கட்டுரை, அரசியல், கலாச்சாரம் 5 நிமிட வாசிப்பு

கர்நாடகம்: இந்துத்துவத்தின் தென்னக ஆய்வுக் கூடம்

ராமச்சந்திர குஹா
04 Apr 2023, 5:00 am
0

ந்தியா குறித்து பிரெஞ்சு அறிஞர் ஜாக்கி அசேகா எழுதிய புத்தகம் ஒன்றை பெங்களூரு நகரின் சர்ச் வீதியில் உள்ள புத்தகக் கடையில் கடந்த மாதம் கண்டெடுத்தேன். கல்விப்புலத்துக்காக ஆராய்ச்சி நோக்கில் இருபது ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட புத்தகம் என்றாலும், இப்போதைய காலத்துக்கும் பொருந்தும் விஷயங்கள் அதில் இருக்கின்றன. 

அந்த நூலின் தலைப்பு: ‘இரண்டு நதிகளின் சங்கமம்: தென்னிந்தியாவில் முஸ்லிம்கள் இந்துக்கள்’ (At the Confluence of Two Rivers: Muslims and Hindus in South India). வட கர்நாடகத்தில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நிலவிய இனவியல் உறவுகளை மிகத் துல்லியமாகக் காட்டுகிறது இந்நூல்.

ஐரோப்பிய நாடுகளின் காலனியாக இந்தியா மாறுவதற்கு முன்னால், இங்கே இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நல்லுறவு நிலவியது என்ற கருத்திலிருந்து அசேகா மாறுபடுகிறார், இரு சமூகங்களுக்கிடையில் ‘கூட்டுக் கலாச்சாரம்’ நிலவி சுமுகமான சூழலும் அமைதியும் நிலவியது என்பது சரியல்ல என்கிறார். அதேவேளையில் இந்துக்களும் முஸ்லிம்களும் எந்தவித உரசல்களும் இன்றி அருகருகே வாழ்ந்திருக்கின்றனர் என்பதை நிறுவுகிறார்.

அன்றாட வாழ்க்கையில் இயல்பான சக வாழ்வுதான் நிலவியிருக்கிறதே தவிர, அடிக்கடி மோதல்கள் நிகழ்ந்ததே இல்லை. இரு தரப்பின் பொருளாதார வாழ்க்கையும் ஒருவர் மற்றவரைச் சார்ந்ததாகவே இருந்திருக்கிறது. இந்து வியாபாரிகள் முஸ்லிம்களுக்குப் பொருள்களை விற்றனர், முஸ்லிம்கள் தங்களுக்குத் தேவைப்பட்டதை இந்துக்களிடம் வாங்கிக்கொண்டனர்.

இரு சமூகத்தாரும் தனித்தனியாகத்தான் வாழ்ந்தனர், அவர்களுக்கிடையில் திருமண உறவுகள் கிட்டத்தட்ட இல்லவே இல்லை, நெருங்கிய நட்புகூட அபூர்வமாகத்தான் இருந்தது. இந்துக்களும் முஸ்லிம்களும் பல நூற்றாண்டுகளாகவே வீதிகளில் சந்திப்பது, சந்தைகளில் பொருள்களை வாங்குவது அல்லது விற்பது, புனிதத் தலங்களில் சந்தித்துக்கொள்வது போன்றவற்றை சாதாரணமாகவே மேற்கொண்டுள்ளனர். 

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

செழிக்கும் வெறுப்பு

ப.சிதம்பரம் 18 Apr 2022

இரு தரப்பினர் ஒரு வழிபாடு

புத்தகத்தின் ஒருபகுதி, வடக்கு கர்நாடகத்தில் இந்துக்கள் முஸ்லிம்கள் என்று இரு தரப்பினரும் சென்றுவந்த வழிபாட்டுத்தலங்கள் குறித்துக் குறிப்பிடுகிறது. சாலையோரம் இருந்த தர்காவுக்கு அந்தக் கிராமவாசிகள் அனைவருமே சென்றனர். அந்த ஊரில் வாழ்ந்த இஸ்லாமியத் துறவியை இரு தரப்பினருமே வழிபட்டனர். புதிதாக எந்த நல்ல வேலையைத் தொடங்குவதாக இருந்தாலும் முஸ்லிம்களைப் போலவே இந்துக்களும் தர்காவுக்குச் சென்று அந்தப் புனிதரை வணங்கி அவருடைய ஆசியுடன் ஆரம்பித்தனர்.

கர்நாடகப் பகுதியில் வாழ்ந்த பன்னிரண்டாம் நூற்றாண்டு சீர்திருத்தவாதி பசவண்ணர் குறித்தும் நூலில் எழுதியிருக்கிறார் அசேகா. விவசாயிகளின் வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகித்த எருதுடன் பசவண்ணரைத் தொடர்புபடுத்தும் பல தொன்மக் கதைகளும் உண்மைச் சம்பவங்களும் வரலாறாக எழுதப்பட்டுள்ளன. கர்நாடகம் வாழ் முஸ்லிம்களும், எருதுகளை பசவண்ணரின் அவதாரமாகவே கருதி மிக்க மரியாதையுடன் வழிபட்டுள்ளனர்.

ராஜாபாக் சாவர் என்பவரை இந்துக்களும் முஸ்லிம்களும் தங்களைக் காக்கவந்த காவல்தெய்வமாகவே கருதி வழிபட்டுள்ளனர். இந்துக்கள் அவரை ஞான குருவாகவும் முஸ்லிம்கள் அவரைத் துறவியாகவும் கண்டனர். அந்த ஆலயத்தின் வரலாறையும் வழிபாட்டு முறைகளையும் ஆராய்ந்த அசேகா, ராஜாபாக் சாவரை விஷ்ணுவின் இன்னொரு அவதாரமாக இந்துக்களும், அல்லாவால் அனுப்பப்பட்ட புனிதராக முஸ்லிம்களும் நம்பினர் என்கிறார்.

இல்லற வாழ்க்கையைத் துறந்த ராஜாபாக் சாவர் நல்ல மந்திரவாதியாகத் திகழ்ந்தார், சில அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். எனவே, இந்துக்கள் அவரைக் காவிப் பதாகைகள் வைத்தும் இஸ்லாமியர்கள் பச்சை நிற பதாகைகள் வைத்தும் வழிபட்டுள்ளனர்.

எதிர்வரும் தேர்தல்

கர்நாடக மாநிலத்துக்கு அடுத்து சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், அசாகேவின் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தேன். மாநிலத்தை ஆளும் பாரதிய ஜனதா கட்சி இந்தத் தேர்தலை ‘இந்துக்கள் எதிர் முஸ்லிம்கள்’ என்பதாக மாற்ற முனைந்துவருகிறது. இந்த முடிவு ஓராண்டுக்கு முன்னதாகவே எடுக்கப்பட்டுவிட்டது. ஹிஜாப் அணியக் கூடாது, ஹலால் செய்த இறைச்சியை எல்லோருக்கும் விற்கக் கூடாது, இந்துப் பெண்களை இஸ்லாமிய இளைஞர்கள் காதலிக்கக் கூடாது என்றெல்லாம் பிரச்சினைகள் ஏற்படுத்தப்படுகின்றன.

இந்த வகுப்புவாத வெறியைக் கட்சியின் நாலாந்தர ஐந்தாம்தர பேச்சாளர்கள் மட்டுமல்ல, கட்சியின் அங்கீகாரம் பெற்ற முதல்நிலைத் தலைவர்களும் மூட்டுகின்றனர். முஸ்லிம்கள் என்றாலே அஞ்சும்படியாகவும் சந்தேகப்படும்படியாகவும் வெறுப்புப் பிரச்சாரங்களைக் கட்சியின் மைய உத்தியாகவே கடைப்பிடிக்கின்றனர். 

காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களைக் கட்சி தாவ வைத்துத்தான் 2019 ஜூலையில் ஆட்சியைப் பிடித்தது பாஜக. அதற்குப் பிறகு கடந்த மூன்றரை ஆண்டுகளில் மாநில அரசின் நிர்வாகம் மக்களுடைய ஆதரவைப் பெறும் வகையில் இல்லை. எல்லாத் துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது, அரசு நிர்வாகத்தின் திறமையின்மை தொடர்ந்து வெளிப்பட்டுக்கொண்டேவருகிறது; தகவல் தொழில்நுட்பத்தின் மையம் என்று கொண்டாடப்படும் பெங்களூரு மாநகரில் அரசின் நிர்வாகச் சீரழிவால், பெருவெள்ளம் ஏற்பட்டு நகரமே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தத்தளித்தது.

தங்களுடைய நிர்வாகச் சீர்கேட்டை மறைக்கத்தான் இந்து - முஸ்லிம் மோதலை மாநில அரசு தூண்டிவிடுகிறது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். தேர்தல் வெற்றிக்காக மட்டும் இப்படிச் செய்யப்படுவதில்லை, அந்தக் கட்சியின் சித்தாந்தமே அப்படிப்பட்டதுதான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். கர்நாடக அரசியலை நீண்ட காலமாக தொடர்ந்து கவனித்துவரும் பேராசிரியர் ஜேம்ஸ் மனோர், ‘த வயர்’ பத்திரிகையில் இது பற்றி விரிவான கட்டுரை எழுதியிருக்கிறார். அதில், திட்டமிட்டும் வலுக்கட்டாயமாகவும் மக்களை மத அடிப்படையில் திரளச் செய்யும் உத்தியை பாஜக தொடர்ந்து மேற்கொண்டு வருவதை விவரித்திருக்கிறார். அந்த நடவடிக்கை இதுவரை இருந்திராத அளவுக்கு இப்போது உச்சம் பெற்றிருக்கிறது என்கிறார்.

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

ஹிஜாப்: உங்கள் முடிவு என்ன?

ப.சிதம்பரம் 24 Oct 2022

அரசியலர்களின் மதவாதப் பேச்சுகள்

தீவிரமான இந்துத்துவக் கருத்துகளை கட்சியின் தேசியத் தலைவர்கள் புகுத்தும் உத்தியை, மாநிலத்தில் சிலருக்கு கட்சிக்குள் கொடுத்த முக்கிய பதவிகளே உணர்த்துகின்றன என்கிறார். ஒன்றிய அரசில் கர்நாடகத்துக்கு ஒரு அமைச்சர் பதவியை ஒதுக்கியபோது மாநிலத்தின் முக்கிய சாதிப்பிரிவான லிங்காயத்துக்கோ ஒக்கலிகருக்கோ அதை அளிக்காமல் - சூழ்ச்சித்திறம் மிகுந்த, பேச்சில் விஷம் கக்கும் பிராமணரான அனந்த் குமார் ஹெக்டேவுக்குக் கொடுத்தது கட்சித் தலைமை; பாஜகவின் தேசிய இளைஞரணித் தலைவர் பதவியை, அனல் கக்கும் பேச்சாளரான இன்னொரு பிராமணர் பெங்களூரு தெற்கு மக்களவைத் தொகுதி உறுப்பினர் தேஜஸ்வி சூர்யாவுக்குக் கொடுத்தது.

பாஜகவின் பொதுச் செயலாளராகப் பதவி வகிக்கும் பி.எல்.சந்தோஷ், இப்படிப்பட்ட தீப்பொறிப் பேச்சாளர்தான். சமூக ஊடகங்களில் பாஜக தொடர்பாக யார் எந்தக் கருத்தைத் தெரிவித்தாலும் உடனடியாக பதில் கொடுப்பதே இவருடைய வேலை. பாஜகவின் கர்நாடகத் தலைவராக இருக்கும் நளின் குமார் காட்டீலும் இப்படி வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சாளர்தான்.

இவர்கள் அனைவரையும் இப்படி நியமித்திருப்பது ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா. அவருடைய பதவிக்கும் பொறுப்புக்கும் தாண்டி, கர்நாடக அரசியலில் அதிக கவனம் செலுத்துகிறார் அமித் ஷா. கடந்த ஆண்டின் கடைசி வாரத்தில் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை மாண்டியா நகரில் தொடங்கிவைத்த அமித் ஷா, “திப்பு சுல்தானைப் போற்றுபவர்களா, தேசபக்தர்களா யார் வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டியது கர்நாடக மக்களுடைய கடமை” என்றார்.

அவரையடுத்து மாநில பாஜக தலைவர் வாக்காளர்களுக்கு விடுத்த வேண்டுகோளில் “சாலை சரியில்லை, சாக்கடையில் தண்ணீர் ஓடவில்லை என்ற அற்ப விஷயங்களில் வாக்காளர்கள் கவனம் செலுத்தக் கூடாது, இந்துப் பெண்களை லவ் ஜிகாத் செய்யும் பிரச்சினையில் கவனம் செலுத்தி தேர்தலில் வாக்களிக்க வேண்டும்” என்றார். “ராமரைப் போற்றிப் புகழும் பஜனைகளைப் பாடுவோர்தான் இந்த மண்ணில் இருக்க வேண்டும், திப்பு சுல்தானைப் புகழ்கிறவர்கள் இந்த மண்ணில் (கர்நாடகம்) இருக்கக் கூடாது” என்று சில நாள்கள் கழித்து மீண்டும் பேசினார் காட்டீல்.

திப்பு சுல்தான் அரசியல்

படைத் தலைவராகவும் ஆட்சியாளராகவும் திப்பு சுல்தான் செய்த செயல்கள் இன்றளவும் சர்ச்சைக்குரியதாகவே பார்க்கப்படுகின்றன. இந்து ஆலயங்களுக்குக் கொடைகளை அளித்த திப்பு சுல்தான், தன்னுடைய இஸ்லாமிய ஆதரவுப் போக்கையும் வெளிப்படையாகவே காட்டினார். இந்துத்துவ வரலாற்றாசிரியர்கள் சுட்டிக்காட்டும் 18வது நூற்றாண்டு குற்றங்கள் கொடியதாகவே இருந்தாலும், அதற்காக 21வது நூற்றாண்டு முஸ்லிம்களைத் தண்டிக்க வேண்டுமா? வரலாற்றையே ஆயுதமாக்கி அப்பாவிகளைத் தண்டிப்பது நாகரிக சமுதாய நடத்தைக்கே விரோதமானது. ஆனால், இந்து வலதுசாரிகளைப் பொருத்தவரையில் நாகரிகமும் கண்ணியமும் போற்றப்பட வேண்டிய குணாதிசயங்கள் அல்லவே!

தன்னுடைய நூலின் ஆங்கிலப் பதிப்புக்கு எழுதிய முன்னுரையில் அசேகா கூறுகிறார்: “இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் கர்நாடகத்தில் பெரிய மோதல்கள் அடிக்கடி நடந்ததாக ஆதாரங்கள் ஏதுமில்லை. அன்னியர்களை வெறுக்கும் எண்ணத்தாலும் மாற்று இனத்தவர் மீதான பகைமையாலும் இப்படிப்பட்ட கருத்துகளை விதைத்துள்ளனர்.”

அசேகாவின் இந்தப் புத்தகம் எழுதப்பட்ட இருபதாண்டுகளுக்குப் பிறகும், தவறான வரலாற்றுக்குத்தான் ஆதரவாளர்கள் பெருகிவருகின்றனர், இந்துக்களுடைய வாக்கு வங்கியை உருவாக்கியது பாஜகவுக்கு அரசியல் அறுவடைக்கு நன்றாகவே பயன்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த வெறுப்பரசியலின் விளைவு அன்றாட வாழ்க்கையில் இரு வகுப்பாருக்கும் இடையில் பிளவையும் சந்தேகத்தையும் வளர்த்துக்கொண்டேவருகிறது.

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

மென் இந்துத்துவம் என்னும் மூடத்தனம்

நிகில் மேனன் 19 Aug 2022

ராமர் விளைவு

பேராசிரியர் அசேகா தனது கள ஆய்வை 1980களிலும் 1990களின் தொடக்கத்திலும் வட கர்நாடகத்தில் மேற்கொண்டார். இந்தக் காலத்தில்தான் வட இந்தியாவிலும் மேற்கு இந்திய மாநிலங்களிலும் அலையலலையாக வகுப்புக் கலவரங்கள் மூண்டன. அதனுடைய வெளிவட்ட அதிர்வுகள் தென்மாநிலமான கர்நாடகத்திலும் உணரப்பட்டது. ரத்தம் சிந்திய மோதல்களை உருவாக்கிய, பிளவு நோக்கம் கொண்ட ராமஜென்ம பூமி இயக்கத்தால் மிகப் பெரிய அரசியல் சக்தியாக பாஜக வளர்ச்சி பெற்றது.

“இந்துத்துவ சித்தாந்தவாதிகள் இந்திய வரைபடத்தை புதிய விதத்தில் வரைய ஆசைப்படுகின்றனர். ராமாயணம் தொடர்ந்து அரங்கேற்றம் கண்டுவரும் நாட்டில், அரக்கர்களை ராமர் விரட்டியதைப் போல முஸ்லிம்களை நாட்டைவிட்டே விரட்ட வேண்டும் என்று இந்துத்துவர்கள் விரும்புகின்றனர். இந்துத்துவ இந்தியாவில் முஸ்லிம்கள் தங்களுடைய மத நம்பிக்கைகளைக் கைவிட்டு இந்து மதத்தில் சங்கமிக்க வேண்டும் அல்லது வெளியேற்றப்பட வேண்டும் அல்லது மடிய வேண்டும் என்றே கருதுகின்றனர்” என்று அசேகா எழுதுகிறார்.

1990களின் இறுதியில் கர்நாடகத்தில் வகுப்பு மோதல்கள் ஓய்ந்தன. இந்த நூற்றாண்டின் முதல் இரண்டு தசாப்தங்களில் சமூக அமைதி நிலவியது. இப்போது திட்டமிட்டு பதற்றம் உருவாக்கப்படுகிறது. இஸ்லாமியத் தீவிரவாதம் மறைந்துவிடவில்லை என்றாலும், ஒன்றிய அரசில் அரசியல் ஆதிக்கம் செலுத்துவதால் பெரும்பான்மையின வகுப்புவாதம் மிகப் பெரிய அச்சுறுத்தலாக வளர்ந்துவருகிறது.

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

ஹிஜாப்: கேள்விகளே தவறு!

யோகேந்திர யாதவ் 15 Feb 2022

மதவாத உத்திகள்

பிரதமரும் ஆர்எஸ்எஸ் தலைவரும், ‘முஸ்லிம்களை நாம் அரவணைக்க வேண்டும்’ என்று எப்போதாவது பேசக்கூடும். ஆனால், ஒன்றிய உள்துறை அமைச்சர், மாநில பாஜக தலைவர், இதர முன்னணி பாஜக தலைவர்கள் தங்களுடைய பேச்சில் வலியுறுத்துவது எதையென்றால், இந்துக்கள் இந்துக்களாகத்தான் சிந்திக்க வேண்டும், முஸ்லிம்களுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்பதே.

நிர்வாகச் சீர்கேடுகளை மறைப்பதற்கான உத்தியாக வகுப்புவாத நோக்கில் பிரச்சாரம் செய்யப்படவில்லை, இது இந்துத்துவத்தின் மீதுள்ள வெறியால் வேண்டுமென்றே செய்யப்படும் பிரச்சாரமாகும். இந்து மதம்தான் மேலானது என்பதை நிலைநாட்ட வேண்டும், முஸ்லிம்களை களங்கப்படுத்த வேண்டும், பூதாகாரமாக சித்தரிக்க வேண்டும் என்பதே இந்துத்துவ சிந்தனையின் மையக்கரு.

உத்தர பிரதேசத்திலும் அசாமிலும் இதற்கு முன்னர் வென்றதைப் போல கர்நாடகத்திலும் மத அடிப்படையில் வாக்காளர்களைத் திரள வைத்து ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று பாஜக தலைமை நம்புகிறது. இந்த மாநிலத்தின் வழக்கப்படி மும்முனைப் போட்டி ஏற்பட்டால், இந்துக்களில் பாதிப்பேர் இந்து மத உணர்வோடு வாக்களித்தால்கூட பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடும் என்று கணக்குப்போடுகிறது. இந்தத் தேர்தல் உத்தி மட்டும் வெற்றிபெற்றுவிட்டால், கர்நாடகத்தில் இனி அமைதியும் வளர்ச்சியும் தொடர்வது பாதிக்கப்படும்.

 

தொடர்புடைய கட்டுரைகள்

சீருடை: அதிகாரமா, சமத்துவமா?
ஹிஜாப்: கேள்விகளே தவறு!
வகுப்பறைக்குள் வகுப்புவாதம்
ஹிஜாப்பும் மூக்குத்தியும்: துலியா கிளர்த்தும் சிந்தனைகள்
முத்தலாக் முதல் ஹிஜாப் வரை: தலைகீழாக்கிய இந்துத்துவம்
ஹிஜாப்: உங்கள் முடிவு என்ன?
செழிக்கும் வெறுப்பு
மென் இந்துத்துவம் என்னும் மூடத்தனம்
இந்துக்களுக்கு இந்துத்துவம் தருவது வெறுப்பையும் மனநோயையும்தான்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

தமிழில்: வ.ரங்காசாரி

3

2





அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரம்பாட்ஷாமின்சக்திஅரசு நடவடிக்கைஜி.யு.போப்பேரண்டப் பெரும் போட்டிசீனிவாச இராமாநுஜம்மருத்துவக் கட்டுரைகள்ராஜஸ்தான் முன்னேறுகிறதுவன்கொடுமையல்லதேர்தலில் கிடைக்குமா சுதந்திரமும் வளர்ச்சியும்?Suriyaவேலூர்ரிசர்வ் வங்கியின் சொற்சித்திரமும் உண்மை நிலையும்மரபு மீறல்கள்பெருமாள் முருகன் கட்டுரைதாமஸ் ஃப்ரீட்மன்சேரர்கள்: ஓர் அறிமுகம்போலி அறிவியல்உணவு மானியம்ஊட்டச்சத்துஐஐடிபெங்களூருபன்முகத்தன்மை உபி தேர்தல் மட்டுமல்ல...தொழிற்சாலைகள்பாஸ்மண்டாமாநிலத் தலைகள்: கமல்நாத்உப்புப் பருப்பும்உணவு அரசியல்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!