கட்டுரை, அரசியல், வரலாறு, புத்தகங்கள் 4 நிமிட வாசிப்பு
காஷ்மீரிகள்: சிரிக்காமல் வாழ்வது எப்படி?
‘காஷ்மீர்’ என்றால் ஏரியை வடித்து இறுத்த பிறகு எஞ்சிய நிலம் (கா+ஷிமீரா). காஸ்யப முனிவர் இந்தப் பகுதியை உருவாக்கியதாக புராணக் கதை கூறுகிறது. கி.மு. 250இல் அசோகருடைய சாம்ராஜ்யத்துக்கு உள்பட்ட பகுதியாக இருந்தது. ஸ்ரீநகர் என்ற ஊரை உருவாக்கி, அந்தப் பகுதியில் பௌத்த மதத்தை பரப்பினார் அசோகர்.
கி.மு. 1003 வரையில் இந்து வம்சத்தினர் ஆண்டனர். பிறகு இஸ்லாமிய மதத்துக்கு மக்கள் மாற்றப்பட்டனர். 1819இல் ரஞ்சித் சிங் அப் பகுதியை சீக்கிய சாம்ராஜ்யத்தில் சேர்த்துக்கொண்டார். லடாக்கையும் பல்டிஸ்தானையும் குலாப் சிங்கும் தளபதி ஜொராவர் சிங்கும் சீக்கிய சாம்ராஜ்யத்தில் 1830இல் இணைத்துக்கொண்டனர். திபெத் மீது படையெடுத்துச் சென்றபோது 1841இல் ஜொராவர் சிங் மரணம் அடைந்தார். அவர் உயிரோடு இருந்திருந்தால் திபெத்தும் இந்தியாவின் ஒரு பகுதியாக சேர்ந்திருக்கும்.
ரஞ்சித் சிங்கின் மறைவுக்குப் பிறகு, டோக்ரா தளபதி குலாப் சிங்கிடமிருந்து 1846இல் அமிர்தசரஸ் உடன்படிக்கையின்படி 75 லட்சம் ரூபாய்கள் தந்து காஷ்மீரத்தை வாங்கிக்கொண்டனர் பிரிட்டிஷார். ஆண்டுதோறும் ஒரு குதிரை, 12 காஷ்மீரி உரோம ஆடுகள், 3 ஜோடி காஷ்மீர் சால்வைகளை இதே நாளில் பிரிட்டிஷாருக்கு பரிசாக அளிப்பேன் என்று குலாப் சிங் அந்த உடன்படிக்கையில் கூறியிருந்தார்.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
குலாப் சிங்கை பிரிட்டிஷார் தகுந்த வகையில் பரிசளித்து கௌரவித்தனர். ஆப்கானிஸ்தானுக்கு பிரிட்டிஷார் தடையின்றி சென்றுவர அனுமதிப்பதற்காகவும், ஆங்கிலேயர்களுக்கும் சீக்கியர்களுக்கும் சண்டை நடந்தபோது எவர் பக்கமும் சேராமல் நடுநிலையுடன் டோக்ரா படை இருந்த தற்காகவும், ரஷ்யாவுடன் பிரிட்டன் சண்டையிட்டால் பிரிட்டிஷாருக்கு விசுவாசமாக நடப்பேன் என்று உறுதி கூறியதற்காகவும் குலாப் சிங் கௌரவிக்கப்பட்டார்.
ராஜ துரோகமா?
குலாப் சிங் இப்படி உடன்பாடு செய்துகொண்டது ராஜ துரோகமா என்று இன்றளவும் பஞ்சாபிலும் ஜம்மு – காஷ்மீரிலும் அரசியல் – வரலாற்றுத் துறையினர் விவாதித்துக்கொண்டிருக்கின்றனர். ‘சாதாரண மக்களுக்கு இது தேசத் துரோகமாகவோ ராஜ துரோகமாகவோ தெரிந்தாலும், அன்றைய அரசியல் சூழலுக்கேற்ப இப்படிப்பட்ட உத்திகளைக் கையாள குலாப் சிங் தயங்கவில்லை’ என்று அவரைப் பற்றி வரலாற்று நூல் எழுதிய கே.எம்.பணிக்கர் சுட்டிக்காட்டுகிறார். (The Kashmir State: A Biography of Maharajah Gulab Singh 1792-1858).
குலாப் சிங்குக்குப் பிறகு ரண்வீர் சிங் (1857-85), பிரதாப் சிங் (1885-1925), ஹரி சிங் (1925-50) ஆண்டனர். அவர்கள் காலத்தில் அதிகாரம் உயர்குடி மக்களிடம் மட்டுமே பகிர்ந்துகொள்ளப்பட்டது என்கிறார் நோபல் விருது பெற்ற அறிஞர் டக்ளஸ் நார்த்.
பெரும்பாலான இந்திய சுதேச சமஸ்தானங்களைப் போல சுதந்திர இந்தியாவுடன் சேர்ந்துகொள்ளத் தயார் என்று உடன்பாட்டில் கையெழுத்திடவில்லை மகாராஜா ஹரி சிங். “அன்றைக்கு நிலவுடைமைச் சமுதாயத்தில் இருந்த பிரமுகர்கள் அனைவரும் சிக்கலான சூழ்நிலை ஏற்பட்டால், உடனடியாக அதில் ஒரு முடிவை எடுக்காமல் தள்ளிப்போடுவதையே ஒரு உத்தியாக வைத்திருந்தனர், என்னுடைய தந்தையும் அந்த வகையில்தான் தயக்கம் காட்டினார்” என்று ஹரி சிங்கின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான கரண் சிங் (கர்ண சிங்) கூறுகிறார்.
அவர் முடிவெடுக்கத் தயங்கியதால் இந்தியா, காஷ்மீர், பாகிஸ்தான் மூன்றும் ஆண்டுகள் பல சென்றாலும் மோதிக்கொண்டு நிற்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. இறப்பதற்கு முன்னால் ஹரி சிங்குக்கு மூன்று விருப்பங்கள் இருந்தன. ஜவஹர்லால் நேரு, ஷேக் அப்துல்லா இருவரும் அரசியலில் வீழ்ச்சி அடைய வேண்டும், தனக்கு பேரக் குழந்தை (கரண் சிங்குக்கு வாரிசுகள்) பிறக்க வேண்டும் என்பது. அதில் இரண்டு விருப்பங்கள் நிறைவேறுவதை வாழ்நாளில் அவர் பார்த்துவிட்டார்.
இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு
காஷ்மீர்: ஜனநாயகத்தின் கடைசி தூணும் சரிந்துவிட்டது!
16 Dec 2023
சன்னிகள் ஆதிக்கம்
காஷ்மீரத்தில் சன்னி பிரிவினர் ஆதிக்கம் அதிகம். பீர்சாதாக்கள் என்று அழைக்கப்படும் சுஃபிகள் கிராமங்களிலும் நகரங்களிலும் மக்களுடைய வாழ்க்கையில் செல்வாக்குச் செலுத்தினர். காஷ்மீர பள்ளத்தாக்கில் 14வது நூற்றாண்டில்தான் இஸ்லாம் பரவியது. பாரசீகத்தைச் சேர்ந்த சுஃபி, மீர் சய்யித் அலி ஹம்தானி (ஷா ஹம்தான்) அதற்குக் காரணம். அவரது நினைவைப் போற்றும் வகையில் ஸ்ரீநகரில் ஒரு பெரிய மசூதி கட்டப்பட்டிருக்கிறது.
காஷ்மீரத்திலேயே பிறந்த இன்னொரு சுஃபி, ஷேக் நூருதீன் நூரானி மக்களிடையே மிகவும் மதிப்பையும் வரவேற்பையும் பெற்றார். அவர் பெயரில் நூர் நாமா வழங்கப்படுகிறது. அவருக்கு நுந்த் ரிஷி என்றும் ஆலம்தார்-இ-காஷ்மீர் என்றும் பட்டங்கள் உண்டு. சரார்-இ-ஷெரீஃப் என்ற இடத்தில் அவருக்கு அமைக்கப்பட்டிருந்த சமாதியை, மஸ்த் குல் என்ற பயங்கரவாதி 1995இல் சிதைத்துவிட்டார்.
லல்லேஸ்வரி என்ற இந்து சைவ சித்தர், நூரானிக்கு ஆன்மிகத்தில் ஆதர்சமாகத் திகழ்ந்தார். ஸ்ரீநகரில் உள்ள அரசு மகளிர் மருத்துவமனைக்கு லல்லேஸ்வரி பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. அவர் லால் தேட் என்று அழைக்கப்பட்டார். அவருடைய அருள் வாக்குகள் இன்றளவுக்கும் உயிர்ப்புடன் இருப்பதாக அவருடைய பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
மிகவும் பழமையான ‘நில மாதா’ புராணம் என்ற நூல் காஷ்மீரத்தை, சைவம் தழைத்தோங்கிய பிரதேசம் என்கிறது. ராஜதரங்கிணி என்ற சம்ஸ்கிருத நூலை, பதினைந்தாவது நூற்றாண்டில் பாதுஷா ஜைனுல் ஆபிதீன் என்பவர் பாரசீக மொழியில் மொழிபெயர்த்தார். அது கவிஞர் கல்ஹணர் இயற்றியது. ராஜ வம்சம் பற்றிய காவியம் அது. ஜைனுல் ஆபிதீனை கௌரவிக்கும் வகையில் ஸ்ரீநகரில் இன்றும் ஒரு நாற்சதுக்கம், பாதுஷா சௌக் என்றே அழைக்கப்படுகிறது. மார்க் ஆரெல் ஸ்டெயின் என்ற ஆங்கிலேயர் ராஜ தரங்கிணியை 1900இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அந்த நூல் காஷ்மீர வாழ்வியலின் உன்னதங்களை வெளிப்படுத்துகிறது என்று அவர் பாராட்டினார்.
இந்து – இஸ்லாமிய சமயங்கள் தங்களுக்குள் பரஸ்பர அன்புடன் வளர்ந்ததற்கு சான்றாக, ஆயிஷ்முகம் தர்காவில் ஒரு சடங்கு இன்றளவும் தொடர்கிறது. ஆண்டுதோறும் அமர்நாத் கோவிலிலிருந்து இந்த தர்காவுக்கு மாலை மரியாதையுடன் மகா பிரசாதம் வருகிறது. ஆனால் 1990இல் இந்த சமய ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் சில பயங்கரவாதிகள் காஷ்மீரப் பண்டிட்டுகளைக் குறிவைத்து தாக்கி, பள்ளத்தாக்கிலிருந்து பெரும் எண்ணிக்கையில் வெளியேற்றினர்.
சன்னிகளுக்குள் போட்டி
சன்னி முஸ்லிம்கள்தான் எண்ணிக்கையில் அதிகம் என்றாலும் அவர்களிலும் இரு பிரிவினரிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இரு பிரிவினரும் பெண் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவதில்லை. ஷேக் அப்துல்லாவை ஆதரிப்பவர்கள் சிங்க (ஷேர்) ஆதரவாளர்கள் என்றும் மீர்வாய்ஸை ஆதரிப்பவர்கள் ஆட்டை (பக்ரா) ஆதரிப்பவர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
இந்த இரண்டு பிரிவினரும் கல்லெறிந்து பட்ட காயங்களால் என் முகத்தில் பல தையல்களும் வடுக்களும் நிரம்பிவிட்டன. (நூல் ஆசிரியர் முன்னாள் காவல்துறைத் தலைவர்). 1977 தேர்தலின்போது அவர்களுடைய மோதல் உச்சம் பெற்றது. 1982இல் இரட்டை பரூக் உடன்பாட்டுக்குப் பிறகு சமரசம் ஏற்பட்டது.
காஷ்மீர் மக்கள்தொகையில் ஷியா பிரிவினர் 10% முதல் 15% வரையில்தான். ஆனால் அவர்கள்தான் சமூக – அரசியல் இயக்கவியலில் சமநிலையை ஏற்படுத்துகின்றனர். முகலாயர் காலத்திலிருந்தே கடுமையான ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்கள் ஷியாக்கள். அவர்கள் சில சமயம் சுதந்திரமாகச் செயல்பட விரும்புவார்கள், சில சமயம் தீவிரவாதிகளுடன் சேர்ந்துகொள்வார்கள், சில சமயம் டெல்லியில் உள்ள ஆட்சியாளர்களுடன் சேர்ந்துகொண்டு சன்னிகளுக்கு எதிராக நிற்பார்கள்.
முஸ்லிம்களிடையே தீவிரவாதம் தலைதூக்கியதால் முஹர்ரம் ஊர்வலத்துக்கு தடை விதிக்கப்பட்டது. 34 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு 2023இல்தான் முஹர்ரம் ஊர்வலம் மீண்டும் நடைபெற்றது. இது எதிர்காலத்திலும் தொடர வேண்டும்.
இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு
பண்டிட்டுகள் படுகொலை காஷ்மீரை மேலும் நாசமாக்கும்
19 Oct 2021
காஷ்மீர சமூகம் பல்வேறு ரசங்களையும் கொண்டது. ‘அசாவ் நா – த லசாவ் கி பேத்?’ – என்று கேட்பார்கள். அதாவது, சிரிக்க முடியாவிட்டால் வாழ்ந்தென்ன பிரயோசனம் என்பார்கள். எல்லா அரசியல் தலைவர்களுக்கும் ஒரு செல்லப் பெயர் (பட்டப் பெயர்) சூட்டுவார்கள். அது அவர்களுடைய குணம் அல்லது செயல்களின் பாற்பட்டவை.
ஆளுநராக இருந்த ஜக் மோகனை - கக்கர் கான் என்பார்கள். முதல்வராக இருந்த குல் முகம்மது ஷாவை - ஊரடங்கு ஷா என்பார்கள். முஃப்தி முகம்மது சய்யீதை - விஸ்கி முகம்மது சய்யீத் என்பார்கள். ஃபரூக் அப்துல்லாவை – பரூக் டிஸ்கோ என்பார்கள். தீவிரவாதிகளையும் விட்டுவைக்கவில்லை காஷ்மீரிகள். பிட்டா கராத்தே, லாட்ரூம், ஜாவேத் நல்கா என்று சில பெயர்கள்.
காஷ்மீர சமூகம் நெருக்கமான வலைப்பின்னலால் ஆனது. அரசு வழி தகவல் தொடர்புகளைவிட அவர்களுக்குள் வதந்திகள்கூட வேகமாகப் பரவிவிடும். காஜி குண்டம் முதல் குப்வாரா வரையில் மின்னல் வேகத்தில் தகவல் போய்ச் சேர்ந்துவிடும். அதைக் கிண்டலாக ‘லால் சௌக் கெஜட் (படி)’ என்பார்கள். (தமிழ்நாட்டில் பிபிசில சொன்னாங்க… என்பதைப் போல). நாளடைவில் உண்மையல்லாத தகவல்களைப் பரப்பும் அமைப்பாக அது மாறிவிட்டது.
இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு
நீதி.. அதுவே தீர்வும்கூட.. காஷ்மீரிகளுக்குச் சுதந்திரம்!
10 Jul 2016
அரசியல் விழிப்புணர்வு மிக்கவர்கள் காஷ்மீரிகள், செய்திகளைத் தேடித்தேடி படிப்பார்கள். (1990களில் இந்திய எதிர்ப்புணர்வு மிகுந்திருந்ததால் பிபிசியை மிகவும் விரும்பிக் கேட்பார்கள்). காஷ்மீரிகளின் உணவு மிகவும் சுவையானது, சில உடலுக்கு அதிகம் ஊறு விளைவிப்பவை. செந்நிற இறைச்சியும் நன்கு சலிக்கப்பட்ட கோதுமை மாவும் அதிகம் சமையலில் சேர்க்கப்படுவதால் ஆங்கில மருத்துவமுறை மருந்துகளுக்கு காஷ்மீரம் நல்ல சந்தையாகத் தொடர்கிறது.
(இந்தக் கட்டுரை மகேந்திர சபர்வால் - மணீஷ் சபர்வால் எழுதிய புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட சுருக்கம். வெளியீடு ‘ஜக்கர்நாத்’ புத்தகாலயம்).
தொடர்புடைய கட்டுரைகள்
காஷ்மீர்: தேர்தல் அல்ல, மாபெரும் பொறுப்பு
காரிருள்தான் இனி எதிர்காலமா?
சோனம் வாங்சுக் ஏன் உண்ணாவிரதம் இருக்கிறார்?
காஷ்மீர்: ஜனநாயகத்தின் கடைசி தூணும் சரிந்துவிட்டது!
காஷ்மீர்: நீதியின் வீழ்ச்சி
காஷ்மீருக்கு வேண்டும் சுயாட்சி
காஷ்மீர் சட்டமன்ற மறுவரையறைத் திட்டம் ஆபத்தான விளையாட்டு
மோடி அரசின் தோல்விக்குச் சான்று அமித் ஷாவின் காஷ்மீர் பயணம்
பண்டிட்டுகள் படுகொலை காஷ்மீரை மேலும் நாசமாக்கும்
370: இந்தியா தவறவிடும் ஒரு மகத்தான வாய்ப்பு
கிலானி - ஒரு வாழ்க்கை, ஒரு கேள்வி
நீதி.. அதுவே தீர்வும்கூட.. காஷ்மீரிகளுக்குச் சுதந்திரம்!
தமிழில்: வ.ரங்காசாரி
1
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.