வாழ்வியல், வேலையும் வாழ்வும் 8 நிமிட வாசிப்பு

உங்கள் சம்பளம் சரியானதுதானா?

ஸ்ரீதர் சுப்ரமணியம்
25 Dec 2021, 5:00 am
2

ஜினி இவ்வளவு சம்பளம் வாங்குகிறாரா? சல்மான் கான் சம்பளம் அவ்வளவா? சுந்தர் பிச்சைக்கு மாத சம்பளம் இத்தனையா? 

இப்படியெல்லாம் பலர் அங்கலாய்ப்பதைக் கேட்டிருப்போம். ஆயிரங்களில் சம்பளம் வாங்குவதற்கே முக்கி முனங்கும் நிறையப் பேருக்கு கோடிகளில் அனாயசமாக சம்பாதிப்பவர்களைக் கண்டு ஏக்கம் மேலிடுவதில் ஆச்சரியமில்லை.  

ஆனால், அது எப்படி சிலர் மட்டும் அதிகதிக சம்பளமும் பலர் குறுகுறுகிய சம்பளமும் வாங்குகிறோம் என்ற கேள்வி நம்மில் பலரிடையே இன்றளவும் தொக்கி நிற்கிறது. சந்தைப் பொருளாதாரச் சூழலில் இதற்கு ஓர் எளிய விடை இருக்கிறது.

நீங்கள் ஒரு பொருளை வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதற்கு நீங்கள் கொடுக்கும் விலை அது உங்களுக்குக் கொடுக்கும் பலனுக்கு நிகராக இருக்க வேண்டும். ஒரே ஒரு வாழைப்பழம் 100 ரூபாய்க்கு வாங்க மாட்டோம். அதேநேரம் ஒரு மொபைல் ஃபோன் 10,000 ரூபாய்க்குக் கூட வாங்க ஒப்புக் கொள்வோம். ஏன்?

ஒரு ஆப்பிள் ஐஃபோன் ஒரு லட்சம் ரூபாய் என்றால் ஆச்சரியப்படமாட்டோம். மாருதி கார் ஐந்து லட்சம் ரூபாய்; ஆனால் பென்ஸ் கார் ஐம்பது லட்சம் ரூபாய்!  "இது என்ன, ரெண்டுமே கார்தான். ரெண்டும் ஒரே வேலைதான் செய்யுது! ஆனால் ஏன் பத்து மடங்கு விலை?" என்று யாரும் கேட்பதில்லை. 

சந்தைப் பொருளாதாரத்தில் மனிதர்களும் ஒரு பண்டம்தான். அந்தப் பண்டத்துக்கு கொடுக்கும் விலை அந்தப் பண்டம் உருவாக்கும் மதிப்புக்கு நிகராக இருக்கும். இருக்க வேண்டும்!

உதாரணத்துக்கு ஒரு நடிகரை எடுத்துக் கொள்வோம். அவருக்கு சம்பளம் 30 கோடி ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். அவர் நடித்த படங்கள் குறைந்தபட்சம் ஏழு முதல் பத்து மடங்கு சம்பாதிக்க வேண்டும். அதாவது 180 முதல் 300 கோடி ரூபாய் வரை வசூலாக வேண்டும். அப்போதுதான் அவருக்குக் கொடுக்கும் அந்த சம்பளத்துக்கு பலன் இருக்கும். ஒருவேளை அடுத்தடுத்த படங்கள் 100 அல்லது 120 கோடி ரூபாய் வசூலில் முடிந்தால் அவரது சம்பளம் 15-20 கோடி ரூபாயாகக் குறையும்.

இதே ஃபார்முலா ஏறக்குறைய நம் எல்லாருக்கும் பொருந்தும். ஒரு நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதிக்கு மாத சம்பளம் 30 ஆயிரம் ரூபாய் என்றால் அவர் அந்தக் கம்பெனிக்கு மாதா மாதம் உருவாக்கும் மதிப்பு 1.8 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாயாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவருக்குக் கொடுக்கும் சம்பளத்துக்கு அர்த்தம் இருக்கும். 

இதனை மதிப்பு உருவாக்கல் (Value Creation) என்று சொல்வார்கள். நான் இங்கே 7 முதல் 10 மடங்கு என்று குறிப்பிடுகிறேன். ஆனால், இந்த விகிதம் நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும். சிலர் இரண்டு மடங்கு வந்தாலே போதும் என்று இருப்பார்கள். சிலர் 15-20 மடங்கு எதிர்பார்ப்பார்கள். இது நிறுவனங்களையும் அவர்கள் புழங்கும் துறையையும் பொருத்தது. 

நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் உங்களுக்கு ஊதியம் அதிகமாகக் கொடுப்பதில்லை என்று நம்புகிறீர்களா? எனில், நீங்கள் கேட்க வேண்டிய முதல் கேள்வி, உங்களது வேலை மூலம் நீங்கள் பணிபுரியும் நிறுவனத்துக்கு உருவாக்கும் மதிப்பு எவ்வளவு என்பதுதான். உங்கள் வேலை ஏதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அந்த வேலையைப் பணமாக மாற்றிக் கணக்கிட்டுப் பாருங்கள்.

உதாரணத்துக்கு நீங்கள் ஒரு ஐடி மென்பொருள் நிறுவனத்தில் ப்ராஜக்ட் மேனேஜராக இருக்கிறீர்களா? நீங்கள் மாதம் மேலாண்மை செய்யும் ப்ராஜக்ட்களில் இருந்து நிறுவனத்துக்குக் கிடைக்கும் வருமானம் எவ்வளவு என்று கணக்கிடுங்கள். மூன்று ப்ராஜக்ட்கள்: முதல் ப்ராஜக்ட் ரூ. 5  லட்சம். இரண்டாம் ப்ராஜக்ட் ரூ. 15 லட்சம். மூன்றாம் ப்ராஜக்ட் ரூ. 20 லட்சம். மொத்தம் ரூ. 40 லட்சம். இந்த ப்ராஜக்ட்களில் உங்களையும் சேர்த்து மொத்தம் 7 பேர் வேலை செய்கிறார்கள் எனில் சராசரியாக தலை உருவாக்கும் மதிப்பு ரூ. 5.7 லட்சம். உங்கள் சம்பளம் ரூ. 50,000 எனில் நீங்கள் உருவாக்கும் மதிப்பு உங்கள் சம்பளத்தைப் போல சுமார் 11 மடங்கு. 

இதுபோலக் கணக்கிட்டு உங்கள் சம்பளத்தைவிட நீங்கள் உருவாக்கும் மதிப்பு எவ்வளவு அதிகம் என்று பாருங்கள்!

1. நீங்கள் உருவாக்கும் மதிப்பு உங்கள் சம்பளத்தைவிட 10 மடங்குக்கும் அதிகம்!

அப்படியென்றால், உங்களுக்குத் தகுதிக்கும் குறைவான ஊதியமே கிடைக்கிறது. நீங்கள் உங்கள் ஊதியத்தை உயர்த்திக்கொள்வது பற்றி உங்கள் மேலாளரிடம் பேசலாம். அதற்குக் கொஞ்சம் நல்ல நேரம் பார்த்துக்கொள்ளுங்கள். ஒருவேளை உங்கள் நிறுவனம் அதற்குத் தயாராக இல்லாதபட்சத்தில் நீங்கள் வேறு வேலை தேடலாம். உங்கள் திறமைக்கும் மதிப்புக்கும் நிறைய போட்டி நிறுவனங்கள் உங்களை அரவணைத்துக்கொள்ளத் தயாராக இருப்பார்கள். 

2. நீங்கள் உருவாக்கும் மதிப்பு உங்கள் சம்பளத்தைவிட 5 - 7 மடங்கு உள்ளது!

அப்படியென்றால், உங்கள் ஊதியம் சரியான விகிதத்திலேயே  இருக்கிறது. ஆனால், இப்படியே இல்லாமல் இன்னும் கொஞ்சம் முயன்று உங்கள் மதிப்பை அதிகரிக்கும் வழிகளை நீங்கள் யோசிக்க வேண்டும். இதுகுறித்து உங்கள் சக ஊழியர்களிடமும், மேலாளரிடமும் நீங்கள் பேசலாம். கூடுதல் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளுதல், மேற்கொண்டு திறனை மேம்படுத்துதல், அதற்கு தேவைப்படும் பயிற்சிகளை மேற்கொள்ளுதல், மேலாளருக்கு சில பணிகளில் உதவுதல் என்று கூடுதல் முயற்சிகளை மேற்கொண்டு உங்கள் மதிப்பை அதிகரித்துக்கொள்ளலாம். 

3. நீங்கள் உருவாக்கும் மதிப்பு உங்கள் சம்பளத்தைவிட 2-3 மடங்குதான்!

உங்களுக்கு இப்போதைக்குக் கிடைக்கும் ஊதியமே அதிகம்தான். உங்கள் சம்பளத்தைவிட நீங்கள் அதிகம் கவலைப்பட வேண்டியது, உங்கள் வேலை இன்னும் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்பதைப் பற்றித்தான்! இல்லையேல் உங்களைவிட அதிக மதிப்பை உருவாக்கும் ஊழியரை உங்கள் நிறுவனம் விரைவிலேயே கண்டுபிடித்துவிடக் கூடும். அல்லது இந்தாள் மூலம் பெரிய பிரயோசனம் இல்லையே என்று கருதக்கூடும். அப்போது உங்களை வேலைக்கு வைத்திருப்பது விரயம் என்று புரிந்து கொண்டு விடுவார்கள். காரணம், உங்களுக்கு கொடுக்கும் சம்பளம் தாண்டியும் நிறுவனத்துக்கு செலவுகள் இருக்கின்றன. 

உங்கள் நிலை மூன்றாவதில் இருந்தால் உடனடியாக நீங்கள் உங்கள் மேலாளருடன் கலந்து ஆலோசித்து அவர் அறிவுரையைக் கேட்க வேண்டும். மதிப்பைக் கூட்டுவதற்கு உங்களுக்குத் தடையாக இருப்பது எது என்று கண்டறிந்து தேவைப்படும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சிகளை மேற்கொள்ளுதல், ஒழுங்குரீதியான மேலாண்மை முறைமைகளை அறிந்து பின்பற்றுதல், கவனச் சிதறல்களைக் களைதல் போன்ற முயற்சிகள் நீண்ட கால அடிப்படையில் பலன் அளிக்கும். 

நமக்குக் கிடைக்கும் சம்பளம் என்பது அதிர்ஷ்டத்தைப் பொருத்தது என்று பலர் நம்புகிறார்கள். ஆனால், அரசுத் துறை போன்ற சில துறைகளைத் தவிர பெரும்பாலான இடங்களில் சம்பளம் என்பது நம்மைப் பொருத்ததுதான். "நான் எவ்வளவு அதிகம் உழைக்கிறேனோ அவ்வளவு அதிகமாக என் அதிர்ஷ்டம் கூடுகிறது" என்று கால்மேன் காக்ஸ் என்ற அமெரிக்க அறிஞர் சொன்ன கூற்று உண்மையானது. 

அவர் சொன்னதை சற்றே திருத்தி, "என் நிறுவனத்துக்கு எவ்வளவு அதிகம் மதிப்பைக் கூட்டுகிறேனோ அவ்வளவு அதிகம் என் சம்பளம் கூடுகிறது" என்று புதிய மொழியை நாம் சேர்த்து சொல்லலாம். உங்கள் சம்பளத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள். அது நீங்கள் வேலைசெய்யும் நிறுவனத்தின் கவலை. நீங்கள் உங்கள் நிறுவனத்துக்கு உருவாக்கும் மதிப்பு குறித்து கவலைப்படுங்கள். உங்கள் சம்பளத்தைத் தானாகவே அதிகரிக்க அதுதான் நேரடியான வழிமுறை!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ஸ்ரீதர் சுப்ரமணியம்

ஸ்ரீதர் சுப்ரமணியம், மென்பொருள்துறையில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு, தற்பொழுது தொழில்முனைவோராக இருக்கிறார். கணிதப் பட்டப் படிப்பு, மென்பொருள் மற்றும் இதழியல் துறைகளில் பட்டயப் படிப்பு; இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் ப்ரூக்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் இலக்கிய ஆய்வில் முதுகலைப் பட்டம் என்று பல துறைகளிலும் கால் பதித்தவர். சமூகவலைதளங்களில் தீவிரமாக எழுதிவருபவர். ‘ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்’, ‘பாதி நிரம்பிய கோப்பை’, ‘ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்’ ஆகிய நூல்களின் ஆசிரியர்.


3

4

1
பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Muhammed Abdullah T S    3 years ago

சேவை நிறுவனமாக இருந்தால்,, eg, Maintenance.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Umamaheswari   3 years ago

மிகவும் முக்கியமான பார்வை , ஆனால் அரசுத் துறைகளிலும் சமீப காலமாக ஊதியம் குறித்தான தவறான பார்வை முன் வைக்கப்படுகிறது .நல்ல கட்டுரை

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

பொருளாதார நிலைநீராற்றுபா.வெங்கடேசன் சிறுகதைகிரைமியாசெர்ட்டோலிபுதிய நாடாளுமன்றத்தில் ஒளி எங்கே?காங்கிரஸின் பொருளாதார மாடல்ஒரு தேசம்இந்துத்துவ ஸ்வாமிஜியா விவேகானந்தர்?நம் மாணவர்கள்?ஜெய்பூர்ஜெயங்கொண்டம்குவாண்டம் இயற்பியல்இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம்மேற்கத்திய ஞானம்ஃபாலி சாம் நாரிமன்திட்ட அனுமதி200 கேள்விகள்சந்திப்பிழைசமந்தா நாக சைதன்யாமெதுவடைநெல்மோடியைக் கலவரப்படுத்திய காங்கிரஸ் அறிக்கைகாதில் இரைச்சல்தேர்தல் பத்திரம்யூரியாராகுல்ஹண்டே அருஞ்சொல்நோய்த்தொற்றுபாகிஸ்தான் அரசமைப்பை அறிவீர்களா?

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!