கட்டுரை, ரீவைண்ட் 10 நிமிட வாசிப்பு

பொங்கலுக்கு ஒப்பான நாள் உலகில் ஏது?

சி.என்.அண்ணாதுரை
14 Jan 2022, 5:00 am
1

ஓவியம்: மருது

பொங்கல் பண்டிகைக்குத் தமிழ்நாடு மேலும் ஒரு புது அர்த்தம் கொடுக்க முற்படுவது இன்றைய சங்கதி இல்லை. சாதி - மதம் கடந்த, தமிழர்கள் அனைவருக்குமான ஒரு கொண்டாட்டமாக, ‘பொங்கல் திருநாள்’ அமைய வேண்டும் என்பது அண்ணாவின் கனவு. கலைஞர் மு.கருணாநிதியின் வழியில், ‘தமிழ்ப் புத்தாண்டு’ என்று கூறி, இந்தப் பொங்கல் திருநாளுக்கு வாழ்த்துகள் தெரிவித்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 

இதற்கான வரலாற்றை அறிந்துகொள்ள வேண்டும் என்றால், நாம் அண்ணாவிடம்தான் செல்ல வேண்டும். பொங்கலை அண்ணா எப்படிப் பார்த்தார்? அண்ணா தன் தம்பியருக்கு எழுதிய கடைசிக் கடிதம் அதை நமக்குச் சொல்கிறது. 1969 ‘காஞ்சி’ பொங்கல் மலருக்காக இந்தக் கட்டுரையை அவர் எழுதிய 6.1.1969 சூழலில், கடுமையாக உடல்நலம் குன்றியிருந்த நிலையிலும் தீவிரமான வேலைகளில் ஈடுபட்டிருந்திருக்கிறார், அதிகாலை நான்கு மணி அளவில் கட்டுரையை முடித்துவிட்டு உறங்கச் சென்றிருக்கிறார். பொங்கல் திருநாள் ஏன் கட்டாயம் கொண்டாடப்பட வேண்டியது என்பதற்கு இக்கட்டுரையில் அண்ணா தரும் விளக்கம், சாதி, மத எல்லைகளுக்கு அப்பாற்பட்டு தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் தமிழர் என்ற அடையாளத்தால் ஒருங்கிணைக்கும் கனவைக் கொண்டிருப்பதோடு, பொங்கல் திருநாளுக்குப் புது அர்த்தமும் கொடுக்க விழைகிறது. 

தமிழர்களின் பண்பாட்டு பெருமைகளையும் தனித்துவத்தையும் பேசும் அண்ணா, பண்டிகையை வெறும் கொண்டாட்டமாக மட்டும் அல்லாமல், எதிர்காலத்தைக் கட்டமைக்கும் கடமைகளைப் பொறுப்பேற்கும் நாளாகவும் கட்டமைக்கிறார். “சூழ்நிலைக் கைதிக்குப் பெயர்தான் முதலமைச்சர் பதவி”; “இந்தியாவின் செல்வத்தின் பெரும் பகுதி வெறும் 20 குடும்பங்களின் கைகளில் இருக்கிறது” என்று விவரித்து, “அரசியலமைப்புச் சட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும்”, “சமதர்ம சமுதாயம் அமைய உறுதியேற்க வேண்டும்” என்று இக்கட்டுரையில் குறிப்பிடும் விஷயங்கள் பல அண்ணா தன் வாழ்நாள் நெடுகிலும் வலிறுத்திவந்தவை. ஒருவகையில் அவருடைய உயில் என்றும் இதை நாம் கூறலாம். சுருக்கமான வடிவம் இங்கே.   

ம்பி!

எந்தப் பணி எனக்கு இனிப்பும் எழுச்சியும் தந்து வந்ததோ, எந்தப் பணியிலே நான் ஆண்டு பலவாக மிக்க மகிழ்ச்சியுடன் ஈடுபட்டுவந்திருந்தேனோ, எந்தப் பணி மூலம் என்னை உன் அண்ணனாக நீ உள்ளன்புடன் ஏற்றுக்கொண்டு, பெருமிதத்துடன், உலகுக்கு அறிவித்து வந்தனையோ, எந்தப் பணி வாயிலாக என் கருத்துகளை உனக்கு அளித்து உன் ஒப்புதலைப் பெற்று அந்தக் கருத்துகளின் வெற்றிக்கான வழியினைக் காண முடிந்ததோ, எந்தப் பணியின் மூலம் தமிழகத்தை அறியவும், உலகத்தை உணரவும், தமிழ்ப் பண்பை நுகரவும் வழி கிடைத்து வந்ததோ, எந்தப் பணி மூலம், எப்போதும் உன் இதயத்தில் எனக்கு ஓர் இடம் கிடைத்து அதுகுறித்து நான் அளவற்ற அகமகிழ்ச்சி பெற முடிந்ததோ, அந்தப் பணியினை முன்புபோலச் செய்ய முடியாதவனாக்கப்பட்டு, முடியவில்லையே என்ற ஏக்கத்தால் தாக்கப்பட்டு, சூழ்நிலையின் கைதியாக்கப்பட்டுக் கிடக்கிறேன் என்பதனை அறிவாய். ‘சூழ்நிலையின் கைதி’ என்ற சொற்றொடருக்குத்தான், முதலமைச்சர் என்று முத்திரையிட்டிருக்கிறார்கள்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

தம்பி, தம்பி, தம்பி என்று கிழமை தவறாமல், பலப் பல ஆண்டுகள் உன்னை அழைத்து உரையாடி அளவளாவிவந்திருக்கிறேன். இரண்டு ஆண்டுகளாக அந்த விருந்தினை இழந்து தவிக்கின்றேன். முதலமைச்சர் என்ற முறையில் பல பிரச்சினைகள் பற்றிய கருத்துக்களை அறிக்கைகள், சொற்பொழிவுகள், சட்ட மன்ற உரைகள் மூலம் நாட்டுக்குத் தந்துவிட முடிகிறது. தனிமையாக உன்னிடம் உரையாடி மகிழ்ந்திட என்று நான் வகுத்துக்கொண்ட ‘கிழமைக் கடிதம்’ எழுதிட இயலவில்லை.

பிரச்சினைகளை விளக்கிட, ஐயப்பாடுகளைப் போக்கிட, அச்சம் துடைத்திட, மறுப்புக்கு மறுப்புரைக்க, ‘வாழ்க வசவாளர்’ என்று அவர்களையும் வாழ்த்திட, ‘தம்பிக்குக் கடிதம்’ மிக நேர்த்தியான முறையில் பயன்பட்டுவந்தது.

எனக்குத் தோன்றும் எண்ணங்களை உன்னிடம் கூறிடுவதிலே, தனியானதோர் மகிழ்ச்சி. எனக்கு ஏற்படும் மகிழ்ச்சியினை உன்னோடு பங்கிட்டுக்கொள்வதிலே ஓர் இன்பம். கவலை குடையும்போது, மன உளைச்சல் ஏற்படும்போது, உன்னோடு உரையாடி, தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்ற எழுச்சி பெற்று வந்தேன். இப்போது? அந்த இன்ப நாட்களை எண்ணி எண்ணி ஏக்கம் கொள்கிறேன். சுமக்கும் பளுவினாலே கூனிக் குறுகி வாடுகிறேன். எத்தனை எத்தனையோ பிரச்சினைகளைப் பற்றிய கருத்துக்களைக் கூற நேரமோ வாய்ப்போ இன்றித் தவித்திடுகிறேன்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

கல்லணையில் கரிகாலனோடு கொண்டாட்டம்

16 Jan 2022

ஆயினும், முன்பு செலவிட்டதைக் காட்டிலும் அதிக நேரம், வேலைக்காக ஒதுக்குகிறேன். இலக்கியச் சுவை நுகர்ந்திட நேரமில்லை. கலை அழகினை எண்ணிட நேரமில்லை. வேலை, வேலை, வேலை, ஓயாத வேலை! உடலும் உள்ளமும் அலுத்துப்போகும் அளவு. கடமையை நிறைவேற்றிக்கொண்டிருக்கவே காலம் போதவில்லை - களிப்புப் பெற்றிட உன்னிடம் உரையாடிட நேரத்தைக் கண்டறிவதே மிகச் சங்கடமாகிவிட்டது.

இந்தக் கிழமை எப்படியும் தம்பிக்குக் கடிதம் எழுதிட வேண்டும் என்று தீர்மானித்து எழுதத் தொடங்குவேன். தொலைபேசி மணி ஒலிக்கும்…

“சீஎம்மா…”

“ஆமாம், நான்தான்…”

“எங்க ஊர் வாய்க்கால் விஷயமாக மனு அனுப்பினது பற்றி…”

“பரிசீலனையில் இருக்கிறது.”

“அண்ணா! நீங்க பார்த்து முடிவு செய்யவேண்டியது தானே, இதற்கு என்ன பரிசீலனை தேவை?”

“அப்படி அல்லவே. இலாகா பரிசீலனை செய்தாக வேண்டுமே…”

“அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது… எப்படியும் முடித்துக் கொடுத்தாக வேண்டும்.”

“சரி, சென்னைக்கு வரும்போது விளக்கமாகக் கூறுகிறேன்.”

“உடம்பைப் பார்த்துக்கொள்ளுங்கள் அண்ணா!”

“ஆகட்டும். ஆகட்டும்!”

“வேலைகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். இளைப்பும் களைப்பும் அதிகமாகத் தெரிந்தது, போன மாதம் பார்த்தபோது!”

அது நேரமோ, பணமோ...

அறிவுக்குச் செலவிட தயங்காதீர்கள்.
இது உங்கள் ஆளுமை, சமூகம் இரண்டின் வளர்ச்சிக்குமானது!

தம்பி! என் மனத்துக்கு இனிமை தந்திடும் பணியிலே என்னை ஈடுபடுத்திக்கொள்ள முடியவில்லையே என்ற கவலை ஒருபுறம்; அத்துடன் பின்னிப் பிணைந்துகொண்டு என் உடல் நிலையைப் பற்றிய கவலை ஒருபுறம்.

என் பேரப் பெண், இளங்கோவனின் மகள் கண்மணி தன் மழலை மொழியில் பாடுகிறாள். “நலந்தானா? நலந்தானா? உடலும் உள்ளமும் நலந்தானா?” என்று. எனக்கென்னவோ அந்தப் பாட்டைக் கேட்கும்போதெல்லாம், என் தம்பிகள் தங்கைகள் நாட்டின் நல்லோர் அனைவருமே என்னை, “நலந்தானா?” என்று கேட்பதுபோலவே தோன்றுகிறது. கடந்த ஓராண்டாகவே, இந்தக் கேள்வி கிளம்பியபடி இருந்தது. அமெரிக்கா சென்று அறுவைச் சிகிச்சை செய்துகொள்ளவேண்டிய அளவுக்கு உடல் நலம் பாழ்பட்டது. ஆனால், அதனால் ஏற்பட்ட கவலையை நான் உதறித் தள்ளும் விதமான அன்பும் கனிவும் நாடு முழுவதிலுமிருந்து கிடைத்தது. அரசியலில் நம்மோடு மாறுபட்டிருப்பவர்களிலே பலரும் கனிவு காட்டிடக் கண்டேன் - மனிதத்தன்மை அடியோடு மடிந்துவிடவில்லை என்பதனை உணர்ந்தேன்.

மனிதத்தன்மையைத்தான் முழுக்க நம்புகிறேன்

தம்பி! அந்த மனிதத்தன்மையிலேதான் முழுக்க முழுக்க நம்பிக்கைக்கொண்டிருக்கிறேன். மனிதத்தன்மை திகழ்ந்திடச் செய்வதைக் காட்டிலும் மகத்தான வேறோர் வெற்றி இல்லை என்றே கருதுகிறேன். அரசுகள் அமைவதே, இந்த மனிதத் தன்மையின் மேம்பாட்டினை வளர்த்திடத்தான் என்று கருதுகிறேன். என்னால் எந்தப் பிரச்சினையையும் மனிதத்தன்மை கலந்ததாக மட்டுமே கொள்ள முடிகிறது. அதனால் கொடுமை நேரிட்டுவிடும்போது குமுறிப் போகிறேன். அக்கிரமம் நடைபெற்றிடும்போது நெஞ்சில் வேல் பாய்கிறது. இந்நிலை உடலைப் பாதிக்கிறது; மருத்துவர்கள் பலர் என் உடல்நிலை தேறிடத் துணை நிற்கின்றனர். ஆனால், உன் புன்னகை தவழும் முகத்தை மனக் கண்ணால் காணும்போதுதான் உண்மையான ‘மாமருந்து’ கிடைக்கிறது. கிடைத்தற்கரிய அந்தச் செல்வத்தைக் கொண்டு மகிழ்ச்சிப் பெருக்கிலே திளைத்திருக்க எண்ணும் என்னை, தம்பி, நான் மேற்கொண்டுவிட்ட கடமை, “வேலையைக் கவனி! வேலையைக் கவனி!” என்று முடுக்குகிறது.

இன்று எப்படியும் எழுதுவது - ஆண்டுக்கோர் நாள் - அருமைமிகு திருநாள் - பொங்கல் புதுநாள் - அதற்காக வெளிவரும் மலரில் எப்படியும் எழுத வேண்டும் என்று எண்ணிக்கொண்டு ஏடெடுத்தேன் எழுத! எடுத்து?

நிதிக் குழுவினருடன் பேச வேண்டிய பிரச்சினைகளைப் பற்றிய தகவல்களுடன் நிதித்துறைச் செயலாளர், அமைச்சர் மாதவனுடன் வந்தார். ஒரு மணிக்கு மேல் உருண்டோடிவிட்டது. சிக்கலான பிரச்சினைகள், பேசித் தீர்த்தாக வேண்டிய பிரச்சினைகள்.  நமது மாநிலத்து வருவாய்த் துறையை எந்தெந்த முறையிலே செப்பனிட முடியும் என்பதுபற்றி ஆய்ந்தறிய வேண்டிய கட்டம். உன்னை மறந்தேன் என்ற பொருள் கொள்வாயோ! விவரமறிந்த தம்பியாயிற்றே!  உனக்காகவும் சேர்த்து மேற்கொள்ளப்படுகிற வேலை என்பதனை அறிவாயே! பிரச்சினைகளைப் பேசினோம். புள்ளிவிவரங்களைச் சரிபார்த்துக்கொண்டோம். தொடர்பான நிகழ்ச்சிகள் பற்றிய முறைகளை வகுத்துக்கொண்டோம்.

“அதற்குப் பிறகுதான் எழுத ஆரம்பித்தாயா அண்ணா?” என்றுதானே கேட்கிறாய்.

அதற்குப் பிறகு அல்ல, தம்பி! அதைப் போல மூன்று நான்கு தவிர்க்க முடியாத வேலைகளைக் கவனித்தான பிறகு, எழுத வேண்டும் என்ற முடிவு எடுத்ததற்கும் எழுதத் தொடங்கியதற்கும் இடையில் ஆறு ஏழு மணி நேரம் சென்றுவிட்டது.  இந்நிலையில் நான் இருந்திடினும் பொங்கல் புதுநாள் வாழ்த்தினைத் தெரிவித்துப் பெற்றிடும் மகிழ்ச்சியினை மட்டும் நான் இழந்துவிட மாட்டேன்.

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

பொங்கல் நாள் மாறிய மர்மம்

த.வி.வெங்கடேஸ்வரன் 21 Jan 2023

தமிழர்க்கென்று உள்ள ஒப்பற்ற விழா பொங்கல் திருநாள்

நமக்கென்று உள்ள ஒப்பற்ற விழா அல்லவா அது! எத்தனையோ இன்னல்கள் தாக்கிடினும், அவற்றை மறந்து, ஒரு நாள் மனைதொறும் மனைதொறும் மகிழ்ச்சியுடன் கொண்டாடிட என்று அமைந்த நாளல்லவா பொங்கல் புதுநாள்! பேச்சிலே ஓர் இசை கலந்திடும் நாள் இத்திருநாள்! இந்நாளில், உனக்கு வாழ்த்துக் கூறுவதிலே பெற்றிடும் இன்பம் ஈடற்றதல்லவா? எனவேதான், எப்படியும் எழுதுவது என்று உட்கார்ந்தேன்.

உலக நாடுகள் பலவற்றின் தலைநகரங்களை ஒரு முறைக்கு மும்முறை கண்டு வந்தேன். அங்கு எங்கும் - விழாக்கள் பலப் பல நடத்தப்படினும் - தமிழகத்தின் பொங்கல் புதுநாள் போன்றதோர் பொன் விழா இல்லை. நிச்சயமாக இல்லை. கோலாகல விழாக்கள் உள்ளன; பரபரப்பூட்டும் விழாக்கள் நடத்தப்படுகின்றன; கேளிக்கைகள், மதுபான விருந்துகள் மிகுதியாக; எனினும் ஆர்ப்பரிப்பின்றி, ஆனால் அக மகிழ்ச்சியுடன், போலிப் பூச்சுகளின்றி ஆனால் புதியதோர் பொலிவுடன், வீட்டில் உள்ள அனைவரும் கலந்துரையாடி மகிழ்ந்திருக்கும் நமது பொங்கல் புதுநாளுக்கு ஒப்பான விழா அங்கு எங்கும் இல்லை.

நாட்டியக் கூடங்களிலே அமளி! பாதைகளிலே புதுவேகம், மோதல், உயிர்ச் சேதம்! அங்காடிகளிலே ஆரவாரம்! இவை ஏராளமான அளவு! ஆனால் இங்கு வீடுதோறும் எழுகிறதே! முதியவரும் மூதாட்டியும் இளைஞரும் இளநங்கையும், சிறுமியரும் கலந்து எழுப்பும், “பொங்கலோ பொங்கல்!” என்ற இசை முழக்கம், அது அங்கு எங்கும் இல்லை. இருந்திடத்தக்க விதமான சமூக அமைப்பே இல்லை.

தம்பி! வறுமை வாட்டுகிறது, இல்லை என்று கூறவில்லை. எண்ணிடும் திட்டங்களை நிறைவேற்றிட வசதிகள் கிட்டவில்லை. அதனை மறைத்துப் பயனில்லை. வளம் கொழித்திட வழி தேடியபடிதான் இருந்துவருகிறோம். இன்னும் பொழுது புலரவில்லை. இவ்வளவும் உண்மை. ஆனால், தமிழகத்தில் பன்னெடுங்காலத்துக்கு முன்பிருந்து நாடு பல, தனது எல்லையை வகுத்துக்கொண்டு, அரசு அமைத்துக்கொண்டு நிலவத் தொடங்குவதற்கு நெடுங்காலத்திற்கு முன்பே, நாம் பெற்றிருந்த கருத்துச் செல்வத்தை எண்ணிப் பார்த்திடும்போது, நமக்கு இன்றுள்ள எல்லாத் துயரங்களையும் ஒரு கணம் மறந்து, வேறு எவரும் பெற முடியாத ஓர் பெருமித உணர்வினை நாம் பெற முடிகிறது.

அத்தகைய கருவூலத்தை நமக்குத் தந்த தமிழ்நாட்டுக்கு, நாம் இதுநாள் வரையில் அரசியல் சட்ட திட்டத்தில், ‘தமிழ்நாடு’ என்ற பெயரைக்கூடப் புகுத்தத் தவறினோமே, மறுத்துவந்தோமே, எதிர்த்துவந்தோமே என்று காங்கிரஸ் கட்சியினர் எண்ணி வருத்தப்படுகிறார்களோ இல்லையோ, நானறியேன் - நாம் - ‘இவர்களால் என்ன ஆகும்?’ என்ற ஏளனக் கணைகளால் தாக்கப்பட்ட நாம் - ஆட்சிப் பொறுப்பினை பெற்றதன் விளைவாக இந்தப் பொங்கல் புதுநாளிலிருந்து, நாம் உலகுக்கு அறிவிக்க முடிகிறது, ‘இது தமிழ்நாடு’ என்பதாக. பெயரில் என்ன இருக்கிறது என்று பேசிடும் பெரியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் பாடினாரே பாரதியார், “செந்தமிழ் நாடெனும் போதினிலே / இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே!” என்று. அந்தக் கவிதா வாக்கியம் பெரிய இடத்தில் அமர்ந்துகொண்டு, ‘சின்னத்தனம் பேசிடும் பலருடைய ஏளனத்தைப் பொருட்படுத்த வேண்டாம். உயர்ந்த எண்ணம் கொள்!’ என்றன்றோ கட்டளையிடுகிறது. நாம் தமிழ்நாடு என்ற பெயர் பெற்றிடக் காரணமாக இருந்தோம் என்ற தித்திப்புக் கலந்திடும் பொங்கல் புதுநாள், இந்த ஆண்டு!

போதும் என்று நான் கூறவில்லை. அத்துணைப் பேதமை என்னைப் பிடித்தாட்டவில்லை. தமிழகத்துக்கு வளமளிக்கவேண்டிய பருவ மழை தவறிவிட்டது. ஏரி குளம் குட்டைகள் வறண்டு கிடக்கின்றன. வயல்கள் வெடித்துக்கிடக்கின்றன. பல மாவட்டங்களில் எண்ணிடும்போதே கவலையும் கலக்கமும் மிகத்தான் செய்கிறது. எனினும், இந்த நிலையை மனத்திலே எண்ணி, இதம் தரும் பல செயல்களை அந்த இடங்களிலே மேற்கொள்ளும்படி திட்டமளிக்கப்பட்டிருக்கிறது. ‘தமிழ்நாடு’ என்ற பெயர் கிடைப்பதால் கிடைத்திடும் பெருமிதம் காலமெல்லாம் நிலைத்து நிற்கும்; நமது வழிவழி வருவோருக்கெல்லாம் நம்மைப் பற்றி அறிவிக்கும்; வரலாற்றில் இடம்பெறும்; பருவ மழை தவறுவதும் வறட்சி மிகுவதும் பஞ்ச நிலை தலைதூக்குவதும் என்றென்றும் இருப்பதல்ல; திங்கள் சில.

எனவேதான், தம்பி! எப்போதுமே எழுச்சியுடன் நடாத்திடும் பொங்கல் புதுநாளை இவ்வாண்டு புதியதோர் எழுச்சியுடன் கொண்டாடிடக் காரணம் இருக்கிறது என்பதனை நினைவுபடுத்துகின்றேன்.

உடையார்க்கே, - “விழாவெல்லாம் ஏழையர்க்கு ஏது?” என்ற கேள்வியிலே தொக்கியுள்ள நியாயத்தை நான் மறுப்பவனல்ல. தமிழகம் முழுவதும் விழாக் கோலம் கொள்ளக்கூடிய விதமான வளம் கொழித்திட வேண்டும் என்று விரும்புகிறேன்; அதற்கான வழிகள் யாவை என்பதுபற்றி ஆய்வாளர்களிடம் அறிவுரை கேட்டுப் பெறுகிறேன்; திட்டம் பல தீட்டப்படுகின்றன; ஆனால், அவற்றை நிறைவேற்றத் தேவைப்படும் பணம், இந்தியப் பேரரசிடமல்லவா முறையிடவேண்டி இருக்கிறது! முறையிடுகிறேன் - கனிவும் பணிவும் குறையாமல்; வம்பு வல்லடிப் போக்கு துளியுமின்றி - ஆனால் கிடைக்கிறதா? நிரம்ப காரணங்கள்! நியாயங்கள்! வாதங்கள்! எதற்கு? இவ்வளவுக்கு மேல் பணம் தருவதற்கு இல்லை என்பதற்கு! என் செய்வேன்? அண்ணன் ஏன் எப்போதும் கவலைப்பட்டபடி இருக்கிறான் என்று சில தம்பிகள் கேட்கவே செய்கிறார்கள். நான் கவலைப்படாமல் எப்படி இருக்க முடியும்?

ஆகவேதான் மாநிலங்கள் அதிக அளவில் அதிகாரங்களைப் பெறத்தக்க விதத்தில் இந்திய அரசியல் சட்டம் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்பதுபற்றி வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் எடுத்துக் கூறிவருகின்றேன். இதற்கான நல்லாதரவு நாளுக்கு நாள் வளர்ந்தபடி இருக்கிறது என்பதிலே எனக்குத் தனியானதோர் மகிழ்ச்சி. நமது கழகம் மட்டுமின்றி வேறு பல அரசியல் கட்சிகளும் இப்போது இதனை வலியுறுத்த முன்வந்துள்ளன. அரசியல் கட்சிகளைச் சாராத அறிவாளர் பலரும் இதற்கு ஆதரவு காட்டுகின்றனர். ‘நாம்’ அரசு நடாத்தியதால் கிடைத்திருக்கின்ற நற்பலன்களிலே இதனை ஒன்று என்றே நான் கருதுகின்றேன்.

தமிழகத்தின் தனித்தன்மைகள், சிறப்புகள் குறித்துப் பேசுவதனையே இந்திய ஒருமைப்பாட்டுக்குக் கேடு பயப்பதாகும் என்று பேசுவார் உளர் இங்குகூட! அங்கு உள்ளவர்கள் அக மகிழ்வார்கள் என்ற நினைப்பினர்! தமிழகத்திற்கென்று இருக்கின்றனவே தனிச் சிறப்புகள் - என் செய்வது? எப்படி மறப்பது? எப்படி மறைப்பது? “யாதும் ஊரே; யாவரும் கேளிர்”, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”, “மெய்ப் பொருள் காண்பது அறிவு”, “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்”, “கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு” இவற்றையெல்லாம் எங்ஙனம் மறந்திட இயலும்? வேறு எங்கும் இந்த எண்ணம் ஏற்படாத நாட்களில் இவை தமிழகத்திலே மலர்ந்தன என்ற உண்மையை எப்படி மறைக்க முடியும்? ஏன் மறைக்க வேண்டும்?

பொக்கிஷம் இந்த நூல்

- தினத்தந்தி

சோழர்கள் இன்று

வீட்டிலிருந்தபடி ரூ.500 ஜிபே செய்து, முகவரியை அனுப்பி, கூரியர் வழியே நூலை வாங்க வாட்ஸப் செய்யுங்கள் 👇

75500 09565

சிலர் எதிர்க் கூச்சலைக் கிளப்பியபடி இருப்பினும், இன்றையத் தமிழர், தமிழகத்தின் தனிச் சிறப்பினை பெருமளவிற்கு உணர்ந்து எழுச்சி பெற்றுவருகின்றனர். தமிழகத்து வரலாற்றுத் துறையிலும், இலக்கியத் துறையிலும், பண்பாட்டுத் துறையிலும் மேலும் மேலும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படின் தமிழரின் தனிச் சிறப்புகள் முழு அளவு கிடைக்கப்பெறும் என்பது மட்டும், அதனைத் தரணி அறிந்து போற்றிடத்தக்க வாய்ப்பும் மிகுந்திடும்.

இப்போதே, அமெரிக்க ஐரோப்பியப் பல்கலைக் கழகங்கள் பல, தமிழ்த் துறைக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றன. தமிழரின் தனிச் சிறப்புகளை ஆய்ந்தறியும் ஏற்பாடு, இங்கு இன்னமும் போதுமான அளவுக்கு மேற்கொள்ளப்படவில்லை. உலகமே ஏற்றுக்கொண்ட உயர் நூலாம் திருக்குறளுக்கான ஆராய்ச்சியேகூட அல்லவா இங்கு மேற்கொள்ளப்படாமலிருந்து வந்தது? ‘இதுகள்’ என்ற ஏளனத்தைச் சுமந்துகொண்டிருக்கும் ‘நாம்’ ஆட்சி நடத்தத் தொடங்கியதன் தொடர்பாக நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டிலே திரட்டிய பணத்தில் ஒன்பது இலட்சம் வெண் பொற்காசுகளைக் கொடுத்தல்லவா மூன்று பல்கலைக்கழகங்களையும் திருக்குறள் ஆராய்ச்சியில் ஈடுபடும்படி ஊக்குவித்திருக்கிறோம்!

வேறெல்லா விழாக்களும், ‘போகும் இடத்திற்காக!’ - பொங்கல் புதுநாள் ‘இருக்கும் இடத்திற்காக!’ என்பதனைத் தம்பி, ஆண்டு பலவாக நீ எடுத்துக் கூறிவந்திருக்கின்றாய். துவக்கத்திலே இது கேட்டு வெகுண்டெழுந்தோரெல்லாம் கூட, இப்போது, “உண்மைதானே!” என்று கூறிட முன்வந்துள்ளனர். பொங்கல் புதுநாளை ஒட்டி தம்பி, உன்னால் இயன்ற அளவுக்கு, தமிழரின் தனிச் சிறப்புகளைக் குறித்து எடுத்துரைக்கும் பணியிலே ஈடுபடக் கேட்டுக்கொள்கிறேன். நீ முயன்றால் முடியாததும் இருக்கிறதா! என்னையே முதலமைச்சர் ஆக்கிவிட முடிந்திருக்கிறதே உன்னால் - வேறு எதுதான் செய்திட உன்னால் முடியாது? முயன்றிடு! முனைந்திடு!

போலிப் பெருமைத் தேடிக்கொள்ளவோ, நாட்டின் பிற பகுதிகளைத் தரக்குறைவாகக் கருதுவதற்காகவோ அல்ல தம்பி! தமிழகத்தின் தனிச் சிறப்புகள் பற்றி நாம் அறிந்திட வேண்டும், அக மகிழ்ந்திட வேண்டும், எழுச்சி பெற்றிட வேண்டும் என்று நான் கூறுவது, பிற பகுதிகளும், உலகின் பல்வேறு நாடுகளும் கேட்டு இன்புறத்தக்க, அறிந்து மேற்கொள்ளத்தக்க பண்பாடு நம்முடையது, அத்தகைய கருவூலத்தை இழந்துவிடுவது நமக்கும் நாட்டுக்கும் மட்டுமல்ல; உலகுக்கே நட்டம் என்பதாலேயே, தமிழகத்துத் தனிச் சிறப்பு இயல்புகளை நாம் நன்கு அறிந்திட வேண்டும் என்று கூறிவருகிறேன். குறுகிய மனப்பான்மை என்கின்றனர் இதனை. அவர்கள் குறைமதியாளர் என்று கூறிடத் தோன்றுகிறது. பண்பாடு அந்த உணர்ச்சியைத் தடுத்து நிறுத்துகிறது. பிளவு மனப்பான்மை என்றும்கூடக் கூறுவார் உளர்! எதனை என்று பார்த்திடும்போது சிரிப்பே வருகிறது.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பண்பாட்டினை எடுத்துக்கூறுவது, பிளவு மனப்பான்மையாமே! யாழ், காது குடைச்சலை உண்டாக்குகிறது; தேன் குமட்டலைத் தருகிறது, தென்றல் வெப்பத்தை மூட்டுகிறது என்று கூறுவதுபோல அல்லவா இருக்கிறது, தமிழ்ப் பண்பாட்டுச் சிறப்பினை எடுத்துக்கூறுவது பிளவு மனப்பான்மையை மூட்டிவிடும் என்று கூறுவது? கூறுகின்றனர், உரத்த குரலிலேகூட! உயர்ந்த இடத்திலே இடம்பெற்றுவிட்டவர்களும்! ஆயின் என்ன? மிகப் பெரிய இடத்திலே உள்ளவர்கள் கூறுகின்றனரே, அவர்தம் கருத்துக்கு மாறாக நாம் நடந்துகொள்ளப்போமா என்ற எண்ணம் எழும்போது தம்பி! “நெற்றிக் கண்ணைக் காட்டிடினும் குற்றம் குற்றமே!” என்பது செவியினில் வீழ்கிறது. உண்மையை உரைத்தாக வேண்டும் என்ற உறுதி பிறக்கிறது. வான்கோழி கண்டால் வருத்தப்படுமே என்று எண்ணித் தோகையை கீழே உதறிப் போட்டுவிடுமா கலாப மயில்? காக்கைக்கு வருத்தமாக இருக்குமே என்பதற்காகப் பச்சைக் கிளி கருப்புப் பூச்சைத் தேடிக்கொண்டிருக்குமா? பிற நாடுகளும், நமது நாட்டின் பிற பகுதிகளும் பெற்றிராத கருத்துக் கருவூலத்தைத் தமிழகம் பெற்றிருக்கிறது என்பதனை எடுத்துக்காட்டுவது எந்த வகையிலும் தவறு அல்ல. எத்தகைய தீமையும் தந்திடாது எவருக்கும்.

தமிழரின் தனிச் சிறப்பினை அறிந்திடப் பயன்படும் நமது இலக்கியச் செல்வத்தை நினைவிற்கொள்ளவும், மற்றையோர்க்கு எடுத்துக் கூறவும் பொங்கல் புதுநாள் ஏற்றது என்பதாலேயே பெரியோர்கள் இதைத் தமிழர் திருநாள் என்றழைக்கின்றனர். பழம் பெருமை பேசிப் பெருமூச்செறிந்துகொண்டே செயலற்று இருப்பதல்ல நமது குறிக்கோள். செயலினால் பெற்றிடும் செழுமையை எடுத்துக் காட்டிடும் நன்னாளாம் பொங்கல் புதுநாளில், செயலார்வம் மிகுந்திடுவது இயல்பு. செயலும் செம்மையானதாக அமைந்திட வேண்டும், பயனும் சமூகம் முழுவதற்கும் கிடைத்திடத்தக்க முறை கண்டாக வேண்டும். வெள்ளம் அழித்திடும், வாய்க்கால் வளமூட்டும்; செல்வம் சிலரிடம் சென்று குவித்திடுவது வெள்ளத்துக்கு ஒப்பானது. அது கொண்டவனையும் அழித்திடும், சமூகத்தில் வலிவற்றோரையும் அழித்திடும். எனவேதான்  சிந்தனையாளர், “செல்வம் பெருக்கிட வேண்டும். அஃது முடக்கப்படாமல் சமூகம் முழுவதற்கும் பயன் அளிக்கக்கூடிய வழிமுறை கண்டாக வேண்டும்” என்று எடுத்துக் கூறினர்.  நமது அரசுகூட அந்தச் சமதர்ம இலட்சியத்தைப் போற்றுகிறது; நமது கழகம் சமதர்ம நெறியிலே நம்பிக்கையும் நாட்டமும் கொண்டிருக்கிறது. ஆனால், நடைமுறைக்குள் புகும்போது தம்பி, ஆயிரம் ஆயிரம் தடைகள் எதிர்ப்புகள், ஆபத்துகூட!

“ஆண்டவனே! ஏனோ எனக்கு இந்தச் சோதனை, இத்துணை வேதனை!” என்று ஏழை இறைஞ்சுகிறான். செல்வவான், “ஆண்டவன் அருளால் நான் பெருநிதி பெற்றேன். இதனைக் குறை கூறுவது தர்மமா?” என்று நியாயம் பேசுகிறான். மொரேவியா நாட்டில், “பணம் பெட்டியில் தூங்குகிறது; பணக்காரன் பட்டு மெத்தையில் தூங்குகிறான்; ஆண்டவன் சொர்க்கத்தில் தூங்குகிறார்; இல்லாவிடில் தெருவில் ஏன் இத்தனைப் பிச்சைக்காரர்கள்?” என்றோர் பழமொழி உண்டு. இந்த நிலை கண்டு மனம் வெதும்பிய நிலையில், “பொங்கலாம் பொங்கல்! யாருக்கு? ஏழைக்கு ஏது அந்த இன்பம்?” என்று நமது இளங்கவிஞர்கள் கேட்கின்றனர். அந்தக் கேள்வியிலே உருக்கமும் இருக்கிறது, உண்மையும் இருக்கிறது.

ஏழ்மை நெளிகிறது! அதிலும் வளம் பெற்றளிக்கும் பாட்டாளிகளிடம்! இது நீதியல்ல; தமிழர் நெறியுமாகாது. இந்நிலை மாறிட, எல்லோர்க்கும் வாழ்வில் இன்பம் கிடைத்திட நாம் ஒவ்வொருவரும் தத்தமக்குக் கிடைத்துள்ள வாய்ப்பிற்கு ஏற்ற முறையில் பணியாற்றிட வேண்டும். தமிழர் திருநாளில் தமிழர் அனைவரும் களிப்புடன் கலந்துகொள்ளத் தக்கதான சமுதாய அமைப்பு முறை காணப் பாடுபட்டாக வேண்டும். உவகை தந்திடும் இந்நாளில் இதற்கான உறுதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்நிலை, தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா எங்கணும் இருந்திடக் காண்கின்றோம்.

இதையும் வாசியுங்கள்... 3 நிமிட வாசிப்பு

தமிழ் ஓணம் ஆகுமா பொங்கல்?

சமஸ் | Samas 15 Jan 2023

இந்தியாவின் தொழில் பொருளாதாரம் 20 இலட்சம் பங்குதாரர்களின் கையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 500 முக்கிய கேந்திரத் தொழில்கள், நிதி ஸ்தாபனங்கள், கம்பெனிகளில் எடுத்துப்பார்க்கும்போது, அவற்றில் 3,128 டைரக்டர்கள் இருக்கிறார்கள். அவர்களை யார் என்று உற்றுக் கவனித்தால் 1,013 பேர்கள்தான் இந்த 500 கம்பெனிகளில் டைரக்டர்களாக இருக்கிறார்கள் என்பது புலப்படும். இந்த 1,013 டைரக்டர்கள் யார் என்று கவனித்தால் அவர்களில் 800-க்கு மேற்பட்டவர்கள் 20 குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவோ அவர்களுக்கு உட்பட்டவர்களாகவோ இருப்பதைச் சுலபத்தில் காணலாம். “இந்த 20 பெரிய திமிங்கலங்கள் பாங்குகளையும் இன்ஷூரன்ஸ் கம்பெனிகளையும் நிர்வகிப்பதன் மூலமாகவும், நம் தொழில், பொருளாதாரத்தின் தன்மையையும், வேகத்தையும், போக்கையும் நிர்ணயித்து நிர்வகிக்கும் சக்தி பெற்றவர்களாக விளங்குகிறார்கள்” என்று அசோக் மேதா சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதினார். இன்றைய நிலை, அதனைவிட மோசம் என்கின்றனர் நிபுணர்கள். ஆனால், இதனை மாற்றி அமைத்திடத்தக்க முறைகளை நமக்கு இந்திய அரசியல் சட்டம் போதுமான அளவுக்கு அளிக்கவில்லை. எனவேதான் “எங்களுக்கு ஏது பொங்கல்?” என்று ஏழை கேட்கும் நிலை நீடிக்கிறது.

கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் தக்க முறையிலே பயன்படுத்தினால், சமூகத்தை நிச்சயமாகத் திருத்தி அமைத்திடலாம். காலத்தை வீணாக்காமல் சமூகத் தொண்டாற்ற ஓர் துடிப்பு உனக்கு உண்டு என்பதனை உணர்ந்த உன் அண்ணன் இன்று உனக்குக் கனிவு நிரம்பிடும் வாழ்த்தினை அளிப்பதுடன், உன் இல்லத்துள்ளார் யாவருக்கும் வாழ்த்துக் கூறுவதுடன், நாடு வளம் பெற, சமூகம் சீர்பெற, சமதர்மம் மலர்ந்திட பாடுபடுவதற்கான உறுதியினை இன்று பெற்றிடுக என்றும் கூற விரும்புகிறேன்.

ஒரு நிமிடம்கூட வீணாக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நான் கூறுவதற்குக் காரணம், தம்பி! எங்கோ படித்ததாக நினைவு, “ஒரு நிமிடத்தில், விண்ணிலிருந்து 6,000 விண்கற்கள் விழுகின்றன; பூமி தன்னைத்தானே 950 மைல் வேகத்தில் சுற்றுகிறது; 100 பேர் இறந்துபடுகின்றனர்; 114 குழந்தைகள் பிறக்கின்றன. 34 திருமணங்கள், 16 விவாக விடுதலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன; 68 மோட்டார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன” என்பதாக. காலம் அத்துணை மதிப்பு வாய்ந்தது. கடமை உணர்ந்த நீ, காலத்தையே கனியச் செய்திடும் ஆற்றல் பெற்ற நீ, தமிழக அரசியலையே மாற்றி அமைத்த நீ, உன் கடமையைச் செய்வதிலே கண்ணும் கருத்துமாக இருப்பாய் என்பதனை நான் அறிவேன். எனினும், அண்ணன் என்ற உரிமையுடன் உனக்கு அந்தக் கடமையை நினைவுபடுத்துவது எனக்கோர் மகிழ்ச்சி தந்திடுவதுபோல உனக்கும் மகிழ்ச்சி தந்திடும் என்பதிலே ஐயப்பாடு இல்லை.

என்னைப் பொறுத்தமட்டிலே தம்பி, நலிவைத் தாங்கிக் கொண்டபடி என்னால் இயன்றதைச் செய்துகொண்டு வருகின்றேன். “தாத்தாவுக்கு ஏன் கை வலி தெரியுமா? எழுதுவதாலே!” என்று என் பேரன் மலர்வண்ணன் - என் மகன் டாக்டர் பரிமளம் பெற்ற செல்வம் - கூறுகிறான். உண்மைதான்! வலி இருக்கத்தான் செய்கிறது; ஆனால், தம்பிக்கல்லவா கடிதம் எழுதுகிறேன்! அது தனியானதோர் சுவையைத் தருகிறது.

மகிழ்ந்திரு! 

விழா நடத்திடு! 

வேலை மிகுதி இருக்கிறது என்ற நினைவுடன்.

அண்ணன்

12-1-69

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

பொங்கல் நாள் மாறிய மர்மம்
தமிழ் ஓணம் ஆகுமா பொங்கல்?
தமிழ் முஸ்லிம்களின் பொங்கல் கொண்டாட்டம் கொண்டிருக்கும் சேதி
கல்லணையில் கரிகாலனோடு கொண்டாட்டம்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சி.என்.அண்ணாதுரை

சி.என்.அண்ணாதுரை, சுதந்திர இந்தியாவில், தமிழ்நாட்டில் அமைந்த திராவிட இயக்க ஆட்சியின் முதல் முதல்வர். தாய்நிலத்துக்குத் தமிழ்நாடு எனும் பெயரை உத்தரவாதப்படுத்தியவர். ஏராளமான நூல்களின் ஆசிரியர்.


3

4





பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

VIJAYAKUMAR   3 years ago

என் மிகக்குறைந்த வாசிப்பில் ஆழி செந்தில்நாதன், கோர்கோ சட்டர்ஜி, சமஸ், தமிழ் இந்து வாயிலாகவே அண்ணாவை குறித்து அறிந்து கொண்டேன். பத்து வருட இதழியல் வாசிப்பில் அண்ணா அளவிற்கு புறக்கணிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லை என்று தோன்றுகிறது. ஒரு மறுபதிப்பு இல்லை; அதிகம் மேற்கோள் செய்யப்படுவது இல்லை. அவரின் எழுத்துக்கள் மறுபதிப்பு செய்யப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. கருத்துக்களை வெளிப்படுத்தும் எளிமையும் வாதங்களில் வெளிப்படும் புத்திக் கூர்மையும் அடிப்படை ஜனநாயக உணர்வும் அசர வைக்கின்றன. பேரறிஞர் என்ற சொல்லுக்கு பொருத்தமான அறிவுஜீவி அண்ணா. அவரைக் காட்டித் தந்தமைக்கு மேலிருக்கும் அனைவருக்கும் நன்றி.

Reply 10 0

Login / Create an account to add a comment / reply.

சுயமரியாதைநெகிழிகுற்றங்களும்டீம்வியூவர் க்யுக் சப்போர்ட்பிர்லா மந்திர்லவ் டுடே: செல்பேசி அந்தரங்கம் - ஆபாசம் - அநாகரீகம்தேர்தல் பிரச்சாரம்ஸ்டாலின் புத்தக வெளியீட்டு விழா ராகுல் பேச்சுலண்டன்எதிர்வினைஒலிஎம்.ஜி.ராமச்சந்திரன்ஊடக அரசியல்பரக் அகர்வால் நியமனத்தைக் கொண்டாட ஏதும் இல்லைகேலிச்சித்திரம்அருஞ்சொல் வாசக அனுபவங்கள்அடுக்ககம்தென்னகம் வஞ்சிக்கப்படுகின்றனவா?தமிழ்ப் பெயர்களின் தனித்துவம்பல் வலிக்கு என்ன செய்வது?ஒரே தலைநகரம்உலகின் மனசாட்சியான மாணவர் எழுச்சிகளச் செயல்பாட்டாளர்சீனப் பிள்ளையார்காணொலிமுதல்வர் கடிதம்ஆனந்த விகடன்ராஸ லீலாஐந்து மாநில தேர்தல்கூட்டணியாட்சி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!