கட்டுரை, ஆரோக்கியம், வரும் முன் காக்க 4 நிமிட வாசிப்பு

நான் அம்மா ஆகவில்லையே, ஏன்?

கு.கணேசன்
28 Apr 2024, 5:00 am
0

ரு தம்பதிக்குக் குழந்தை இல்லாத தன்மையில் இரு வகை உண்டு. முற்றிலுமாக குழந்தை பிறக்காமலேயே போய்விடுவது (Primary sterility) ஒரு வகை. கரு கலைந்தோ, ஒரு குழந்தை பிறந்த பிறகோ குழந்தை பாக்கியம் இல்லாமல் போவது (Secondary sterility) அடுத்த வகை. இந்த இரண்டில் முதலாம் வகையைச் சரிசெய்வதுதான் மருத்துவர்களுக்குப் பெரிய சவால்.

ஆணுக்கு விரைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்குப் பெண்ணுக்குச் சூலகங்களும் (Ovaries) இருக்க வேண்டும். பெண்ணின் இடுப்புப் பகுதியில் கருப்பைக்கு வலது, இடது பக்கங்களில் கருக்குழாயின் (Fallopian tube) இரு முனைகளிலும் பலாக்கொட்டை போன்று தொங்கிக்கொண்டிருக்கின்றன இரண்டு சூலகங்கள்.

இவற்றில் ஒவ்வொரு மாதமும் சுமார் 30 சினைமுட்டைகள் உற்பத்தியாகின்றன. ஒவ்வொரு சூலகத்திலிருந்தும் மாதம் ஒருமுறையாக மாறி மாறி சினைமுட்டைகள் முதிர்ச்சி அடைந்து அருகில் உள்ள ஈர்ப்புக்குழாய்களுக்குச் (Fimbriae) செல்கின்றன. ஆனாலும், ஒரே ஒரு சினைமுட்டை மட்டுமே கருக்குழாய்க்குள் நுழைய முடிகிறது.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

குழந்தை உருவாகும் அதிசயம்!

சென்ற வாரம் பார்த்ததை மீண்டும் இப்போது நினைவுக்குக் கொண்டுவருகிறேன். மாதாமாதம் 28 நாள்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு ஏற்படும் ஒரு பெண்ணுக்கு, மாதவிலக்கு ஆன நாளிலிருந்து 12வது நாள் முதல் 17வது நாள் வரை ‘நல்ல நேரம்’! ஆம்! ஒரு பெண்ணின் சினைப்பையிலிருந்து சினைமுட்டை வெடித்து வெளிவந்து, இந்த நாட்களில் ஏதாவது ஒருநாளில் கருக்குழாய்க்கு வந்து காத்திருக்கும். வெடித்து வெளிவந்த பின் இரண்டு நாட்களுக்குத்தான் அது உயிரோடு இருக்கும். அதற்குள் ஆண், பெண் கலவி நடந்தால்தான் விந்தணு சினைமுட்டையுடன் கலந்து கரு உருவாக முடியும். அதற்குத்தான் இந்த நாட்களை ‘நல்ல நேரம்’ என்று சொன்னேன்! பொதுவாக, 10ஆம் நாளிலிருந்து 20ஆம் நாள் வரை இரண்டு நாள்களுக்கு ஒருமுறை இணைந்தால் கரு உருவாகிற வாய்ப்பு கிடைக்கும். 

இப்படித் தாம்பத்தியம் சரியாக நடக்கும்போது ஆணின் உயிர்த் திரவம் கருப்பை வாய்க்கு அருகில் கொட்டப்படுகிறது. அதிலுள்ள உயிரணுக்கள் எனும் வீரர்கள் ‘வெற்றி அடைந்தே தீருவோம்’ என்று வீராவேசமாகப் புறப்பட்டுச் செல்லும் போர்வீரர்களைப் போல எப்படியும் சினைமுட்டையை அடைந்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு கருப்பைக்குள் நுழைவார்கள். பாதி தூரம் போனதும் பாதி ‘வீரர்கள்’ களைப்படைந்து பயணத்தை நிறுத்திக்கொள்வார்கள். மீதிப் பேர்தான் பயணத்தைத் தொடர்வார்கள். இவர்கள் மட்டுமே சினைமுட்டையின் ‘கோட்டைக் கத’வை மோதிப் பார்ப்பார்கள். ஆனால், ஏதாவது ஒருவருக்குத்தான் அதிர்ஷ்டம் கிடைத்து ‘கோட்டைக் கதவு’ திறந்து வழிவிடும். இது முதல்கட்ட அதிசயம்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

நான் அப்பா ஆகவில்லையே, ஏன்?

கு.கணேசன் 21 Apr 2024

சினைமுட்டைக்குள் அதிர்ஷ்டக்கார ‘மாவீரன்’ நுழைந்த மறுகணமே, முட்டி மோதும் மற்ற ‘வீரர்கள்’ உள்ளே நுழைவதைத் தடுக்க, சினைமுட்டையின் கோட்டைக் கதவு மூடிக்கொள்வது இன்னொரு அதிசயம். மணமேடையில் காத்திருக்கும் மணமகளைப்போல சினைமுட்டையில் அதன் உட்கருவான ‘இளவரசி’ காத்திருப்பார். உள்ளே புகுந்த ‘மாவீரன்’ அந்த இளவரசியின் கழுத்தில் ‘மாலையிட’ கரு எனும் புதிய உயிர் உருவாகிறது. பிறகு அது கருப்பைக்கு வந்து, சமத்தாக அமர்ந்து, சிசுவாக வளர்ந்து, குழந்தையாக இந்த பூமியில் ஜனிப்பது கடைசி கட்ட அதிசயம்.

பெண்ணுக்கு ஏற்படும் தடைகள்

மருத்துவ நியதிப்படி, திருமணமாகித் தாம்பத்தியத்தில் திருப்தியாக இருந்துகொண்டிருக்கும் ஒரு தம்பதிக்கு இரண்டு வருடங்கள் கழித்தும் குழந்தை இல்லை என்றால்தான் அவர்களுக்குப் பிரச்சினை இருப்பதாகக் கருத வேண்டும். ஆனால், நடைமுறையில் திருமணமான மறுமாதமே ‘விஷேசம் இல்லையா?’ என்று கேட்டுத் தம்பதிகளைத் தலைகுனிய வைக்கும் குடும்பங்களை அதிகம் பார்க்கிறோம். இந்த நிலைமை மாற வேண்டும்.

வீட்டைச் சுற்றி நான்கு பக்கமும் சுவர் எழுப்பினால்தான் வீட்டுக்குப் பாதுகாப்பு கிடைக்கும். அதுபோல் உயிரணு, சினைமுட்டை, கருக்குழாய், கருப்பை இந்த நான்கும் சரியாக அமைந்தால்தான் ஒரு தம்பதிக்குக் குழந்தை பாக்கியம் கிட்டும். பெண்ணைப் பொறுத்த அளவில் ஆரோக்கியமான சினைமுட்டை உருவாக வேண்டியது மிக முக்கியம்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

இரவுத் தூக்கம் குறைவது ஏன்?

கு.கணேசன் 10 Dec 2023

சிலருக்குச் சினைமுட்டை உருவாகாமல் போகலாம். அப்படியே உருவானாலும் அது கருக்குழாய் வழியாக கருப்பைக்கு நகர்ந்து வருவதில் ‘வேகத்தடைகள்’ இருக்கலாம். புயல் கரை கடந்தாலும் அடை மழை விடாத மாதிரி சிலருக்கு உயிரணுவும் சினைமுட்டையும் இணைந்து கரு உருவானாலும், அது கருப்பைக்கு வந்து தங்கமுடியாத சூழல் அமையலாம்.

ஓர் உயிரணுவானது பெண்ணுறுப்பு வழியாக கருப்பையை அடைந்து, கருக்குழாய் வரை நீந்திச் சென்றால்தான் கரு உருவாக முடியும். சில பெண்களுக்கு உயிரணு நீந்திச் செல்ல முடியாத அளவுக்கு அந்த வழியில் தடைகள் இருக்கலாம். இன்னும் சிலருக்கு பேரிக்காய் வடிவத்தில் சற்றே முன்னோக்கி வளைந்திருக்க வேண்டிய கருப்பை, பிடிக்காத ஒருவரைப் பார்க்க நேரும்போது நாம் முகத்தைத் திருப்பிக்கொள்வதுபோல் பின்னோக்கி வளைந்துவிடும். குழந்தை கருப்பையில் தங்காமல் போவதற்கு இந்தத் தவறான அமைப்புகளும் காரணம் ஆகலாம்.

கருப்பையில் கிருமித்தொற்று ஏற்பட்டாலும், நார்க்கட்டிகள் (Fibroids) வளர்ந்தாலும் குழந்தையில்லாக் குறை உண்டாகலாம். இன்னும் சிலருக்குக் காசநோய் / பால்வினைநோய் காரணமாக கருக்குழாய் அடைத்துக்கொள்ளும்; பெண்ணுறுப்பில் ஏற்படும் கிருமித்தொற்றால் அங்குள்ள திரவம் அமிலத்தன்மைக்கு மாறி உயிரணுவை அழிக்கும். இதனாலும் குழந்தை இல்லாமல் போகும்.

ஹார்மோன் கலாட்டா!

பெரும்பாலான பெண்களுக்கு மாதச்சுழற்சி சரியாக அமையாமல் போவதுதான் குழந்தை இல்லாமல் போவதற்கு முக்கியக் காரணம். இதற்கு ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்ட்ரான், தைராய்டு, பிட்யூட்டரி ஹார்மோன்கள் செய்யும் கலாட்டாதான் காரணமாக இருக்கும். இன்றைய நவீன வாழ்வியலில் வேலைக்குப் போகும் பெண்களுக்கு மன அழுத்தம் இருக்கிறது. இரட்டை வேலைச்சுமை, ‘சீரியல் போதை’, நவீன ‘கேட்ஜட்ஸ்’களால் இவர்களுக்கு இரவுத் தூக்கம் தள்ளிப்போகிறது.

மேலும், இப்போதைய பெண்களிடம் புகைபிடிப்பதும் மது அருந்துவதும் அதிகரித்துவருகிறது. இவை அனைத்தும் ஒன்றுகூடி ஹார்மோன் சுரப்பைக் கலைத்துவிடுவதால், சொருகாணி சரிந்துபோன சக்கரம்போல் மாதச்சுழற்சி தடுமாடுகிறது. இன்னும் பலருக்கு உடற்பருமன், நீரிழிவு, பி.சி.ஓ.டி., ரத்தசோகை, பிறவிக் கருப்பை குறைபாடு இருக்கும். திருமணத்துக்கு முன்பே இவற்றைச் சரிப்படுத்திவிட வேண்டும். இல்லாவிட்டால், அவரவர் உடல் தன்மையைப் பொறுத்து குழந்தை உண்டாவதில் சிக்கல் ஏற்படும்.

தவிரவும், இப்போது பத்து வயதிலேயே பெண்கள் பருவமடைவதும், தாமதமாகத் திருமணம் செய்துகொள்வதும், முதல் குழந்தை பெறுவதைத் தள்ளிப்போடுவதும் இந்தத் தலைமுறைப் பெண்களுக்குக் குழந்தையில்லாக் குறையைக் கொண்டுவருகின்றன. பொதுவாக, பெண்களுக்கு 15 – 30 வயது வரை சினைமுட்டை உண்டாவது சரியாக நடக்கும். அதற்குப் பிறகு அதன் வேகம் / தரம் குறைந்துவிடும்.

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

கருப்பை... கவனம்!

கு.கணேசன் 02 Oct 2022

பரிசோதனைகள் என்னென்ன?

மருத்துவர்கள் தைராய்டு உள்ளிட்ட ஹார்மோன்களை அளக்கும் ரத்தப் பரிசோதனைகள், அல்ட்ரா சவுண்ட், கருப்பையைக் காணும் பரிசோதனை, அதைச் ‘சுத்தம்’ செய்யும் பரிசோதனை, கருக்குழாய் அடைப்பைக் கண்டறியும் பரிசோதனை, லேப்ராஸ்கோப்பி, பிஜிடி (PGD), பிஜிஎஸ் (PGS), இஆர்ஏ (ERA) பரிசோதனைகள் எனப் பெண்ணின் தேவையைப் பொறுத்து மேற்கொள்கின்றனர். இவை சொல்லும் காரணத்தைப் பொறுத்து சிகிச்சைகளைச் சொல்கின்றனர்.

சிகிச்சைகள் என்னென்ன?

சினைமுட்டை சரியாக வெளிவராதவர்களுக்கு ஹார்மோன் மாத்திரைகள் / ஊசிகள் தரப்படும். கருப்பையில் குறைபாடு இருந்தால், அதைச் ‘சுத்தம்’ செய்வது உள்ளிட்ட சில சிகிச்சைகள் மூலம் குழந்தையில்லாக் குறை நீங்கிவிடும். கருக்குழாயைப் பொறுத்தவரை, இரண்டில் ஒன்று அடைப்பில்லாமல் இருந்தாலே போதுமானது; இரண்டிலுமே அடைப்பு என்றால், அறுவை சிகிச்சை தேவைப்படும். இந்த வழிகளில் எல்லாம் குழந்தை உருவாக வழி இல்லை என்றால், அடுத்தகட்டமாக ‘செயற்கைக் கருத்தரிப்பு முறை’கள் கைகாட்டப்படும்.

ஆனாலும், பல பெண்கள் ஆரோக்கியமான உணவுமுறை மூலம் உடற்பருமனைக் குறைத்தும் சரியான வாழ்க்கைமுறை மூலம் மன அழுத்தங்களைத் தவிர்த்தும் குழந்தைப் பேறு இல்லாத குறையை முடிவுக்குக் கொண்டுவந்திருக்கின்றனர். ஆகவே, முதலில் இந்த முயற்சிகளில் இறங்குவதே நல்லது.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

பி.சி.ஓ.எஸ்: இளம்பெண்களின் பிரச்சினை!

கு.கணேசன் 31 Jul 2022

சிகிச்சைக்குப் போகிறீர்களா?

பலரும் குழந்தையின்மை பிரச்சினைக்கு நவீன மருத்துவத்தில் மட்டுமில்லாமல் சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி போன்ற மாற்று மருத்துவமுறைகளிலும் நம்பிக்கை வைத்து சிகிச்சைக்குச் செல்வது உண்டு. அதேசமயம் இதற்கான பரிசோதனைகள், சிகிச்சை முறைகள் அனைத்துமே மிகவும் நுணுக்கமான விஷயங்கள் என்பதால், பல மருத்துவர்களைப் பார்த்துச் சலிப்படைவதற்குப் பதிலாக, ஒரு மருத்துவரை அணுகிப் பொறுமையுடன் சிகிச்சை பெறுவது அவசியம்.

சிகிச்சை முறைகளை அடிக்கடி மாற்றிக்கொண்டிருந்தால் பணம் போகும்; நேரம் விரயமாகும்; பெண்ணுக்கு ஆரோக்கியம் கெடும். சிகிச்சை முறை எதுவானாலும், தகுதியான திறமையான அனுபவமிக்க அறம் நிறைந்த மருத்துவரைத் தேர்வுசெய்து தம்பதிகள் இருவரும் சேர்ந்து சிகிச்சைக்குச் சென்றால் குழந்தைப் பேறு கைகூடும்.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள் 

நான் அப்பா ஆகவில்லையே, ஏன்?
நீரிழிவு: பெண்கள் ஏன் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?
இரவுத் தூக்கம் குறைவது ஏன்?
தைராய்டு குறைவாகச் சுரப்பது ஏன்?
கருப்பை... கவனம்!
பெண்கள் கவனம்!
பி.சி.ஓ.எஸ்: இளம்பெண்களின் பிரச்சினை!

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கு.கணேசன்

கு.கணேசன், பொது நல மருத்துவர்; மருத்துவத் துறையில் உலகளாவிய அளவில் நடக்கும் மாற்றங்களை ஆழ்ந்து அவதானித்து, எளிய மொழியில் மக்களுக்கு எழுதும் பணியில் ஈடுபட்டிருப்பவர்; ‘சர்க்கரைநோயுடன் வாழ்வது இனிது!’, ‘நலம், நலம் அறிய ஆவல்’, ‘செகண்ட் ஒப்பினீயன்’ உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: gganesan95@gmail.com


3






கடலோரப் பகுதிஜனநாயகம்ரத்த ஓட்டம்ஸ்டார்ட் அப்சியுசிஇடி – CUCETதேர்தல் ஆணையத்தில் தன்னாட்சி அவசியம்மாநில வருவாய்உலகளாவிய வளர்ச்சிமுரண்பாடுபிரிவு 356கடினமான காலங்கள்வாக்குச் சாவடி குழுக்கள்பெரிய மாநிலம்ஹேக்லேம்டா: ஆபத்தா? அடுத்தகட்டப் பாய்ச்சலா?ஓப்பன்ஹெய்மர்: குவாண்டம் முரண்பாடுகளின் திரைப்படம்சஞ்சீவ் சன்யால் கட்டுரைகல்வியும் வாழ்வியலும்அரசமைப்புச் சட்டப் பிரிவு 370கருத்தொற்றுமைமத்திய பிரதேசம்ஜோத்பூர்பிளவுப் பள்ளத்தாக்குதமிழ்நாடுமுற்காலச் சேரர்கள்விஜயகாந்த் - அருஞ்சொல்மற்றும்மிலிட்டரி புரோட்டாஅஸ்வின் சொல்ல விரும்புவது என்ன?தேர்தல்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!