கட்டுரை, தொடர், ஆரோக்கியம், வரும் முன் காக்க 5 நிமிட வாசிப்பு

பி.சி.ஓ.எஸ்: இளம்பெண்களின் பிரச்சினை!

கு.கணேசன்
31 Jul 2022, 5:00 am
0

ண்மைக் காலமாக, மக்கள் மத்தியில் பரவலாகிவரும் மருத்துவச் சொற்களில் ‘பி.சி.ஓ.எஸ்.’ (PCOS) முக்கியமானது. அதிலும் திருமணத்துக்குக் காத்திருக்கும் பெண்களுக்கும், அண்மையில் திருமணமான பெண்களுக்கும் இந்த வார்த்தை தெரிந்திருக்கிறது. அவர்களின் பெற்றோருக்கும் இந்தப் பெயர் அத்துப்படி!  

அது என்ன ‘பி.சி.ஓ.எஸ்.’?

‘பாலிசிஸ்டிக் ஒவேரியன் சின்ட்ரோம்’ (Poly Cystic Ovarian Syndrome). இதன் சுருக்கப் பெயர்தான் ‘பி.சி.ஓ.எஸ்.’ தமிழில் சொன்னால், சூலக நீர்க்கட்டி. ‘கட்டி’ என்றதும் பயந்துவிட வேண்டாம். பெண்களுக்கு ஏற்படும் கட்டிகளில் ஆபத்து இல்லாத கட்டி இது. 

இருபது வருடங்களுக்கு முன்புவரை பரம்பரை காரணமாக எங்கோ, எவருக்கோ ஏற்படும் ‘பி.சி.ஓ.எஸ்.’, தற்போதைய வாழ்க்கைமுறை மாற்றங்களால், ‘இது யாருக்குத்தான் இல்லை?’ என்று கேட்கும் நிலைமைக்கு மோசமாகிவிட்டது.  

புள்ளிவிவரப்படி சொன்னால், திருமண வயதில் உள்ள பெண்களில் 20% பேருக்கு இது இருக்கிறது. திருமணமான பெண்களுக்குக் குழந்தை ‘தங்காமல்’ போவதற்கு இதுதான் முக்கியக் காரணம். குறிப்பாக, இது உடற்பருமன் உள்ள பெண்களைத்தான் அதிகமாகக் குறிவைக்கிறது.

கருப்பையின் இரண்டு பக்கமும் பாதாம் பருப்பு அளவில் தலா ஒரு சூலகம் (Ovary) இருக்கிறது. பருவமான பெண்களுக்கு மாதாமாதம் ‘விலக்கு’ ஏற்படுவதற்கும், மணமான பெண்களுக்குக் குழந்தை உண்டாவதற்கும் சினைமுட்டையை (Ovum) மாதம் ஒன்று வீதம் உருவாக்கித் தரும் அட்சயப் பாத்திரம் இது. 

சூலகச் சுரப்பிகள் பெண்ணுக்கான ஈஸ்ட்ரோஜென், ப்ரோஜெஸ்டிரான் ஹார்மோன்களைச் சுரப்பதோடு, ஆணுக்கான ஆன்ட்ரோஜெனையும் சிறிதளவு சுரக்கின்றன. அளவோடு கொட்டும் குற்றால அருவியில் குளிப்பது சுகமாக இருக்கும்; ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவியில் குளித்தால் ஆபத்துதானே வரும்? அதுமாதிரி உடற்பருமன் உள்ள பெண்களுக்கு ஆன்ட்ரோஜென் ஹார்மோன் அளவில்லாமல் சுரக்கும்போது பி.சி.ஓ.எஸ். ‘ஆஜர்’ ஆகி பிரச்சினை செய்கிறது.

நீர்க்கட்டியின் ஊற்றுக்கண்!

இன்றைக்குப் பள்ளி, கல்லூரிகளில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறைந்துவிட்டது. படிக்கும் காலத்தில் தொடங்கும் இந்தப் பழக்கம் வேலைக்குச் செல்லும்போதும் தொடர்கிறது. படிக்கும் காலத்திலாவது நடந்து செல்வது, சைக்கிள் ஓட்டுவது எனச் சில பழக்கங்கள் இருக்கும். வேலைக்குச் சென்றதும், அவையும் மறைந்துவிடும். உடற்பயிற்சிக்கு நேரமே இருக்காது.

அடுத்து, அவர்கள் அலுவலகத்தில் நீண்ட நேரம் அமர்ந்தே வேலை செய்யும்போது, உடல் உழைப்பு குறைந்துபோகிறது. போதாக்குறைக்கு கேன்டீன் சாப்பாடு, நேரங்கெட்ட நேரத்தில் நொறுக்குத் தீனிகள், இரவில் துரித உணவுகள் என எல்லாமே அணி சேர்ந்து இவர்களுக்கு உடல் எடையைக் கூட்டிவிடுகின்றன. இதுதான் சூலக நீர்க்கட்டிக்கு ஊற்றுக்கண்ணாகிறது.

மேலும், அலுவலகத்தில் ‘வொர்க்ஹாலிக்’காக இருப்பது, தொழில் போட்டியில் ஜெயிக்கப் புதுப்புது யோசனைகளைச் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம், சக்திக்கு மீறிய இலக்குகள், அவற்றை எட்டுவதற்கு மேற்கொள்ளும் தூக்கம் இல்லாத வாழ்க்கை, அவற்றால் ஏற்படும் மன அழுத்தம், அதைக் குறைக்க சிகரெட், மது, வார இறுதிக் கொண்டாட்டம் என இன்றைய இளம் பெண்களின் வாழ்க்கைமுறை நிறையவே மாறிவிடுகிறது. இதனால், அவர்களுக்குச் சுரக்கிற ஹார்மோன்களுக்குப் ‘போதை’ ஏறிவிடுகிறது. அவை சுயமிழந்து சீரில்லாமல் சுரக்க, அது சூலக நீர்க்கட்டிக்கு உரமிடுகிறது.

என்னென்ன பிரச்சினைகள்?

பொதுவாகவே, பெண்களுக்குச் சூலகத்தைச் சுற்றி தேனடைபோல் ஆயிரக்கணக்கான சினைமுட்டைகள் முதிர்ச்சி அடையாமல் இருக்கும். இவற்றில் சில அவ்வப்போது நீர்க்கட்டிகளாகத் தோன்றி மறையும். இந்த நீர்க்கட்டிகள் 12க்கும் மேல் இருந்தால், அதை பி.சி.ஓ.எஸ். என்கிறோம்.

இந்தக் கட்டிகள் அடுத்தடுத்து அதிகமாக ஆன்ட்ரோஜெனைச் சுரக்கவைப்பதால், இந்தப் பெண்களுக்கு ஆண்தன்மை அதிகரிக்கிறது. முகத்திலும் உடலிலும் தேவையில்லாமல் முடிகள் முளைக்கின்றன. அதேநேரம் தலைமுடி மட்டும் உதிர்கிறது. முகப்பரு தொல்லை தருகிறது. மாதவிலக்குத் தள்ளிப்போகிறது.

இவர்களுக்கு இன்சுலினும் அதிகமாகச் சுரக்கும். ஆனால், அதைப் பயன்படுத்த முடியாத அளவுக்கு உடலில் இன்சுலினுக்கு எதிர்ப்புத்தன்மை (Insulin Resistance) அதிகரிக்கும். இதனால், சின்ன வயதிலேயே நீரிழிவு வந்துவிடும். இவர்களுக்குத் தைராய்டு சுரப்பியும் குறைவாகச் சுரக்கும். அப்போது சூறாவளி சுனாமி ஆவதுபோல் பி.சி.ஓ.எஸ். பிரச்சினை இன்னும் தீவிரமாகும்.

கிட்டாத குழந்தை பாக்கியம்

உடற்பருமனைக் கட்டுப்படுத்தாமல் திருமணம் செய்துகொள்ளும் பெண்களுக்குக் குழந்தை உண்டாவது தடைபடும். காரணம், இவர்களில் பல பேருக்கு மெலடோனின் ஹார்மோனும் ரத்தத்தில் அதிகரிக்கிறது. இதுவும் ஆன்ட்ரோஜெனை அதிகப்படுத்துகிற அசுரன்தான். இந்த நிலைமையைச் சீராக்க பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து சில ஹார்மோன்கள் வீறுகொண்டு எழுகின்றன. ஆனாலும், பொங்கி வரும் காவிரியும் தடுப்பணைகள் இல்லாமல் கடலில் கலந்து வீணாவதுபோல், இவை எல்லாமே பெருத்த உடலின் கொழுப்பில் கரைந்து வீணாகின்றன. இதனால், அவர்களுக்குச் சூலகத்தில் சினைமுட்டை உண்டாவதில்லை; சீரான மாதவிலக்கு ஏற்படுவதில்லை; குழந்தை பாக்கியம் கிட்டுவதில்லை!

அப்படியானால், அவர்களால் ‘அம்மா’ ஆகவே முடியாதா? முடியும். எப்போது? இவர்கள் சூலகத்தைச் சீராக்கும் சிகிச்சைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சியும் செய்ய வேண்டும். அப்போதுதான் ‘காரியம்’ கைகூடும்.

என்ன சிகிச்சை?

வழக்கமான ரத்தப் பரிசோதனைகளுடன், ஹார்மோன் பரிசோதனைகள் மற்றும் ஸ்கேன் செய்துவிட்டு, பி.சி.ஓ.எஸ். உறுதியானால், ஹார்மோன் மாத்திரைகள் கொடுத்து சினைமுட்டை பிறக்கச் செய்வது சிகிச்சையின் முதற்கட்டம்.

இதில் மாதவிலக்குச் சீராகவில்லை என்றால், அடுத்த கட்டம் அறுவை சிகிச்சைதான். அதில் சூலகத்தைச் சுற்றியுள்ள நீர்க்கட்டிகளை அகற்றுகிறார்கள் அல்லது லேப்ராஸ்கோப் வழியாக லேசர் ஒளியைச் செலுத்தி, சூலகத்திலுள்ள தேவையில்லாத திசுக்களை அகற்றுகிறார்கள். இப்படி, ஆன்ட்ரோஜென் சுரப்புக்குக் ‘கடிவாளம்’ போடுகிறார்கள்.

என்றாலும், இவை எல்லாமே தற்காலிகத் தீர்வுதான். சிகிச்சையை நிறுத்தியதும், களவாடப்பட்ட வளர்ப்புப் பிராணி மறுபடியும் நம் வீட்டுக்கே வந்துவிடுவதுபோல் பி.சி.ஓ.எஸ்ஸும் திரும்பி வந்து, அடுத்த குழந்தைக்குத் தடை போடும்.

எனவே, இவர்களுக்கான சரியான சிகிச்சை என்பது உடற்பருமனுக்கு ‘விலங்கு’ பூட்டுவது மட்டுமே! அதற்கு ‘மந்திரத்தில் மாங்காய் காய்க்கும்’ என்று எதிர்பார்க்கக் கூடாது; மருந்து, மாத்திரை எங்கே கிடைக்கும் என்று கூகுளில் தேடக் கூடாது.

ஒரே வழி. நேர்வழி! உணவைக் குறைக்க வேண்டும்; உடற்பயிற்சிகளைக் கூட்ட வேண்டும். நடைப்பயிற்சி நல்லது. நீச்சலடிப்பதும் சைக்கிள் ஓட்டுவதும் சூலகத்துக்குத் தோள் கொடுக்கும். யோகாவும் உதவும். சின்ன வயது முதலே இவற்றைப் பின்பற்றுபவர்களுக்குப் பி.சி.ஓ.எஸ். பிரச்சினை செய்வதில்லை.

(தொடர்ந்து பேசுவோம்)

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கு.கணேசன்

கு.கணேசன், பொது நல மருத்துவர்; மருத்துவத் துறையில் உலகளாவிய அளவில் நடக்கும் மாற்றங்களை ஆழ்ந்து அவதானித்து, எளிய மொழியில் மக்களுக்கு எழுதும் பணியில் ஈடுபட்டிருப்பவர்; ‘சர்க்கரைநோயுடன் வாழ்வது இனிது!’, ‘நலம், நலம் அறிய ஆவல்’, ‘செகண்ட் ஒப்பினீயன்’ உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: gganesan95@gmail.com


2


1
அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

கணினிமாயக் குடமுருட்டி: கருப்பு சிவப்பாய் ஒரு ஆறுthe wireவட இந்தியாஸ்டாலின் ராஜாங்கம்மூவேந்தர்கள்கருத்துரிமை: மகாவித்வான் காட்டிய எதிர்வினைஆண் பெண்மு.க.ஸ்டாலின் - பழனிசாமி மதத்தைக் கடக்கும் வல்லமை தமிழ் அரசியலுக்கு இருக்கபார்ப்பனர்அரசுப் பள்ளிக்கூடம்சாதனை நிறுவனம் அமுல்காதலிதோற்றப்பாட்டியல்மலையாளிகள்தலைச்சாயம்ஹார்மோன்கள்சமஸ் - விஜயகாந்த்பள்ளிக்கூடங்கள்அதிநாயக பிம்பமான நாயகன்நவீன அறிவியல்தேவை கூட்டாட்சிக்காகப் பணியாற்றும் ஓர் ஒன்றியப் பிஅவதூறுநடிகர்இரண்டாம் உலகப் போர்வெற்றொளிசோழர் தூதர்கள்ஓப்பன்ஹெய்மர்: குவாண்டம் முரண்பாடுகளின் திரைப்படம்எடப்பாடி பழனிசாமி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!