கட்டுரை, தொடர், ஆரோக்கியம், வரும் முன் காக்க 5 நிமிட வாசிப்பு

பெண்கள் கவனம்!

கு.கணேசன்
25 Sep 2022, 5:00 am
2

டந்த சில வாரங்களாகப் புற்றுநோயைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய்தான் முதலிடம் வகிக்கிறது. போன தலைமுறை வரை இது 50 வயதுக்குப் பிறகே வந்துகொண்டிருந்தது. இப்போது இது 30 வயதிலும் வருகிறது. இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது.

மார்பகப் புற்றுநோயைப் பொறுத்த அளவில் ஆரம்பத்தில் கண்டறிந்துவிட்டால், 100% குணமாகும். இதற்கு என் அம்மாவே ஓர் உதாரணம். 1980இல் நான் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தபோது என் அம்மாவுக்கு வயது 55. அவருக்கு அப்போது ஒரு பக்க மார்புக் காம்பில் நீர்க்கசிவு ஏற்பட்டதைச் சொன்னபோது உடனடியாக நான் படித்துக்கொண்டிருந்த மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற ஏற்பாடு செய்தேன்.

அப்போதெல்லாம் இப்போதுள்ளபடி மேம்பட்ட பரிசோதனைகளோ, சிகிச்சைமுறைகளோ கிடையாது. நெஞ்சு எக்ஸ்-ரே, திசு ஆய்வுப் பரிசோதனை முறைகள்தான் இருந்தன. அம்மாவைப் பரிசோதித்தபோது மார்புக் காம்பில் மட்டும்தான் புற்றுநோய் இருந்தது. வேறெங்கும் அது பரவியிருக்கவில்லை. என் மருத்துவப் பேராசிரியர் மறைந்த டி.எஸ்.சுப்பிரமணியம் என் அம்மாவுக்கு அறுவை சிகிச்சை செய்து ஒரு பக்க மார்பகத்தையும் அக்குளில் இருந்த நெரிகட்டிகளையும் அகற்றிவிட்டார். அத்தோடு சரி. வேறு சிகிச்சைகள் எதுவும் தேவையில்லை எனச் சொல்லிவிட்டார். முறையான தொடர் கவனிப்பு போதும் என்றார். என் அம்மா 85 வயது வரை நலமுடன் வாழ்ந்தார்.

தயக்கம் வேண்டாம்!

மார்பகத்தில் ஏற்படும் சில கட்டிகள் நாட்படும்போது புற்றுநோய்க் கட்டிகளாக மாறலாம். தங்கள் வயதுக்கு ஏற்ப ‘ஸ்க்ரீனிங்’ எனும் நோய் முன்னறிதல் பரிசோதனைகளைச் செய்துகொள்ளும் வழக்கம் நம் நாட்டுப் பெண்களுக்கு இல்லை என்பதாலும், மார்பகத்தில் ஏற்படும் மாற்றங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதில் தயக்கம் காட்டுவதாலும் மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்தில் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு இன்னும் படித்தவர்களுக்கே முழுவதுமாக இல்லை என்பதாலும் அறியாமையினாலும் இந்தியாவில் பெரும்பாலும் மார்பகப் புற்றுநோய் மூன்றாம் நிலையில் இருக்கும்போதுதான் சிகிச்சைக்கே வருகின்றனர். இதனால்தான் இந்தப் புற்றுநோயை முழுவதுமாகக் குணபடுத்துவது சிரமம் ஆகிறது.

அறிகுறிகள் என்ன?

பெண்களுக்கு மார்பில் கட்டி, மார்புக் காம்பில் நீர்க்கசிவு, ரத்தக்கசிவு, மார்புக் காம்பு உள்வாங்குதல், அக்குளில் கட்டி, கை முழுவதும் வீங்குவது போன்ற அறிகுறிகள் ஏற்படும்போது உஷாராகிவிட வேண்டும். இவர்கள் மருத்துவ ஆலோசனைக்கும் பரிசோதனைக்கும் தயாராகிவிட வேண்டும்.

காரணங்கள் எவை?

மார்பகப் புற்றுநோய்க்கு இதுதான் காரணம் என்று உறுதியாக எதையும் கூறமுடியவில்லை. ஆனாலும் சில காரணிகள் இந்தப் புற்றுநோய் வருவதைத் தூண்டுகின்றன என்பது மட்டும் தெரிய வந்துள்ளது.

 1. வயது 45 – 70. இது பொதுவானது. இப்போது 30 வயது பெண்களும் கவனமாக இருக்க வேண்டும்.
 2. உடற்பருமன். உடற்பயிற்சி இல்லாதது.
 3. வம்சாவளியில் மார்பகப் புற்றுநோய் அல்லது சினைப்பைப் புற்றுநோய் வந்திருந்தால் அந்த வாரிசுகளுக்கு மார்பகத்தில் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
 4. 11 வயதுக்குள் பெண்கள் பருவமடைவது.
 5. இறுதி மாதவிலக்கு (மெனோபாஸ்) நிற்பது தாமதம் ஆவது.
 6. பதின்பருவத்தில் ஹார்மோன் மாத்திரைகளை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவது.
 7. முதல் குழந்தையை 30 வயதுக்கு மேல் பெற்றுக்கொள்வது.
 8. குழந்தைக்குத் தாய்ப்பால் தராமல் இருப்பது.
 9. மூன்று குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வது.
 10. குழந்தைப்பேறு இல்லாதது.
 11. புகைபிடிப்பது; மது அருந்துவது.

என்ன பரிசோதனைகள் உள்ளன?

மார்பக சுய பரிசோதனை: 20 வயதிலிருந்து 40 வயதுக்குட்பட்ட பெண்கள் தாங்களாகவே மாதம் ஒருமுறை மார்பகங்களை அழுத்தமாகத் தொட்டுப் பரிசோதித்துக்கொள்ளலாம். மாதவிலக்கு ஏற்பட்ட 7 முதல் 10 நாள்களுக்குள், கண்ணாடி முன் நின்று, இரு மார்பகங்களுக்கு இடையே வித்தியாசம் தெரிகிறதா என்று கண்களால் பார்த்தும், நான்கு விரல்களால் அழுத்தித் தேய்த்தும் சுயபரிசோதனை செய்துகொள்ளலாம். அப்போது ஏதேனும் வலி இல்லாத கட்டி, வீக்கம், மார்புக் காம்பில் மாறுதல் போன்றவை தெரிந்தால், உடனே மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்வது அவசியம். பிரச்சினை இல்லாதபட்சத்தில் இவர்கள் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை மருத்துவரிடம் நேரடியாகப் பரிசோதனை செய்துகொள்ளலாம்.

40 வயதிலிருந்து 50 வயதுக்குட்பட்ட பெண்கள் மார்பக சுய பரிசோதனையோடு வருடத்துக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை மற்றும் மெமோகிராம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இவர்கள் 65 வயது வரை இதைத் தொடரலாம்.

மெமோகிராம்: எக்ஸ்-ரே எடுத்துப் பார்ப்பது போன்ற எளிய பரிசோதனைதான் இது. பெண்கள் 40 வயதுக்கு மேல் இதை மேற்கொண்டுவிடுவது நல்லது; வருடத்துக்கு ஒருமுறை இது தேவைப்படும்; சந்தேகம் வலுத்தால் வருடத்துக்கு இரண்டு முறைகூட அவசியப்படலாம்.  

அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை: மார்பகத்தை அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்வதன் மூலம் மார்பகப் புற்றுநோயை முன்னரே அறியலாம். வயிற்றுக்குள் புற்றுநோய் பரவியுள்ளதா என்பதையும் இதில் அறியலாம்.

ரத்தப் பரிசோதனைகள்: மார்பகப் புற்றுநோயை முன்னரே அறிய BRCA1/BRCA2 ரத்தப் பரிசோதனைகள் உதவுகின்றன. சில ஹார்மோன் பரிசோதனைகளும் உள்ளன.

மார்பக எம்.ஆர்.ஐ. பரிசோதனை: வம்சாவளியில் மார்பகத்தில் புற்றுநோய் ஏற்பட்டவர்களின் வாரிசுகளுக்கும், ரத்தப் பரிசோதனைகளில் புற்றுநோய்க்கு வாய்ப்புள்ளது எனத் தெரியும் பெண்களுக்கும் இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

திசு ஆய்வுப் பரிசோதனை

மார்பகத்தில் ஏற்பட்டுள்ள கட்டி புற்றுநோயைச் சார்ந்ததா, இல்லையா என்பதைத் தீர்மானிப்பதில் திசு ஆய்வுப் பரிசோதனை முக்கியப் பங்கு வகிக்கிறது. அதில் பல விதம் உண்டு. திசுவை ஊசிமூலம் உறிஞ்சி எடுத்துப் பரிசோதிப்பது (FNAC). அடுத்தது, ‘ட்ரூகட் பயாப்சி’ (True-cut biopsy). சிறு கருவி கொண்டு சிறிதளவு திசுவை மட்டும் வெட்டியெடுத்துப் பரிசோதிக்கும் முறை இது. மார்பகப் புற்றுநோயை உறுதிப்படுத்தப் பெரிதும் உதவும் வலி இல்லாத பரிசோதனை இது. இதில் சந்தேகம் வரும்போது மொத்தத் திசுவையும் அகற்றி (Total biopsy) பரிசோதிப்பதும் உண்டு.  

‘பெட்-சி.டி. ஸ்கேன்’ பரிசோதனை

புற்றுநோய் மார்பகத்தில் மட்டுமே உள்ளதா, உடலில் வேறு எங்காவது பரவியுள்ளதா என்பதைத் துல்லியமாகத் தெரிவிக்கும் நவீன பரிசோதனை இது. தேவைப்பட்டால் மட்டுமே இது மேற்கொள்ளப்படுகிறது.

சிகிச்சை முறைகள்

திசு ஆய்வுப் பரிசோதனையில் மார்பகப் புற்றுநோய் வகை மற்றும் நோய்நிலையைத் தெரிந்துகொண்டு, நோயாளியின் பொது ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு புற்றுநோய் மருத்துவ சிகிச்சை மருத்துவர், புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர், கதிர்வீச்சு மருத்துவர் ஆகிய மூவரும் கலந்தாலோசித்து சிகிச்சையை முடிவு செய்கின்றனர்.

அறுவை சிகிச்சை: மார்பகப் புற்றுநோயில் பல நிலைகள் உள்ளன. பூஜ்ய நிலை, முதல் நிலை, இரண்டாம் நிலை ஆகியவற்றுக்கு மார்பகத்தை அகற்ற வேண்டிய அவசியமில்லை. கட்டியை மட்டும் அகற்றினால் போதும். மற்ற நிலைகளுக்குத்தான் முழு மார்பகத்தையும் அகற்ற வேண்டும். ஆனால், இரண்டிலுமே அக்குளில் உள்ள நெரிகட்டிகள் அகற்றப்படும். சிலருக்கு மருந்து சிகிச்சை கொடுத்து கட்டியின் அளவைச் சுருங்க வைத்த பிறகு அறுவை சிகிச்சை செய்யப்படுவதும் உண்டு. தேவைப்படுபவர்களுக்கு மார்பக அறுவை சிகிச்சைக்குப் பிறகு ‘மார்பக மறுசீரமைப்பு சிகிச்சை’ செய்யப்படுவதும் உண்டு.

மருந்து சிகிச்சை: அறுவை சிகிச்சை புண் ஆறியவுடனே இதைத் தொடங்கிவிட வேண்டும். சில வகை புற்றுநோய்க்கு இது அறுவை சிகிச்சைக்கு முன்னரும் கொடுக்கப்படலாம். புற்று செல்களை அழிக்கும் திறனுள்ள கூட்டு மருந்துகள் இவை. இலக்கு சார்ந்த மருந்துகள் இப்போது உள்ளன. இவற்றை குளுக்கோஸ் அல்லது சலைனில் கலந்து ரத்தத்தில் நேரடியாகச் செலுத்தப்படுவது வழக்கம். பொதுவாக, 3 வாரங்களுக்கு ஒருமுறை என மொத்தம் 6 சுழற்சிகள் கொடுப்பார்கள்.

கதிர்வீச்சு சிகிச்சை: மார்பகப் புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை மற்றும் மருந்து சிகிச்சை கொடுத்த பிறகு கதிர்வீச்சு சிகிச்சை கொடுக்கப்படுவதுதான் வழக்கம். விதிவிலக்காக, சிலருக்கு அறுவை சிகிச்சைக்கு முன்னரோ மருந்து சிகிச்சைக்கு முன்னரோ இதைத் தரலாம். பொதுவாக, நாள் ஒன்றுக்கு ஒருமுறை வீதம் வாரத்துக்கு 5 நாட்களுக்கு என 25 நாட்களுக்குக் கதிர்வீச்சு சிகிச்சை கொடுக்கப்படுவது வழக்கம். மருந்து சிகிச்சை முடிந்த 2 வாரங்கள் கழித்து இது தரப்படும்.

ஹார்மோன் சிகிச்சை: ரத்தத்தில் ஹார்மோன் பரிசோதனை முடிவைப் பொறுத்து இது மேற்கொள்ளப்படுகிறது. இது மாத்திரை மற்றும் ஊசிகள் மூலம் கொடுக்கப்படும் சிகிச்சை. மார்பகப் புற்றுநோய்க்கு 5 வருடங்கள் தொடர்ந்து இது கொடுக்கப்பட வேண்டும்.

ஒருமுறை மார்பகப் புற்றுநோய் வந்தவருக்கு மறுபடியும் புற்றுநோய் வந்தால் அது மார்பகத்தில்தான் வரும் என்று சொல்ல முடியாது. வேறு எங்காவது வரலாம். ஆகவே, உடலில் எங்காவது தொடர்ந்து வலியோ, சிரமமோ இருந்தால் உடனே பரிசோதித்துக்கொள்வது நல்லது.

மார்பகப் புற்றுநோய்க்குத் தரப்படும் சிகிச்சைகள் வெற்றி பெறுவதற்கு நோயாளியின் முழுமையான ஒத்துழைப்பும் மன உறுதியும் முக்கியம். பின் கவனிப்பும் (Follow up) தொடர் கவனிப்பும் அதி முக்கியம். குறைந்தது 5 வருடங்களுக்காவது மருத்துவர் கூறும் பரிசோதனைகளைச் செய்துகொண்டால், மார்பகப் புற்றுநோய் மறுபடியும் வராமல் தடுத்துக்கொள்ள முடியும்.

(தொடர்ந்து பேசுவோம்…) 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கு.கணேசன்

கு.கணேசன், பொது நல மருத்துவர்; மருத்துவத் துறையில் உலகளாவிய அளவில் நடக்கும் மாற்றங்களை ஆழ்ந்து அவதானித்து, எளிய மொழியில் மக்களுக்கு எழுதும் பணியில் ஈடுபட்டிருப்பவர்; ‘சர்க்கரைநோயுடன் வாழ்வது இனிது!’, ‘நலம், நலம் அறிய ஆவல்’, ‘செகண்ட் ஒப்பினீயன்’ உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: gganesan95@gmail.com


4


பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

M.karthikeyan   2 years ago

எளிய வடிவிலான, முக்கியமான கட்டுரை... நன்றிகள் பல...ஆசிரியருக்கும், மருத்துவருக்கும்...

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

ILANDJEZIAN R   2 years ago

சிறந்த விழிப்புணர்வு கட்டுரை💐

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

தனிப்பாடல்கள்வெள்ளம்ராமச்சந்திர குஹா நரேந்திர மோடிமோடியின் காலம்அமைச்சரவை மாற்றம்அலைக்கற்றை ஊழல் குற்றச்சாட்டுஅம்பாசமுத்திரம்பாரத ஒற்றுமை நடைப்பயணம்தற்கொலைதிரௌபதி முர்முபழ.அதியமான் கட்டுரைபார்வையிழப்புசிபிஎம்அரசின் அலட்சியமே மணிப்பூர் எரியக் காரணம் ராசேந்திரன்: உயர்த்திப் பிடிக்கவேண்டிய உயிர்க்கொடஉழைப்புஸ்ரீநிவாசன்மன்மோகன் சிங்தூக்கமின்மைகடிதம்மூன்று மாநிலங்கள்அரசியல் பிரதிகேரளாசட்டப் பிரச்சினைசமஸ் - தினமலர்தென்னகம்: உறுதியான போராட்டம்தம்பி வா! தலைமையேற்க வா!கொரியா ஹெரால்டுதேசிய அரசுகருத்துச் சுதந்திரம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!