முக்கியத்துவம் வாய்ந்த 2024 மக்களவைத் தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாகப் பார்க்கப்படும், தெலங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிஸோரம் ஐந்து மாநிலத் தேர்தல்களின் முக்கிய நாயகர்களைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது ‘அருஞ்சொல்’. தினம் ஒரு தலைவரைப் பற்றி அடுத்த ஒரு வாரத்துக்கு எழுதுகிறார் மூத்த பத்திரிகையாளர் வ.ரங்காசாரி.
ராஜஸ்தானின் கால் நூற்றாண்டு கால இரு துருவ அரசியலில், ஒரு துருவம் காங்கிரஸின் அசோக் கெலாட் என்றால், மற்றொரு துருவம் பாஜகவின் வசுந்தரா ராஜே சிந்தியா.
மத்திய பிரதேசத்தின் குவாலியர் அரசக் குடும்பத்து வாரிசு வசுந்தரா. பிறந்தது வளர்ந்தது எல்லாம் மஹாராஷ்டிரா. திருமணமாகி வந்த இடம் ராஜஸ்தான். தோல்பூர் அரசக் குடும்பத்து வாரிசான ராணா ஹேமந்த் சிங்கோடு அவருடைய மணவுறவு ஓராண்டு மட்டுமே நீடித்தது; கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார். ஆனால், ராஜஸ்தான் அரசியல் வசுந்தராவை அணைத்துக்கொண்டுவிட்டது.
குவாலியர் குடும்பச் செல்வாக்கு
இரண்டு முறை முதல்வராகப் பதவி வகித்திருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒன்றிய அரசிலும் அமைச்சராக இருந்திருக்கிறார். பம்பாய் நகரில் 1953 மார்ச் 8ஆம் நாள் பிறந்தார்.
சுதந்திர இந்தியாவின் ஒரு பகுதியாக இணைத்துக்கொண்ட சமஸ்தானங்களில் பெரிய, செல்வம் மிக்க சமஸ்தானங்களில் ஒன்று, குவாலியர். அதன் கடைசி மன்னர் ஜீவாஜிராவ் சிந்தியா - விஜய ராஜே சிந்தியா தம்பதிக்கு மகளாகப் பிறந்தவர் வசுந்தரா. பழமையும் நவீனமும் இணைந்த குடும்பம் இது.
சுதந்திரத்துக்குப் பிறகும் குவாலியர் பிராந்தியத்தில் சிந்தியா குடும்பத்துக்கு மக்கள் செல்வாக்கு இருந்தது. 1957இல் வசுந்தராவின் தாய் விஜய ராஜே சிந்தியா மக்களவைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்றார். இதற்குப் பிறகு காங்கிரஸில் இணைந்தார். சுதந்திரா கட்சி சென்றார். இன்றைய பாஜகவின் தாயான ஜன சங்கத்தில் இணைந்தார். பாஜக புதிய அவதாரம் எடுத்தபோது அதன் முக்கியமான தலைவர்களில் விஜய ராஜேவும் ஒருவராக இருந்தார்.
இவ்வளவுக்கும் மத்தியில் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுக்கொண்டே இருந்தார் விஜய ராஜே. 'குவாலியர் ராஜ மாதா' என்றே அவர் அழைக்கப்பட்டார். காங்கிரஸின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகவும் ஒன்றிய அரசில் அமைச்சராகவும் இருந்த மாதவராவ் சிந்தியா, விஜய ராஜ சிந்தியாவின் சொந்த அண்ணன்.
தம் மகளுக்கு நவீனக் கல்வி அவசியம் என்று உணர்ந்த சிந்தியா தம்பதி தமிழ்நாட்டின் கொடைக்கானலில் உள்ள பிரசன்டேஷன் கான்வென்ட்டில் வசுந்தராவைப் படிக்க வைத்தார்கள். கல்லூரிக் கல்வியை பம்பாய் சோபியா மகளிர் கல்லூரியில் படித்தார் வசுந்தரா. அடிப்படையில் பொருளாதாரம், அரசியல் மாணவி அவர். வசுந்தராவின் அரசியல் ஆர்வத்தை விளக்க வேண்டியது இல்லை.
புகுந்த வீட்டின் ஆதரவு
தோல்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த ராணா ஹேமந்த் சிங்கை 17.11.1972இல் திருமணம் செய்துகொண்டார் வசுந்தரா. அடுத்த ஆண்டே மகன் துஷ்யந்த் சிங் பிறந்தார். விரைவில் கருத்து வேறுபாடு காரணமாக மணவிலக்கு பெற்றார்.
மத்திய பிரதேசத்தின் குவாலியரிலிருந்து ராஜஸ்தான் மாநிலத்துப் புகுந்த வீட்டில் குடியேறிய வசுந்தரா, மணவாழ்வு முறிந்த பிறகும் அதே மாநிலத்தில் தொடர்ந்து வசிக்க முடிவெடுத்தார். மணவுறவு முறிந்தாலும் 'அரசக் குடும்ப மருமகள்' எனும் பிம்பம் அவர் மீது விழுந்ததும், மக்களுடைய அன்பு அவருக்குக் கிடைத்ததும் முக்கியமான காரணம்.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்…  இது உங்கள் ஜனநாயகக் கடமை!
					
தொடர் வெற்றி
வசுந்தரா, 1984இல் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரானார். நல்ல பேச்சாற்றாலும், நவீன பாணிச் செயல்பாடும், துணிச்சலான அணுகுமுறையும் ராஜஸ்தான் பெண்கள் இடையே வசுந்தராவை வேகமாகக் கொண்டுசென்றன. ராஜஸ்தான் போன்ற ஓர் ஆணாதிக்க அரசியல் சமூகத்தில் அரிதான அரசியல் பெண் ஆளுமையாகப் பலர் அவரைப் பார்த்தார்கள்.
ராஜஸ்தானின் தோல்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக 1985இல் போட்டியிட்ட வசுந்தரா வெற்றிபெற்று 1990 வரையில் அப்பதவியில் இருந்தார். பிறகு 2003-08, 2008-13, 2013-18, 2018-2023 என்று தொடர்ந்து ஜல்ராபடான் பேரவைத் தொகுதியில் நின்று வென்றார். இதனூடாகவே 1989-91இல் ஜலாவர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு 1991-96, 1996-98, 1998-99, 1999-2003 ஆகிய ஆண்டுகளில் அதே தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்றம், நாடாளுமன்றம் எதுவாயினும் கவனிக்கத்தக்கவராகச் செயல்பட்டார்.
முதல் பெண் முதல்வர்
வாஜ்பாயின் அரசுகளில் 1998-99இல் வெளியுறவுத் துறையில் இணை அமைச்சராகவும் 1999 முதல் 2001 வரையில் சிறுதொழில்கள், ஊரகத் தொழில்கள் துறையில் தனிப் பொறுப்பு இணை அமைச்சராவும் பணியாற்றினார். கட்சிப் பொறுப்புக்கு அனுப்பப்பட்டபோது 2002 முதல் 2003 வரை ராஜஸ்தான் மாநில பாஜக தலைவராக இருந்தார். 2003 சட்டமன்றத் தேர்தலில் பாஜக முகமாக மாநிலம் முழுவதும் பயணித்தார். தேர்தலில் பாஜக வென்றபோது மாநிலத்தின் முதல் பெண் முதல்வராக ஆட்சியில் அமர்ந்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் சாலை வசதி, குடிநீர், மின்னுற்பத்தி விநியோகம், பாசனக் கட்டமைப்புகள் உருவாக்கத்தில் கவனம் செலுத்திய அரசுகளில் ஒன்று என அவருடைய முதல் ஆட்சியைச் சொல்லலாம். ஆனால், அவருடைய ஆட்சியில் மாநிலத்தின் முக்கியமான சமூகங்களான குர்ஜார், மீனா சமுகங்களில் உருவான அமைதியின்மையை சரியான வகையில் அவர் எதிர்கொள்ளவில்லை. 2008 தேர்தலில் ஆட்சியை அவர் இழந்தார்.
ஆயினும், எதிர்க்கட்சியாக துடிப்பாக பாஜக செயல்பட்டதன் விளைவாகவும், தேசிய அளவில் மன்மோகன் சிங் அரசு பெற்றிருந்த அதிருப்தியும் இணைந்து ராஜஸ்தானில் 2013இல் மீண்டும் ஆட்சியில் அமர்ந்தார் வசுந்தரா. இந்த முறை எவராலும் எளிதில் நெருங்க முடியாத முதல்வராகிவிட்டார். நெருக்கமான விசுவாசிகளுக்கு மட்டுமே அவரைப் பார்க்க முடிந்தது. மாநில அமைச்சர்களும் கட்சித் தொண்டர்களும்கூட இதனால் அதிருப்தி அடைந்தார்கள். அது பிறகு 2018 சட்டமன்றத் தேர்தல் முடிவில் பெரியளவில் எதிரொலித்தது. ஆட்சியை இழந்தார்.
புறக்கணிக்கும் கட்சி மேலிடம்
ராஜஸ்தானில் இந்த முறை அவரை முதல்வர் வேட்பாளராக பாஜக அறிவிக்கவில்லை. முதலில் அவருக்குப் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்றுகூட கட்சி வட்டாரங்கள் கருதின. ஆனால், அவருக்கும் ஆதரவாளர்களுக்கும் போட்டி வாய்ப்பை மேலிடம் வழங்கியது. அதேசமயம், பிரச்சாரத்தில் அவர் வெளிப்படையாக ஓரங்கட்டப்பட்டார். சிக்கல் என்னவென்றால், வசுந்தரா ராஜே அளவுக்குச் செல்வாக்கு மிக்க தலைவர் பாஜகவில் இன்னும் ராஜஸ்தானில் உருவெடுக்கவில்லை.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாறுவது ராஜஸ்தானில் வழக்கமாக இருப்பதால் இந்த முறை தங்களுக்கே வாய்ப்பு கிடைக்கும் என்று பாஜக நம்புகிறது. ஆனால், வெற்றி வாய்ப்பை இழக்க வசுந்தராவும் ஒரு காரணமாகிவிடுவாரோ என்ற அச்சமும் அதனிடமும் உள்ளது. முழுக்க மோடி செல்வாக்கை நம்பியே இம்முறை பாஜக களத்தில் நிற்கிறது.
எப்படியாக இருந்தாலும், இந்தத் தேர்தலோடு கட்சி தன்னை ஒதுக்கிவிடும் என்று வசுந்தரா உணர்ந்திருக்கிறார். வசுந்தராவின் ஒரே மகன் துஷ்யந்த் பாஜகவில் இருப்பதோடு மக்களவை உறுப்பினராகவும் உள்ளார். வசுந்தராவுக்கு வயதும் 70 ஆகிரது. ஆகையால், கட்சி முடிவை ஏற்று ஒதுங்குவாரா அல்லது அவரது ஆதரவாளர்கள் தரும் அழுத்தத்தில் வேறு முடிவுகளை எடுப்பாரா என்பது இந்தத் தேர்தலில் மக்களால் பேசப்படும் இன்னொரு விஷயம். மோடி-ஷாவுக்கு எப்படியும் பதிலடி கொடுப்பார் என்கிறார்கள்.
வசுந்தரா 2024 மக்களவைத் தேர்தல் சந்தர்ப்பத்துக்குக் காத்திருக்கிறார்!
தொடர்புடைய கட்டுரைகள்
மாநிலத் தலைகள்: சிவராஜ் சிங் சௌஹான்
மாநிலத் தலைகள்: ரேவந்த் ரெட்டி
மாநிலத் தலைகள்: கே.சந்திரசேகர ராவ்
மாநிலத் தலைகள்: கமல்நாத்
மாநிலத் தலைகள்: அசோக் கெலாட்

3






பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.

 வ.ரங்காசாரி
வ.ரங்காசாரி 63801 53325
 63801 53325 ப.சிதம்பரம்
ப.சிதம்பரம் பி.ஆர்.அம்பேத்கர்
பி.ஆர்.அம்பேத்கர் சி.என்.அண்ணாதுரை
சி.என்.அண்ணாதுரை ஞான. அலாய்சியஸ்
ஞான. அலாய்சியஸ் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சமஸ் | Samas
சமஸ் | Samas 
			
							
Be the first person to add a comment.