கட்டுரை, சாவர்க்கர் வாழ்வும், நூல்களும் 10 நிமிட வாசிப்பு

சாவர்க்கர்: சிறை, சித்திரவதை, சித்தாந்தம்

பி.ஏ.கிருஷ்ணன்
03 Nov 2021, 5:00 am
8

சாவர்க்கர் அந்தமானுக்கு அனுப்பப்பட்டார். கழுத்தில், ‘விடுதலை ஆண்டு 1960’ என்ற அறிவிப்பைத் தாங்கிய பட்டை. பத்து ஆண்டுகள் ‘செல்லுலர் சிறை’ என்று அழைக்கப்படும் சிற்றறைச் சிறையில் இருந்தார். அவருடைய சிறைவாசத்தில் பல கொடுமைகளைச் சந்தித்தார் என்பது உண்மை. தன்னை விடுவிக்கக் கோரி அரசிற்கு மன்னிப்புக் கடிதங்கள் எழுதினார் என்பதும் உண்மை. 

இதற்காக, சாவர்க்கரை ‘ஆங்கிலேயரின் அடிவருடி’ என்று சொல்வது தவறு என்று நான் கருதுகிறேன். ஏனென்றால், அன்றைய சிறைகள் இருந்த கொடூரச் சூழலையும், இப்படிக் கடிதம் எழுதிய ஆளுமைகளின் பட்டியலையும் அறிந்திராதவர்கள் செய்யும் காரியம் அது. சகல கொடுமைகளையும் சகிப்பவர்கள் என்று கருதப்படும் கம்யூனிஸ்ட் கட்சியிலேயேகூட பலர் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு அன்றைக்கு இப்படி வெளியே வந்திருக்கிறார்கள். டாங்கே கொடுத்திருக்கிறார், ஜீவானந்தம் கொடுத்திருக்கிறார். 1942 தொடங்கி போர் முடியும் வரை அவர்கள் ஆங்கிலேய அரசிற்கு முழு ஒத்துழைப்புத் தந்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு அவர்களை ‘ஆங்கிலேய அடிவருடிகள்’ என்று தூற்றுவது சரியாக இருக்குமா? 

சிறைச் சித்திரவதைகள்

சாவர்க்கரின் சிறைச்சாலை ஆவணங்களைப் பார்த்தால் அவர் எத்தனை முறை தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார், எத்தனை முறை சங்கிலிகளால் பிணிக்கப்பட்டிருக்கிறார், எத்தனை முறை எண்ணெய்ச் செக்கு ஆட்டியிருக்கிறார் என்பவை தெரியும். விக்ரம் சம்பத் தன்னுடைய புத்தகத்தில் சாவர்க்கரின் ‘ஜெயில் ஹிஸ்டரி டிக்கெட்’ பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். கைதிகள் எவ்வாறு நடந்துகொண்டார்கள், என்னென்ன தண்டனைகள் தரப்பட்டன என்பது தொடர்பிலான ஆவணம் அது.

சாவர்க்கர் பலமுறை தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார், உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். ஒரு வாரம் நின்றுகொண்டே இருக்கும்படியாக விலங்கிடப்பட்டிருக்கிறார். நமக்கு எதிர்நிலையில் இருப்பவர்களைத் தரம் தாழ்த்துவதற்காக, உண்மையைக் கீழே இறக்கும்போது நம்மை அறியாமல் இன்னொரு தவறையும் செய்கிறோம். வரலாற்றின் ஒரு பகுதியை மறைப்பவர்கள் ஆகிவிடுகிறோம்.

சாவர்க்கர் சிறைத் தண்டனையில், கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய ஒரு விஷயம் உண்டு. அவர் எதிர்கொண்ட சிறைச் சூழல் பிந்தைய காலத்தைவிடவும் மிகக் கொடூரமானது. இந்தியச் சிறைச்சாலைகளில் கைதிகளின் நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால்தான், அவற்றைக் கொஞ்சமேனும் மேம்படுத்த ‘இந்திய சிறைகள் கமிட்டி’ (Indian Jails Committee) 1919-ல் அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகளை அரசு ஏற்றுக்கொண்ட பிறகே சிறைகளில் நிலைமை சிறிது மாறியது.

காந்தி, நேரு போன்றவர்கள் சிறை சென்றது 1919-க்குப் பின்னால். சிதம்பரனார் கோவைச் சிறையில் அனுபவித்த இன்னல்களை நாம் அறிவோம். அந்தமான் சிறை அதைவிடக் கொடூரமானது. அதிலும், 1910-களில் அது நரகத்திற்கு ஒப்பானது.

அந்தமான் சிறையில் கைதிகள் நடத்தப்பட்ட விதத்தைப் பற்றி சாவர்க்கர் மட்டுமல்ல; பலர் எழுதியிருக்கிறார்கள். அங்கு நடக்கும் அநியாயங்களை எதிர்த்து பல தலைவர்கள் பேசியதால்தான் அச்சிறை 1938-ல் முழுவதுமாக மூடப்பட்டது. சாவர்க்கர் சிறை அனுபவங்களைக் கொச்சைப்படுத்தும்போது, அந்தமானில் கொடுமைகளை அனுபவித்த ஒட்டுமொத்த விடுதலைப் போராட்ட வீரர்களின் சிறை அனுபவங்களையும் நாம் கொச்சைப்படுத்திவிடுகிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது.

சாவர்க்கரின் மன்னிப்புக் கடிதங்கள்

சாவர்க்கரின் கடிதங்களைப் பார்ப்போம். 1910-ல் சிறை சென்ற சாவர்க்கரின், நான்கு கடிதங்கள் 1913, 1914, 1917, 1920 ஆண்டுகளில் அந்தமானிலிருந்து எழுதப்பட்டவை. எல்லாக் கடிதங்களிலும், “சிறையிலிருந்து விடுதலைசெய்யப்பட்டால் சட்டம் ஒழுங்கைக் கடைப்பிடிப்பேன். அரசு கொடுக்கும் எந்த வேலையையும் செய்யத் தயாராக இருக்கிறேன்” என்ற உறுதிமொழியை வெவ்வேறு வார்த்தைகளில் பேசுகிறார்.

1913 கடிதத்தில், “என்னை விடுவிக்காவிட்டால், இந்தியச் சிறைக்காவது அனுப்புங்கள் அல்லது அந்தமான் தீவுகளில் வசிக்கவாவது விடுங்கள்” என்கிறார்.

1914 மற்றும் 1917 கடிதங்களில், “என்னை நீங்கள் விடுதலை செய்யவிட்டாலும் பரவாயில்லை; மற்றைய அரசியல் கைதிகளை விடுதலைசெய்யுங்கள்” என்கிறார்.

1920 கடிதத்தில், “மற்றைய அரசியல் கைதிகளைப் போல எங்களையும் நடத்துங்கள், விடுதலை செய்யுங்கள்” என்கிறார் (நூற்றுக்கணக்கானவர்கள் முதல் உலகப் போர் முடிந்ததும் விடுவிக்கப்பட்டார்கள்).

சிறையிலிருந்த 11 வருடக் காலம் சாவர்க்கர் உடலை உருக்குலைத்திருந்தது. இடையில் 1919 காலகட்டத்தில் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. ரத்னகிரி சிறையிலிருந்து எழுதிய 1921 கடிதத்திலும், ‘என்னையும் என் மனைவியையும் அந்தமானுக்கு அனுப்பிவிடுங்கள். நாங்கள் அங்கேயே யாருக்கும் தொந்தரவுசெய்யாமல் இருந்து மடிகிறோம்’ என்று சொல்கிறார். கிட்டத்தட்ட ஒரு வருடம் சிறை மருத்துவமனையில் அவர் கழிக்க நேர்ந்தது. 

ஆங்கிலேயர்களின் மதிப்பீடு

சாவர்க்கர் உண்மையிலேயே ஆங்கிலேய அடிவருடியாக ஆக விரும்பினார் என்று ஆங்கிலேய அதிகாரிகள் நினைத்திருந்தால், அவரை விடுதலைசெய்ய 27 வருடங்கள் காத்திருந்திருக்க மாட்டார்கள். சாவர்க்கரைப் பற்றி எழுதியிருக்கும் அதிகாரிகள் அனைவரும் அவரை, ‘மிகத் திறமையான எதிரி’ என்றே கருதியிருக்கிறார்கள். அன்றைய அரசின் மிக முக்கியமான அதிகாரியான, உள்துறை உறுப்பினராக இருந்த சர் ரெஜினால்ட் க்ரடாக் 1913-ல் அந்தமான் சிறைக்கு வந்து அங்குள்ள கைதிகளின் குறைகளைக் கேட்டறிந்தார். சாவர்க்கரையும் அவர் சந்தித்தார்.

சாவர்க்கரைப் பற்றி தன் அறிக்கையில் அவர் கூறுயிருப்பது இது: “சாவர்க்கருக்கு விடுதலை அளிப்பது என்பது நடக்கவே கூடாது. அவர் எந்தச் சிறையிலிருந்தும் தப்பித்துச் சென்றுவிடுவார் (அந்தமானைத் தவிர). அவர் மிகவும் முக்கியமான தலைவர் என்பதால் இந்திய அனார்க்கிஸத்தை ஆதரிக்கும் ஐரோப்பியர்கள் அவரை எப்பாடுபட்டாவது தப்பிக்கச் செய்துவிடுவார்கள். அந்தமானில் அவரை சிறையிலிருந்து வெளியில் விட்டாலும் அவர் நிச்சயம் தப்பித்துவிடுவார். அருகில் இருக்கும் தீவுகளில் ஒரு கப்பலை நண்பர்கள் நிறுத்திவைத்தால் போதும். உள்ளூர் மக்களுக்கு கொஞ்சம் பணம் கொடுத்தால் காரியம் எளிதாக நிறைவேறி விடும்.”

சாவர்க்கருக்கு சிறையில் தரும் கடினமான வேலைகளை சில ஆண்டுகளுக்குப் பின் நிறுத்திவிடலாம் என்று சொல்லும் அவர் சாவர்க்கரை சிறையிலிருந்து விடுதலைசெய்தால், அவரால் நிச்சயம் பொதுமக்களுக்கு அபாயம் ஏற்படும் என்கிறார். சிறையில் சாவர்க்கர் கொடுமைப்படுத்தப்படும் விவகாரம் 23 ஜுன் 1914-ல் பிரிட்டீஷ் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. ‘ஜாக்சன் கொலையைத் தூண்டிவிட்டவருக்கு அதிகக் கருணை காட்ட வேண்டிய அவசியம் இல்லை’ என்று அரசு பதிலளித்தது.

காந்தியின் முறையீடு

சாவர்க்கர் மன்னிப்புக் கடிதங்கள் கொடுத்தார் என்பது எந்தக் காலத்திலும் ரகசியமாக இருக்கவில்லை. சாவர்க்கர் தன் சிறை அனுபவங்களை தொடராக ‘ஷ்ரத்தானந்த்’ பத்திரிகையில் எழுதினார். அது பின்னால் புத்தகமாக வெளிவந்தது.

இன்னொரு சுதந்திரப் போராட்ட வீரரான கணேஷ் ஷங்கர் வித்யார்த்தி (பின்னால் இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்காக உயிரைக் கொடுத்தவர்) 1928-ம் ஆண்டு அப்பத்திரிக்கைக்கு மிகுந்த கோபத்தோடு கடிதம் எழுதினார். அதில் அவர் கேட்டிருந்தார்: “தங்களைத் தியாகிகள் என்று கருதிக்கொள்கிறவர்கள் ஏன் மன்னிப்புக் கேட்டார்கள்? சிறையில் மரணத்தை ஏன் சந்திக்கவில்லை?” அதற்கு சாவர்க்கர் விரிவாகப் பதில் அளித்திருந்தார். “இந்தியா முழுவதும் புரட்சியாளர்கள் தங்கள் வீடுகளை நெருப்பில் கொளுத்தி நாட்டைக் காக்க முயன்றிருக்கிறார்கள். பல தருணங்களில் உயிரைப் பணயம் வைத்துப் போர் புரிந்திருக்கிறார்கள். ஆனால், போர்க்களத்தில் தோல்வி நிச்சயம் என்று அறிந்த பின் எதிரிகளோடு ஒப்பந்தம்செய்துகொண்டிருக்கிறார்கள். ஒப்பந்தம் தாற்காலிகம். பின்னால் மீண்டு எழுந்து போர் புரிவதற்காக!”

ஔரங்கசீப்போடு சிவாஜி ஒப்பந்தம்செய்ததைச் சுட்டிக்காட்டிய சாவர்க்கர், காகோரி சதி வழக்கில் தூக்கிலிடப்பட்ட ராம் பிரசாத் பிஸ்மில் மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்ததையும் இங்கே குறிப்பிடுகிறார். (ராம் பிரசாத் பிஸ்மில் மரணத்திற்கு முன் எழுதிய குறிப்பில் மன்னிப்புக் கேட்டேன் என்று ஒப்புக்கொள்கிறார்).

சாவர்க்கர் சிறை செல்லும்போது அவருக்கு வயது 28. இளம் மனைவியைத் தனியாக விட்டுச் செல்ல வேண்டிய கட்டாயம். எனவே அவர் உண்மையிலேயே இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்ற எண்ணத்தில் மன்னிப்புக் கடிதம் கொடுத்திருந்தாலும், அதைத் தவறு என்று சொல்ல முடியாது. மனிதத்தன்மையற்றவர்கள் மட்டுமே அவ்வாறு சொல்ல முடியும் என்று எண்ணுகிறேன்.

காந்தியும் சாவர்க்கர் சகோதரர்களை விடுவிக்க வேண்டி ‘யங் இந்தியா’வில் மே 1920-ல் கட்டுரை ஒன்றை எழுதினார். இந்தக் கட்டுரையில், ‘சாவர்க்கர் சகோதரர்கள் புரட்சியைவிட்டு விட்டோம், அரசோடு ஒத்துழைக்க விரும்புகிறோம்’ என்று சொல்கிறார்கள் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டே, ‘அவர்களை விடுதலைசெய்ய வேண்டும்’ என்று வலியுறுத்துகிறார்.

படிப்படியாக வெளிப்படும் முஸ்லிம் வெறுப்பு 

சாவர்க்கர் தொடர்பான நூல்களை வாசிக்கும்போது, சிறை அனுபவங்கள் அவருடைய பிந்நாளைய இந்துத்துவ சித்தாந்தத்தை வடிவமைத்ததில் பெரும் பங்கு வகித்திருக்கும் என்று தோன்றுகிறது. அந்தமான் சிறையில் ஆங்கிலேய அரசால் வார்டர்களாக நியமிக்கப்பட்டிருந்த முகமதியர்களுக்கும் இதில் பங்கு இருக்கலாம். இந்து - முஸ்லிம் பிளவுக்கு என்னென்ன சாத்தியங்கள் உண்டோ அவற்றையெல்லாம் சிந்திக்க ஆங்கிலேயர்கள் தவறவில்லை. அந்தமான் சிறையின் வார்டர்கள் நியமனத்தையும் அப்படிக் கருதலாம். 

அரவிந்தரின் சகோதரரான பரிந்திர குமார் கோஷ் தன்னுடைய அந்தமான் சிறை அனுபவத்தைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்: “இந்து வார்டர்கள் எங்கள் மீது அனுதாபப்படுவார்கள், எங்கள் நண்பர்கள் ஆகிவிடுவார்கள் என்ற நினைப்பு இருந்தது. அதனால் எங்கள் தலைவிதியை நிர்ணயிக்கும் காவலர்கள் அனைவரும் முகமதியர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். பதான் என்றால் நமக்கு காபூலிருந்து வந்து பழம் விற்பவர்கள் என்ற புரிதல் இருக்கும். ஆனால் இங்கு போர்ட் பிளேர் சிறைச்சாலையில் அவர்கள் எமதூதர்கள். பிடித்துக்கொண்டு வா என்றால் தலையை வெட்டிக்கொண்டு வரக் கூடியவர்கள்.”

இந்து மதம் ஏற்றம் பெற வேண்டும் என்றால், அதில் என்னென்ன சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பதைப் பற்றி ‘இந்து மதத்தில் களையப்பட வேண்டிய ஏழு தளைகள்’ என்று சாவர்க்கர் எழுதியிருப்பதை விக்ரம் சம்பத் தன் புத்தகத்தில் பதிந்திருக்கிறார்.

வேதோக்தபந்தி: வேதங்களை பிராமணர்களைத் தவிர மற்றவர்கள் படிக்கக் கூடாது என்ற தளை.

வியாவசாயபந்தி: யார் இன்னென்ன தொழில்களை செய்யலாம், செய்யக் கூடாது என்ற தளை.

ஸ்பர்ஷபந்தி: தீண்டாமை எனும் பெரிய தளை.

ஸமுத்ரப்ந்தி: கடல் கடந்து செல்லக் கூடாது எனும் தளை.

ஷீத்திபந்தி: மற்றைய மதங்களிலிருந்து இந்து மதத்தில் திரும்பிச் சேர்வது கூடாது எனும் தளை.

ரோடிபந்தி: எல்லோரும் சேர்ந்து உணவு உண்ணக் கூடாது எனும் தளை.

பேடிபந்தி: சாதிவிட்டு சாதி திருமணம் செய்யக் கூடாது எனும் தளை. 

இந்தத் தளைகள் யாவும் அகற்றப்பட வேண்டும் என்கிறார் சாவர்க்கர்.  

பிராமணரான சாவர்க்கர் மாமிசம் உண்பவர். மீன் அவருக்குப் பிடித்த உணவாக இருந்திருக்கிறது. பசுவைக் காக்க வேண்டும் என்று சொல்லப்படுவதெல்லாம் அறிவியல்பூர்வமாக அணுகப்பட வேண்டும் என்று அவர் சொன்னார். தீண்டாமையை அவர் வெறுத்தார். இது அவர் சொன்னது: “அம்பேத்கர் போன்ற அறிவாளிகளையும், சொக்கமேளா போன்ற அருட்தொண்டர்களையும் அவர்கள் பிறந்த சாதியினால் தீண்டத்தகாதவர்களாகக் கருதுகிறோம். ஆனால், ஒரு மிருகத்தின் மூத்திரம் நம் ஆன்மாவை சுத்திச் செய்யும் புனிதப்பொருள் ஆகி விடுகிறது! இதைவிடப் பெரிய தவறோ முரணோ இருக்க முடியுமா?”

இந்து மதத்தைச் சீர்திருத்த இப்படிப் பேசிய சாவர்க்கர் இஸ்லாம் மதச் சீர்திருத்தம் என்ற பெயரிலும் பேசினார். 

“திருக்குரானில் சொல்லப்பட்டிருக்கும் ஒரு சொல்லைக்கூடக் கேள்வி கேட்கக் கூடாது என்ற நம்பிக்கையை விட்டுவிட வேண்டும். அரேபியாவின் உள்நாட்டு போர் நடந்துகொண்டிருக்கும்போது பின்தங்கிய மக்களுக்காக வழங்கப்பட்ட விதிமுறைகள் என்றென்றும் நிலையானவை என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. எது இக்காலத்திற்குப் பொருந்துமோ அதை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். எப்படி இந்துக்களின் யாகங்கள், வழிபாடுகள், வேதங்கள் முதலியவற்றை ஐரோப்பியர்களை ஒன்றும் செய்ய முடியவில்லையோ அதேபோலத்தான் திருக்குரானும், தியாகங்களும், நமாஸ் படிப்பதும் அவர்களை ஏதும் செய்யாது. அல்லாவின் கொடியோடு அவர்கள் தங்களிடம் இருக்கும் நவீன ஆயுதங்களை வைத்து விளையாடினார்கள்.

ஆயிரம் வருட மதவெறியைக் இந்திய முஸ்லிம்கள் கைவிட வேண்டும். அறிவியலை ஏற்றுக்கொள்ள வேண்டும். அறிவியல், நவீனச் சிந்தனைகள் மற்றும் தொழிற்படுத்தல் மூலம்தான் நாம் இந்தியாவின் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் வேலைவாய்ப்பை உறுதிசெய்ய முடியும். உணவு, துணி கொடுக்க முடியும். அவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்வை அளிக்க முடியும்.”

சீர்திருத்தம் என்ற பெயரில் இப்படி எழுதிய சாவர்க்கரிடம் படிப்படியாக மோசமான முஸ்லிம் வெறுப்பு வெளிப்படலாகிறது.

சாவர்க்கர் 1927-ல் எழுதிய நாடகத்தில் ஓர் உரையாடல் இது: “பங்கஷ் கான் என்ற சுபேதார் தனக்குள்ளேயே பேசிக்கொள்கிறான்: ‘நான் கணக்கற்ற இந்துப் பெண்களைக் கடத்தி வன்புணர்வு செய்து என்னுடைய அந்தப்புரத்தில் சேர்த்துக்கொள்கிறேனோ, என் மதிப்பு முஸ்லிம்களுக்கு மத்தியில் பெருகுகிறது. மௌல்வி ஸஃபர் அலி சொல்வதைப் போல இந்த உலகத்தில் அதிகம் இன்பங்களை அனுபவிப்பது அடுத்த உலகத்தில் கிடைக்கப்போகும் இன்பங்களுக்குப் பாதையாக அமைகிறது. நான் எத்தனை இந்து பெண்களைச் சீரழித்திருப்பேன். எத்தனை பேரை என் அந்தப்புரத்தில் சேர்த்திருப்பேன். என்னை முஸ்லிம்கள் உண்மையான மதத்தைப் பரப்புபவனாகத்தான் அறிகிறார்கள்.

இறைத்தூதர் சொன்னவற்றைத் தூக்கிப்பிடிப்பவனாகத்தான் அறிகிறார்கள். ஏனென்றால், இந்தப் பெண்கள் மூலம் எனக்குப் பிறக்கும் குழந்தைகள் அனைவரும் முஸ்லிம்களாக ஆவார்கள். மௌல்வி நல்ல ஆயுதத்தை அளித்திருக்கிறார். நம்பிக்கையின் மூலம் என் காமம் நிறைவடைகிறது. காமத்தின் மூலம் நம்பிக்கை நிறைவடைகிறது. குர் ஆனில் என்ன சொல்லியிருந்தால் என்ன? காபிர் பெண்களை வன்புணர்வுசெய்யுங்கள் என்ற மௌல்வியின் மந்திரமே எனக்குக் குர்ஆன்.

(இப்போது நாடகத்தில் முல்லா ஒருவர் மௌல்வி ஸஃபர் அலியுடன் நுழைகிறார்). அவர், “இஸ்லாம் அன்பைப் போதிக்கிறது; பெண்களை வன்புணர்வு செய்யச் சொல்லவில்லை; கத்தியால் மதம் மாற்றச் சொல்லவில்லை; அப்படிச் செய்வது சாத்தானின் வழி; இறைத்தூதரின் வழியல்ல!” என்கிறார்.

(சுபேதார் அவரை வாயை மூடும்படிச் சொல்கிறான். ஸஃபர் அலி போன்ற எண்ணற்ற மௌல்விகள் காட்டிய வழி தவறாக இருக்க முடியாது என்கிறான்).

இந்நாடகத்தில் சாவர்க்கர் மிகத் தெளிவாக, ஏட்டில் இருக்கும் இஸ்லாமிற்கும் உண்மையாக இந்தியாவில் செயல்படும் இஸ்லாமிற்கும் இடையே பெரும் வித்தியாசம் இருக்கிறது என்கிறார். மிகச் சில முஸ்லிம்கள் மட்டுமே மதவெறியின் பிடியிலிருந்து வெளியில் வந்திருப்பார்கள், மற்றவர்கள் வெறியின் பிடியிலிருந்து விடுபடுவது கடினம் என்கிறார்.

சாவர்க்கர் அந்தமானிலிருந்து இந்தியச் சிறைக்கு 1921-ல் மாற்றப்பட்டார். 1924  ஜனவரி 5 அன்று சிறையிலிருந்து வெளியில் வந்தார். ஆனால் முழு விடுதலை அடையவில்லை. அன்றைய பம்பாய் மாகாணத்தின் ரத்னகிரி மாவட்டம் அவருக்குத் திறந்தவெளிச் சிறைச்சாலையானது. மாவட்ட எல்லைக்கு வெளியில் வரக்கூடாது, எந்த அரசியல் நடவடிக்கைகளிலும் பங்கேற்கக் கூடாது என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அடுத்த 13 ஆண்டுகளை அவர் ரத்னகிரி மாவட்டத்தில் கழித்தார். இந்தக் காலகட்டத்தில் நிறையவே நடந்தது.

(பேசுவோம்)

பி.ஏ.கிருஷ்ணன்

பி.ஏ.கிருஷ்ணன், எழுத்தாளர். ஓய்வுபெற்ற அரசு அதிகாரி. ‘புலிநகக்கொன்றை’, ‘கலங்கிய நதி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
பின்னூட்டம் (8)

Login / Create an account to add a comment / reply.

VELMURUGAN   1 year ago

ஐயா தொடராக வரும் கட்டுரைகளுக்கு தலைப்பில் Part 1, Part 2 என குறிப்பிடவும். Part 3 படிக்கும் போது தொடர்புடையவையில் Part 2 ம் Part 4 ம் வருமாறு செய்யவும். இதை குறையாக கூறவில்லை எந்த கட்டுரைகளையும் தவறவிட்டு விட கூடாது என்பதற்காக சொல்கிறேன். நன்றி ஐயா.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Abdul Kareem   1 year ago

சாவர்க்கர் மன்னிப்பு கேட்டதை கடும் சித்ரவதை தாங்காமலும், அல்லது ராஜதந்திர அடிப்படையிலும் அல்லது காந்தி மஹான் கூட அதனை சரி காண்பது போலும் எழுதப்பட்டுள்ளது. இதில் அவரது முஸ்லீம் வெறுப்புக்கு காரணம் அவர் அல்ல, அவரது இந்துத்துவா சிந்தனை அல்ல. அந்தமான் சிறையில் இருந்த முஸ்லீம் வார்டர்கள் தான். என்ன செய்ய?. சாவர்க்கரின் இந்துத்துவம் வெளிப்படுவதை விட இந்த கட்டுரையாளரின் சிந்தனை சிறப்பாக வெளிப்படுகிறது.

Reply 5 1

Login / Create an account to add a comment / reply.

saravana kanth   1 year ago

அவர் எதற்கு சிறைச்சாலை என்றார் என்பதும் முக்கியம். மன்னிப்பு கேட்பது ஒன்றும் மோசமில்லை என கட்டுரையாளர் சொல்லிவிட்டார். நல்லது பிறகு ஏன் வீரம் தீரம் என தானே சுய தம்பட்டம் அடிக்க வேண்டும். தன் கடைசி காலம் வரை பிரிட்டிஷாரை எதிர்க்க வேண்டும். ஆனால் கால் பற்றி இருக்க வேண்டாமல்ல... தான் நடத்திய பத்திரிகையில் பத்து தலை ராவணானாக காந்தி தொட்டு நேதாஜி வரை தீட்டியவர் தானே.... இப்போது அவரை புனிதப்படுத்த காந்தியே சொன்னார் என்பீர்களா.... இது போன்ற கட்டுரைகளால் நீங்கள் விதைக்க விளைவது ஒன்றுதான். மோடி இவர் பெயரால் ஒரு மாநில உருவாக்குவார் ... அது ஒன்றுக்குதான் இது போன்ற கட்டுரைகள் எல்லாம் உதவும். சந்தன கடத்தல் வீரப்பன் புகழ் பாடும் கட்டுரைகளுக்கும் இதற்கு பெரிய வேறுபாடில்லை. ஆனால் வீரப்பான் எடுப்பார் கைப்பிள்ளை .சவார்க்கர் எடுப்பார் கைப்பிள்ளைகளை வைத்து இன்று வரை இந்தியாவில் மத துவேஷத்தை விதைக்கிறார்...

Reply 5 0

Login / Create an account to add a comment / reply.

VIJAYAKUMAR   1 year ago

நீலகண்டனின் பின்னூட்டத்தை வாசித்தேன். கீழடி வரலாற்று ஆய்வில் ஊகங்களுக்கு இடம் அளிக்கக்கூடாது என்ற பி ஏ கிருஷ்ணன் சவார்க்கர் வரலாற்று ஆய்விலும் அதையே தொடர வேண்டும் என விரும்புகிறேன்.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

V NEELAKANDAN   1 year ago

சவார்க்கரை மேன்மையான ஒளியில் காட்சிப்படுத்த வேண்டும் என்பதற்காக எழுதப்படுவது போலவே உள்ளது. இதற்கு முந்தைய கட்டுரையில் ‘இளம் வயதில் சவார்க்கர் நண்பர்களுடன் சேர்ந்து மசூதியைக் கொளுத்தினார் என்று சொல்லப்படுகிறது’ என்ற தகவலை எழுதியதுடன் நிறுத்தவில்லை. அடுத்த வரியிலேயே அதற்கு ஆதாரம் இல்லை என்கிறார். இந்தக் கட்டுரையில் அவருடைய முஸ்லீம் வெறுப்புக்குச் சிறை வார்டர்கள் முஸ்லீமாக இருந்ததுதான் காரணமாக இருக்கலாம் என அவரது யூகத்தை எழுதுகிறார். சவார்க்கர் கடிதத்தில் ‘எதிரிகளோடு ஒப்பந்தம் செய்தவர்கள், அப்படி ஒப்பந்தம் செய்தது பின்னாட்களில் போராட்டத்தைத் தொடரவே’ என்று குறிப்பிடுகின்றார். கேள்வி சிறையில் சவார்க்கர் கொடுமை அனுபவித்தாரா இல்லையா என்பதில்லை. மாறாக, இறுதியில் நிற்கும் கேள்வி சிறையிலிருந்து வந்தபின் அவரது செயல்பாடு என்ன? அதன் விளைவு என்ன? அது அனைவரும் அறிந்ததே

Reply 5 0

Login / Create an account to add a comment / reply.

MANI N    1 year ago

ஆழமான அனைவரும் அறிந்து தெளிவடைய வேண்டிய கட்டுரை. காந்தி மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுக்கும் படி சாவர்க்கருக்கு சொன்னாரா இல்லையா? என்பது தானே கேள்வி. அதற்கு விடையிலையே கட்டுரையில்

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

VIJAYAKUMAR   1 year ago

நமக்கு எதிர்நிலையில் இருப்பவர்களைத் தரம் தாழ்த்துவதற்காக, உண்மையைக் கீழே இறக்கும்போது நம்மை அறியாமல் இன்னொரு தவறையும் செய்கிறோம். வரலாற்றின் ஒரு பகுதியை மறைப்பவர்கள் ஆகிவிடுகிறோம். - well said.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

குணசேகரன்   1 year ago

நல்ல தகவல்கள்.......சாவர்க்கார் வாசிப்பை தொடர்வவது அவசியமாகிறது.....

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அதிகம் வாசிக்கப்பட்டவை

அயோத்திதாசப் பண்டிதர் மார்க்கேஸ் மற்றும் ஜெயகாந்தன்முதல்வர் பதவிபாபர் மசூதிநிதியமைச்சரிடம் நாடு என்ன எதிர்பார்க்கிறது?யூஎஸ்எஸ்டிஜப்பான்ராமாயணம்தன்னாட்சி இழப்புமும்மொழிக் கொள்கைhow to write covering letter for job applicationநவீன இந்தியாவேலைக்குத் தடைதர மதிப்பீடுகரோனாகாந்தி கிணறுநீதிபதி நியமனம்குறைந்தபட்ச ஆதரவு விலைஎஸ்.என். சாஹுஎஸ்.அப்துல் மஜீத் கட்டுரைஜீவா விருதுகூகுள் பிளே ஸ்டோர்அறிவுசார் செயல்பாடுமனித உரிமை மீறல்கள்பெண்ணியம்சமஸ் அருஞ்சொல் சென்னை புத்தகக்காட்சிஜப்பான் புதிய திட்டம்என்ன பேசுவதுமாநில பட்ஜெட் 2022சிம் இடமாற்றம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!