சமஸ் கட்டுரை, ஆளுமைகள் 10 நிமிட வாசிப்பு

இந்தி ஆதிக்கரா ராஜாஜி?

சமஸ் | Samas
09 Dec 2021, 5:00 am
4

ஒரு பேட்டி. நான் எடுக்கவில்லை. இங்கே கொடுப்பவனாக இருந்தேன். இந்திய அரசியல் தொடர்பில் பேச்சு சுவாரஸ்யமாகச் சென்றபோது பேட்டி கண்ட நண்பர், “ஒரு காந்தியரான நீங்கள் பெரியாரை எப்படி ஒன்றுசேர்த்துப் பேசுகிறீர்கள்?” என்று கேட்டார். என்னிடம் வழக்கமாகக் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று இது. நான் விவரித்தேன். மொழிக் கொள்கையைப் பற்றிப் பேச்சு வந்தபோது  "அண்ணாவை மட்டும் அல்லாது ராஜாஜியையும் இங்கே நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும்" என்றேன். பேட்டி கண்டவருக்கு மயக்கம் தட்டாத குறை. “ராஜாஜியும், அண்ணாவும் நேர் எதிரான மொழிக் கொள்கையைக் கொண்டவர்கள் இல்லையா? நீங்கள் உங்கள் இஷ்டத்துக்குத் தலைவர்களை இணைத்து ஒரு பாதையை வகுத்துக்கொள்ளலாமா?” என்றார். நான் சொன்னேன், “நீங்கள் நம்புவது முழு முழுமையான உண்மை இல்லை. தமிழ்நாட்டின் மொழிக் கொள்கையை நாடு முழுமைக்கும் முன்னெடுக்கும்போது ராஜாஜியையும் அண்ணாவையும் நாம் இணைத்து முன்னெடுக்க முடியும்!” அவரால் நம்பவே முடியவில்லை.

இந்திய வரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட ஆளுமைகளில் ஒருவர் ராஜாஜி என்ற எண்ணம் எனக்கு உண்டு. இப்படி நான் சொல்லும்போது, ராஜாஜி தவறே இழைக்காதவர் என்றோ, அவருடைய கருத்துகள் எல்லாவற்றையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்றோ பொருள் இல்லை. எல்லா ஆளுமைகள் மீதும் சில விஷயங்கள் சார்ந்து விமர்சனங்களை முன்வைப்பதுபோல ராஜாஜி சார்ந்தும் விமர்சனங்களை முன்வைக்க முடியும். அதேசமயம், பல விஷயங்களில் தன்னுடைய நிலைப்பாடுகளை திருத்திக்கொள்பவராகவும், மாற்றிக்கொள்பவராகவும், செழுமைப்படுத்திக்கொள்பராகவும் ராஜாஜி இருந்திருக்கிறார். அவர் அப்படி மாற்றிக்கொண்ட முடிவுகளில் ஒன்றுதான் இந்தியுடனான உறவு. பலரும் இன்று நம்புகிறபடி இந்தியின் தூதுவர்களில் ஒருவராக இருந்த வரலாறு மட்டும் இல்லை; இந்தி ஆதிக்கத்துக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்ட வரலாறும் ராஜாஜிக்கு உண்டு.  

இந்தியைக் கட்டாயமாக்கியவர் 

சென்னை மாகாணத்தின் பிரதமராக 1937இல் பதவியேற்ற ராஜாஜி, பள்ளிகளில் இந்தியைக் கட்டாயம் ஆக்கியதும், அதுவே இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்துக்கு வித்திட்டதும், அவருடைய ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் அளவுக்குச் சென்றதும் நடந்தது ராஜாஜி வாழ்வின் முன்பகுதி வரலாறு.

பிராந்தியத்தில் 125 பள்ளிகளில் இந்துஸ்தானியைக் கற்பிக்க ராஜாஜியின் அரசு உத்தரவிட்டிருந்தது. இந்தப் பள்ளிகளில் ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பு மாணவர்கள் ஹிந்துஸ்தானி பயில வேண்டும். தேர்வு எழுத வேண்டும். அதேசமயம், இந்தி தேர்வில் அடையும் தோல்வி அடுத்த வகுப்பு மாணவர்கள் செல்வதைப் பாதிக்காது என்பதாக ராஜாஜி கொண்டுவந்த ஏற்பாடு இருந்தது. சுதந்திரம் நோக்கி இந்தியா நகர்ந்துகொண்டிருந்த காலம் அது. டெல்லியுடன் உரையாட தென்னிந்தியர்களுக்கு இது உதவும் என்று எண்ணினார் ராஜாஜி. 

சென்னையில் 1920லேயே இந்தி பிரசார சபை ஆரம்பிக்கப்பட்டிருந்தது. விரும்புவோர் பயில ஏற்கெனவே வழி இருக்கிறது; இப்படிப் பள்ளிக்கூடங்களில் எல்லோருக்குமாக இந்தியைக் கொண்டுவருவது இந்தியத் துணைக்கண்டம் முழுமைக்கும் இந்தியைத் திணிக்க விரும்பும் சக்திகளுக்கு உதவிடுவதாக அமையும்; மேலும், மாணவர்களுக்குக் கூடுதல் சுமையாகவும், தாய்மொழியைப் படிப்படியாகப் பின்னுக்குத் தள்ளுவதாகவும் அமையும் என்ற விமர்சனங்களை ராஜாஜி பொருட்படுத்தவில்லை. இந்தியை அமலாக்குவதில் ராஜாஜி காட்டிய தீவிரம், பெரியாரைத் தீவிரமான எதிர்ப்பு நோக்கி நகர்த்தியது. இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் வழியாகவே பெரும் தலைவராக உருவெடுத்தார் அண்ணா.

முக்கியமான வேறுபாடு 

பள்ளிக்கூடங்களில் இந்தியைக் கொண்டுவந்தார், மூர்க்கமாகச் செயல்படுத்த முனைந்தார், ரத்தப் போராட்டத்துக்கு வழிவகுத்தார் என்றாலும், பிந்தைய இந்தி ஆதிக்கர்களுடன் ராஜாஜியை வரிசைப்படுத்திவிட முடியாது என்றே தோன்றுகிறது. ஏனென்றால், ‘இந்தி - இந்து - இந்தியா’ பாதையின் ஒரு பகுதியாக ராஜாஜி இந்தியை முன்னெடுக்கவில்லை. 

காந்தியின் வழியில் இந்துஸ்தானியையே ராஜாஜி முன்னெடுக்க விழைந்தார்  உருது உள்பட பல இந்திய மொழிகளின் சொற்களையும் கலந்திருந்தது இந்துஸ்தானி. மேலும், மாணவர்கள் கற்பதற்கு தேவநாகரி - உருது இரு வடிவங்களும் வாய்ப்பாக அறிவிக்கப்பட்டிருந்தன. அதோடு, இந்தியாவின் ஆட்சிமொழி எது என்ற இடத்தில் எப்போதும் ஆங்கிலத்துக்காக வழக்காடுபவராகவே ராஜாஜி இருந்தார். எல்லாவற்றையும்விட முக்கியமாக இந்தி பேசாத மாநில மக்கள் எதிர்கொள்ளும் பாதிப்புக்கு ராஜாஜியே ஒரு சாட்சியமாகவும் இருந்தார்.

ராஜாஜிக்கு இந்தி தெரியாது. 1922 கயை காங்கிரஸ் மாநாட்டுக்குப் பிறகு, நாடு முழுவதும் அறியப்படுபராக உருவெடுத்த ராஜாஜியை அரசியலில் பிரதான இடம் நோக்கி நகர்த்த காந்தி பிரியப்பட்டார். நாட்டின் பெரும் பகுதி மக்களைக் கொண்ட இந்தி பிராந்தியங்களுடன் உரையாட ராஜாஜி இந்தியை அறிந்திருப்பது அவசியம் என்று கருதினார் காந்தி. தன்னுடைய மகன் தேவதாஸ் காந்தியை சென்னைக்கு அனுப்பியபோது, ராஜாஜிக்கு இந்தி கற்க உதவுவதும் அவருடைய நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.

நண்பர் சுரேந்திர குப்தாவிடம் முறையாக இந்தி கற்றுக்கொள்ள மாணவர் ஆனார் ராஜாஜி. எடுபடவில்லை. “பாடத்தைக் கேட்காமல், இந்தி மொழியமைப்பைப் பற்றி கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டுக்கொண்டே இருப்பார். சள்ளை பிடித்த மாணவர்” என்றார் குப்தா.

ராஜாஜி இந்தி கற்றுக்கொண்ட பாடில்லை. இதனூடாக ராஜாஜியின் மகள் லக்ஷ்மியும், தேவதாஸ் காந்தியும் காதல் வயப்பட்டு, திருமணம் செய்துகொண்டதன் வழி காந்தியும், ராஜாஜியும் சம்பந்திகள் ஆனார்கள். காந்தி தன்னுடைய மனசாட்சியின் காவலராக ராஜாஜியை மதித்தார் என்பதை யாவரும் அறிவார்கள். 1927இல், ‘ராஜாஜி என்னுடைய வாரிசு’ என்று சொன்ன காந்தி 1942இல், ‘ஜவாஹர்லால்தான் என்னுடைய வாரிசு, ராஜாஜி இல்லை’ என்று சொல்ல இந்தியும் ஒரு காரணம் என்பதை ராஜ்மோகன் காந்தி எழுதியிருக்கிறார். 

இந்தியாவின் மொழி ஆங்கிலம்

இந்தி பிராந்தியத்துடன் பேச இந்தியைக் கற்பது அவசியம், கற்பிப்பது அவசியம் என்ற எண்ணம் ராஜாஜிக்கு இருந்தபோதிலும்கூட இந்தி மீது  அவருக்குப் பெரிய மதிப்பீடுகள் ஏதும் இல்லை. சுதந்திர இந்தியாவின் ஆட்சிமொழியாக ஆங்கிலம் இருக்க வேண்டும் என்றே விரும்பினார். காங்கிரஸுக்குள் இதற்காகக் கடுமையாக வாதிடுபவராகவும் அவர் இருந்தார். ஆங்கிலம், இந்தி இரண்டையும் பயன்படுத்துவது என்று குவாஹாட்டி காங்கிரஸ் மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானத்தை ஆங்கிலத்தை முன்னிறுத்தி ராஜாஜி எதிர்த்தார்.  

இந்தியாவின் ஆட்சிமொழியாக இந்தி ஒரு நாள் ஆகிவிடும் என்று கணித்தார் ராஜாஜி. ஆட்சிமொழியாகப் பயன்படுத்தும் அளவுக்கு இந்தி மொழி வளரவில்லை; வெளிப்பாட்டில் துல்லியம் இந்தியில் சாத்தியம் இல்லை என்றும் பிற்பாடுதான் இந்தியை அறிந்துகொண்ட அளவில் கருதினார். “இந்தியைப் பள்ளிக்கூடங்களில் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். இந்திய அரசின் ஆட்சிமொழியான ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தியை அந்த இடத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்பதற்கு எதிராகவும் இருக்கிறேன். மக்கள் இதை முரண்பாடான செயல் என்கின்றனர். உண்மையில் இல்லை. எல்லோரும் ஒரே மொழியைப் பேச வேண்டும், படிக்க வேண்டும் என்று உத்தரவிடுவதன் மூலம் நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது. மக்களை மொழி அடிப்படையில் பிரித்து அவர்களிடையே பகையுணர்வை ஏற்படுத்தவே இது வழிவகுக்கும். வினோபாஜி போன்றவர்கள் இதைப் பற்றிப் பேச வேண்டும். செல்வம் நல்லது என்று நீங்கள் நினைத்தால் அந்த செல்வத்தைப் பகிர்ந்து கொடுக்க வேண்டும். செல்வத்தைவிட முக்கியமானது மொழி” என்று மோனிகா ஃபெல்டனுக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிடுகிறார்.

இந்தியும் ஆங்கிலமும்: ஒப்பீடு

ஆங்கிலம் ஏன் இந்தியாவின் ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என்பதற்கு, தீர்க்கமான காரணங்களைக் கொண்டிருந்தார் ராஜாஜி. சுதந்திரத்துக்குப் பின்னர் இந்த எண்ணம் மேலும் ராஜாஜியிடம் வலுவடைந்தது. ‘இந்திய நாட்டின் மொழியே ஆட்சிமொழியாக இருக்க வேண்டும்; ஆங்கிலம் அந்நிய மொழி’ என்று இந்தியை முன்மொழிபவர்களை மறுத்து 1958இல் ‘ஸ்வராஜ்யா’ இதழில் அவர் எழுதிய கட்டுரை இந்த விஷயத்தில் அவருடைய பார்வைகளைத் தொகுத்து அளிக்கிறது.

“இந்தியாவில் ஆதிக்கம் செய்ய நாம் அனுமதித்த வெளிநாட்டு மக்களின் மொழியாகத்தான் நம் நாட்டுக்குள் ஆங்கிலம் நுழைந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அது நுழைந்த இடம் அதற்கு அந்நிய மண்ணாக இருந்தாலும் ஆழமாக வேருன்றியிருக்கிறது. இதன் மூலம் எல்லா நவீன அறிவுக்கும் நவீன முன்னேற்றங்களுக்கும் நுழைவாயிலாக அது இருக்கிறது… 

லௌகீகத் தளத்தில் நமது எல்லா நம்பிக்கைகளும் நவீன அறிவின் முன்னேற்றங்களை மையமிட்டிருக்கின்றன. அந்த நம்பிக்கைகளோடு ஆங்கிலத்தை நெருக்கமாகத் தொடர்புபடுத்துவது தவிர்க்க இயலாதது. ஆங்கிலம் கொண்டுவந்த, கொண்டுவரக்கூடிய பரந்த புத்தறிவுதான் அதனிடம் இந்தியாவில் மக்கள் பரந்த அளவில் கொண்டிருக்கும் பற்றுக்குக் காரணம். என்ன மாதிரியான நவீன அறிவை இப்போதோ எதிர்காலத்திலோ இந்தி கொண்டுவரும்? மொழிபெயர்ப்பைச் சார்ந்து மட்டும், அதுவும் அறிவியல் துறையில் சிறந்தவர்களாக இல்லாமல் வெறுமனே சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பவர்களைச் சார்ந்து இருக்க முடியுமா? 

உண்மை என்னவென்றால், புதிய அறிவானது அதற்கே உரித்தான மொழியைக் கொண்டுவருகிறது. அறிவியல் துறைகளில் கண்டுபிடிப்புகளையும் இதர துறைகளில் முக்கியப் பங்களிப்பையும் செய்யும் நபர்களின் மொழிதான் புதிய அறிவைக் கொண்டுவரும். வெற்று தேசப்பற்று உணர்வு எழுப்பும் கோரிக்கைகளெல்லாம் இதை அங்கீகரித்து இதற்குத் தங்களை ஒப்புக்கொடுக்க வேண்டும்…

இந்திய ஒன்றியத்தின் மொழியாக இந்தி தேர்ந்தெடுக்கப்பட்டால் அதற்கும் வங்கம், மெட்ராஸ் அல்லது மற்ற இந்தி-பேசாத மாநிலங்கள் ஆகியவற்றின் மொழிகளைப் பேசும் மக்களுக்கும் இடையே எந்த அடையாளமும் இருக்காது. இது கருத்தொற்றுமைக்கோ எதிர்ப்புக்கோ உரிய விஷயமன்று. மொழியானது அடையாளம் சம்பந்தப்பட்ட கேள்வியாகும். 

இந்தியாவில் உள்ள மக்கள் எல்லோரும் எளிதில் கற்றுக்கொள்ளக்கூடிய மொழி இந்தி என்பது பிரமையே. இந்தியாவில் ஒரே மாதிரி இல்லாத மொழிகளைப் பேசக்கூடிய கோடிக்கணக்கானோருக்கு இந்தியைக் கற்றுக்கொள்வது எந்த வகையிலும் எளிதானது அல்ல. 

இந்தி சார்பாக முன்வைக்கப்படும் கோரிக்கையில் நுட்பமான பிரமை ஒன்று உள்ளது. இந்தியைப் பேசும், தங்களைச் சுற்றி இந்தி பேசப்படும் சூழலில் இருக்கும் மக்கள் ஒரு நாள் தங்கள் தாய்மொழிதான் இந்தியாவின் அனைத்து மக்களின் தாய்மொழியாக ஆகும் என்று நம்புகிறார்கள்...

இந்தி பேசாத மக்கள் மீது இந்தியை இந்தியாவின் ஆட்சிமொழியாகத் திணிப்பதனால் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் காலப்போக்கில் தங்களுக்குத் தாங்களே காயம் ஏற்படுத்திக்கொள்கிறார்கள்… 

இதுதான் மிகப் பெரிய பொய், அதாவது இந்தியை நாட்டின் ஆட்சிமொழியாகக் கொண்டுவந்தால் ஒருமைப்பாடு சாத்தியமாகும் என்ற எண்ணம். சாத்தியமானது என்னவென்றால் போராட்டங்களும், அதிருப்தியும், கருத்து வேற்றுமையும்தானே தவிர ஒருமைப்பாடு அல்ல. அரசியல்ரீதியில் தவிர்த்தல் மூலமாகவோ அரசியல் அழுத்தம் மூலமாகவோ பகைமையுணர்வை வெல்லலாம்; இவ்வகையில் மனங்களுக்கிடையில் வலிதான் உற்பத்திசெய்யப்படுமே தவிர ஒருமைப்பாடு அல்ல. நீதி என்ற கொள்கை புறக்கணிக்கப்படும்போது, எளிதில் ஆறாத புண்ணை நாம் ஏற்படுத்திவிடுகிறோம். இதைச் சுட்டிக்காட்டுபவர் குற்றவாளியல்ல, புண்ணை ஏற்படுத்துபவர்தான் குற்றவாளி… 

இந்தியை ஆட்சிமொழியாக்கும் திட்டத்திலிருந்து ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்றும் அரசமைப்புச் சட்டத்தின் பாகம் 17 நீக்கப்பட  வேண்டும் என்று நான் கோருவதில் என்னுடன் கைகோத்துக்கொள்ள வேண்டும் என்றும் வடக்கத்திய சகோதரர்களை நான் கேட்டுக்கொள்கிறேன். சிந்தனை முதிர்ச்சி பெறாதபோது உருவாக்கப்பட்டதுதான் பாகம் 17. அதை நீக்குவது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும் உணர்வுரீதியான ஒற்றுமைக்கும் மிகவும் அவசியமான செய்கையாகும்!”

உணர்வுரீதியிலும் பிணைந்திருந்தார்

ராஜாஜி நடைமுறை நோக்கில் மொழிக் கொள்கையை அணுகியதோடு அல்லாமல், உணர்வுரீதியாகவும் பிணைக்கப்பட்டிருந்தார் என்று சொல்ல முடியும். “எங்களுடைய மக்களுக்கு இந்தி அன்னிய மொழி. இந்தியாவை ஒன்றிணைக்கும் மொழி ஆங்கிலம். அது அப்படியே தொடர வேண்டும். அப்படி இல்லாவிட்டால் ஒவ்வொரு மாநிலமும் அதனதன் தாய்மொழியைப் பயன்படுத்தும். அப்புறம் இந்தியா 15 தனித்தனி தீவுகளாகிவிடும்… தங்களுடைய மொழிக்கும் பண்பாட்டுக்கும் இந்தி பெரிய ஆபத்தாகிவிடும் என்று பல தமிழர்கள் அஞ்சுகின்றனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவை இந்தியுடன் எவ்விதத் தொடர்பும் இல்லாதவை.  இந்தி என்பது இந்தோ ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது… இந்தி மொழி ஆதிக்கம் குறித்து அஞ்சுகிறவர்கள் திராவிடர்களை ஆரியர்கள் பாரம்பரியமாக ஆதிக்கம் செலுத்தியதைப் போல இதுவும் உருவெடுத்துவிடும் என்று அஞ்சுகின்றனர்” என்று பேசியவர் தன்னளவிலும் தாய்மொழியுணர்வைப் பிரதிபலிப்பவராக இருந்தார்.

காந்திக்கும் ராஜாஜிக்கும் இடையிலான கடிதப் போக்குவத்து இருவருக்கும் பொதுமொழியான ஆங்கில வழியாகவே நடக்கும். ராஜாஜிக்கு ஒருமுறை இந்தியில் கடிதம் எழுதிய காந்தி, ‘இனி இந்தியிலேயே கடிதம் எழுதுவது என்று தீர்மானித்துவிட்டேன்’ என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார். ராஜாஜி அசராமல், காந்திக்குத் தமிழில் கடிதம் எழுதி அனுப்பிவிட்டார். இதற்குப் பின் வழக்கம்போல ஆங்கிலத்திலேயே கடிதங்களை எழுதலானார் காந்தி. 

மொழியுணர்வை விளையாட்டாகப் பிரபலித்ததோடு, ராஜாஜி உக்கிரமாக பிரதிபலித்த தருணங்களும் இருந்தன. மொழிப் போராட்டம் உச்சம் அடைந்த 1965இல் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கு ராஜாஜி ஆற்றிய எதிர்வினை இது. “ஆங்கிலத்தை எக்காலத்துக்கும் இந்தியாவின் ஆட்சிமொழியாக வைத்துக்கொள்வது தமக்கு ஆழ்ந்த அவமானத்தை அளிக்கும் விஷயமாக இருக்கும் என்று லால் பகதூர் கூறியிருக்கிறார். தெற்கே வசிக்கும் எங்களுக்கு இந்தியை யதேச்சதிகார மொழியாக ஏற்றுக்கொள்வதானது அதைவிடவும் ஆழ்ந்த அவமானத்தை அளிக்கிற விஷயமாகும்.” இன்னொரு சமயம் உறுதிபடச் சொன்னார், “திரும்பத் திரும்பச் சொல்கிறேன், தேச ஒற்றுமைக்கு ஆங்கிலம் தேவை. ஆங்கிலம் நாட்டின் ஆட்சிமொழியாக நீடிக்க எனது இறுதிமூச்சு வரை நான் வாதாடுவேன். எனது நாட்டிடம் நான் கொண்டிருக்கும் அன்பு காரணமாகவே இவ்வாறு கூறுகிறேன்.”

பெரியார், அண்ணா, ராஜாஜியும் சந்திக்குமிடம்

அண்ணா தன் வாழ்வின் முற்பகுதியில் எந்த ராஜாஜியை இந்தி ஆதிக்கத்தின் நிமித்தம் எதிர்க்க நேர்ந்ததோ தன் வாழ்வின் பிற்பகுதியில், 1965இல் அதே ராஜாஜி இப்போது அண்ணாவின் பக்கம் நின்றார். வரலாற்றின் விசித்திரமாக - அண்ணா மீதான கோபத்தால் - இப்போது எதிரே நின்றார் பெரியார். போராட்டத்தில் பங்கேற்கவில்லையே தவிர, இந்தி ஆதிக்க எதிர்ப்பு நிலையில் பெரியார் உறுதிபடவே நின்றார். 1967க்குப்

பின் எப்படியும் மொழிக் கொள்கை எனும் இடத்தில் கிட்டத்தட்ட மூவரும் ஒரு புள்ளிக்கு நகர்ந்திருந்தார்கள். கூட்டாட்சிக்கான இலக்கணமாக இந்தியாவின் எல்லா மொழிகளும் ஆட்சிமொழி ஆக்கப்பட வேண்டும்; அப்படி ஆக்கப்படும் வரை ஆங்கிலமே ஆட்சிமொழியாக இருக்க வேண்டும். அதுவே எல்லாச் சமூகங்களையும் சம தொலைவில் நிறுத்துவதாகவும், சமமான போட்டிக்கும், சமமான வாய்ப்புகளுக்கும் வழிவகுப்பதாக இருக்கும் என்பதே அது!

டிசம்பர் 10 ராஜாஜி பிறந்த நாள்

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


2

2

1
பின்னூட்டம் (4)

Login / Create an account to add a comment / reply.

Padmanabhan Sahasranamam   3 years ago

1965 ல் இராஜாஜி இந்தியைக் கடுமையாக எதிர்த்த போது பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் கடுமையாகக் கண்டித்தார். விடுதலைப் பத்திரிக்கை போராட்டத்தைக் காலித்தனம் என வர்ணித்தது. காவல் துறை, ராணுவம் ஆகியவை நடத்திய வன்முறைகள், துப்பாக்கிச் சூடுகள் ஆகியவற்றை ஆதரித்தது. அப்போது பெரியார் ஆனந்தவிகடன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியின் ஒரு பகுதி. பேட்டி கண்டவர் சாவி. "அந்தக் காலத்துலே இந்தியை எதிர்த்துப் போராட்டமெல்லாம் நடத்தினீங்களே, இப்ப ஏன் சும்மா இருக்கீங்க?'' காதை வலது கையால் அணைத்து நான் சொல்வதை உற்றுக் கேட்டுக்கொண்ட பெரியார் கோபத்தை வெளியே காட்டாமல், ''அப்படியா? மன்னிக்கணும்; இப்ப இந்தி எங்கே இருக்குது? தெரியாமத்தான் கேக்கறேன். சொல்லுங்கோ?'' ''இந்திதான் ஆட்சி மொழியா வந்துட்டுதே...'' ''எங்கே வந்துட்டுது? உனக்குத்தான் இங்கிலீஷ் இருக்குதே. இந்தியா ஒண்ணா இருக்கணும்னா, பொதுவா ஒரு ஆட்சிமொழி வேணும்தானே? இந்திக்காரன் உங்களை மாதிரி இங்கிலீஷை நினைக்கலையே. இங்கிலீஷை அவமானம்னு நினைக்கிறானே. தமிழ்நாட்டுக்காரன் சொல்றபடி, இந்தியா நடக்குமா? அது ஜனநாயகமா?'' ' 'ஒரு நாளைக்கு இல்லாவிட்டால் ஒரு நாளைக்கு இந்தி வரத்தானே போகுது?'' ''நல்லாருக்குதே! ஒரு நாளைக்கு இல்லாட்டி ஒரு நாளைக்குச் சாவு வரத்தானே போகுதுன்னு எவனாவது இப்பவே போய் கிணத்துலே விழுவானா? அப்படியே ஒருவேளை இந்தி வந்ததுன்னா, உயிரோடு இருந்தா... அதை எதிர்க்கப்போறவன் நான்தானே?'' ' 'மத்திய சர்க்கார்ல உத்தியோகம் கிடைக்கிறதுக்கு இந்தி அவசியம் இல்லேன்னாலும், உத்தியோகத்துலே சேர்ந்தப்புறம் படிக்கச் சொல்றாங்களே...'' ''படிச்சிட்டுப்போயேன். தாசில்தார் உத்தியோகம் படிக்கப்போறவங்க 'சர்வே’ படிப்பு படிக்கிறதில்லையா? அந்த மாதிரி இந்தியைப் படிச்சுக்கிறது. உனக்கு இதிலே என்ன கஷ்டம்? இல்லே, நஷ்டம்? அவன் நேரத்துலே அவன் கொடுக்கிற சம்பளத்துல, நீ இன்னொரு மொழியைப் படிச்சுத் தெரிஞ்சுக்கப்போறே... இது லாபம்தானே?'' இராஜாஜியின் இந்தித் திணிப்பை முப்பதுகளில் எதிர்த்த பெரியார் பின்னர் இந்தித் திணிப்பை ஆதரித்ததும், தமிழ்ப் பண்டிதர்களையும், தமிழையும் கேலி செய்த வரலாற்று முரணையும் கட்டுரையாளர் குறிப்பிட்டிருந்தால் அன்றைய அரசியல் இன்றைய தலைமுறைக்கு மேலும் சரியாகப் புரிபட்டிருக்கும்.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Porpadham.T Thiruchitrambalam   3 years ago

திரு. சமஸ் அவர்களின் , நுண் னியல், வரலாற்று பதிவு. இதை சமகாலத்தின் தமிழ் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். மிக்க நன்றி.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

S.Neelakantan   3 years ago

ராஜாஜியின் 1958 ஸ்வராஜ்யா கட்டுரையில் மற்ற மொழிபேசு்பவர்களை இந்தியை இந்தியாவின் ஆட்சிமொழியாக ஏறறுக்கொள்ள வைப்பது இந்திய ஒற்றுமைக்கு ஊறு விழைத்துவிடும் என்பதை அவருக்கான முன் யோசனையோடும் அறிவார்ந்த வாதத் திறமையோடும் வெளியிட்டிருக்கிறார். அவர் தன் முந்தைய மொழிக் கொள்கையை மாற்றிக் கொண்டுவிட்டார் என்று மேலெழழுந்த வாரியாக நான் அறிவேனே தவிர அதற்கான காரணங்களை அறிந்திருக்கவில்லை. எங்களைப் போன்றோருக்கு அவற்றை நினைவூட்டியதற்கு நன்றி.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   3 years ago

வட இந்தியாவில் ஏற்கனவே பல நூறு மொழிகளை இந்தி அழித்துவிட்டது. போஜ்புரி பேசுபவரை இந்திக்காரன் என்று அழைக்கவைத்து கட்டுரையாளரையே திசைமாற்றிவிட்டதே மிகப்பெரிய ஆதாரம். இந்தியர்களுக்கு இரண்டு மொழிகள் போதும். ஒன்று ஆங்கிலம். இன்னொன்று தாய்மொழி.

Reply 5 2

Login / Create an account to add a comment / reply.

குடும்ப அரசியல்வைக்கம்ஆண்டிகள்தொடக்கப் பள்ளிகுத்தகைத் தொழிலாளர் நலம்: கர்நாடகம் புதிய முயற்சிடி.ஜே.எஸ்.ஜார்ஜ்ஆதீனகர்த்தர்இளையராஜா இசைக் கல்வி மையம்: ஒரு முக்கியமான முன்னெடதமிழ் வரலாறுதமிழ் முஸ்லிம்கள்புதிய மாவட்டங்கள்சருமநலம்வெகுஜன சினிமாஊர்வசி புட்டாலியாஆடி பதினெட்டுசரிவுகாலிபேஃட்போர்க் கப்பல்கடல் செல்வாக்குஇ.பி.உன்னிசெவிப்பறைஉட்கார்வதற்கான உரிமைஜிஎஸ்டிக்கு முற்றுப்புள்ளி எப்போது?எளியவர்களின் நலன் காக்க ஒன்றிய அரசு முன் வர வேண்டுஒன்றிய நிதி அமைச்சகம்பிரசாந்த் கிஷோர்குழந்தைகளுக்குத் தடுப்பாற்றல் குறைந்திருப்பதுவன்கொடுமைத் தடுப்புச் சட்டம்அப்துல் மஜீத்: ஆயிரத்தில் ஒருவர்தமிழர்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!