கட்டுரை, அரசியல், கலாச்சாரம் 10 நிமிட வாசிப்பு

மென் இந்துத்துவம் என்னும் மூடத்தனம்

நிகில் மேனன்
19 Aug 2022, 5:00 am
2

ந்தியாவில் இந்துத்துவ மத யானையின் அதிரடி முன்னேற்றத்தை எப்படித் தடுத்து நிறுத்துவது என்பதுதான் எதிர்க்கட்சிகள் தற்போது எதிர்கொள்ளும் பெரும் சவால். தேர்தல் களத்தில் அசைக்க முடியாத சக்தியாக இருக்கும் பாஜக, அதிகாரத்திற்கான வேட்டையில் ஆனந்தம் கொள்கிறது. அதன் அரசியல் போட்டியாளர்கள் பெரும்பாலும் அஞ்சிப் பதுங்கிக்கொள்கிறார்கள் அல்லது மத தேசியத்தின் இழுப்புக்குப் பணிந்துவிடுகிறார்கள். அண்மையில், பாஜக கட்டுப்பாட்டில் உள்ள மாநகராட்சி நிர்வாகம் தில்லி ஜஹாங்கிர்புரியில் உள்ள கட்டிடங்களை - இவற்றில் பெரும்பாலானவை முஸ்லிம்களுக்குச் சொந்தமானவை - புல்டோசர் வைத்து இடித்துத் தள்ளியபோது இது வெளிப்படையாகத் தெரிந்தது. காங்கிரஸ் அந்தக் களத்திலேயே இல்லை. ஆம் ஆத்மி கட்சியோ பாதிக்கப்பட்டவர்களை ‘பங்களாதேஷிகள்’ என்றும் ‘ரோஹிங்கியாக்கள்’ என்றும் குறிப்பிட்டது. இந்தச் சொற்கள் சட்ட விரோதமாகக் குடியேறிய முஸ்லிம்களைச் சுட்டும் குறியீடு. ‘மென் இந்துத்துவம்’ என்று அழைக்கப்படும் இந்த வியூகத்தின் இலக்கு வெளிப்படையானது. 

மத அரசியல் சார்ந்த முன்னெடுப்புகளைத் தடுப்பதன் மூலம், ‘இந்து விரோதி’ என முத்திரை குத்தப்படுவதை அல்லது சிறுபான்மைச் சமூகங்களுடன் இணைக்கமாக இருக்கும் கட்சி எனப் பொதுமக்கள் மனங்களில் பெயர் பெறுவதைத் தவிர்க்க எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. சமய உணர்வுகளை அல்லது மென்மையான இந்துத்துவத்தை ஆதரிப்பதுதான் யதார்த்தமான தர்க்க அறிவின்படி பாஜகவை எதிர்கொள்ளச் சிறந்த வழி என்ற தோற்றம் இன்று பல கட்சிகளிடமும் நிலவுகிறது. ஆனால், அது உண்மையிலேயே அப்படித்தானா?

சமூகக் கட்டமைப்பு சிதைவதாலும் சீரழிந்த அரசியலாலும் ஏற்படும் எதிர்மறையான விளைவுகள் ஒருபுறமிருக்க, இந்த அணுகுமுறை தேர்தல் களத்தில் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறதா?

நவீன இந்திய வரலாறு காட்டும் உண்மை வேறு விதமாக இருக்கிறது. 

பாரத் சாது சமாஜ்

இந்திய அரசியலில் மதத்தை ஒரு காரணியாகப் பயன்படுத்துவதற்கு நீண்ட வரலாறு உண்டு. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு எதிரான காலனித்துவ எதிர்ப்பு இயக்கத்தின்போது தேச பக்தர்கள் தங்கள் போராட்ட முழக்கங்களில் இந்து சமயம் சார்ந்த சொற்றொடர்களைப் பயன்படுத்தினார்கள். விடுதலைப் போராட்டத்தின் பிரதான இயக்கத்தை வழிநடத்திய இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியானது, தேசிய சேவையில் இந்து மதத்தைப் பயன்படுத்திய பல தலைவர்களின் அரசியல் களமாக இருந்தது. பல்வேறு சிந்தனைப் போக்குகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாலகங்காதர திலகர், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, புருஷோத்தம்தாஸ் டாண்டன் போன்றவர்களும் இவர்களில் அடங்குவார்கள்.

அறிஞர்கள் பலர், விடுதலைப் போராட்டத்தில் இவர்களுடைய முக்கியத்துவத்தை ஒப்புக்கொள்ளும் அதேவேளையில் இந்த அணுகுமுறையில் உள்ள பிரச்சினையையும் சுட்டிக்காட்டினார்கள். இந்துக்களைப் பெருமளவில் அணிதிரட்டுவதில் இந்தத் தலைவர்களின் சமயம் சார்ந்த முன்னெடுப்புகள் வென்றபோதிலும் அது சில சமூகங்களை அந்நியப்படுத்தியதுடன் அவர்களிடையே ஐயங்களையும் ஏற்படுத்தியது. குறிப்பாக, முஸ்லிம் லீகின் செயல்பாடுகளுக்கு இது வலு சேர்த்தது என்று அந்த அறிஞர்கள் வாதிட்டனர்.

சுதந்திரத்திற்குப் பிந்தைய பத்தாண்டுகளில் மதத்தை அரசியலாக்குவதால் ஏற்பட்ட எதிர்பாராத விளைவுகளுக்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. நேரு யுகத்தின் புகழ்பெற்ற மதச்சார்பின்மை பல சமயம் காங்கிரஸின் நடவடிக்கைகளால் பொய்யாகிப்போனது. இது நாட்டிற்கும் கட்சிக்கும் பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை நான் மேற்கொண்ட ஆய்வு காட்டுகிறது.

எடுத்துக்காட்டாக, பாரத் சாது சமாஜ் அமைப்பின் (இந்தியத் துறவிகள் சங்கம்) கதை நமக்கு எச்சரிக்கையூட்டக் கூடியது. பாரத் சாது சமாஜ் 1956ஆம் ஆண்டின் தொடக்கத்தில் டெல்லியில் உள்ள பிர்லா மந்திரில் காங்கிரஸ் அரசியலர்களுக்கும் சாதுக்களுக்கும் இடையிலான சந்திப்புக்குப் பிறகு நிறுவப்பட்டது. இந்த முயற்சியைப் பற்றி நேருவுக்கு ஆழமான ஐயங்கள் இருந்தபோதிலும், குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், மத்திய திட்டமிடல் துறை அமைச்சர் குல்சாரிலால் நந்தா போன்ற இறை நம்பிக்கையுள்ள தேசியப் பிரமுகர்கள் இதை உற்சாகமாக ஊக்குவித்தார்கள். பக்தி உணர்வு கொண்ட லட்சக்கணக்கான மக்களிடையே அரசின் ஐந்தாண்டுத் திட்டங்களைப் பிரபலப்படுத்த இந்துத் துறவிகள் உதவுவார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் சமாஜ் நிறுவப்பட்டது. காங்கிரஸ் கட்சியும் இந்துத் துறவிகளும் இந்த நம்பிக்கையைக் கொண்டிருந்தனர்.

ஆனால், இந்து சமய உணர்வுகளுடன் தன்னை இணைத்துக்கொள்வது இறுதியில் தன் அரசியல் எதிரிக்கே - தொடக்கத்தில் ஜனசங்கம், பிறகு பாஜக - சாதகமானதாக முடியும் என்பதை காங்கிரஸ் கட்சி பின்னாளில் இந்த அனுபவம் மூலம் அறிந்துகொண்டது. இந்த அமைப்பின் சாதுக்களைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருந்தது; மதச்சார்பற்ற கொள்கையின்பால் கட்சிக்கு இருக்கும் பற்றுறுதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் களத்திற்கு இது கட்சியை இழுத்துக்கொண்டு சென்றது; அந்தக் களம் அதன் போட்டியாளர்கள் வெற்றி பெறத் தோதானதாக இருந்தது. இதையெல்லாம் காங்கிரஸ் பின்னாளில் அறிந்துகொண்டது.

எடுத்துக்காட்டாக, பாரத் சாது சமாஜின் முதல் தலைவரான துக்டோஜி மஹராஜின் வாழ்க்கையை எடுத்துக்கொள்ளுங்கள். ஒருகாலத்தில் காந்தியராகவும் பாடகருமாக இருந்த இவர் தீவிர வலதுசாரி இந்துத்துவக் குழுவான விஷ்வ இந்து பரிஷத்தின் நிறுவனர்களில் ஒருவராகவும் அதன் துணைத் தலைவர்களில் ஒருவராகவும் மாறினார்.

குல்சாரிலால் நந்தாவின் அரசியல் வாழ்க்கையும் மற்றோர் எச்சரிக்கையை அளிக்கிறது. காங்கிரஸின் முக்கியமான தலைவர்களில் ஒருவராக இருந்த இவர் கேபினட் அமைச்சராகவும் இரண்டு முறை இடைக்காலப் பிரதமராகவும் இருந்தவர். வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையாக இவர் ஆதரவளித்த சாதுக்களே நாடாளுமன்றத்தின் மீது தாக்குதலைத் தொடுத்தார்கள்.

பசுவதைத் தடைக்கான நாடு தழுவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக 1966 நவம்பர் 7 அன்று சாதுக்கள் சுமார் 1,25,000 பேரைத் திரட்டிச் செங்கோட்டையிலிருந்து நாடாளுமன்றம்வரை பேரணி நடத்தினார்கள். ஊர்வலத்தில் சென்றவர்கள் கலவரத்தில் ஈடுபட்டார்கள். திரிசூலங்கள், வாள்கள், ஈட்டிகளை ஏந்தியபடி நாடாளுமன்றத்தினுள் நுழைய முயன்றார்கள். போலீஸார் விரட்டியடித்தபோது அவர்கள் காங்கிரஸ் அரசியலர்களின் வீடுகளைத் தாக்கி, நகரம் முழுவதையும் சூறையாடிச் சொத்துக்களை நாசம் செய்தார்கள். அங்கு நடந்த வன்முறையில் 8 பேர் இறந்தனர். 40 பேர் படுகாயமடைந்தனர். 800 பேர் கைது செய்யப்பட்டனர்.

தலைதூக்கி இருக்கும் தேசியம் 

இரண்டு நாட்களுக்குப் பிறகு ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டது. ஜனசங்கத்தின் தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாய் மாநிலங்களவையில் கலவரக் கும்பலின் தலைவர்களில் ஒருவரை ஆதரித்துப் பேசினார். உள்துறை அமைச்சராக இருக்கும் குல்சாரிலால் நந்தா பதவி விலக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதன் பிறகு வரவிருக்கும் நிகழ்வுகளுக்கான அறிகுறியாக இந்தச் சம்பவம் அமைந்தது.

நந்தா நீண்ட காலமாக இந்தச் சாதுக்களுக்கும் பசுப் பாதுகாப்பு என்ற அவர்களின் லட்சியத்துக்கும் ஆதரவாக இருந்தவர். இந்தச் சம்பவம் அவருடைய பிரகாசமான அரசியல் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவந்தது.

என்றாலும், இந்திரா காந்தியும் காங்கிரஸ் கட்சியும் பாரத் சாது சமாஜைத் தொடர்ந்து விடாப்பிடியாக ஆதரித்துவந்தனர். இந்து உணர்வுகளுக்குப் போதிய அளவு முக்கியத்துவம் தராமல் இருக்கிறோமோ என்று இன்றைய காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளைப் போலக் கவலைப்பட்ட காங்கிரஸும் இந்திரா காந்தியும் சாது சமாஜுடன் குலாவுவதன் மூலம் இந்துக்களின் ஆதரவைப் பெற முயன்றனர். மதச்சார்பற்றது எனக் கருதப்படும் இந்தக் கட்சி எப்போதும் போலவே, பெரும்பான்மைவாத அரசியலுக்கு மிகவும் பொருத்தமான களத்தில் நெருப்புடன் விளையாடிக்கொண்டிருந்தது.

ராஜீவ் காந்தி அரசு பாபர் மசூதியின் பூட்டைத் திறக்க அனுமதித்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 1989 கும்ப மேளாவில் பாரத் சாது சமாஜ், பாஜக ஆதரவு பெற்ற ராம ஜென்மபூமி இயக்கத்துடன் தன்னை இணைத்துக்கொள்ளத் தொடங்கியது. சாது சமாஜின் திட்டங்களுக்கும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மசூதி இருந்த இடத்தை மீட்பதற்கான அறைகூவல்களை விடுத்துவந்த விஸ்வ இந்து பரிஷத்தின் திட்டங்களுக்கும் வித்தியாசமே இல்லாதது போன்ற நிலை விரைவிலேயே உருவானது.

பாரத் சாது சமாஜை உருவாக்கியது காங்கிரஸ். சமாஜைச் சேர்ந்த சாதுக்களை ‘காங்கிரஸ் சாதுக்கள்’ என்று பரிகசிக்கும் அளவுக்கு சமாஜுக்கும் காங்கிரஸுக்கும் இடையிலான தொடர்பு தெளிவாகவே இருந்தது. 1966இல் நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல் அதிர்ச்சியளித்தபோதிலும், பசுப் பாதுகாப்பு, மாட்டிறைச்சித் தடை போன்ற உணர்ச்சிகரமான, பிளவுபடுத்தும் கொள்கைகள் மீது பற்றுறுதி கொண்ட ஓர் அமைப்பை காங்கிரஸ் தொடர்ந்து ஊக்குவித்தது. இந்துக்களின் வாக்குகளை அறுவடை செய்வதற்காக காங்கிரஸ் அரசியலர்கள் கும்பமேளாக்களில் தொடர்ந்து சாது சமாஜின் புகழ் பாடினார்கள்.

காங்கிரஸ் உருவாக்கிய இந்த சாது சமாஜ் 1989இல் காங்கிரஸுக்கே எதிராகத் திரும்பியதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. விஸ்வ இந்து பரிஷத், பாஜக ஆகிய அமைப்புகளுடன் அது அதிகாரப்பூர்வமற்ற முறையில் தன்னை இணைத்துக்கொண்டது. 1990களில் பாஜகவின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. பதினைந்தே ஆண்டுகளில் மக்களவையில் ஒற்றை இலக்கத்திலிருந்து மூன்று இலக்க இடங்களுக்கு அதன் பலம் உயர்ந்தது. ராம ஜென்மபூமி இயக்கமே இந்த வெற்றிக்குப் பெருமளவில் காரணமாக அமைந்தது.

இந்து தேசியம் தலைதூக்கியிருக்கும் சமகால இந்தியாவில் மதம் மிகவும் சக்தி வாய்ந்த வள ஆதாரம் என்றும் அதை மொத்தமாகத் தூக்கி பாஜகவின் கையில் கொடுத்துவிட முடியாது என்றும் வகுப்புவாத அரசியலை எதிர்ப்பவர்களும்கூடச் சில சமயங்களில் வாதிடுகிறார்கள். இந்து மதத்தைக் கேடயமாகப் பயன்படுத்தி இந்துத்துவத்தின் சவாலைச் சமாளிப்பதுதான் வருங்காலத்திற்கான யதார்த்தமான வழிமுறையாக இருக்கும் என்று அவர்கள் கருதுகிறார்கள். இந்து சமய நம்பிக்கையை வெளிப்படுத்துவது, முஸ்லிம் மதத்துடனான தொடர்பைக் குறைத்துக்கொள்வது அல்லது இந்துத்துவ ஆவேசப் போக்கைக் கண்டிக்காமல் இருப்பது என்பதாக இந்த அணுகுமுறையை அவர்கள் வரையறுக்கிறார்கள். இத்தகைய அணுகுமுறை கோட்பாட்டளவில் எந்த அளவு அபாயகரமானது என்பதை இந்தக் கண்ணோட்டம் குறைத்து மதிப்பிடுகிறது.

அது மட்டுமல்ல. இத்தகைய சூதாட்டங்கள் அண்மைக் காலத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தின என்பதற்கான தடயங்களையும் இது கவனிக்கத் தவறுகிறது. கலப்படமற்ற தீவிர இந்துத்துவத்தின் ஆவேசமான தன்மைக்கு முன்னால் இது வலுவிழந்துபோகும் என்பதுடன் எதிர்க்கட்சிகளின் அடித்தளத்தையே அது சிதைத்துவிடும். மேலும், மிக முக்கியமாக, இத்தகைய வியூகத்தின் உண்மையான விலையை - லட்சக்கணக்கான இந்திய முஸ்லிம்களின் அன்றாட அச்சமும் பாதுகாப்பின்மையும் - எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து இந்தக் கண்ணோட்டத்தைக் கொண்டவர்களால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
நிகில் மேனன்

நிகில் மேனன், ஆய்வாளர். நோட்ர டாம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையின் துணைப் பேராசிரியர். ‘பிளானிங் டெமாக்ரஸி’ (Planning Democracy) நூலின் ஆசிரியர். தொடர்புக்கு: nikhilmenon@nd.edu

தமிழில்: அரவிந்தன்

6

1





பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   2 years ago

மதப்பற்றுக்கு சரியான போட்டி மதச்சார்பின்மை தான். நல்ல உதாரணம் கேரளா.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

K.R.Athiyaman   2 years ago

///அண்மையில், பாஜக கட்டுப்பாட்டில் உள்ள மாநகராட்சி நிர்வாகம் தில்லி ஜஹாங்கிர்புரியில் உள்ள கட்டிடங்களை - இவற்றில் பெரும்பாலானவை முஸ்லிம்களுக்குச் சொந்தமானவை - புல்டோசர் வைத்து இடித்துத் தள்ளியபோது இது வெளிப்படையாகத் தெரிந்தது. காங்கிரஸ் அந்தக் களத்திலேயே இல்லை. ஆம் ஆத்மி கட்சியோ பாதிக்கப்பட்டவர்களை ‘பங்களாதேஷிகள்’ என்றும் ‘ரோஹிங்கியாக்கள்’ என்றும் குறிப்பிட்டது.// இல்லை. தவறான தகவல். ஆம் ஆத்மி அப்படி குறிப்பிடவில்லை. ஆம் ஆத்மி அவர்களை ஆதரிப்பதாக பாஜக குற்றம் சாட்டியிருந்தது : //The BJP's Delhi unit on Sunday passed a resolution condemning the AAP government's "support" to the illegal Rohingya and Bangladeshi immigrants in the city. In the two-day executive meeting of the BJP's Delhi unit that concluded on Sunday, various leaders trained their guns on Delhi Chief Minister Arvind Kejriwal over various issues. They alleged that those behind the Jahangirpuri violence on Hanuman Jayanti on April 16 were AAP workers and leaders. The AAP has supported Rohingyas and Bangladeshis and has crossed all limits in protecting them, the Delhi BJP claimed in the resolution.// https://www.business-standard.com/article/politics/delhi-bjp-accuses-aap-of-supporting-rohingya-bangladeshi-immigrants-122061200898_1.html

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

இன்டியா கூட்டணிகு.செந்தமிழ் செல்வன் கட்டுரைவங்கி ஊழியர்கள்காங்கிரஸுக்குக் கிடைத்துள்ள தேர்தல் ஆயுதம்!ஜெயமோகன் பேட்டிமின்னணு சாதனங்கள்நேடால் இந்தியக் காங்கிரஸ்மாநில அதிகார வரம்புவிமான விபத்துசுற்றுச்சூழலியல்g.kuppusamyஓய்வுபெற்ற அதிகாரிகள்தமிழ்நாடு முதல்வர்ஆர்பிஐஐந்து மாநிலத் தேர்தல்கட்டுமானத் துறைகுளியல்மனிதவளத் துறைenglish languageமார்க்ஸிய ஜிகாத்ஆயுஷ்காங்கிரஸ் தோல்விகுலமுறைடிரெண்டிங்பன்னிரெண்டாம் வகுப்புமகுடேசுவரன் கட்டுரைஅம்பேத்கர்: எல்லோருக்குமான தலைவர்வெயில் காலம்ரோ எதிர் வேட்முக்கியமானவை எண்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!