கட்டுரை, தொடர், ஆரோக்கியம், வரும் முன் காக்க 7 நிமிட வாசிப்பு

கருப்பை... கவனம்!

கு.கணேசன்
02 Oct 2022, 5:00 am
0

ன்னுடன் கல்லூரியில் படித்த பெண் மருத்துவருடன் சமீபத்தில் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்ன ஒரு நிஜத்தை இங்கே பகிர்ந்துகொள்கிறேன். 

அவரிடம் சிகிச்சைக்கு வந்த ஒரு பெண்ணுக்கு வயது 40. தனியார் அலுவலகத்தில் உதவியாளர் வேலை. கணவர் ஆட்டோ டிரைவர். குடிகாரர். தொடர்ச்சியான அடி வயிற்று வலி, ஒழுங்கில்லாத மாதவிலக்கு காரணமாக அந்தப் பெண் சிகிச்சைக்கு வந்திருக்கிறார். பல பரிசோதனைகளுக்குப் பிறகு அவருக்கு கர்ப்பப்பை வாயில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அறிவிப்பில் அவர் அதிர்ந்துபோனாள்.

தன்னுடைய ஆரோக்கியத்தைப் பேணுவதில் மிகுந்த அக்கறை கொண்டவர் அந்தப் பெண். உணவுக்கட்டுப்பாடு, உடற்பயற்சி, யோகா என பலவற்றையும் கடைப்பிடித்து உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வார். குடும்பத்தில் யாருக்கும் புற்றுநோய் வந்ததில்லை. அப்படி இருந்தும் அவருக்கு புற்றுநோய் வந்ததில் அதிகம் மனக்கவலையில் இருந்தார். ‘எனக்கு இந்த நோய் ஏற்பட என்ன காரணம், டாக்டர்?’ என்று அடிக்கடி கேட்டுக்கொண்டிருந்தார். அதனால் அவருடைய கணவரை ஒருநாள் அழைத்து வரச்சொன்னார், பெண் மருத்துவர்.

இருவரிடமும் அவர்களது வாழ்க்கைமுறை, உணவுப்பழக்கம், மன ஆரோக்கியம், பாலுறவு சுகாதாரம் ஆகியவற்றை விசாரித்தார். பெரும்பாலும் அவருடைய கணவரிடம்தான் அதிகமாக கேள்விகள் கேட்டு பல விஷயங்களைச் சேகரித்தார். பல கேள்விகளுக்கு அவருடைய கணவர் மழுப்பலாக பதில் சொன்னாலும் மருத்துவரும் விடாப்பிடியாகத் தெளிவான பதில்களைக் கேட்டுப் பெற்றுவிட்டார். அவர்கள் கொடுத்த பதில்களைத் தொகுத்துப் பார்த்தபோது கணவரிடமிருந்துதான் அந்தப் பெண்ணுக்குப் புற்றுநோய் வந்திருப்பது புரிந்தது.

கர்ப்பப்பை வாயில் புற்றுநோய் வருவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், முக்கியமான காரணமாக இருப்பது அந்தரங்கச் சுத்தம் இல்லாமல் இருப்பதுதான். குடித்துவிட்டு மனைவியுடன் பாலுறவு கொள்ளும் ஆண்கள் இப்போது அதிகரித்துவிட்டார்கள். பாலுறவுக்கு முன்பும் பிறகும் அந்தரங்க உறுப்புகளைக் கழுவி சுத்தம் பேணுவதில் பொறுப்பில்லாமல் நடந்துகொள்கிறார்கள். பல பெண்களுக்குக் கர்ப்பப்பை வாயில் புற்றுநோய் வருவதற்கு இதுவும் ஒரு காரணம்’ என்று சொன்னபோது, அவருடைய கணவர் குற்றவுணர்ச்சியில் தலை குனிந்தார். தன்னுடைய தவறால் தனக்கு புற்றுநோய் வரவில்லை என்பது தெரிந்து அந்தப் பெண் ஆறுதல் அடைந்தார்.

இந்தியாவில், பெண்களிடம் காணப்படும் புற்றுநோய்களில் இண்டாவது முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் (Uterine Cervical Cancer). 2010ஆம் ஆண்டில் மட்டும் ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் பாதிப்பேர்தான் புற்றுநோய்க்கான போரில் வெற்றிபெற்றனர்; சுமார் 75 ஆயிரம் பேர் வரை இறந்துவிட்டனர். இந்தப் புள்ளிவிவரத்தில் இருந்தே இந்த நோயின் தீவிரத்தை உணர முடியும். இத்தனைக்கும் இந்தப் புற்றுநோயை 100% தடுத்துவிடலாம். வளர்ந்த நாடுகளில் இந்த நோயை முன்னரே அறியும் ‘ஸ்கிரீனிங்’ பரிசோதனைகளை எல்லா பெண்களும் மேற்கொள்வதாலும் முறையாக தடுப்பூசிகள் போட்டுக்கொள்வதாலும் அந்த நாடுகளில் இந்தப் புற்றுநோய் வருவது குறைந்து வருகிறது.

நோய் வரக் காரணம் 

ஒரு பேரிக்காய் அளவில் இருக்கின்ற கர்ப்பப்பையின் கீழ்ப்பகுதியில், பிறப்பு உறுப்பு இணைகிற இடத்தில் ‘செர்விக்ஸ்’ என்று அழைக்கப்படுகிற கர்ப்பப்பை வாய் உள்ளது. ‘ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்’ (Human Papilloma Virus - சுருக்கமாக HPV) என்கிற கிருமி அந்த இடத்தைத் தாக்கும்போது புற்றுநோய் வருகிறது. இந்த வைரஸ் கிருமி பாலுறவு மூலமே பரவுகிறது.

பொதுவாக, இந்த வைரஸ் கிருமியின் தாக்குதலின்போது, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால், அந்த நபருக்குப் புற்றுநோய் வருவதில்லை. இந்த மாதிரியான பெண்களின் உடலில் இந்த வைரஸ் கிருமி அழிக்கப்பட்டுவிடும். எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு இந்த வைரஸ் கிருமி கர்ப்பப்பை வாயை ஆக்கிரமித்து, சிறிது சிறிதாக அங்குள்ள செல்களைத் தாக்கிப் புற்றுநோயை உருவாக்குகிறது. சில பெண்களுக்கு இந்தக் கிருமி சில காலத்துக்கு உடலுக்குள்ளேயே அமைதியாகக் காத்திருந்து, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது வீரியம் பெற்று தாக்குதல் நடத்துகிறது. அப்போது இயல்பான செல்களில் மாற்றம் ஏற்பட்டு, அதிவேகத்தில் பெருக்கம் அடைந்து, புற்றுநோயை உருவாக்குகிறது.

யாருக்கு ஆபத்து அதிகம்?

  • திருமணத்துக்கு முன்பே (15 வயது அல்லது அதற்குக் கீழே) பாலுறவில் ஈடுபடும் பெண்களுக்கு.
  • ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுடன் பாலுறவு வைத்துக்கொள்ளும் பெண்களுக்கு.
  • பல பெண்களிடம் பாலுறவு வைத்திருக்கும் கணவர்களால், மனைவிகளுக்கு.
  • கொனோரியா, எய்ட்ஸ் போன்ற பால்வினை நோய்கள் உள்ள பெண்களுக்கு.
  • 15லிருந்து 45 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு.
  • பிறப்புறுப்பைச் சுத்தமாக வைத்துக்கொள்ளாத பெண்களுக்கு.
  • சுகாதாரமற்ற நாப்கின் பயன்படுத்தும் பெண்களுக்கு.

அறிகுறிகள் 

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்பட்டிருந்தால் உடனே அறிகுறிகள் தெரியாது. நோய் ஆரம்பித்து சில வருடங்கள் கழித்துதான் அறிகுறிகளை அடையாளம் காண முடியும். அதற்குள் நோய் பல கட்டங்களைக் கடந்துவிடும். எனவேதான், பெண்கள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசியம் என்று கூறுகிறார்கள்.

இந்த நோய் பாதிப்புள்ள பெண்களுக்கு அடிவயிறு கனமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். மாதவிலக்கின்போது வலியுடன் கூடிய ரத்தப்போக்கு ஏற்படுவதும், கட்டி கட்டியாக ரத்தப்போக்கு உண்டாவதும் இந்த நோய்க்கே உரித்தான அறிகுறிகள். சிலருக்கு அசாதரணமான வயிற்றுவலி அடிக்கடி வரும். பாலுறவின்போது அதிக வலி ஏற்படுவதும், ரத்தக்கசிவு உண்டாவதும், இரண்டு மாதவிலக்கு இடையில் திடீரென ரத்தப்போக்கு உண்டாவதும் இந்த நோயை அடையாளம் காட்டும் அறிகுறிகளே. துர்நாற்றத்துடன் கூடிய வெள்ளைப்படுதல், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் முற்றியுள்ளதைத் தெரிவிக்கின்ற முக்கிய அறிகுறி. மாதவிலக்கு நின்ற பிறகு திடீரென்று ரத்தப்போக்கு ஏற்படுமானால் இந்த வகைப் புற்றுநோய் இருக்க அதிக வாய்ப்புள்ளது. பசியின்மை, உடல் எடை குறைவது போன்ற துணை அறிகுறிகளும் இந்த நோயில் காணப்படும்.

என்னென்ன பரிசோதனைகள்?

திருமணமான எல்லாப் பெண்களும் ‘பாப் ஸ்மியர்’ (Pap smear) பரிசோதனையைக் கட்டாயம் செய்துகொள்ள வேண்டும். 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இரண்டு ஆண்டு இடைவெளியில் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்வது நல்லது. 65 வயது வரை இந்தப் பரிசோதனையை மேற்கொள்ள முடியும். மாதவிலக்கு முடிந்து 7 முதல் 14 நாட்களுக்குள் இந்தச் சோதனையைச் செய்துகொள்ளலாம். வலி எதுவும் இல்லாத பரிசோதனை இது. செலவும் குறைவு.

இந்தப் பரிசோதனையில், கர்ப்பப்பை வாயில் உள்ள செல்களை ஒரு கண்ணாடி தட்டில் தேய்த்துப் பரிசோதிக்கப்படும். இதில் செல்களின் வளர்ச்சி மாறுபட்டிருந்தால் அல்லது அபரிமிதமாக காணப்பட்டால், உடனே பயாப்சி எடுத்து கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும். இதன் மூலம் உயிரிழப்பைத் தடுக்க முடியும்.

அடுத்ததாக, ‘லிக்யுட் பேஸ்டு சைட்டாலஜி’ (Liquid based cytology) எனும்  ‘ஸ்கிரீனிங்’  பரிசோதனையின் மூலமும் இந்த நோயை வெகுத் துல்லியமாகக் கண்டறிய முடியும். இதுவும் வலி இல்லாத பரிசோதனைதான். இதற்கான செலவு கொஞ்சம் அதிகம். இவை தவிர, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மற்றும் சிடி ஸ்கேன் பரிசோதனை மூலமும் இந்த நோயைக் கண்டறியலாம்.

இப்போது பாப் ஸ்மியருக்குப் பதிலாக ‘விஷுவல் இன்ஸ்பெக்சன் வித் அச்சிட்டிக் ஆசிட்’ (Visual inspection with acetic acid - VIA) என்று ஒரு பரிசோதனையும், ‘விஷுவல் இன்ஸ்பெக்சன் வித் லூக்கால்ஸ் அயோடின்’ (Visual inspection with Lugol’s iodine - VILI) என்று ஒரு பரிசோதனையும் செய்யப்படுகின்றன. இந்த இரண்டும் மிக எளிமையான பரிசோதனைகள். கால்போஸ்கோப்பி எனும் கருவியின் உதவியுடன் புற்றுசெல்களை நேரடியாகப் பார்த்து நோயைக் கணிக்கின்ற பரிசோதனைகள். அரசு மருத்துவமனைகளில் இவை இலவசமாக மேற்கொள்ளப்படுகின்றன.

சிகிச்சை என்ன?

ஆரம்பநிலையில் உள்ள புற்றுநோய்க்குக் கதிர்வீச்சு மற்றும் மருந்து சிகிச்சை கொடுத்துவிட்டு கர்ப்பப்பையை அறுவை சிகிச்சை செய்து அகற்றிவிடுகிறார்கள். அடுத்துள்ள புற்றுநோய் நிலைகளுக்கு பெரும்பாலும் கதிர்வீச்சு மற்றும் மருந்து சிகிச்சை மட்டுமே கொடுக்கிறார்கள். அறுவை சிகிச்சை மேற்கொள்வதில்லை. கதிர்வீச்சு சிகிச்சையில் டெலிதெரபி, பிரேக்கி தெரபி என இரு வகை உண்டு. நோயாளியின் தேவையைப் பொறுத்து ஏதாவது ஒரு வகை பயன்படுத்தப்படும்.

வருமுன் காக்க...

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வராமல் இருப்பதற்குப் பெண்கள் பிறப்பு உறுப்பைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். பாலுறவு விஷயத்தில் தனி மனித ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். திருமணமாகும் வரை பாலுறவைத் தவிர்க்க வேண்டும். இரு குழந்தைகளுக்கு இடையில் 3 ஆண்டு இடைவெளி அவசியம். 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்டுக்கு ஒருமுறை ‘மாஸ்டர் ஹெல்த் செக்கப்’ செய்துகொள்ள வேண்டும்.

எளிதில் தடுக்கும் தடுப்பூசி!

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வராமலே தடுக்க ‘ஹெச்பிவி’ தடுப்பூசி (HPV vaccine) உள்ளது. உலகச் சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி 9 வயது முடிந்த சிறுமிகளுக்கு இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டால் கர்ப்பப்பை வாய் புற்றுநோயிலிருந்து 100% பாதுகாப்பு கிடைக்கும். இவர்களுக்கு இரண்டு தவணைகள் தடுப்பூசி போடப்பட வேண்டும். முதல் தவணையைப் போட்ட பிறகு 6 மாதங்கள் கழித்து இரண்டாவது தவணை போடப்பட வேண்டும். இப்படி 15 வயதுக்குள் போட்டுக்கொண்டால் நல்லது. அதற்கு பிறகு போடுவதாக இருந்தால், மூன்று தவணைகள் தேவைப்படும். அதாவது, முதல் ஊசிக்குப் பிறகு, இரண்டு மாதங்கள் கழித்து இரண்டாவது தவணை, ஆறு மாதங்கள் கழித்து மூன்றாவது தவணையைப் போட்டுக்கொள்ள வேண்டும். இப்படி 45 வயதுவரை போட்டுக்கொள்ளலாம்.

இப்போது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ‘ஹெச்பிவி’ தடுப்பூசி கிடைக்கிறது. இது விலை குறைவு. பயன்படுத்திக்கொள்ளலாம்.

(தொடர்ந்து பேசுவோம்…)

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கு.கணேசன்

கு.கணேசன், பொது நல மருத்துவர்; மருத்துவத் துறையில் உலகளாவிய அளவில் நடக்கும் மாற்றங்களை ஆழ்ந்து அவதானித்து, எளிய மொழியில் மக்களுக்கு எழுதும் பணியில் ஈடுபட்டிருப்பவர்; ‘சர்க்கரைநோயுடன் வாழ்வது இனிது!’, ‘நலம், நலம் அறிய ஆவல்’, ‘செகண்ட் ஒப்பினீயன்’ உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: gganesan95@gmail.com


6


1
அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

சோறுபொருந்து வேதிவினைசந்திரயான்-3டி.வி.பரத்வாஜ்பெரியதோர் துண்டுஉத்தரவாதம்… வலுவான எதிர்க்கட்சிகிராமம்ஆவின் நிறுவனம்சாஸ்திரங்கள்குழந்தைகளைக் கையேந்த விடாதீர்!வின்னி: இணையற்ற இணையர்!தமிழ் வம்சாவளிலீதுறை நிபுணர்கள்இரட்டை வேடம்ராஜகோபாலசாமிஉரையாடல்அவுனிthe wireஒழுக்கவாதியாக ஒளிர்ந்த ஐன்ஸ்டீன்கோட்ஸேஅம்பானி ரிலையன்ஸ்மேனாள் மத்திய நிதி அமைச்சர்புத்தாக்கத் திட்டம்பேராதைராய்டு ஹார்மோன்விஜயேந்திரர்சீன அரசுஸ்ரீராம் கிருஷ்ணன்கேரள மாதிரிநகைச்சுவை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!