கட்டுரை, ஆரோக்கியம், வரும் முன் காக்க 5 நிமிட வாசிப்பு

நான் அப்பா ஆகவில்லையே, ஏன்?

கு.கணேசன்
21 Apr 2024, 5:00 am
0

பீஸ் ஸ்ட்ரெஸ்! அலுவல் அழுத்தம்! இயந்திரகதியில் இயங்கிக்கொண்டிருக்கும் இன்றைய வாழ்வியலில் அடிக்கடி பேசப்படும் வார்த்தைகள் இவை. நாட்டில் மென்பொருள் சார்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் படையெடுத்த பிறகு, ஓய்வில்லாத உழைப்பு இன்றைய தலைமுறைக்குத் தேவைப்படுகிறது. விடுப்பு கிடைக்காத அளவுக்கு வேலைப்பளு, குறுகிய காலத்தில் அதிக இலக்கு அடைய ஓடுவது, திறமைக்குச் சரியான அங்கீகாரம் கிடைக்காதது, உறக்கமில்லாத இரவுகள்… இப்படிப் பல காரணங்களால் ‘அலுவல் அழுத்தம்’ இவர்களை ஆட்டிப் படைக்கிறது. அத்தோடு, பணிச்சூழலும் குடும்பச்சூழலும் சரியாக அமையாத பலருக்கும் மன அழுத்தம் ஏற்படுகிறது.

இந்த அழுத்தங்களால் ரத்த அழுத்தம் உயர்வதிலிருந்து குடும்ப உறவுகளில் சிக்கல் ஏற்படுவது வரை பல்வேறு பிரச்சினைகள் முளைப்பது அநேகருக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால், அதே அழுத்தங்கள் ஆண்களுக்கு உயிரணுக்களையும் அழிக்கும் என்பதுதான் பலருக்கும் தெரியவில்லை. உயிரணுக்களின் உற்பத்தி நிலையங்கள் விரைகள் என்றால், அவற்றுக்கான மூலப்பொருட்கள் செம்மையாகச் செயல்படும் ஹார்மோன்கள்.

செடியின் வேரில் கொதிக்கும் நீரைக் கொட்டினால் என்ன ஆகுமோ அதுபோலத்தான் மன அழுத்தம் ஹார்மோன் சுரப்பையே சிதைத்துவிடுகிறது. இதுதான் அவர்களை அப்பா ஆகவிடாமல் தடுக்கிறது.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

இளமையில் நீரிழிவு - உஷார்!

தற்போதைய புள்ளி விவரப்படி, இளமையில் நீரிழிவு ஏற்படுவது பெண்களைவிட ஆண்களுக்கே அதிகம். இடைவிடாத பணிச்சூழலில் இன்றைய ஆண்கள் பலரும் நீரிழிவைக் கட்டுப்படுத்தத் தவறுகின்றனர். ரத்தச் சர்க்கரைக் கூடக்கூட அது உயிரணுக்களின் மரபணுக்களை அழித்துவிடுகிறது. இவர்களுக்கு டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன் குறைவாகவே சுரக்கிறது.

இது உயிரணு உற்பத்தியைக் குறைக்கிறது. பாலியல் இச்சை குறைந்துபோகிறது. சரியாகக் கவனிக்கப்படாத நீரிழிவு பாலியல் நரம்புகளைத் தின்றுவிடுவதால் ஆண்மைக் குறைவு ஏற்படுகிறது. இப்படி ஒரு சங்கிலிப் பின்னல் பாதிப்பு அவர்கள் அப்பா ஆவதைத் தடுக்கிறது.

என்னிடம் சிகிச்சைக்கு வந்த குணசேகர் ஒரு நீரிழிவுக்காரர். அவருக்கு உயிரணுக்கள் அளவு சரியாகவே இருந்தது. அவர் மனைவியிடமும் எந்தக் குறையுமில்லை. என்றாலும், அவர் அப்பா ஆவது தள்ளிப்போனது. தொடர்ச்சியான பரிசோதனைகளில் அவருடைய பிரச்சினை எனக்குப் புலப்பட்டது. தாம்பத்தியத்தின்போது வெளிவரும் ‘உயிர்த் திரவம்’ (Semen) அவருக்குக் குறைவாக இருந்தது.

காரணம், இவருக்கு அது பின்னோக்கிப் பயணித்து சிறுநீர்ப்பைக்குச் சென்றுவிடுகிறது. குணசேகருக்கு மட்டுமல்ல, நீரிழிவுள்ள நிறைய ஆண்களுக்கு இந்த நிலைமை இப்போது ஏற்படுகிறது. மருத்துவர்கள் இதை ‘ரெட்ரோகிரேட் எஜாகுலேஸன்’ (Retrograde Ejaculation) என்கிறார்கள். இதனால் அவர்கள் சீக்கிரத்தில் அப்பா ஆக முடியாமல் தவிக்கிறார்கள்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

ரத்தச் சர்க்கரை குறைவது ஏன்?

கு.கணேசன் 21 Jan 2024

இணையும் காலம் முக்கியம்!

குழந்தை உண்டாவதற்கு ‘ஜோடிகள்’ இணையும் காலம் முக்கியம். இதையும் இவர்கள் சரியாகத் தெரிந்துகொள்வதில்லை. பணிச்சூழல் காரணமாகத் தம்பதிகள் பிரிந்திருப்பது, சேர்ந்தே வாழ்ந்தாலும் வேலைப்பளு காரணமாக இரவில் வீட்டுக்குத் தாமதமாக வருவது, களைப்பு / மதுப்பழக்கம் காரணமாக மனைவியைக் கண்டுகொள்ளாமல் இருப்பது போன்றவற்றால் ஆண்கள் பலரும் அந்த ‘நல்ல நேர’த்தைத் தவறவிடுகின்றனர். (பெட்டிச் செய்தி - 1 காண்க). இந்த நிலைமையால் பலருக்கும் அப்பா ஆவது தள்ளிப்போகிறது.

குழந்தைப் பருவத்தில் பெரியம்மை / அம்மைக்கட்டு வருவது, புகுந்த வீட்டுக்குப் போக மறுக்கும் மணப்பெண்ணைப் போல விரைகள் விரைப்பைக்கு வராமலிருப்பது, விரைப்பையில் சிரைக்குழாய்கள் சுருண்டுகொள்வது (Varicocele), உயிர்த் திரவக்குழாய் அடைத்துக்கொள்வது, வெப்பமான சூழலில் வேலை பார்ப்பது, தவறான பெண் தொடர்புகள் என உயிரணுக்களுக்கு உலை வைக்கும் காரணிகள் வீதியில் விரிக்கப்பட்ட வெடிச்சரம்போல் நீளும்.

மாசடைந்த காற்றுகூட உயிரணுக்களை அழிக்கிற சூறாவளிதான். வாகனம் கக்கும் புகை, பிளாஸ்டிக் பொசுங்கும்போது பிறக்கும் டயாக்ஸின், காற்றில் கலக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்ற காற்று மாசுக்களைச் சுவாசிக்கும்போது, அந்த நச்சுகள் ‘செர்ட்டோலி’ செல்களைச் சிதைத்து உயிரணுக்கள் உற்பத்தியைக் குறைக்கும்.

ஓர் ஆண் அப்பா ஆவதைத் தடுக்க இத்தனை எதிரிகள் அணிதிரண்டு வந்தாலும், நவீன மருத்துவத்தில் சத்தான உணவைச் சாப்பிடுவதில் தொடங்கி, உயிரணு தானம் பெறுவது வரை பலதரப்பட்ட சிகிச்சைகள் கரம் கொடுக்கக் காத்திருக்கின்றன. அவற்றின் மூலம் அவர்களும் மழலைச் செல்வத்தை மடியில் ஏந்த முடியும்.

அப்பா ஆக என்ன தேவை?

முதல் தேவை ஆணின் உயிரணுக்கள் சரியான அளவிலும் ஆரோக்கியத்துடனும் இருப்பது. அவற்றின் நீந்தும் வேகம் (Motility) தேவைக்கு இருப்பது. பெண்ணைப் பரிசோதிப்பதற்கு முன்பு முதல் காரியமாக ஆணுக்குரிய இந்த விவரங்களைத் தெரிந்துகொள்வது. அதற்கு உயிர்த் திரவப் பரிசோதனை (Semen Test) மேற்கொள்வது. (காண்க: பெட்டிச் செய்தி – 2).

அடுத்ததாக, விரைப்பையில் கோளாறு இருந்தால், அல்ட்ரா சவுண்ட் மற்றும் திசுப் பரிசோதனை தேவைப்படும். உயிரணுவின் உற்பத்திக் குறைவுக்கு ஹார்மோன்கள்தான் காரணம் என்றால், அவற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். உயிரணு மரபுக் கீற்றுகளில் (Chromosomes) பிழை இருக்க வாய்ப்பிருந்தால், மரபணு பரிசோதனை பரிந்துரைக்கப்படும்.

உணவே மருந்து!

பொதுவாக உணவு, உடற்பயிற்சி, உறக்கம், ஓய்வு சரியாக அமைந்து, மன அழுத்தம், புகைப்பழக்கம், மதுப்பழக்கம் எனும் முப்படைத் தாக்குதல்கள் இல்லாதிருக்கும் ஆணுக்குத் தரமான உயிரணு உண்டாவதில் தடையேதும் இருப்பதில்லை.

உணவைப் பொறுத்தவரை, செயற்கை நிறங்களைச் சுமந்துவரும் அந்நிய உணவுகள் அறவே வேண்டாம். அவை ஆடிமாதக் காற்றுபோல உயிரணுக்களைச் சின்னாபின்னமாக்கிவிடும். பாரம்பரிய சிறுதானிய உணவுகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். அவை மண்ணைத் தொடாத மழைத்துளிபோல் பரிசுத்தமானவை; உயிரணுக்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கும்.

இயற்கைப் புரதங்களை விரும்பிச் சாப்பிடுங்கள். பருப்பு, பயறு, பட்டாணி தேவைக்குச் சாப்பிடலாம். பாக்கெட் பால் வேண்டாம். வீட்டில் கறந்த பால் நல்லது. உளுந்து கலந்த உணவுகளும் பாலில் ஊறவைத்த 6 பாதாம்களும் அன்றாட உணவில் இடம் பெற்றால், உயிரணுக்கள் ஊட்டம் பெறும். எல்லாவிதக் கீரைகள், பழங்களைச் சேர்த்துக் கொள்ளவும். தினமும் ஒரு முட்டை, வாரம் இருமுறை ஆட்டிறைச்சி சாப்பிடலாம்; மாட்டிறைச்சி வேண்டாம். அது மலட்டுத்தன்மையைக் கொடுக்கும்! கேரட், பீட்ரூட், அவரை, பீன்ஸ், தேனில் ஊறவைத்த பேரீச்சை அவசியம். ஒவ்வாமை இருந்தால் மீன் வேண்டாம்!

உணவில் ஃபோலிக் அமிலம், கோஎன்சைம் Q10, எல்-கார்னிட்டின், துத்தநாகம், ஜின்செங், வைட்டமின்-இ போன்ற ஊட்டச்சத்துகளும் இருக்க வேண்டும். இவற்றில் ஃபோலிக் அமிலம் என்பது கர்ப்பிணிகளுக்குத் தேவைப்படும் சத்து; கருக்குழந்தைக்கு நரம்புகளின் வளர்ச்சிக்கு உதவும் முக்கியமான வஸ்து. இப்போது இது ஆண்களுக்கும் தேவை என்கிறார்கள். மரபணுக் கோளாறு காரணமாக உயிரணுவில் பிரச்சினை ஏற்படுவதற்கு இந்த அமிலத்தின் அளவு குறைவாக இருப்பதே காரணம் என்பது புதிய கண்டுபிடிப்பு. ஃபோலிக் அமிலம் மிகுந்துள்ள உணவுகளை அதிகப்படுத்திக் கொண்டால் இந்தப் பிரச்சினையைச் சரிப்படுத்திவிடலாம். உயிரணுவுக்கு நீந்தும் திறன் குறைவாக இருந்தால் கோஎன்சைம் Q10 சத்து பலன் தரும். உயிரணு எண்ணிக்கையைக் கூட்ட வைட்டமின்-இ உதவும்.

பருமன் ஆகாமல் பார்த்துக்கொள்வதும், நீரிழிவைக் கட்டுப்படுத்துவதும் தரமான உயிரணுவுக்கு உத்திரவாதம் தரும். தாழம்பூவைக் கொஞ்சம் தள்ளிவைத்தால் வாசனை போய்விடுமா, என்ன? அதுபோலத்தான் புகை / மதுப்பழக்கத்தைக் கொஞ்சமே குறைத்துக்கொண்டால் மட்டும் அப்பா ஆகிவிட முடியாது. அந்தப் பழக்கங்களை அறவே நிறுத்த வேண்டும். அதுதான் முக்கியம்.

அடுத்த முக்கியம் இது: ஊடகங்களில் போதிக்கும் போலி மருத்துவர்களிடம் சென்று எழுச்சி மாத்திரைகள் எனும் பெயரில் ஸ்டீராய்டு மாத்திரைகளை வாங்கிச் சாப்பிட்டு ஏமாறக் கூடாது.

உதவிக்கு வரும் நவீன சிகிச்சைகள்

விரைப்பையில் சிரைக்குழாய்கள் சுருண்டிருந்தாலோ, உயிர்த் திரவக்குழாய் அடைத்துக் கொண்டிருந்தாலோ, அறுவை சிகிச்சையில் சரிசெய்துவிடலாம். ஹார்மோன்கள் பிரச்சினை செய்தால் அதைத் தீர்க்கவும் நவீன மருந்துகள் நிறைய உண்டு. மாற்று மருத்துவத்திலும் சிகிச்சை உண்டு.

இப்போதெல்லாம் கோடிக்கணக்கான உயிரணுக்களில் ஒரே ஓர் உயிரணு ஆரோக்கியமாக இருந்தால்கூட, அதைத் தேடிப்பிடித்துப் பயன்படுத்தி, ஓர் ஆணின் மலட்டுத்தன்மையைப் போக்கிவிட முடியும். அந்த அளவுக்குச் செயற்கைக் கருத்தரிப்பு முறைகள் (IVF) முன்னேறியுள்ளன. அவற்றில் டிஇஎஸ்எ (TESA), ஐசிஎஸ்ஐ (ICSI), டிஇஎஸ்இ (TESE) சிகிச்சைகள் பிரதானம். பெருநகரங்களில் பெருகிவரும் கருத்தரிப்பு மையங்களில் தரமும் அறமும் அனுபவமும் உள்ளதைத் தேர்ந்தெடுத்து சிகிச்சை பெற வேண்டியது எல்லாவற்றையும்விட முக்கியம்.

அடுத்து, குழந்தை இல்லாக் குறைக்குப் பெண் சார்ந்த காரணங்களும் இருக்கின்றன. அவை என்னென்ன?

அது அடுத்த வாரம்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

இரவுத் தூக்கம் குறைவது ஏன்?

கு.கணேசன் 10 Dec 2023

இணைகளுக்கு நல்ல நேரம்!

மாதாமாதம் 28 நாள்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு ஏற்படும் ஒரு பெண்ணுக்கு, மாதவிலக்கு ஆன நாளிலிருந்து 12வது நாள் முதல் 17வது நாள் வரை ‘நல்ல நேரம்’! ஆம்!

ஒரு பெண்ணின் சினைப்பையிலிருந்து சினைமுட்டை வெடித்து வெளிவந்து, இந்த நாட்களில் ஏதாவது ஒருநாளில் கருக்குழாய்க்கு வந்து காத்திருக்கும். வெடித்து வெளிவந்த பின் இரண்டு நாள்களுக்குத்தான் அது உயிரோடு இருக்கும்.

அதற்குள் ஆண், பெண் கலவி நடந்தால்தான் விந்தணு சினைமுட்டையுடன் கலந்து கரு உருவாக முடியும். அதற்குத்தான் இந்த நாள்களை ‘நல்ல நேரம்’ என்று சொன்னேன்! பொதுவாக, 10ஆம் நாளிலிருந்து 20ஆம் நாள் வரை இரண்டு நாள்களுக்கு ஒருமுறை இணையர்கள் இணைந்தால் பலன் கிடைக்கும்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

இளவயது மாரடைப்பு ஏன்?

கு.கணேசன் 31 Dec 2023

ஆரோக்கிய உயிர்த் திரவம் (Normal Semen Count) எது?

  • உயிர்த் திரவம் 2 மி.லி. இருக்க வேண்டும்.
  • அது காரத்தன்மையில் இருக்க வேண்டும்.
  • அதில் ஒரு மி.லி.க்கு குறைந்தது 15 மில்லியன் உயிரணுக்கள் இருக்க வேண்டும்.
  • 30% உயிரணுக்கள் தரத்துடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும்.
  • அவற்றில் 50% உயிரணுக்கள் நன்றாக நீந்தும் திறனைப் பெற்றிருக்க வேண்டும்.
  • மேற்சொன்ன அளவுகள் உலகச் சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ள குறைந்தபட்ச அளவுகள்.
  • இயற்கையாகவே அப்பா ஆக இந்த அளவுகள் முக்கியம்.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

ரத்தச் சர்க்கரை குறைவது ஏன்?
நீரிழிவு: பெண்கள் ஏன் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?
கோடையில் பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும், ஏன்?
இரவுத் தூக்கம் குறைவது ஏன்?
இளவயது மாரடைப்பு ஏன்?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கு.கணேசன்

கு.கணேசன், பொது நல மருத்துவர்; மருத்துவத் துறையில் உலகளாவிய அளவில் நடக்கும் மாற்றங்களை ஆழ்ந்து அவதானித்து, எளிய மொழியில் மக்களுக்கு எழுதும் பணியில் ஈடுபட்டிருப்பவர்; ‘சர்க்கரைநோயுடன் வாழ்வது இனிது!’, ‘நலம், நலம் அறிய ஆவல்’, ‘செகண்ட் ஒப்பினீயன்’ உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: gganesan95@gmail.com


2


உங்களைப் போன்றோர் தேவை சாருகல்வெட்டுகள்ஒடிஷாஅக்கறையுள்ள கேள்விகள்பிட்ரோடாயாருடைய ஆணை?மருத்துவர் கணேசன்பிரசாந்த் கிஷோர்federalismமீண்டும் தலையெடுக்குமா இந்திய சோஷலிஸ இயக்கம்?வாக்கு வங்கிதிராவிடக் கதையாடல்ஷுபாங்கி கப்ரே கட்டுரைஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்இந்திய நீதித் துறைஅப்பாவுவின் யோசனை இந்திய ஜனநாயகத்துக்கு முக்கியமானமதவாதப் பேச்சுகள்கலைத் துறைபொருட்சேதம்கால் வலிசுகுமாரன் கவிதைகள்: காலி அறையில் மாட்டிய கடிகாரம்நடிகர்கள்ஊரகப் பொருளாதாரம்வர்ண தர்மம்நவீன வாழ்வியல் முறைகாளைகளுக்கான சண்டைஅசோக் கெலாட்ப.திருமாவேலன்சரண்ஜித் சிங் சன்னிஜனநாயகப் பண்பு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!