‘மாதொருபாகன்’ வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏறத்தாழ ஒன்றரை ஆண்டு நடைபெற்றபோதும் ஒருமுறைகூட நீதிமன்றத்திற்குச் செல்லும் தேவை எனக்கு ஏற்படவில்லை. ஆனால், அரசு கலைக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றிய காலத்தில் அலுவல்ரீதியாக இருமுறை மாவட்ட நீதிமன்றப் படியேற நேர்ந்தது. இரண்டுமே மிகக் கசப்பான அனுபவங்கள்.
முதல் அனுபவம்
சேலம், ஆத்தூர், அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றிக்கொண்டிருந்தேன். முதல்வருக்கு அடுத்த நிலையில் மூத்த ஆசிரியர் என்பதால் அவர் விடுப்பு எடுக்கும் நாட்களில் முதல்வர் பொறுப்பு வகித்துக் கல்லூரியை நடத்துவது என் பணி. அப்போது துறைத் தலைவராக இருந்த ஆசிரியர் ஒருவர் மாணவிகளிடம் தொடர்ந்து மோசமாக நடந்தார் என்றும் பாலியல் தொல்லை கொடுத்தார் என்றும் குற்றச்சாட்டு.
அந்த ‘லீலாசிரியர்’ பற்றி முதல்வரிடம் சொல்லியும் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் வழக்கறிஞரோடு காவல் நிலையம் சென்றுவிட்டார். சாதி, அரசியல், பணம் என எல்லா நிலையிலும் அவ்வாசிரியர் செல்வாக்கு உடையவர் என்றாலும் புகார் வலுவானதாக இருந்ததால் கைதுசெய்தாக வேண்டிய நிர்ப்பந்தம் காவல் துறைக்கு ஏற்பட்டது. உயர்கல்வித் துறை அவரைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்தது.
வழக்கு கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேல் ஆத்தூர் நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருந்தது. ஒருகட்டத்தில் கல்லூரியிலிருந்து சில ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் கேட்டது. நீதிமன்றத்திலிருந்து தகவல் கேட்டு ஒருகடிதம் வந்தால்கூட அது ‘சம்மன்’ ஆகிவிடுகிறது. முதல்வருக்குத்தான் அந்தச் சம்மன் வந்தது. மாணவியின் புகார் தொடர்பாகக் கல்லூரி நிர்வாகம் எடுத்த நடவடிக்கை ஆவணங்கள், சில மாதங்களுக்கான மாணவர் வருகைப் பதிவேட்டு நகல் முதலியவற்றைக் கேட்டிருந்தனர்.
அலுவலகப் பணியாளர் ஒருவரிடம் கொடுத்தனுப்பிவிடலாம் என எண்ணி ஆவணங்களைத் தயார்செய்யும்படி முதல்வர் சொன்னார். தயாரித்து முடித்த பிறகு ‘கல்லூரி முதல்வரே நேரில் வந்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்’ என்று அந்தச் சம்மனில் இருப்பதைக் கண்காணிப்பாளர் சுட்டிக்காட்டினார். பெண் பேராசிரியர் ஒருவரின் கணவர் வழக்கறிஞராக இருந்தார். அவரிடம் விசாரித்தனர். முதல்வரே நேரில் வர வேண்டும் என்பதை அவரும் உறுதிப்படுத்தினார். ‘வாருங்கள். தேவையான உதவியை நான் செய்கிறேன்’ என்று ஆறுதலாகவும் சொன்னார். ஆவண நகல்களை அஞ்சலில் அனுப்பக் கூடாது; அலுவலகப் பணியாளரிடமோ ஆசிரியரிடமோ கொடுத்தனுப்பக் கூடாது; முதல்வரே நேரில் வந்துதான் கொடுக்க வேண்டும். வேறு விசாரணை எதுவும் கிடையாது, கொடுத்ததும் போய்விடலாம் என்றும் வழக்கறிஞர் தெளிவுபடுத்தினார்.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
முதல்வருக்கு பதிலாக நான்
நீதிமன்றத்திற்குச் செல்வதில் முதல்வருக்கு விருப்பமில்லை. ஏற்கெனவே அப்படிச் சென்றுவந்த அனுபவம் அவருக்கு இருந்திருக்குமோ என்னவோ. சம்மனைக் கொண்டுவரச் சொல்லி ஒருமுறை வாசித்துப் பார்த்தார். பிறகு என்னை அழைத்து “அன்றைக்கு நான் விடுப்பு. அதனால் நீங்கள்தான் போய்ச் சமர்ப்பித்து வர வேண்டும்” என்று சொன்னார். “முதல்வரே வர வேண்டும் என்கிறார்கள். நான் போனால் ஏற்றுக்கொள்வார்களா?” என்று கேட்டேன். அலுவல்ரீதியான தர்க்கப்படி இப்படிச் சொன்னார்:
“சம்மன் என் பெயர் போட்டு வரவில்லை. பொதுவாக முதல்வர் என்றுதான் இருக்கிறது. கடிதத்தில் முதல் நாளே கையொப்பம் போட்டுவிடுகிறேன். சமர்ப்பிக்கும் நாளில் நீங்கள்தான் முதல்வர் பொறுப்பில் இருக்கிறீர்கள். அன்றைக்கு நீங்கள்தான் முதல்வர். ஆகவே, நீங்கள் போனால் ஒன்றும் பிரச்சினையில்லை.”
முதல்வர் பொறுப்பு வகிப்பவருக்கு ஒரு அதிகாரமும் இல்லை என்று வழக்கமாகச் சொல்லும் அவர், அன்றைக்கு முதல்வர் பொறுப்பும் முதல்வரும் ஒன்றுதான் என்று ஒத்துக்கொண்டார். அதனாலோ என்னவோ நீதிமன்றம் செல்வதற்குச் சம்மதித்தேன். அன்று காலை பத்து மணிக்கு நீதிமன்றத்தில் இருக்க வேண்டும் என்றார்கள். முதல் நாளே வாங்கி வைத்துக்கொண்ட ஆவணப் பிரதிகளுடன் சரியான நேரத்திற்குச் சென்றுவிட்டேன். எனக்கு முன்னால் அங்கு உட்கார்ந்திருந்த ‘லீலாசிரியர்’ என்னைப் பார்த்து இளித்தார். இப்படி ஒரு குற்றச்சாட்டுக்கு ஆளாகிவிட்டோமே என்னும் வருத்தமோ கவலையோ அவர் முகத்தில் சிறிதும் இல்லை. குறைந்தபட்ச வெட்கம் கூடவா இல்லாமல் போகும்? ஏதோ பெரிய காரியத்தைச் சாதித்துவிட்ட திமிரோடு தெரிந்தார்.
“உங்கள அனுப்பிட்டாரா?” என்று என்னிடம் கேட்டார்.
“ஆம்” எனத் தலையசைத்தேன்.
அவரிடம் பேசுவதில் எனக்கு விருப்பமே இல்லை. என் முகத்தில் வெறுப்பைவிட நீதிமன்றத்திற்கு வந்து நிற்கும் பதற்றம் அதிகம் தெரிந்ததுபோல.
“பதட்டமா இருக்கீங்களா? மொதல் மொற அப்படித்தான் இருக்கும். நாலஞ்சு தடவ வந்துட்டாப் பழகிரும்” எனச் சொல்லி மீண்டும் இளித்தார் அவர்.
நான் ஒன்றும் பேசவில்லை. வழக்கறிஞர்களையும் வந்து குழுமியிருந்த மக்கள் கூட்டத்தையும் வேடிக்கை பார்த்தபடி ஓர் இருக்கையில் அமர்ந்திருந்தேன். லீலாசிரியர் ஏதோ வழவழவென்று பேசிக்கொண்டேயிருந்தார். அவரருகே இருக்கவும் பேச்சைக் கேட்கவும் அருவருப்பாக இருந்தது. அவ்வழக்கை விசாரித்தவர் பெண் நீதிபதி. அன்றைக்கு எப்போது அதை எடுப்பார் என்று ஒருவருக்கும் தெரியவில்லை. “உட்காந்திருங்க. கூப்புடும்போது உள்ள வந்தாப் போதும்” என்று வழக்கறிஞர் சொன்னார்.
லீலாசிரியர் என்னிடம் பேசிப் பேசித் தொல்லை கொடுத்துக்கொண்டே இருந்தார். அவர் மீதான குற்றச்சாட்டுக்குச் சரியான முகாந்திரம் இருந்தது. ஆகவே, அவரிடம் உரையாட எனக்கு விருப்பமில்லை. என்னை நீதிமன்றத்திற்கு வரவைத்துவிட்ட மமதையில் அவர் பேசுவதுபோலத் தெரிந்தது. இரண்டு மணி நேரத்திற்கு மேல் நீதிமன்ற வராந்தாவில் மனிதர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். அதன்பின் அவசரமாக வந்து வழக்கறிஞர் அழைத்தார். அந்த நீதிமன்ற அறைக்குள் நுழைந்தேன். ஆவணங்களைக் கையில் வைத்துக்கொண்டு நீதிமன்றத்தின் உள்ளே ஒரு ஓரமாய் நிற்கும்படி வழக்கறிஞர் சொன்னார்; நின்றேன்.
உயரமான பீடத்தில் நீதிபதி அமர்ந்திருந்தார். அவருக்குப் பின்னால் நின்றிருந்த அலுவலக உதவியாளரிடம் என்னவோ கேட்டார். கோப்பையில் அவர் எதையோ கொண்டுவந்து வைத்தார். காப்பி அல்லது தேநீராக இருக்கலாம். நீதிபதியின் முகத்தில் கோபம் வெடிக்கத் திரும்பி “ஒன்னுந் தெரியாது. சனியன் சனியன்” என்று திட்டினார். ‘சனியன்’ மட்டும் சத்தமாகக் கேட்டது. உதவியாளர் ஏதும் பேசாமல் பின்னால் ஒதுங்கினார். அடுத்து நீதிபதியின் அருகில் ஒருபெண் சென்றார். கையில் கோப்பு வைத்திருந்ததால் எழுத்தராக இருக்கலாம் என நினைக்க வைத்தது. அவர் நீட்டியதை வாங்கிய நீதிபதி அப்பெண்ணையும் ஏதோ சொல்லிச் ‘சனியன் சனியன்’ என்று திட்டினார். அவ்வறையில் வழக்கறிஞர்கள், பார்வையாளர்கள், வழக்கிற்கென வந்தோர் உட்படப் பலர் இருந்தனர். அது ஒரு பொதுவெளியாகவே தோன்றியது. அவ்வுணர்வே இல்லாமல் சக பணியாளர்களை ஏசினார்.
நீதிபதி முன்பு நான்
ஒருவழியாக ஏச்சுப்படலம் முடிந்து தன் திருப்பார்வையை எதிரில் இருப்போர் முன் திருப்பினார். கோப்பைப் பார்த்துவிட்டு வழக்கறிஞர் பக்கம் திரும்பி “பிரின்சிபால் எங்க?” என்று கேட்டார். இன்னும் சற்றே முன்னால் வரும்படி வழக்கறிஞர் எனக்குச் சாடை காட்டினார். நான் முன்னால் போய் நின்றேன். “டாக்குமெண்ட்ஸ் இருக்கா?” என்று என்னைப் பார்த்து கர்ஜனை வந்தது. இருக்கிறது என்பதற்கு அடையாளமாகக் கையில் இருந்த உறையைக் காட்டித் தலையசைத்தேன். கதர் சட்டை போட்டுக்கொண்டு சிறுத்து நின்ற என் உருவம் அவருக்கு எப்படித் தோன்றியதோ தெரியவில்லை.
“பிரின்சிபாலா?” என்று கடுங்குரலில் கேட்டார்.
“பிரின்சிபால் இன்னைக்கு லீவுங்க. நான் பிரின்சிபால் இன்சார்ஜ்” என்றேன்.
“பிரின்சிபாலத்தான வரச் சொன்னன்? உன்னய ஆரு கூப்பிட்டா? அறிவில்ல? கெட் அவுட்” என்று கத்தினார்.
உடனே திரும்பி வெளியே வந்துவிட்டேன். எனக்குப் பெருத்த அவமானமாக இருந்தது. வேகமாகக் கீழிறிங்கி என் வண்டி இருக்குமிடத்திற்குப் போனேன். லீலாசிரியர் பின்னாலேயே ஓடிவந்தார். “சார் இருங்க. ஜட்ஜ்கிட்ட வக்கீல் பேசுவாரு” என்றார் அவர். ஆவணத் தாக்கல் தாமதமானால் வழக்கு இன்னும் இழுக்கக் கூடும். நான் எதுவும் பேசவில்லை. வேகமாக வண்டியை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். கல்லூரிக்கு வந்து சேர்ந்து பார்த்தால் வழக்கறிஞர் இரண்டு மூன்று முறை அழைத்திருந்தார். அழைத்துப் பேசினேன்.
“அந்தம்மா எப்பவுமே அப்படித்தான் சார். யாரையும் மரியாதையாப் பேசாது. நீங்க வெளிய போனதுக்கப்பறம் வக்கீல் பேசினாரு. மறுபடியும் கூப்பிட்டாங்க. நீங்க அதுக்குள்ள போயிட்டீங்க” என்றார் அவர்.
இந்த வழக்கு தொடர்பாக எக்காரணம் கொண்டும் இனிமேல் நீதிமன்றம் செல்ல மாட்டேன் என்று முதல்வரிடம் கறாராகச் சொல்லிவிட்டேன்.
இரண்டாவது அனுபவம்
நாமக்கல் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றிய காலத்தில் சேலம் மாவட்ட நீதிமன்றத்திலிருந்து ஒரு சம்மனோடு காவலர் ஒருவர் வந்தார். இந்தக் கல்லூரியில் ஐந்தாறு ஆண்டுக்கு முன் படித்த மாணவர் ஒருவர் மீது பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டு. அம்மாணவருக்கு இருபத்தைந்து வயதுதான். திருமணமாகி இருகுழந்தைகள் இருக்கின்றன. மினிடோர் வண்டி ஓட்டுநர் வேலை. பதினான்கு வயதுச் சிறுமியான பள்ளி மாணவி ஒருவர் கருவுறக் காரணமாகிவிட்டார். போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அம்மாணவர் இக்கல்லூரியில்தான் படித்தாரா என்பதற்கான கடிதத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். நீதிமன்றத்திற்குக் கல்லூரி முதல்வரே நேரில் சென்று கடிதம் கொடுக்க வேண்டும்.
எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அக்கல்லூரியில் பதினைந்து ஆண்டுகள் ஆசிரியராக இருந்திருக்கிறேன். இப்போது முதல்வர். குறிப்பிட்ட மாணவர் என் துறை சார்ந்தவரல்ல. அவர் வகுப்புக்கு நான் சென்றதும் இல்லை. இருப்பினும் நம் கல்லூரி மாணவர் ஒருவர் இப்படிப்பட்ட குற்றத்திற்கு உள்ளாகிவிட்டாரே, அதற்காக நீதிமன்றம் செல்ல வேண்டியிருக்கிறதே என்று சஞ்சலப்பட்டேன்.
ஏற்கெனவே அரசு கல்லூரிகள் பற்றிப் பொதுவெளியில் நல்ல அபிப்ராயம் இல்லை. இந்த மாணவர் தனியார் கல்லூரியில் படித்திருந்தால் செய்திகளில் அந்தக் கல்லூரிப் பெயர் செய்தியில் வரவே வராது. அரசு கல்லூரி என்றால் முழு விவரத்தோடு செய்தியில் இடம்பெற்றுவிடும். அந்தக் கவலையும் எனக்குச் சேர்ந்துகொண்டது. “எதற்காக நீதிமன்றத்திற்கு முதல்வர் போகிறார்?” என்று யாரேனும் கேட்டால் என்னவென்று சொல்வது? சொன்னால் அது பரவவும் வாய்ப்பிருக்கிறது. பல குழப்பங்கள்.
அந்த வழக்கை விசாரிக்கும் காவல் அதிகாரி எனக்குப் பேசினார். குறிப்பிட்ட நாளில் வழக்கு தொடர்பான பலரையும் அழைத்துவந்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டியது அவரது வேலை. “எப்படியாவது வந்துவிடுங்கள் சார். நீங்கள் கடிதம் கொடுத்துவிட்டு உடனே சென்றுவிடலாம். முதலில் உங்களை உள்ளே அனுப்புகிறோம்” என்று கெஞ்சாத குறையாகச் சொன்னார். ஆத்தூர் நீதிமன்ற அனுபவம் காரணமாக நானே போவது என முடிவுசெய்தேன். அந்த நாளில் மாணவர் சேர்க்கைப் பணியிருந்தது. அடுத்த மூத்த ஆசிரியரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு நீதிமன்றத்திற்குப் போனேன்.
சமூகத்தின் போலி பாவனைகள்
முதல்முறை போலவே இப்போதும் நீதிமன்ற வளாகத்தில் நெடுநேரக் காத்திருப்பு. பெருங்கூட்டம் நின்றிருந்தது. எங்காவது ஒரு பெஞ்ச் இருந்தது. அதில் நெருக்கிக்கொண்டு சிலர் உட்கார்ந்திருந்தனர். யாராவது ஒருவர் எழுந்தால் அந்த இடத்தைப் பிடிக்க அருகிலேயே ஆட்கள் நின்றுகொண்டிருந்தனர். அது போக்சோ வழக்குகளை மட்டும் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம்போல. அங்கே நின்ற கூட்டத்தைப் பார்த்தால் இத்தனை பாலியல் பிறழ்வு வழக்குகளா என்று அதிர்ச்சியாக இருந்தது. நம் சமூகம் ஒழுங்குக்கு உட்பட்டுச் சரியாக நடப்பதுபோலச் சாதியமும் மதவாதமும் செய்யும் போலிப் பாவனை பற்றி யோசித்துக்கொண்டு வேடிக்கை பார்த்திருந்தேன்.
எந்த வழக்கை எப்போது எடுப்பார்கள் என்று தெரியாது; யாரை எப்போது அழைப்பார்கள் என்பதும் தெரியாது. நரக வாசலில் தண்டனைக்காகக் காத்திருப்போரைப் போலவே எல்லோர் முகங்களும் தெரிந்தன. யார் எதற்கு வந்திருக்கிறார்கள் என்னும் பேதமில்லை. அங்கே வந்திருக்கும் ஒவ்வொருவரும் குற்றம் செய்தவர்தான் என்று அச்சூழல் உணர்த்துவதாகத் தோன்றியது. காவல் அதிகாரி தன் அதிகாரத்தைப் பயன்படுத்திப் பெஞ்சில் ஓரிடம் பிடித்துக் கொடுத்தார். அதில் அமர்ந்திருந்தேன்.
உள்ளே போய் விசாரித்துவிட்டு வந்த அவர் “இன்னம் கொஞ்சம் நேரமாவும் சார். ஒரு காப்பி குடிச்சுட்டு வாங்க” என்று உடன் காவலர் ஒருவரை அனுப்பினார். என்னைக் கவனிப்பதற்காகவா, நான் கிளம்பிப் போய்விடக் கூடாது என்பதால் கண்காணிப்புக்காகவா தெரியவில்லை. தேநீர் பருகியதும் பாதுகாப்பாக மீண்டும் என்னை அழைத்துவந்து பெஞ்சில் அமர வைத்தார் காவலர். பட்டியலில் இந்த வழக்கு இருக்கிறது. மதிய உணவுக்குப் போவதற்கு முன் நீதிபதி எடுத்துக்கொண்டால் நல்லது. இல்லாவிட்டால் பிற்பகலில்தான் அழைப்பார்கள் என்று காவலர் வந்து என்னிடம் ரகசியம்போலச் சொன்னார். எப்படியும் இந்த நாளை இதற்கென ஒதுக்கியாகிவிட்டது, பொறுத்திருப்போம் என்று எனக்குள் சமாதானம் சொல்லிக்கொண்டேன்.
வெகுநேரத்திற்குப் பிறகு எனக்கு அழைப்பு வந்தது. ஆவணக் கடிதத்தைக் கையிலெடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தேன். சாட்சிக் கூண்டில் ஏறி நிற்கச் சொன்னார்கள். கடிதத்தை ஒப்படைக்க வந்தவன்தானே நான்? கூண்டில் ஏற வேண்டும் என்பதைக் காவலர்கள் சொல்லவில்லையே. ஏறி நின்றேன். இங்கும் பெண் நீதிபதி. அவர் முகத்திலும் நெகிழ்ச்சியோ இளக்கமோ இல்லை.
அலுவலக உதவியாளர் வந்து என் கையிலிருந்த கடிதத்தைப் பெற்றுப் பிரித்து நீதிபதியிடம் கொடுத்தார். அதைப் பார்த்த பிறகு நீதிபதி “சொல்லுங்க” என்று என்னை நோக்கினார். என்ன சொல்லச் சொல்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. எதுவும் பேசாமல் நிற்க முடியாதே. காவலர் துறையினர் என்னிடம் கேட்ட விவரங்களைச் சொல்லத் தொடங்கினேன். நீதிபதி முகத்தில் கோபம் கொப்பளித்தது.
“என்ன கதை சொல்லிக்கிட்டு இருக்கறீங்க. அதெல்லாம் காலேஜ்ல வெச்சுக்கங்க” என்றார்.
அதிர்ந்து அப்படியே நின்றேன். வெறுப்போடு என்னைப் பார்த்த நீதிபதி “அவன் உங்க காலேஜ் ஸ்டூடண்ட்தானா?” என்றார். “ஆமாம்” என்றேன். “சரி, போங்க” என்று இறங்கி வெளியே வந்தேன். இந்தக் கேள்வியை முதலிலேயே கேட்டிருந்தால் பதில் சொல்லியிருப்பேனே. காவல் துறை அதிகாரி பின்னாலேயே வந்து “நன்றி சார்” என்றார். அவமான உணர்வோடு தலையைக் குனிந்தபடி நடந்தேன்.
நீதிபதியின் அதிகார அளவு?
மூவாயிரம், நான்காயிரம் பேர் பயிலும் கல்வி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரை ஒரே ஒரு கடிதம் கொடுப்பதற்காக நேரில் வர வைக்க வேண்டுமா? அதுவும் நீதிபதிக்கு முன்னால் கொண்டுவந்துதான் கொடுக்க வேண்டுமா? உரிய முத்திரையுடன் கையொப்பம் இட்ட ஆவணங்கள் போதாதா? சாட்சியை நேரில் வரச் சொல்வதில் அர்த்தம் இருக்கிறது. ஒரு ஆவண நகலை ஒப்படைக்க அந்நிறுவனத் தலைவரே நேரில் வர வேண்டியதன் அவசியம் எனக்குப் புரியவில்லை. வேறு வேலை செய்யும் ஒருவரை நீதிமன்றம் வரவழைத்தாலும் அதற்கென நியாயமான காரணம் இருக்க வேண்டாமா? ஒருவரின் முழுநாள் என்பது அவருக்கானது. அவரது ஆயுளில் ஒருநாள் என்னும் மதிப்புடையது. அதை எளிதாக அபகரித்துக்கொள்வதுதான் நீதியா?
ஒரு நீதிபதியின் அதிகார அளவு எவ்வளவு? வானளாவிய அதிகாரம் உண்டோ? இருக்கட்டும். சக பணியாளர்களைச் ‘சனியன்’ என்று திட்டுவதற்கும் ஒரு தகவல் கொடுக்க வந்தவரை ‘அறிவில்லையா?’ என்று கேட்பதற்கும் அந்த அதிகாரம்தான் காரணமா? நீதி சக மனிதர்களுக்கு மரியாதை தராதா? ‘கெட் அவுட்’ என்று விரட்டும் சொல் ஒருவரை அவமானப்படுத்துவது அல்லவா? ‘வெளியே போ’ என்று சொன்னதால் பிரிந்த உறவுக் கதைகள் எத்தனையோ உண்டு. அந்தச் சொல் காயப்படுத்தும் தன்மை கொண்டதல்லவா?
கற்பித்தலைக் ‘கதை சொல்லல்’ என்று ஒருவர் சொல்கிறார் என்றால் கல்வியைப் பற்றி அவருக்கு என்ன புரிதல் இருக்க முடியும்? பதில் சரியாக இருக்கிறதோ இல்லையோ கேள்வி சரியாக இருக்க வேண்டும் என்பது என் கற்பித்தல் அனுபவத்தில் நான் அறிந்துகொண்ட விஷயம்.
என் மனப்பதிவு
‘மனிதன்’ திரைப்படத்தில் நீதிபதியாக வரும் ராதாரவி சொல்வார்: “இது என்னுடைய கோர்ட். இங்க நான் சொல்றதுதான் நடக்கும்.” அவ்விடத்தில் அது பொருத்தமான வசனமாகத்தான் தோன்றும். சரி, உங்களுடைய நீதிமன்றத்தில் சகமனிதர்களை வசை பாடுவதற்கும் புண்படுத்துவதற்கும் உரிமை உள்ளதா? மரியாதையின்றி நடத்துவதற்கு உரிமை உள்ளதா? ஒருமையில் அழைப்பதற்கும் வசை பாடுவதற்கும் உரிமை உள்ளதா?
நீதிமன்றத்திற்கு வருவோர் எல்லோரும் குற்றவாளிகள்தானா? அவர்கள் உட்கார்ந்து இளைப்பாறுவதற்குக்கூடப் போதுமான இடம்தர முடியாதா? நீதிக்கு நிதி போதவில்லையோ? ஒரு வழக்கை எடுக்கும் நாளைச் சொல்ல முடிகிறது. சரி. நேரத்தை முன்கூட்டியே தெரிவிப்பது அத்தனை கடினமா? ஒரு வழக்கை விசாரிக்கும்போது சற்றே நேரம் முன்பின் ஆகும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. என்றாலும் முற்பகலா பிற்பகலா என்பதைக்கூடவா சொல்ல முடியாது?
எத்தனையோ கேள்விகள். வெறுப்பு மண்டிய அதிகார முகம் கொண்டது நீதி என்பதே என் அனுபவ மனப்பதிவு.
தொடர்புடைய கட்டுரைகள்
ஆசிரியர்களும் கையூட்டும்
மாடுகளா மாணவர்கள்?
கருத்துரிமை தினம்!
தினமும் ஏன் புரோட்டா சாப்பிடுகிறார்கள்?
ஆசிரியர்களின் ஆயுதம்
7
பின்னூட்டம் (2)
Login / Create an account to add a comment / reply.
Thiruvasagam 6 months ago
This is true fascism and has no indifference between right & wrong. Just can't imagine how the writer would slept that night. A man with this much integrity got bashed by single word, much horrible to visualize the scenario.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Krishnamoorthy Muniyappan 6 months ago
Its a very bad experience..
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.