ஹிஜாப் தொடர்பாக, குந்தாபூர், உடுப்பி மற்றும் கர்நாடகாவின் சில கல்லூரிகளில் ஒரு மாணவர் குழுவிடத்து திடீரென்று வெடித்துக் கிளம்பியிருக்கும் அறச்சீற்றமும் அரசியல் செயல்பாடுகளும் சந்தர்ப்பவாதமானவை. ஹிஜாப் அணிந்திருந்த கல்லூரி மாணவியர் சிலரை, சமத்துவம் மற்றும் சீராக்கத்தின் பெயரால் தாக்கக் கிளம்பிய அந்த மாணவர் குழு பலரால் கண்டிக்கப்பட்டாலும் கர்நாடகாவின் பாரதிய ஜனதா அரசு மறைமுகமாக ஆதரித்தது. ஊடகங்களிலும் சில ஆதரவுக் குரல்கள் எழுந்தன.
இந்தப் பகுதிகளில் உள்ள கல்லூரிகள் மிகக் கண்டிப்பான மாதிரிகளைப் பின்பற்றுபவை. இக்கல்லூரிகளில் மாற்றுக் கருத்தாடல்களுக்கான திறப்புகளை உண்டாக்கும் முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியடைகின்றன. முறைசார்ந்தோ சாராமலோ இவர்களை அணிதிரட்டுவது கடினமானது. ஒழுங்குமுறைகளில் இவ்வளவு கறார்தன்மையைக் கடைப்பிடிக்கும் அமைப்புகளில் சீராக்கம் மற்றும் உடுப்பு விதிகளில் சீர்தன்மை என்பதன் உண்மையான பொருள் என்ன?
சீருடைக்கு ஆதரவாக தொடர்ந்து முன்வைக்கப்படும் வாதங்களில் ஒன்று, மாணவர்களின் பொருளாதார மற்றும் சமூகப் பின்புல ஏற்றத்தாழ்வுகளை நீக்கி அவர்களிடையே சமத்துவம் நிலவச்செய்ய சீருடைகள் அவசியம் என்பதுதான். ஆனால், நடைமுறையில் இது சாத்தியமாகிறதா?
ஆடை என்பது ஒரு குறியீடு, பல்வேறு அர்த்தங்களை உணர்த்துவது. ஆக, சீருடை எனும் குறியீடானது, சமத்துவம் எனும் அர்த்தத்தை அடைவது எங்ஙனம்? சீருடைக்கும் சமத்துவமெனும் கோட்பாட்டுக்குமிடையில் இயற்கையான, தனித்துவமான தொடர்பென்று எதுவுமில்லை. இந்தத் தொடர்புகளை நிறுவுவதும் வலியுறுத்துவதும் சமூக நெறிமுறைகளே.
பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவர்களிடையே சமத்துவத்தைச் சாத்தியப்படுத்த வேறு எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. உதாரணமாக பாடப்புத்தகங்கள், டிஜிட்டல் ஊடகப் பயன்பாடு, போஷாக்கு ஆகியன எல்லா மாணவர்களுக்கும் சமமாகக் கிடைக்க வழிசெய்வது போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம். பொருண்மையான இத்தகைய செயல்பாடுகள் சீராக்கம் என்பது சீராக்கத்திற்காக மட்டும் என்று சுருங்கிவிடாமல் சமத்துவத்தை நோக்கி கொண்டுசெல்லும் பாதையாக்குகின்றன.
ஏராளமான துறைகளில் சீருடைகள் பாவிக்கப்படுகின்றன: தேச பாதுகாப்புத் துறையில், நீதித் துறையில், தொழிற்சாலைகளில், மதக்குழுக்களில் இன்னும் பலவற்றிலும். சிறைச்சாலைகளிலும் அவை இன்றியமையாதவை. பாவிக்கப்படும் இடத்தைப் பொருத்து சீருடையின் குறியீட்டுத்தன்மை மாறுகிறது. எல்லா இடங்களிலும் அது சமத்துவத்தின் குறியீடாக இருப்பதில்லை.
கல்வி நிறுவனங்களின் சீருடைகள், மரபொழுங்கு, கண்டிப்பு, கட்டுப்பாடு (சிறைச்சாலைச் சீருடைகளில் போல) ஆகியவற்றின் குறியீட்டுப் பொருளாக இருக்கும் அளவுக்கு சமத்துவத்தின் குறியீடாக இருப்பதில்லை. மாணவர்கள் இதை நன்றாக உணர்ந்திருப்பதால் அவர்களில் பலரும்-சிறு குழந்தைகள்கூட- சீருடையை, ஒழுங்கு மற்றும் கண்டிப்புக்கான அடையாளமாகப் பார்க்கிறார்களே ஒழிய சமத்துவத்துவத்துக்கானதாகப் பார்ப்பதில்லை.
கல்வி நிறுவனங்களில் எவ்வளவுக்கு சீருடைப் பயன்பாடு வலியுறுத்தப்படுகிறதோ அவ்வளவுக்கு நிர்வாகத்தினரின் அதிகாரத்தின் வலிமை நிலைநிறுத்தம் கொள்கிறது. நம் பள்ளிகளும் கல்லூரிகளும் நிர்வாகத்தில் மட்டுமல்லாமல் பாடத்திட்டங்களிலும் இப்படியான அதிகாரவய ஒழுங்குகளுக்குக் கட்டுப்பட்டே செயல்படுகின்றன.
இங்கு செயலூக்கமிக்க விவாதங்களுக்கோ, மாற்றுக்கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் வழிகளுக்கோ இடமே இல்லை என்பதோடு படைப்பெழுச்சிமிக்க வெளிப்பாடுகளுக்கு-குறிப்பாக கலைத் துறைகளில்- ஊக்கமே கிடைப்பதில்லை. நம்முடைய கல்லூரிகள், குறிப்பாக, ஹிஜாபுக்கு எதிராக மாணவர்கள் கிளர்ச்சி செய்யும் பகுதிகளில் உள்ளவை அதிகார மையங்களாக இருக்கின்றன. அவை மாணவர்களுடைய வாழ்வின் எல்லா அம்சங்களிலும் ஆளுமை செலுத்தியே செயல்படுகின்றன. இந்த ஒழுக்கவாத இயந்திரங்களின் இன்னொரு பாகமே சீருடைகள். அவை வலியுறுத்தும் உடுப்பு ஒழுங்குகளை மீறுவதன் நேரடி விளைவு தண்டனைக்கு ஆளாவதே.
இதற்கெல்லாம் ஆச்சரியம் கொள்ள இயலாத வகையிலும், கல்வியின் லட்சியம் சமத்துவமே என்பதை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிலும் இந்த நாட்டின் கல்வியமைப்பு மாறியிருக்கிறது.
கல்விச் சூழலிலேயே சமத்துவக் கோட்பாட்டுக்கு இடமில்லாதபோது சீருடைகளால் அது திடீரென்று எழுச்சி பெறுவது எப்படிச் சாத்தியம்? கல்விக் கொள்கைகளில் சமீபத்தில் நிகழ்ந்த மாற்றங்களினால் பல்வேறு கல்வித் துறைகளிலும் சீர்தன்மைக்கான வாய்ப்பு அருகிவிட்டது. பயிற்றுத் திறன், வாய்ப்புகளுக்கான வழிவகை, கட்டமைப்பு, நிர்வாகம் ஆகியவற்றில் பள்ளி கல்லூரிகளிடையே பாரதூரமான ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. பல்வேறு பாடப் பிரிவுகளுக்கான தேசிய அளவிலான பொதுத் தேர்வுகள், பொது மற்றும் தனியார் கல்லூரி பல்கலைக்கழங்கங்களுக்கு இடையிலான பொருளாதாரரீதியிலான ஏற்றத்தாழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு வகையிலான வேறுபாடுகளின் மீதே நம்முடைய இன்றைய கல்விமுறைமையின் விழுமியங்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன. பாதிப்புகளுக்கு ஆளாகிறவர்களோ கிராமப்புறங்கள் மற்றும் சிறுநகரங்களைச் சேர்ந்த, இப்போது கிளர்ச்சியில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களைப் போன்றவர்களே.
இந்தியக் கல்விக் கொள்கைகளின் இன்றியமையாத தரவுகோலாக இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குவதில் முக்கியக் காரணிகளாக இருப்பவை பல்கலைக்கழகங்களுடன் பரிவர்த்தனைகளில் ஈடுப்பட்டவையும் அடுத்தடுத்து ஆட்சியமைத்தவையுமான அரசுகளே.
இன்று கல்வியின் விழுமியங்கள் மதிப்பிடப்படுவது ஏற்றத்தாழ்வுகளாலேயே தவிர அவற்றின் சீர்தன்மையால் அல்ல. நகைமுரணாக, சீராக்கத்தின் பெயரால் நடத்தப்படும் தேர்வுகள் எப்போதுமே குறிப்பான சில திறன்களுக்கு மட்டுமே சிறப்புரிமை அளிப்பதோடு கல்வியில் சீர்தன்மை என்னும் அர்த்தபூர்வமான கருதுகோளைத் துடைத்தெறிந்தவையாகவும் இருக்கின்றன. அமைச்சர்களாலும் அரசியலர்களாலும் வர்த்தகமனைகளாலும் நிறுவப்பட்ட கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் வியாபாரத்தலங்களாக இயங்குகின்றன. எல்லா மாணவர்களுக்கும் நீதமான, ஏற்றத்தாழ்வற்ற, சீர்தன்மையுடனான கல்விக்கான நுழைவுமுறை மற்றும் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற கல்வியின் லட்சியமாகயிருந்த நோக்கத்துக்கும் இன்றைய நோக்கத்துக்கும் இடையில் பேரிடைவெளி உண்டாகிவிட்டது.
இந்தச் சூழலில் நம்முடைய கல்வி நிறுவனங்களில் சீருடைகள் அவசியம்தானா? நம் பள்ளி மற்றும் கல்லூரிச் சீருடைகளுக்கு எதிராக நான் இரண்டு வாதங்களை முன்வைக்கிறேன்.
முதலாவதாக, சமத்துவம், சீர்தன்மை, குடிமையுரிமை ஆகிய கருத்தியல்கள் குறித்த விமர்சனப்பூர்வமான விவாதங்களெனும் அறிவார்த்தச் செயல்பாடுகள் மாணவர்களுக்கிடையில் நிகழ்ந்து, கல்வியமைப்பின் எல்லா அம்சங்களிலும் சமத்துவம் பேணப்படும்போது மட்டுமே சீருடையையும் கட்டாயமாக்குவது சரியானதாக இருக்கும் என்பதாகும்.
ஆனால், நம்முடைய கல்லூரிகளிலோ தரமான மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறைகள் வழக்கொழிந்துவிட்டதால் இதற்கான வாய்ப்பு கிட்டத்தட்ட இல்லாமலே போய்விட்டது. இம்மாதிரியான சூழலில் சீருடைகளின் குறியீட்டுத்தன்மை எதேச்சாதிகாரக்குழுக்களின் சட்ட ஒழுங்குக்குக் கட்டுப்பட்டிருப்பதைக் காட்டுவதாக மட்டுமே இருக்க முடியும்.
இரண்டாவதாக, ஒரு வகுப்பறை என்பது சமூகத்தின் நுண்மாதிரிப் படிவமாகத்தான் இருக்கிறது. குழந்தைகளும் இளைஞர்களும் அவர்களுக்கு நிகரான அதேநேரம் பல்வேறு வகையிலானவர்களை (நம் நாட்டின் பல்வகைப்பட்டவர்களின் பிரதிநிதிகளாக) தங்கள் வகுப்பறைகளில் எதிர்கொள்வதைப் போல பொதுவெளியில் வேறெங்கும் எதிர்கொள்வதில்லை. உண்மையான கல்வி பல்வேறுபட்ட சமூகங்களைக் குறித்து கற்பித்தலை உட்படுத்தியதாக இருக்க வேண்டும்.
ஆகையால், இந்தியாவின் பன்மைத்துவத்தை வகுப்பறைகளில் பிரதிநிதித்துவப்படுத்துவதே குடியரசு தின அணிவகுப்பில் அதை வெளிப்படுத்துவதைவிடவும் முக்கியமானதாகிறது. நம்முடைய சமூகத்தைப் போன்ற ஒன்றின் முதன்மைச் சமூகக் கடமையான இதைச் சாதிக்கவிடாமல் தடுப்பது சீராக்க உடுப்பு விதிகளே!
- EPW
தமிழில்: ஷஹிதா
1
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.