கட்டுரை, தொடர், கல்வி, நிர்வாகம் 5 நிமிட வாசிப்பு

ஆசிரியர்களும் கையூட்டும்

பெருமாள்முருகன்
27 Jan 2024, 5:00 am
2

ட்டி, அரசுக் கலைக் கல்லூரி முதல்வராக இருந்த அருள் அந்தோனி என்பவரை ‘மாணவர்களிடம் கையூட்டு வாங்கினார்’ என்னும் குற்றச்சாட்டு காரணமாக 2023 செப்டம்பர் மாத இறுதியில் தற்காலிகப் பணிநீக்கம் செய்து உயர்கல்வித் துறை நடவடிக்கை எடுத்தது. அதே கல்லூரியில் பணியாற்றிய தாவரவியல் பேராசிரியர் ரவி என்பவரும் அதில் தொடர்புடையவர் எனக் குற்றச்சாட்டு எழுந்ததால் அவரும் தற்காலிகப் பணிநீக்கத்திற்கு ஆளாகியுள்ளார். இருவர் மீதும் மாணவர்கள் பல புகார்களைத் தெரிவித்துள்ளனர். மாணவர்கள் பதிவுசெய்த காணொலி ஆதாரங்கள் பலவும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. உயர்கல்வித் துறையின் முதற்கட்ட விசாரணைக்குப் பிறகே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

முதலாவது குற்றச்சாட்டு

இரு வகையாகக் கையூட்டுப் பெற்றதாகக் குற்றச்சாட்டு. முதலாவது, மாணவர் சேர்க்கை தொடர்பானது. முதற்கட்டச் சேர்க்கை நாளில் கிடைக்கும் பாடப்பிரிவில் ஒரு மாணவர் சேர்ந்துவிடுவார். பின்னர் தர வரிசைப்படி அடுத்தடுத்த சேர்க்கைகளில் வேறு பாடப்பிரிவில் அம்மாணவருக்கு இடம் கிடைத்து, அவரும் சேர விரும்பினார் என்றால் மாற்றிக் கொடுக்க வேண்டும்.

அது அவருக்கு இயல்பாகத் தரவரிசை அடிப்படையில் கிடைத்த படிப்பு; ஆகவே மாறிக்கொள்வது அவர் உரிமை. மாற்றிக் கொடுப்பது கல்லூரியின் கடமை.

அப்படி அல்லாமலும் ஒரு பாடப்பிரிவில் சேர்ந்த மாணவர் வேறொரு பாடப்பிரிவுக்கு மாறிக்கொள்ள முதல்வரிடம் கோரிக்கை வைக்கலாம். அவர் கேட்கும் பாடப்பிரிவில் காலியிடம் இருக்கும் பட்சத்தில், விண்ணப்பித்த மாணவர் எவரும் போட்டிக்கு இல்லாத நிலையில் மாற்றிக் கொடுக்கலாம்.

இதுதான் சேர்க்கை விதி. 

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

நடைமுறையில் பெரும்பாலும் விதி பின்பற்றப்படுவதில்லை. ஒரு படிப்பில் சேர்ந்த மாணவர்கள் பலர் அடுத்தடுத்த சேர்க்கைக் கலந்தாய்வுகளில் வேறு வேறு படிப்புகளில் இடம் கிடைத்து மாற்றிக்கொள்ள வந்தால் அலுவல் பணிகள் மிகுதியாகும். கட்டண ரசீதுகளில் மாற்றம் செய்ய வேண்டும். பதிவேடுகளில் திருத்தங்கள் நேரும். சேர்க்கைப் பட்டியலில் அடித்தல் திருத்தல்கள் வந்துகொண்டேயிருக்கும்.

இத்தகைய சிரமங்களைத் தவிர்ப்பதற்காக விதிப்படியான உரிமை என்றாலும் வேறு பாடப் பிரிவுக்கு மாற்றிக் கொடுப்பதில்லை. சேர்க்கை முடியும் நாளில் அவ்வாறு மாற்றிக்கொள்ளச் சில கல்லூரிகளில் வாய்ப்பளிப்பர். முதல்வரோ சேர்க்கைக் குழு உறுப்பினர்களோ தம் அதிகாரத்தைப் பயன்படுத்தி அரிதாகச் சிலருக்கு மாற்றித் தருவதுண்டு. 

விதிகள், உரிமை என எதையும் அறியாத பெரும்பான்மை மாணவர்களும் பெற்றோர்களும் இதற்காகப் பல நாட்கள் அலைவார்கள். ஒரு மாணவருக்கு அறிவியல் பாடப்பிரிவில் படிக்க வேண்டும் என்பதே விருப்பமாக இருக்கும். ஆனால் அவருக்கு முதலில் அப்பாடப்பிரிவு கிடைக்காது. மதிப்பெண், இடஒதுக்கீடு ஆகியவை காரணமாக இருக்கும். அடுத்தடுத்த கலந்தாய்வுகளில் அவர் விரும்பும் பாடம் கிடைத்துவிடும். ஆனால் ஏற்கனவே ஒரு பாடப்பிரிவில் அவர் சேர்ந்துவிட்டார் என்பதால் மாற்றித் தர முடியாது என்று நிர்வாகம் சொல்லிவிடும். சில கல்லூரிகளில் சேரும்போதே ‘வேறு பாடத்திற்கு மாற முடியாது’ என்பதைக் கறாராகச் சொல்லியே சேர்ப்பர்.

விதிப்படியான உரிமை எனினும் நடைமுறையில் பின்பற்றப்படுவதில்லை. ஆகவே, கல்லூரி முதல்வர்கள் சிலர், ஆசிரியர்கள் சிலர் இதைக் கையூட்டுப் பெறும் வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர். ஏற்கெனவே ஒரு பாடப்பிரிவில் சேர்ந்த மாணவர்கள் சிலருக்குக் காலியாக உள்ள இன்னொரு பாடப்பிரிவுக்கு மாற்றித் தரக் கையூட்டு வாங்கியதாக ஊட்டிக் கல்லூரி முதல்வர் மீது குற்றச்சாட்டு உள்ளது. 

இரண்டாவது குற்றச்சாட்டு

இரண்டாம் குற்றச்சாட்டு, அரசு நலத் துறை விடுதிகளில் இடம் தருவதற்கு மாணவர்களிடம் முதல்வர் கையூட்டு வாங்கினார் என்பதாகும். அரசு நலத் துறைகள் நடத்தும் விடுதிகளுக்கும் கல்லூரி முதல்வருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவை முதல்வரின் கட்டுப்பாட்டுக்குள் வருவன அல்ல.

சம்பந்தப்பட்ட நலத் துறைகள் மாணவர்களைத் தேர்வுசெய்யத் தனிக் குழுக்களை வைத்திருப்பர். அதில் கல்லூரி சார்பாகவும் யாரேனும் பேராசிரியர் இடம்பெற்றிருப்பர். முதல்வருக்கு எந்தப் பங்கும் இல்லை. வேண்டுமானால் அந்நலத் துறைக்கு முதல்வர் பரிந்துரை செய்யலாம். அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை. தமக்குத் தொடர்பில்லாத துறை விடுதியில் இடம்பெற்றுத் தருவதாகக் கையூட்டுப் பெற்றிருந்தால் அது ஏமாற்று. அல்லது நலத் துறை அலுவலர்களோடு கூட்டுச் சேர்ந்து இதைச் செய்திருக்கலாம். 

எப்படியிருப்பினும் சரி, அறத்தையும் விழுமியத்தையும் போதிக்கும் ஆசிரியர்கள் கையூட்டுக் குற்றச்சாட்டுக்கு ஆளாவது பெரிதும் வருத்தத்திற்குரியது. எப்போதும் மாணவர்கள் மீதே குற்றச்சாட்டுகளை வைத்துக்கொண்டிருக்கும் நம் சமூகப் பொதுமனம் இழிசெயல்களில் ஈடுபடும் ஆசிரியர்களைப் பற்றிப் பெரிதாகப் பேசுவதில்லை. அதுவும் கையூட்டுப் பெறுவதை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டவர்களாக நாம் மாறிவிட்ட நிலையில் அதைப் பொருட்படுத்துவதில்லை. ஆசிரியர்கள் மீது கையூட்டுக் குற்றச்சாட்டு வருமானால் அதைச் சாதாரணமாகக் கருதக் கூடாது. 

பொதுவாகக் கையூட்டுப் பெறும் வாய்ப்பற்றவர்கள் ஆசிரியர்கள் என்றே நினைக்கிறோம். சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஆசிரியர் போராட்டத்தின்போது அதன் நியாயங்களை விளக்கிக் கட்டுரை எழுதிய ஆசிரியர் சங்கப் பிரதிநிதி ஒருவர் ‘ஊதியம் தவிர வேறு எவ்வகையிலும் வருமானத்திற்கு வழியற்ற ஆசிரியர்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார். வேறு எவ்வகையில் வருமானத்திற்கு வழி வேண்டும்?

அலுவல் துறைகளில் கையூட்டுப் பெறுவதற்கு வாய்ப்பிருப்பதுபோல ஆசிரியப் பணியில் இல்லை என்பதையே அவர் அவ்வாறு வெளிப்படுத்தினார். வாய்ப்பு இல்லை என்றால் வாய்ப்பை உருவாக்கிக்கொள்ளும் வல்லமை பெற்றவர்கள் பலருண்டு. அப்படித்தான் ஆசிரியர்கள் சிலர் கையூட்டு வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.

பொக்கிஷம் இந்த நூல்

- தினத்தந்தி

சோழர்கள் இன்று

வீட்டிலிருந்தபடி ரூ.500 ஜிபே செய்து, முகவரியை அனுப்பி, கூரியர் வழியே நூலை வாங்க வாட்ஸப் செய்யுங்கள் 👇

75500 09565

ஒரு கதை சொல்லவா!

அரசுப் பணி பற்றிய நாட்டுப்புறக் கதை ஒன்றுண்டு. அரசர் நகர்வலம் வந்தபோது அவரைச் சந்தித்த ஒருவன் தனக்கு அரண்மனையில் ஏதேனும் ஒரு வேலை கொடுக்க வேண்டும் என்றும் ஊதியம் எதுவும் தேவையில்லை என்றும் கேட்டான். அரண்மனையில் நேரத்தை அறிவிக்கும் பொருட்டு மணியடிக்கும் வழக்கம் இருந்தது. அதற்கென ஓர் ஆளை நியமித்திருப்பர். அப்போது அந்த வேலைக்கு ஆள் இல்லை. வேறு யார் யாரோ மாற்றி மாற்றி அடித்துக்கொண்டிருந்தார்கள். ஊதியமில்லாமல் வேலை கேட்டவனுக்கு ‘நாட்டுக்குச் சேவை செய்ய ஆசை போலும்’ என்று நினைத்து காலியாக இருந்த மணியடிக்கும் வேலையை அரசர் கொடுத்தார். கால் மணி நேரம் என்றால் ஒற்றையடி; அரை மணி நேரம் என்றால் இரட்டையடி; முக்கால் மணி நேரம் என்றால் மூவடி; ஒரு மணி நேரத்திற்கு நாலடி. எந்தப் பழுதும் இல்லாமல் இவ்வேலை நடந்துவந்தது. 

மணியடிக்கும் வேலை செய்பவனையே அரசர் மறந்து போய்விட்ட நாளொன்றில் அவரைச் சந்திக்க அவன் வந்தான். சொந்த வீடு கட்டியிருப்பதாகவும் அதன் புதுமனைப் புகுவிழாவிற்கு அரசர் வர வேண்டும் என்றும் அழைத்தான். அன்று இரவு நகர்வலம் போனபோது மணியடிப்பவன் கட்டியிருக்கும் வீட்டைக் காட்டச் சொல்லிப் பார்த்தார். நல்ல பெரிய வீடு. கிட்டத்தட்ட அமைச்சர் முதலியோருக்கு ஒதுக்கியிருந்த வீடு போலவே தோன்றியது. அடுத்த நாள் அவனை அழைத்து “ஒரு காசுகூட ஊதியம் வாங்காமல் இவ்வளவு பெரிய வீடு கட்ட எப்படி முடிந்தது?” என்று கேட்டார். ரகசியத்தைச் சொல்கிறேன்; ஆனால் என்னை வேலையை விட்டு அனுப்பிவிடக் கூடாது என்னும் நிபந்தனையோடு விஷயத்தைச் சொன்னான். 

அரசரைச் சந்திக்க அனுமதி பெற்று முன்பதிவு செய்துகொண்டு பலர் வருவர். நகரத்தின் முக்கியமான வணிகர்கள், அதிகாரிகள், பெரிய மனிதர்கள் எனப் பல தரப்பினரும் இருப்பர். ஒருவருக்குக் கால் மணி நேரம் என்னும் அளவில் நேரம் ஒதுக்குவது அரண்மனை வழக்கம். அப்படி வருவோர் கூடுதலாக அரசரிடம் சில நிமிடங்கள் பேசுவதற்காக மணியடிப்பவனைச் சந்தித்து ஓரிரு நிமிடம் தள்ளி மணியடிக்கும்படி கேட்டுக்கொள்வர். அதற்கு அவனுக்கு ‘அன்பளிப்பு’ வழங்குவர். அப்படிப் பெற்ற அன்பளிப்புத் தொகையைக் கொண்டு கட்டிய வீடுதான் அது என்று அவன் விளக்கினான். அவன் அறிவை மெச்சி அமைச்சர் ஆக்கிக்கொண்டாராம் அரசர். 

கையூட்டுக்குப் பல வழிகள்…

அரசுப் பணி எதுவாக இருப்பினும் அதில் கையூட்டுப் பெறும் வழியை உருவாக்கிவிடும் அறிவு வாய்க்கப் பெற்றவர்கள் இப்படிப் பலருண்டு. கல்லூரி ஆசிரியர்களிலும் இத்தகையோர் உண்டு.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகக் கல்லூரி ஆசிரியராகவும் முதல்வராகவும் பணியாற்றிய அனுபவத்தில் இப்படிப் பல ஆசிரியர்களைக் கண்டிருக்கிறேன். இப்போது கல்லூரி அளவிலான கலந்தாய்வு முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. முன்னர் அப்படியில்லை. தேர்வுப் பட்டியல், காத்திருப்புப் பட்டியல் எனத் தயாரித்து மாணவர்களுக்குத் தகவல் தெரிவித்துச் சேர்க்கை நடத்தும் முறை இருந்தது. அப்போது மாணவர் சேர்க்கைக்கான இறுதி நாளை ‘வராண்டா அட்மிஷன்’ என்று சொல்வார்கள். 

அதாவது, அன்று தகுதியுள்ள மாணவர்கள் யார் வேண்டுமானாலும் வரலாம்; வந்து வராண்டாவில் நிற்கலாம். ஏற்கெனவே விண்ணப்பித்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை. வந்திருப்போரிடம் விவரங்களைத் தாளில் எழுதி வாங்கித் தர வரிசை பிரித்துக் காலியாக உள்ள பாடப்பிரிவு இடங்களில் சேர்த்துக்கொள்ளலாம். முறையாக நடத்தினால் உரியவருக்கு இடம் கிடைக்கும். ஆனால், அதை ஊழலுக்கான வாய்ப்பாக ஆசிரியர்கள் சிலரும் பயன்படுத்திக்கொள்வர்.

முன்கூட்டி விசாரிக்க வரும் மாணவர்களிடம் பேசி நாலாயிரம் என்று தொகை வாங்கிக்கொண்டு சில ஆசிரியர்களின் உதவியுடன் பட்டியல் தயாரித்து வைத்துக்கொண்டார் நான் பணியாற்றிய கல்லூரி முதல்வர் ஒருவர். வராந்தா சேர்க்கை அன்று அப்பட்டியலைத் துறைத் தலைவர்களிடம் கொடுத்துச் சேர்த்துக்கொள்ளச் சொன்னார். 

அப்போது நான் தமிழ்த் துறைத் தலைவராக இருந்தேன். என் துறையில் பத்து மாணவர்களுக்கான பட்டியல் இருந்தது. “என்ன அடிப்படையில் அவர்களைத் தேர்வு செய்தீர்கள்? வராந்தா சேர்க்கைக்கு விண்ணப்பித்த மாணவர்களின் பட்டியல் தாருங்கள். ஒப்பிட்டுப் பார்த்துத்தான் கையொப்பம் இடுவேன்” என்று முதல்வரிடம் சொன்னேன். அவர் தம் அதிகாரத்தைப் பயன்படுத்தி மிரட்டும் தொனியில் பேசினார்.

விண்ணப்பங்களை மேஜையில் வீசிவிட்டு வெளியே வந்துவிட்டேன். அதன் தொடர்ச்சியில் அவருடன் இணங்கிப் போக முடியாத நிலை ஏற்பட்டது. அக்கல்லூரியிலிருந்து இடமாறுதல் பெற வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டேன். 

அதிகார மிடுக்கு

அம்முதல்வர் மட்டுமல்ல, பல ஆசிரியர்களும் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது உண்டு. விவரம் அறியாத மாணவர்களிடமோ பெற்றோரிடமோ பேசிக் குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக்கொண்டு கல்லூரியில் தம் செல்வாக்கைப் பயன்படுத்தி இடம்பெற்றுக் கொடுப்பார்கள். நான் முதல்வர் பொறுப்பில் இருந்தபோது ஆசிரியர் ஒருவர் மாணவர் சேர்க்கை இறுதி நாளில் நான்கு மாணவர்களை அழைத்துவந்தார். நால்வரும் மலைப் பகுதியில் வசிக்கும் பழங்குடி இனத்தவர். எந்தத் துறையில் இடம் இருந்தாலும் அவர்கள் சேர்ந்துகொள்ளத் தயார் என்று ஆசிரியர் சொன்னார். சேர்ந்துவிட்டு ஏதோ காரணத்தால் மாற்றுச் சான்றிதழ் பெற்றுச் சென்றுவிட்ட மாணவர்களின் இடங்கள் சில இருந்தன. அவற்றில் அம்மாணவர்களைச் சேர்த்தேன். 

சேர்ந்த பிறகு அம்மாணவர்களிடம் பேசியபோது ஒவ்வொரு மாணவரிடமும் பத்தாயிரம் ரூபாயை அந்த ஆசிரியர் பெற்றிருக்கிறார் என்னும் விவரம் தெரிந்தது. ஆசிரியரிடம் நேரடியாகக் கேட்டேன். “எவன் சொன்னவன்?” என்று அவர் கத்த ஆரம்பித்துவிட்டார். சாதிச் செல்வாக்கும் உள்ளூர் அதிகாரமும் கொண்டவர் அவர். என்ன செய்ய முடியும்? பணம் கொடுத்த மாணவர்களும் பொதுவில் சொல்லப் பயந்தனர். இனிமேல் இப்படி ஏமாற வேண்டாம் என்று மாணவர்களுக்குச் சொல்வதைத் தவிர வேறேதும் செய்ய இயலவில்லை. 

மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ், பட்டச் சான்றிதழ்கள் உள்ளிட்டவை குறிப்பிட்ட துறைத் தலைவர் அல்லது அத்துறை ஆசிரியர் ஒருவர் பொறுப்பில் இருக்கும். சான்றிதழ் பெற வரும் மாணவர்களிடம் வடை, தேநீர் வாங்கித் தரச் சொல்லும் ஆசிரியர்கள் உண்டு. இருபது ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு துறைத் தலைவர் ‘துறை நலனுக்காகப் பத்து ரூபாய் கொடுக்க வேண்டும்’ என்று கேட்டுப் பெற்றதைக் கண்டிருக்கிறேன்.

பத்தாண்டுக்கு முன்னால் இன்னொரு துறைத் தலைவர் அதை ஐம்பது ரூபாயாக உயர்த்தினார். போட்டிகளுக்குச் சென்று ரொக்கப் பரிசு வாங்கிவரும் மாணவர்களிடம் குறிப்பிட்ட சதவீதம் கேட்கும் பொறுப்பாசிரியர்கள் உண்டு. எம்.பில்., பிஎச்.டி. ஆய்வுசெய்யும் மாணவர்களிடம் பணம் வாங்கும் வழிகாட்டி ஆசிரியர்கள் பற்றிப் பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன. 

கையூட்டு மதிப்பு

நான் பணியாற்றிய கல்லூரிக்கு முதல்வராக வந்த ஒருவர் தம் கையொப்பம் ஒவ்வொன்றும் ‘கையூட்டு மதிப்பு’ கொண்டது என்று கருதினார். அதைப் பெறுவதற்கென நம்பகமான ஒருவரை நியமித்துக்கொண்டார். அன்றாட அலுவல் தொடர்பான, அதாவது கையூட்டு மதிப்பில்லாத கோப்புகளில் கையொப்பம் இடுவதை அருவருப்பாக எண்ணினார். அத்தகைய கோப்புகளை ஏதாவது காரணம் சொல்லித் திருப்பி அனுப்பினார்.

ஆசிரியர்கள் ஆண்டு ஊதிய உயர்வுபெறுவது இயல்பானது. வங்கிக் கடன், கூட்டுறவுச் சங்கக் கடன் என எதைப் பெறுவதற்கும் முதல்வர் கையொப்பம் வேண்டும் என்று சென்றால் ஆசிரியர்கள் பணம் கொடுத்தாக வேண்டும். யார் யாரிடம் எவ்வளவு வசூலிக்கலாம் என்பதில் சமர்த்தர் அவர். 

பள்ளி ஆசிரியர் ஒருவர் என் மேற்பார்வையில் பகுதி நேரமாக முனைவர் பட்ட ஆய்வுசெய்துவந்தார். ஒருநாள் விடுப்பு எடுத்துக்கொண்டு கல்லூரிக் கட்டணம் கட்டுவதற்காக அவர் வந்தார். அரைநாள் காத்திருந்தும் அவரிடம் கட்டணம் பெறவில்லை. நூறு கல் தொலைவிலிருந்து வந்திருந்தார் அவர். இன்னொரு நாள் இதற்கென விடுப்பு எடுக்க முடியாது. இதை உணர்ந்த முதல்வர் “கல்லூரி நலனுக்காக இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தால் கட்டணம் செலுத்தலாம்” என்று சொல்லிவிட்டார்.

இந்த விஷயம் எனக்குத் தெரியக் கூடாது என்றும் எச்சரிக்கை செய்திருக்கிறார். அந்த ஆசிரிய மாணவரும் இரண்டாயிரம் கையூட்டுக் கொடுத்துவிட்டுக் கட்டணம் செலுத்திவந்தார். சில நாட்களுக்குப் பிறகு என்னிடம் சொன்னார். அன்றே சொல்லியிருந்தாலும் என்னால் எதுவும் செய்திருக்க இயலாது.

நான் துரோகியா?

இப்படி ஆசிரியர்கள் கையூட்டுப் பெறும் வழிமுறைகளைப் பற்றி ஏராளமாகச் சொல்லலாம். நான் குறிப்பிட்டிருப்பவை வெகுசில. இன்னும் பெரிய பெரிய விஷயங்களும் இருக்கின்றன.

ஆசிரியர்கள் நிர்வாகப் பதவிக்குச் செல்லும்போது மிக மோசமான அதிகார வர்க்கமாக மாறிவிடுகிறார்கள். இருபது இருபத்தைந்து ஆண்டுகள் ஆசிரியராக இருந்து தம்மால் எதுவும் பெற முடியவில்லை என்னும் தீராத் தாகத்தைத் தணித்துக்கொள்ள எந்த வகையில் எல்லாம் கையூட்டுப் பெறலாம் என அலைபாய்கிறார்கள்.

அரசுப் பள்ளி, அரசுக் கல்லூரி என்று வரும்போது மாணவர்கள் செய்யும் வயதுக்கே ஏற்ற சில சேட்டைகளைப் பெரிதாக்கி ‘இளைய தலைமுறையே சீரழிந்துவிட்டது’ என்று ஒப்பாரி வைப்போர் ஆசிரியர்களின் இத்தகைய இழிசெயல்களைப் பற்றி எதுவும் பேசுவதில்லை. ஆசிரியர் சங்கங்களும் வாய் திறப்பதில்லை. 

இவற்றை வெளிப்படுத்தி எழுதும் என்னைப் போன்றவர்களை ‘ஆசிரியராக இருந்துகொண்டே ஆசிரிய சமூகத்துக்குத் துரோகம் செய்பவர்கள்’ என்று சொல்கிறார்கள். ஆசிரியராக இருந்து ஆசிரியர்கள் செய்யும் இழிசெயல்களை எல்லாம் நேருக்கு நேர் கண்ட என்னைப் போன்றவர்கள்தான் அவற்றை வெளிப்படுத்தி எழுத முடியும்; எழுத வேண்டும். நல்ல சமூகத்தை உருவாக்கும் கடமையைக் கொண்ட ஆசிரியர்கள் செய்யும் இழிசெயல்கள் பற்றிப் பொதுச் சமூகமும் விரிவாகப் பேசவும் விவாதிக்கவும் வேண்டும்!

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

கலை அறிவியல் கல்லூரிகளுக்கு அரசின் கடைக்கண் பார்வை கிடைக்குமா?
உயர்கல்விப் பாடத்திட்டத்தில் பன்மைத்துவம் அழிகிறதா?
தமிழ் வழி உயர்கல்விக்கு வேண்டும் முக்கியத்துவம்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பெருமாள்முருகன்

பெருமாள் முருகன், பேராசிரியர், எழுத்தாளர். ‘அர்த்தநாரி ஆலவாயன்’, ‘பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.


8






பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

KILLIVALAVAN P.K   6 months ago

பேராசிரியர் உயர் கல்வித் துறையில் கல்லூரி அளவில் மட்டும் ஆசிரியர்களைப் பற்றிக் கூறியுள்ளார். நிர்வாகத்தில்பணி மாறுதல் ,பதவி உயர்வு , உயர் பதவிகள் இன்னும் இத்தியாதி இத்தியாதி வகைகளைப் பற்றிப் பேசியிருக்கலாம். நேர்மையான ஆசிரியர்கள் மீது பொய்க்குற்றச்சாட்டு ,மொட்டைக் கடிதங்கள், ஆள் பிடித்தல் இன்னும் விரிப்பிற் பெருகும் நன்றி!

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

VIJAYAKUMAR   6 months ago

பேராசிரியர் பெருமாள் முருகன் துரோகி அல்ல, பேராசிரியர் என்னும் பதவிக்கு மிகச்சரியான நியாயம் செய்கிறார். இதைச்சொல்ல நிகழ்காலத்தில் மட்டுமல்ல, எக்காலத்திலும் அறம் வழுவாத வாழ்வை வாழ்ந்திருக்கிறேன் என்கிற நிமிர்வும், நெஞ்சுரமும் வேண்டும்; மிகத் தைரியமான பணி. வெளியிடும் அருஞ்சொல்லும் பாராட்டுக்குரியது.

Reply 6 0

Login / Create an account to add a comment / reply.

தொல்லியல் சான்றுகள்ஜி.முராரிஒடுக்கப்பட்ட சமூகம்ரிஷப் ஷெட்டிஜூலியஸ் நைரேரே: தான்சானிய தேசத் தந்தைஸ்டாலின் ராஜாங்கம் கட்டுரைதமிழ்ப் பார்வைவர்கீஸ் குரியன்அரசியல் மாற்றங்கள்உடல் எடைக் குறைப்புதமிழ் இயக்கம்கிரகம் சாப்மேன்ஈஷா ஆஷ்ரம்இடைக்கால அரசுசிம் இடமாற்றம்அடிப்படைவியம்ஐடி துறைஇது ‘அவர்கள்’ குழந்தைகளுக்கான நியாயம்திஷா அலுவாலியா கட்டுரைநேடால் இந்தியக் காங்கிரஸ்நளினி சிதம்பரம்பார்டர் அண்ட் பௌண்டரீஸ்கார்போஹைட்ரேட்எழுத்து என்ற செயல்பாடே போராட்டம்தான்: சாரு பேட்டிமத்திய - மாநில உறவுகள்திராவிட இயக்கமும் ஆரிய மாயைகளும்எருமைகள் மீது வாரிசுரிமை வரி!மூளை உழைப்புமோடியின் அமெரிக்கப் பயணத்தின் பின்விளைவுகள்உழவர் விருது

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!