கட்டுரை, தொடர், தமிழ் ஒன்றே போதும் 5 நிமிட வாசிப்பு

ஆசிரியர்களின் ஆயுதம்

பெருமாள்முருகன்
19 Aug 2023, 5:00 am
3

நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் பன்னிரண்டாம் வகுப்புப் பயிலும் சின்னதுரை என்னும் மாணவர் மீது சக மாணவர்கள் சிலர் கொலைவெறித் தாக்குதல் நடத்திய அதிர்ச்சி தரும் சம்பவம் கடந்த வாரம் நடந்தது. இத்தாக்குதலுக்கு அடிப்படை சாதிப் பிரிவினை. நம் கல்வி நிறுவனங்களில் ‘சாதி எல்லாம் இல்லை’ என்று பாவனை செய்யாமல் சாதி செயல்படும் நடைமுறைகள் பற்றி வெளிப்படையாகவும் விரிவாகவும் பேச வேண்டும். 

நான் பதிப்பித்த ‘சாதியும் நானும்’ நூலில் ந.இரஞ்சன் எழுதிய கட்டுரை ‘நான் சாதியால் பாதிக்கப்பட்டேன் என்றால் அது பெரும்பாலும் கல்வி நிறுவனங்களால்தான்’ (ப.47) என்று சொல்கிறது. கல்வி நிறுவனங்களில் நிலவும் சாதிப் பாகுபாட்டைப் பற்றி அந்நூலில் பல கட்டுரைகள் பேசுகின்றன. சாதியச் சமூகத்தின் ஓர் அங்கம்தான் கல்வி நிறுவனம். சமூகத்தில் நிலவும் பாகுபாட்டின் எல்லாக் கூறுகளும் கல்வி நிறுவனங்களிலும் வெளிப்படுகின்றன. 

முதன்முதலாக கண்டேன்!

2017ஆம் ஆண்டு சாதியத் தாக்குதல் ஒன்றை முதன்முதலாக என் கண்ணால் கண்டேன். கலவரமோ மோதலோ அல்ல. ஒரு கல்வி நிறுவனத்திற்குள் நடந்த திட்டமிட்ட சாதியத் தாக்குதல். கல்லூரி முதல்வரோடு பேசிக்கொண்டு அவர் அறையில் இருந்தேன். சில மாணவர்கள் முதல்வர் அறைக்குள் ஓடி வந்து “சண்டைங்க சார், வாங்க” என்று அபயக்குரல் எழுப்பினார்கள். என்னைப் பார்த்த முதல்வர் “நீங்க போய் என்னன்னு பாருங்க சார். நான் வர்றன்” என்றார். 

வெளியே மாணவர் கூட்டம் திரளாக நின்றிருந்தது. கூச்சலும் பதற்றமுமாக மாணவர்கள் இருந்தனர். கட்டிடத்திற்குள்ளிருந்து வெளியே வந்து, அறிஞர் அண்ணா சிலைக்குப் பின் மரத்தடியில் நின்றிருந்த ஆசிரியர்களுடன் போய்ச் சேர்ந்துகொண்டேன். என்ன பிரச்சினை என்று யாருக்கும் தெரியவில்லை.  இருபிரிவாக நின்றிருந்த மாணவர்கள் சிலருக்குள் கடுமையான வாக்குவாதம், வசைசொற்கள், சவால்கள் என எல்லாம் நடந்தன. பெரும்பாலான மாணவர்கள் பார்வையாளர்கள். “வாங்க, நாம போய்ப் பேசலாம்” என்று ஆசிரியர்கள் சிலரை அழைத்தபோது யாரும் முன்வரவில்லை. “இருங்க சார், அவங்களே நம்மகிட்ட வருவாங்க” என்றனர். “முதல்வர் வராத நாம போகக் கூடாது சார்” என்றனர் சிலர். போகலாம் எனத் தோன்றிய ஆசிரியர்கள் சிலரும் நானும் தயக்கத்தோடு நின்றிருந்தோம். 

இந்தப் பேச்சு நடந்துகொண்டிருந்த அதேசமயத்தில் எப்போதும் ‘மூடா நெடுங்கதவு’ கொண்டிருந்த கல்லூரிக்குள் பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் அதீதச் சத்தத்துடன் நுழைந்தன. ஒவ்வொரு வண்டியிலும் மூன்று, நான்கு பேர். அவர்களில் எவரும் மாணவர் அல்ல. பெரும்பாலும் லுங்கியோடு இருந்த அவர்கள் கைகளில் விதவிதமான மரக்கட்டைகள். வேகமாக இறங்கி ஓடியவர்கள் சில மாணவர்களைக் குறிவைத்துத் தாக்கத் தொடங்கினர். 

மாணவர் கூட்டம் இங்கும் அங்குமாகக் கலைந்து பல பிரிவுகளாக ஓடியது. சிலர் தம் கால்சட்டைப் பையில் வைத்திருந்த கற்களை எடுத்து வீசினர். அடிபட்ட மாணவர்கள் ஓலமிட்டபடி முதல்வர் அறையை நோக்கி ஓடினர். யாரைத் தாக்குகிறார்கள், யார் கத்துகிறார்கள், யாருக்கு என்ன அடி என்பது ஒன்றுமே புரியவில்லை. மரத்தடியில் ஒதுங்கி நின்றிருந்த ஆசிரியர்கள் பக்கம் யாரும் வரவில்லை.

கல் ஒன்று ஆசிரியர் ஒருவரின் காலைப் பதம் பார்த்ததும் நாங்கள் இன்னும் பின்வாங்க நேர்ந்தது. எல்லாம் ஐந்து நிமிடத்தில் முடிந்தன. தாக்குதல் நடத்திய வண்டிகள் வந்த வேகத்தில் கிளம்பிப் போயின. பின்னர் காவல் துறை வந்தது; அரசியலர்கள் வந்தனர். ரத்தம் கொட்டிய மாணவர்கள் சிலரை மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணை, பேச்சு வார்த்தைகள் நடந்தன. அதன் தன்மைகளைப் பற்றிப் பேசுவது பெரும் ஆயாசம் தருவதாகும். 

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

சாதி நோய்க்கு அருமருந்து

பெருமாள்முருகன் 15 Apr 2023

கல்லூரிக்குள் கும்பல்

என் மாணவப் பருவத்திலும் ஆசிரியரான பின்னும் மாணவர்களுக்கு இடையே நடக்கும் சிறுசிறு சச்சரவுகளைக் கண்டிருக்கிறேன். மாணவர் பேரவைத் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் அவை நடக்கும். கைகலப்பில் முடிவன சிலவும் உண்டு. ஆனால், வெளியிலிருந்து ஒரு கும்பல் கல்லூரிக்குள் நுழைந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தைக் கண்டது அதுதான் முதல் முறை.

வந்தவர்களுக்கு யாரை அடிக்க வேண்டும் என்னும் தெளிவு இருந்திருக்கிறது. அவர்களுக்குக் கைகாட்டச் சில மாணவர்கள் உதவியுள்ளனர். அத்தனை கூட்டத்திற்குள் இவையெல்லாம் எப்படி நடந்தன என்பது பற்றி இன்று வரைக்கும் எனக்குக் குழப்பம் தீரவில்லை. கண் மூடித் திறப்பதற்குள் நடந்த சம்பவம் என்றாலும் அதன் பின்னணியில் தெளிவான திட்டம் இருந்திருக்கிறது.

வாகனத்தில் வந்தவர்கள் ஒருசாதியினர்; தம் சாதி மாணவர்களின் அழைப்பின் பேரில் வந்துள்ளனர்.  அழைத்தவர்கள் கைகாட்டிய மாணவர்களை எல்லாம் அடித்துள்ளனர். அடி வாங்கியோர் இன்னொரு சாதி மாணவர்கள். அடித்தவர்களுக்கு வசதி என்னவென்றால் அந்தச் சாதியைச் சேர்ந்தோர் கல்லூரியை ஒட்டிய கிராமங்களில் பெருவாரியாக வசித்தனர். சொன்னதும் வரக்கூடிய தொலைவு. அடி வாங்கியவர்களுக்கு அந்த வசதி இல்லை. 

பிரச்சினை தொடங்கியது எப்படி? பல கிராமங்களை இணைத்த ஒரு வழித்தடத்தில் வரும் நகரப் பேருந்தில் வழக்கமாகப் பயணம் செய்யும் இரு மாணவர்களுக்கு இடையே பிரச்சினை தொடங்கியுள்ளது. ஒரு மாணவன் இன்னொரு மாணவனின் காலை மிதித்துவிட்ட வாக்குவாதமே பெரிதானதாக எல்லோரும் தெரிவித்தனர். மிதித்த மாணவன் ஒடுக்கப்பட்ட சாதி; மிதிபட்டவன் ஆதிக்க சாதி. அதில் சீனியர், ஜூனியர் வேறுபாடும் சேர்ந்திருக்கிறது. ஒருவாரமாக ஓடிக்கொண்டிருந்த பிரச்சினையின் உச்சக்கட்டம் தாக்குதல். 

சாதிப் பிரிவினை

சாதிரீதியாக அடையாளப்படும் அரசியல் கட்சிகள் அந்தப் பகுதி கிராமங்களில் தீவிரமாகச் செயல்படுகின்றன. அதன் காரணமாக ‘இந்தச் சாதிக்கு இந்தச் சாதி எதிரி’ என்னும் பிரிவினை தெளிவாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. மத வெறுப்பைத் தூண்டி அரசியல் ஆதாயம் பெறும் கட்சிகள் தேசிய நீரோட்டத்தில் செயல்படுவதுபோலவே சாதி வெறுப்பைத் தூண்டி ஆதாயம் பெறும் கட்சிகள் உள்ளூர் அளவில் செயல்படுகின்றன.

தம் சொந்த மக்களாகக் கருதுவோருக்கு நன்மை செய்வது இக்கட்சிகளுக்கு முதன்மை நோக்கமல்ல. சாதியைப் பயன்படுத்தி ஆதாயம் அடைவதே நோக்கம். அதற்கு ஓர் எதிரியைக் கட்டமைத்து வெறுப்பைப் பரப்புவது எளிதான தந்திரம். சொந்த ஊரில் தமக்குக் கீழாக இருந்த சாதியினர் சமூக மாற்றத்தால் முன்னேறிச் செல்கையில் அதைப் பொறுக்காமல் அவர்களை எதிரிகளாக முன்னிறுத்துவது சுலபமாயிற்று. அவர்கள் முன்னேற்றத்தின் ஒவ்வொரு படியையும் தமக்கு எதிரானதாகக் கட்டமைப்பதைத் திட்டமிட்டே செய்தனர். 

ஒவ்வொரு கிராமத்திற்குள்ளும் கடந்த முப்பது ஆண்டுகளாக நடைபெற்றுவந்த இந்தக் கட்டமைப்பின் ஒரு வெளிப்பாடுதான் கல்வி நிறுவனத்திற்குள் நடந்த சாதியத் தாக்குதல். கல்லூரியிலும் குறிப்பிட்ட இருசாதி மாணவர்களும் தனித்தனியாகப் பிரிந்தே இருந்தனர். ஒரு பெஞ்சில் அமர்ந்திருப்போர் அனைவரும் ஒரே சாதியினர் என்பதைக் கண்டுகொள்வது கடினம் அல்ல. உண்பது, விளையாடுவது, சேர்ந்து செல்வது, வருவது, போவது என எல்லா நடவடிக்கைகளிலும் இந்தச் சாதிக் கூட்டு உண்டு. தம் சாதியைச் சேர்ந்த பெண்ணோடு இன்னொரு சாதிப் பையன் பேசினால் அவனை அழைத்து எச்சரிக்கை விடுக்குமளவு கண்காணிப்பாளர்களாகவும் மாணவர்கள் செயல்பட்டனர்.

தம் சாதி ஆசிரியர்கள் எவர் என்பதைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தனர். தம் பிரச்சினைகளை அவர்களிடமே பேசுவர். அவர்களுக்கு எதுவும் செய்யாதவராக அந்த ஆசிரியர் இருப்பினும் அவரிடம் சொல்வதுதான் தமக்குப் பாதுகாப்பு என நம்பினர். ஆசிரியர்களும் சாதிப் பிரதிநிதித்துவத்தால் தமக்குக் கிடைக்கும் மதிப்பை அனுபவித்தனர். அவர்களும் இத்தகைய கிராமங்களில் இருந்து படித்துவந்தவர்கள்தான். நம் கல்வியும் சாதிக்கு எதிரானதல்ல. ஆகவே, ஆசிரியர்கள் தம் சாதிக்குரிய பிரதிநிதிகளாக அடையாளப்படுவதைப் பெருமையாகக் கருதினர். 

எப்படியோ இன்றைக்குக் கல்வி நிறுவனங்களில் மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் தெளிவான சாதிப் பாகுபாடு இருப்பதை மறுக்க இயலாது. அரசியல் கட்சிகள் ஊட்டும் வெறுப்புப் பார்வை மாறினால் தவிர இந்தப் போக்கில் பெரிய மாற்றத்தைக் காண இயலாது. எனினும் அது நடக்கும் காலம் வரை பொறுத்திருக்க முடியாது. ஒவ்வொருவரும் தம்மாலான நடவடிக்கைகளை இயன்ற அளவில் மேற்கொள்ள வேண்டும். 

முதல்வராக நான்

நான் குறிப்பிட்ட சாதியத் தாக்குதல் அந்தக் கல்வியாண்டின் இறுதி மாதத்தில் நடந்தது. அடுத்த கல்வியாண்டில் முதல்வராக நான் பொறுப்பேற்றேன். அப்பொறுப்பை எடுத்துக்கொள்வதில் எனக்குத் தயக்கம் இருந்தது. கனன்றுகொண்டிருக்கும் சாதிப் பிரச்சினை எந்த நேரத்திலும் தலைதூக்கும் என்னும் அச்சம் நிலவியதால் அதை எதிர்கொள்ள வேண்டுமே என்பதுதான் தயக்கத்திற்குக் காரணம். எனினும் பல்வேறு காரணங்களால் பொறுப்பெடுத்துக்கொள்ள நேர்ந்தது. 

முதல்வராகப் பொறுப்பேற்றிருந்த ஓராண்டு காலத்தில் என்னை முழுமையாகக் கல்லூரி வேலைக்கே அர்ப்பணித்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். வாசிப்பு வெகுவாகக் குறைந்துபோயிற்று. எழுதுவது அபூர்வமானது. விடுப்பு எடுக்கவே முடியவில்லை. காலையில் எட்டரை மணிக்குக் கல்லூரிக்குள் நுழைந்தால் இரவு ஏழு மணிக்குத்தான் திரும்ப முடியும். வந்து சாப்பிட்டுப் படுத்தால் அப்படியொரு தூக்கம். வேறு எதிலும் மனம் நிலைகொள்ளவே இல்லை. 

கல்லூரி நுழைவாயிலில் பாதுகாவலர் ஒருவரைப் போட்டோம். அவரிடம் குறிப்பேடு ஒன்றைக் கொடுத்துக் கல்லூரி மாணவர் தவிர வேறு யாரேனும் உள்ளே வந்தால் பெயர் உள்ளிட்ட விவரங்களை அதில் பதிவுசெய்ய வேண்டும் என்பதைக் கட்டாயம் ஆக்கினோம். நுழைவாயிலின் இரும்புக் கதவைக் குறிப்பிட்ட நேரம் தவிர மற்ற சமயத்தில் மூடி வைத்தோம். கல்லூரிக்குத் தொடர்பில்லாத எவரும் அத்தனை எளிதாக உள்ளே வர முடியாமல் செய்தோம்.

காலை ஒன்பது மணி முதல் நானும் ஆசிரியர்கள் சிலரும் நுழைவாயிலில் நின்று மாணவர்களிடம் அடையாள அட்டையைப் பரிசோதித்து உள்ளே அனுப்பினோம். அட்டை இல்லாத மாணவராக இருந்தால் அவர் துறை ஆசிரியர் ஒருவர் பரிந்துரை வேண்டும் என்று சொன்னோம். மாணவர்களின் கைகளில் கட்டியிருந்த கயிறுகளை அறுத்தெடுப்பதற்காகக் கத்திரிக்கோல், பிளேடுகளைப் பாதுகாவலர் வைத்திருந்தார். எந்த நிறக் கயிறாக இருப்பினும் ‘இது சாமி கயிறு’ என்பார்கள். ஒருகாலத்தில் கருப்புக் கயிறு ஒன்றை மட்டுமே சாமி கயிறாகக் கையில் கட்டிக்கொள்ளும் வழக்கம் இருந்தது. ஒவ்வொரு சாமியும் தனக்குத் தனி அடையாளம் வேண்டும் என்று கருதி ஒவ்வொரு நிறத்தைத் தேர்வுசெய்துகொண்டன. 

கயிறு மட்டுமல்ல, பிரேஸ் லெட் போல விதவிதமான நிறங்களில் ரப்பர் வளையங்களைக் கையில் போட்டுக்கொள்வது நவீனப் போக்கு. அவற்றை எல்லாம் கழற்றிக் கொடுக்கச் சொல்லி வாங்கினோம். ‘ஐயா, அது பத்து ரூபா’ என்பார்கள்.  ‘இனிமேல் வாங்காத’ என்போம். சாதிக் கயிறுகளையும் சாதி ரப்பர் வளையங்களையும் கண்டுபிடிப்பது மிக எளிது. ஆனால், எல்லா நிறத்தையும் தடுப்பதன் மூலமாகவே சாதி நிறத்தையும் தடுக்க முடிந்தது.  

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

சாதிக்கு எரியூட்டுவோம்

பெருமாள்முருகன் 24 Dec 2022

என் உரை!

ஒருநாள் பத்து மாணவர்கள் ஒரே வண்ணச் சட்டை போட்டுக்கொண்டு வந்தனர். கயிற்றைத்தானே அறுப்பீர்கள், சட்டையை என்ன செய்வீர்கள் என்று எங்களுக்கு விடுத்த சவால் அது. இயற்கை வழங்கியிருக்கும் அற்புதமான வண்ணங்களைச் சாதிகளுக்குரியதாக மாற்றி, அவற்றின் அழகை ரசிக்க இயலாமல் செய்துவிட்டோமே என்று வருந்தும்படியாக இருந்தது அவர்கள் தோற்றம். அனைவரையும் அறைக்கு அழைத்துப் போய் விசாரித்தோம். ஊர்க் கோயில் திருவிழாவுக்காக எடுத்த சட்டை என்று சொன்னார்கள். சாதிக் கவசமாகக் கடவுள் பயன்பட்டார்.

அவர்களிடம் பேசியும் பெற்றோர்களைச் செல்பேசியில் அழைத்துப் பேசியும் அம்மாணவர்களை வீட்டிற்கே திருப்பி அனுப்பினேன்.  ‘ஒரு மாணவன் படிப்பவனாக அடையாளப்படலாம். விளையாட்டு வீரனாக அடையாளப்படலாம். கலைஞனாக அடையாளப்படலாம். சாதியா உன்னுடைய அடையாளம்?’ என்னும் கோணத்தில் என் உரை (!) அன்றைக்கு அமைந்தது. நன்றாகப் பேசியதாக ஆசிரியர்கள் சொன்னார்கள். அடுத்த நாள் அரசியலர் யாரையாவது அழைத்துக்கொண்டு வருவார்கள் என்று பயந்திருந்தேன். அப்படி வந்தால் அவர்களிடம் என்ன பேசுவது எனத் தயாரித்தும் வைத்தேன். பேச்சுத்தானே ஆசிரியர்களின் ஆயுதம்?

மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் வெறுமனே கல்லூரிக்குள் வட்டமடிப்பதைக் கட்டுப்படுத்தினோம். வாகனங்களை அவற்றுக்குரிய இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும் என்று கூறி அதற்குரிய ஏற்பாடுகளையும் செய்தோம். கல்லூரி வளாகம் பெரியது. சில துறைகள் முதன்மைக் கட்டிடத்திலிருந்து விலகித் தொலைவில் இருந்தன. அம்மாணவர்களுக்கு விலக்களித்துத் தனிப்பாதையும் ஏற்பாடு செய்தோம்.

இருசக்கர வாகனங்களில் அரசியல் கட்சிச் சின்னங்கள், சாதி அடையாளங்கள், நடிகர்களின் படங்கள் ஆகியவை இருக்கக் கூடாது என்றும் கட்டுப்பாடு விதித்தோம். அப்படிப் படங்களை ஒட்டி வைத்திருக்கும் மாணவரைத் தனியாக முதல்வர் அறைக்கு அழைத்து அதன் பாதிப்புகளைப் பற்றி விரிவாகப் பேசினோம். தொடர் பேச்சு பலன் கொடுத்தது. 

சில முன்னெடுப்புகள்  

ஒரு பாடவேளை முடிந்து அடுத்த பாடவேளை தொடங்கிய பத்தாம் நிமிடம் சில ஆசிரியர்கள் உடன் வரக் கல்லூரிச் சுற்றுக்குச் சென்றேன். ஒவ்வொரு பாடவேளையும் சுற்று உண்டு. வகுப்புக்குச் செல்லாமல் வளாகத்தில் திரியும் மாணவர்களை அழைத்துப் பேசினோம். இடைவேளை நேரத்தைப் பிரித்து அமைத்தோம். முதல் பத்து நிமிடம் மூன்று துறை மாணவர்களுக்கு இடைவேளை. அடுத்த பத்து நிமிடம் வேறு மூன்று துறை மாணவர்களுக்கானது. இப்படி மூன்றாக இடைவேளை நேரத்தை ஆக்கினோம். அது கும்பல் சேருவதைத் தடுப்பதற்கான உத்தி. நூலகப் பயன்பாடு, விளையாட்டு, விழாக்கள் ஆகியவற்றை அதிகரித்தோம். வாரம் ஒருமுறை வழிபாட்டுக் கூட்டம் நடத்தினோம். இவற்றில் மாணவர் பங்களிப்பு அபாரமாக இருந்தது. அதைப் பற்றி விரிவாகப் பேச வேண்டும்.

பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்குப் பல மாணவர்கள் எனக்குப் பழக்கமாயினர். பிரச்சினைக்குரிய மாணவரின் பெற்றோரை வரவைத்துப் பேசினோம். கூலி வேலைக்குச் செல்லும் பெற்றோர் கல்லூரி நேரத்தில் வர விரும்ப மாட்டார்கள். அது அவர்களுக்கு வேலை நேரமாக இருக்கும். ஆகவே, காலை எட்டரை மணிக்கோ மாலை ஆறு மணிக்கோ வரலாம் என்று அழைத்தேன். நானே பெற்றோருக்குச் செல்பேசியில் அழைத்துப் பேசினேன்.

முதல்வர் அழைக்கிறார் என்பதால் பெரும்பாலும் வந்து சந்தித்தனர். அப்பெற்றோர்களிடம் மாணவர்களைப் பற்றிப் புகார் எதுவும் சொல்வதில்லை. அம்மாணவர் படிப்பது அவர்கள் குடும்பத்திற்கு எத்தனை முக்கியம், அதற்குப் பெற்றோர் என்னென்ன உதவிகள் செய்ய வேண்டும் என்பதாகவே என் பேச்சு அமைந்தது. ஆசிரியர், மாணவர், பெற்றோர் என எல்லோருடனும் எப்போதும் உரையாடல், உரையாடல், உரையாடல்தான். 

அரசு கல்லூரியில் இவற்றைச் செய்வது சாதாரணமல்ல. யார் வேண்டுமானாலும் வந்து என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்பார்கள். தனியார் கல்வி நிறுவனங்களில் பணத்தையும் கொடுத்துவிட்டு எந்தக் கேள்வியும் கேட்க முடியாத நிலையை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், அரசு கல்வி நிறுவனத்தின் மீது எந்தக் குற்றச்சாட்டையும் சுமத்துவார்கள்; என்ன கேள்வியையும் கேட்பார்கள். பொதுமக்கள் மனநிலை எப்போதும் ஆபத்தானது. அதைப் பற்றிய அச்சவுணர்வோடும் எச்சரிக்கையோடும்தான் இருக்க வேண்டும். ஒவ்வொரு செயலையும் அப்படித்தான் முன்னெடுக்க முடியும். 

மாணவரின் ஆலோசனை

மாணவர்களிடம் கடுஞ்சொற்களைப் பயன்படுத்தாமல், நயந்து பேசியே இதைச் செய்தோம். ஆசிரியர்கள் அன்பாகச் சொன்னால் எதையும் கேட்பார்கள் என்பது மாணவர்களிடம் இன்று வரைக்கும் இருக்கும் நற்பண்பு. அதைத்தான் சாதகமாக்கிக்கொண்டோம். தம் மீது ஓர் ஆசிரியர் அக்கரை காட்டுகிறார் என்பதை ஒரு மாணவர் மனதார உணர்ந்தால் ஆசிரியர் கை காட்டும் வழியில் செல்லத் தயாராகிவிடுவார். ஆசிரியர்கள் தம் அதிகாரத்தைப் பயன்படுத்த முயன்றால் அது மாணவர்களிடம் செல்லுபடியாகாது. 

பிரச்சினை வருவதுபோலத் தோன்றினால் மாணவர்களே என்னிடம் வந்து தகவல் தெரிவித்தார்கள். அதை எப்படிக் கையாளலாம் என்று ஆலோசனை சொன்னார்கள். சீனியர், ஜூனியர் பிரச்சினை ஒன்று உருவாகி அது சாதிப் பிரச்சினை ஆகிவிடலாம் என்ற அச்சம் வந்தபோது ஒரு மாணவர் சொன்னார், “சில நாளுக்கு விடுமுறை விட்றலாங்கய்யா.” அப்படி விடுவதில் உள்ள சிக்கல்களைச் சொன்னேன். அப்போது இன்னொரு மாணவர் சொன்னார், “முதலாமாண்டு மாணவர்களுக்கு மட்டும் ஒருவாரம் விடுமுறை விட்ருங்கய்யா. மூன்றாமாண்டு மாணவர்கள் வரட்டும். அவர்களிடம் நீங்கள் பேசுங்கள்.” அம்மாணவரின் ஆலோசனை சரியாகத் தோன்றியதால் அதையே பின்பற்றினோம். என் பேச்சில் அத்தனை நம்பிக்கை வந்திருந்ததையும் நான் கவனித்தேன். 

கல்லூரிச் சூழல் அமைதியானதாகவும் கற்பதற்கு ஏற்றதாகவும் இருப்பதை மாணவர்கள் உண்மையாகவே விரும்பினர். மாணவர்கள் நன்றாகக் கேட்டார்கள்; உரையாடினார்கள்; பங்களித்தார்கள்; ஒத்துழைத்தார்கள்.  மாணவர்கள் இயங்குவதற்கான வெளிகளை உருவாக்குதலும் அன்பும் அக்கரையும் கொண்ட உரையாடலுமே அக்கல்வியாண்டு முழுதும் சாதிப் பிரச்சினை மேலெழாமல் கல்லூரி இயங்குவதற்குக் காரணமாயின.

 

தொடர்புடைய கட்டுரைகள்

சாதி நோய்க்கு அருமருந்து
கீழடிக்குப் பக்கத்தில்தான் இருக்கிறது வேங்கைவயல்
சாதியைத் தவிர்ப்பது எப்போது சாத்தியமாகும்?
சாதிக்கு எரியூட்டுவோம்
உங்கள் ஊர் பள்ளியில் சமத்துவம் இருக்கிறதா?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பெருமாள்முருகன்

பெருமாள் முருகன், பேராசிரியர், எழுத்தாளர். ‘அர்த்தநாரி ஆலவாயன்’, ‘பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.


3

4





பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

Vidhya sankari    2 years ago

போற்றத்தக்க செயல்பாடு தங்களுடையது! நம் கல்வி சாதிக்கு எதிரானது இல்லையா?! எப்படி? ஒன்றும் செய்யாமல் இருப்பதாலா?

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Siva   2 years ago

சரிதான் ஐயா இந்த கயிறு பிரச்சனை போலத்தானே 'மயிறு' பிரச்சனையும். ஆசிரியர்கள் நமக்கேன் வம்பு என்று இல்லாமல் கொஞ்சம் அக்கரை காட்டினால் மாணவர்களை நல்வழிப்படுத்த இயலும். சில இடங்களில் சில ஆசிரியர்களே மாணவர்களை தூண்டிவிடுவதும் உண்டு. இதுவும் களையப்பட வேண்டும்

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அ.பி   2 years ago

வாழ்த்துக்கள் ஐயா.. உங்கள் சேவை இன்னும் தேவை.. தமிழ் நாடு அரசு பயன்படுத்தி கொள்ளும்?? அறியோம். யானை வரும் பின்னே maniyosai வரும் முன்னே என்பார்கள். ஒவ்வொரு முறை சாதி சண்டை வரும் போது, அதற்கு முன் சில அறிகுறிகள் தென்படும்... அதை தொடர்ந்து வரும் கலவரத்தை அடக்க வேண்டும். சில யோசனை 1)பள்ளிகளில் /கல்லூரிகளில் சாதியை குறிப்பிட option(வாய்ப்பு) ஆக இருக்க வேண்டும். கட்டாயம் ஆக்க கூடாது... 2)NO caste certificate தருவதில் எந்த தடையும் இருக்க கூடாது 3)சாதிய குறியீடு கட்டாயம் தடை செய்ய வேண்டும்

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

ஆரோக்கியத் தொல்லைகள்உயிர் பறிக்கும் இயந்திரக் கற்றல் நுட்பம்தெலுங்கு தேசம்பதப்படுத்தும் தொழிற்சாலைகள்மடாதிபதிஇடைநுழைப்பு நியமனங்கள் தீர்வாகிவிடாதுஇந்திய சோஷலிஸம்கடகம்தென் இந்திய மாநிலங்கள்தேசிய அவமானம்ஆர்டிஐ சட்டம்நா.ப.இராமசாமிசர்வாதிகார அரசுவிரித்தலும் சுருக்குதலும்மிக்ஜாம்மாயக் குடமுருட்டி: விந்து நீச்சல்தேர்தல் பத்திரங்கள்எதிர்க்கட்சித் தலைவர்தனிச்சார்பியல் கோட்பாடுவீரப்பன் சகோதரர்அமைச்சர் ஷாஜி செரியன்சோவியத் தகர்வுவலியத் தொடங்கப்படுகிறது வாய்ச் சண்டை!புனைபெயர்கீழத் தஞ்சையும் கொஞ்சம் வாழட்டுமே!விலைவாசிகேசரிஅராபிகாதலைநகரம்ஏழ்மை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!