கட்டுரை, அரசியல், வரலாறு 7 நிமிட வாசிப்பு

ராஜாஜி விடுத்த எச்சரிக்கை

ராமச்சந்திர குஹா
29 Apr 2022, 5:00 am
1

ந்திய அரசியலில் பாஜக ஆதிக்கம் செலுத்திவரும் இன்றைய காலகட்டத்தைப் போல,  காங்கிரஸும் ஆதிக்க சக்தியாக இருந்த காலகட்டத்தில், ஒரே கட்சியின் மேலாதிக்கமானது ஜனநாயகத்துக்கு எவ்வளவு பெரிய ஆபத்து என்று ராஜாஜி  என்றென்றும் பொருந்திவரக்கூடிய கட்டுரைகளை எழுதியிருக்கிறார். 

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட முதுபெரும் தலைவரான ராஜாஜி, மகாத்மா காந்தி - ஜவாஹர்லால் நேரு ஆகியோருக்கு நெருக்கமான சகாவாகத் திகழ்ந்தவர்; மத்தியிலும் மாநிலத்திலும் மிக உயர்ந்த பதவிகளை வகித்தவர். தன்னுடைய மாஜி சகாக்களின் தலைமையின் கீழ் - தான் ஒரு காலத்தில் இருந்த காங்கிரஸ் கட்சி குறித்தும், அக்கட்சியின் மேலாதிக்கம் காரணமாக நாடு செல்லும் திசை பற்றியும் அவருக்கு நாளுக்கு நாள் ஏமாற்றமே ஏற்பட்டது. சுதந்திர தினத்தையொட்டி 1957 ஆகஸ்டில் ஒரு பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் தன்னுடைய ஏமாற்றங்களை அவர் விவரித்திருந்தார்.

ஜனநாயகத்தின் இரு அம்சங்கள்

ராஜாஜியின் கட்டுரை இப்படித் தொடங்குகிறது: ‘நாடாளுமன்ற ஜனநாயகம் வெற்றிகரமாகச் செயல்பட இரண்டு அம்சங்கள் முக்கியம்; முதலாவது, அரசின் லட்சியங்கள் குறித்து நாட்டின் அனைத்து வர்க்க மக்களிடையேயும் மனதளவில் உடன்பாடு இருப்பது அவசியம்; இரண்டாவதாக, இரண்டு பெரிய அரசியல் கட்சிகள் மட்டுமே இருக்கும் ஜனநாயக நடைமுறை அவசியம்; நாட்டின் பெரும்பான்மையான வாக்காளர்கள் மாற்றத்தை விரும்பும்போது அரசு நிர்வாகப் பொறுப்பை இன்னொரு கட்சி ஏற்கும் அளவுக்கு வலுவாக இருப்பது முக்கியம்; ஒரு கட்சியே தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் அரசுக்கு எதிரான கருத்துகள் வலுவிழந்து, அமைப்புரீதியாக திரட்டப்படாத மக்களிடமும் அதிக முக்கியத்துவம் இல்லாத குழுக்களிடையேயும் கரைந்துவிடும். அந்தக் குழுக்களாலும் மக்களாலும் ஏதோ சில காரணங்களுக்காக ஒன்றாக இணைந்து செயல்பட முடியாது; அந்த நிலையில் அரசாங்கமானது ஜனநாயகப் பண்பை இழந்து சர்வாதிகார அரசாகிவிடும்!’

இந்தக் கட்டுரை எழுதப்பட்டபோது காங்கிரஸ் தொடர்ந்து பத்தாண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்துகொண்டிருந்தது. அது மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியே தொடர்ந்தது.

நிர்வாகத்தில் காங்கிரஸ் காட்டிய மெத்தனம், ஆணவம் ஆகியவற்றைக் கவனித்த ராஜாஜி பின்வருமாறு எழுதினார்: ‘ஒற்றைக்கட்சி ஆட்சி என்ற ஜனநாயக முறையில், வெகு விரைவிலேயே தனக்குள்ள பொறுப்பின் முக்கியத்துவத்தை, அந்த ஒற்றைக்கட்சி உணரத் தவறுகிறது. நாட்டின் நிலையைப் பார்க்க முடிகிறது - அதனால் உரிய நடவடிக்கையை, உரிய நேரத்தில், உரிய வகையில் எடுக்க அதனால் முடிவதில்லை; ஒரு பிரச்சினையின் எல்லா பக்கங்களையும் அலசிப் பார்க்கவும் இயல்வதில்லை. இதுதான் இன்றைய அரசின் நிர்வாக நிலை!’

‘ஒரே கட்சி மேலாதிக்கம் செலுத்தும்போது, நாடாளுமன்றத்தைவிட அது முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பாக மாறுவது தவிர்க்க முடியாதது. கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துகளுக்கேற்ப தலைவர் முடிவெடுப்பார். இதைப் பார்க்கும்போது பகுதியளவுக்காவது சர்வாதிகாரம் தடுக்கப்படுவதைப் போலத் தெரியும். ஆனால், தலைவர் மிகப் பெரிய செல்வாக்கும் அதிகாரமும் பெற்றவர் என்றால், சர்வாதிகாரப் போக்கு தடுக்கப்படாமலும் போகலாம். முக்கிய முடிவுகளை மூடிய கதவுகளுக்குள் அமர்ந்து விவாதித்தே எடுக்கிறார்கள் என்றால்கூட எதிர்க் கருத்தை வலியுறுத்தும் அளவுக்கு கட்சிக்குள் நிலைமை இருக்காது. எந்தவிதத் தடையும் இல்லாமல், கலப்படமற்ற சர்வாதிகாரத்துக்கான இயக்கவியல் அங்கே செயல்படத் தொடங்கிவிடும்.'

அன்றும் இன்றும்

காங்கிரஸால் ஆளப்பட்ட இந்தியாவின் நிலை குறித்து ராஜாஜி அன்றைக்கு எழுதியது, பாஜகவால் ஆளப்படும் இன்றைய இந்தியாவுக்கும் வெகுவாகப் பொருந்துகிறது. மத்திய அரசை ஆள்வதில் அறுதிப் பெரும்பான்மையுள்ள வலுவுடன் இருந்தாலும், முக்கியமான பல மாநிலங்களில் அந்தக் கட்சியின் ஆட்சி இல்லாமல் இருப்பதால் அதன் சர்வாதிகார ஆசை ஓரளவுக்காவது கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆனாலும், ஜவாஹர்லால் நேருவைவிட தனக்கு அதிக அதிகாரத்தையும் செல்வாக்கையும் பெற்றுவிடத் துடிக்கிறார் மோடி. 1950களில் நினைத்துக்கூடப் பார்த்திருக்க முடியாத - நவீன பிரச்சார இயந்திரங்கள் மூலமும், துதிபாடும் கட்சிக்காரர்களின் உதவியுடனும் தனக்கென்று தனி அடியார் கூட்டத்தை ஏற்படுத்திக்கொள்ள முயல்கிறார். நேரு செய்ததைவிட, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஒத்துழைப்போடு ஜனநாயக அமைப்புகளின் முக்கியத்துவத்தைக் குறைத்தும் அடிபணிய வைத்தும் திட்டமிட்டுச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் மோடி.

முந்தைய கட்டுரை எழுதிய ஆறு மாதங்களுக்குப் பிறகு, இந்திய ஜனநாயகம் குறித்து ராஜாஜி இரண்டாவது கட்டுரையை எழுதினார். 'சுதந்திரமான சிந்தனை தேவை' என்று அதற்குத் தலைப்பிட்டார்.

ராஜாஜி எழுதினார், ‘ஜனநாயகத்தில், சிந்திக்கும் பொறுப்பையும் அரசின் செயல்களை எடைபோடும் கடமையையும் மக்கள் சுயமாக மேற்கொள்ளாத வரையில் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றக்கூடிய எந்த ஜனநாயக அரசியல் கோட்பாடும் திருப்திகரமாகச் செயல்பட முடியாது. மக்கள் தாங்களாகவே சிந்திப்பது, எந்தவித நெருக்குதலுக்கும் ஆளாகாமல் சுயமாக முடிவுக்கு வருவது என்றில்லாமல் ஆட்சியாளர்கள் குறித்து அவர்களுடைய அடிவருடிகளால் சொல்லப்படுவதையே கிளிப்பிள்ளைகள் போல தாங்களும் எதிரொலிக்கின்றனர். அந்த வார்த்தைகளுக்கு என்ன பொருள், அவற்றால் ஏற்படக்கூடிய விளைவுகள் எப்படிப்பட்டவை என்பதைக்கூட அறியாதவர்களாக இருக்கிறார்கள்!’

ராஜாஜியின் கட்டுரையில் காணப்படும் இந்தக் கண்டனங்கள் இன்றைய இந்தியாவுக்குப் பெருமளவில் பொருந்துகிறது. நேருவுக்கும் காங்கிரஸுக்கும் 1950களில் கிடைக்காத ஊடக வசதிகளும் தகவல் தொடர்பு வசதிகளும் நிலைமையை மேலும் மோசமாக்கிவிட்டன.

ஊடகங்களின் இழிநிலை

தில்லியிலிருந்து வெளியாகும் பிரபல பத்திரிகைகளின் நடுப்பக்கக் கட்டுரைகளில் மத்திய அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் துதிபாடுவதையே நோக்கமாகக் கொண்டு எழுதுகின்றனர். ஒருகாலத்தில் மக்களால் மிகவும் மதிக்கப்பட்ட, கௌரவமான பத்திரிகைகள் இவை. 

ஆங்கில மற்றும் இந்திய காட்சி ஊடகங்கள் அரசின் நிலையை அப்படியே அடியொற்றி தொடர்ந்து அடிமைத்தனத்தோடு புகழ்ந்துவருவதைப் பாருங்கள். மோடியின் தனிப்பட்ட செல்வாக்கை வலுப்படுத்துவதற்காக இந்திய ஜனநாயகத்தையே மலினப்படுத்தும் வகையில் தரம் தாழ்ந்து செயல்படுவதையும் காணுங்கள். அவற்றில் வரும் காணொளிக் காட்சிகள் பிரதமரை கடவுளுக்கு இணையாகச் சித்தரிக்கின்றன. மக்கள் சுயமாக எதையும் சிந்திக்காமலும் எடை போடாமலும் இருக்க அரசு ஊடகங்களும் கட்சியின் பிரச்சார இயந்திரங்களும் இப்படி இடைவிடாமல் பிரச்சார வெள்ளத்தில் மக்களை ஆழ்த்துகின்றன.

சிந்தனை எப்படி இருக்க வேண்டும்?

1958 மே மாதம் ராஜாஜி இன்னொரு கட்டுரையில் எச்சரிக்கிறார்: ‘அச்சமோ, நடுக்கமோ கலவாத சுதந்திரமான சிந்தனை அவசியம். விமர்சிப்பதற்குப் பதிலாக ஆட்சியாளர்களின் பாதாரவிந்தங்களில் பணிந்து விழுவதும், அடிமைகளைப் போல போற்றிப் பாடுவதும் ஜனநாயகத்துக்கே தனித்துவமான நோயை வெகுவாக பரப்பிவிடும். சிறந்த ஜனநாயகத்துக்கே உரித்தான சுதந்திரமான விமர்சனங்களும் கண்டனங்களும் இல்லாததால் பிழைப்புவாதமும், சூழ்ச்சியான நடவடிக்கைகளும், நேர்மையற்ற செயல்களும் மலிந்துவருகின்றன. இத்தகைய விஷ விதைகள் பரவாமல் இயற்கையாகத் தடுக்கவல்லது இயல்பான எதிர்க்கட்சிகள்தான். இந்த அறிகுறிகளையெல்லாம் போக்க, நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பாற்ற எதிர்க்கட்சி வலுவாக இருப்பது அவசியம்.’

இந்திய ஜனநாயகம் கவிழ்ந்துவிடாமல் தனது பாதையில் தொடர்ந்து பயணிக்க எதிர்க்கட்சி எப்படி இருக்க வேண்டும் என்ற இலக்கணத்தையும் கூறுகிறார் ராஜாஜி. ‘ஆட்சியில் உள்ள கட்சியைப் போலவே சிந்திக்காமல், மாற்றி யோசிக்கும் எதிர்க்கட்சி தேவை. நாட்டின் பொதுவான நலன் கருதி அரசு எடுக்கும் நடவடிக்கைகளையே மேலும் தீவிரமாக்க நினைக்கும் எதிர்க்கட்சி கூடாது. ஏழைகளின் வாக்குகளைக் கவர்வதற்காக, பதவியில் இருக்கும் அரசைவிட அதிக சலுகைகளை, பரிசுகளை வழங்குவோம் என்று எதிர்க்கட்சி வாக்குறுதி தரக் கூடாது. அதற்குப் பதிலாக, இந்தியாவை நல்ல ஜனநாயகக் குடியரசு நாடாக உருவாக்க, பகுத்தறிவுக்குப் பொருந்தும் செயல்கள் மூலம் நல்லாட்சியைத் தருவோம் என்று சொல்லும் எதிர்க்கட்சியே தேவை!’

இதற்கு அடுத்த ஆண்டு தன்னுடைய 80வது வயதில், தன்னுடைய போதனைகளை அப்படியே பின்பற்றக்கூடிய புதிய (எதிர்) கட்சியைத் தொடங்கினார் ராஜாஜி. அதற்கு ‘சுதந்திரா’ எனப் பெயர் சூட்டுகிறார். நாட்டு மக்களின் தனிப்பட்ட சுதந்திரங்களைக் காப்பதற்காக கட்சியைத் தொடங்கியிருப்பதாகவும் ‘பர்மிட்-லைசென்ஸ்-கோட்டா’ ராஜ்யத்துக்கு எதிராக மக்களைத் திரட்ட கட்சி தொடங்கியதாகவும் அறிவிக்கிறார். காங்கிரஸ் கட்சியின் பொருளாதாரக் கொள்கையையும் வெளியுறவுக் கொள்கையையும் எதிர்த்த ராஜாஜி, மேற்கத்திய ஜனநாயக நாடுகளுடன் இந்தியா நெருக்கமான உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்றார். அதே வேளையில், அனைத்து மதங்களுக்கிடையிலும் ஒற்றுமை நிலவ வேண்டும், சிறுபான்மையினரின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்ற நேருவின் உறுதியை அப்படியே ஏற்றார்.

சுதந்திரா கட்சி காங்கிரஸுக்கு சித்தாந்த தளத்திலும் அறிவுத் தளத்திலும் கடுமையான சவால்களை ஏற்படுத்தியது. இருந்தும் அந்தக் கட்சியாலும் பிற எதிர்க்கட்சிகளாலும் காங்கிரஸ் கட்சியின் அரசியல் செல்வாக்கைத் தகர்க்க ஒன்றும் செய்ய முடியவில்லை. ராஜாஜி தன்னுடைய தலைவிதியை நொந்தபடி கூறினார்: ‘தேர்தல் பிரச்சாரங்களுக்கு ஆகும் பெரும் செலவும், தேர்தல் நிதியைப் பெறுவதில் ஆளும் கட்சிக்கு இருக்கும் ஏகபோக வாய்ப்பும்தான் அந்தக் கட்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகத் திகழ்கின்றன!’

இந்தக் கருத்தும் இப்போது பாஜகவுக்கு அப்படியே பொருந்துகிறது. அரசு இயந்திரத்தைக் கையில் வைத்திருக்கும் பாஜக அறிமுகப்படுத்திய தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள் மூடுமந்திரமானவை. 

இப்படி ஒரே கட்சியின் செல்வாக்கால் ஏற்படக்கூடிய குறைகளையும் பாதுகாப்பற்ற தன்மைகளையும் சுட்டிக்காட்டினாலும் நேருவும் அவருடைய சகாக்களும் நல்லவர்கள் என்பதை ராஜாஜி ஒப்புக்கொள்கிறார். இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் குறித்து அப்படிக் கூறிவிட முடியாது. பாஜகவின் மோடியும் அமித் ஷாவும் இரக்கமற்றவர்கள்; பேரினவாதிகள். நேரு காலத்திலிருந்த காங்கிரஸைவிட இப்போதைய ஆளும் கட்சி ஜனநாயக விழுமியங்களுக்கும் ஜனநாயக நடைமுறைகளுக்கும் அதிக விரோதமானவை.

அடுத்தடுத்து இரண்டு முறை ஆட்சிக்கு வந்த பாஜகவின் தவறான நிர்வாகத்தால் நாடும் மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பாஜகவுக்கு மூன்றாவது முறையாக ஆள வாய்ப்பளித்தால் நாடு பேரழிவைத்தான் சந்திக்க நேரும்.

1950களின் பிற்பகுதியில் நம்முடைய நாட்டுக்கு வலுவான, தீவிரமான எதிர்க்கட்சி தேவைப்பட்டது. 2020இன் தொடக்கத்தில் அப்படியொரு நிலைமை அதைவிடத் தீவிரமாக அவசியமாகிவிட்டது. ராஜாஜி கூறியதைப் போல, ஆளும் கட்சி எதைச் செய்கிறதோ அதையே செய்யாமல், வித்தியாசமாகச் செய்யக்கூடிய எதிர்க்கட்சியாக அது இருக்க வேண்டும்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

தமிழில்: வ.ரங்காசாரி

3

2





அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

மக்களிடையே அச்சம்பூபேஷ் பகேல்கால்சியம்எகிறி அடி அணுகுமுறைசாவர்க்கர் அருஞ்சொல்மின்சார சீர்திருத்தம்பத்திரிகையாளர் சமஸ்வறுமைகறுப்பர்–வெள்ளையர்எதிர்கொள்ளவிருக்கும் அபாயம்அஜீத் தோவலின் ஆபத்தான கருத்துபிரிட்டிஷ் ஆட்சிவசனகர்த்தாகாதல் திருமணங்கள்பல்கலைக்கழகங்களில் அதிகாரம்பாலஸ்தீனம்: கடந்ததும் நடப்பதும்குடியரசு கட்சிசிவராஜ் சௌகான்நடந்தது பசுமைப் புரட்சி அல்ல; பேராசைப் புரட்சி!: பிற்போக்குத்தனம்பரம்பரைக் கோளாறுஅன்வர் ராஜா சமஸ் பேட்டிதிரைப்படக் கலைஆண்ட்ரூ சாரிஸின் சுட்டல்பணமதிப்பிழப்புஅபிராமி அம்மைப் பதிகம்ஸ்டாலின்: மீண்டும் தலைவரானார்ஹண்டே அருஞ்சொல் பேட்டிஅர்த்தம்வானவியல்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!