கட்டுரை, அரசியல், சட்டம், கலாச்சாரம் 10 நிமிட வாசிப்பு

ஹிஜாப்பும் மூக்குத்தியும்: துலியா கிளர்த்தும் சிந்தனைகள்

ரவிக்குமார்
15 Oct 2022, 5:00 am
1

ர்நாடகத்தில் பள்ளிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அளிக்கப்பட்டுள்ள இருவேறு தீர்ப்புகள் விவாதங்களை உருவாக்கியுள்ளன. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதன்ஷு துலியா ஆகியோர் இருவேறு தீர்ப்புகளை அளித்ததால், அது விரிவான அமர்வுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த ஹிஜாப் தடை செல்லும் என நீதிபதி ஹேமந்த் குப்தா தீர்ப்பளிக்க, கர்நாடக உயர் நீதிமன்றத் தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்துக்கு முரணானது; எனவே அதை ரத்து செய்கிறேன் என நீதிபதி துலியா தீர்ப்பளித்துள்ளார். இந்த வழக்கில் நீதிபதி துலியா அளித்திருக்கும் தீர்ப்பு ஹிஜாப் பிரச்சினை மீது மட்டுமின்றி, கல்வி, பண்பாடு, மதச்சார்பின்மை உள்ளிட்ட பல விஷயங்கள் மீதும் வெளிச்சம் பாய்ச்சுவதாக இருக்கிறது.

எந்தக் கோணத்திலிருந்து அணுகுவது?

ஹிஜாப் அணிவது மதத்தின் அத்தியாவசியமான அம்சமா என்பதை முதன்மையாக எடுத்துக்கொண்டுதான் கர்நாடக உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பளித்த இன்னொரு நீதிபதியான ஹேமந்த் குப்தா அவர்களும் ஆராய்ந்திருக்கின்றனர். ஆனால், அந்தக் கோணத்தில் இருந்து இதை ஆராயக் கூடாது என்று நீதிபதி துலியா கூறியிருக்கிறார். அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையில் சிறுபான்மையினர் குறித்து நடந்த விவாதங்களில் இருந்தும் பல கருத்துகளை நீதிபதி துலியா எடுத்துக்காட்டியிருக்கிறார். குறிப்பாக, அம்பேத்கர் அளித்த விளக்கத்தை விரிவாகத் தனது தீர்ப்பில் மேற்கோள் காட்டியிருக்கிறார்.

இந்திய நீதிமன்றங்களில் வழங்கப்பட்ட தீர்ப்புகள் மட்டுமின்றி, அயல் நாடுகளின் நீதிமன்றங்களில் வழங்கப்பட்ட சில தீர்ப்புகளும்கூட நீதிபதி துலியாவின் தீர்ப்பில் எடுத்தாளப்பட்டுள்ளன.

தென்னாப்பிரிக்க உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒன்று நீதிபதி துலியாவால் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. ஒரு மாணவி மூக்குத்தி அணிந்ததால் ஏற்பட்ட சிக்கல் எப்படி தென்னாப்பிரிக்காவின் உச்ச நீதிமன்றம் வரை சென்றது, அதில் என்ன தீர்ப்பு வழங்கப்பட்டது என்பது தெரிந்துகொள்ள சுவாரஸ்யமான செய்திகளைக் கொண்டதாக மட்டுமின்றி, கற்றுக்கொள்ள முக்கியமான கருத்துகளையும் உள்ளடக்கியிருக்கிறது.

தென்னாப்பிரிக்க உதாரணம்

தென்னாப்பிரிக்காவில் டர்பன் நகரில் இருக்கும் பள்ளி ஒன்றில் (DGHS) அங்கு வாழும் தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த சுனாலி என்ற 10ஆம் வகுப்பு மாணவி வகுப்புக்கு மூக்குத்தி அணிந்து சென்றிருக்கிறார். பள்ளிக்கு நகைகள் அணிந்து வரக் கூடாது எனக் கட்டுப்பாடு இருப்பதால் பள்ளி நிர்வாகம் மூக்குத்தி அணிந்துவர ஆட்சேபம் தெரிவித்து, அதை அகற்றுமாறு சுனாலியிடம் கூறியுள்ளது.

மூக்குத்தியை அகற்ற சுனாலி மறுத்ததால், அவரது தாயார் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டார். மூக்குத்தி அணிவது தமது இந்து-தமிழ்க் கலாச்சாரத்தின் ஒரு பகுதி என்றும் அதை அகற்ற முடியாது என்றும் அவரது தாயார் அதிகாரிகளிடம் வாதிட்டார். பள்ளியினர் அதை ஏற்காததால், சுனாலி தனது தாயார் மூலம் சமத்துவ நீதிமன்றத்தில் (Equality Court) ஒரு வழக்கைத் தாக்கல் செய்ய நேரிட்டது. எந்தவொரு நபரும் பாகுபாட்டுடன் நடத்தப்பட்டால் அதை விசாரிப்பதற்காக சமத்துவ நீதிமன்றங்கள் தென்னாப்பிரிக்காவில் உள்ளன.

சுனாலியின் வழக்கை விசாரித்த சமத்துவ நீதிமன்றம், பாரபட்சம் காட்டப்படுவதான குற்றச்சாட்டு ‘நியாயமற்றது’ என்று வழக்கைத் தள்ளுபடி செய்தது. அதன் பிறகு, சுனாலியின் தரப்பு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதை விசாரித்த உயர் நீதிமன்றம், “சுனாலியின் மூக்குத்தியை அகற்றுமாறு கூறுவது பாரபட்சம் காட்டுவது ஆகும், அது தவறானது” எனத் தீர்ப்பளித்தது. உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து பள்ளி நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. உச்ச நீதிமன்றமும் அந்த வழக்கை விசாரித்து சுனாலிக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது.

தீர்ப்பின் சாராம்சம்

“சுனாலியின் மதம் அல்லது கலாச்சாரத்திற்கு மூக்குத்தி மையமாக இல்லை, அது அவரது விருப்பம் மட்டுமே” என்ற பள்ளியின் தரப்பில் வாதிடப்பட்டது. அந்த வாதத்தை ஆராய்ந்த தென்னாப்பிரிக்காவின் உச்ச நீதிமன்றம் இப்படிக் கூறியது:

“ஒரு மத மற்றும் /அல்லது கலாச்சார நடைமுறையைக் கடைப்பிடிக்கும் நபர்கள், தேவைப்பட்டால் அதைத் தவிர்க்கத் தயாராக அவர்கள் இருந்தால், தங்களைப் போலவே மற்றவர்களும் விட்டுக்கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. ஒரு விஷயம் எப்படி மையமான அம்சமாக இருக்கிறது என்பதைத் தீர்மானிப்பது மிகவும் கடினம். ஒரு நம்பிக்கை அல்லது நடைமுறை மையமான அம்சமாக இருக்கிறது என்பதைத் தனிநபரை வைத்து முடிவுசெய்வதா? அல்லது ஒரு சமூகக் குழுவை வைத்து முடிவுசெய்வதா?   

“பாகுபாடு நடந்திருக்கிறதா என்பதைத் தீர்மானிப்பதில் ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது பண்பாட்டுக்கான நம்பிக்கையின் மையமான அம்சம் இதுதான் என்று புறவயமாகத் தீர்மானிக்கும்போது பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன.  

“நடைமுறைகளின் மையமான அம்சத்தைத் தீர்மானிப்பதில் நீதிமன்றங்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளக் கூடாது என்பது எங்கள் கருத்து. ஏனெனில் இது அவர்களுக்கு முன் இருக்கும் நபரின் நடைமுறையின் அர்த்தத்தை மதிப்பிடுவதற்குப் பதிலாக, தம் முன்னே இருக்கும் இரு தரப்புகளில் ஒன்றைச் சார்ந்து முடிவெடுக்கும் நிலைக்கு நம்மை ஆளாக்குகிறது.  

“இது மதம் மற்றும் கலாச்சார நடைமுறைகள் இரண்டுக்குமே பொருந்தும். ஒரு தென்னிந்திய தமிழ் இந்து என்ற முறையில் மூக்குத்தி தனது பண்பாட்டின் மையமான அம்சம் என்று சுனாலி கூறினால், மற்றவர்கள் அப்படி மதம் அல்லது கலாச்சாரத்துடன் அதைத் தொடர்புபடுத்திப் பார்க்கவில்லை. அதனாலேயே சுனாலி சொல்வது தவறு எனச் சொல்வது நீதிமன்றம் செய்ய வேண்டி வேலை அல்ல!”

தென்னாப்பிரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி அந்தத் தீர்ப்பில் தெரிவித்திருக்கும் இன்னொரு முக்கியமான விஷயம், “மூக்குத்தி அணிவது பண்பாட்டின் மையமான அம்சமாக இருக்கலாம். ஆனால், மதத்தின் மையமான அம்சம் அல்ல என்று பள்ளி நிர்வாகத்தின் தரப்பில் வாதிடப்பட்டது. மதம், பண்பாடு இரண்டுமே சமமான முக்கியத்துவம் உள்ளவைதான். எது மையமான அம்சம் என்பதை சம்பந்தப்பட்ட நபர்தான் தீர்மானிக்க முடியும்!”

“இந்தப் பாகுபாடு சுனாலி மீது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீருடைகள் ஒரு முக்கிய நோக்கத்திற்கு உதவுகின்றன என்பதைச் சான்றுகள் காட்டினாலும், சுனாலிக்கு விலக்கு அளிக்க மறுப்பதன் மூலம் அந்த நோக்கம் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றிபெற்றது என அது காட்டவில்லை. மூக்குத்தி அணிய அனுமதிப்பது பள்ளியின் மீது எந்தவொரு தேவையற்ற சுமையையும் சுமத்தியிருக்காது. சுனாலியை மூக்குத்தி அணிய அனுமதித்திருந்தால் நியாயமான விதத்தில் எல்லாவற்றையும் உள்ளடக்கிச் சென்ற பெருமை கிடைத்திருக்கும். எனவே, பள்ளியில் பாகுபாடு காட்டப்பட்டது என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் உறுதிப்படுத்துகிறேன்!” என தென்னாப்பிரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்திருக்கிறார்.

நமக்கு உணர்த்தப்படும் செய்தி

இந்த விவரங்களையெல்லாம் தனது ஹிஜாப் தீர்ப்பில் விரிவாக எடுத்துரைத்திருக்கும் நீதிபதி துலியா, “பள்ளி நிர்வாகமும், அரசும் பதில் அளிக்க வேண்டிய முக்கியமான கேள்வி: ஒரு பெண் குழந்தையின் கல்வியா அல்லது சீருடை விதிகளை அமலாக்குவதா? இங்கே வாதாடிய மூத்த வழக்கறிஞர்கள் பலரும் ‘இந்தப் பிரச்சனையால் மாணவிகள் பலர் பள்ளிக்கு வர முடியவில்லை. பலர் வேறு பள்ளிகளுக்கு மாறுதல் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்கள் பெரும்பாலும் மதரஸாக்கள் நடத்தும் பள்ளிகளில் சென்று சேர்ந்தனர்’ எனத் தெரிவித்தனர். ஒரு பெண் குழந்தை, முதலில், தன் பள்ளி வாயிலை அடைவது அவ்வளவு எளிதல்ல” என ஆதங்கத்தோடு தெரிவித்திருக்கிறார்.

“ஒரு பெண் குழந்தை முதுகில் பள்ளிப் பையுடன் தனது பள்ளிக்குச் செல்வதைப் பார்ப்பது இன்று இந்தியாவில் நாம் காலை நேரத்தில் பார்க்கும் சிறந்த காட்சிகளில் ஒன்று. அவள் நம் நம்பிக்கை, நம் எதிர்காலம். தனது சகோதரனோடு ஒப்பிட்டால் ஒரு பெண் குழந்தை கல்வி கற்பது மிகவும் கடினம். இந்தியாவில் உள்ள கிராமங்களில், சிறு நகர்ப்புறங்களில், ஒரு பெண் குழந்தை தனது தாய்க்கு உதவுவது பொதுவான நடைமுறை. அவள் பள்ளிப் பையை எடுத்துச் செல்வதற்கு முன், வீட்டை சுத்தம் செய்தல், பாத்திரம் கழுவுதல் முதலான அவளுடைய அன்றாட வேலைகளை முடிக்க வேண்டும். கல்வி கற்க ஒரு பெண் குழந்தை படும் கஷ்டங்கள் ஆணை விட பல மடங்கு அதிகம். எனவே இந்த வழக்கை ஏற்கனவே பெண் குழந்தைகளுக்கு உள்ள சவால்களின் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்.

“ஹிஜாப் அணிந்திருக்கிறாள் என்பதால் அவளுக்குக் கல்வியை மறுப்பதன் மூலம் ஒரு பெண் குழந்தையின் வாழ்க்கையை நாம் மேம்படுத்துகிறோமா என்ற கேள்வியை இந்த நீதிமன்றம் தன் முன்னால் எழுப்பிக்கொள்ள வேண்டும்!”

உண்மையில் நீதிபதி துலியாவின் கருத்து நீதித்துறையின் மனசாட்சியை மட்டுமின்றி நம்முடைய மனசாட்சியையும் உலுக்குவதாக இருக்கிறது.

துலியா மேலும் குறிப்பிடுகிறார், “நாம் ஒரு ஜனநாயக அமைப்பில், சட்டத்தின் ஆட்சியின் கீழ் வாழ்கிறோம். நம்மை நிர்வகிக்கும் சட்டங்கள் இந்திய அரசமைப்புச் சட்டம் கூறியதை நிறைவேற்ற வேண்டும்.  நமது அரசமைப்பின் பல அம்சங்களில் ஒன்று நம்பிக்கை. நமது அரசமைப்புச் சட்டமும் நம்பிக்கைக்கான ஓர் ஆவணம்தான்!”

இப்படிக் குறிப்பிட்டிருக்கும் நீதிபதி துலியா, அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையில் சிறுபான்மையினர் குறித்த ஆலோசனைக் குழுவின் அறிக்கை குறித்து சர்தார் வல்லபாய் படேல் தெரிவித்த கருத்தைத் தனது தீர்ப்பில் மேற்கோள் காட்டியிருக்கிறார்: “சிறுபான்மையினரை அவசரப்பட்டு ஒரு குறிப்பிட்ட நிலைக்குத் தள்ளுவது எங்களின் நோக்கம் அல்ல. இந்த நாட்டின் மாறிவரும் சூழ்நிலையில், மதச்சார்பற்ற அரசின் உண்மையான அடித்தளத்தை அமைப்பதே அனைவரின் நலனுக்கும் நல்லது என்ற முடிவுக்கு அவர்கள் உண்மையிலேயே நேர்மையாக வர வேண்டும் என்றால், பெரும்பான்மையினரின் நல்லெண்ணத்தையும், நியாயத்தையும் நம்பி அவர்கள் மீது நம்பிக்கை வைப்பதைத்தவிர சிறுபான்மையினருக்கு வேறு வழியில்லை. அதேபோல், சிறுபான்மையினர் என்ன நினைக்கிறார்கள், அவர்கள் நடத்தப்படுவதைப்போல நடத்தப்பட்டால் நாம் எப்படி உணர்வோம் என்பதைப் பற்றி பெரும்பான்மையாக இருக்கும் நாமும் சிந்திக்க வேண்டும்!”

துலியா தன் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கும் படேலுடைய கருத்துகள் இந்த வழக்குக்கு மட்டுமின்றி, பொதுவான நிலையிலும் பொருத்தமாக உள்ளது.

ஹிஜாப் பிரச்சினை தமிழ்நாட்டில் இல்லாமல் இருக்கலாம். ஆனால், கர்நாடகத்தைப் பார்த்து இங்கும் சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரம் திட்டமிட்ட முறையில் சில சனாதன அமைப்புகளால் முன்னெடுக்கப்படுகிறது. இந்தச் சவாலைச் சட்டரீதியாகக் கையாள்வது அரசாங்கத்தின் பொறுப்பு. ஆனால், வெறுப்புப் பிரச்சாரத்தைச் சட்ட நடவடிக்கைகளால் மட்டுமே தடுத்துவிட முடியாது. அது ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பும் ஆகிறது! 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ரவிக்குமார்

ரவிக்குமார், எழுத்தாளர், கவிஞர், அரசியலர். விசிக பொதுச்செயலர். மக்களவை உறுப்பினர். தொடர்புக்கு: manarkeni@gmail.com


1

2





பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Umamaheswari   2 years ago

மிக முக்கியமான கட்டுரை.நீதிபதி துலியாவிற்கு மிக்க நன்றி...ஒரு தீர்ப்பு அனைவரது பார்வையையும் உற்று நோக்கி சிந்திக்க வைக்கிறது...

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

வல்லபபாய் படேல்சங்கீத கலாநிதிஅர்த்தப்பாடுசிலருக்கு மட்டுமே இது மகிழ்ச்சியான புத்தாண்டு!ஓப்பன்ஹைமர்பாக்டீரியாஅரசியல் பிரதிநிதித்துவம்அரசுகளுக்கிடையிலான கவுன்சில்ஜனசங்கம்1232 கி.மீ. அருஞ்சொல்25 ஆண்டுகளில் ஒரு பிரச்சினையைக்கூட தீர்க்கவில்லை: சிரமப்படுத்தும் சிறுநீர்க் கசிவு!பிங்க் சிட்டிவங்கிகளைக் காப்பதற்கு ஒரு நோபல்ஆசிரியரிடமிருந்து...காதில் சீழ் வடிந்தால்?பார்க்கின்சன் நோய்கல்வித் தரம்இலக்கியப் பிரதிபிராந்திய மொழிகள்அறுவடைதேசத் தந்தைஎண்டெப்பேபாலசுப்ரமணியன் பொன்ராஜ் கட்டுரைராஜ் சுப்ரமணியம்கல்வியியல்ஊழல்அலுவல்மொழிதேசியத்தன்மைபினராயி விஜயன்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!