கட்டுரை, அரசியல் 7 நிமிட வாசிப்பு
பண்டிட்டுகள் படுகொலை காஷ்மீரை மேலும் நாசமாக்கும்
காஷ்மீரில் மீண்டும் பண்டிட்டுகள் படுகொலைகள் அரங்கேற ஆரம்பித்திருக்கின்றன. மூன்று தசாப்தங்கள் பின்னோக்கிச் செல்வதுபோல இருக்கிறது என்கிறார்கள் மூத்தத் தலைமுறையினர். இந்தப் படுகொலைகள் தனிமனிதர்களை அல்லாமல், இந்திய அரசின் நடவடிக்கைகளைக் குறிவைத்து நடப்பதை விவரிக்க வேண்டியது இல்லை. எப்படியாயினும் இது மோசமான ஒன்று. பயங்கரவாதிகள் தாங்கள் யாருடைய பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்கிறார்களோ அந்த காஷ்மீர் மக்களுக்கும், குறிப்பாக முஸ்லிம்களுக்கும் இதன் வழி மோசமான பின்விளைவுகளை உருவாக்குகிறார்கள்.
ஸ்ரீநகரில் மூன்று தலைமுறைகளாக மருந்துக் கடை நடத்திவரும் குடும்பத் தலைவர் மக்கன்லால் பிந்த்ரூ அவருடைய கடைக்குள் வைத்து, மிக அருகிலிருந்து கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். அதே ஸ்ரீநகரின் ஈத்கா மைதானம் அருகில் உள்ள அரசினர் பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த பயங்கரவாதி பள்ளிக்கூடத்தில் உள்ள எல்லோரையும் வரிசையாக நிற்கவைத்து, அடையாள அட்டைகளை வாங்கி சரிபார்த்துவிட்டு இந்து மதத்தைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் தீபக் சந்த், சீக்கிய ஆசிரியை சதீந்தர் கௌர் ஆகியோரை மிக அருகிலிருந்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருக்கிறார்.
பிந்த்ரூ கொல்லப்பட்ட அதே நாளில் ஸ்ரீநகரில் வீதியோரம் கோல்கப்பா, வீரேந்தர் பாஸ்வான், முகம்மது ஷஃபி ஆகியோரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்துக்கள், சீக்கியர்கள் மட்டுமின்றி முஸ்லிம்களும் கொல்லப்படுகின்றனர் என்றால், இதில் வேறு ஒரு கணக்கும் இருக்கிறது. காஷ்மீருக்கு வெளியிலிருந்து வந்தவர்கள், காவல் துறை மற்றும் துணை நிலை ராணுவத்தில் பணிபுரிவோர், பாஜகவின் நிர்வாகிகள் என்று இவர்களை அந்தக் கணக்குக்குள் அடக்கலாம். பிரதானமாகக் குறிவைக்கப்படுபவர்கள் பண்டிட்டுகள்.
⁋
எப்படிக் குறிவைக்கிறார்கள்?
பெரும் எண்ணிக்கையில் ராணுவம், துணை நிலை ராணுவம் இருப்பதால் குழுக்களாக வந்து இப்போது பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்த முடிவதில்லை. செல்பேசிகளும் இணையதளங்களும் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதோடு, தீவிரமான பாதுகாப்பும் நிலவுவதால், ராணுவம் அல்லது அரசு கேந்திரங்களை அவர்களால் குறிவைக்க முடியவில்லை.
ஆகையால், தனிநபர்களைக் கொண்டு, தனிநபர்களைக் குறிவைக்கிறார்கள். பள்ளத்தாக்கில் சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், பிறமொழியினர், அரசுசார் ஊழியர்கள் இப்படியானவர்களைக் குறிவைப்பதன் மூலம் மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்த முற்படுகிறார்கள்.
ஏற்கெனவே பயங்கரவாத இயக்கங்களில் இருப்பவர்களின் பட்டியல் ராணுவம் - காவல் துறையின் கண்காணிப்பில் இருப்பதால், புதிய ஆட்களை இந்தத் தாக்குதல்களுக்குப் பயன்படுத்துகிறார்கள். காரியம் முடிந்ததும், அவர்கள் துப்பாக்கிகளை ஓர் இடத்தில் போட்டுவிட்டு சென்றுவிடுகிறார்கள்.
தாக்குதல் உத்தி புதியது என்றாலும், தாக்குதல் இலக்கு பழையது. “சிறுபான்மையினரைக் குறிவைப்பது மதவெறியின் நெடிய வெளிப்பாடுதான். முப்பது வருஷங்கள் மீண்டும் பின்னோக்கிப் போகிறார்கள்” என்ற குரல்களை ஸ்ரீநகரில் இயல்பாகக் கேட்க முடிகிறது.
⁋
வெறிச்செயல்களின் பின்னணி என்ன?
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தோடு, மாநிலம் எனும் அந்தஸ்தும் பறிக்கப்பட்டது, மாநிலம் இரண்டு ஒன்றியப் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது, பௌத்தர்கள் அதிகமுள்ள லடாக் மலைப் பகுதி தனியாகப் பிரிக்கப்பட்டது இவை எல்லாமும் இந்திய அளவிலோ, சர்வதேச அளவிலோ பெரிய தாக்கங்களை உண்டாக்கவில்லை. நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டம் செல்லாது என்று உச்ச நீதிமன்றமும் அறிவிக்கவில்லை. இது இந்தியாவின் உள் விவகாரம் என்று சீனா உள்பட பாகிஸ்தானின் தோழமை நாடுகள்கூட கூறிவிட்டன.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் 1990-களில் நடந்த படுகொலைகளை அடுத்து, காஷ்மீரிலிருந்து தப்பியோடிய பண்டிட்டுகளை மீண்டும் அங்கே குடியமர்த்தும் நடவடிக்கைகளை ஒன்றிய அரசு முன்னெடுத்துவருகிறது. அதன்படி பண்டிட்டுகள் கூட்டமாக வாழும் சமூகக் குடியிருப்புகளை ஏற்படுத்தி அருகிலேயே பள்ளிக்கூடம், கல்லூரி, மருத்துவமனை, வணிக வளாகம் ஆகியவற்றையும் நிறுவி பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கவிருக்கிறது.
இதோடு, அனேக ஆண்டுகளாக குடியுரிமை இல்லாமல் அங்கு வேலை செய்துகொண்டிருக்கும் பட்டியல் இனத்தவர் உள்ளிட்டோருக்கும் இப்போது குடியுரிமை கிடைத்திருக்கிறது. காஷ்மீரில் சொத்துகளை மற்றவர்களும் வாங்கவும், தொழில் தொடங்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இவையெல்லாமும்கூடி காலப்போக்கில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் முஸ்லிம் அல்லாதவர்கள் கணிசமாகக் குடியேற்றப்பட்டால் தங்களுடைய ஆதிக்கமும் பெரும்பான்மை வலிமையும் நீர்த்துவிடும் என்று முஸ்லிம்களை நம்ப வைப்பது அரசியல் கட்சிகளுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் எளிதாக இருக்கிறது. இக்காரணங்களால் இப்போது காஷ்மீரில் இந்துக்கள் அதிலும் குறிப்பாக பண்டிட்டுகள், சீக்கியர்கள், பிற மாநிலங்களிலிருந்து பிழைப்பு தேடி வருவோர் குறிவைத்துக் கொல்லப்படுகின்றனர்.
இது இஸ்ரேலிய பாணி குடியேற்றம் என்ற பேச்சு பள்ளத்தாக்கில் உருவாகியிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக, அடுத்தகட்டமாக காஷ்மீரில் நாட்டின் பல்வேறு பகுதியினரும் குடியேறும் சூழல் உருவாகலாம் என்ற அச்சம் காஷ்மீரிகள் இடையே இருக்கிறது.
இந்த அச்சத்தை பயங்கரவாதிகள் பயன்படுத்திக்கொள்ள முற்படுகிறார்கள். பள்ளத்தாக்கிலிருந்து முஸ்லிம் அல்லாதவர்களை முழுதாக விரட்டிவிட்டால், காஷ்மீர் பள்ளத்தாக்கின் எதிர்காலத்தைத் தங்கள் விருப்பப்படி கொண்டுசெல்லலாம் எனும் செயல்திட்டத்தை உயிரோடு வைத்திருக்கவே இத்தகு நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள்.
⁋
பண்டிட்டுகள் மீதான கொலை வெறியாட்டம்
காஷ்மீர் விவகாரத்தை காஷ்மீரிகளின் நியாயப்பாட்டோடு அணுகுபவர்களைக்கூட கூசவைக்கும் வரலாறு, பண்டிட்டுகள் படுகொலையும், இன ஒழிப்பு முனைப்பும்!
ஆரம்பக் காலத்தில் காஷ்மீர் - ஜம்மு - லடாக் மூன்று பிராந்தியங்களையும் சேர்ந்த, முஸ்லிம்கள், இந்துக்கள், பௌத்தர்கள் என்று எல்லாத் தரப்பினரையும் உள்ளடக்கியதாக இருந்த சுதந்திர காஷ்மீர் இயக்கம் ஒருகாலகட்டத்தில் சுருங்கிப்போனது. இன்றைக்குக் கிட்டத்தட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கின், முஸ்லிம்களில் ஒரு பகுதியினரின் கனவாக மட்டுமே அது மாறிவிட்டது. இதற்கு முக்கியமான காரணம், காஷ்மீர் இயக்கம் வரித்துக்கொண்ட மதவாதத்தன்மையும்தான்.
காஷ்மீரின் ‘பண்டிட்டுகள்’ இந்துக்கள், பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பள்ளத்தாக்கில் உள்ள முஸ்லிம்களில் ஒரு பகுதியினருக்கு எப்படி பாகிஸ்தான் மீதான நேசம் உண்டோ, அப்படி இந்துக்களான பண்டிட்டுகளுக்கு இந்தியா மீது நேசம் உண்டு. இதுவே அவர்கள் மீதான வெறுப்புக்கும் காரணம் ஆனது.
இந்த வெறுப்பானது, காஷ்மீர் இயக்கம் கொழுந்துவிட்டு எரிந்த 1980-1990-களில், பண்டிட்டுகள் மீது பெரும் தாக்குதல் நடக்க வழிவகுத்தது.
1989 செப்டம்பர் 14-ல் பாஜக தலைவரும், வழக்கறிஞருமான டிக்கா லால் தப்லூ, பலரும் பார்த்திருக்க பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்டதும், அடுத்து நவம்பர் 4-ல் ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற நீதிபதி நீலகண்ட கஞ்சூ, ஸ்ரீநகரில் உயர் நீதிமன்றம் அருகிலேயே சுட்டுக் கொல்லப்பட்டதும் அன்றைக்குப் பெரும் கொந்தளிப்பையும் அச்சத்தையும் உண்டாக்கிய சம்பவங்கள்.
ஸ்ரீநகரிலிருந்து வெளியாகும், ‘அஃப்தப்’ நாளிதழ், ‘காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து இந்துக்கள் அனைவரும் உடனே வெளியேற வேண்டும்’ என்ற எச்சரிக்கையை ‘ஹிஸ்புல் முஜாஹிதீன்’ விடுப்பதாகப் பிரசுரித்தது 1990 ஜனவரி 4-ல் செய்தி வெளியிட்டது. தொடர்ந்து, ‘அல்-சஃபா’ பத்திரிகையிலும் அப்படி ஓர் எச்சரிக்கை வெளியானது. அது மட்டுமல்லாமல் காஷ்மீர் இந்துக்களும் இஸ்லாமிய நெறிப்படிதான் வாழ வேண்டும் என்று சுவரொட்டிகள் மூலம் அறிவுறுத்தப்பட்டனர். வீடுகள், கடைகள், அலுவலகங்கள், நிறுவனங்கள் அனைத்தும் கட்டிடங்களுக்குப் பச்சை நிறம் பூசும் கலாச்சாரம் உண்டாக்கப்பட்டது.
பள்ளத்தாக்கில் வசித்த பண்டிட்டுகள் திட்டமிட்டு தாக்கப்பட்டனர். அவர்களுடைய வீடுகள் சூறையாடப்பட்டன. சொத்துகள் அழிக்கப்பட்டன அல்லது வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டன. அவர்களுடைய வீட்டுப் பெண்கள் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டனர்.
துரதிருஷ்டவசமாக, காஷ்மீரை அன்றைக்கு ஆண்ட அரசாங்கத்தின் ஆதரவும் இந்த இழிச்செயல்களுக்குப் பின்னணியில் இருந்தது. இரவு நேரங்களில் பண்டிட்டுகள் வசிக்கும் தெருக்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. காவல் துறையின் பாராமுகத்தாலும், வீடு வீடாக வந்து எங்களால் பாதுகாப்பு கொடுக்க முடியாது என்று கூறியதாலும் தங்களுடைய உயிர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று அஞ்சியே பண்டிட்டுகள் ஜம்முவுக்கோ, டெல்லி அல்லது இதர மாநிலங்களுக்கோ குடியேறினர். தங்களை பாதுகாக்கக் கோரி, ‘பனுன் காஷ்மீர்’ என்ற இயக்கத்தைக்கூட நடத்தினர்.
காஷ்மீரில் மனித உரிமைகள் நசுக்கப்படுகின்றன என்று பட்டிதொட்டியெங்கும் முழங்கியவர்கள்கூட பண்டிட்டுகளுக்கு ஏற்பட்ட இந்நிலை குறித்து பரிதாபப்படவில்லை. ‘டெல்லியை ஆள்வதே பண்டிட்டுகள்தான் என்று, அவர்களில் பலர் உயர் அதிகாரிகளாக இருப்பதைச் சுட்டிக்காட்டி, பண்டிட்டுகள் அனைவருமே செல்வச் செழிப்பிலும் அதிகாரமிக்க பதவிகளிலும் இருப்பதைப்போல மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி அலட்சியப்படுத்தினர்.
⁋
காஷ்மீரில் உண்டான மதப்பிளவு
காஷ்மீர் மாநில மக்கள்தொகை 1.25 கோடி. அதில் பண்டிட்டுகள் 4% முதல் 5% வரை. அவர்களில் ஒரு லட்சம் பேர் முதல் 3 லட்சம் பேர் வரையில் 1990-களில் வெளியேறிவிட்டனர். பள்ளத்தாக்கில் பண்டிட்டுகளை வெளியேற்றியதை அடிப்படைவாத அமைப்புகள் தங்களுக்குள் கொண்டாடிக்கொண்டனர். ஆனால், ஒட்டுமொத்த காஷ்மீரில் ‘காஷ்மீரிகள்’ எனும் உணர்வு பிளந்து, ஜம்மு இந்துக்கள் உணர்வுக்குள்ளும், லடாக் பௌத்தர்கள் உணர்வுக்குள்ளூம் அமிழ்ந்தது.
காஷ்மீருக்கு வெளியே - குறிப்பாக வட மாநிலங்களில் - இந்து வலதுசாரி அமைப்புகள் காஷ்மீரை இந்திய எதிர்ப்பு பிராந்தியமாகக் கட்டமைக்கவும் இது உதவியது. காரணம், பண்டிட்டுகளுக்காகப் பரிந்தும், இந்தப் படுகொலைகளை வெளிப்படையாக எதிர்த்தும் பேசும் இடத்தில் பாஜக உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகளே இருந்தன. நாட்டின் பிரதான பிரச்சினைகளில் பெரிய வகையில் தலையிட்டுக்கொள்ளாத, உச்சியில் என்றாலும் ஒரு மூலையில் உள்ள காஷ்மீரின் விவகாரம் வட இந்திய அரசியலின் மைய விசைகளில் ஒன்றாக இப்படித்தான் உருமாற்றப்பட்டது. இப்போது மீண்டும் அதே சலனத்தைக் காண முடிகிறது.
காஷ்மீருக்கு வெளியே பெருகிவந்த இந்த உணர்வுகளை காஷ்மீர் தலைவர்கள் உள்வாங்கவில்லை. தங்களுடைய சொந்த அரசியலுக்கு அவர்கள் மதவுணர்வைப் பயன்படுத்துவதை வழிவழியாகச் செய்துவந்தனர். காஷ்மீர் இந்துக்களை ‘முக்பீர்கள் - இந்திய ராணுவத்தின் உளவாளிகள்’ என்று முத்திரை குத்தியவர் ஷேக் அப்துல்லா. ஜம்முவில் கட்டப்பட்ட புதிய அரசு தலைமைச் செயலகத்தில் முஸ்லிம் அரசு ஊழியர்கள் மதிய நேரத்தில் நமாஸ் செய்ய வசதியாக, அங்கு இந்துக் கோயில் இருந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து மசூதி கட்டியவர் ஷா. இதன் தொடர்ச்சியாக இந்து - முஸ்லிம் கலவரம் உருவானபோது, ‘இஸ்லாத்துக்கு ஆபத்து வந்துவிட்டது’ என்று முழங்கியவர் ஷா. இந்த வெறுப்பரசியல் இன்றளவும் தொடருகிறது.
⁋
எங்கே போய் முடியும் இது?
ஜனநாயகத்தையும், கூட்டாட்சியையும் விரும்புபவர்கள் எவரும் காஷ்மீர் விவகாரத்தில் பாஜக எடுத்த முடிவுகளை நியாயப்படுத்த முற்பட மாட்டார்கள். அதனாலேயே, ‘காஷ்மீரில் மீண்டும் தேர்தல் நடத்தி, காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தைத் தருவோம்’ என்று பாஜக பேச வேண்டியிருக்கிறது. ஆனால், இப்போதைய படுகொலைக் கலாச்சாரம் பாஜக எடுத்துவரும் யதேச்சதிகார நடவடிக்கைகளுக்கு நியாயம் கற்பிப்பதாக அமைந்துவிடும். பயங்கரவாதிகள் வேரறுக்கப்பட வேண்டும். இல்லையெனில், காஷ்மீரை மேலும் கண்காணிப்பு வளையத்துக்குள் வைக்கவே இது வழிவகுக்கும்.
காஷ்மீருக்கு வெளியிலும் இந்து - முஸ்லிம் வகுப்புவாத உணர்வுகள் பெருக்கெடுக்கவும் இந்தப் படுகொலைகள் வழிகோலும். பயங்கரவாதிகளையும், வன்முறைச் செயல்களையும் ஒதுக்கித் தனிமைப்படுத்துவதன் வாயிலாகவே காஷ்மீர் இயக்கங்கள் தமக்கென ஒரு தார்மிக நிலைப்பாட்டைத் தக்க வைக்க முடியும்!







பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
P.Saravanan 3 years ago
Terrorists should be eliminated. No second opinion about it, but the track record speaks otherwise. All our efforts to eliminate terrorism in Kashmir helped only to contain it and not to eliminate it. Terrorists know that killing of Pandits would attract serious attention of Indian government more than any other act. That is why they target Pandits.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.