வரலாறு 4 நிமிட வாசிப்பு

ஆங்கிலக் காலனியத்தின் எச்சங்கள்

ஆ.சிவசுப்பிரமணியன்
22 Dec 2021, 5:00 am
3

மிழக நகரங்கள் பலவற்றில் இன்று இயல்பாகக் கலந்துவிட்ட - எதனுடன் தொடர்புடையவை என்று உள்ளூர் மக்களாலேயே ஆராயப்படாத அளவுக்கு நகரின் இயல்பான அடையாளங்கள் ஆகிவிட்ட பல கட்டுமானங்கள் உண்டு. அவற்றைத் திரும்பிப் பார்க்கும் நோக்கத்தின் விளைவே இந்தக் கட்டுரை.

1857இல் நடந்த சிப்பாய் எழுச்சியை அடுத்து,  கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியா, இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டதாக மாறியது.

இதன் அடிப்படையில், இந்தியா மீதான ஆட்சி அதிகாரத்தின் தலைவராக இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணி மாறினார். இந்தியாவின் பேரரசியாக அவர் அறிவிக்கப்பட்டார். பிரிட்டன் ஆட்சிமுறையில் அவர் வகித்துவந்த இடம், இந்திய ஆட்சிக்கும் விரிவுபடுத்தப்பட்டது. 1838இல் இங்கிலாந்தின் பேரரசியாக இவர் பட்டம் சூடி 50 ஆண்டுகள் ஆன நிலையில் இதைச் சிறப்பிக்கும் வகையில் பொன் விழாக் கொண்டாட்டம் நடத்தப்பட்டது. 

இக்கொண்டாட்டத்தின் நினைவாக ‘விக்டோரியா ஜூபிலி சத்திரம்’ என்ற பெயரில் 1887இல் அரியலூர் நகரில் சத்திரம் ஒன்று கட்டியுள்ளார்கள் (பின்னர் இது இருந்த இடத்தில் திரையரங்கு ஒன்று கட்டப்பட்டிருக்கிறது). கங்கைகொண்டசோழபுரத்தில் குடி தண்ணீர்க் குளம் ஒன்று 1887இல் அமைக்கப்பட்டது. இச்செய்திகளை முனைவர் இல.தியாகராஜன் தமது ‘அரியலூர் மாவட்டக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள்‘ (தொகுதி:1)  நூலில் ஒளிப்படங்களுடன் பதிவுசெய்துள்ளார்.

விளக்குத் தூண்கள்

விக்டோரியா மகாராணியின் மறைவையடுத்து, அவரது மகன் ஏழாவது எட்வர்ட் 1901இல் இங்கிலாந்தின் மன்னரானார். பின்னர் இந்தியாவின் மன்னராக 1903இல் முடி சூட்டிக்கொண்டார். இதைச் சிறப்பிக்கும் வகையில் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் முருகன் கோயில் கிழக்கு நுழைவாயிலில் ஒன்றும், கோயில் தெப்பக்குளத்தின் கரையில் ஒன்றும் எனக் கல்வெட்டுடன் கூடிய இரண்டு விளக்குத் தூண்கள் (தீப ஸ்தம்பம்) நிறுவப்பட்டுள்ளன.

இது போன்று ஒரு கல்வெட்டு தூத்துக்குடி மாவட்டம், சேர்வைக்காரன் மடம் கிராமத்தின் அருகில் உள்ள மச்சக்கம்மாள்புரம் கிராமத்தில் நிலக்கிழார் ஒருவரால் நிறுவப்பட்டுள்ளது. தற்போது இக்கல்வெட்டு திருநெல்வேலி அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுவருகிறது.

 

 

இந்தியாவில் முடிசூட்டிக்கொண்ட இங்கிலாந்து மன்னன்

ஏழாவது எட்வர்ட்டை அடுத்து இவரது மகன் ஐந்தாம் ஜார்ஜ் இந்தியாவிற்கு வந்து, இந்தியாவின் மன்னராக முடிசூட்டிக் கொண்டார். இவருக்கு முன் இந்தியாவின் மன்னராக முடிசூட்டிக் கொண்ட இருவரும் இந்தியாவிற்கு வராமல் இங்கிலாந்திலேயே முடிசூட்டிக் கொண்டார்கள். ஆனால், இவர் தன் மனைவியுடன் இந்தியா வந்து முடிசூட்டிக் கொண்டார்.

12 டிசம்பர் 1912இல் இவ்விழா தில்லியில் நடந்தது. இதன் பின்னரே தில்லி இந்தியாவின் தலைநகரமானது. அதுவரை இந்தியாவின் தலைநகராகக் கல்கத்தா இருந்தது. இவ்விழாவினை ஒட்டி 1905இல் கர்சான் உருவாக்கிய வங்கப் பிரிவினை கைவிடப்பட்டது. இதைக் கொண்டாடும் வகையில் திருநெல்வேலி மாவட்டம் களக்காடு ஊரில் உள்ள சத்தியவாகீசுவரர் கோயில் தெருவில் கல்வெட்டுடன் கூடிய கற்பலகை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

  இம்முடிசூட்டு விழாவையொட்டி தென்காசி நகரில் கல்வெட்டுக்களுடன் கூடிய தோரணவாயில் (ஆர்ச்) ஒன்று அமைக்கப்பட்டது. இரயில் மேம்பாலம் கட்டும்போது இது இடிக்கப்பட்டுவிட்டது.

 இவ்விழா நிகழ்ந்து இருபத்தியைந்து ஆண்டுகள் கடந்த பின்னர் இந்நிகழ்வின் வெள்ளி விழாக் கொண்டாட்டத்தின் அடையாளமாகத் திருநெல்வேலி நகரின் நெல்லையப்பர் பெருவழியில் தோரண வாயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது.

 உலகப் போர் நினைவுகள்

முதல் உலகப் பெரும் போரானது (1914-1918)  பிரான்ஸ், இங்கிலாந்து, ரஷ்யா ஆகிய நாடுகள் அடங்கிய ஓர் அணிக்கும், ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகள் அடங்கிய மற்றோர் அணிக்கும் இடையிலான போராகவே நிகழந்தது. இந்திய மக்களுக்கு இப்போரில் எவ்விதப் பங்கும் இருக்க வாய்ப்பில்லைதான். ஆனால், ஆங்கிலக் காலனியர்கள் தம் சுயநலத்திற்காகத் தம் காலனியக் குடிமக்களையும் இப்போரில் இணைத்துவிட்டனர். இதனால் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மத்தியத் தரைக்கடல் பகுதி, பசிபிக் தீவுகள், இந்தியப் பெருங்கடல் பகுதி எனத் தாம் முன்பின் அறியாத கண்டங்களுக்கும் நாடுகளுக்கும் கிராமப்புற இளைஞர்கள் போர் வீரர்களாகச் சென்று மடிந்தனர். இவர்களுக்கான அணிவகுப்புப் பயிற்சி வழங்கப்பட்ட முறை குறித்து தமிழர்களிடையே வாய்மொழி வழக்காறு ஒன்றுண்டு.

இதன்படி  படை வீரராகத் தேர்வுசெய்யப்பட்டவரின்  ஒரு  முழங்காலில் துணியைக் கிழித்தும் மற்றொரு முழங்காலில் ஒலையைக் கிழித்தும் கட்டியிருப்பார்களாம். பயிற்சியின் போது லெப்ட் ரைட் என்பதற்குப் பதில் ஒலைக்கால் சீலைக்கால்/ துணிக்கால் என்று கூறுவார்களாம். இவ்வழக்காறுக்கு மாற்று வடிவம் ஒன்றும் உண்டு. இதன்படி ஒருகாலில் மட்டும் துணியைக் கிழித்துக் கட்டிவிட்டுத்  துணிக்கால் வெறுங்கால் என்று  கூறிப் பயிற்சி அளிப்பார்களாம். 

இவர்களைப் போற்றிச் சிறப்புச் செய்யும் வழிமுறையாக நினைவுக்கற்களை நிறுவியுள்ளார்கள்.  தம் நாட்டுடன் நேரடியாகத் தொடர்பில்லாத நாட்டுடன் போரிட முன்வரும் இளைஞர்களுக்கு காலனியம் வழங்கிய கையூட்டு இது. 

இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்து வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் நகரில் தோரணவாயில் ஒன்று உள்ளது. இதைக் கட்டியவர் திருவாவடுதுறை ஆதீனகர்த்தா. எப்பொதுமே ஆள்வோருக்கும் சமயத் துறவியருக்கும் இடையே நெருக்கமான பிணைப்பு இருக்கும் என்பதற்குச் சான்றாக இது உள்ளது. தோரணவாயிலின் உச்சியில் பிரிட்டனின் இலச்சினையான இரு சிங்கங்கள் காட்சி அளிக்கின்றன.

ராஜ விசவாசிகள்

இவை எல்லாம் குறுகிய அளவிலான தரவுகள், நினைவுச் சின்னங்கள் மட்டுமின்றி கல்வி நிறுவனங்கள் பலவற்றின் பெயர்களும்கூட இராஜ விசுவசத்தை வெளிப்படுத்துபவை உண்டு. சென்னைப் பல்கலைக்கழகத்தின் வித்துவான் பட்டயப் படிப்பில் முதன்மைத் தகுதி பெறும் மாணவருக்கு ஜார்ஜ் மன்னர் பெயரால் பரிசு வழங்கும் திட்டம் சைவ மடம் ஒன்றால் நிறுவப்பட்டது. முறையாகத் திட்டமிட்டுத் தமிழ்நாடு முழுவதும் களஆய்வு மேற்கொண்டு தரவுகள் சேகரித்தால் ஆங்கில ராஜ விசவாசிகளின் மூலத்தைக் கண்டறியலாம்.

ஆ.சிவசுப்பிரமணியன்

ஆ.சிவசுப்பிரமணியன், ஆய்வறிஞர் 50 ஆண்டுகளுக்கும் மேல் நாட்டாரியல் ஆய்வுப் புலத்தில் செயல்பட்டுவரும் இவர் 40-க்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர்.


3


பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

Melkizedek   7 months ago

ஆங்கில காலணியத்தின் எச்சங்களை விட ஆங்கில ஏகாதிபத்தியத்தின் எச்சங்களே மிகுந்து காணப்படுகிறது.... அரசியல்வாதிகளை துதி பாட வரிசை கட்டி தலை குனிந்து நிற்கும் ஊடகங்கள், சேவை என்ற பெயரில் தேசத்தின் சகல சொகுசுகளை ஆண்டு அனுபவித்தல், கிழக்கிந்திய கம்பெனிக்கு டப் கொடுக்கும் நவீன கால உள்நாட்டு அல்லது பன்னாட்டு நிறுவனங்கள்...... Etc... இந்த கட்டுரை கூட ஆங்கிலேயரை காரணம் காட்டி இப்போதைய ராஜாக்கள் விசுவாசத்திற்காக எழுதப்பட்டுள்ளது...

Reply 0 0

S.சங்கரநாராயணன்   7 months ago

அய்யா இந்த கட்டுரையில் மத நிறுவனங்கள் எந்த அளவுக்கு தங்களுடைய சுய லாபத்திற்காக அரசுகளை அண்டி பிழைத்திருக்கின்றன என்ற எதிர் வாதம் தானே தெரிகிறது. பிற மதத்தை தழுவி நின்ற ஆங்கில அரசையும் தாங்கி பிடிக்கின்ற காரியத்தை தானே விமர்சனத்துக்கு உள்ளாக்குகிறது. இப்போதைய ராஜாக்கள் மீதான விசுவாசம் ஏங்கே அய்யா தெரிகிறது.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

S.சங்கரநாராயணன்   7 months ago

வழக்கம் போல் அய்யாவின் பார்வை தமிழகத்தின் மூலை முடுக்குகளில் புகுந்து ஆய்ந்து வந்திருக்கிறது. மத நிறுவனங்கள் அரசோடு இணைந்தே நிற்பதற்கான பல பாரம்பரிய ஆதாரங்கள். காலத்தின் தேவையான சமூக அவசியங்களை ஒரு போதும் மத நிறுவனங்கள் கண்டுகொள்வதில்லை. சாதாரண மக்களின் உணர்வுகளுக்கும் மடாலயங்களுக்கும் தோட்டம் தூர தானே. எங்கள் வள்ளியூரில் யாரும் கவனித்து இராத விளக்குத் தூண்களை அய்யா நுட்பமாக ஆராய்ந்து உள்ளார்.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

பெருமாள் முருகன்இந்தி ஆதிக்கத்தை என்றும் எதிர்ப்போம்!பங்களாதேஷ் பொன்விழாஆஸ்துமாசிறிய மாநிலம்பெரியாறு அணைவிவசாயிகள்தலைச்சாயம்ஜல்லிக்கட்டு அருஞ்சொல்சமஸ் கட்டுரைசபரீசன்பரிவர்த்தனைநகைச்சுவைமாநில உரிமைடெல்லி பல்கலைக்கழகம்வி.பி.மேனன்ஓய்வு வயதுஹண்டே - சமஸ் பேட்டிவேலையைக் காதலிகோம்பை அன்வர் அருஞ்சொல்ஊடகர் வினோத் துவாவீரப்பன் சகோதரர்திமுக அரசுஅரிப்புமதுரை மத்திஜெயங்கொண்டம்அமித்ஷாஊழியர் சங்கங்களின் இழிநிலைபஞ்சாப் தேர்தல்லால்பகதூர் சாஸ்திரி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!