கட்டுரை, தொடர், தமிழ் ஒன்றே போதும் 5 நிமிட வாசிப்பு

கலை அறிவியல் கல்லூரிகளுக்கு அரசின் கடைக்கண் பார்வை கிடைக்குமா?

பெருமாள்முருகன்
08 Apr 2023, 5:00 am
6

ன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகள் முடிந்துவிட்டன. மே மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகி உயர்கல்வியில் மாணவர்கள் சேர்வர். மருத்துவக் கல்லூரிச் சேர்க்கைக்கு ஒரே ஒரு விண்ணப்பம் போட்டால் போதும். பொறியியல் சேர்க்கைக்கும் ஒரே விண்ணப்பம்தான். கால்நடை மருத்துவம், இந்திய மருத்துவம், வேளாண்மைக் கல்வி உள்ளிட்ட அனைத்துத் தொழிற்கல்விப் படிப்புகளுக்கும் ஒவ்வொரு விண்ணப்பம் போதும். ஒற்றைச் சாளரமுறை என்னும் கலந்தாய்வில் பங்கேற்றுக் கல்லூரியைத் தேர்வுசெய்துகொள்ளலாம். 

தம் மதிப்பெண்ணுக்கு எந்தெந்தக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும், என்னென்ன படிப்புகளில் சேரலாம் என்பவற்றை எல்லாம் முன்கூட்டியே மாணவர்கள் தீர்மானிக்க முடியும். கல்லூரிகளின் தரம், தேர்ச்சி விகிதம் உள்ளிட்டவற்றின் விரிவான தகவல்களை இணைய வழியில் எளிதாகப் பெறலாம். 

கலைக் கல்லூரிச் சேர்க்கையின் சிரமங்கள்

கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் நிலைதான் பரிதாபம். கலை அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் இதுவரைக்கும் ஒற்றைச் சாளரமுறை என்னும் கலந்தாய்வு நடைமுறை இல்லை. கிட்டத்தட்ட 150 அரசுக் கல்லூரிகளும் 160 அரசு உதவிபெறும் கல்லூரிகளும் உள்ளன. சுயநிதிப் பிரிவில் கிட்டத்தட்ட நானூறு கல்லூரிகள் இருக்கலாம். மொத்தத்தில் எழுநூற்றுக்கும் மேற்பட்ட கலை அறிவியல் கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளன. ஆண்டுதோறும் புதிய கலைக் கல்லூரிகளும் அறிவிக்கப்படுகின்றன. உயர்கல்வி பயிலும் மாணவர் எண்ணிக்கையைக் கணக்கெடுத்தால் கலை அறிவியல் கல்லூரி மாணவர் எண்ணிக்கையே முதலிடம் பெறும். 

லட்சக்கணக்கில் மாணவர்கள் பயிலும் இக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அந்தந்தக் கல்லூரிகளே நடத்திக்கொள்கின்றன. அதாவது, ஒரு மாணவர் தாம் விண்ணப்பிக்க விரும்பும் ஒவ்வொரு கல்லூரிக்கும் தனித்தனி விண்ணப்பம் போட வேண்டும். ஒருவர் விரும்பும் பாடம், இடஒதுக்கீடு, பன்னிரண்டாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் ஆகியவற்றின் காரணமாக இந்த எழுநூற்றில் ஏதோ ஒன்றில் இடம் கிடைக்கலாம். அதை எப்படித் தீர்மானிப்பது? இப்போது இருக்கும் நிலையில் கிளிஜோசியம் மூலமாக வேண்டுமானால் தீர்மானிக்க முடியும். வேறு வழியேயில்லை. 

ஒருவர் எழுநூறு கல்லூரிக்கும் விண்ணப்பிக்க இயலுமா? அரசுக் கல்லூரிகள் மட்டும் என்றாலும் நூற்றைம்பது கல்லூரிக்கு ஒருவர் விண்ணப்பிக்க இயலுமா?  பத்துக் கல்லூரிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறார் என்றாலே போக்குவரத்துச் செலவு, விண்ணப்பக் கட்டணம், இணைப்புகளுக்கான செலவு (புகைப்படம், சான்றிதழ் நகல்கள்) உள்ளிட்டவற்றைக் கணக்கிட்டுப் பார்த்தால் சிரமம் தெரியும். அது மட்டுமா? எத்தனை நாட்களைச் செலவிடுவது? கிராமப்புற மாணவர்களுக்குக் கல்லூரிகள் எங்கெங்கே இருக்கின்றன என்னும் விவரம்கூடத் தெரியாது. 

இதையும் வாசியுங்கள்... 15 நிமிட வாசிப்பு

தமிழக உயர்கல்வியின் யதார்த்தங்கள்

தங்க.ஜெயராமன் 03 Feb 2022

அலைக்கழிப்பு…

கரோனோ காலகட்டத்தில் அரசுக் கல்லூரிகளுக்கு மாணவர்கள் இணையம் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறையை அரசு கொண்டுவந்தது. அப்போதும் ஒரே ஒரு விண்ணப்பம் போதாது. ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒவ்வொரு விண்ணப்பம் என்னும் நடைமுறைதான். எழுபத்தைந்து கல்லூரிகளுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் உண்டு. ஐம்பது கல்லூரிகளுக்கு விண்ணப்பித்தவர்கள் அனேகம். மாணவர்கள் தாமே எளிதாக விண்ணப்பிக்கலாம் என்றும் கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் மையம் செயல்படும் என அரசு அறிவித்தாலும் இணைய மையங்களை நாடிச் சென்று பணம் செலவழித்து விண்ணப்பிப்போர் எண்ணிக்கையே மிகுதி. ஒரு கல்லூரிக்கு விண்ணப்பிக்க இவ்வளவு என்று மையங்கள் கட்டணம் வசூலிக்கின்றன.

சரி, அப்படி விண்ணப்பித்துத்தான் என்ன பயன்? நூற்றைம்பது கல்லூரிகளும் ஒவ்வொரு நாளென நூற்றைம்பது நாட்களுக்கா மாணவர் சேர்க்கை நடத்தும்? ஒருவாரம், பத்து நாள் என மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வழங்கப்படுகிறது. பல கல்லூரிகள் கால அவகாசத்தின் கடைசி நாட்களை முடிவுசெய்து மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் நாள் ஒன்றாகவே இருக்கிறது. பத்துக் கல்லூரிக்கு விண்ணப்பித்த மாணவர் எந்தக் கல்லூரிக்குச் செல்வார்? அவர் ஒரு கல்லூரியைத் தேர்ந்தெடுத்துச் சென்றால் அங்கே இடம் கிடைக்கும் என்பது உறுதியில்லை.

இன்னொரு கல்லூரிக்குச் சென்றிருந்தால் அவருக்குக் கிடைத்திருக்கலாம். அடுத்த நாள் சென்று பயனில்லை. சேர்க்கை நாளில் ஒருவர் வரவில்லை என்றால் வாய்ப்பு அடுத்த மாணவருக்குப் போய்விடும். ஒவ்வொரு கல்லூரியும் சேர்க்கை நடத்தும் நாள் எதுவென்று தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டும். ஒரு கல்லூரியில் கிடைக்கவில்லை என்றால் அருகில் உள்ள இன்னொரு கல்லூரிக்கு ஓட வேண்டும். பல மாணவர்கள் பித்துப் பிடித்த மாதிரி அலைக்கழிகின்றனர். 

அந்தப் பித்தைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பும் சுயநிதிக் கல்லூரியினர் ‘பிள்ளை பிடிக்க’ ஆசிரியர்களை அனுப்பிவைக்கின்றனர். வீடுகளுக்கு நேரடியாகச் சென்று பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து மாணவர்களைப் பிடிக்க ஆசிரியர்கள் எங்கும் திரிகின்றனர். அரசுக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடக்கும் நாளன்று அதன் வாசலில் சுயநிதிக் கல்லூரிகளின் வாகனங்கள் அங்கங்கே நிறுத்திவைக்கப்பட்டிருக்கும். இடம் கிடைக்காமல் வெளியேறும் மாணவர்களைக் குறிவைத்துச் சுயநிதிக் கல்லூரி ஆசிரியர்கள் பாய்ந்துவரும் காட்சிகளைப் பார்க்க முடியும். மாட்டிக்கொள்ளும் மாணவர்களில் பலர் ஏமாந்துபோய் கட்டணம் கட்ட இயலாமல் பாதியில் படிப்பை விட்டுவிட்டு வெளியேறுவதும் நடக்கிறது. 

என்ன செய்வர் ஒடுக்கப்பட்டோர்?

‘கல்விக்காக எங்கும் செல்லலாம்’ என்பது திருக்குறள் வாக்கு. ஆனால், ஒடுக்கப்பட்ட சாதி மாணவர்களுக்கு இன்னும் அந்த நிலை வரவில்லை. அருகில் இருக்கும் கல்லூரிகளில் இடம் கிடைத்தால் படிப்பார்கள். இல்லாவிட்டால் ஊரில் இருந்துகொண்டு கிடைத்த வேலைக்குப் போகத் தொடங்கிவிடுவார்கள். வெளியூர்களுக்குச் சென்றால் படிப்பில் இடம் கிடைக்கும் என்பது உறுதியில்லை. பெற்றோரையும் அழைத்துக்கொண்டு பல இடங்களுக்குச் செல்லும் அளவுக்குப் பொருளாதார வசதியும் போதாது. ஆகவே, உள்ளூரில் கிடைத்தால் படிப்பு; இல்லாவிட்டால் வேலை. இதுதான் அவர்கள் முடிவு. 

பழங்குடியின மாணவர்களுக்கு ஒரே ஒரு விழுக்காடுதான் இடஒதுக்கீடு உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை இருப்பதால் அங்கே கணிசமான எண்ணிக்கையில் பழங்குடியினர் வசிக்கின்றனர். மலை இறங்கி உயர்கல்விக்கு என வரும் மாணவர்கள் நாமக்கல், ராசிபுரம் ஆகிய ஊர்களில் உள்ள கல்லூரிகளில் சேர விரும்புவார்கள். விண்ணப்பிக்கும் பழங்குடியின மாணவர்களின் எண்ணிக்கை மிகுதியாக இருக்கும். ஆனால், ஒரே ஒரு விழுக்காடுதான் இடஒதுக்கீடு. பெரும்பாலான மாணவர்களுக்கு இடம் கிடைக்காது. ஒரு கல்லூரியில் ஆயிரம் இடங்கள் இருந்தால் பழங்குடியின மாணவர் பதின்மருக்கு மட்டும் இடம் கிடைக்கும். ஆனால், விண்ணப்பித்தவர்களோ இருநூறு முந்நூறு பேர் இருப்பர். 

அதேசமயம், பழங்குடியின மக்களே வசிக்காத பகுதிகள் உண்டு. அங்கிருக்கும் கல்லூரிகளுக்குப் பழங்குடியின மாணவர்களிடமிருந்து விண்ணப்பமே வராது. சென்னையில் பல கல்லூரிகள் இருக்கின்றன. அவற்றுக்குப் பழங்குடியின மாணவர்கள் விண்ணப்பித்தால் இடம் கிடைப்பது உறுதி. ஆனால், அதிகமான எண்ணிக்கையில் விண்ணப்பிக்க மாட்டார்கள். தமக்குரிய இடஒதுக்கீடு அளவு பற்றி மாணவர்களுக்குத் தெரியாது. எங்கே சென்றால் தமக்கு இடம் கிடைக்கும் என்னும் தகவலும் தெரியாது. இதேபோன்றதுதான் அருந்ததியர் இன மாணவர்களின் நிலையும். அருந்ததியர் அதிகம் வசிக்காத மாவட்டக் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்தால் எளிதாகத் தமக்கு இடம் கிடைக்கும் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

ஒற்றைச் சாளரமுறையின் தேவை

தமிழ்நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளில் குறிப்பிட்ட சாதியினர் மிகுதியாக வசிப்பர். அந்தச் சாதி இடஒதுக்கீட்டின் எந்தப் பிரிவில் வருகிறதோ அதில் மட்டும் கடும்போட்டி நிலவும். மற்றவற்றில் போட்டியே இருக்காது. சில பகுதிகளில் வசிக்கும் குறிப்பிட்ட சாதியினர் பொருளாதாரரீதியில் முன்னேறி இருப்பார்கள். அதனால், அவர்கள் கலை அறிவியல் பக்கம் கண்ணெடுத்தும் பார்க்க மாட்டார்கள். பார்த்தாலும் புகழ்பெற்ற கல்லூரிகள் அல்லது சுயநிதிக் கல்லூரிகளுக்குச் சென்றுவிடுவார்கள். ஆகவே, அவர்களுக்கான இடஒதுக்கீட்டுப் பிரிவில் இடங்கள் காலியாக இருக்கும். ஆகவே, ஒருபிரிவில் மாணவர் சேர்க்கை முடிந்துவிடும். இன்னொரு பிரிவில் பெரும்பாலான இடங்கள் காலியாகவே இருக்கும்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

சிந்திக்கச் சொன்னவர் பெரியார்

பெருமாள்முருகன் 01 Apr 2023

இடஒதுக்கீட்டு விதிப்படி காலியாக இருக்கும் இடங்களை இன்னொரு பிரிவுக்கு மாற்றி மாணவர்களைச் சேர்க்கலாம். ஆனால், அது உடனடியாக நிகழாது. மாணவர் சேர்க்கையின் கடைசிக் கட்டத்தில் மட்டுமே அதைச் செய்வர். அதுவரை பொறுத்திராத மாணவர்கள், உறுதியாகக் கிடைக்குமா என்பது தெரியாத மாணவர்கள் தம்மை வேறு ஏதாவது ஒன்றில் பொருத்திக்கொண்டிருப்பர். பல இடங்கள் நிரம்பாமல் நின்றுவிடும்.

நகரத்துக் கல்லூரிகளுக்கு அளவுக்கு அதிகமான மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள். கிராமத்துக் கல்லூரிகளில் அந்த அளவு போட்டியிருக்காது. ஆகவே, சில கல்லூரிகளில் இடங்கள் முழுவதும் நிறைந்துவிடுகின்றன. பல கல்லூரிகளில் இடங்கள் காலியாகக் கிடக்கின்றன. கடந்த ஆண்டு அரசுக் கலை அறிவியல் கல்லூரிகளில் மட்டும் 55,000 காலியிடங்கள் இருந்தன. உயர்கல்வி பயிலும் ஆர்வம் கூடியிருக்கும் இன்றைய காலத்தில் இவ்வளவு இடங்கள் காலியாக இருக்க வாய்ப்பே இல்லை. உயர்கல்வி கற்க வரும் மாணவியருக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டம் செயல்படும் சூழலில் வரும் கல்வியாண்டில் மாணவியர் எண்ணிக்கை கட்டாயம் கூடும். மாணவர் சேர்க்கை நடைமுறைகளில் உள்ள குழப்பங்களைத் தீர்த்தால் இத்தகைய காலியிடங்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். 

ஒற்றைச் சாளரமுறை என்னும் ஒரே விண்ணப்பத்தில் எந்தக் கல்லூரியை வேண்டுமானாலும் மாணவர் தேர்வுசெய்துகொள்ளும் கலந்தாய்வுச் சேர்க்கை முறை இருந்தால் அரசு கல்லூரிகளில் காலியிடமே ஏற்படாது. ஒரே ஒரு விண்ணப்பம் போட்டால் போதும். மாணவர் எங்கும் அலைய வேண்டியதில்லை. இந்தக் கல்லூரியில் கிடைக்குமா அந்தக் கல்லூரியில் கிடைக்குமா என குழம்பித் தவிக்கவும் வேண்டாம். பரிந்துரை வேண்டி அரசியலர்களின் முன்னால் போய் நிற்கவும் தேவையில்லை.

பணம் பெற்றுக்கொண்டு இடம் வாங்கித் தருவதாகச் சொல்வோரிடம் ஏமாறவும் அவசியமில்லை. மாணவர் தமக்கு ஆர்வமான படிப்பைத் தேர்வு செய்யலாம். விரும்பும் கல்லூரியைத் தேர்ந்தெடுக்கலாம். கல்விக்கென மாணவர்கள் இடம்பெயர்ந்து செல்வதும் அதிகரிக்கும். பயணமும் இடம்பெயரலும் நம் சாதியச் சமூகத்தில் பல அசைவுகளை ஏற்படுத்தும்.

அரசின் பார்வை திரும்பட்டும்!

அரசு உதவி பெறும் கல்லூரிகள் பலவும் ரகசியமாக மாணவர் சேர்க்கையை நடத்தி முடித்துவிடுகின்றன. அரசுக் கல்லூரிப் படிப்புகளுக்கு உரிய விதிமுறைகளே உதவிபெறும் கல்லூரிகளுக்கும் பொருந்தும் என்றாலும் விண்ணப்பித்தல், தர வரிசை, கட்டணம் ஆகியவற்றில் பல கல்லூரிகள் தன்னிச்சையாகச் செயல்படுவதாகப் புகார்கள் உண்டு. கலந்தாய்வுச் சேர்க்கை முறையில் அரசு கல்லூரிகளையும் அரசு உதவிபெறும் கல்லூரிகளையும் கட்டாயமாக இணைக்க வேண்டும். விரும்பும் சுயநிதிக் கல்லூரிகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

தமிழ்ச் சொல் நன்று

பெருமாள்முருகன் 25 Mar 2023

சுயநிதிக் கல்லூரிப் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டுக்கு என அரசே கட்டணம் நிர்ணயிக்கலாம். இவ்வாறு பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் எத்தனையோ வசதிகள் கிடைக்கும். கரோனோ காலத்தில் இணையம் மூலமாக விண்ணப்பிக்கும் வசதியை மிகச் சில நாட்களிலேயே ஏற்படுத்திக் கொடுக்க முடிந்தது. அந்த அளவு தொழில்நுட்ப வசதிகள் இப்போது இருக்கின்றன. இப்போது தொடங்கினால் போதும். ஒரே மாதத்தில் ஒற்றைச் சாளரமுறைக் கலந்தாய்வை வரும் கல்வியாண்டிலேயே கொண்டுவந்துவிடலாம்.  

உயர்கல்வியைப் பொருத்தவரை எல்லாக் காலத்திலும் கடைநிலையில் வைக்கப்பட்டிருப்பவை கலை அறிவியல் படிப்புகள். ‘மேதை’களை உருவாக்கும் பள்ளி ஆசிரியர்கள், அரசுத் திட்டங்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் அன்றாட நிர்வாகம் உள்ளிட்ட பணிகளுக்கு உரியவர்களைத் தயார்செய்யும் முதன்மையான கல்வி நிறுவனங்கள் கலை அறிவியல் கல்லூரிகள். ஆனால், அரசின் நேர்பார்வைக்கு இவை ஒருபோதும் இலக்காவதில்லை. எப்போதாவது கடைக்கண் பார்வை அருள் பாலிக்கும்; அவ்வளவுதான். அந்தக் கடைக்கண் பார்வையேனும் வைத்து ஒற்றைச் சாளரமுறைச் சேர்க்கையை அரசு நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும்.

 

தொடர்புடைய கட்டுரைகள்

தமிழக உயர்கல்வியின் யதார்த்தங்கள்
தமிழ் வழி உயர்கல்விக்கு வேண்டும் முக்கியத்துவம்
சிந்திக்கச் சொன்னவர் பெரியார்
தமிழ்ச் சொல் நன்று
ராமாயணம் இலக்கியமா; புனித நூலா?
இட்லி தோசை சுட வரவில்லையா?
தனிப்பாடல் எனும் தூண்டில் புழு
சாதியைத் தவிர்ப்பது எப்போது சாத்தியமாகும்?
ஜி.யு.போப்பின் நண்பர் உ.வே.சா.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பெருமாள்முருகன்

பெருமாள் முருகன், பேராசிரியர், எழுத்தாளர். ‘அர்த்தநாரி ஆலவாயன்’, ‘பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.


3

3





பின்னூட்டம் (6)

Login / Create an account to add a comment / reply.

Krishnamoorthy Muniyappan   1 year ago

மேலோட்டமாக பார்த்தால் இக்கட்டுரை பரந்துரைக்கும் தீர்வு சிறப்பான ஒன்றாகவே தோன்றும் ஆனால் இதிலும் ஏராளமான நடைமுறை சிக்கல்கள் உள்ளன. ஒற்றை சாளர முறையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். அப்போதும் இந்த நடைமறையின்கீழ் அனைத்து பழங்குடியின மாணவர்களுக்கும் தான் விரும்பும் மாவட்டத்தில் உள்ள அரசுக் கல்லூரியில் இடம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியே....

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

John   1 year ago

புதிய கல்வி கொள்கைக்கு முட்டு கொடுக்கும் கட்டுரை அருமையான முட்டு🙏🙏👌👌👌👍👍

Reply 0 0

John   1 year ago

புதிய கல்வி கொள்கையில்: 10 ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து. 11 மற்றும் 12ஆம் வகுப்பில் நீங்கள் நினைத்த பாட பிரிவு கிடைக்காது அதிலேயே வடிகட்ட பட்டுவிடுவிர்கள் ITI,DIPLAMA,MBBS,ENGINEERING, ARTS&SCIENCE அனைத்து மேல்நிலை படிப்புக்கும் நுழைவு தேர்வு இப்போதைக்கு ஏதோ படித்து விட்டால் நம் பிள்ளையும் ஒரு பட்டதாரி ஆகிவிடலாம் என்று கனவு காணும் அனைத்து கடைநிலை தாய் தந்தையருக்கும் கடைநிலை மாணவர்களுக்கும் ஒரு பேரடியாக இருக்கப் போவதுதான் இந்த புதிய கல்விக் கொள்கை இந்த புதிய கல்விக் கொள்கையின் முக்கிய குறிக்கோள் எல்லோரும் இன்ஜினியராகவும் டாக்டராகவும் அரசு அதிகாரிகளாகவும் ஆவதை விட கடைநிலை ஊழியர்களை உருவாக்குவது இந்த புதிய கல்விக் கொள்கையின் முக்கிய குறிக்கோள் அதை செவ்வனை முடிக்கும் என்று நான் நம்புகிறேன் ஏனென்றால் இது மத்திய அரசால் கொண்டு வரக்கூடிய திட்டம் மாநில அரசும் இதை ஒத்துக் கொண்டு கையெழுத்திட்டு விட்டது மாநில அரசு பட்டியலில் இருந்த கல்வித்துறையை மத்திய அரசு பட்டியலில் சேர்த்து விட்டது இது நம் நிலைமை இன்னும் மோசம் ஆவதற்கு காரணமாக அமையும் என்று நான் நம்புகிறேன்

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

N. SENTHIL KUMAR   1 year ago

என்ன ஒரு அருமையான கட்டுரை ஐயா. என்னுடைய 25 வருஷம் கனவு சார். இந்த ஒற்றை சாளர முறை இல்லாததுனால் நான் என்னுடைய வேதியியல் குறித்த ஆய்வுப் பயணக் கனவை இழந்து வருந்தினேன். தங்களுடைய கட்டுரையில் குறிப்பிட்டுள்ள அத்தனை இடர்களையும் நான் சந்தித்தவன் என்பதை இங்கு தெரிவிக்கின்றேன். இந்த கட்டுரையை எப்பாடுபட்டாவது அரசின் உயர்மட்ட அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல உங்களை பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

KILLIVALAVAN P.K   1 year ago

அரசு கலைக் கல்லூரி மாணவர் சேர்க்கை ஒற்றைச் சாளர முறை மாணவர்களுக்கு பெரிதும் பயனுடையதாக அமையும் இடைத்தரகர்களின் இடையூறும் பிற அழுத்தங்களும் இருக்காது. காலியிடங்கள் அனைத்தும் நிரம்பி இருக்கும் அரசு கவனம் செலுத்துமா? பருவமுறைத் தேர்வு தொடங்கும் நாள்வரை மாணவர் சேர்க்கை நடைபெற்ற வரலாறும் இங்கே உண்டு

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Abi   1 year ago

ஆம். அரசு உடனே single window Counselling நடத்த ஆவண செய்ய வேண்டும்.. அப்போது தான் மாணவர்கள் அலைச்சல் குறையும். நன்றி பெருமாள் முருகன் sir.

Reply 8 1

Login / Create an account to add a comment / reply.

கிளிமஞ்சாரோஇந்திய அறத்தின் இரு முகங்கள்அரசு ஊழியர்களின் கடமைவிவசாயத்துக்கு இலவச மின்சாரமா?சொத்து பரிமாற்றம்மன்னார்குடி ஸ்ரீநிவாசன்உழவர் எழுக!காமெல் தாவுத்முற்காலச் சோழர்கள்மேலும்மதராஸ் ஓட்டல்எழுத்துப் பயிற்சிஸ்டென்ட் வலிபார்வைக் குறைபாடுபுகார்வயற்களம்தலிபான்சேரன் செங்குட்டுவன்நாராயண மூர்த்திபுதிய ஆட்டம்மணிரத்னம்சமூகம்அரிய வகை அம்மைஇந்து அடையாளம்மணீஷ் சபர்வால் கட்டுரைசரியும் ஒட்டகங்களின் சந்தை மதிப்புக்ரானிக் கிட்னி டிசீஸ்தகவல்கள்அல்காரிதம்சமையல் எண்ணெய்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!