தலையங்கம் 5 நிமிட வாசிப்பு

கிலானி - ஒரு வாழ்க்கை, ஒரு கேள்வி

ஆசிரியர்
07 Sep 2021, 12:00 am
0

காஷ்மீர் - தமிழ்நாடு இரண்டையும் வரலாற்றில் நாம் ஒப்பிட முடியும். பிரிவினைக் குரலை முழங்கிய திராவிட நாடு விடுதலைப் போராட்ட  இயக்கத்தையும், காஷ்மீர் விடுதலைப் போராட்ட இயக்கத்தையும்கூட ஒப்பிட முடியும். ஒரே காலகட்டத்தில் அரசியலில் அடியெடுத்துவைத்த கருணாநிதியையும், கிலானியையும் ஒப்பிட முடியும். வன்முறை தவிர்த்து, புவியரசியல் சூழல் உணர்ந்து, சாத்தியப்பட்ட ஜனநாயகப் பாதையில் மெல்ல மெல்ல முன்னகரும்போது தம்முடைய மக்களுக்கான அதிகாரத்தையும், சமூக  முன்னேற்றங்களையும் எப்படிக் கொண்டுவர முடியும் என்பதற்கும் இந்த ஒப்பீடு முக்கியமானதாகிறது. கிலானியின் மறைவின்போது எழுதப்பட்ட இக்கட்டுரையை இன்றைய நாளின் பொருத்தம் கருதி ‘அருஞ்சொல்’ தன் வாசகர்களுக்காக மறுவெளியிடுகிறது!

காஷ்மீர் மக்களின் உறுதியான விடுதலைக் குரலாகத் திகழ்ந்த சையத் அலி ஷா கிலானியின் (1929-2021) மறைவானது காஷ்மீர் போராளிகளை நோக்கியும், இந்திய அரசை நோக்கியும் ஆழமான ஒரு கேள்வியை வீசியது: இன்னும் எவ்வளவு காலம் காஷ்மீர் இப்படியே அலைக்கழிக்கப்படும்? 

ஜம்மு-காஷ்மீரின் கொந்தளிப்பான வரலாற்றின் அனைத்து முக்கியமான கட்டங்களுக்கும் கிலானி சாட்சியாக இருந்தார்; மன்னர் காலத்திய காஷ்மீர் சுதந்திரப் போராட்டம், பாகிஸ்தானின் திடீர் தாக்குதல், இந்தியாவுடனான காஷ்மீரின் இணைவு, பிரதமராக ஷேக் அப்துல்லாவின் எழுச்சியும் வீழ்ச்சியும், தன்னுடைய கைப்பாவைகள் வழியான டெல்லியின் ஆட்டம், இளைஞர்களின் ஆயுதக் கிளர்ச்சி, அதை ஒடுக்க வந்த அரசப் படையினரின் அடக்குமுறை, கொல்லைப்புறப்  பேச்சுவார்த்தைகள், காஷ்மீருக்கான சிறப்பு நிலைப் பறிப்பு… இவ்வளவுக்கும் சாட்சியமாக  இருந்தவர் கிலானி. 

முக்கால் நூற்றாண்டு அரசியல் வாழ்க்கை கிலானியினுடையது; கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் காஷ்மீர் அரசியலின் மைய அரங்கில் அவரும் இருந்தார்; காஷ்மீரில் ஓர் இணை அரசாங்கத்துக்கான அதிகாரத்துடன் செயல்பட்டுவந்த அமைப்புகளின் மையக் கண்ணியாக இருந்தார். கிலானியின் தீச்சொற்களுக்குக் கட்டுண்டு கிடந்தனர் கணிசமான காஷ்மீரிகள்; குறிப்பாக இளைஞர்கள். ஆனால், இவ்வளவு செல்வாக்கும் போராட்டங்களும் அர்த்தமற்றதாகப்போக கிலானியும் முக்கியமான ஒரு காரணமாக இருந்தார்.  

அமைப்புரீதியாக கிலானியுனுடைய வாழ்வைச் சொல்ல வேண்டும் என்றால், மிதப் போக்கு இயக்கங்களில் தொடங்கி தீவிரப் போக்கு இயக்கங்கள் நோக்கி நகர்ந்தவர் அவர். 1970-களில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிற்பாடு, சுதந்திர காஷ்மீர் போராட்டத்துக்கான வழிமுறைகளில் ஒன்றாகத் தேர்தல் ஜனநாயத்தைப் புறக்கணிக்கலானார். 

காஷ்மீர் போராட்டக் களத்தில் பல அமைப்புகள் நின்றிருந்த நிலையில், அவற்றோடு பேசுவதற்கு ஒருமித்த ஒரு கூட்டமைப்பாக அவை வர வேண்டும் என்று இந்திய அரசு வலியுறுத்தியது. இதன் நிமித்தம் 26 அரசியல் கட்சிகள், பொது நல அமைப்புகளின் சேர்க்கையாக 1993-ல் ‘ஹுரியத் மாநாடு’ கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதை உருவாக்கியவர்களில் ஒருவராக இருந்ததோடு, அதன் செல்வாக்கு மிக்க மூத்த தலைவராகவும் கிலானி திகழ்ந்தார். பின்னாளில், காஷ்மீரின் ஆயுதக் குழுக்களுக்கும் அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை அமைப்பாக ஹுரியத் மாநாடு கூட்டமைப்பு நிலைப்பெற்றது. இந்தியாவோடு மட்டும் இன்றி பாகிஸ்தானுடனும் ஹுரியத் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். மேலதிகம், காஷ்மீர் தொடர்பான பாகிஸ்தானுடைய கொள்கையை வடிவமைப்பவர்களாகவும் இவர்கள் உருவெடுத்தனர். 

கிலானியின் பிரச்சாரத்துக்கு இருந்த செல்வாக்கின் விளைவாக 1990களில் பல வாக்குச்சாவடிகளில் ஒரு சத வாக்குகூடப் பதிவாகாத நிலை காஷ்மீரில் இருந்தது. 1995ல் அன்றைய பிரதமர் பி.வி.நரசிம்மராவ் உரையாற்றுகையில், “தனி நாடு எனும் விஷயத்தை விட்டுவிட்டால், காஷ்மீரில் உச்சபட்ச சுயாட்சியை வழங்க இந்தியா தயாராக இருக்கிறது” என்று அறிவித்தார். 2001ல் ஆக்ரா மாநாட்டில் வாஜ்பாய் - முஷாரஃப் இருவரும் கூட்டாக அறிவிக்கவிருந்த நான்கு அம்சத் திட்டத்திலும், ‘சுதந்திரம் கிடையாது; ஆனால், உச்சபட்சத் தன்னாட்சிக்கான அமைப்பு காஷ்மீரில் உருவாக்கப்படும்’ என்பது ஓர் அம்சமாக இருந்தது. இந்த நான்கு அம்சத் திட்டம் அறிவிக்கப்படாமல் போக கிலானியும் ஒரு காரணமாக இருந்தார். 

காஷ்மீரின் விடுதலைக்குக் குறைந்த எந்த ஏற்பாட்டையும் இந்தியாவுடன் பேச கிலானி தயாராக இல்லை; அதேசமயம், பாகிஸ்தானுடன் காஷ்மீரை இணைக்கத் தயாராக இருந்தார். ஆயுததாரிகளை அவர் தீவிரமாக ஆதரித்தார். பதிலுக்கு ஒடுக்குமுறை நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டது. இதற்கெல்லாம் எவ்வளவு பெரிய விலையை காஷ்மீர் மக்கள் தொடர்ந்து கொடுக்க வேண்டியிருக்கிறது என்பது தொடர்பிலோ, மாறிவந்த புவியரசியல் சூழல் தொடர்பிலோ கிலானி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. பாகிஸ்தானை அளவுக்கு மீறி அவர் மதிப்பிட்டார், நம்பினார். ஏமாந்தார். ராஜதந்திரரீதியில் அணுகுபவர்கள் எவரும் கிலானியின் அணுகுமுறையை மூர்க்கத்தனம் என்று வர்ணிக்கக்கூடும். கிலானியோ தன் பிடிவாதப்போக்கைப் பெருமிதமாகக் கண்டார்.

இந்த சமரசமற்றக் கடும் போக்கு, காஷ்மீரின் நெகிழ்வான தலைவர்களையே அதிகம் காயப்படுத்தியது. தேர்தல் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட வெகுஜனத் தலைவர்களான அப்துல்லாக்கள் உள்ளிட்டோர் கிலானி பாணி அரசியலால் கடுமையாகப் பலவீனப்பட்டார்கள். காஷ்மீர் மக்களில் ஒரு பகுதியினர் இந்தியாவுடன் இணக்கமாகப் பேசி ஒரு சமரசத் தீர்வு நோக்கி நகர்ந்த எவரையும் டெல்லியின் முகவர்களாகவே கண்டார்கள். விளைவாக, காஷ்மீரிகளின் உரிமைகளை முன்வைத்து டெல்லியிடம் உறுதியான குரலில் பேசும் வல்லமை எவருக்கும் இல்லாமல் போனது. இப்படிப்பட்ட சிதறுண்ட, பலவீனத் தலைமையானது காஷ்மீர் போராட்டத்தையும் பலவீனப்படுத்தியது. 

கடைசியில் எத்தகைய சூழலில் இன்றைக்கு காஷ்மீர் சமூகத்தை கிலானி விட்டுச் சென்றிருக்கிறார் என்பது ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் எவரும் எண்ணிப் பார்க்க வேண்டியதாகும். காஷ்மீரை சுதந்திர நாடாகக் காண எண்ணியவர், இன்று மாநிலம் எனும் அந்தஸ்தில்கூட இல்லாத ஓர் ஒன்றியப் பகுதியில் இறந்திருக்கிறார். எவ்வளவு பெரிய துயரம் இது; ராஜதந்திரத் துறை என்பது பிடிவாதத்துக்கும் மூர்க்கத்துக்குமான இடம் இல்லை.

இந்தியாவின் வடமுனையைத் தென்முனையோடு ஓர் ஒப்பீட்டுக்காக இணைத்துப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. கருணாநிதி - கிலானி இருவரையும்கூட ஒப்பாய்வுக்காக எடுத்துக்கொள்ளலாம். இங்கே திராவிட நாடு கேட்ட இயக்கத்தின் நீட்சி கருணாநிதி என்றால், அங்கே சுதந்திர காஷ்மீர் கேட்ட இயக்கத்தின் நீட்சி கிலானி. கிட்டத்தட்ட இருவரும் சம வயதினர்; கிட்டத்தட்ட சமமான காலத்துக்கு அரசியலில் முக்கியமான இடத்தில் இருந்தவர்கள். நேரு பிரதமரான காலத்திலிருந்து மோடி பிரதமராகும் காலம் வரை தீர்க்கமாகச் செயல்பட்டுவந்தவர்கள். ஒரு தந்தைமை ஸ்தானத்தைத் தத்தமது சமூகங்களில் வகித்தவர்கள்.

மாறிவந்த புவியரசியலுக்கு ஏற்ப இந்திய அரசின் ஒவ்வொரு நகர்வுக்கும் கருணாநிதியும் அவர் சார்ந்த இயக்கமும் நெகிழ்ந்துகொடுத்தனர் என்றால், மேலும் மேலும் இறுக்கமாயினர் கிலானியும், அவர் சார்ந்த இயக்கங்களும். தமிழ்நாட்டின் அரசியலில் மதம் வெளியே இருந்தது; காஷ்மீர் அரசியலோ மதத்துக்குள்ளே இருந்தது. இருவரும் பிரிவினைக் குரலோடு அரசியலைத் தொடங்கியவர்கள்தான்; கருணாநிதி இறக்கும்போது இந்திய நாடாளுமன்றத்தில் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கிறது; கிலானி இறக்கும்போது பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கிறது.

இதன் பொருட்டு திராவிட இயக்கமும், அதன் தலைவர்களும் தமிழ்நாட்டுக்கு எல்லா உரிமைகளையும் பெற்றுத் தந்துவிட்டார்கள் என்று சொல்வதற்கு இல்லை; எல்லோர்க்கும் இணையான அதிகாரங்களையும், தமக்கான உரிமைகளையும் பெற தமிழர்களும் செல்ல வேண்டிய தொலைவு அதிகம் என்றாலும், ஜனநாயகத்துடனான ஊடாட்டத்தின் வழி ஒரு பேரழிவை இங்கே தலைவர்கள் தவிர்த்திருக்கிறார்கள்; ரத்தக்களரியிலிருந்து தம் மக்களைக் காத்திருக்கிறார்கள்.

காஷ்மீரின் துயர நிலைக்குப் பதில் சொல்ல இந்திய அரசும் கடமைப்பட்டிருக்கிறது. கிலானி போன்ற கடும்போக்காளர்கள் மத்தியில், இந்திய அரசையும் மக்களையும் நம்பி சுமுகத் தீர்வுக்கு முன்வந்த அப்துல்லாக்கள் போன்ற மென்போக்குத் தலைவர்களுக்கு இந்திய ஆட்சியாளர்கள் இதுவரை கொடுத்திருக்கும் மரியாதை என்ன? ஆரம்பம் முதலாகவே உறுதிமொழி மீறல்களும், துரோகமான முதுகுக்குத்தல்களுமே நீடித்துவந்திருக்கின்றன. இதுவரை இந்த நாட்டின் எவ்வளவு உயிர்களும் செல்வமும் ஆற்றலும் இந்த விவகாரத்தில் வீணடிக்கப்பட்டிருக்கும்? தனி நாடு எனும் எல்லைக்கு அப்பாற்பட்டு, உச்சபட்சத் தன்னாட்சியை காஷ்மீருக்கு வழங்குவதில் இந்திய அரசுக்கு  எந்தத் தயக்கமும் இல்லை என்றால், 2019ல் எடுக்கப்பட்டதைப் போன்ற ஒரு மூர்க்க நடவடிக்கைக்கான சிந்தனை எங்கிருந்து டெல்லிக்கு வந்திருக்கும்?

ஸ்ரீநகரின் ஹைதர்போரா பகுதியில், மௌனம் சூழ்ந்த விடியற்காலையில், நெருங்கிய உறவினர்கள் சிலர் மட்டும் பங்கேற்கும் வகையில், முந்தைய நாள் இரவு 10 மணிக்கு இறந்த கிலானியின் உடல் மறுநாள் அதிகாலை 4 மணிக்குள் அவசர அவசரமாக அடக்கம்செய்யப்பட்டபோது, காஷ்மீர் பிராந்தியத்தின் பெரும்பாலான பகுதிகள் ஊரடங்குச் சூழலிலும், இணையம் முடக்கப்பட்ட நிலையிலும் இருந்தது இந்த விவகாரத்தை உணர்த்துவதற்கான துல்லியமான குறியீடு. கிலானியோடு முடிந்துவிடக்கூடிய விவகாரம் இல்லை இது என்பதை இந்திய அரசு நன்றாகவே உணர்ந்திருக்கிறது; இறந்தவர் ஒருவரின் இறுதிச் சடங்குகளுக்கான குறைந்தபட்ச அவகாசம் -  கண்ணியத்தைக்கூட அளிக்க முடியாத அளவுக்கு ஈவிரக்கமற்ற வகையில் அரசு நடந்துகொண்டதற்கு அதைச் சூழ்ந்திருக்கும் அச்சத்தைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

இப்படியே காஷ்மீர் தத்தளிப்பில் நீடிப்பது துயரம். இனியேனும் திறந்த மனதோடு காஷ்மீரிகளின் குரல்களை அரசு கேட்க வேண்டும். அவர்களுடைய நம்பிக்கையை இந்திய அரசு பெற வேண்டும். தாராளமான கூட்டாட்சியுணர்வுடன் இந்தியா செயல்படுவது ஒன்றே காஷ்மீர் விவகாரத்தைத் தீர்ப்பதற்கான அரசியல்பூர்வ வழி; காஷ்மீரிகளுக்கும் அதுவே அவர்கள் விரும்பும் தன்னாட்சியை வழங்கும்!

(நம்முடைய ‘அருஞ்சொல்’ ஊடகத்துக்கான பணிகள் 2021 ஆகஸ்ட் 22 அன்று தொடங்கின. தனிமனிதப் பாட்டுக்காக ஆப்பிரிக்கா சென்ற காந்தி, ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் அடியெடுத்து வைத்ததன் வழியாகப் பொதுவாழ்வை நோக்கித் தன் பாதையைத் திருப்பிக்கொண்ட நாள்; நேட்டா இந்திய காங்கிரஸ் தொடங்கப்பட்ட நாள்; அதுவே காந்தியால் நிர்மாணிக்கப்பட்ட முதல் பொது அமைப்பு; கூடவே, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை நாளும்கூட. காந்தியையும் தமிழையும் இணைக்கும் புள்ளியான அந்த நாளிலிருந்து நாம் பணிகளைத் தொடங்கினோம். 1921 செப்டம்பர் 22 அன்று மதுரையில் தன்னுடைய ஆடையை எளியவர்களின் அடையாளமான வேட்டி, துண்டாக மாற்றிக்கொண்டார் காந்தி. காந்தியின் மிக முக்கியமான குறியீடுகளில் ஒன்றானது அவருடைய ஆடை. தமிழ்நாட்டையும் காந்தியையும் பிணைக்கும் இந்த நிகழ்வின் நூற்றாண்டு நிறைவில் நம்முடைய இணையதளம் மக்கள் பார்வைக்கு வந்திருக்கிறது. இடைப்பட்ட ஒரு மாதத்தில் வெளியானவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றை இங்கே கொடுத்திருக்கிறோம். அவற்றில் ஒன்று இது.)

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.







பின்னூட்டம் (0)

Login / Create an account to add a comment / reply.

Be the first person to add a comment.

ஓய்வூதியக் காப்பீடுதங்கம் தென்னரசுஉஷா மேத்தாஷேக் அப்துல்லாஇளையபெருமாள் குழுதோசை!சுதந்திர தினம்காதல் எனும் சாறு பிழிந்துதவறான வழிகாட்டல்காங்கிரஸ் வானொலிஅமைதிமுஸ்லிம்நெட்வொர்க்கிங்அறநிலைத் துறைமன்னார்குடி அன்வர் கடை புரோட்டா‘குடி அரசு’ ஏடுஇந்திய வரலாறுஜி.முராரிமாவட்ட ஆட்சியர்மனைமாயாவதிஇறக்குமதிஆஆகஉதயநிதிபதிப்புத் துறைபென் ஸ்டோக்ஸ்சாதியினாற் சுட்ட வடுகவனச் சிதறல்பாலசுப்ரமணியம் முத்துசாமி அருஞ்சொல் கட்டுரைசிந்திக்கச் சொன்னவர் பெரியார்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!