கட்டுரை, அரசியல் 6 நிமிட வாசிப்பு

மோடி அரசின் தோல்விக்குச் சான்று அமித் ஷாவின் காஷ்மீர் பயணம்

முஹம்மது யூசுப் தாரிகாமி
03 Nov 2021, 5:00 am
1

ம்மு-காஷ்மீருக்கு இருந்த சிறப்பு அந்தஸ்தை அரசமைப்புச் சட்டத்துக்கு முரணாகவும், யதேச்சதிகாரமாகவும் ரத்துசெய்து 2019 ஆகஸ்டில் எடுத்த நடவடிக்கைக்குப் பிறகு, முதல் முறையாக இங்கு வந்த அமித் ஷாவின் பயணம் எந்த உருப்படியான பலனையும் அளிக்கவில்லை. மாநில அந்தஸ்தை நிர்மூலமாக்கி, இரண்டு ஒன்றியப் பிரதேசங்களாகப் பிரித்த பிறகு வளர்ச்சி ஏற்பட்டுவிட்டதாக அமித் ஷா கூறியிருப்பது வெறும் புரளிதான்!

உள்துறை அமைச்சர் வருவதற்கு முன்பே ஜம்மு - காஷ்மீரில் ஏராளமானோர் முன்னெச்சரிக்கையாகக் கைதுசெய்யப்பட்டனர்; மக்கள் நடமாட்டம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது; பல பகுதிகளில் இணையதள சேவை முன்னறிவிப்பின்றி துண்டிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பைக்குகள், ஸ்கூட்டர்கள் பறிமுதல்செய்யப்பட்டன, சட்ட விரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம் (யுஏபிஏ), பொது பாதுகாப்புச் சட்டம் (பிஎஸ்ஏ) போன்ற கொடூரச் சட்டப் பிரிவுகளின் கீழ் இளைஞர்கள் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.

காஷ்மீர் பள்ளத்தாக்கு தொடர்ந்து கொதிநிலையில் இருப்பதையே இவை காட்டுகின்றன. 2019 ஆகஸ்ட் 5-க்குப் பிறகு பயங்கரவாதம் முடிவுக்கு வந்துவிட்டது என்று பாஜக அரசு கூறிவருவது உண்மையல்ல என்பதையும் இவை நிரூபிக்கின்றன.

ஏன் இந்தப் பயணம்?

காஷ்மீர் தொடர்பில் தாங்கள் பேசிவருவது உண்மைதான் என்று அனைவரையும் நம்ப வைக்கும் விதமாகத்தான் ஜம்முவிலும் காஷ்மீர் பள்ளத்தாக்கிலும், மிகவும் கட்டுப்பாடுகளுக்கு உள்பட்ட பொது நிகழ்ச்சிகளையும் அரசு நிகழ்ச்சிகளையும் ஆட்சியாளர்கள் நடத்தினர். காஷ்மீரில் இயல்புநிலை திரும்பிவிட்டதாக அறிவிக்கவும், நாட்டு மக்களை நம்ப வைக்கவுமே இப்பயணத்தை அமித் ஷா மேற்கொண்டதாகப் பார்க்க வேண்டியிருக்கிறது.

காஷ்மீரில் இயல்புநிலை என்ற கூற்று உண்மையல்ல என்பதை ஏற்கெனவே பள்ளத்தாக்கில் நடந்த பண்டிட்டுகள் மற்றும் காஷ்மீரிகள் அல்லாதவர்களின் படுகொலைகள் காட்டிவிட்டன. ஜம்மு பிராந்தியத்தில் பூஞ்ச் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நீண்ட நேர நடவடிக்கையில் 2 அதிகாரிகள் உள்பட 9 ஜவான்கள் உயிரிழந்தனர்.

2019 ஆகஸ்டில் எடுக்கப்பட்ட முடிவால் பயங்கரவியச் சம்பவங்கள் குறைந்துவிட்டன, அமைதியும் பாதுகாப்பும் நிலவுகின்றன என்று பாஜக அரசு கூறிவருவது இட்டுக்கட்டி கூறப்படும் கதையே தவிர வேறில்லை என்பதே உண்மை. அரசின் அதிகார துஷ்பிரயோகத்தால் மக்கள் வாய் மூடி இருப்பதை, அரசமைப்புக்கு முரணான அரசின்  நடவடிக்கைகளையும் தான்தோன்றித்தனமான முடிவுகளையும் மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டதாக காட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. படைப் பலத்தால் ஏற்படுத்தியுள்ள மௌனத்தை, தங்களுடைய செயல்களுக்குக் கிடைத்த ஒப்புதலாக அரசு கருதுவது மிகப் பெரிய தவறு.

மாணவர்களுடன் இப்படித்தான் உறவைப் பேணுவதா?

காஷ்மீர் இளைஞர்களுடன் நட்புறவைப் பேண வந்ததாக அமித் ஷா பேசினார். நூற்றுக்கணக்கான காஷ்மீர் இளைஞர்கள் காவல் நிலையங்களுக்கு வரவழைக்கப்பட்டு சிறுமைப்படுத்தப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். உலகக் கோப்பை ‘டி20’ கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அடைந்த வெற்றியைக் கொண்டாடிய, ஸ்ரீநகர் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு எதிராக ‘யுஏபிஏ’ சட்டப்படி இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. மாணவிகள்கூட விட்டுவைக்கப்படவில்லை. காஷ்மீர் இளைஞர்களுடன் நட்புறவை இப்படித்தான் வளர்க்க அமித் ஷா விரும்புகிறாரா?

உண்மை என்னவென்றால், அரசமைப்புச் சட்டமும் ஜனநாயகமும் தங்களுக்கு அளித்த உரிமைகளைப் பறித்த அரசின் மீது ஏற்பட்ட அதிருப்தியை வெளிக்காட்டவே இளைஞர்கள் பாகிஸ்தான் அணியின் வெற்றியைக் கொண்டாடியதாகப் பார்க்க வேண்டியிருக்கிறது. காஷ்மீருக்குத் தரப்பட்ட தனி அந்தஸ்தை நீக்கி, தங்களைப் படை பலத்தால் ஊமையாக்கிய அரசுக்கு எதிரான கோபத்தையும் ஏமாற்றத்தையும்தான் ஞாயிற்றுக்கிழமை இரவு அவர்கள் வெளிப்படுத்தினர்.

2019 ஆகஸ்ட் 5-ல் தாங்கள் எடுத்த முடிவால் ‘புதிய காஷ்மீர்’ உதயமாகியிருப்பதாக பாஜக அரசு பெருமைப்பட்டுக்கொள்கிறது. புதிய காஷ்மீர் இப்பகுதிக்குக் கொடுத்திருப்பது என்ன? மக்களுடைய சிவில் உரிமைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஊடகங்களுக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டுவிட்டது. எதிர்ப்புக் குரல்கள் படை பலத்தால் ஊமையாக்கப்படுகின்றன. அரசு ஊழியர்கள் யதேச்சாதிகாரமாகப் பதவியிலிருந்து நீக்கப்படுகின்றனர். மன்னராட்சிக்கும் சர்வாதிகார ஆட்சிக்கும் எதிராகப் போராடி, தியாகங்களைச் செய்து உருவான வரலாற்றுச் சிறப்பு மிக்க காஷ்மீரத்தை அழித்துவிட்டு, ‘புதிய காஷ்மீர்’ படைத்துவிட முடியுமா?

முன்னேறுகிறதா காஷ்மீர்? 

2019-க்குப் பிறகு வளர்ச்சியும் முன்னேற்றமும் அடைந்துவிட்டதாக பாஜக அரசு கூறிக்கொள்வதும் உண்மையல்ல என்பதையே ஜம்மு - காஷ்மீரில் நிலவும் 21.6% வேலைவாய்ப்பின்மையும் 7.39% பணவீக்க விகிதமும் உணர்த்துகின்றன. சொல்லப்போனால், 2018 ஜூன் முதல் ஜம்மு - காஷ்மீரம் மத்திய ஆட்சியின் கீழ்தான் இருக்கிறது. இப்பகுதியின் பிரதான எதிர்க்கட்சிகள் நம்பிக்கைக்குரியவை அல்ல என்ற பிரச்சாரத்தை திட்டமிட்டு கட்டமைக்க பாஜக முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.

இந்தப் பிரதேசத்தின் மூன்று அரசியல் குடும்பங்கள் திட்டமிட்டு மாநிலத்தின் வளர்ச்சியை சீர்குலைத்ததாக அமித் ஷா பேசியிருக்கிறார். இதே குடும்பங்களுடன்தான் பாஜக மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியதிகாரத்தில் பங்கேற்றது என்பதை அவர் மறந்தது ஏன்? காஷ்மீர் தொடர்பாகப் பேச இதே குடும்பங்களை, கட்சிகளை தில்லிக்கு வருமாறு - வேறு யாருமல்ல - பிரதமரே ஏன் அழைத்தார்?

தொகுதி மறுவரையறை முடிவடைந்த பிறகு சட்டப் பேரவை பொதுத் தேர்தல் நடைபெறும், மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று அமித் ஷா மீண்டும் பேசியிருக்கிறார். ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம், 2019-ன் கீழ் தொகுதிகள் இப்போது மறுவரையறுக்கப்படுகின்றன. அந்தச் சட்டமே செல்லாது என்ற வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருக்கிறது. காஷ்மீர் மக்களை மேலும் அதிகாரமற்றவர்களாக்கத்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றே பரவலாக பார்க்கப்படுகிறது.

நடவடிக்கைகளின் உள்நோக்கங்கள்

இப்போதைய கேள்வியெல்லாம், நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பலமுறை அறிவித்ததைப் போல ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை வழங்க முடியாமல் அரசைத் தடுப்பது எது? உண்மை என்னவென்றால் காஷ்மீரில் இப்போதுள்ள நிலவரம் சங்கப் பரிவாரத்தால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மாநிலத்தின் மக்கள்தொகைக் கட்டமைப்பை மாற்றியமைக்கத்தான் மாநிலம் தொடர்பான அரசமைப்புச் சட்டக் கட்டமைப்பு நீக்கப்பட்டது.

விவசாய நிலத்தை, வணிக நோக்கத்துக்காக மிகப் பெரிய அளவில் வழங்கும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியர்களுக்கு அளித்து ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் சமீபத்தில் பிறப்பித்த உத்தரவு இந்த சதியின் ஒரு பகுதிதான். கடந்த ஆண்டுகூட, இந்த பிரதேசத்தில் மற்றவர்களும் வந்து தொழில் - வர்த்தகம் செய்ய வசதியாக சட்டங்களை இயற்றியது.

குடியிருப்பு தொடர்பான சட்டங்கள் தாராளமாக்கப்பட்டன. காடுகளில் சில கட்டுமானத் தகர்ப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. காஷ்மீரிகளை மையப்படுத்திய நிர்வாகத்தின் அடித்தளக் கட்டமைப்பிலேயே மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சொத்து வரி புதிதாக போடப்படுகிறது. மாநிலத்தின் வளங்கள் மற்றவர்களுக்காகத் திறந்துவிடப்படுகின்றன. அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது குறைக்கப்பட்டுள்ளது. மாநில அரசுப் பணியில் ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவியிடங்களில் காஷ்மீரிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடங்கள் 50%-லிருந்து 33%ஆக குறைக்கப்பட்டுள்ளன.

அரசியல் லாபத்துக்காக மாநிலத்தின் வெவ்வேறு பகுதி மக்களுக்கு இடையிலும் சமூகங்களுக்கு இடையிலும் வேற்றுமைகள் விதைக்கப்படுகின்றன.

காஷ்மீர் உள்ளாட்சி மன்றங்களுக்கு 30,000 பிரதிநிதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சர் கூறுகிறார். உண்மை என்னவென்றால் இப்போதைய மத்திய அரசு மாநில மக்களுக்கு உண்மையான ஜனநாயக உரிமைகளைத் தொடர்ந்து மறுத்துவருகிறது.

நாட்டில் உள்ள அனைத்து ஜனநாயக - மதச்சார்பற்ற சக்திகளும் ஒற்றுமையாக முன்வந்து காஷ்மீர மக்களின் உரிமைகளுக்காகவும் நியாயமான அவர்களுடைய விருப்பங்கள் நிறைவேறவும் குரல் கொடுக்க வேண்டும். பாஜக அரசின் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கைகளால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியும் நம்பிக்கையின்மையும் மேற்கொண்டு வளரவிட அனுமதித்துவிடக் கூடாது. அது தீவிரவாதம் மேலும் வளரத்தான் வாய்ப்புகளை ஏற்படுத்தும்! 

© ‘தி வயர்’

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
தமிழில்: வ.ரங்காசாரி







பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

குணசேகரன்   2 years ago

காஷ்மீர் குறித்த கட்டுரை பல உண்மை நிலவரங்களை எடுத்துக்கூறினாலும் .....அதை பொது தளங்களில் விவாங்களாக மாற்றும் நபர்களையும் விவாதிப்பவர்களையும் தேசவிரோதிகளாக கட்டமைக்கவே பா.ஜ.க...தொண்டர்கள் முயல்வார்கள் அமித்ஷாவின் காஷ்மீர் பயணம் சர்வாதிகாரத்தையே பிரதிபலிக்கிறது..............புகைந்துகொண்டிருக்கும் நெருப்பு துண்டு வெறும் அடுப்பில் உள்ள தீப்பொறியாக என்னிவிடாமல் எரிமலையின் சீற்றமே என்தை உணர்ந்து செயலாற்றுவது மைய அரசின் முமேல் பணியாக இருத்தல் அவசியம்........

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

சமஸ் ராஜன் குறைசமச்சீர் வளர்ச்சிசமஸ்தானங்கள்நிலக்கரி இறக்குமதிநல்ல பெண்காந்தி சமஸ்முன்னாள் பிரதமர்இந்திய தேசிய ராணுவம்கணினி அறிவியல் என் பள்ளி எனக்குக் கொடுத்த கொடைகன்னட இலக்கியம்சாட்சியச் சட்டம்அருஞ்சொல் டாக்டர் கணேசன்சமத்துவபுரங்கள்வறிய மாநிலங்கள்அகில இந்தியப் படங்கள் சமஸ்ஆங்கிலப் புத்தாண்டுபுதுப் பிறப்புதொழுகை அறை சர்ச்சைபௌத்திரம்உழவர்களின் தோழர்பாண்டியன்மூன்று தீர்க்கதரிசன விஷயங்கள்முஃப்தி முஹம்மது சயீதுதமிழ் உரிமைமாமன்னன்: உதயநிதிகள் நிஜத்தில் பேச வேண்டும்கல்வியும்தரம்தாராளமயம்மார்க்கெட்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!