கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 7 நிமிட வாசிப்பு

காஷ்மீருக்கு வேண்டும் சுயாட்சி

ப.சிதம்பரம்
19 Sep 2022, 5:00 am
0

காஷ்மீரம் தொடர்பாக 1947 முதலே இருவிதமான எதிரெதிர்க் கருத்துகள் தொடர்கின்றன; அப்போதைக்கு அப்போது இது தொடர்பான சிந்தனைகள் வெவ்வேறு மாற்றங்களை அடைந்து காஷ்மீரம் தொடர்பாக இரண்டுக்கும் மேற்பட்ட கருத்துகள் உலவுவதைப் போன்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றன. உண்மையில் இரண்டே விதமான கருத்துகள்தான் நிலவுகின்றன. ஆனால் அவை ஒன்றுக்கொன்று எதிரானவை.

அசலான சிந்தனை, காஷ்மீரின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்தது; 1947 அக்டோபர் 26இல் இந்தியாவுடன் காஷ்மீர் சமஸ்தானத்தை இணைக்க ஒப்புக்கொண்டு மகாராஜா ஹரி சிங் கையெழுத்திட்ட உடன்பாட்டிலேயே அது இடம்பெற்றிருக்கிறது. அதை இந்திய அரசமைப்புச் சட்டம் அங்கீகரித்தது; காங்கிரஸ் கட்சி அதன் பின்னால் இருந்த நோக்கத்தை அப்படியே ஏற்றது. ஆண்டுகள் செல்லச்செல்ல காங்கிரஸ் கட்சி தன்னுடைய நிலையை நீர்த்துப்போக விட்டுவிட்டாலும், ‘காஷ்மீரத்துக்கு தனி அந்தஸ்து’ என்ற மையமான கருத்தை ஒவ்வொரு தருணத்திலும் வலியுறுத்தியே வந்திருக்கிறது.

இந்தக் கருத்துக்கு எதிரான கருத்து, ஜவாஹர்லால் நேரு தலைமையிலான முதல் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஷியாமா பிரசாத் முகர்ஜியிலிருந்து தொடங்குகிறது. அவர் சார்ந்த ஆர்எஸ்எஸ் அமைப்பும் அதன் அரசியல் வாரிசுகளும் – பாஜக உள்பட – முகர்ஜியின் கருத்தையே கொண்டிருக்கின்றன. அவற்றுக்கு மேலும் பல அடுக்குகளையும் அவை ஏற்றிவிட்டன. இந்தியாவுடன் காஷ்மீரம் இணைந்த உடன்பாட்டையே நிராகரிக்கும் அளவுக்கு அதைச் சிதைத்தும் வருகின்றன.

காங்கிரஸ் நிலையில் மாற்றம் இல்லை

ஜம்மு–காஷ்மீர் மாநிலத்துக்கு அரசமைப்புச் சட்டப்படி அளித்துவந்த பிரத்யேக நிலையை நீக்கும் மிகவும் தீவிரமான எதிர்நிலையை பாஜக அரசு 2019 ஆகஸ்ட் 5இல் எடுத்தது. ஜம்மு-காஷ்மீர் என்ற மாநிலத்தையே இல்லாமலாக்கி, அதை ஜம்மு–காஷ்மீர், லடாக் என்ற இரண்டு மத்திய ஆட்சிக்குள்பட்ட நேரடிப் பகுதிகளாக பிரித்தும்விட்டது. 

ஒன்றிய அரசின் இந்த முடிவுக்கு மறுநாள், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு (காரிய கமிட்டி) அவசரக் கூட்டம் நடத்தி, இதை முற்றாக நிராகரிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது. அந்தத் தீர்மானம் இதுதான்: “ஒருதலைப்பட்சமாக, வெட்கக்கேடாக, ஜனநாயகமற்ற முறையில் அரசமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவை ஒன்றிய அரசு கைவிட்டதை காங்கிரஸ் காரிய கமிட்டி கண்டிக்கிறது; அரசமைப்புச் சட்டத்தின் சில பிரிவுகளுக்குத் தவறாகப் பொருள் கூறி இந்த நடவடிக்கையை அரசு எடுத்திருக்கிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலமும் இந்திய அரசும் செய்துகொண்ட உடன்படிக்கையை அங்கீகரிப்பதே அரசமைப்புச் சட்டத்தின் 370வது கூறு. அதைத் திருத்தும் வரையில் அதை மதித்து அமல்படுத்த வேண்டும். அதைத் திருத்துவதாக இருந்தால் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்புகளுடனும் ஆலோசனை கலக்க வேண்டும், அரசமைப்புச் சட்டத்துக்கு உள்பட்டே அதை நிறைவேற்ற வேண்டும்.” 

காங்கிரஸ் காரிய கமிட்டியின் நீண்ட நாள் மற்றும் மூத்த உறுப்பினரான குலாம் நபி ஆசாத் அந்தக் கூட்டத்தில் பங்கேற்று தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தார். 

திரும்பப் பெற முடியாத நடவடிக்கைகள்

மோடி அரசு சட்டப்படியாக எடுத்ததாக கூறிக்கொள்ளும் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கைகளையும் இங்கே நினைவுகூர்வது அவசியம்:

காஷ்மீருக்குள்ள சிறப்பு அந்தஸ்தை நீக்க அரசமைப்புச் சட்டத் திருத்தம் எதுவும் நாடாளுமன்றத்தில் மசோதாவாகக் கொண்டுவரப்படவும் இல்லை, நிறைவேற்றப்படவும் இல்லை.

அரசு 2019 ஆகஸ்ட் 5இல் அரசமைப்புச் சட்டத்தின் 370(1) பிரிவின் கீழ் ஓர் ஆணையைப் பிறப்பித்து, 1954இல் இதேபோல பிறப்பிக்கப்பட்ட ஆணையை ரத்துசெய்ததுடன், அரசமைப்புச் சட்டம் 367(4)க்கு இன்னொரு உட்பிரிவைச் சேர்த்தது (இது அந்த சட்டக்கூறுக்கு விளக்கமாகும்). அதே நாளில், அரசமைப்புச் சட்டம் 370ஐ நீக்கும் தீர்மானத்தை அரசு நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தது. அது இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது – அதுவும் அரசமைப்புச் சட்டத்தின் 370 (3)இன் பிரிவின் படியாக. அதே நாளில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டு ஒன்றியப் பிரதேசங்களாக (ஒன்றிய அரசின் ஆட்சிக்குள்பட்ட நேரடிப்பகுதிகள்) பிரிக்கும் மசோதாவை (2019) மாநிலங்களவையில் கொண்டுவந்து நிறைவேற்றியது. அதே தீர்மானம் அடுத்த நாள் மக்களவையிலும் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அரசமைப்புச் சட்டத்தின் 3வது கூறின் கீழ் இது நிறைவேற்றப்பட்டது.

குடியரசுத் தலைவர் இது தொடர்பாக அரசமைப்புச் சட்டத்தின் 370 (3)வது பிரிவின் கீழ் 2019 ஆகஸ்ட் 6இல் அறிவிக்கை வெளியிட்டார். ‘அரசமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவின் கீழ் இதுவரையில் இருந்த கூறுகள் அனைத்தும் இன்று முதல் விலக்கிக்கொள்ளப்படுகின்றன, இந்த அறிவிக்கையின் கீழ்வரும் புதிய பிரிவு மட்டுமே இனி அமலில் இருக்கும்!’ என்று அந்த அறிக்கை சொன்னது.

காங்கிரஸ் காரிய கமிட்டியில் இருந்த அனைத்து உறுப்பினர்களுமே இந்த நடவடிக்கைகள் அனைத்துமே அரசமைப்புச் சட்டத்துக்கு முரணானவை, சட்ட விரோதமானவை என்ற கருத்தையே கொண்டிருந்தனர். அந்த இரு நாள்களில் அரசு எடுத்த நடவடிக்கைகள் எதற்குமே நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினரின் ஒப்புதல் தேவைப்படவில்லை. சிறப்பு அந்தஸ்து ரத்து தொடர்பான நடவடிக்கை, அரசு ஆணை மூலமும் அறிவிக்கை மூலமும்தான் மேற்கொள்ளப்பட்டது. அதற்கான தீர்மானமும் மசோதாவும் நாடாளுமன்றத்தின் சாதாரணப் பெரும்பான்மை வலுவைக் கொண்டே நிறைவேற்றப்பட்டன.

கேள்விக்குரிய இந்த நடைமுறைகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றம் இந்த நடவடிக்கைகள் அனைத்துமோ அல்லது இவற்றில் ஏதாவது ஒன்றோ அரசமைப்புச் சட்டத்துக்கு முரணானது என்று கருதினால், ஒன்றிய அரசு எடுத்த அனைத்து நடவடிக்கைகளுமே திரும்பப் பெறப்பட வேண்டியவை என்பது இங்கே நினைவில் கொள்ளப்பட வேண்டியது ஆகும். அல்லது மோடி அரசுக்குப் பதிலாக வேறொரு அரசு ஆட்சிக்கு வந்தால், காஷ்மீரத்தின் தனி அந்தஸ்தை ரத்துசெய்த இந்த நடவடிக்கைகள் அனைத்தும் அல்லது ஒரு சில, திரும்பப் பெறப்படலாம்.

குலாம் நபி ஆசாதுக்கு இது அனைத்துமே தெரியும். அப்படி இருக்க ஏன் அவர், “அரசமைப்புச் சட்டம் 370 மீண்டும் அமலுக்கு வரும் என்று எந்த அரசியல் கட்சியாவது மக்களிடம் கூறினால் அது பொய்யான வாக்குறுதியாகத்தான் இருக்க முடியும்” என்று கூறுகிறார்?

விடுதலை அல்ல சுயாட்சி

ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு மையப் பிரச்சினை அரசமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவு அல்ல – நீக்கப்பட்ட சிறப்பு மாநில அந்தஸ்துதான். 2019 ஆகஸ்ட்டில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுவிட்டாலும்கூட, காஷ்மீரப் பள்ளத்தாக்கின் பெரும்பாலான மக்களும் (ஜம்மு – லடாக்கிலும் கணிசமானவர்களும்) தங்களுடைய மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தொடர வேண்டும் என்றே வலியுறுத்துகின்றனர், அது நிலைநாட்டப்படாதா என்றே ஏங்குகின்றனர். சிறப்பு அந்தஸ்து என்பது இந்தியக் குடியரசின் நிரந்தர உறுப்பினராக மாநிலத்தை வைத்திருக்கும் அதேவேளையில், அதற்கு சுயாட்சியை அளித்துவந்தது.

காஷ்மீர் மக்களுடன் பலமுறை நெருங்கிப் பழகியவன் என்ற முறையில் சொல்கிறேன், அவர்கள் இந்தியாவிலிருந்து பிரிந்துபோக வேண்டும் என்றோ, சுதந்திரம் வேண்டும் என்றோ கோரவில்லை. அதிக அளவுக்கு சுயாட்சி வேண்டும் என்றே கேட்கின்றனர். இது தொடர்பாக முன்பு பிரதமர்களாகப் பதவி வகித்த பி.வி.நரசிம்ம ராவ் (சுயாட்சிக்கு வானமே எல்லை), அடல் பிஹாரி வாஜ்பாய் (இன்சானியாத், ஜமுரியாத், காஷ்மீரியாத்) ஆகிய வாக்குறுதிகளைத் தொடர்ந்து காப்பாற்ற வேண்டும் என்கின்றனர்.

மிகப் பெரிய கூட்டரசில் இடம்பெற்றுள்ள மாநிலம் அதிகச் செயல்பாட்டு சுதந்திரம் வேண்டும் என்று கேட்பது வழக்கத்துக்கு மாறானது அல்ல. இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களுடன் சுயாட்சி தரப்பட வேண்டும் என்றே இந்திய அரசு இலங்கையிடம் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மாநாட்டுக் கூட்டத்தில்கூட சமீபத்தில் - 2022 ஆகஸ்ட் 12இல் - இந்தியா இக்கருத்தை வலியுறுத்தியது. ஒன்றிய அரசுடன் சமரசப் பேச்சு நடத்தும் நாகாலாந்து ஆயுதக் குழுக்களும் இதே கோரிக்கையைத்தான் முன்வைக்கின்றன. எந்த அளவுக்கு சுயாட்சி வழங்குவது என்பதில் கருத்து வேறுபாடு நிலவுவதால், இந்தப் பேச்சுகள் தேக்கநிலையில் உள்ளன.

காங்கிரஸ் காரிய கமிட்டியின் உறுப்பினரும் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ஆசாத், காஷ்மீரம் தொடர்பான மூல சிந்தனைக்கு ஆதரவாகத்தான் குரல் கொடுத்துவந்திருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அந்தஸ்தை இழந்துவிட்ட ஆசாத், காஷ்மீரம் தொடர்பான ‘எதிர்க் கருத்தை’ இன்று தழுவியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

3


அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

பத்ம விருதுகளை எவ்வளவு காலத்திற்குப் புனிதப் போர்வதீர்ப்புமீண்டும் மீட்சிவினைச்சொல்மணிப்பூர்மேற்கு வங்க காங்கிரஸ்தமிழால் ஏன் முடியாது?பனியாக்கள்விபி குணசேகரன்பர்ஸாஹண்டே - சமஸ் பேட்டிபெரியார் சிலைகுர்வாதேர்தல் பிரச்சாரம்தேர்தல் முடிவுகள்வெறுப்புத் துறப்புபடைப்புச் சுதந்திரம்ஜனதா தளம்வகுப்பறைக்குள் வகுப்புவாதம்திட்ட அனுமதிஆயிரம் ஆண்டுஇந்தியப் பிரிவினைவாழ்விடம்பிராந்தியக் கட்சிகள்அஜ்மீர்உலக சினிமாமிஸோகூட்டாட்சிவித்யாசங்கர் ஸ்தபதிதிமுக அரசு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!