கட்டுரை, சட்டம், கல்வி, அருஞ்சொல்.காம் 10 நிமிட வாசிப்பு

வகுப்பறைக்குள் வகுப்புவாதம்

மு.இராமநாதன்
16 Mar 2022, 5:00 am
1

அவளால் நம்ப முடியவில்லை. அவளைச் சுற்றித்தான் எல்லாம் நடக்கிறது. கர்நாடக உயர் நீதிமன்றம் சொல்லிவிட்டது. பள்ளி என்றால் சீருடை இருக்கும். அதைப் பள்ளி நிர்வாகம் தீர்மானிக்கும். அந்தச் சீருடையில் அவளது ஹிஜாப் வராது. 

முன்னதாகக் கர்நாடக மாநில அரசும் இதையேதான் சொன்னது. அப்போது கல்விச் சாலையின் வாசற்கதவு அவளுக்கு அடைக்கப்பட்டது. அவளும் அவள் தோழிகளும் தங்கள் முக்காட்டைக் கழற்றினால் அந்தக் கதவு திறந்துகொள்ளும் என்றது கல்வி நிலையம். 'ஆனால், இந்த முக்காட்டைக் கழட்டினால் என் வீட்டிலிருந்து படியிறங்க முடியாதே?' என்றாள் அவள். 'அப்படியா, பரவாயில்லை, இங்கே பள்ளிக்கூட வாசலில் கழட்டி வைக்கலாம்' என்று பதில் வந்தது. 

கர்நாடக மாநிலக் கல்வித் துறை ஹிஜாப் கூடாது என்று பிப்ரவரி 5ஆம் தேதி ஆணையிட்டது. அவள் பள்ளிக்கூட வாசலில் நின்றுகொண்டு 'இது என் உரிமையில்லையா?' என்று கேட்டாள். அப்போது அவள் பின்னாலிருந்து கோஷங்கள் ஒலித்தன. அவள் திரும்பிப் பார்த்தாள். பல புதிய முகங்கள். சில தெரிந்த முகங்கள். ஒரு முகம் வெகு பரிச்சயமானது. நேற்றுவரை ஒரே வகுப்பறையில், ஒரே சோதனைச் சாலையில், ஒரே மைதானத்தில், ஒரே நூலகத்தில் கண்டு பழகிய முகம் அவனுடையது. இப்போது அந்த முகம் மாறியிருந்தது. அவன் கழுத்தில் மாலையாகத் தொங்கியது ஒரு காவித் துண்டு. அது அவன் முகத்தையும் மாற்றியிருந்தது. அப்படித்தான் அவளுக்குத் தோன்றியது.    

சமரசம்

அவளுக்கு இன்னும் ஆச்சரியங்கள் காத்திருந்தன. பிரச்சினை நீதிமன்றத்திற்குப் போனது. விசாரணையின் முதல் நாளிலேயே (பிப்ரவரி 11) ஓர் இடைக்கால ஏற்பாடு முன்மொழியப்பட்டது. 'பெண்ணே, நீ முக்காட்டைக் கழற்றிவிடு; தம்பி, நீ காவித் துண்டைக் கழற்றிவிடு.' அந்த இடைக்கால உத்தரவு இப்போது உறுதியாக்கப்பட்டுவிட்டது.  'அவன் நேற்று வீம்புக்காக அணிந்த துண்டும் நான் வெகு நாளாக அணிந்துவரும் முக்காடும் எப்படிச் சமமாகும்?' என்று கேட்டாள் அவள். இப்போது நீதிமன்றம் அதற்கும் பதிலளித்துவிட்டது.  'முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவது இஸ்லாத்தின் கீழ் அத்தியாவசியமான ஒரு மத நடைமுறை ஆகாது' என்பதுதான் அந்த பதில்.

வழக்கு நடந்தபோது பின்னாலிருந்த ஒருவன் கேட்டான்: 'இந்த முடிவு திருநீற்றுக்கும் நெற்றித் திலகத்திற்கும் பொருந்துமா? சர்தாரின் டர்பனையும் இது தடை செய்யுமா?' பதில் தெரியவில்லை.

இந்த வழக்கு நடந்துகொண்டிருந்தபோது இமயமலைக்கு வடக்கிருந்தும் மேற்கிருந்தும் சிலர் பேசினார்கள். மலாலா கல்விக்காக நாடு கடந்த பெண். நோம் சோம்ஸ்கியை உலகத்தின் மனசாட்சி என்கிறார்கள் சிலர். ஓஐசி (OIC) என்பது சுமார் 50 இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு. சர்வதேச மதச் சுதந்திரத்திற்காக அமெரிக்கா ஓர் அமைப்பை நடத்துகிறது, அதற்கொரு தூதுவர் இருக்கிறார்.  இவர்களெல்லாம் அந்தப் பிள்ளைகள் முக்காடு அணிந்துகொள்ளட்டும், அவர்கள் படிக்கட்டும் என்றார்கள். ஆனால், இது உள்நாட்டுப் பிரச்சினையல்லவா? இதில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி? ஆகவே இவை அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன.

இது நமது அவை. நமது குறிப்பு. இதில் கொள்வன கொள்ளவும் தள்வன தள்ளவுமான அதிகாரம் நம் தலைவர்களுக்கு இருக்கிறது. குடிமக்கள் நாம் எதுவாக இருந்தாலும் ஏற்கக் கடவர்கள். எனினும் வெவ்வேறு அவைகளில் அவரவர் குறிப்புகளில் என்ன எழுதுகிறார்கள் என்று பார்ப்பது நம்மை ஒப்பிட்டுக்கொள்ள உதவியாக இருக்கும் அல்லவா? மேலும் உலகில் பரவலாக இருக்கும் ஓர் உடையை நாம் தடை செய்யும்போது பல்வேறு விதமான நாடுகள் நம்மை எப்படி மதிப்பிடப்போகின்றன என்று புரிந்துகொள்ளவும் இது உதவுமல்லவா?

உலக நாடுகளும் ஹிஜாப்பும்

நான் சவுதி அரேபியாவில் பணியாற்றியிருக்கிறேன். இஸ்லாமியப் பெண்கள் மட்டுமில்லை, அங்கு வசிக்கும் எல்லாப் பெண்களும் புர்கா அணிய வேண்டும். அதுதான் விதி. பொருளீட்டப் போனவர்களுக்குப் புகார் ஒன்றுமில்லை. இருந்தாலும் சொல்வதில்லை. எல்லோரும் புர்கா அணிவார்கள். சவுதி அரேபியா இஸ்லாமிய நாடு. பிற மதங்களை அங்கே பின்பற்ற முடியாது. ஆகவே அந்த எடுத்துக்காட்டு பொருந்தாது எனலாம்.

அடுத்து, இந்தோனேசியா. அதுதான் உலகிலேயே இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடு. எனினும் அது மதச்சார்பற்ற நாடு. அங்கே புர்கா கட்டாயமில்லை.  முக்காடும் கட்டாயமில்லை. ஆனால் கணிசமான இஸ்லாமியப் பெண்கள் முக்காடு அணிகிறார்கள். கண்ணைக் கவரும் வண்ணங்களிலும் வேலைப்பாடுகளுடனும் இந்த முக்காடுகள் இருக்கும். நான் மலேசியாவிற்கும் போயிருக்கிறேன். அங்கேயும் அப்படித்தான். இந்த இரண்டு நாடுகளிலும் இஸ்லாமியர்கள்தான் பெரும்பான்மையினர். ஆகவே இவற்றையும் நாம் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டாம்.

அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல மேலை நாடுகளில் ஹிஜாப் அணியத் தடையில்லை. எனினும் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், ஆஸ்திரியா, பல்கேரியா ஆகிய ஐரோப்பிய நாடுகளில் புர்காவும் ஹிஜாப்பும் அணியத் தடை இருக்கிறது. பிரதானமாக இது தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையாகவே மேற்கொள்ளப்பட்டது. கர்நாடக அரசுக்கு இந்தப் பிள்ளைகள் மீது அவ்விதமான சந்தேகங்கள் ஏதுமில்லை. அவர்கள் சொல்லும் காரணம் பள்ளியில் எல்லோரும் ஒரே சீரான உடை அணிந்திருக்கும்போது ஹிஜாப் பேதத்தை உண்டு செய்யும். 

இந்த இடத்தில் நாம் ஹாங்காங்கைப் பொருத்திப் பார்க்கலாம். நான் பல ஆண்டு காலம் பணியாற்றிய இடம். அங்கு மதம் கட்டாயமில்லை. மதம் பிறப்பால் வருவதும் இல்லை. அவரவர் விரும்பும் மார்க்கத்தைத் தேர்ந்து கொள்ளலாம். எந்த மதமும் வேண்டாம் என்றாலும் யாருக்கும் எந்தப் புகாரும் இராது. ஹாங்காங் மதச் சுதந்திரம் உள்ள நாடு. எல்லா சமயத்தினருக்கும் வழிபாட்டுத் தலத்திற்கான இடத்தை அரசு வழங்கியிருக்கிறது. எல்லா சமயத்தினரும் அவரவர் நம்பிக்கைகளைப் பேணலாம், அவரவர் சடங்குகளைப் பின்பற்றலாம். எந்தத் தடையுமில்லை. அவ்வாறே விருப்பமுள்ள இஸ்லாமியப் பெண்கள் பள்ளிக்கும் பல்கலைக்கழகத்திற்கும் முக்காடு அணிந்து வரலாம். பள்ளியின் சீருடைக்கு இயைந்த வண்ணத்தில் முக்காட்டை வடிவமைக்கப்பட்டிருக்கும்.

ஆக, சில ஐரோப்பிய நாடுகள் மட்டுமே பாதுகாப்புக் காரணங்களுக்காக ஹிஜாப்பைப் பொது இடங்களில் தடை செய்திருக்கின்றன. அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா முதலான மதச்சார்பற்ற நாடுகளிலும், ஹாங்காங் போன்ற மதச் சுதந்திரம் உள்ள நாடுகளிலும் ஹிஜாப் அணியத் தடை இல்லை. இந்தியாவிலும் அப்படித்தான் இருந்தது. ஆனால் இப்போது தடை விதித்திருக்கிறது கர்நாடக அரசு. அதை ஏற்றுக் கொண்டிருக்கிறது உயர் நீதிமன்றம். பள்ளிச் சீருடையுடன் ஹிஜாப் ஒத்துப்போகவில்லை என்பதுதான் முதன்மையாகச் சொல்லப்படும் காரணம்.

சீருடையும் ஹிஜாப்பும்

இப்போது ஒரு கேள்வியை எழுப்பிக்கொள்வோம். சீருடையின் நோக்கமென்ன? கல்வியாளர்கள் பல காரணங்கள் சொல்கிறார்கள். ஒரு பொதுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களிடையே பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். பள்ளி வளாகத்திற்குள் அது அவர்கள் உடைகளில் வெளித் தெரியாமல் இருக்கச் சீருடை உதவுகிறது. கல்வியின் முன்பு, கல்விச் சாலையின் முன்பு, நாம் அனைவரும் சமம் என்கிற நம்பிக்கை பிள்ளைகள் மனதில் உருவாகிறது. அது பெருமிதமாக வளர்கிறது. பிள்ளைகளுக்குப் பள்ளியோடு நெருக்கமும் உண்டாகிறது. இந்த நோக்கம் எதற்கும் ஹிஜாப் தடையாக இல்லை. 

மேலதிகமாக, நமது வகுப்பறைகள்தான் பிள்ளைகள் சமூகத்தைத் தரிசிக்கிற முதல் சாளரம். பொதுப் பள்ளிகளில் எல்லாப் படிநிலைகளில் உள்ளவர்களும் படிப்பார்கள். அவர்களது உணவில், பேச்சுவழக்கில், அணிகலனில், தரித்திருக்கும் மத அடையாளங்களில் வேறுபாடுகள் இருக்கும். இதன் ஊடாகத்தான் பிள்ளைகள் வளர்கிறார்கள். இது அவர்களுக்குச் சமூகத்தைக் குறித்த புரிதலை வளர்க்கும். சகிப்புத்தன்மையை உருவாக்கும். ஹிஜாப் தடை இந்த இணக்கத்திற்கு எதிரானதாக மாறியிருக்கிறது. நேற்று வரை கேலியும் கிண்டலுமாக இருந்த சூழலில் பகை வளர்கிறது. நாங்கள்-அவர்கள் என்று கோடு கிழிக்கிறது. வகுப்பறைக்குள் வகுப்புவாதம் புகுந்துவிட்டது.

கடந்த மாதம் 'அருஞ்சொல்'லில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்- ஏன் மதவெறிக்கு எதிராக நாம் ஒவ்வொருவரும் பேசுவது அவசியம்? நிறைய எதிர்வினைகள் வந்தன. திருச்சியிலிருந்து ஓர் அன்பர் எழுதியிருந்தார்: 'முன்பெல்லாம் இஸ்லாமியப் பெண்கள் சேலைத் தலைப்பையே முக்காடாக அணிவார்கள். இப்போதுதான் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் போய் வந்த இளைஞர்கள் இந்தப் புர்காவையும் ஹிஜாப்பையும் இங்கே இறக்குமதி செய்துவிட்டார்கள்.'  இருக்கலாம். பாரதியாரே 'திரையிட்டு முகமலர் மூடி மறைப்பது தில்லித் துருக்கர் வழக்கமடி!' என்று பாடியிருக்கிறார். முக்காடிடுவது அப்போது தென்னாட்டுத் துருக்கர் வழக்கமில்லைபோலும். பின்னாளில்தான் வழக்கமாகியிருக்க வேண்டும். அப்படியே இருக்கட்டும். இதைக் குறித்து தொடர்புடைய அனைவருடனும் உரையாடி எல்லாருக்கும் இசைவான ஒரு முடிவை மேற்கொள்வதுதானே மக்களாட்சி நடைமுறையாக இருக்க முடியும்?

அப்படியானால், கர்நாடக அரசு முஸ்லிம்களுடன் உரையாடாமல் இதை ஏன் சட்டமாக்குகிறது? இது இஸ்லாமிய வெறுப்பை நாட்டில் வளர்க்கும் முயற்சியில் இன்னொரு படிக்கல் என்று எழுதுகிறது வாஷிங்டனிலிருந்து வெளியாகும் 'ஃபாரின் பாலிசி' இதழ் (11 பிப்ரவரி 2022). குடியுரிமைத் திருத்தச் சட்டம் (டிசம்பர் 2019), டில்லி கலவரம் (மார்ச் 2020) போன்றவற்றின் தொடர்ச்சிதான் இது என்கிறது அந்த இதழ். முன்னதாக இதே போன்ற குற்றச்சாட்டை மிகக் கடுமையான வார்த்தைகளில் சொல்லியிருந்தது 'டைம்' இதழ் (அக்டோபர் 2021).

உடுப்பியைக் காணும் சிட்னி

இந்தப் பிரச்சினை விவாதப் பொருளாக இருந்தபோது அன்ஹார் கரீம் எதிர்வினை ஆற்றியிருந்தாள். அன்ஹார் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமைந்திருக்கும் அல் நூரி முஸ்லிம் பள்ளியில் படிக்கிறாள். வயது 14. இந்த ஹிஜாப் பிரச்சினைக் குறித்து அவள் 'தி கார்டியன்' இதழில் (16 பிப்ரவரி 2022) ஒரு கட்டுரை எழுதியிருக்கிறாள். அந்தக் கட்டுரை இப்படி முடிகிறது:

"உலகெங்கும் வாழும் பெண்களின் நடத்தை, அவர்கள் என்ன செய்கிறார்கள், எந்த உடையை அணிகிறார்கள், எந்த உடையை அணியவில்லை என்பதிலிருந்து தீர்மானமாகிறது. அந்தப் பெண்களில் நான் என்னைக் காண்கிறேன்.

இந்தியாவிலும் பிற இடங்களிலும் ஹிஜாப் அணிவதால் என் சகோதரிகளுக்குக் கல்வி மறுக்கப்படுகிறது. அந்தப் பெண்களில் நான் என்னைக் காண்கிறேன்.

பிரான்ஸிலும் இன்ன பிற இடங்களிலும் என் சகோதரிகளால் அவர்கள் விரும்பும் விளையாட்டை ஆட முடியவில்லை. ஏனெனில் அவர்கள் ஹிஜாப் அணிந்திருக்கிறார்கள். அந்தப் பெண்களில் நான் என்னைக் காண்கிறேன்.

ஹிஜாப்புக்கும் கல்விக்கும் இடையில் ஏதாவது ஒன்றைத் தேர்வுசெய்ய வேண்டிய நிலை வந்தால், அப்போது உலகத்தவரால் என்னைக் காண முடியும். அவர்களால் என் சீற்றத்தையும் அதிர்ச்சியையும் பங்கிட முடியும். நான் அதைத்தான் இப்போது செய்கிறேன்."

அன்ஹார் சிறு பெண். மலாலாவும் சிறு பெண்தான். நமது ஆட்சியாளர்கள் அவர்களைப் புறக்கணிக்கலாம். நோம் சோம்ஸ்கி பெரிய மனிதர்தான். ஓபிசி பெரிய அமைப்புதான். 'டைம்' பெரிய பத்திரிகைதான். கான்ஸ்டன்டைன் காபே பெரிய கவிதான். அதனால் என்ன? இவர்கள் எல்லோரையும் நமது ஆட்சியாளர்கள் புறக்கணிக்கலாம். ஆனால், குடிமக்களான நாம் நமது மனசாட்சியைப் புறக்கணிக்க முடியாது!

 

 

 

 

 

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
மு.இராமநாதன்

மு.இராமனாதன், பொறியாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com


2

2





பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Arivazhagan   3 years ago

‘உலக நாடுகளும் ஹிஜாப்பும்’ எனும் குறுந்தலைப்பின் கீழ் வரும் ஐந்தாவது பத்தியில், ‘இப்போது தடை விதித்திருக்கிறது கர்நாடக அரசு. அதை ஏற்றுக் கொண்டிருக்கிறது உச்ச நீதிமன்றம்.’ எனவருகிறது. தற்போது இந்த விவகாரத்தில் கர்நாடகா உயர் நீதிமன்றம் தானே தீர்ப்பு வழங்கியுள்ளது. அதைச் சற்று கவனித்து மாற்றிவிடுங்கள்.

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

இரட்டை என்ஜின் அரசுதமிழ் வணக்கம்எம்.ஜி.ராமச்சந்திரன்ரத்தக்குழாய்மேண்டேட்chennai rainsystemஇந்து - முஸ்லிம் சொத்து பரிமாற்றத்துக்கு தடையான காதுளசிதாசன்இடைநீக்கம்லட்சியவாதிநாகூர்உக்கிரமான அரசியல் போர்க்களத்தில் மஹ்வா மொய்த்ராலண்டன் பயணம்பின்லாந்துபாகிஸ்தான்சீக்கியர்கள் படுகொலைமுல்லை பெரியாறு அணைதேசிய குற்றச்செயல்கள் பதிவேடுநிதிக் குறைப்பாடு அல்லwriter samas thirumaகுர்வாமிஸோக்கள்சாரு சமஸ் பேட்டிதலைச்சுமை வேலைகள்குரியன் வரலாறுவரலாற்றாய்வாளர்அண்ணா சாலைகௌதம் பாட்டியாசமூகக் கல்வி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!