தொடர், ஆரோக்கியம், வாழ்வியல், வரும் முன் காக்க 10 நிமிட வாசிப்பு

நீரிழிவு: பெண்கள் ஏன் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

கு.கணேசன்
25 Sep 2021, 6:00 am
2

இன்றைய இந்தியாவில் 35 - 49 வயதுக்கு இடைப்பட்ட 10 பெண்களில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. தாமதமாகத் திருமணம் ஆகும் பெண்களிடம் இந்த விகிதாச்சாரம் இன்னும் அதிகம். இது நாம் கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒரு பிரச்சினை.

முன்பு சர்க்கரை நோய் என்பது வம்சாவளி நோயாகப் பார்க்கப்பட்டது. அதனால், சர்க்கரை நோய் இருக்கும் குடும்பத்தில் பிறந்த பெண்களுக்கு சர்க்கரை நோய் வரலாம் என்று கூறப்பட்டது. இப்போது அப்படியில்லை. இது யாருக்கும் வரலாம். நவீன வாழ்க்கை முறை இதில் முக்கியமான பங்கு வகிக்கிறது.

என்ன காரணம்? 

இன்றைக்கு உடலுழைப்பு குறைந்த அலுவல்  பணிகளில் பெண்களின் எண்ணிக்கையும் அதிகமாகிவிட்டது. அவர்களின் உணவுமுறையும் மாறிவிட்டது. உடற்பருமன் துணையாகிவிட்டது. அவர்களுக்கு வீட்டையும் கவனித்துக்கொண்டு, அலுவல் பணிகளையும் கவனிக்க வேண்டிய பொறுப்புகள் நிறைய இருப்பதால், சுமை கூடுகிறது. பல பெண்களுக்குத் தேவையான ஓய்வும் கிடைப்பதில்லை; உறக்கம் இருப்பதில்லை. அலுவலகத்தில் மட்டுமல்லாமல், வீட்டிலும் குடும்பத்திலும் மன அழுத்தம் உள்ளிட்ட பலவித அழுத்தங்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. மாறிவிட்ட இந்தச் சூழல்களால் இன்றைய பெண்களுக்கு ஹார்மோன்கள் தப்பாட்டம் போட, சர்க்கரை நோய் அதிகரித்துவருகிறது.

உங்களுக்குச் சர்க்கரை நோய் இருக்கிறதா?

ரத்தச் சர்க்கரை அளவு - வெறும் வயிற்றில்:

80 – 110 மி.கி./டெ.லி. - சர்க்கரை நோய் இல்லை.

111 – 125 மி.கி./டெ.லி. - சர்க்கரை நோய் வரக்கூடிய நிலைமை.

125 மி.கி./டெ.லி.க்கும் அதிகம் - சர்க்கரை நோய் இருக்கிறது. 

ரத்தச் சர்க்கரை அளவு - உணவு சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து:

120 – 140 மி.கி./டெ.லி. - சர்க்கரை நோய் இல்லை.

141 – 200 மி.கி./டெ.லி. - சர்க்கரை நோய் வரக்கூடிய நிலைமை.

200 மி.கி./டெ.லி.க்கும் அதிகம் - சர்க்கரை நோய் இருக்கிறது.

ஹெச்பிஏ1சி (HbA1C) பரிசோதனை அளவு: 

இது மூன்று மாத சராசரி ரத்தச் சர்க்கரை அளவைத் தெரிவிக்கும் ஒரு பரிசோதனை. இது 6.5%-க்குக் கீழ் இருக்க வேண்டும். இந்த அளவைத் தாண்டினால் ‘சர்க்கரை நோயாளி’ என்று முத்திரை குத்தப்படும்.

சர்க்கரை நோய் என்ன செய்யும்?

அதீத ரத்தச் சர்க்கரை ரத்தக் குழாய்களைப் பாதிக்கும்; நரம்புகளைச் சிதைக்கும். இவற்றின் விளைவால் மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகப் பாதிப்பு, பார்வை பாதிப்பு, பாதங்கள் பாதிப்பு, தோல் தொற்றுகள் போன்ற தொல்லைகள் வரும். இவை ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானவை. இவற்றில் பெண்களுக்கு அதிகம் தொல்லை தரும் பிரச்சினைகள் மூன்று. அவை:

1. தொடை இடுக்குகளில் அரிப்பு: 

கட்டுப்படாத சர்க்கரை நோயாளிகளுக்குத் தொடை இடுக்குகளிலும் பிறப்புறுப்பிலும் அரிப்பு ஏற்படுவது இயல்பு. காளான் தொற்று (Fungal infection) இந்தப் பகுதிகளைப் பாதிப்பதுதான் முக்கியக் காரணம். வீட்டு வேலை செய்யும் பெரும்பாலான பெண்களுக்கு இந்தத் தொல்லை இருக்கும். இவர்களுக்கு அதிகமாக வியர்க்கும் என்பதாலும் கை, கால்களில் தண்ணீர் பட்டு ஈரம் அதிக நேரம் இருப்பதாலும் அந்த ஈரத்தில் காளான் கிருமிகள் எளிதாக வளர்ந்துவிடுகின்றன. வழக்கமாக, உடல் பருமன் உள்ள பெண்களுக்கு அக்குள், தொப்புள், இடை, இடுப்பின் சுற்றுப்புறம், தொடை இடுக்கு, மார்பகங்களின் அடிப்பகுதி, விரல் இடுக்குகள்... இப்படிப் பல இடங்களில் காளான் தொற்று அதிகமாகத் தெரியும்.

2. சிறுநீரகத் தொற்று:

சர்க்கரை நோய் உள்ள பெண்களுக்குப் பிறப்புறுப்பின் வழி பாக்டீரியாக்கள் நுழைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அதனால், இவர்களுக்கு அடிக்கடி சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்படுகிறது. சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், வலி, கடுப்பு, குளிர்க்காய்ச்சல், பிறகு முதுகுவலி போன்ற தொல்லைகள் உருவாகின்றன.

3. பாதம் பாதிப்பு:

நீண்ட காலம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தத் தவறிய பெண்களுக்குக் கால் நரம்புகள் பாதிக்கப்படும். கால் மரத்துப்போகும். காலில் எரிச்சல் ஏற்படும். மதமதப்பு உண்டாகும். ஊசி குத்தும் வலி உண்டாகும். இந்த எரிச்சலும் வலியும் இரவில் அதிகமாக இருக்கும். பஞ்சு மேல் நடப்பதுபோல் இருக்கும். பாதங்கள் குளிர்ந்திருக்கும். செருப்பு கழன்று போவதுகூட தெரியாத அளவுக்கு உணர்வு குறைந்துபோகும். பாதங்களில் புண் உண்டாகும். காலில் உள்ள ரத்தக்குழாய் பாதிக்கப்படும்போது கெண்டைக்கால் தசையில் குடைச்சல் உண்டாகும்.

இந்த மூன்று பிரச்சினைகளுக்கும் நல்ல மருந்துகள் உள்ளன. டாக்டரின் ஆலோசனைப்படி சாப்பிட்டால் இவை கட்டுப்படும். ஆனாலும், ரத்தச் சர்க்கரையை நன்கு கட்டுப்படுத்தினால்தான் இந்தத் தொல்லைகள் 100% சரியாகும்.

கர்ப்பிணிகளின் கவனத்துக்கு!

சில பெண்கள் ‘நமக்குத்தான் சர்க்கரை நோய் இல்லையே’ என்று சாப்பாட்டில் கட்டுப்பாடு இல்லாமல் இருப்பார்கள். படுத்துப் படுத்து எழுந்திருப்பார்கள். உடற்பயிற்சியே இருக்காது. இவர்கள் கர்ப்பமானதும், சர்க்கரை நோய் புதிதாக வந்துசேரும். இதற்கு ‘கர்ப்ப காலச் சர்க்கரை நோய்’ (Gestational Diabetes Mellitus - GDM) என்று பெயர். பொதுவாக, கர்ப்பம் தரித்த 24–வது வாரத்துக்குப் பிறகுதான் இது வருகிறது.

கருப்பையில் உள்ள நச்சுக்கொடியில் (Placenta) புரோஜெஸ்டிரான், ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்கள் சுரக்கும். இவை கர்ப்பிணியின் உடலுக்குள் புகுந்து இன்சுலினுக்கு எதிராக வேலை செய்யும். இன்சுலின் இந்த எதிரணியைச் சமாளித்துப் பார்க்கும். போகப்போக அதன் செயல்பாடு குறைந்துவிடும்; ரத்தச் சர்க்கரை கூடிவிடும். இதைச் சரிக்கட்ட கர்ப்ப காலத்தில் மட்டும் பெண்களுக்கு இன்சுலின் சற்றே அதிகமாகச் சுரக்கும். அப்போது ரத்தச் சர்க்கரை சரியான அளவுக்கு வந்துவிடும். கர்ப்பிணிகள் எல்லோருக்கும் இயல்பாக நிகழும் உடல் செயலியல் இது. 

சில பெண்களுக்குக் கர்ப்பத்தில் அதிகரிக்கும் ரத்தச் சர்க்கரையைக் குறைப்பதற்கு இன்சுலின் சுரந்தாலும் வேண்டிய அளவுக்கு ‘இன்சுலின் ஏற்பான்கள்’ இருக்காது. அதனால், இன்சுலின் செயல்படாது. இதன் காரணமாக, அவர்களுக்குத் தொடர்ந்து ரத்தச் சர்க்கரை அதிகமாகவே இருக்கும். விளைவு, ‘கர்ப்ப காலச் சர்க்கரை நோய்’.

யாருக்கு வருகிறது? 

ஏற்கெனவே குடும்பத்தில் சர்க்கரை நோய் இருக்கும் பட்சத்தில் அவர்களின் வாரிசுகளுக்கு இந்தப் பிரச்சினை வருகிறது. உடல் பருமனும், ‘பிசிஓடி’யும் அடுத்த காரணங்கள். இப்போது பெண்களில் பலரும் தாமதமாகவே திருமணம் செய்து, தாமதமாகவே கர்ப்பம் தரிக்கின்றனர். இந்தக் காரணங்கள் தவிர, கடந்த பிரசவத்தில் சர்க்கரை நோய் இருந்தவர்கள், பெரிய தலை/அதிக எடையுடன் குழந்தையைப் பெற்றெடுத்தவர்கள்,  இறந்த குழந்தையைப் பெற்றெடுத்தவர்கள் ஆகியோருக்கும் இது ஏற்படுகிறது. புஷ்டியான சாப்பாடு, உடற்பயிற்சி இல்லாத உடம்பு, கர்ப்பத்தால் ஏற்படும் உடல் அழுத்தம் என்று இன்னும் பல ஒன்றுசேர்ந்து இந்தத் திடீர் சர்க்கரை நோயை இழுத்து வந்துவிடுகின்றனர்.

என்ன அறிகுறிகள்? 

சிலருக்கு அதிக தாகம், அதிகப் பசி, அடிக்கடி சிறுநீர் கழிதல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம். பலருக்கும் எந்த அறிகுறியும் வெளியில் தெரியாமல் இருக்கலாம். பொதுவாகவே, கர்ப்பிணிக்கு மேற்கொள்ளப்படும் வழக்கமான ரத்தப் பரிசோதனைகளில்தான் இந்த நோய் இருப்பது தெரியவருகிறது.

எப்படித் தெரிந்துகொள்வது? 

முதன்முறையாகக் கர்ப்பமானவர்கள் மருத்துவரிடம் வரும்போது முதல் அல்லது இரண்டாம் ‘செக்கப்’பில் ரத்தச் சர்க்கரை பரிசோதிக்கப்படும். வெறும் வயிற்றில் இதன் அளவு 90 மி.கி./டெ.லி.-க்கு அதிகமாகவும், சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து 120 மி.கி./டெ.லி.-க்கு அதிகமாகவும், ஹெச்பிஏ1சி அளவு 6%-க்கு அதிகமாகவும் இருந்தால், அவருக்குச் சர்க்கரை நோய் உள்ளது என்று அர்த்தம். அப்போது சர்க்கரை நோய் நிபுணரின் மேற்பார்வையில் உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறை பரிந்துரைக்கப்படும்.

கர்ப்பத்தின் ஆரம்பத்தில் சர்க்கரை நோய் இல்லாதவர்களுக்கு, 16-வது வாரத்தில் ‘குளுக்கோஸ் டாலரென்ஸ்’ (OGTT) பரிசோதனை செய்யப்படும். அதில் ரத்தச் சர்க்கரை 140 மி.கி./டெ.லி.-க்குக் கீழ் இருந்தால், சர்க்கரை நோய் இல்லை. அதற்கு அதிகமாக இருந்தால், சர்க்கரை நோய் உள்ளது என்று எடுத்துக்கொள்ள வேண்டும். நம் நாட்டில் எல்லாக் கர்ப்பிணிகளுக்கும் இந்தப் பரிசோதனை அவசியம். சிலருக்கு 24-வது, 32-வது கர்ப்ப வாரங்களிலும் இதை மறுபடியும் மேற்கொள்ள வேண்டிவரலாம்.

என்ன சிகிச்சை?

கர்ப்ப காலச் சர்க்கரை நோய் உள்ள கர்ப்பிணிகளுக்குப் பெரும்பாலும் இன்சுலின் தேவைப்படாது. சரியான சாப்பாடு மற்றும் முறையான உடற்பயிற்சி மூலமாகவே எளிதில் இதைக் கடந்துவிட முடியும். அப்படியும் ரத்தச் சர்க்கரை கட்டுப்படவில்லை என்றால்தான் இன்சுலின் கொடுக்க வேண்டிவரும். இதைப் பிரசவம் ஆகும் வரை தொடர வேண்டியது முக்கியம். பலருக்கும் இன்சுலின் எடுத்துக்கொள்வதில் தயக்கம் ஏற்படும். அந்தத் தயக்கம் தேவையில்லை. காரணம்,  சிசுவின் நச்சுக்கொடியைத் தாண்டி உடலுக்குள் இன்சுலின் செல்லாது. இதனால், சிசுவுக்கு ரத்தச் சர்க்கரை குறைந்துவிடாது. இன்சுலின் காரணமாகக் கர்ப்பிணிக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது.

கர்ப்பிணிகள் வாரம் ஒருமுறை குளுக்கோமீட்டர் மூலம் அவர்களாகவே ரத்தச் சர்க்கரையை அளந்துகொள்ளலாம். அதற்கேற்றபடி இன்சுலின் போட்டுக்கொள்ளலாம். இவர்களுக்கு உணவுமுறைதான் முக்கியம்; உடற்பயிற்சிகள் அவசியம். வயிற்றில் இருக்கும் குழந்தைக்குத் தனிக் கவனிப்பு தேவை. கர்ப்பிணிக்கு 28 கர்ப்ப வாரங்களுக்குப் பிறகு மாதம் ஒருமுறை வயிற்றை ‘அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்’ செய்து, குழந்தையின் வளர்ச்சியைக் கவனித்துக்கொள்ள வேண்டும்; குழந்தையின் இதயத்துடிப்பு சரியாக இருக்கிறதா என்றும் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். காரணம், கடைசி மும்மாதக் கர்ப்பத்தில் (third trimester) எந்தவித அறிகுறியும் இல்லாமலேயே வயிற்றில் இருக்கும் குழந்தை ‘தவறி’விட சந்தர்ப்பங்கள் உண்டு. எனவேதான், இந்த எச்சரிக்கை.

சர்க்கரை நோய்க்கு அலாரம்

பெரும்பாலான கர்ப்பிணிகளுக்குப் பிரசவம் ஆனதும், கர்ப்ப காலச் சர்க்கரை நோய் காற்றில் கரையும் கற்பூரமாய்க் காணாமல் போய்விடும்; அதற்குப் பிறகு சிகிச்சை தேவைப்படாது. என்றாலும், அவர்களுக்கு அடுத்த 5-லிருந்து 10 வருடங்களுக்குள் ‘டைப் 2 சர்க்கரை நோய்’ வர வாய்ப்புள்ளது. ஆகவே, இதை ஓர் எச்சரிக்கை அலாரமாக எடுத்துக்கொண்டு, பிரசவத்துக்குப் பிறகும் சரியான உணவுமுறையைக் கடைப்பிடித்து, தினமும் உடற்பயிற்சி செய்து, உடல் எடையைப் பராமரித்து சர்க்கரை நோய் வராமல் தடுத்துக்கொள்ள வேண்டியது அவர்கள் கடமை.

ஆபத்து என்னென்ன?

கர்ப்பிணிக்கு அடிக்கடி சிறுநீர்ப் பாதைத் தொற்று, காளான் தொற்று, பூஞ்சைத் தொற்று ஏற்படலாம். கருச்சிதைவு ஏற்படலாம். ரத்த அழுத்தம் அதிகமாகி, ‘முன்பிரசவ வலிப்பு’ (Pre-eclampsia) வரலாம். கர்ப்பத்தின் கடைசி மூன்று வாரங்களில் குழந்தை கருப்பையிலேயே இறந்துவிட நேரலாம். குழந்தை அதிக எடையுடன் அல்லது பெரிய தலையுடன் பிறக்கலாம். பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை ஏற்படலாம்; குழந்தை பிறந்ததும் இறந்துவிடலாம். கர்ப்பிணிக்கு சிசேரியன் அறுவைச் சிகிச்சை தேவைப்படலாம். நோய் கட்டுக்குள் இருந்தால், இத்தனைக்கும் விடைகொடுத்துவிடலாம்!

உணவுமுறை எப்படி? 

 • ஓர் உணவியலாளர் உதவியுடன் தேவையான கலோரி உணவைக் கணக்கிட்டு அதற்கேற்ப உணவுத் திட்டம் அமைத்துக்கொள்வது நல்லது.
 • பொதுவாகச் சொன்னால், சரியான உடல் எடை உள்ளவர்களுக்குத் தினமும் 2000 – 2500 கலோரிகளும், உடற்பருமன் உள்ளவர்களுக்கு 1200 – 1800 கலோரிகளும் தேவை.
 • இனிப்பையும் சர்க்கரையையும் தவிர்க்க வேண்டும்.
 • தானிய உணவுகள், கிழங்கு, வேர்களைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
 • அரிசிக்குப் பதிலாக, கோதுமை, கேழ்வரகு சேர்த்துக்கொள்ளலாம்.
 • நார்ச்சத்துள்ள காய்கறி, கீரைகளை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.
 • ஒரு சிறிய ஆப்பிள், கொய்யா, மாதுளை, பேரிக்காய் இவற்றில் ஒன்றைச் சாப்பிடலாம்.
 • பழச்சாறுகளுக்குப் பதிலாகப் பழங்களைச் சாப்பிடுவது நல்லது.
 • வறுத்த, பொறித்த உணவுகளையும் கொழுப்புமிக்க உணவுகளையும் துரித உணவுகளையும் ஓரங்கட்டுங்கள்.
 • உணவைச் சிறிய இடைவெளிகளில் சிறிது சிறிதாக அடிக்கடி சாப்பிட்டுக்கொள்ளலாம்.

இவையும் முக்கியம் 

 • உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்யுங்கள்.
 • உடல் பருமன் தவிருங்கள்.
 • உட்கார்ந்தே செய்யும் வேலைகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
 • மன அழுத்தம் தவிருங்கள்.
 • யோகா, தியானம் செய்யுங்கள்.
கு.கணேசன்

கு.கணேசன், பொது நல மருத்துவர்; மருத்துவத் துறையில் உலகளாவிய அளவில் நடக்கும் மாற்றங்களை ஆழ்ந்து அவதானித்து, எளிய மொழியில் மக்களுக்கு எழுதும் பணியில் ஈடுபட்டிருப்பவர்; ‘சர்க்கரைநோயுடன் வாழ்வது இனிது!’, ‘நலம், நலம் அறிய ஆவல்’, ‘செகண்ட் ஒப்பினீயன்’ உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: gganesan95@gmail.com


1


பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

V.AGORAM    2 years ago

கட்டுரை அருமை

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

kALIDAS   2 years ago

எளிய விளக்கங்களுடன் சர்க்கரை நோய் பற்றிய கட்டுரை அருமை. உணவு பழக்கமும் உடற்பயிற்சியும் எவ்வளவு அவசியம் சர்க்கரை நோயாளிக்கு என்பதை தெளிவாக விளக்கியுள்ளார். நீலனூர் கே கே தாஸ்

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

அம்பேத்கரின் நினைவை எப்படிப் போற்றுவது?இன்றைய காந்திகள்2002 குஜராத் கலவரம்சில்லறை விற்பனைகமலா ஹாரிஸ்பீமா கோரேகான் வழக்குchennai rainஉட்டோப்பியாதந்தை பெரியார்வாசிப்பு அனுபவம்கட்சித்தாவல் தடைச் சட்டம்வகிதா நிஜாம்ராமாயணத்தை இலக்கியப் பிரதியாக வாசிக்க முடியாதா?கனவுத் தெப்பம்உடல் எடைக் குறைப்புராஜாஜியின் கட்டுரைசுசுகி நிறுவனம்உள்ளூர் வரலாறுசமூகப் பொருளாதாரச் சிந்தனைகாந்தியர்ஜிஎஸ்டி ஆணையம்வின்னி: இணையற்ற இணையர்!பாலியல் வண்புணர்வுஷேக் அப்துல்லாதேரடிஅப்பாவின் மீசைமசூதிஜெ.சிவசண்முகம் பிள்ளைஸ்வீடிஷ் மொழிசட்டமன்ற உறுப்பினர்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!