கட்டுரை, தொடர், தமிழ் ஒன்றே போதும் 5 நிமிட வாசிப்பு
தினமும் ஏன் புரோட்டா சாப்பிடுகிறார்கள்?
அமெரிக்காவின் பாஸ்டன் நகரத்தில் ஒரு விடுதியைக் கண்டேன். வெவ்வேறு நாடுகளிலிருந்து அங்கே வந்து உடல் உழைப்பு சார்ந்த வேலைகளைச் செய்யும் பணியாளர்கள் இரவில் இலவசமாகத் தங்குவதற்காக அரசு நடத்தும் விடுதி அது. பனியும் குளிரும் நிறைந்த அப்பகுதியில் பாதுகாப்பாகத் தங்கச் செலவு செய்ய இயாலதவர்கள் பலர் அவ்விடுதியில் தங்கிக்கொள்கின்றனர். இப்படி ஒவ்வொரு நாடும் தம் குடிமக்களையும் குடிமக்களுக்கு உதவியாக வேலை செய்ய வருவோரையும் பாதுகாக்கப் பல்வேறு இலவசத் திட்டங்களைச் செயல்படுத்திக்கொண்டுதான் உள்ளன.
இப்படி தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ள காலை உணவுத் திட்டம் பெரிதும் வரவேற்க வேண்டிய திட்டம்.
காமராஜர், எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் பள்ளிகளை நோக்கிக் குழந்தைகளை ஈர்ப்பதற்காக மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று சொல்லப்பட்டதைப் போல, காலை உணவுத் திட்டத்துக்கு நோக்கம் கற்பிக்க வேண்டியது இல்லை. தம் பிள்ளைகளைக் குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு வரைக்கும் படிக்க வைத்துவிட வேண்டும் என்றே எல்லாப் பெற்றோரும் எண்ணுகின்றனர். ஓட்டுநர் உரிமம், அலுவலகப் பணியாளர் தகுதித் தேர்வு உள்ளிட்டவற்றுக்குப் பத்தாம் வகுப்பு வரைக்குமான கல்வி தேவை என்றிருப்பதால் அதைப் பெற்றோர் அறிந்துள்ளனர். அரசுப் பள்ளிகள் அவரவர் ஊருக்கு அண்மையில் இருப்பதால் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிப்பதும் இயல்பானதாக மாறியுள்ளது. பெரும்பாலோர் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வதில்லை என்னும் நிலையையும் இன்று காண்கிறோம்.
இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு
ஃபின்லாந்து பள்ளி உணவு: எதிர்காலத்துக்கான முதலீடு
13 Nov 2022
காலை உணவும் கல்லூரிகளும்
அப்படியென்றால், காலை உணவுத் திட்டத்தின் நோக்கம் வேறு என்னவாக இருக்க வேண்டும்?
ஊட்டச்சத்து நிறைந்த உணவு வழங்குதல், உயர்கல்விக்கு மாணவர்களை அனுப்புதல் ஆகியவையும் அதன் நோக்கமாக இருப்பது அவசியம். அரசுக் கல்லூரியில் ஆசிரியராகவும் முதல்வராகவும் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டு சிலவற்றைச் சொல்ல விரும்புகிறேன்.
கடந்த இருபது ஆண்டுகளில் கிட்டத்தட்ட நூறு அரசுக் கலைக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. மாவட்டத்திற்கோர் அரசுப் பொறியியல் கல்லூரி எனவும் நிலைமை மேம்பட்டுள்ளது. எனினும் பள்ளிகளின் எண்ணிக்கை அளவுக்குக் கல்லூரிகள் இல்லை. உயர்கல்வி பெறுவோரில் பெரும்பான்மையோர் வெளியூருக்குச் சென்றே படிக்கிறார்கள். தமக்கு அருகில் கல்லூரிகள் இல்லை என்பதோடு தமக்கு விருப்பமான படிப்பைப் படிக்க வேண்டும் என்றால் ஊரை விட்டு வெளியேறித்தான் ஆக வேண்டும் என்பது யதார்த்த நிலை.
அரசுக் கலைக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசு நலத் துறைகள் நடத்தும் இலவச விடுதிகள் உள்ளன. அவற்றில் குறைந்த அளவு மாணவர்கள் சேரும் அளவுக்கே இடங்கள் உள்ளன. அவற்றில் இடம் கிடைக்காதோர் கல்லூரிக்கு அருகில் அறை எடுத்துச் சுயமாகச் சமைத்துச் சாப்பிட்டுக்கொண்டு படிக்க வேண்டியுள்ளது. அறை வாடகை, சாப்பாடு ஆகியவற்றுக்கு ஆகும் செலவைச் சமாளிக்கப் பணம் கொடுக்கும் வசதி பெற்றோருக்கு இருப்பதில்லை. மாணவர்கள் ஏதேனும் பகுதி நேர வேலை பார்த்துத் தம் செலவை ஈடு கட்டிக்கொள்கிறார்கள். அப்படியும் நல்ல உணவை உண்ண இயலாது. இருவேளை வயிற்றை நிரப்பிக்கொள்ள ஏதோ ஓர் உணவு. அரிசி கிடைப்பது எளிதாக இருப்பதால் சோற்றைப் போட்டு வயிற்றை நிரப்பிக்கொள்கிறார்கள். அவ்வளவுதான்.
வீட்டிலிருந்து தினமும் பேருந்தில் கல்லூரி வந்து செல்வோர் மிகுதி. அரசுப் பேருந்துகளில் முப்பது கிலோ மீட்டர் வரைக்கும் இலவசப் பயணம் செய்யலாம் என்பதால் வந்து செல்கிறார்கள். முதன்மைச் சாலையிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் ஊர் இருக்கும் மாணவர்கள் மிதிவண்டியிலோ நடந்தோ குறிப்பிட்ட தூரம் வந்து இரண்டு அல்லது மூன்று பேருந்தேறிக் கல்லூரிக்கு வருகிறார்கள். பல ஊர்களுக்குக் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பேருந்து வசதி இருக்கிறது. வீட்டில் காலை ஆறு மணிக்குப் புறப்பட்டு நடந்தும் சில பேருந்துகள் ஏறியும் ஒன்பது மணிக்குக் கல்லூரி வந்து சேரும் மாணவர்கள் பலருண்டு.
உயர்கல்வி மாணவர்களின் உணவு
நல்ல திட்டங்கள் நடைமுறைக்கு வரும்போது ஏற்படும் சிக்கல்களைத் தொகுத்துப் பரிசீலித்துத் திருத்தம் செய்யும் போக்கு நம் அதிகாரிகளிடமோ அரசியலர்களிடமோ இல்லை. கட்டணமில்லாப் பேருந்துப் பயணத்திற்கு முப்பத்திரண்டு கிலோ மீட்டர் என்று தீர்மானித்துள்ளார்கள். திருச்செங்கோட்டிலிருந்து நாமக்கல் அரசுக் கல்லூரிக்கு வர நாற்பது கிலோ மீட்டர் தொலைவு. 32 கிலோ மீட்டரைவிட அதிகமாக இருப்பதால் நகரப் பேருந்து ஒன்றில் ஏறிப் பணம் கொடுத்துப் பயணம் செய்து இடையில் உள்ள ஊர் நிறுத்தம் ஒன்றில் இறங்கி வேறொரு பேருந்தில் ஏறி இலவசப் பயணச் சலுகையைப் பயன்படுத்துவார்கள்.
நாமக்கல்லில் இறங்கிக் கல்லூரிக்கு வர இன்னொரு நகரப் பேருந்து. இந்தக் கஷ்டத்தைத் தீர்க்க 32 கிமீ என்பதைக் கட்டாயப்படுத்தாமல் ஒவ்வொரு அரசுக் கல்லூரிக்கும் அருகில் உள்ள வட்டத் தலைநகரை மையமாகக் கொண்டு அந்தந்த மாவட்ட நிர்வாகமே தூரத்தைத் தீர்மானித்துக்கொள்ளலாம் என்பதை நடைமுறைப்படுத்தலாம்.
சரி, இப்படியெல்லாம் சிரமப்பட்டுக் கல்லூரிக்கு வருவோர் காலையில் சாப்பிட்டிருக்க வாய்ப்பிருக்கிறதா? பலர் காலைச் சாப்பாட்டைத் தவிர்த்துத்தான் வருகிறார்கள். சக வகுப்புத் தோழர்கள் யாரேனும் உணவு கொண்டுவந்திருந்தால் அதிலிருந்து ஓரிரு வாய் சாப்பிடக் கிடைக்கும். விடுதியில் தங்கியிருக்கும் நண்பர்கள் தயவில் அவர்கள் அறைக்கு வரும் ‘வாளி சாப்பாட்டில்’ கொஞ்சம் உண்ணலாம். கையில் சில பத்து ரூபாய் இருப்பின், கல்லூரியில் உணவகமும் இருந்தால் சாப்பிடுவார்கள்.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
உணவகத்தில் விசாரித்துப் பார்த்தால் மாணவர்கள் எதைச் சாப்பிடுகிறார்கள் என்னும் தகவல் கிடைக்கும். பலகாரத்தில் போண்டா அதிகமாக விற்பனையாகும். கடலை மாவில் கல் உருண்டை போலச் சுட்டு வைத்திருக்கும் அந்த போண்டா நான்கைந்து ரூபாய்க்குக் கிடைக்கும். இரண்டைப் பிட்டு வயிற்றுக்குள் போட்டுவிட்டால் பிற்பகல் வரைக்கும் தாங்கும். அதேபோல புரோட்டா அதிகமாக விற்கும். மைதா மாவுப் பண்டமான புரோட்டா பொதுவாகத் தமிழ்நாட்டில் அதிகம் விற்கும் உணவுப் பண்டம்.
ருசிக்கு அதை உண்போர் குறைவு; பசிக்கு உண்போரே அதிகம். இரண்டு புரோட்டாவைக் குருமாவில் துவைத்துச் சாப்பிட்டுவிட்டால் வெகுநேரம் பசிக்காது. கல்லூரி மாணவர்கள் என்றல்ல, பொதுவாகவே உடலுழைப்பாளர்களின் விருப்ப உணவாகப் புரோட்டா இருப்பதற்குக் காரணம் பசிதான்.
முட்டையும் ரொட்டியும்
இளவயதில் கிடைக்க வேண்டிய ஊட்ட உணவு இம்மாணவர்களுக்குக் கிடைப்பதில்லை. கீரை, காய்கறிகள், பழங்கள் எல்லாம் எட்டாக் கனிகள். இளைஞர் செஞ்சிலுவைச் சங்கக் கூட்டத்திற்கு வந்த மருத்துவர் ஒருவர் எம் மாணவருக்கு அறிவுரை சொன்னார், “உங்களில் பலர் காலையில் சாப்பிடுவதில்லை என்பதை அறிவேன். இரவு உணவுக்கும் காலை உணவுக்கும் பன்னிரண்டு மணி நேரத்திற்கு மேலிருக்கிறது. ஆகவே, சாப்பிட வேண்டியது அவசியம். ஒன்றும் வேண்டாம், ஒரு முட்டையும் இரண்டு ரொட்டித் துண்டுகளையும் சாப்பிடுங்கள். அது போதும்.” நல்ல அறிவுரைதான். முட்டை இன்று ஆறு ரூபாய்க்குக் கிடைக்கிறது. இரண்டு துண்டு ரொட்டியும் ஒப்பீட்டளவில் விலை குறைவு.
மருத்துவர் அறிவுரையைப் பின்பற்ற முடியுமா என்று மாணவர்களிடத்தில் விசாரித்தேன். சாத்தியமில்லை என்று சொல்லிவிட்டார்கள். வீட்டில் முட்டையோ ரொட்டியோ வாங்கி வைத்திருக்க வாய்ப்பில்லை. ஒரு பொட்டலம் ரொட்டி வாங்கினால் ஆளுக்கு இரண்டு துண்டு எடுத்தால் அப்போதே காலியாகிவிடும். முட்டை வாங்கினால் அன்றைக்குப் பொரியலோ குழம்போ அதுதான். வைத்திருந்து உண்பது நடுத்தர வர்க்கத்துக்குப் பழக்கமாகிவிட்டது. அடிநிலையில் இருப்போர் வீடுகளில் அது சாத்தியமில்லை.
ஊட்டச்சத்துக் குறைபாடு
இளைஞர் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளராகச் சில ஆண்டுகள் இருந்தேன். அரசு மருத்துவமனையில் யாருக்கேனும் இரத்தம் தேவையென்றால் எங்கள் கல்லூரியைக் கைகாட்டிவிடுவார்கள். தானம் செய்யும் மனம் பல மாணவர்களுக்கு உண்டு. ஓரலகு இரத்தம் தேவை என்று கேட்டால் ஐந்து பேரை அனுப்புவேன். அவர்களில் யாராவது ஒருவர் இரத்தம் கொடுக்கத் தகுதி பெற்றால் அபூர்வம். பல மாணவர்கள் ஹீமோகுளோபின் அளவு குறைவாகவே இருப்பார்கள். ஒருமுறை அரிய பிரிவு இரத்தம் தேவைப்பட்டது. பட்டியலில் இருபெண்கள் அப்பிரிவு இரத்தம் கொண்டவர்களாக இருந்தனர். அனுப்பி வைத்தேன். மருத்துவர் பேசியில் என்னை அழைத்துச் சொன்னார், “இந்தப் பொண்ணுங்களுக்கே இரத்தம் குடுக்கணும் சார். அவ்வளவு கம்மியா இருக்குது.”
மாதவிடாய் கால இரத்தப் போக்கும் இருப்பதால் மாணவியர் இரத்ததானம் செய்யத் தகுதி பெறுவதில்லை. அதிலிருந்து பெண்களை அனுப்புவதே இல்லை. மனம் இருந்து என்ன செய்ய? வழிபாட்டுக் கூட்டமோ விளையாட்டுப் போட்டிகளோ மைதானத்தில் நடக்கும்போது காலை வெயில் தாங்காமலும் பசியாலும் மயங்கி விழும் பெண்கள் தினசரி ஓரிருவர் இருப்பது உறுதி.
அடுத்த நாள் ஏதேனும் நிகழ்ச்சி இருக்கிறது என்று தெரிந்தால் மாணவர்கள் பலர் கல்லூரிக்கு வர மாட்டார்கள். வகுப்பில்லை; வருகைப் பதிவில்லை. பிறகேன் கல்லூரிக்குப் போக வேண்டும்? அந்த நாளில் ஏதாவது வேலைக்குப் போய்விடுவார்கள். நிகழ்ச்சிக்கு வர வைக்க வேண்டுமானால் ‘நாளைய நிகழ்ச்சியில் வடையும் தேநீரும் வழங்கப்படும்’ என்று அறிவிப்போம். அவற்றைக் கொடுக்கும் செலவோடு இன்னும் ஐந்து ரூபாய் சேர்த்தால் கலவை சாதம் கொடுத்துவிடலாம் என்று முடிவெடுத்து உணவு வழங்குவதும் உண்டு. இவையெல்லாம் இயல்பாக நடப்பவை அல்ல என்பதால் குறிப்பிட நேர்கிறது.
இதுதான் என் தினசரி
உணவுக்கு நம்மாலான உதவியைச் செய்யலாம் என்று சில திட்டங்களைச் செயல்படுத்த முயன்றிருக்கிறேன். ஆத்தூர் கல்லூரி முதல்வர் பொறுப்பில் இருந்தபோது மாற்றுத் திறனாளி மாணவர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். எதேச்சையாக அவரது உணவைப் பற்றி விசாரித்தேன். காலையில் உண்டுவிட்டு வருவதில்லை. பிற்பகல் இரண்டு மணிக்கு வகுப்புகள் முடிந்து வீட்டுக்குப் போய் உண்ண மூன்றரை மணியாகிவிடும். இதுதான் தினசரி வழக்கம்.
கல்லூரி உணவகத்தில் வேண்டும்போது சாப்பிட்டுக்கொள்ளும்படியும் நான் பணம் செலுத்திவிடுகிறேன் என்றும் சொன்னேன். தினம் இரண்டு புரோட்டா மட்டும் சாப்பிடுவார். இருபது ரூபாய். “எது வேணுமோ சாப்பிடுப்பா” என்றேன். அவர் ஒத்துக்கொள்ளவில்லை. “நீங்கள் தருகிறீர்கள் என்பதற்காக நிறையச் செலவு வைக்க விரும்பவில்லை ஐயா” என்றார்.
அம்மாணவருக்கு நான் உதவுவதை அறிந்த என் நண்பரும் சக ஆசிரியருமான (நினைவில் வாழும்) முனைவர் சி.நல்லதம்பி “என் பங்கும் இருக்கட்டும்” என்று ஒருதொகையைக் கொடுத்தார். விவரம் அறிந்து சக ஆசிரியர்கள், அலுவலர்கள் என்று பலர் உதவ முன்வந்தார்கள். கணினித் துறையில் நிரலர் பணியில் இருக்கும் நண்பர் ஜெயப்பிரகாஷ் இவ்விஷயத்தில் பெரிதும் ஆர்வம் காட்டினார். அவரிடம் தொகையையும் பொறுப்பையும் ஒப்படைத்தேன். நான் எதிர்பார்க்காத வகையில் தொகை சேர்ந்தது.
மாற்றுத் திறனாளர், தாய்தந்தை அற்றோர் எனச் சில வரையறைகளை வைத்துக்கொண்டு அம்மாணவர்களுக்கு உணவு வழங்கினோம். ஐந்து முதல் பத்து மாணவர் வரை உண்டார்கள். தேவையிருந்தும் பலர் ஆசிரியர் செலவில் உண்பதை விரும்பவில்லை. ஐந்தாண்டுகளுக்கு முன் தொடங்கிய அத்திட்டம் இப்போது வரை நடந்துகொண்டிருக்கிறது. வரவு செலவுகளைக் கணக்கிட்டு ஜெயப்பிரகாஷ் அவ்வப்போது விவரத்தை மின்னஞ்சலில் அனுப்புவார். சில ஆசிரியர்கள் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை இதற்கெனக் கொடுத்து விடுகின்றனர். உதவ மனமுள்ளோர் பலர்; அதை ஒருங்கிணைத்து எடுத்துச் செல்லத்தான் சரியான ஆள் தேவை. ஐந்தாண்டுகளுக்கு மேலாக அதைச் செயல்படுத்திக்கொண்டிருக்கும் ஜெயப்பிரகாஷ் அப்படிப்பட்டவர்.
அதே மாதிரியான திட்டத்தை நாமக்கல் கல்லூரியில் முதல்வர் ஆன போதும் தொடங்கினேன். அதுவும் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. மாணவர்களுக்கு இரும்புச் சத்துப் பற்றாக்குறையைப் போக்க வாரம் ஒருநாள் முருங்கைக் கீரை சூப் வழங்கலாம் என முடிவுசெய்தேன். ஓரிரு முறையே அதைச் செயல்படுத்த முடிந்தது. அதற்காகக் கல்லூரியில் பத்துப் பதினைந்து முருங்கை மரம் நட்டோம். தழைந்த அம்மரங்கள் இப்போதும் இருக்கும் என்றே நம்புகிறேன்.
வேண்டும் காலை உணவின் விரிவாக்கம்
தனிநபர் போடும் திட்டங்களுக்கு ஆயுள் குறைவு. அவரது பதவிக் காலத்தோடு அது முடிந்துவிடும். அல்லது நீர்த்துப்போகும். அரசுத் திட்டம் என்றால் தொடர்ந்து நடைபெறும். அதன் பலன்களும் கூடுதல். தனிநபர் செலவழிக்கும்போது அது இரக்கம், கருணையின் பாற்பட்டதாகிறது. அதைப் பெறுவதற்குப் பலர் தயங்குவர். அரசுத் திட்டமாக இருந்தால் அது உரிமையாகிவிடுகிறது. அதைப் பெறுவதில் யாருக்கும் தயக்கம் இல்லை. நான் சிறிதும் மிகைப்படுத்தவில்லை. புள்ளி விவரத்தை அரசு சேகரித்தால் நான் சொன்னது குறைவானது என்றே தெரியவரும்.
அரசின் இந்தக் காலையுணவுத் திட்டத்தைத் தொடக்கப் பள்ளிகளுக்கு மட்டுமல்லாமல் பன்னிரண்டாம் வகுப்பு வரைக்கும் விரிவாக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் பலர் கோரிக்கை வைக்கின்றனர். நல்லதுதான். பன்னிரண்டாம் வகுப்போடு மட்டும் என்பது போதாது; அரசுக் கல்லூரிகளில் இளநிலைப் பட்டப் படிப்பு மாணவர்கள் வரைக்கும் நீட்டிக்க வேண்டும் என்பது என் கோரிக்கை. அது இப்போதைக்குச் சாத்தியம் இல்லை என அரசு கருதினால் ‘அம்மா உணவகம்’ போல மிகக் குறைந்த விலைக்கு உணவு வழங்கும் உணவகங்களைத் திறக்க வேண்டும்.
இது ஒன்றும் புதிய கோரிக்கை அல்ல. ஏற்கெனவே தமிழ்நாடு அறநிலையத் துறை நடத்தும் கல்லூரிகளில் திமுக அரசு நடைமுறைப்படுத்தியுள்ள திட்டம்தான். 2022 - 2023ஆம் ஆண்டுக்கான இந்து அறநிலையத் துறை மானியக் கோரிக்கையின்போது சட்டமன்றத்தில் ‘பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் சார்பாக நடந்துவரும் பள்ளி, கல்லூரிகளில் கட்டணமில்லாக் காலையுணவுத் திட்டம் தொடங்கப்படும்’ என அறிவிப்பு வெளியானது. அதன்படி பழனி, அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியில் ‘கட்டணமில்லாக் காலைச் சிற்றுண்டி’ என்னும் திட்டத்தை முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் 16.11.22 அன்று (காண்க: தொடக்க விழா அழைப்பிதழ்) இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
அக்கோயில் சார்பாக நடந்துவரும் இரண்டு பள்ளிகள், நான்கு கல்லூரிகளில் இத்திட்டம் இப்போது செயல்பட்டுக்கொண்டுள்ளது. ஏறத்தாழ 4,000 மாணவர்கள் பயன்பெற்றுவருகின்றனர். அதை அரசுக் கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பதே என் எண்ணம்.
பள்ளிப் படிப்பை முடிப்போரில் ஐம்பத்தைந்து விழுக்காட்டினர் மட்டுமே உயர்கல்வி பயிலச் செல்கின்றனர். காலை உணவுத் திட்டத்தைக் கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்தினால் உயர்கல்வியில் சேர்வோர் எண்ணிக்கை கூடுவதற்கு வாய்ப்புள்ளது. மேலும் இந்த உணவுத் திட்டம் பசி போக்கி, ஊட்டச்சத்து வழங்கி வலிமையான அடுத்த தலைமுறையை உருவாக்கும் என நம்புகிறேன். காலை உணவுத் திட்டத்தை ‘டபுள் சாப்பாடு’ என்று கேலிசெய்வோரைப் பற்றி நமக்குக் கவலையில்லை. மதிய உணவுத் திட்டம் போலவே காலை உணவுத் திட்டமும் வேண்டும். ஆம், ‘டபுள் சாப்பாடு’ வேண்டும் என்றே நாம் கேட்போம்.
தொடர்புடைய கட்டுரைகள்
ஃபின்லாந்து பள்ளி உணவு: எதிர்காலத்துக்கான முதலீடு
காலை உணவுக்குத் தேவை கண்ணியமான கற்பனை
உற்சாகம் தரும் காலை உணவு
காலை உணவின் முக்கியத்துவம்
ஸ்டாலினின் காமராஜர் தருணம்
4
3
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
VIJAYAKUMAR 1 year ago
நான் கோவை அரசுக் கல்லூரியில் பயின்றேன், இது எங்கள் வாழ்க்கைதான். அரசுக்கல்லூரிகளுக்குள்ளும் அம்மா உணவகங்கள் / இலவச உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்.
Reply 8 0
Login / Create an account to add a comment / reply.