வாழ்வியல், இரு உலகங்கள் 8 நிமிட வாசிப்பு

ஹனி... எனக்கு நீ மட்டுமே உலகம் இல்லை!

அராத்து
25 Dec 2021, 5:30 am
1

 

ரு உலகங்கள். இது ஆணும் பெண்ணும் மாறிமாறி தங்கள் அபிலாஷைகளை, புகார்களை, எதிர்பார்ப்புகளை, குற்றச்சாட்டுக்களை வெளிப்படையாக அப்படியே முன்வைக்கும் தொடர். அரசியல் சரித்தன்மைக்கோ, சமநிலை உணர்வுக்கோ இதில் இடமில்லை. ஆண்களைப் பெண்களும், பெண்களை ஆண்களும் புரிந்துகொள்ள ஏதுவாக அவரவரைச் சுற்றியுள்ள உலகத்தை அப்படியே பேசுகிறது. பின்னர், விவாதங்கள், உரையாடல்கள் நடக்கும். பெண்களின் சார்பில் அனுஷா எழுதினார். இப்போது ஆண்களின் சார்பில், அராத்து எழுதுகிறார். அடுத்து, பெண்கள் தரப்பு - ஆண்கள் தரப்பு என்று இந்த உரையாடலும் விவாதமும் தொடரும்.

ண் – பெண் உறவுச் சிக்கலில் மிக முக்கியமான இன்னொரு புள்ளி – பொது விஷயங்களைப் பெண்கள் பெரும்பாலும் பொருட்படுத்தாமல் அவமதிப்பது!

அறம், மதிப்பீடுகள், பொதுநலன் இப்படியான விஷயங்களில் ஒப்பீட்டளவில் ஆண்கள் அளவுக்குப் பெண்கள் ஆர்வம் காட்டுவதில்லை; அவற்றுக்கு மதிப்பும் கொடுப்பதில்லை; பெண்கள் பெரும்பாலும் பொதுநலனைவிட சுயநலத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருக்கிறார்கள் என்று சொல்வதில் எனக்குத் தயக்கமே இல்லை. ஏன் இந்த விஷயத்தை இவ்வளவு கோபமாக ஆரம்பிக்கிறேன் என்றால், பொது விஷயங்களில் ஈடுபடும் ஒவ்வோர் ஆணும் வீட்டில் இந்தச் சிக்கலை எதிர்கொள்கிறான்.

பொதுநலன் என்றால், ஏதோ மாநிலம் அல்லது நாடு தழுவிய ஒரு விஷயமாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை; ஒரு சிறு குழு சார்ந்ததாகக்கூட அது இருக்கலாம்; அல்லது நண்பர்களுக்கு, தெரிந்தவர்களுக்கு உதவுவதாகக்கூட இருக்கலாம். ஒருகாலத்தில் வீட்டுக்கு வெளியே பெண்கள் ஏதேனும் காரியங்களில் ஈடுபட்டால் அதைச் சகித்துக்கொள்ள முடியாத ஆண்களைப் பற்றி நாம் நிறையப் பேசியிருக்கிறோம். இன்றைக்கு அது அப்படியே ஆண்களை நோக்கித் திரும்புகிறது என்று என்னால் சொல்ல முடியும். பொதுச் செயல்பாடு எதுவுமே பெரும்பான்மையான பெண்களுக்கு உவப்பானது அல்ல. அத்தகைய செயல்களில் ஓர் ஆண் ஈடுபடும்போதெல்லாம் முகத்தை அஷ்டகோணலாக்கி வெறுப்பை உமிழ்ந்தபடியே இருப்பார்கள். எந்த ஓர் உதவி செய்தாலும் அதில் தங்களுக்கு ஏதேனும் ஆதாயம் கிடைக்குமா என்று பார்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.

உங்கள் வாழ்க்கை அல்லது உங்கள் சுற்றம் நட்புக்களின் வாழ்க்கையை எடுத்துக்கொள்ளுங்கள். தன்னைவிடப் பெரும் பணக்காரர் அல்லது அதிகாரம் மிக்கவர் அல்லது குறைந்தபட்சம் செல்வாக்கு / புகழ் மிக்கவர்களோடு பழகுவதைக் கருணை உள்ளத்தோடு அனுமதிப்பார்கள். அவர்களுக்கு உதவி செய்யும்போது முகம் இளிக்கும். ஆனால், இதனால் பலன் ஏதும் இல்லை என்று தெரியும் ஒருவருக்கு உதவச் சென்றால், உடனடி எதிர்வினை முகச்சுளிப்பும், புலம்பலும்தான்!

பொதுவாகவே ஒரு சமூகமாகவே கூடி வாழ்தல், இணைந்து வாழ்தல் போன்றவற்றுக்குப் பெண்களுக்கு ஒத்துவராதுபோல என்று எண்ணும் அளவுக்கெல்லாம் பலரது செயல்பாட்டை நான் பார்த்திருக்கிறேன். என்னுடைய நண்பர்களுடன் – இருபாலரும்தான் – மனம்விட்டு பேசியதன் அடிப்படையிலேயே இதை எழுதுகிறேன். உங்களுக்கு இது ஏற்புடையதாக இல்லை என்றால், நீங்கள் உங்களுடைய பெண் நண்பர்கள் சிலருடன்கூட விவாதித்து முடிவெடுங்கள். “எனக்கு அவன் முக்கியம், அப்படின்னா அவன் எனக்குத்தான் இல்லையா? எனக்கே அவன் இன்னும் முழுசா தன்னைக் கொடுக்காதப்போ நான் எப்படி அவனை இன்னொருத்தருக்குக் கொடுக்க முடியும்?” இப்படிக் கேட்ட என்னுடைய தோழி ஒருத்தியை உடனிருந்த எல்லாத் தோழிகளுமே ஆதரித்தபோது நான் மிரண்டுபோனேன். அந்த உரையாடல் போய் முடிந்த இடத்தில் நான் எடுத்த முடிவு, ‘செக்ஸ் டிசிப்ளின் இருந்தால், பெண்கள் தங்களுடைய ஆண்களை எதற்கும் அனுமதிப்பார்கள்!’ 

திருமணத்தை மீறிய பாலுறவை இந்தத் தொடரில் நான் ஆதரிக்கவில்லை. ஆனால், திருமணத்துக்குள் மட்டுமே உறவு வைத்துக்கொள்பவனுக்கு இந்தச் சமூகத்தில் கிடைக்கும் அதிகாரம் எப்படி வேறு பல சமூகத் தீமைகளில் அவன் ஈடுபடுவதற்கு லைஸென்ஸ் ஆக இருக்கிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறேன். கமிஷன், ஊழல், கொலை, கொள்ளை இவ்வளவு குற்றச்சாட்டுகளையும் கொண்ட ஓர் அரசியல்வாதிக்கு நம் சமூகத்தில் உள்ள இடத்தை ஒரேயொரு விடியோவில் யாரோ ஒரு பெண்ணுடன் உறவில் ஈடுபட்டிருக்கும் காட்சியுடன் பிடிபடும் அரசியல்வாதியை ஒப்பிட்டுப்பாருங்கள். எது நம் சமூகத்தில் பெரிய குற்றமாகப் பார்க்கப்படுகிறது?

இதை மேலும் கொஞ்சம் நீட்டித்து எடுத்துச்சென்றால், ‘உடலுறவில் ஒழுக்கம்’ பேணும் ஒருவன் எதையும் செய்யும் அதிகாரத்தைக் குடும்பங்களே இங்கே கொடுக்கின்றன என்பதையும், பெண்தான் மறைமுகமாக இங்கே அந்த லைசென்ஸைக் கொடுக்கும் இடத்தில் இருக்கிறாள் என்பதையும்கூட புரிந்துகொண்டுவிடலாம்.

பெரிய சோஷலிஸம் பேசிக்கொண்டிருந்தவள் அவள். அந்தக் கொள்கையில் சிறு நாட்டம் இல்லாத, இன்னும் சொல்லப்போனால், அவள் பாஷையில் எல்லோரையும் சுரண்டும் ஓர் ஆணுடன் எந்த லஜ்ஜையும் இன்றி ஆனந்தமயமாகக் குடும்பம் நடத்துவதைப் பார்த்திருக்கிறேன்; ‘உனக்கு என்னப்பா பிரச்னை; என்கிட்ட நல்லா இருக்கான்ல, இப்போதான் நானே வாழ்க்கையைப் புரிஞ்சுக்கிட்டிருக்கேன்!’ என்கிறாள். இரவில் சீக்கிரம் வந்துவிடுகிறான், சனி – ஞாயிறு இரண்டு நாட்களும் விடுமுறை. இப்போதெல்லாம் அவளும் ஞாயிற்றுக்கிழமை தோழர்களோடு வகுப்புக்குச் செல்வதை நிறுத்திவிட்டாள்.

இதை அப்படியே உல்டா ஆக்குங்கள். அவன் ஒரு சோஷலிஸ்ட் ஆக இருந்து, நாளெல்லாம் உழைத்துக் கொட்டுவதோடு, ஞாயிற்றுக்கிழமையும் எங்கேயாவது வகுப்புக்குப் போகிறேன் என்று சொன்னால், இவளுக்கு அப்படி ஏதும் ஆர்வம் இல்லாது இருந்தால், என்னவாகும்? ரகளைதான் நடக்கும்!

அப்படித்தான் பல வீடுகளில் நடக்கிறது. ‘என்னைப் பாருடா, சரி வெளியே போகணுமா, இரு நானும் வர்றேன்!’

தன்னைத் தாண்டி ஒரு உலகம் இருப்பதே தெரியாமல் இருப்பதோடு, ஆண்களுக்கு அப்படி ஒரு உலகம் இருப்பதையும் அழித்தேவிடுகிறார்கள் பல பெண்கள். இது ஆண்களிடம் கடும் மனச்சுமையை உருவாக்கிவிடுகிறது.

வீடும் வேண்டும், சமூகமும் வேண்டும். இதை இரு தரப்பாரும் புரிந்து நடந்துகொள்ளலாம். அப்படி நடந்துகொண்டால் பல பிரச்சினைகளுக்கு இடமே இருக்காது!

நண்பர்கள் கூடியிருந்த ஒரு நாளில் நாங்கள் சும்மா விளையாட்டுக்கு ஓர் ஆய்வில் இறங்கினோம். ‘ஆண்களின் பாலியல் ஒழுக்கம்’ சம்பந்தமான ஆய்வுதான். அப்போது முடிவுக்கு வந்த விஷயங்கள் இவை.

ஆண் இனத்தில் பல வகைமைகள் உண்டு. அதற்கேற்றார்போல அளவுகளும், எல்லைகளும் மாறலாம். ஆனால், ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலைப்பாட்டில் ஒருத்தனும் கிடையாது. இதைப் பெரும்பாலான ஆண்கள் வெளிப்படையாகவும், பெருமையாகவும் சொல்வதைப் பார்த்திருப்பீர்கள். இதை ஒழுக்கவியல் சம்பந்தப்பட்ட விஷயமாகவோ, அதிரடியாக ஏதாவது சொல்லி ஆண்களை அசிங்கப்படுத்துவதாகவோ எண்ணக் கூடாது. நாங்கள் பேசிக்கொண்டதைப் பகிர்கிறேன். நான் சொல்வதை அப்படியே நேரடியாகப் புரிந்துகொண்டு, எல்லா ஆண்களும் மனைவிக்குத் துரோகம் செய்துவிட்டு அடுத்த பெண்களுடன் படுத்துக்கிடக்கிறார்கள் என்றோ, எப்போதும் அலைந்துகொண்டிருக்கிறார்கள் என்றோ புரிந்துகொள்ளக் கூடாது. மனைவியுடன் மட்டுமே உறவு வைத்துக்கொண்டு இறக்கும் பல ஆண்கள் இருக்கிறார்கள். என்ன நடக்கிறது என்பதல்ல நான் சொல்வது. என்ன நினைக்கிறார்கள்? அவர்கள் மனவார்ப்பு, மனச்சாய்வு எப்படி இருக்கிறது? இதைத்தான் சொல்கிறேன்.

சில ஆண்கள் நாகரீகம், ஒழுக்கம் சார்ந்து தங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ளலாம். சிலருக்கு வானளவு மனதில் ஆசைகள் மண்டிக்கிடந்தாலும் வாய்ப்பு கிடைக்காததால் ராமச்சந்திரமூர்த்தியாக இயற்கை எய்தலாம்.

இது ஓர் உண்மை என்றால், இன்னோர் உண்மை இன்னும் அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கலாம். அது என்ன? வெளியே சமூக வாழ்க்கையில் தகிடுதத்தங்களில் ஈடுபடும் ஆண்களே பெரும்பாலும் வீட்டில் ‘உறவு ஒழுக்கம்’ பேணுகிறார்கள். இப்படி உறவில் ஒழுக்கசீலனாக இருந்துவிட்டால், அவளுக்கு அவன் முழுத் திருப்திக்குரியவனாகச் செயல்பட்டுவிட்டால், அவனுடைய இணைக்கு வேறு எந்தப் பெரிய பிரச்சினைகளும் பெரும்பாலும் இருப்பது இல்லை. இதை அந்தக் கூட்டத்தில் இருந்த என்னுடைய தோழிகளும் உறுதிப்படுத்தினார்கள்.

"என்னதான்டா சொல்ல வர்றே?" என்றுதானே கேட்க வருகிறீர்கள்? தன்னுடைய இணையிடம் நல்ல பெயர் வாங்குவது இன்றைக்கெல்லாம் உண்மையான மதிப்பீடுகளுக்கு உட்பட்ட விஷயமாக மட்டும் இல்லை என்கிறேன். மேலும், ஆண் – பெண் உறவுச் சிக்கலில் எவ்வளவோ காரணங்கள் வெளியே பேசப்பட்டாலும், செக்ஸ் முக்கியமான பங்கு வகிக்கிறது என்கிறேன்.

ஆண் - பெண் உறவுச்சிக்கலில் பலதரப்பட்ட வேற்றுமைகள் இருந்தாலும், ‘செக்ஸ்’ ஒரு பிரதான பங்கு வகிக்கிறது. பல பிரச்சினைகளுக்கு இதுவே மூல காரணம். 80% பிரச்சினைகள் செக்ஸை சார்ந்தே இருக்கின்றன. மனதளவிலும் உடலளவிலும் காதல், செக்ஸ் மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகள் திருப்தியாக இருந்தால் மற்ற பிரச்சினைகள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன அல்லது பல சமயங்களில் ஒன்றுமேயில்லாமல் போய்விடுகின்றன.

வீட்டு வேலையைப் பகிர்ந்துகொள்வதில்லை தொடங்கி நண்பர்களோடு ஊர் சுற்றுகிறான் என்பது வரை பல நூறு குற்றச்சாட்டுகளைப் பெண்கள் சூப்பர் மார்கெட் பில்போல நீட்டினாலும், காதலும் காமமும் ஒழுங்காக இருந்தால் மற்றதெல்லாம் மண்ணாங்கட்டிக்கு சமானம்! ஆண்களுக்கும் செக்ஸ் முக்கியம் என்றாலும், செக்ஸ் மட்டுமே அவர்களுக்குப் பிரதானமாக இருப்பதில்லை. இதை முழுமையாக ஆண்கள் உணரும்போது அவர்கள் கடும் அழுத்தத்துக்குள் செல்கிறார்கள். விஷயம் இப்போது தலைகீழாக மாறுகிறது. தன்னை நோக்கி இழுக்க பெண் கொடுக்கும் அழுத்தம் அவளிடமிருந்து ஆண் விலகவே வழிவகுக்கிறது. எப்படியெல்லாம் இந்த விலகல் நடக்கிறது?

(அடுத்த வாரம் பேசுவோம்!)

அராத்து

அராத்து, தமிழ் எழுத்தாளர். டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றுகிறார். 'பிரேக் அப் குறுங்கதைகள்', 'ஓப்பன் பண்ணா' உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.


2

22


பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Karunamoorthy   1 year ago

//தன்னை நோக்கி இழுக்க பெண் கொடுக்கும் அழுத்தம் அவளிடமிருந்து ஆண் விலகவே வழிவகுக்கிறது// 100% உண்மை. சில சமயம் மூச்சு திணறுகிறது வைக்கிறார்கள்! அப்படியே அத்துக்கிட்டு ஓடிடலாம்னு தோணும்!

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

அதிகம் வாசிக்கப்பட்டவை

மொபைல்மென் இந்துத்துவம் என்னும் மூடத்தனம்அமுல்பொதுத் துறை வங்கிகள்பிராமணர்கள்செல்வ புவியரசன் கட்டுரை2ஜிமேடைக் கலைவாணர்வலங்கைமான் ஷண்முகசுந்தரம் பிள்ளைரஜினிகாந்த்தமிழ்நாட்டைப் பிரிக்கலாமா சமஸ் கட்டுரைஸ்ரீசங்கராச்சாரியார்dr ganesanபெட்ரோல்சமஸ் ராஜன் குறையஷ்வந்த் சின்ஹாபாமினி சுல்தான்ஸ்விக்கி ட்ரான்ஸியன்ட் ஃபெசிலிட்டிராசேந்திரன்மாநில அரசுமாய-யதார்த்தம்மேலாதிக்கம்புற்றுநோய்தமிழால் ஏன் முடியாது?தேசிய குடும்ப நலம்: நல்லதுஇறப்புஎழுத்தாளர் ஜெயமோகன்பொருளாதாரப் பரிமாணம்பெகஸஸ்உறுதிமொழி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!