கட்டுரை 7 நிமிட வாசிப்பு

இந்த வருஷம் தாத்தா தந்த பரிசுகள் என்ன?

ப.சிதம்பரம்
27 Dec 2021, 5:00 am
2

ண்டின் இறுதியான இந்நேரத்தில்தான் பரிசுகளுடன் கிறிஸ்துமஸ் தாத்தா (சான்டா கிளாஸ்) வீடுகளுக்கு வருவதாக ஒரு நம்பிக்கை.  பலருக்கு அவர் நிஜ வாழ்வில் ஏமாற்றத்தை அளித்தாலும், இந்த நம்பிக்கை மட்டும் விடாமல் தொடர்கிறது. இந்தக் கதை குழந்தைகளுக்கு உற்சாகம் ஊட்டுவதற்காக!

என்னுடைய உடலமைப்பு நிச்சயம் ‘சான்டா கிளாஸ்’போல இல்லை. இறுதியை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த ஆண்டு முழுவதும் இந்திய வீடுகளுக்குத் தொடர்ந்து வந்துகொண்டிருப்பது யார்? அவர் பலரால் விரும்பப்படாதவர். அவர் எவருக்கும் விருப்பமில்லாத பரிசுகளையே கொண்டுவந்தார். அவற்றை எண்ணுங்கள்:

புதிய உச்சம் தொடப்பட்டது

இல்லத்தவர்களுக்கு: சில்லறைப் பணவீக்க விகிதம் 4.91 சதவீதம். அதில் எரிபொருள்களுக்கான விலையுயர்வு மட்டும் 13.4 சதவீதம்.  சான்டாவின் யோசனை: அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி கிடைக்கும் வேலையைத் தேடிக்கொள்ளுங்கள், முதலாளியே மின்சாரக் கட்டணத்தையும் தண்ணீர் செலவையும் ஏற்றுக்கொள்ளட்டும்.

விவசாயிகளுக்கு: நிலங்களைப் பெருநிறுவனங்களுக்குக் குத்தகைக்கு விடும் சுதந்திரம், பெருநிறுவனங்களிடமிருந்து கடன் வாங்கும் சுதந்திரம், விளைபொருள்களை எங்கு வேண்டுமானாலும் பெருநிறுவனங்களுக்கு விற்கும் சுதந்திரம், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களாக மாற சுதந்திரம். இந்த தாராளமான பரிசுகளை வாங்க விவசாயிகள் மறுத்துவிட்டார்கள் என்பது தனிக் கதை.

அனைத்து உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோர்களுக்கும்: மொத்த விலைக் குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்க விகிதம் 14.23 சதவீதம். கிட்டத்தட்ட எல்லாப் பொருள்களின் விலைகளிலும் உயர்வு. ஏதாவதொரு பண்டத்தின் அல்லது சேவையின் விலை குறைந்தால், நீங்கள் அதிருஷ்டசாலி, ஏனென்றால் வேறு ஐந்து பொருள்களின் விலை அதிகரித்திருக்கும். அதனால்தான் மொத்த விலைக் குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்க விகிதம் கடந்த 12 ஆண்டுகளிலேயே இப்போதுதான் அதிகமாக இருக்கிறது.

இளைஞர்களுக்கும் இளம் பெண்களுக்கும்: வேலையில்லாதோர் விகிதம் 7.48 சதவீதமாக இருக்கிறது. அதில் நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை 9.09 சதவிகிதம் (சிஎம்ஐஇ).

முதுகலைப் பட்டதாரிகளுக்கும் முனைவர் பட்ட அறிஞர்களுக்கும்: மத்திய பல்கலைக்கழகங்கள், இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் (ஐஐடி),  இந்திய நிர்வாகவியல் கழகங்கள் (ஐஐஎம்கள்) ஆகியவற்றில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலி. கற்பித்தலும் அதன் பலனால் ஏற்படும் விளைவுகளைப் பெறுதலும்தான் நோக்கம். ஆசிரியர்கள் இல்லாமலேயே கற்பிக்கும் வழியை அவர்கள் கண்டுபிடித்திருப்பது மிகவும் அதிருஷ்டவசமானது.

புதிய இடஒதுக்கீடு

பட்டியல் இனத்தவர், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு: பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலி. அவற்றில் பட்டியல் இனத்தவர், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்கள் 4,216. ஐயோ, பீதியடையாதீர்கள், இடஒதுக்கீடு கொள்கை நீடிக்கிறது. உங்களுடைய நன்மைக்காக அந்தக் கொள்கையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. வேலைவாய்ப்புகளில் மட்டும் இட ஒதுக்கீடு கிடையாது, இனி காலியிடங்களிலும் இடஒதுக்கீடு முறை கடைப்பிடிக்கப்படும். அரசு மேலும் பல காலியிடங்களை உருவாக்கி அவற்றைப் பட்டியல் இனத்தவர், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காகவே காலியாக வைத்திருக்கும். இடஒதுக்கீட்டுக் கொள்கை முழு மூச்சுடன் கடைப்பிடிக்கப்படும். இனி விண்ணப்பங்களை வேலைக்காக அனுப்புவோர் தங்களுடைய சுயக் குறிப்புரைகளில் காலியிடங்களில் தான் நியமிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுக்கொள்ளலாம்.

கடன் தவணை செலுத்துவோர்களுக்கு: மாதாந்திர தவணைக் கடன்களுக்கு வட்டி உயர்த்தப்படுகிறது. 2020-21-ல் வங்கிகள் ரூ.2,02,783 கோடி வாராக் கடன்களைத் தள்ளுபடிசெய்துவிட்டன. கடன் வாங்குவோர் வங்கிகளுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் - வங்கிகள் இன்னும் கடன்களை வழங்குவதற்காக.

ஏழைகளுக்காக: இதோ வரிசை. உங்களுடைய வாய்ப்புக்காக தயவுசெய்து காத்திருங்கள் (உங்களுக்கு வாய்ப்பு வரவே வராது). அரசுத்துறை வங்கிகள் ஏழைப் பெருநிறுவனங்களுக்கு உதவுவதில் தீவிரமாக இருக்கின்றன. 2020-21-ல் 13 பெருநிறுவனங்கள் அரசுத் துறை வங்கிகளிடம் வைத்த கடன் நிலுவை ரூ.4,86,800 கோடிகள். வங்கிகள் இந்தக் கடன் நிலுவையில் ரூ.1,61,820 கோடி வசூலித்து பாக்கியில்லாமல் தீர்த்துக்கொண்டன. இந்திய மக்களின் நலனுக்காக ரூ.2,84,980 கோடி கடனை வசூலிக்காமல் ‘வஜா’ செய்வதன் மூலம் இழப்பை ஏற்றுக்கொள்கிறோம் என்பதில் அரசுத் துறை வங்கிகளுக்குப் பெருமகிழ்ச்சி (ஆமாம், அந்த இந்திய மக்கள் அந்த 13 பெரு நிறுவனங்கள்தான்). அரசுத் துறை வங்கிகள் மேலும் தங்கள் கடமையைச் செய்யத் தயாராக இருக்கின்றன – நீங்கள் மட்டும் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்த முடியாத பெருநிறுவனமாக இருக்கும்பட்சத்தில்.

பொருளாதார நிபுணர்கள், பொருளாதார மாணவர்களுக்கு: ஆங்கில எழுத்து V வடிவிலான பொருளாதார மீட்சி - அப்படித்தான் அரசு கூறிக் கொள்கிறது. முதன்மைப் பொருளாதார ஆலோசகர்பேரில் ஆணையாக அரசு இதைத் தெரிவிக்கிறது, அதேசமயம் அவர் அரசுப் பணியிலிருந்து விலகிவிட்டார். இந்தியத் தொழில் நிறுவனப் பள்ளிகளில் தான் கற்ற பெருங்கல்வியுடன் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் இந்திய அரசின் ஆலோசகரானார். இந்திய அரசிடம் தான் படித்த ‘அபாடங்களுடன்’ மீண்டும் இந்திய நிர்வாகவியல் பள்ளிக்குத் திரும்புவார். ஐஎம்எஃப்பின் துணை நிர்வாக இயக்குநர் பதவிக்குத் தேர்வுசெய்யப்பட்டுள்ள டாக்டர் கீதா கோபிநாத் கடந்த வாரம் தில்லியில் தங்கியிருந்தவர், இந்தியப் பொருளாதார மீட்சி ஆங்கில எழுத்து K வடிவிலானது என்று கூறியிருக்கிறார். ஐயோ, வேதனைப்படாதீர்கள் இந்த இரண்டு எழுத்துகளைத் தவிர ஆங்கில எழுத்துகளில் இன்னமும் 24 எஞ்சியிருக்கின்றன. கடந்த கால அனுபவ அடிப்படையில், எப்போதும் எதிர்காலம் நல்லதாகவே இருக்கும் என்று நம்புவோர் ஆங்கில எழுத்து I என்பதைத் தேர்வுசெய்யலாம், எதையும் நம்ப மறுப்போர் O  எழுத்தைத் தேர்வுசெய்யக்கூடும். பொருளாதார மேதைகள் இந்த மீட்சி ஆங்கில எழுத்து M என்றுகூட வாதிடலாம்.

சுதந்திரத்துக்கு சாட்சிகள்

ஊடக சுதந்திரத்துக்கு: உலக அளவில் பத்திரிகைச் சுதந்திர குறியீட்டெண் அடிப்படையில் இந்தியாவுக்கு மிகப் பெரிய எண்ணுள்ள இடம் கிடைத்திருக்கிறது. (180 நாடுகளில் 142-வது இடம், கடந்த ஆண்டு 140-ம் இடம்). ‘எல்லைகள் இல்லாத நிருபர்கள் சங்கம்’ என்ற அமைப்பின் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இந்தியாவின் செய்தி-ஒலிபரப்புத் துறை அமைச்சர் சொல்வதில் உண்மை இருக்கலாம், ஏனென்றால் பத்திரிகைச் சுதந்திரம் குறித்து மேலதிகமான விவரங்கள் அவருக்குத் தெரிந்திருக்கக் கூடும். இந்தியாவில் ‘உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியும் நிருபர்கள்’ அமைப்பு - அது அச்சு அல்லது மின்னணு ஊடகமாக இருக்கலாம், ‘கோலி மாரோ’, ‘ஹரா வைரஸ்’ போன்ற முழக்கங்களுடன் இந்தியாவில் பத்திரிகைச் சுதந்திரம் உயிர்ப்புடனும் உதைப்புடனும் நன்றாகவே இருக்கிறது எனலாம். பத்திரிகைச் சுதந்திரம் என்றால் என்ன என்பதற்குத் தெளிவான விளக்கங்கள் இல்லை என்றும் அமைச்சர் கூறியிருக்கிறார். பின்வரும் பத்திரிகையாளர்களை அழைத்து பத்திரிகைச் சுதந்திரம் என்றால் என்ன என்று வரையறுக்க வேண்டும் என்று சான்டா கிளாஸ் பரிந்துரைக்கிறார்: ராஜ்தீப் சர்தேசாய், பர்கா தத், கரண் தாப்பர், சாகரிகா கோஸ், பரஞ்ஜெய குஹா, தாகுர்தா, ராகவ் பால், பாபி கோஷ், புண்ய பிரசூன் வாஜ்பாயி, கிருஷ்ண பிரசாத், ரூபின், பிரணாய் ராய் மற்றும் சுதீர் அகர்வால்.

அனைத்து மக்களுக்கும்: ஊட்டச்சத்துக் குறைவு, குழந்தைகள் வயதுக்கேற்ற உயரம், உயரத்துக்கேற்ற எடை, சிசு மரணம் ஆகியவற்றை உறுதி செய்யும் சுகாதார - நலக் கொள்கைகள் தொடரும். உலக பட்டினி குறியீட்டெண்ணில் இந்தியாவுக்கு 116-ல் 101-வது இடம் கிடைத்திருக்கிறது. இதன் உப விளைவாக, தேசபக்தியுள்ள தம்பதியர் கருத்தரிப்பு விகிதத்தை தேசிய சராசரியைவிட சரித்து 2.0 ஆகக் குறைத்துவிட்டார்கள். 

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி


2

பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   2 years ago

வராக்கடன் அதிகரிப்புக்கு காரணம் மோசமான பொருளாதார நிலை. மோசமான நிலைக்கு காரணம் தவறான பொருளாதார கொள்கைகள். அதனால் வராக்கடன் அதிகரிப்புக்கு காரணம் பாசக தான். எல்லா தொழிலதிபர்களும் நிரவ் மோடிகள் அல்ல.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   2 years ago

இடுக்கண் வருங்கால் நகுக...

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

வாக்காளர்கள்hindu samasசூரிய ஒளி மின்சாரம்தேர்தல் முடிவுபின்லாந்து கல்வித் துறையின் வரலாற்றுப் பின்னணிநிதியாண்டுநியுயார்க் டைம்ஸ் அருஞ்சொல்விழுப்புரம்தனிமனித வழிபாட்டால் தீமைதான் விளையும்கொல்கத்தாஅஜித் சிங்காஷ்மீர்: தேர்தல் அல்லதாமஸ் பிராங்கோமுதுகு வலிதாழ்வுணர்ச்சிகாது இரைச்சல்திராவிட அரசியல்மீண்டும் மோடி: மக்களிடையே அச்சம்க்ளூட்டென்ரூர்க்கி ஐஐடிதொழிற்சங்கங்கள்தை முதல் நாள்எப்படி தப்பிப் பிழைக்கிறது ஜனநாயகம்!சமஸ் ஜெயமோகன்பொருளாதாரக் கொள்கை மறுசீரமைப்புக்கு இதுவே நேரம்மதச்சார்பற்ற இந்தியாவில்குலசேகரபட்டினம்மாநிலத் தலைகள்: சிவராஜ் சிங் சௌஹான்உண்மையைச் சொல்வதற்கான நேரம்காவிரி நதிநீர்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!