ஆரோக்கியம், வரும் முன் காக்க 6 நிமிட வாசிப்பு

எகிறும் உடல் எடை : என்ன காரணம்?

கு.கணேசன்
26 Dec 2021, 5:00 am
3

நேத்ரா பிளஸ் டூ மாணவி. "இரவில் அதிக நேரம் படிக்கமுடியவில்லை; அசதியாக உள்ளது; சீக்கிரமே தூக்கம் வந்துவிடுகிறது" என்று என்னிடம் சிகிச்சைக்கு வந்தாள். வழக்கமான பரிசோதனைகள் எல்லாமே சரியாக இருந்தன. உடல் எடை மட்டும் அவள் வயதுக்கு அதிகம். இதுதான் அவள் பிரச்னைக்கு அடிப்படை. இதை நான் சொன்னபோது அவள் நம்பவில்லை.

‘நான் குறைவாகத்தான் சாப்பிடுகிறேன். எப்படி எனக்கு உடல் எடை கூடியது?’ என்று எதிர் கேள்வி கேட்டாள். அவள் சாப்பிடும் தினசரி உணவுகளைப் பட்டியல் போடச் சொன்னேன். அவள் சொன்னதுபோல் அரிசிச் சாப்பாடு குறைவுதான். ஆனால், வாரம் இரண்டு நாள் பிஸ்ஸாவும், பர்கரும் இடம் பெற்றிருந்தன. அடிக்கடி ஆம்லேட் சாப்பிடுகிறாள். சிப்ஸ், பாப்கார்ன், சமோசா, கிரீம் கேக் போன்ற நொறுக்குத்தீனிகள் இல்லாத நாளே இல்லை.

நேத்ராவின் உடல் பருமனுக்கு இந்த உணவுகள்தான் காரணம் என்றேன்.

இன்றைய குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும்கூட அவர்கள் சாப்பிடும் நொறுக்குத் தீனிகளைக் கணக்கில் எடுத்துக்கொள்வதே இல்லை. காரணம், அவைதான் உடல் பருமனுக்கு அடித்தளம் போடும் என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. நம் ஆரோக்கியத்துக்கு வேட்டு வைப்பதில் முன்னிலை வகிப்பது இந்த உடல் பருமன்தான்.

இன்றைய  இயந்திரகதியிலான வாழ்க்கைச் சூழலில் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, உழைக்கும் வயதில் உள்ளவர்களுக்கும் உடல் உழைப்பு குறைந்துவிட்டது. நம் உணவுக் கலாச்சாரமும் மாறிவிட்டது. ஆரோக்கியமான இந்தியப் பாரம்பரிய உணவுமுறையை மறந்துவிட்டோம். துரித உணவுக் கலாச்சாரத்துக்கு மாறிவிட்டோம். பதப்படுத்தப்பட்ட உணவுகள், செயற்கைநிற உணவுகள், ரெடிமேட் உணவுகள் என்று மேற்கத்திய உணவுகளுக்கு மயங்கிவிட்டோம். இவற்றின் விளைவால், இளம் வயதிலேயே உடல் பருமன், சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய், இதய நோய், பக்கவாதம் என்று நோய்கள் வந்து அவதிப்படுகிறோம்.

வறுமை, பசி, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள நம் நாடுதான் சர்க்கரை நோய்க்கும் தலைநகரமாக உள்ளது. இதற்கு உடல் பருமன் ஒரு முக்கியக் காரணம் என்கிறது புள்ளிவிவரம். உலக சுகாதார நிறுவனம் 2007-ம் ஆண்டு எடுத்த புள்ளிவிவரப்படி இந்தியாவில் 4 கோடிப் பேருக்கு உடல் பருமன் இருக்கிறது. இந்த எண்ணிக்கை 2030-ல் இரண்டு மடங்காக அதிகரித்துவிடும் என்று அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.

எது உடல் பருமன்?

ஒருவரின் உடல் எடை சரியாக இருக்கிறதா, இல்லையா என்று சர்டிஃபிகேட் தருவது 'பாடி மாஸ் இன்டெக்ஸ்' ( Body Mass Index - BMI ). இதை எப்படித் தெரிந்துகொள்வது ? உங்கள் எடையை கிலோகிராமில் தெரிந்துகொள்ளுங்கள். உயரத்தை மீட்டரில் அளந்து கொள்ளுங்கள். உயரத்தின் அளவை அதே அளவால் பெருக்கிக் கொள்ளுங்கள். உடல் எடையை இந்த அளவால் வகுத்துக் கிடைக்கும் விடை,

 உங்கள் பி.எம்.ஐ =  உடல் எடை கிலோ கிராமில் / உயரம் x உயரம் மீட்டரில்.

 இது 18.5 க்குக் கீழே இருந்தால், உடல் எடை குறைவு (Under weight). அல்லது ஊட்டச்சத்துக் குறைவு என்று அர்த்த்தம். 18.5 முதல் 23.9க்குள் இருந்தால், சரியான உடல் எடை (Normal weight).             24 – 29.9 அதிக உடல் எடை ( Over weight ). 30க்கு மேல் என்றால் உடல் பருமன் (Obesity). இது 40ஐக் கடந்துவிட்டால், ஆபத்தான உடல் பருமன் என்று பொருள். இது இந்தியர்களுக்கான பி.எம்.ஐ. அளவு.

 இடுப்பின் அளவு முக்கியம்!

ஆண்களுக்குச் சரியான இடுப்புச் சுற்றளவு 88 செ.மீ. பெண்களுக்கு இந்த அளவு 80 செ.மீ. இந்த அளவுக்கு மேல் அதிகமாக இருப்பவர்களையும் உடல் பருமன் உள்ளவர்களாகவே கருத வேண்டும். 

நீங்கள் ஆப்பிளா? பேரிக்காயா?

இந்தியர்கள் பலருக்கும் உடல் எடை சரியாக இருந்தாலும், தொந்தி இருக்கும். இப்படித் தொந்தி இருப்பதையும் உடல் பருமன் என்றுதான் கூறுகிறார்கள். வயிற்றுப்பகுதியில் சேரும் கொழுப்பை 'ஆப்பிள் மாடல்’ என்றும், இடுப்பிலும் பிட்டத்திலும் கொழுப்பு சேருவதை 'பேரிக்காய் மாடல்’ என்றும் கூறுகிறார்கள். இரண்டுமே மோசம்தான் என்றாலும், ஆப்பிள் மாடல் உள்ளவர்களுக்கு இதயநோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால், அவர்கள்தான் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

 உடல் பருமனுக்குக் காரணங்கள்

 உடல் எடை அதிகரிப்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. இங்கே முக்கியமானவை மட்டும்.

1.   ஆரோக்கியமற்ற உணவுமுறை: அதிகக் கொழுப்பு உள்ள உணவுகளைச் சாப்பிடுவது. உதாரணமாக, எண்ணெயில் வறுத்த, பொரித்த இறைச்சி உணவுகள், முட்டை, தயிர், நெய், வெண்ணெய், இனிப்புகள், நொறுக்குத் தின்பண்டங்கள் போன்றவற்றை அதிகமாகச் சாப்பிடுவது.

2.   இந்தியர்களின் தினசரி சராசரி 'பேசல் மெட்டபாலிக் ரேட்’ ( Basal Metabolic Rate – BMR ) என்பது 1800 கலோரி. ஆனால், சராசரியாக இந்தியர்கள் சாப்பிடும் தினசரி உணவில் 3000 கலோரி உள்ளது.

3.   உடல் உழைப்பு குறைவது: உடலுழைப்பு உள்ள வேலைகளைக் குறைத்துக் கொண்டு, உட்கார்ந்து செய்யும் வேலைகளைச் செய்வது. உதாரணமாக, மாடிப்படி ஏறுவதைத் தவிர்த்து, 'லிஃப்டி'ல் ஏறிச் செல்வது. பெண்கள் முன்பெல்லாம் ஆட்டுரலில் மாவு ஆட்டினார்கள். இப்போது மிக்ஸி, கிரைண்டரைப் பயன்படுத்துகிறார்கள். கிணற்றில் தண்ணீர் இரைத்தார்கள். இப்போது மோட்டார்தான் அந்த வேலையைச் செய்கிறது.

4.   உடற்பயிற்சி இல்லாதது: உடலுக்கு எவ்விதப் பயிற்சியும் தராமல் இருப்பது. உதாரணமாக, அருகில் உள்ள கடைக்குப் போகவேண்டும் என்றால்கூட நடந்து செல்வதைவிட்டு, 'டூ வீலரி'ல் செல்வது.

5.   சோம்பல் வாழ்க்கைமுறை: வாழ்க்கையில் பெரும்பாலான நாட்களில் உடல் உழைப்பில்லாமல், வீட்டில் உட்கார்ந்தும் உறங்கியும், தொலைக்காட்சி பார்த்தும் கழிக்கின்ற வாழ்க்கை முறை உள்ளவர்களுக்கு உடல் எடை கூடும்.

6.   மருந்துகள்: நீண்ட காலம் நாம் எடுத்துக்கொள்ளும் சில வகை மருந்துகள் உடல் எடையை அதிகரிக்கும். ஹார்மோன் மாத்திரைகள், மனச்சோர்வை நீக்கும் மருந்துகள், ஸ்டீராய்டு மாத்திரைகள் போன்றவற்றை இதற்கு உதாரணங்களாகக் கூறலாம்.

7.   நோய்கள்: தைராய்டு சுரப்பு குறைதல், இதயச் செயலிழப்பு, சிறுநீரகச் செயலிழப்பு போன்ற நோய்கள் உடலின் திரவக் கொள்ளளவை அதிகரித்து, உடல் எடையை அதிகரிக்கும்.

 பாதிப்புகள் என்ன?

 உடல் பருமன் காரணமாக உடலில் ஏற்படும் பாதிப்புகள் பல. அவற்றுள் முக்கியமானவை இவை:

 •       சர்க்கரை நோய்.
 •       உயர் ரத்த அழுத்தம்.
 •       மாரடைப்பு.
 •       மூச்சுத் திணறல்.
 •       முழங்கால் மூட்டுவலி.
 •       முதுகு வலி மற்றும் தோள் வலி.
 •       மார்பகப் புற்றுநோய்.
 •       குடல் புற்றுநோய்.
 •       பித்தப்பை நோய்கள்.
 •       குடல் இறக்கம்.
 •       மலச்சிக்கல்.
 •       மலட்டுத்தன்மை 

  எகிறும் எடையைக் குறைக்க என்ன வழி?

(தொடர்ந்து பேசுவோம்)

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கு.கணேசன்

கு.கணேசன், பொது நல மருத்துவர்; மருத்துவத் துறையில் உலகளாவிய அளவில் நடக்கும் மாற்றங்களை ஆழ்ந்து அவதானித்து, எளிய மொழியில் மக்களுக்கு எழுதும் பணியில் ஈடுபட்டிருப்பவர்; ‘சர்க்கரைநோயுடன் வாழ்வது இனிது!’, ‘நலம், நலம் அறிய ஆவல்’, ‘செகண்ட் ஒப்பினீயன்’ உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: gganesan95@gmail.com


3

1

பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

Anandha Kumar Thangavel    2 years ago

நல்ல மற்றும் உபயோகமான கட்டுரை. ஆனால், //பெண்கள் முன்பெல்லாம் ஆட்டுரலில் மாவு ஆட்டினார்கள். இப்போது மிக்ஸி, கிரைண்டரைப் பயன்படுத்துகிறார்கள். கிணற்றில் தண்ணீர் இரைத்தார்கள். இப்போது மோட்டார்தான் அந்த வேலையைச் செய்கிறது.// இந்த வரிகள் மூலம் மருத்துவர் என்ன சொல்ல வருகிறார்?. பெண்களை மீண்டும் ஆட்டாங்கல், அம்மிக்கல் பயன்படுத்தி, கிணற்றில் நீர் இறைக்க சொல்கிறாரா?. இந்த வரிகள் பிற்போக்குத்தனமாகப்படுகிறது. கட்டுரைகளை edit செய்வதில் சமஸ் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும். ❤️

Reply 4 0

Raja   2 years ago

well said!

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Umamaheswari   2 years ago

அருமையான விழிப்புணர்வு கட்டுரை சார் ...

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

முரசொலி 80வது ஆண்டு விழாக் கட்டுரைபணி மாற்றம்ஐசக் சேடினர் பேட்டிஇந்தியப் பிரதமர்கள்ஓய்வூதியம்ஜெயப்பிரகாஷ் நாராயணன்பெருவுடையார் கோயில்கங்கணா ரனாவத்யூஎஸ்எஸ்டிமாட்டிறைச்சிநோர்வேஜியன்விஜயேந்திரர்ஜெயமோகன்நிராசை உணர்வுதாங்கினிக்கா ஏரிகுடும்பச் சூழல்பாலுறவுகாந்தியமும் இந்துத்துவமும்அரசு இயந்திரம்சரத் பவார்நீரியல் நிபுணர் எஸ்.ஜனகராஜன் பேட்டிவிதி எண் 267மு.க.ஸ்டாலின் கட்டுரைஅஸ்ஸாம்நெடில்இளைஞரை நம்புவோம்ஆசனவாய் வெடிப்புபுதுமடம் ஜாபர் அலி கட்டுரைடிக்டாக்வாட்ஸப் தகவல்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!