கள் கடை கம்மங்கூழ் மிகவும் நன்றாக இருக்கிறதம்மா” என்று பாராட்டாகச் சொன்னேன். உடனே அந்தம்மா “அவுங்கெல்லாம் அந்தவூர்க்காரங்க. அப்படித்தான் செய்வாங்க. நாங்க இந்த ஊர். நன்றாகச் செய்வோம்” என்று வேறுபடுத்திப் பேசத் தொடங்கிவிட்டார். அந்த ஊரில் பெரும்பான்மையாக வசிப்பது ஒரு சாதி. இந்த ஊரில் பெரும்பான்மையாக வசிப்பது இன்னொரு சாதி. ஆக அந்த ஊர், இந்த ஊர் என்பது வெறுமனே ஊரைக் குறிப்பதல்ல. தமிழ் இலக்கணத்தில் ‘ஊர் சிரித்தது’ என்பதை ஆகுபெயர் என்பார்கள். ஊர் எப்படிச் சிரிக்கும்? ஊரில் உள்ள மக்கள் சிரித்தனர் என்று பொருள். ஊர் என்பது ஊரில் உள்ள மக்களுக்கு ஆகிவருகிறது; ஆகவே, இது இடவாகுபெயர் என்று விளக்கம் சொல்வதுண்டு. 

கம்மங்கூழ்க் கடை அம்மா சொன்னதில் ஊர் என்பது நேரடியாக மக்களுக்கு ஆகிவரவில்லை. முதலில் சாதிக்கு ஆகிவருகிறது; பின்னர் அச்சாதியைச் சேர்ந்த மக்களுக்கு ஆகிவருகிறது. இதைத் தமிழ் இலக்கணம் ‘இருமடியாகுபெயர்’ என்று கூறும். ஊருக்கும் மக்களுக்கும் இடையில் சாதி வந்து நின்றுகொள்கிறது. என் தமிழாசிரியர் மூளைக்குத்தான் இந்த இலக்கணக் குறிப்பெல்லாம். அந்த அம்மாவைப் பொருத்தவரை ஊரும் சாதியும் பிரிக்க முடியாதவை. தன் சாதியைச் சேர்ந்தவர்கள் நன்றாகச் செய்பவர்கள்; வேறொரு சாதியைச் சேர்ந்தவர்கள் அப்படியல்ல. இதுமாதிரி நம் அன்றாட நிகழ்வுகளை நினைவுகூர்ந்து பார்த்தால் சாதி சார்ந்த சம்பவங்கள் எத்தனையோ! 

தொடர் உரையாடல் அவசியம்

சாதி குறித்து அரசியல், சமூகவியல் அடிப்படையில் கோட்பாடுகளை முன்னிறுத்திப் பேசுதல் பொதுவான நடைமுறை. இலக்கியத் தளத்தில் அனுபவத்தை மையமாகக் கொண்டு அன்றாட வாழ்வில் சாதி எப்படியெல்லாம் தொழிற்படுகிறது என்று பேச வேண்டும். அதுதான் தேவை. அன்றாடத்தைப் பேசுவதன் மூலமாகவே சாதியை நுட்பமாகப் புரிந்துகொள்ள முடியும். எல்லாச் சாதியினரும் தம் அனுபவங்களை வெளிப்படையாகப் பேச வேண்டும். 

அனுபவப் பதிவுகள் சாதியைப் புரிந்துகொள்ள பெருந்தரவுகளாகப் பயன்படுபவை. சாதியைத் தக்கவைப்பதில் ‘வெளி (இடம்)’ எவ்வாறு முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை இக்கட்டுரைகள் தெளிவாக முன்வைக்கின்றன. அடுத்த நிலையில் உணவு, புழங்கு பொருட்கள் ஆகியவை வருகின்றன. இவற்றைக் குறித்துப் பரவலான உரையாடல் நிகழ வேண்டும். உரையாடல் நிகழ்வதற்கு அன்றாடத்தின் கணங்கள் பெரிதும் பயன்படுபவை. 

தொடர் உரையாடல் சாதி ஒழிப்பை நோக்கிச் செலுத்தும். இடஒதுக்கீடு, சாதி மறுப்புத் திருமணம் உள்ளிட்டவை சாதி ஒழிப்புக்கு எவ்வாறு பங்கு வகிக்குமோ அதைவிடவும் கூடுதலாகப் பொதுவெளி உரையாடல் பங்கு வகிக்கும். அன்றாடத்தின் கணம் ஒவ்வொன்றிலும் சாதிப் பார்வை எப்படிச் செயல்படுகிறது என்பதை விவாதிப்பதன் மூலம் அத்தகைய கணங்களை ஆரோக்கியமானதாக மாற்ற முடியும். 

விமர்சனமும் சுயவிமர்சனமும் உரையாடல் மூலமாகவே சாத்தியப்படும். கற்றோர் ஒவ்வொருவரும் சாதி சார்ந்த தம் அன்றாட வாழ்வனுபவங்களைப் பதிவுசெய்ய வேண்டும். கட்டுரையாவோ நூலாகவோ உரையாகவோ அவற்றைப் பதிவாக்கலாம். அவற்றின் மூலம் பொதுவெளியில் சாதி சார்ந்த ஓர் உரையாடலை காத்திரமாக முன்னெடுக்க முடியும். அதற்கான சான்றுதான் ‘சாதியும் நானும்’ நூல்.

 

தொடர்புடைய கட்டுரைகள்

கலை அறிவியல் கல்லூரிகளுக்கு அரசின் கடைக்கண் பார்வை கிடைக்குமா?
சிந்திக்கச் சொன்னவர் பெரியார்
ராமாயணம் இலக்கியமா; புனித நூலா?
சாதியைத் தவிர்ப்பது எப்போது சாத்தியமாகும்?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பெருமாள்முருகன்

பெருமாள் முருகன், பேராசிரியர், எழுத்தாளர். ‘அர்த்தநாரி ஆலவாயன்’, ‘பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.


2

2

1


1


பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Rajendran Muthu   1 year ago

I would like to read the book in English. Soon will happen.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

P.Saravanan   1 year ago

‘சாதியும் நானும்’ என்ற தலைப்பிலான புத்தகத்தை, அதன் முதல் பதிப்பு வந்த சமயத்திலேயே வாங்கிப் படித்துள்ளேன். அதில் வந்த கட்டுரைகள் அனைத்துமே அவரவரின் சொந்த அனுபவங்களின் வெளிப்பாடுகள்..நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களின் மனக்குமுறல்கள். இதன் பிண்ணியில் இப்புத்தகத்திற்கு கிடைத்துவரும் வரவேற்பைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஏழை எளிய மக்கள், குறிப்பாக படிநிலைச் சமூகத்தின் அடிநிலையில் உள்ளவர்கள் எந்த அளவு வெகுளிகளாகவும், ஏமாளிகளாகவும் இருந்துள்ளார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக, ஒரு கட்டுரையாளர், தன்னுடைய தாத்தா, பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர் வீட்டில் கறிச்சோறு போட்டதற்காக தனக்குச் சொந்தமான் நிலத்தைக் எழுதிக்கொடுத்துவிட்டு வந்தார் என்று எழுதியிருப்பார். நிலம் அதிகாரத்தின் அடையாளம் என்பதை உணராத மக்களாக இருந்த காரணத்தால் எளிதாக ஏமாற்றப்பட்டார்கள். இது போன்ற பல அனுபவங்களின் தொகுப்பே இப்புத்தகம்.

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

பொங்கல் கொண்டாட்டம்மீண்டெழட்டும் அதிமுகநிதியமைச்சர்புரட்சிஒரு காந்தியின் வருகையும் ஒரு காந்தியின் புறப்பாடுமஅஞ்சலி கட்டுரைகனடாபென்சிலின்நியாயமற்ற வரிக் கொள்கைமீனாட்சியம்மன் கதைகல்லூரிசமஸ் ஜெயலலிதாவாய்நாற்றம் ஏற்படுவது ஏன்?மில்மாபண்டிட்டுகள் மீதான வெறியாட்டம்சிறப்புச் சட்டம்இளபுவ முகிலன் பேட்டிஅரசு செய்யாததால் நாங்கள் செய்கிறோம்: ஜெயமோகன் பேட்கே.சி.வேணுகோபால்யூனியன் பிரதேசங்கள்சோழர்கள்பதிற்றுப்பத்துசமஸ் பதில்பெரும்பான்மையினம்உப்புப் பருப்பும்கட்சித்தாவல் தடைச் சட்டம்அணுக்கருதமிழ்ப் பிராமணர்கள் துரத்தப்பட்டார்களா?ஜாக்கி அசேகாஜெனீவா உடன்படிக்கை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!