கட்டுரை, அரசியல், கலாச்சாரம் 5 நிமிட வாசிப்பு

செழிக்கும் வெறுப்பு

ப.சிதம்பரம்
18 Apr 2022, 5:00 am
2

ஹிஜாப், ஹலால், பாங்கு தொடர்பான சர்ச்சைகள் கர்நாடக மாநிலத்தை ஆட்டிப்படைக்கின்றன. கர்நாடகத்தில் 2023இல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக மக்களை இந்துக்கள், முஸ்லிம்கள் என மத அடிப்படையில் பிளவுபடுத்த மிகவும் கவனமுடன் இந்தப் பிரச்சாரம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. 

ஹிஜாப் என்பது வீட்டைவிட்டு வெளியே வரும் இளம் பெண்ணோ, மகளிரோ தலையை மூடிக்கொள்ள அணியும் சிறிய முக்காடு துண்டாகும். வட இந்தியாவைச் சேர்ந்த இந்து பெண்கள், சீக்கிய மகளிர், கிறிஸ்தவ கன்னியாஸ்திரீகள், சீக்கிய ஆடவர் இன்னும் பலர் அவரவர் மத வழக்கப்படி தலையை முக்காடிட்டு மூடுவதை வழக்கமாகக்கொண்டுள்ளனர்.

ஹலால் என்பது ஆடு, மாடு போன்ற பிராணிகளையும் கோழி, வாத்து போன்ற பறவைகளையும் இஸ்லாமியச் சட்டப்படி கழுத்து நரம்பை அல்லது மூச்சுக்குழாயை அறுத்து - அங்குள்ள ரத்தத்தை வடியவிட்ட பிறகு சமைக்கும் முறையாகும். பிற மதங்களிலும்கூட சமையலுக்கு முன்னால் என்னென்ன செய்ய வேண்டும் என்ற நடைமுறைகள் உண்டு. 

யூத மதத்தில் இறைச்சியையும் பாலிலிருந்து கிடைக்கும் பால்படு பொருள்களையும் ஒன்றாகக் கலந்து சாப்பிடக் கூடாது எனும் மரபு கட்டாயமாகப் பின்பற்றப்படுகிறது. இந்துக்களிலும் பல உட்பிரிவினர்கள் அவர்களுடைய மூதாதையர் பின்பற்றிய விதிகளின்படி, உணவு தயாரித்து உண்ணும் வழக்கம் உள்ளவர்கள்.

பாங்கு என்பது, ஐந்து வேளையும் தொழுகைக்கு வருமாறு அன்பர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விடுக்கப்படும் பொது அழைப்பாகும். இந்து கோயில்களிலும் மாதா கோயில்களிலும் மணியடித்து அழைப்பைத் தெரிவிக்கிறார்கள். இந்து கோயில்களில் திருவிழாக்களின்போது மந்திரங்களை ஓதுவதையும் பக்திப் பாடல்களைப் பாடுவதையும் ஒலிபெருக்கிகள் மூலம் செய்கிறார்கள்.

பல நூற்றாண்டுகளான பழக்கம்

ஹிஜாப், ஹலால், பாங்கு ஆகியவை புதிய வழக்கங்கள் அல்ல. இந்தியாவில் இஸ்லாம் இடம்பெற்ற காலத்திலிருந்து தொடர்பவை. கர்நாடக மக்கள் (பழைய மைசூர் சமஸ்தானத்தைச் சேர்ந்தவர்கள்) இதை நூற்றாண்டுகளாக சகஜமாகக் கருதிவந்திருகிறார்கள். யாருமே ஆட்சேபம் தெரிவித்ததில்லை. இந்துக்களுடைய மதப் பழக்கவழக்கங்களை எந்த முஸ்லிமும் ஆட்சேபிப்பதில்லை. சுருக்கமாகச் சொல்வதென்றால் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இதர மதங்களின் ஆதரவாளர்கள் அமைதியாகவும் இணக்கமாகவுமே வாழ்ந்துவந்துள்ளனர். 

இவையெல்லாம், கர்நாடகத்தில் பாஜக கால் ஊன்றுவதற்கு முன்னால் வரையில்! கர்நாடகத்தை பாஜக இதற்கும் முன்னால் சில முறை ஆண்டிருக்கிறது தனியாகவும் - கூட்டணி அரசில் இடம்பெற்றும். சமீப காலமாக அது மாற்றுக் கட்சியினருக்கு வலை விரித்து தங்களுடைய கட்சியில் சேர்த்துக்கொண்டு பேரவையில் பெரும்பான்மை வலுவைக் கூட்டிக்கொண்டிருக்கிறது. இதற்கு ‘ஆபரேஷன் லோட்டஸ்’ (தாமரைச் செயல்திட்டம்) எனப் பெயரும் சூட்டியது.

அடுத்து 2023இல் கர்நாடக சட்டப்பேரவைக்குப் பொதுத் தேர்தல் நடைபெற வேண்டும். அதனுடைய அரசுகள் மக்களுக்குப் பயன்படும்படியான ஆட்சியைத் தந்ததில்லை. பாஜக அரசு மீண்டும் தேர்ந்தெடுக்கப்படும் என்பதற்கு உத்தரவாதம் இல்லாமல் அதன் பாடு ஆட்டம் கண்டிருக்கிறது. அதனுடைய 'ஆபரேஷன் லோட்டஸ்' செயல்திட்டம் இனியும் செயல்பட முடியாதபடிக்கு எதிர்க்கட்சிகள் வலுவான தடுப்பை எழுப்பிவிட்டன. எனவே இதையும் மீறி வெற்றி பெற, இந்துக்களை மத அடிப்படையில் உசுப்பிவிட்டு அணிதிரட்டி வெற்றி பெற இந்த சர்ச்சைகளைக் கிளப்பிவிட்டிருக்கிறது.

ஒவ்வொரு மாநிலத்தின் நிலைமைக்கும் ஏற்ப மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தி தேர்தலில் வெற்றி பெற வைக்க, அக்கட்சியில் சூழ்ச்சித்திறம் மிக்க அறிவாளிகள் அனேகம்! அதற்கான யுக்திகளில் ஒன்றுதான் உடை, உணவு, தொழுகை தொடர்பாக கர்நாடகத்தில் ஒரே சமயத்தில் கிளப்பிவிடப்பட்டிருக்கும் இந்த சர்ச்சைகள். 

கர்நாடகப் பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் ஹிஜாப் அணிந்துவரக் கூடாது என்ற திடீர் தடைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மத வழக்கப்படி அவசியமா என்ற கேள்வியை கர்நாடக உயர் நீதிமன்றத்தின் முழு அமர்வு எழுப்பி, இல்லை என்று பதில் அளித்துள்ளது. இந்தக் கேள்வியே பொருத்தமற்றது.

ஹிஜாப்பைத் தடைசெய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா என்ற கேள்வியைத்தான் உயர் நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டிருக்க வேண்டும். அப்படிப் பரிசீலித்திருந்தால், 'இந்தத் தடை மதம் தொடர்பான தனிப்பட்ட உரிமையில் தலையிடுவதாகுமா?' என்ற கேள்வியும் எழுந்திருக்கும், 'முஸ்லிம் பெண்கள் கல்வி பெறுவதற்கான உரிமையில் அரசு தலையிட முடியுமா?' என்ற கேள்வியும் பிறந்திருக்கும். இந்த வழக்கில் இப்போது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடப்பட்டிருக்கிறது. உண்மையான பிரச்சினைகள் பேசப்பட்டு இந்த வழக்கு சுமுகமாகத் தீர்க்கப்படும் என்று நம்புவோம்.

வெறுப்பை ஊட்டும் பேச்சு செழிக்கிறது

இந்த சர்ச்சைகள்தான் வெறுப்பை ஊட்டும் பேச்சுகளுக்கு மேடை அமைத்துக்கொடுக்கிறது. இரு தரப்பிலும் வெறுப்பை வளர்க்கும் பேச்சுகள் அனேகம். ஆனால், இவற்றில் எல்லாம் முதலில் வெறுப்பைத் தூண்டுவது இந்து மதத்தைச் சேர்ந்த தீவிர மத வெறியர்கள்தான். இதை மிகச் சில பிரமுகர்கள்தான் கண்டித்துள்ளனர் என்பது வருத்தமளிக்கும் விஷயமாகும். வரலாற்றாசிரியர் ராமசந்திர குஹா, தொழிலதிபர் கிரண் மஜும்தார் – ஷா மட்டும் விதிவிலக்காகத் திகழ்கின்றனர். மத வெறுப்புணர்வுப் பேச்சு வியாபாரிகள் தங்களுடைய கோபத்தை இவ்விருவர் மீது இப்போது திருப்பியுள்ளனர். 

வெறுப்பைத் தூண்டும் பேச்சுகள் எல்லா வரம்புகளையும் மீறிவருகின்றன. குறிப்பாக உத்தர பிரதேசத்திலும் உத்தராகண்டிலும்; தாஸ்னா தேவி ஆலய பூசாரியாகவும் செயல்படும் யதி நரசிங்கானந்த் அடிக்கடி இந்தக் குற்றத்தை வேண்டுமென்றே செய்கிறார். கடந்த ஆண்டு ஹரித்வாரில் நடந்த மத நிகழ்ச்சியில், முஸ்லிம் மகளிர் குறித்து அவதூறாகப் பேசி, அதற்காகக் கைதுசெய்யப்பட்டு சில வாரங்களில் ஜாமீனில் விடுதலைசெய்யப்பட்டார். இந்த ஆண்டு ஏப்ரலில், ‘இந்து மகா பஞ்சாயத்’ என்று அவர்களாகவே அழைத்துக்கொண்ட தில்லி மாநாட்டில் பேசுகையில், “உங்களுடைய மகள்களையும் சகோதரிகளையும் காப்பாற்றிக்கொள்ள ஆயுதம் எடுங்கள்” என்றார். “2029 அல்லது 2034 அல்லது 2039இல் இந்தியப் பிரதமராக முஸ்லிம்தான் வருவார்” என்று இந்துக்களை எச்சரித்தார். இது தொடர்பாக காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கையை மட்டும் பதிவுசெய்தனர் - அவரைக் கைதுசெய்யவும் இல்லை, ஏற்கெனவே அவருக்கு வழங்கியிருந்த ஜாமீன் விடுதலையை ரத்துசெய்யவும் இல்லை.

பயங்கரமான இன்னொரு உதாரணம் மகந்த் பஜ்ரங் முனி; இந்த ஆண்டு ஏப்ரல் 2இல் வெளியான இந்தி மொழிக் காணொளியில் அவர் பேசுவது வெளியானது. “உங்களுடைய சமூகத்தைச் சேர்ந்த எவராவது இந்துப் பெண்களைத் துன்புறுத்தினால், உங்கள் வீட்டுப் பெண்களை நானே வீட்டிலிருந்து தூக்கிவந்து வல்லுறவு கொள்வேன்” என்று அதில் எச்சரித்திருந்தார். அவர் யாரைக் குறிவைதுத்ப் பேசுகிறார் என்பது எளிதில் விளங்கும். அவரை உடனே கைதுசெய்ய வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியது. அப்படிப் பேசிய 11 நாள்களுக்குப் பிறகு அவர் கைதுசெய்யப்பட்டார்.

சகிப்பின்மையைச் சகிப்பது

ஒழுக்கங்களுக்கெல்லாம் இலக்கணமாகக் கருதப்படும் ராமரின் பிறந்த நாளன்று இப்படிப்பட்ட வெறுப்பான பேச்சுகள் பேசப்படுகின்றன, வன்செயல்கள் கையாளப்படுகின்றன, சகிப்பின்மை வெளிப்படுத்தப்படுகிறது. ஏதோ ஒரு சில புல்லுருவிகளால்தான் இப்படி நடக்கின்றன என்று இவற்றை அப்படியே விட்டுவிட முடியாது. இவற்றுக்கெல்லாம் பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகியவற்றின் ஆதரவு இருக்கிறது. இந்தியாவில் இந்து மத ஆதிக்க உணர்வை வளர்க்கவும், இந்தி பேசும் மாநிலங்களைத் தவிர பிற பகுதிகளிலும் இந்துக்களை மத அடிப்படையில் ஓரணியில் திரட்டவும் திட்டமிட்டு இப்படிப் பேசப்படுகின்றன. 

இது தொடர்பில் ‘ஃபாரீன் அஃபேர்ஸ்’ என்ற செல்வாக்குமிக்க இதழில் ஹர்தோஷ் சிங் பால் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. “மிகவும் உயர்வானது என்று ஆர்எஸ்எஸ் கருதும் இந்து மதச் சம்பிரதாயங்களையும் கோட்பாடுகளையும், இந்தியாவில் உள்ள இந்துக்களிலேயே நாற்பது கோடிக்கும் மேற்பட்டவர்கள் ஆதரிப்பதில்லை. ஆர்எஸ்எஸ் வலியுறுத்தும் வகையில் இந்து மதத்தை அவர்கள் கடைப்பிடிப்பதில்லை. இந்தியாவில் உள்ள இந்துக்கள் அனைவரையும் ஒரே மாதிரியான பண்பாட்டைக் கடைப்பிடிக்க வைத்துவிட வேண்டும் என்று அவர்கள் தீவிரமாக முயற்சிகளைச் செய்கிறார்கள். அப்படிச் செய்வதன் மூலம் இந்திய முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் இரண்டாம் தரக் குடிமக்களாக்குகிறார்கள்” என்கிறார்.

மதச் சகிப்பின்மை இந்த அளவுக்கு வளர்ந்துகொண்டிருக்கும் நிலையில், இந்தியாவின் உயர் பதவிகளில் அமர்ந்துள்ளவர்கள் கடைப்பிடிக்கும் திட்டமிட்ட மௌனத்தை வெறும் நிர்வாகச் செயலிழப்பு என்று கடந்துபோய்விட முடியாது!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

8

1

பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Rajendra kumar   2 years ago

தேவையான கட்டுரை.... மக்களின் தார்மீக கோபத்தை மடைமாற்றும் வேலை பக்குவமாக செய்யப்படுகிறது.... குடிமக்கள் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

jaimadhan amalanath   2 years ago

கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலத்தில் இதுபோன்ற செயல்கள் அடிக்கடி நடந்து கொண்டுதான் இருக்கிறது. இவ்வாறான வெறுப்புப் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்த எதிர்க்கட்சிகள் ஏதேனும் ஒரு யுக்தியை கையில் எடுக்க வேண்டும் என்பது அவசியம்.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

ராமசந்திரா குஹா கட்டுரைகீர்த்தனை இலக்கியம்ராமச்சந்திர குஹா கட்டுரைகள்அரசுப் பணிகள்சரண் சிங்அமெரிக்காவில் சாதிபொதுப் பட்டியல்மேற்கத்திய மருந்துகள்: மறுக்க முடியாத சில உண்மைகள்ராஜுமின்சார சீர்திருத்தம்புத்தகம்ஒற்றைச் சாளரமுறைதங்க.ஜெயராமன்வரி நிர்வாக முறைசட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுபால் ககாமேகடல் வளப் பெருக்கம்சீர்திருத்த நடவடிக்கைநாத்திகர்காதுவலிதாதுப் பொருள்அதானிபாலசுப்ரமணியம் முத்துசாமிபஜாஜ் ஸ்கூட்டர்கள்எழுத்துக் கலை: ஆர்வெல்லின் ஆறு விதிகள்பழைய கேள்விdr ganesanபோடா போடாமாமன்னன்: உதயநிதிகள் நிஜத்தில் பேச வேண்டும்வலிப்பு நோய்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!