கட்டுரை, அரசியல், சட்டம், கலாச்சாரம் 5 நிமிட வாசிப்பு

முத்தலாக் முதல் ஹிஜாப் வரை: தலைகீழாக்கிய இந்துத்துவம்

ஹீனா ஃபாத்திமா
15 Oct 2022, 5:00 am
2

ரானின் இஸ்லாமியக் குடியரசு பெண்களின் மேல் கட்டாயமாக ஹிஜாபைத் திணித்ததற்கு ஈரான் பெண்களின் எதிர்ப்பு உலகெங்கிலும், இந்தியா உட்பட, பெரும் ஆதரவைப் பெற்றது. ஆனால், இந்திய முஸ்லிம் பெண்கள் கர்நாடகாவிலும் ஏனைய இடங்களிலும் ஹிஜாப் அணிவது தங்கள் உரிமை எனப் போராடியது பலத்த எதிர்ப்பையே சந்தித்தது. 

ஈரானியப் பெண்கள், இந்தியப் பெண்கள் இரு தரப்பின் எதிர்ப்புமே ஆண்கள் தங்கள் முடிவை பெண்களின் தேர்விலும் உடலிலும் திணிப்பதைப் புறம்தள்ளுவதாகவே  இருந்தாலும் இரு எதிர்ப்புகளும் நகர்ந்த திசையில் அப்பட்டமான வேறுபாடு இருந்தது. இந்தியாவில் முஸ்லிம் பெண்கள் இயக்கங்கள் மீதும் அவை தம் சொந்த சமூகத்திற்குள் அதுவரை ஈட்டியிருந்த முன்னேற்றத்தின் மீதும் இந்துக் குழுக்களின் எதிர்ப்பு ஓர் எதிர்மறைத் தாக்கத்தையே ஏற்படுத்தியது.

“இந்துக் குழுவினர் ஹிஜாப் பிரச்சினையை வகுப்புவாதமாக்கியதாலும் அரசியலாக்கியதாலும் முஸ்லிம் சமூகத்தைக் குறிவைத்துத் தாக்கியதாலும், முஸ்லிம் சமூகத்தின் ஆணாதிக்கத்தையும் ஹிஜாபைக் கட்டாயப்படுத்துவதை எதிர்த்தும் நாங்கள் எடுத்துவந்த முயற்சிகள் எல்லாம் அடிபட்டுப்போயின” என்கிறார்கள் பல முஸ்லிம் பெண்கள். “எங்கள் மதத்தையும் அடையாளத்தையும் தாக்குவதால் நாங்கள் ஹிஜாப் அணிவதில் உறுதியாக நிற்கிறோம்” என்கிறார்கள் அவர்கள். 2014 இல் பாஜக மத்தியில் அதிகாரத்துக்கு வந்த பிறகு இத்தகைய தாக்குதல்கள் அதிகரித்தே வருகின்றன. 

2019இல் முத்தலாக்கிற்கு எதிராக முஸ்லிம் பெண்கள் வெளிப்படையாகப் பேசினர். ஆனால், முஸ்லிம் சமூகத்தின் மீதான பாஜகவின் தாக்குதல் முஸ்லிம் பெண்கள் இயக்கத்தையும் பாதித்துள்ளது. “இப்போது பலதாரமணம் போன்ற பிரச்சனைகளுக்கு எதிராக நீங்கள் கேள்வி எழுப்பவோ போராட்டங்களை உருவாக்கவோ முடியாது. ஏனெனில் இன்றைக்குள்ள கேள்வியெல்லாம் எப்படி பிழைத்திருப்பது என்பது பற்றித்தான்” என்கிறார் பெண்கள் உரிமைப் போராளியும் பாரதீய முஸ்லிம் மகிளா அந்தோலன் நிறுவனர்களில் ஒருவருமான ஸகியா சோமன்.

இதற்கு முன்னர் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப், முத்தலாக், பலதார மணம் குறித்தெல்லாம் வெளிப்படையாகப் பேசினர்; தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தனர். ஹிஜாப் ஆணாதிக்கத்தின் சின்னம் என்றும் ஹிஜாப் இஸ்லாத்தில் கட்டாயம் எனச் சொல்லப்படுவதை எதிர்த்தும் பேசிக்கொண்டிருந்த முஸ்லிம் பெண்களை இந்து அமைப்புகளின் முஸ்லிம்கள் மீதான தொடர் தாக்குதல்கள் ஹிஜாபைத் தங்கள் அடையாளமாகப் பார்க்கச் செய்துள்ளன.

“பெண்ணியர்கள் திரை, முக்காடு போன்றவற்றின் பின்னாலுள்ள ஆணாதிக்கம் பெண்வெறுப்புச் சிந்தனைகள் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளனர். ஹிஜாபை அடையாளத்துக்குரிய விஷயமாகவோ ஒரு சமூகத்துக்குரிய விஷயமாகவோ மட்டும் சுருக்கிவிட முடியாது. ஒருவரின் அடையாளத்தை நிலைநாட்ட வேறு வழிகளும் உள்ளன. ஹிஜாப் இஸ்லாத்தில் இன்றியமையாதது என்பதுகூட மதத்தை மேலோட்டமாகவும் மிகக் குறைத்தும் புரிந்துகொள்வதால்தான்” என்கிறார் பிஎம்எம்ஏ அமைப்பின் மற்றொரு நிறுவனரும் போராளியுமான நூர்ஜஹான் சஃபியா நியாஸ், இதழாளர் நமிதா கோஹ்லியுடனான ஒரு நேர்காணலில்.

பல முனைகளிலும் நழுவிப் போகும் வெற்றி  

இந்தியாவில் முஸ்லிம் பெண்கள் எதிர்கொள்ளும் சவால் இந்துத்துவ அமைப்புகளிமிருந்து மட்டுமல்ல. இங்குள்ள பெண்ணியர்களும் ஹிஜாப் விவகாரத்தில் பிளவுபட்டே நிற்கிறார்கள். ஹிஜாபை முஸ்லிம் அடையாளத்தோடு தொடர்புபடுத்த முடியாது எனச் சிலர் கூற, இன்னும் சிலர் இந்துத்துவ சக்திகள் முஸ்லிம் அடையாளத்தைக் குறிவைக்கும்போது அதனை எதிர்ப்பதே இப்போதைய தேவை என்பதில் தெளிவாக உள்ளனர்.

 

இத்தகைய பிரிவுபட்ட கருத்துகளில் ஒன்றுதான் ஹிஜாப் இஸ்லாத்தில் கட்டாயமா இல்லையா என்ற கேள்வியைப் பற்றியது. ஒருபுறம் முஸ்லிம் பெண்கள் பள்ளிக்கு ஹிஜாப் அணிவதைத் தடைசெய்யத் தீர்மானித்த கர்நாடக அரசு பின்னர் உயர் நீதிமன்றமும் இம்முடிவினை ஆமோதித்தது. மறுபுறம் இப்படித் தடை செய்தது அரசியல் அமைப்புக்கு எதிரானது; ஹிஜாப் இஸ்லாத்தில் கட்டாயம் எனக் கூறிய ஜாமியத் உலமா ஏ ஹிந்த்.

இவ்விரண்டுக்கும் நடுவே அகப்பட்டுக்கொண்ட முஸ்லிம் பெண்கள் ஒருபுறம் தங்கள் குடும்பங்களில் பழமைவாதத்தையும் ஆணாதிக்கத்தையும் எதிர்த்துக்கொண்டும் மறுபுறம் கல்வி மறுக்கப்பட்டுக்கொண்டும் இருக்கிறார்கள். ஆணாதிக்கத்தை எதிர்க்கும் அவர்களின் முயற்சி மத அடையாளத்தின் மீதான இந்துத்துவ தாக்குதலால் ஒன்றுமில்லாமல் ஆகிக்கொண்டிருக்கிறது. ஒருவகையில் பார்க்கையில்,  இந்துத்துவ அமைப்புகள் அவர்களின் மேலாண்மையை இந்திய சமூகத்திற்குள் வலுப்படுத்த மட்டும் முயற்சிக்கவில்லை, முஸ்லிம் சமூகத்தின் ஆணாதிக்கத்தை வலுப்படுத்தவும் உதவியிருக்கின்றன .

“ஹிஜாப் ஆணாதிக்கத்தின் சின்னம் எனவே அதனை எதிர்த்துப் பெண்கள் போராடிக்கொண்டுதான் இருந்தார்கள். ஆனால், இந்துத்துவ அமைப்புகள் அப்பலன்களை எல்லாம் தலைகீழாக்கி ஹிஜாப் எதிர்ப்பு இயக்கத்திற்குத் தீமையை விளைவித்துள்ளன. முன்னர் கட்டாயமாக ஹிஜாப் அணிய வேண்டும் என்பதை எதிர்த்துப் பேசிக்கொண்டிருந்தவர்கள் இப்போது அதை ஏற்றுக்கொண்டு அது தங்கள் மத அடையாளத்தின் குறியீடு என வலியுறுத்துகின்றனர்” என்கிறார் ஸகியா சோமன்.

இஸ்லாத்துக்குள்ளேயே வழங்கப்பட்டிருக்கும் தங்களின் உரிமைகளை முஸ்லிம் பெண்கள் முன்னர் பெறாமலிருந்தனர் எனில், அவர்களின் பிரச்சினைகளை வகுப்புவாதமாக்கியதும் அரசியலாக்கியதும் இப்போது அரசமைப்பு வழங்கியுள்ள உரிமைகளையும் அவர்களுக்கு இல்லாமலாக்கிவிட்டன.

-ThePrint.in

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
தமிழில்: ஜமீலா ராசிக்

2

2

பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Kuppusamy Annamalai   2 years ago

பள்ளிகளில் பெண்குழந்தைகள் ஹிஜாப் அணிய விதித்த தடையையும், முத்தலாக் தடையையும் முன்னெடுத்திருக்க வேண்டிய பெண்ணியம் பேசும் முற்போக்கு சிந்தனைவாதிகளின் பணியை மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசும் நீதிமன்றமும் அமல்படுத்தும் போது இந்த சட்டங்கள் எந்தவிதத்தில் பெண்களுக்கும் மதத்திற்கும் எதிரானது என்பதை நீதிமன்றத்தில் மறுக்கலாம். ஆனால் இந்துத்துவவாதிகளின் தலையீடாலேயே இந்த சட்டங்களை எதிா்ப்போம் என்பதும் மத அடையாளங்களை ஏற்போம் என்பதும் எந்த வகையில் முற்போக்கானது? பெண்ணியவாதிகள் மத அடிப்படைவாதிகளுக்கு அஞ்சி பெண்களுக்கு இஸ்லாம் அனுமதித்த உாிமைகள் மறுக்கப்படும் போதும் கூட குரலெழுப்பாமல் இருந்தால் அடுத்த இலக்கை நோக்கி இந்துத்துவவாதிகள் பயணிப்பாா்கள்.....

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Sridhar   2 years ago

அருமை தோழர்..மதப்பழமைவாதத்தின் முதல் தாக்குதல் பெண்கள் மீதே..அது எந்த மதமானாலும் சரி

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

ஷிழ் சிங் பாடல்ஒரே தேசம் – ஒரே தேர்தல்பிரெக்ஸிட்மு.க.ஸ்டாலின்பிராந்தியச் சமநிலை அறிவிப்புக்கு வேண்டும் முன்னுரிமுகப்பருபுதிய முழக்கங்கள்ஐடிஆர்-7பொதுவுடைமை சித்தாந்தங்கள்கடுமையான தலைவர்உலகை மீட்போம்கம்யூனிஸ்ட்தொங்கு பாலம்தேர்ந்த அரசியலர்மோடி அலைகருணாநிதியின் முன்னெடுப்புவளரிளம் பருவம்சென்ட்ரல் விஸ்டாஜாக்கி அசேகாவெகுஜன சினிமாபுதிய மாவட்டங்கள்ராஜீவ் மீதான வெறுப்புசைக்கோபாத்ஹெய்ல் செலாசிசங்க காலம்என்டிடிவிநாடாளுமன்றத் தேர்தல் 2024மார்க்ஸிய ஜிகாத்சிறுதானியங்கள்ஒரு பள்ளி வாழ்க்கை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!