கட்டுரை, ஆரோக்கியம், வரும் முன் காக்க 5 நிமிட வாசிப்பு

சர்க்கரை நோய் பாதங்களைப் பாதிப்பது ஏன்?

கு.கணேசன்
10 Mar 2024, 5:00 am
0

ண் சாண் உடம்பையும் தாங்குவது, பாதங்கள். ஆனால், அந்தப் பாதங்களைப் பாரமரிப்பதற்கு நாம் எத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறோம்? யோசித்துப் பாருங்கள். முகத்துக்குத் தருகிற முக்கியத்துவத்தைப் பாதங்களுக்கு நாம் தருவதில்லை என்பதுதான் நிஜம். பாதங்களைப் பராமரிப்பதன் மூலம் பல நோய்களில் இருந்து நம்மை நாம் காப்பாற்றிக்கொள்ள முடியும். அதிலும் சர்க்கரை நோய் இருப்பவர்களுக்குப் பாதப் பராமரிப்பு என்பது ரொம்ப ரொம்ப அவசியம்.

என்ன காரணம் தெரியுமா?

சர்க்கரை நோய் இல்லாதவர்களோடு ஒப்பிடும்போது, சர்க்கரை நோய் இருப்பவர்களுக்குக் கால் பாதிப்பு ஏற்படுகின்ற வாய்ப்பு 15 மடங்கு அதிகம். இன்னும் சொல்லப்போனால், சர்க்கரை நோயாளிகளுக்கு 85 சதவீதக் கால் இழப்புக்குக் காரணம், கால் புண்களே. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சர்க்கரை நோயாளிகளில் 20 சதவீதம் பேர் கால் பாதிப்புகளுக்காகவே அனுமதிக்கப்படுகின்றனர். பாத பாதிப்பு ஏற்பட்டவர்களில் 20 - 50 சதவீதத்தினர் அடுத்த 5 ஆண்டுகளில் இதய பாதிப்பு, சிறுநீரகப் பாதிப்பு போன்றவற்றால் உயிரிழக்கின்றனர்.

கால் பாதிப்பு சின்னதாக இருந்தால்கூட, அதைக் குணப்படுத்த அதிக செலவுசெய்ய வேண்டிவரும். அதேவேளையில், இவர்கள் கொஞ்சம் விழிப்புடன் இருந்தால், பாதங்கள் பாதிக்கப்படுவதைச் சுலபத்தில் தடுத்தும் விடலாம். இந்த விழிப்புணர்வு வர வேண்டும் என்பதற்காகவே, இந்தியாவில் பெரிய நகரங்களில் பாதங்களைப் பராமரிப்பதற்கென்றே தனி கிளினிக்குகள் (Foot Clinics) இப்போது தொடங்கப்பட்டுள்ளன.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

கால் பாதிப்பு – அறிகுறிகள்:

  • காலில் தொடு உணர்வு, வெப்ப உணர்வு குறைவது.
  • எரிச்சல், மதமதப்பு, ஊசி குத்தும் வலி.
  • கெண்டைக்கால் தசைகளில் குடைச்சல்.
  • பாதவெடிப்பு.
  • கால்ஆணி.
  • நகம் நிறம் மாறுவது.
  • தோல் நிறம் மாறுவது.
  • விரல் இடுக்குகளில் புண்.
  • கொப்புளம்.
  • ஆறாத புண்.
  • கால் வீக்கம்.

இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றிரண்டு தெரிந்தால்கூட உடனே மருத்துவரைப் பார்த்துவிட்டால் நல்லது.

கால் பாதிப்பு எப்படி ஏற்படுகிறது?

ரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை தேங்கும்போது, அந்த அதீத சர்க்கரை ‘சார்பிட்டால்’ எனும் வேதிப்பொருளாக மாறுகிறது. இது காலில் உள்ள புறநரம்புகளைச் சிறிது சிறிதாக அரிக்கிறது. இதனால், காலில் தொடுஉணர்வு குறையத் தொடங்குகிறது. அப்போது காலில் முள் குத்துவதுகூடத் தெரியாது. பகலில் நடக்கும்போது பஞ்சுமெத்தையில் நடப்பது போன்று இருக்கும். போகப் போக, பாதங்களில் எரிச்சல் ஏற்படும். ஊசி குத்தும் வலி ஆரம்பிக்கும். இந்த நிலைமைக்கு ‘டயபடிக் நியூரோபதி’ (Diabetic Nueropathy) என்று பெயர். இந்த நிலைமையில், காலில் அல்லது பாதங்களில் சின்னதாகப் புண் வந்தால்கூட அதை உணர முடிவதில்லை.

அடுத்து, இந்த நரம்பு பாதிப்பினால், பாத தசைகள் சுருங்குவதால், பாதத்தில் அழுத்தம் அதிகமாகும். இதனால், ‘கால் ஆணி’ (Callus) தோன்றும். புண்கள் ஏற்படும். மேலும், இவர்களுக்குப் பாதங்களில் வியர்வை குறைவாகச் சுரப்பதால், வெடிப்புகள் உண்டாகும். இந்த வெடிப்புகளில் தொற்றுக் கிருமிகள் சுலபத்தில் நுழைந்துவிடும். அப்போது வெடிப்புகளில் சீழ் வைத்துவிடும்.

இவை தவிர, கட்டுப்பாடில்லாத சர்க்கரை நோயாளிகளுக்குக் கால்களுக்குச் செல்லும் ரத்தக் குழாய்களும் பாதிக்கப்படும். இதனால், கால்களுக்கு ரத்த ஓட்டம் குறைந்து, கெண்டைக்கால் தசைகளில் குடைச்சல் ஏற்படும். கால் திசுக்களுக்கு ரத்த ஓட்டம் தடைபடுவதால், காலில் சிறிய அளவில் புண் வந்தால்கூட ஆறுவதற்குத் தாமதம் ஆகும். உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்த மிகைக் கொழுப்பு இருப்பவர்களுக்கு இந்தப் பாதிப்புகள் சீக்கிரமே வந்துவிடும்.

புகைப்பழக்கம் இருப்பவர்களுக்கு, புகை பிடிக்காதவர்களைவிட 100 மடங்கு அதிகமாக ரத்தக் குழாய் பாதிப்பு ஏற்படுவதால், அவர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சர்க்கரை நோயாளிகள் காலில் செருப்பு அணியாமல் நடக்கும்போது, முள், கல் போன்றவை குத்துவது தெரியாது. ஏதாவது லேசாக இடித்துவிட்டால்கூட புண்ணாகிவிடும். இது ஆரம்பத்தில் அவர்களுக்குத் தெரியாது. நாளடைவில், புண் பெரிதாகி சீழ் வைத்த பிறகு அல்லது குளிர் காய்ச்சல் வந்தபிறகுதான் தெரியவரும். அது பல சிக்கல்களை உருவாக்கும்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

ரத்தச் சர்க்கரை குறைவது ஏன்?

கு.கணேசன் 21 Jan 2024

சேற்றுப்புண்

பாதங்களில் நிறைய வியர்வை கொட்டுமானால், ‘அத்லெட் ஃபுட்’ (Athlete’s foot)  எனும் நோய் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இது ‘டீனியா பீடிஸ்’ (Tinea pedis) என்று அழைக்கப்படுகிற நோய். பூஞ்சைக் கிருமி விரல் இடுக்குகளைத் தாக்கி இந்த நோயை ஏற்படுத்துகிறது. சேற்றுப்புண் என்று சொல்கிறோம் அல்லவா? இதுதான் அது.

வீட்டு வேலைகளுக்காகத் தண்ணீரில் அதிக நேரம் புழங்கும் பெண்களுக்கும், இறுக்கமான ஷூக்களை நீண்ட நேரம் அணிந்திருப்போருக்கும் விரல் இடுக்குகளில் பூஞ்சை வளரத் தேவையான சூழல் நிலவுகிறது. இதனால் இவர்களுக்குச் சேற்றுப்புண் வருகிறது.

என்ன பரிசோதனைகள்?

கால்களில் பாதிப்பு இருப்பதை ஆரம்பத்திலேயே தெரிந்துகொள்ள கீழ்க்காணும் பரிசோதனைகள் உதவுகின்றன.

  • தோலில் தொடு உணர்வு சரியாக இருக்கிறதா என்பதைக் கண்டறியும் நுண்ணிழைப் பரிசோதனை (Monofilament Test).  
  • பாதங்களில் நரம்பு பாதிப்பு இருக்கிறதா என்பதை ஆரம்பத்திலேயே தெரிந்துகொள்ள உதவும் ‘பயோதிசியோமெட்ரி’ (Biothesiometry) பரிசோதனை.
  • கால்களுக்கு ரத்த ஓட்டம் சரியாக இருக்கிறதா என்பதை அறிய உதவும் ‘டாப்ளர் ஸ்கேன்’ (Doppler Scan) பரிசோதனை.
  • பாதங்களில் அழுத்தம் சரியாக இருக்கிறதா என்பதை அறிய உதவும் ‘பீடோபோடோகிராஃப்’ (Pedopodograph) பரிசோதனை.
  • ·இவற்றை ஆண்டுக்கு ஒருமுறையாவது செய்துகொள்ள வேண்டும்.

பாதப் பராமரிப்பு

பெரும்பாலான சர்க்கரை நோயாளிகள் தங்கள் கால்பாதப் பராமரிப்பின் அவசியத்தை ஆரம்பத்தில் உணர்வதில்லை. பாதங்களில் புண் அல்லது காயங்கள் வந்தபிறகு அவதிப்படுகின்றனர். இதைத் தவிர்க்க என்ன வழி?

  • தினமும் கால்களைக் கவனியுங்கள்.
  • காலையில் எழுந்ததும் அல்லது நடைப்பயிற்சி முடிந்ததும், பாதங்களைப் பரிசோதியுங்கள். கீழ்க்கண்ட அறிகுறிகள் ஏதாவது தெரிகிறதா எனத் தெரிந்துகொள்ளுங்கள்.
  • சிராய்ப்புகள், காயங்கள், கொப்புளங்கள்.
  • வெடிப்புகள், தோல் உரிவது, தோல் சுருங்குவது.
  • தோல் சிவப்பது, தோல் வீக்கம்.
  • தோல் நிறமாறுவது, தோல் கருப்பாவது.

தோலில் சிறிய சிராய்ப்பானாலும் சரி, சிறிதளவு நிறமாற்றம் தெரிந்தாலும் சரி, உடனே மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள்.

இதையும் வாசியுங்கள்... 6 நிமிட வாசிப்பு

சிறுநீரகமும் சர்க்கரையும் ரத்த அழுத்தமும்!

கு.கணேசன் 06 Nov 2021

கால் சுத்தம் மிக முக்கியம்!

முகத்தைப் பராமரிப்பது போன்று கால் மற்றும் பாதங்களைத் தினமும் காலை, மாலை இரு வேளை வெதுவெதுப்பான நீரால் சோப்புப் போட்டுக் கழுவி, ஈரம் போகத் துடைத்துச் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். முக்கியமாக விரல் இடுக்குகளில் சுத்தம் செய்யவும்.

கால்களுக்கு அதிகச் சூடும் ஆகாது; அதிக ஈரமும் ஆகாது. சூடு அதிகமானால், தோலில் கொப்புளம் வரும். ஈரம் அதிகமானால், விரல் இடுக்குகளில் பூஞ்சைத் தொற்று வரும். ஆகவே, கவனம் தேவை. முக்கியமாக, காலிலும் பாதத்திலும் சூடாக ஒத்தடம் தராதீர்கள்: வீரியமான தைலங்களைத் தடவாதீர்கள். 

தோலை ஈரப்படுத்துங்கள்

சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு நரம்பு பாதிப்பு ஏற்படுவதால் வியர்ப்பது குறைந்து, தோலில் வறட்சி ஏற்படும். இவ்வாறு வறண்ட தோலில் அரிப்பு, வெடிப்பு ஏற்பட்டுத் தொற்று உண்டாகலாம். இந்த மாதிரி தொந்தரவுகளைத் தவிர்க்க, தோலை அடிக்கடி ஈரப்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கு ஆலிவ் எண்ணெய் அல்லது பாரபின் எண்ணெயைத் தடவலாம்.

கால்களுக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்த வேண்டியது முக்கியம். அதற்கு என்ன செய்வது?

கால்களுக்கு ரத்த ஓட்டம் சரியாக இருந்தால்தான் கால் மற்றும் பாதங்களில் புண் ஏற்படாது. இதற்குக் கீழ்க்காணும் விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்:

  • நாற்காலியில் உட்காரும்போது கால்மேல் கால்போட்டு உட்கார வேண்டாம்.
  • மிகவும் இறுக்கமான காலுறைகளை அணிய வேண்டாம்.
  • தரையில் உட்காரும்போது, கால்களைக் குறுக்காக வைத்து அதிக நேரம் உட்காராதீர்கள். அப்படி உட்கார்ந்தால், ரத்தக்குழாய்களுக்கு அழுத்தம் அதிகமாகி, ரத்த ஓட்டம் தடைபடும். நரம்புகள் பாதிக்கப்படும்.
  • நேரம் கிடைக்கும்போதெல்லாம் கணுக்காலையும் பாதங்களையும் அசைத்துக்கொண்டேயிருங்கள்.

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

குதிகால் வலியைக் குறைப்பது எப்படி?

கு.கணேசன் 03 Jul 2022

நகங்களை வெட்டும்போது கவனம்!

விரல் நகங்களைக் கடிக்காதீர்கள். நகங்களைக் கவனமாக வெட்டுங்கள். முக்கியமாக, பிளேடால் நகங்களை வெட்டாதீர்கள். நகவெட்டியால் வெட்டுங்கள். நகங்களை ஒட்ட வெட்டாதீர்கள். முக்கியமாக, ஓரங்களில் உள்ள நகங்களை வெட்டும்போது அதிக கவனம் தேவை.

காலணியும் காலுறையும்

வெறுங்காலில் நடக்காதீர்கள். சரியான அளவுள்ள காலணிகளை அணியுங்கள். எம்.சி.ஆர். (MCR) அல்லது எம்.சி.பி. (MCP) காலணிகள் நல்லது. விரல் நுனிகளை மூடும் வடிவத்தில் உள்ள காலணிகள் பாதுகாப்பானவை. குதிகால் உயரமற்ற காலணிகள் உகந்தவை. வீட்டிலும் காலணி அணிந்திருப்பதே நல்லது. ஈரமான காலணிகளை அணியாதீர்கள்.

பிளாஸ்டிக் காலணிகளைத் தவிர்க்கவும். ஷூக்களை அணிவதற்கு முன்பு சிறு கற்கள் போன்ற சிறு பொருள்கள் ஏதாவது இருக்கிறதா என்று சோதித்துவிட்டு ஷூக்களை அணியுங்கள். வியர்வையை உறிஞ்சும் பருத்தியினாலான காலுறைகளை அணியுங்கள். சரியான அளவுள்ள காலுறைகளை அணியவும். நைலான் வகைகளைத் தவிர்க்கவும்.

ரப்பர் மற்றும் எலாஸ்டிக் வளையங்கள் உள்ள காலுறைகளைத் தவிர்க்கவும். அவை காலுக்கு ரத்த ஓட்டத்தைக் குறைக்கும். மெல்லிய காலுறைகள் நல்லது. தடித்த காலுறைகள் உரசும்போது காயங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், அவற்றைத் தவிர்க்கவும். பாதங்களுக்கு அவ்வப்போது மசாஜ் செய்வது நல்லது.

கால்ஆணி - கவனம்!

பாதங்களில் கால் ஆணி மற்றும் தோல்தடிப்பு இருந்தால், நீங்களாகவே பிளேடால் அல்லது கத்தியால் அறுத்து எடுக்காதீர்கள். இதற்கு டாக்டரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.

புகைபிடிக்காதீர்கள்

புகையில் உள்ள நச்சுப்பொருள் ரத்தக் குழாய்களை தடிக்கவைத்து, உட்சுவரை இறுக்கமாக்கிவிடும். இதனால், புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்குக் கால்களுக்கு ரத்த ஓட்டம் தடைபடும். இதனால், கால் புண்கள் ஆறக் காலதாமதம் ஆகும்.

நடைப்பயிற்சி அவசியம்

தினமும் நடைப்பயிற்சி செய்யுங்கள். இது கால்களுக்கு ரத்த ஓட்டம் சீராகச் செல்ல உதவும்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

நடைப் பயிற்சி எனும் அற்புதம்

கு.கணேசன் 13 Feb 2022

புண் ஆறத் தாமதம் என்?

சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டும் காலில் புண் வந்தால் ஆற வெகு நாட்களாகிறது என்பதை அறிந்திருப்பீர்கள் இதற்குக் காரணம் தெரிந்து கொள்வது நல்லது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தத் தவறினால் அது ரத்தக் குழாய்களையும் நரம்புகளையும் பாதிப்பதால், காலில் தொடு உணர்வும் வலி உணர்வும் குறையும். புண் இருக்கிற பகுதிக்கு ரத்தம் தேவையான அளவுக்குச் செல்வதில்லை. இதனால், புண் ஆறுவதற்கு உதவுகின்ற சத்துப்பொருள்கள் புண்ணுக்கு வந்து சேருவதில்லை.

புண் ஆறுவதற்குத் தரப்படும் மருந்துகளும் சரியான அளவுக்குப் புண் இருக்கிற இடத்திற்கு வந்து சேருவதில்லை. வலியும், தொடு உணர்வும் குறைவாக இருப்பதால் நோயாளிகள் பலருக்கு ஆரம்பத்தில் காலில் புண் இருப்பதே தெரியாமல், சிகிச்சை பெறாமல் இருக்கின்றனர். புண் பெரிய அளவில் வந்தபின்புதான் சிகிச்சைக்கே வருகின்றனர். மேலும், ரத்தச் சர்க்கரையும் இவர்களுக்கு அதிகமாக உள்ளதால் புண்ணில் இருக்கிற கிருமிகள் அந்தச் சர்க்கரையைச் சாப்பிட்டு நன்கு கொழுத்துவிடுகின்றன.

இது போன்ற பல காரணங்களால் சர்க்கரை நோயாளிகளுக்குக் காலில் புண் வந்தால் ஆற வெகு நாட்கள் ஆகின்றன.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

எகிறும் உடல் எடை : என்ன காரணம்?
நீரிழிவு: பெண்கள் ஏன் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?
ரத்தச் சர்க்கரை குறைவது ஏன்?
சிறுநீரகமும் சர்க்கரையும் ரத்த அழுத்தமும்!
குதிகால் வலியைக் குறைப்பது எப்படி?
‘கவுட்’ மூட்டுவலி வருவது ஏன்?
நடைப் பயிற்சி எனும் அற்புதம்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கு.கணேசன்

கு.கணேசன், பொது நல மருத்துவர்; மருத்துவத் துறையில் உலகளாவிய அளவில் நடக்கும் மாற்றங்களை ஆழ்ந்து அவதானித்து, எளிய மொழியில் மக்களுக்கு எழுதும் பணியில் ஈடுபட்டிருப்பவர்; ‘சர்க்கரைநோயுடன் வாழ்வது இனிது!’, ‘நலம், நலம் அறிய ஆவல்’, ‘செகண்ட் ஒப்பினீயன்’ உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: gganesan95@gmail.com


1






கருத்தியல் குரல்சிறிய மாநிலம்சமஸ் - ஜக்கி வாசுதேவ்இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம்கடல் வாணிபக் கப்பல்கள்ஒன்றிய அரசின் அதிகாரங்கள்அரசமைப்புச்சட்ட அதிகார அமைப்புகள் எதிர் அரசமைப்புசஇந்துத்துவ பரிசோதனைக்கூடம்அதிகாரத்தின் வடிவங்கள்ஆரிப் முகமது கான்மம்தாதூக்குத்தண்டனைநேர்முக வரிகண்காட்சிஊடக ஆசிரியர்கள்என்னைத் தூக்கில் போடுங்கள்: வி.பி.சிங்வசுந்தரா ராஜே சிந்தியாஇடதுசாரி கட்சிகள்ஜெனீவா உடன்படிக்கைஅரசியலர்கள்மத்திய பல்கலைக்கழகம்ஆங்கிலச் சொல்பின்தங்கிய பிராந்தியங்கள்உஷார்!ஏழ்மைஅதிகரிக்கும் மன அழுத்தம்அரசதிகாரம்இறைச்சிமூலக்கூறுஎழுத்தாளர்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!