கட்டுரை, கல்வி, நிர்வாகம் 5 நிமிட வாசிப்பு

மாடுகளா மாணவர்கள்?

பெருமாள்முருகன்
09 Dec 2023, 5:00 am
2

சென்னையில் ஒரு பேருந்தில் படியில் தொங்கிக்கொண்டும் மேலேறியும் மாணவர்கள் பயணம் செய்வதைக் கண்டு கொதித்துப்போன ரஞ்சனா நாச்சியார் (நடிகை என்றும் பாஜக பிரமுகர் என்றும் தெரிகிறது) ஓட்டுநர், நடத்துநர் ஆகியோரிடம் சண்டையிடுவதையும் தன்னை ‘போலீஸ்’ என்று சொல்லிக்கொண்டு மாணவர்களைக் கையால் அடித்துக் கீழே இறக்குவதையும் காட்டும் காணொலி சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை உருவாக்கியது. இதுபற்றிப் பேச நிறையவே இருக்கிறது.  

மாணவர்களை அவர் அடித்தது தவறு. ஒருவரை அடிப்பதற்குக் காவல் துறைக்குக்கூடச் சட்டப்படி உரிமை இல்லை.

படியில் நின்று பயணம் செய்வது விதிமீறல் என்றால் அதற்கு ஒறுப்புக் கட்டணம் விதித்தல் உள்ளிட என்ன தண்டனையோ அதைத் தரலாம். போக்குவரத்துத் துறையோ காவல் துறையோ அதற்கு அதிகாரம் பெற்றவர்கள். புகார் செய்வதற்குப் பொதுமக்களுக்கு உரிமை உள்ளது. 

கை நீட்டி அடிக்கலாமா?

இளவயது என்பதாலும் மாணவர்கள் என்பதாலும் அடிப்பதற்கு எளிதாகக் கை நீள்கிறது.

மாணவர்களை வகுப்பறையில் ஆசிரியர்கள் அடிப்பதற்குக்கூட இப்போது அனுமதி இல்லை. பிள்ளைகளைப் பெற்றோர் அடிக்கக் கூடாது என்னும் கருத்தும் வலுப்பெற்றுவருகிறது. வளர்ந்த நாடுகள் பலவற்றில் பிள்ளைகளை அடிக்கும் பெற்றோருக்குத் தண்டனையே உண்டு. குழந்தைகள் மீதான வன்முறை என்றே அடிப்பதை இன்றைய நாகரிகச் சமூகம் கருதுகிறது. ‘அடியாத மாடு படியாது’ என்னும் பழமொழி மாட்டுக்கு வேண்டுமானால் பொருந்தலாம்; மாணவர்களுக்குப் பொருந்தாது. 

இப்படியிருக்க, சம்பந்தமே இல்லாத ஒருவர் பதின்வயதுப் பையன்களைப் பாய்ந்து அடிப்பதை எப்படிப் புரிந்துகொள்வது? இளைஞர்களை அடித்துத் திருத்தச் சற்றே வயது முதிர்ந்த யாருக்கும் உரிமை இருக்கிறது என்று நம் பொதுமனம் நம்புகிறது. அதன் அப்பட்டமான வெளிப்பாடுதான் இத்தாக்குதல்!

ஆம், இதை வன்முறைத் தாக்குதல் என்றே சொல்ல வேண்டும். முப்பதுக்கு வயதுக்கு மேற்பட்டவர் ஒரு தவறு செய்திருந்தால் அடிக்கக் கை நீண்டிருக்குமா? இளவயதுப் பெண்களாக இருந்திருப்பின் அவர்களை அடிக்கக் கை வந்திருக்குமா? இளைஞர்கள் என்றால் உடனே அவர்கள் தவறு செய்பவர்கள் என்னும் எண்ணம் உள்ளத்தில் ஆழப் பதிந்திருக்கிறது.

நடத்துநரை ‘அறிவுகெட்ட நாய்’ என்று அப்பெண்மணி பலமுறை திட்டுகிறார். ஓட்டுநரையும் சத்தம் போட்டுத் திட்டுகிறார். அரசுப் பேருந்தில் பணியாற்றுபவர்களை இழிவுபடுத்தும் செயல் அல்லவா இது?

சென்னையில் உச்ச நேரப் பேருந்துகளில் படியில் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகம். அதில் எல்லா வயதினரும் அடங்குவர். அப்படியும் பல நடத்துநர்கள் படியில் இருப்போரை மேலேறச் சொல்லத்தான் செய்கிறார்கள். உள்ளே இடம் இல்லாதபோது பயணிகள் உள்ளே வர முடிவதில்லை. எப்படியிருப்பினும் ஒருவரை ‘அறிவுகெட்ட நாய்’ என்று திட்டுவது சரியாகுமா? அதே சொற்களை அவரை நோக்கிச் சொல்லியிருந்தால் பொறுத்திருப்பாரா? பொதுவிடத்தில் ஒருவரை இப்படி வசைபாடும் உரிமையை அவர் எந்த அடிப்படையில் பெறுகிறார்? சாதி சார்ந்தா? பாலினம் சார்ந்தா? அதிகாரம் சார்ந்தா? அரசியல் சார்ந்தா?

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

பேருந்து பிரச்சினைக்கு என்ன செய்யலாம்? 

சரி, இருக்கட்டும். பேருந்துப் பிரச்சினையை விவாதிப்பதற்கான ஒரு திறப்பாக இந்தச் சம்பவத்தைக் கொள்ளலாம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் கட்டணமில்லாமல் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யலாம் எனத் திட்டத்தைப் பயன்படுத்தி, இன்று பல்லாயிரம் மாணவர்கள் பயன் பெறுகிறார்கள். ஆனால், திட்டத்திற்கேற்பப் போதுமான அளவு பேருந்துகள் இல்லை என்பது உண்மைதான். கூடுதல் பேருந்துகளை விடுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்க வேண்டும். அதேசமயம் இருக்கும் அமைப்புக்குள்ளேயே சில தீர்வுகளைப் பெறுவது சாத்தியம் என்பது என் அனுபவம்.

நாமக்கல் அரசுக் கல்லூரி முதல்வராக நான் பணியேற்றபோது மாணவர்கள் பலர் தினமும் தாமதமாகவே கல்லூரிக்கு வருவதை அறிந்தேன். கல்லூரி நேரத்திற்கு ஏற்ற வகையில் போதுமான அளவு பேருந்துகள் இல்லை. போக்குவரத்துத் துறை மேலாளரிடம் பேசினேன்.  அவர் ‘பார்க்கிறேன்’ என்றார். ஏதேனும் அழுத்தம் இருந்தால்தான் நம் அதிகார வர்க்கம் அசைந்து கொடுக்கும். ஆகவே, நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் மூலமாகவும் மாவட்ட ஆட்சியர் மூலமாகவும் முயன்றேன். கூடவே முதல்வரின் தனிப்பிரிவு உள்ளிட்ட அலுவலகங்களுக்கும் கடிதங்கள் அனுப்பினேன். சட்டமன்ற உறுப்பினரும் முயற்சித்தார். 

சில நாட்களிலேயே பலன் கிடைத்தது. எங்கள் கல்லூரிக்கு வரும் வழிப் பேருந்துகளுக்குப் பொறுப்பான மேலாளர் தொடர்புகொண்டார். எல்லோரும் சொல்வதுபோலவே அவரும் மாணவர்கள் மீது குறைகளைக் கொட்டினார். பேருந்து நிலையத்தில் கூட்டமாகக் கூடிச் சத்தம் போட்டுக்கொண்டும் கத்திக்கொண்டும் அழிம்பு செய்கிறார்கள் என்றார். குறிப்பிட்ட நேரத்தில் மாணவர்கள் கூடுவது தவிர்க்க இயலாதது. மனம் மகிழ்ச்சியில் துள்ளும் இளவயது.

சத்தம் போடுவதும் நண்பர்களுடன் பேசிச் சிரிப்பதும் இயல்புதானே? அவற்றை ரசிக்க முடியாமல் நடுத்தர வயதுக்காரர்கள் இறுக்கமானவர்களாக மாறிவிட்டனர். என்ன செய்வது? அதை நயமாக எடுத்துச் சொல்லிவிட்டுப் “பொதுமக்களுக்கு ஏதேனும் இடையூறு செய்கிறார்களா? அப்படியிருந்தால் அம்மாணவர்களைப் படம் பிடித்து என்னிடம் தாருங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று சொன்னேன். அவரும் “சரி” என்றார். மாணவர்கள் இடையூறு செய்தமைக்கான சான்று எதையும் அவரால் தர முடியவில்லை. தர முடியாது என்று எனக்குத் தெரியும். 

மாற வேண்டியது யார்?

மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் எப்போது பிரச்சினை ஏற்படுகிறது? மாணவர்களை மரியாதை இன்றியும் இழிவுபடுத்தியும் யாரேனும் பேசினால் அப்போது பிரச்சினை ஏற்படும். ஓட்டுநரோ நடத்துநரோ அவ்வாறு பேசினாலும் மாணவர்கள் தாங்கிக்கொள்ள மாட்டார்கள். அத்தகைய சந்தர்ப்பங்களில் மாணவர்கள்தான் குற்றம் செய்திருப்பர் என்றே பொது மனப் பார்வை கருதுகிறது.

ஒரு மாணவரை எந்தச் சம்பந்தமும் இல்லாத ஒருவர்கூட ‘டேய்’ என்று விளிக்க முடியும். திட்ட முடியும். அறிவுரை கூற முடியும். அதை யாரும் தவறாகக் கருதுவதில்லை. வயது தரும் உரிமையின் காரணமாக யார் வேண்டுமானலும் மாணவர்களைத் திட்டலாம் என்பது என்ன வகை நியாயம்? மாற வேண்டியது யார்? பொதுச்சமூகமா மாணவர்களா? 

போக்குவரத்து மேலாளர் அடுத்துச் சொன்னது இது: “பேருந்து நிலையத்தில் பையன்களும் பெண்களும் பேசிச் சிரித்து விளையாடுகிறார்கள்; பார்க்கச் சகிக்கவில்லை.”  

பதின்வயதிலோ இளம் பருவத்திலோ ஆணும் பெண்ணும் சந்தித்துப் பேசிக்கொள்வதற்கும் பழகுவதற்கும் பொதுவிடங்களே அற்ற சமூகம் நமது. ஒருவரை ஒருவர் தொட்டால் தவறு. பேசிக்கொண்டால் தவறு. அருகருகே உட்கார்ந்தால் தவறு. சேர்ந்து நடந்தால் தவறு. இருவரும் சிரித்தால் தவறு. பதின்பருவத்தில் எதிர்ப் பாலினம் பற்றிய ஈர்ப்பு அதிகமாக இருப்பது இயல்பு. அதற்கு வடிகால் தேவை என்றால் இருபாலினரும் சகஜமாகப் பழகுவதற்கான வாய்ப்பு வேண்டும். என்ன தவறு நேர்ந்துவிடும்? காதலிப்பார்களா?

காதலை ஏற்றுக்கொள்ளாத சாதியப் பார்வை கொண்டவர்களே மாணவர்கள் மீது குற்றம் சொல்வார்கள். ஏற்றுக்கொள்பவர்களாக இருப்பின் அவர்கள் மனநிலையைப் புரிந்து சரியான திசை வழியைக் காட்டுவார்கள். செய்தித்தாள்களில் அன்றாடம் வரும் செய்திகளைப் பார்த்தால் நடுத்தர வயதினரும் முதியவர்களும் செய்யும் பாலியல் குற்றங்கள் அளவற்றவை என்பது தெரிகிறது. அதற்கு என்ன தீர்வு வைத்திருக்கிறோம்? பெரியவர்கள் பாலியல் குற்றங்கள் செய்வது சகஜம் என்போமா? 

அது நேரமோ, பணமோ...

அறிவுக்குச் செலவிட தயங்காதீர்கள்.
இது உங்கள் ஆளுமை, சமூகம் இரண்டின் வளர்ச்சிக்குமானது!

தொடர் முயற்சிகள்

மேலாளரிடம் மகளிர் சிறப்புப் பேருந்து ஒன்று விடும்படியும் கேட்டேன். கல்லூரியில் கிட்டத்தட்ட எண்ணூறு மாணவியர் படிக்கிறார்கள். அவர்களில் இருநூறு பேராவது பேருந்தில் வருவார்கள். சிறப்புப் பேருந்து விட்டால் ஐம்பது அறுபது பேர் வரை கட்டாயம் ஏறுவார்கள். 15 ஆண்டுகளுக்கு முன்னால் அப்படி ஒரு பேருந்து வந்துகொண்டிருந்ததையும் நினைவுபடுத்தினேன்.

அடுத்து, “உங்கள் கல்லூரிப் பெண்களைப் பற்றி உங்களுக்குத் தெரியாது சார். அவர்கள் பையன்கள் வரும் பேருந்தில்தான் ஏறுவார்கள்” என்றார் அவர். சரி, அப்படி விரும்பிப் பொதுப் பேருந்தில் வருபவர்கள் வரட்டும். சிறப்புப் பேருந்தில் வருபவர்களும் இருப்பார்கள், விட்டுப் பாருங்கள் என்று சொன்னேன். 

தினந்தோறும் அவரைத் தொடர்புகொண்டு பேச சில ஆசிரியர்களிடம் பொறுப்பைக் கொடுத்தேன். ‘பேருந்துப் பிரச்சினைக்காக மாணவர்கள் போராடத் தயாராக இருக்கின்றனர்; அவர்கள் சாலையில் வந்து அமர்வதைத் தடுத்து வைத்திருக்கிறேன். ரொம்ப நாளுக்கு அது சாத்தியமில்லை!’ என்று பாதி உண்மையும் பாதி பொய்யும் கலந்து சொன்னதும் உண்டு. பலமுனை முயற்சிகளும் நடந்தால்தான் நம்முடைய அதிகார வர்க்கம் காது கொடுக்கும்.

சட்டமன்ற உறுப்பினரையும் விடவில்லை. அவரும் தொடர்ந்து பேசினார்.  சில நாட்களில் அதிகாரி நல்ல நடவடிக்கை எடுத்தார். நாமக்கல்லில் இருந்து வேறொரு ஊருக்குச் செல்லும் நகரப் பேருந்துகள் நிலையத்திற்கு வந்து அரை மணி நேரம் கழித்தே புறப்படும். அந்த இடைவெளியைப் பயன்படுத்தி அப்பேருந்தைக் கல்லூரி வரைக்கும் வந்து செல்லும்படி ஏற்பாடு செய்தார். அதுபோல மூன்று பேருந்துகள் கல்லூரி வரைக்கும் வந்து மாணவர்களை இறக்கிவிட்டுத் திரும்பிச் சென்றன. சில மாதங்களுக்குப் பிறகு மகளிர் சிறப்புப் பேருந்து ஒன்றும் வந்தது. அதில் மாணவியர் கூட்டம் நிறைந்திருந்தது. படம் எடுத்து அதிகாரிக்கு அனுப்பி வைத்தேன். 

வழிகள் உண்டு, ஆனால் யோசிப்பதில்லை

ஒரு திட்டத்தைச் செயல்படுத்த நம்மிடம் வழிகள் உள்ளன. கொஞ்சம் யோசித்தால் மாற்று வழிகள் பல புலப்படும். அதற்குப் பிரச்சினை பற்றிய புரிதல் வேண்டும். பிரச்சினையைத் தீர்க்கும் மனம் வேண்டும். எல்லாத் தரப்பிலிருந்தும் அதற்கு முயல வேண்டும். பேருந்துகளை அனுப்பிப் பிரச்சினையைத் தீர்த்தமைக்காக அவருக்கு நன்றி தெரிவித்ததோடு அலுவல்ரீதியான கடிதமும் அனுப்பினேன். அது அவருக்குப் பதக்கம் அணிவித்ததுபோல மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதற்குப் பின் எந்தப் பிரச்சினை என்றாலும் பரிவோடும் உள்ளன்போடும் அணுகித் தீர்த்து வைத்தார். 

பேருந்தில் மாணவர்கள் பக்கம் தவறே இல்லையா என்றால் ‘இருக்கிறது’ என்றுதான் பதில் சொல்வேன். என்ன தவறு? பேருந்துக்குள் இடமிருந்தாலும் உள்ளே செல்லாமல் படியில் நின்று வருவதையே சிலர் விரும்புகிறார்கள். அதை ஒரு சாகசமாகக் கருதுகிறார்கள். ஓடும் பேருந்தில் ஏறுவதும் இறங்குவதும் அவர்கள் செய்யும் தவறு. அதனால் விபத்துகள் ஏற்படுகின்றன. பதின்வயதுக்கே உரிய சாகசச் செயல்களை அன்பாகப் பேசி உணர்த்துவதன் மூலமே சரி செய்ய முடியும்.

பேருந்துப் பயணத்தில் மாணவர் கீழே விழுந்து ஏற்படும் விபத்து பற்றிய செய்திகள் வரும்போதெல்லாம் அதை மாணவர்களிடம்  கவனப்படுத்த முயற்சிப்பேன். கல்லூரி வழிபாட்டுக் கூட்டத்திலோ வேறு நிகழ்ச்சிகளிலோ அச்செய்திகளைக் குறிப்பிட்டுப் பேசுவேன். நாட்டு நலப்பணித் திட்ட ஆசிரியர்களையும் அதைப் பற்றிப் பேசச் சொல்வேன். இருசக்கர வாகன விபத்து பற்றியும் தொடர்ந்து பேசுவதுண்டு. 

கடந்த மாதம் ராசிபுரம் அருகே பேருந்தில் தொங்கிக்கொண்டு வந்த மாணவர்கள் இருவர் சாலையோரம் நின்ற குப்பை லாரியில் மோதிக் கீழே விழுந்து உயிரை விட்டனர். இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலர் எனக்குப் பேசினார். அம்மாணவர்களின் குடும்பத்திற்கு உதவ கல்லூரியில் ஏதேனும் காப்பீட்டுத் திட்டம் உண்டா எனக் கேட்டார். எனக்குத் தெரிய அப்படி எதுவும் இல்லை என்பதைச் சொல்லிச் சில வழிகாட்டுதல்களையும் கொடுத்தேன். அத்துடன் “உங்க சங்கக் கூட்டங்களில் எல்லாம் பேருந்தில் தொங்கிக்கொண்டு செல்லக் கூடாது என்பதை மாணவர்களுக்கு வலியுறுத்திப் பேசுங்கள். அவர்கள் பாதுகாப்பு முக்கியம் என்பதை மனம் கொள்ளும்படி சொல்லுங்கள்” என்றேன். அவரும் செய்வதாகச் சொன்னார். 

மாணவர்கள் மீது குற்றம் சுமத்திவிட்டு ஒதுங்கிக்கொள்ளாமல் ஆக்கப்பூர்வமான சில நடவடிக்கைகளைப் பொறுப்பில் உள்ள எல்லாத் தரப்பினரும் மேற்கொள்ள வேண்டும். வெறுமனே திட்டிவிட்டு அகல்வதில் பயன் இல்லை! 

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

இலவச பஸ் பாஸ்: தங்கள் பங்கை விட்டுக் கொடுப்பார்களா?
சென்னைக்குத் தேவை: ஒருங்கிணைந்த போக்குவரத்து

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பெருமாள்முருகன்

பெருமாள் முருகன், பேராசிரியர், எழுத்தாளர். ‘அர்த்தநாரி ஆலவாயன்’, ‘பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.


5

2





பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

bharath Thamizh   9 months ago

மிகச் சிறந்த பார்வை. நல்ல கட்டுரை ஐயா

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

VIJAYAKUMAR   9 months ago

கட்டுரையை வாசிக்கும் முன்பு அடித்தது சரிதான் என்கிற எண்ணம் கொண்டிருந்தேன்; மாணவர்களின் உயிர் பற்றிய அக்கறையே அவ்வாறு எண்ண வைத்தது. இரண்டு அடி விழுந்தாலும் பரவாயில்லை அவர்கள் உயிரோடு இருக்க வேண்டும் என நினைத்தேன். ஆசிரியரின் கட்டுரை பிரச்சனை எங்கே எனத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது. கூடவே மாணவர்களின் உயிருக்கும் ஒழுக்க நடவடிக்கைகளுக்கும் ஆசிரியர்கள் எல்லா இடங்களிலும் பொறுப்பேற்கத் தயாராக இருக்கின்றனர் என்கிற உண்மையையும். நான் அரசுக் கல்லூரியில் படிக்கும் போதெல்லாம் பஸ் பாஸ் வருவதற்கு ஒரு செமஸ்டர் தீர்ந்துவிடும். தற்போது அந்த நிலை இல்லை. அதைப்போல பேருந்துகள் இயக்கத்தின் எண்ணிக்கை கூட்டினால் மட்டுமே இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முடியும். கேரளம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கெனத் தனிப் பேருந்து இயக்குகிறது, சில இடங்களிலிலேனும்.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Even 272 is a Far cryவர்ண ஒழுங்குபொன்னி நதிநீர் பங்கீடுஇங்கிலாந்துஆழி செந்தில்நாதன்காப்பர்மாதாந்திர அறிக்கைமதமாற்றம்கட்சிப் பிளவுஐபிஎஸ்பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்ஆசாதிசாவர்க்கர் அருஞ்சொல்எண்ணும் – எழுத்துமாக எத்தனை வகை கஞ்சிகள்!ரத்தின் ராய் கட்டுரைநகர்மயமாக்கல்பேச்சுக்குரலில் நவீனப் பட்டினப்பாலைசூப்பர் ஸ்டார்உயர் ரத்த அழுத்தம்எம்.எஸ்.தோனிகுடும்பப் பெயர்சர்தக் பிரதான் கட்டுரைடெல்லி வாழ்க்கைபால்யம் முழுவதும் படுகொலைகள்சமையல் சங்கம்ரிஷப் ஷெட்டிபொதிகை தொலைக்காட்சிஉடலுக்கு ஓய்வுஏ.கே.பட்டாசார்யா கட்டுரைபிரேசில்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!