கட்டுரை, வரும் முன் காக்க 6 நிமிட வாசிப்பு
சிறுநீரகமும் சர்க்கரையும் ரத்த அழுத்தமும்!
உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தின் முதல் எதிரி. நீரிழிவு அடுத்த எதிரி. இந்த இரண்டு எதிரிகளைத் தெரிந்துகொள்ளாமல் இருப்பதால், நாட்டில் 15% பேருக்குச் சிறுநீரகப் பாதிப்பு ஆரம்பக்கட்டத்தில் இருக்கிறது. நவீன வாழ்வியல் மாற்றங்களால் இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துவருகிறது. சாதாரண மருத்துவச் சிகிச்சையில் குணமாகும் நோய் இது. சரியான சிகிச்சையை, சரியான நேரத்தில் பெற்றுக்கொள்ளத் தவறுவதால் பலரும் வாரத்தில் மூன்று நாட்கள் ‘டயாலிஸிஸ்’ செய்யும் அளவுக்கு ஆபத்தைப் பெருக்கிக்கொள்கின்றனர்.
சிறுநீரகம் எப்படிப் பாதிக்கப்படுகிறது?
உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகத்தில் உள்ள நெப்ரான்கள் எனும் வடிகட்டிகளைச் சிதைத்துவிடுகிறது. இதனால் சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது. நீரிழிவுக்காரர்களுக்குச் சிறுநீரகம் பாதிக்கப்படுவது வேறுவிதம். ரத்தத்தில் இருக்கிற சர்க்கரை உடலுக்குப் பயன்படக்கூடிய சக்தியாக மாற வேண்டுமானால், அதற்கு இன்சுலின் வேண்டும். இன்சுலின் சரியான அளவில் இருக்கும்வரை சிறுநீரகத்தில் எல்லாப் பணிகளும் இயல்பாக நடக்கின்றன. இன்சுலின் அளவு குறைந்து ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், அந்தச் சர்க்கரை நேராகச் சிறுநீரகத்துக்குத்தான் வருகிறது.
இப்போது இந்த அதிகப்படியான சர்க்கரையையும் வெளியேற்ற வேண்டிய வேலை சேர்ந்துகொள்ள, சிறுநீரகத்துக்கு அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால், ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. நிமிடத்துக்கு நிமிடம் சிறுநீரகத்துக்கு அதிகப்படியான சர்க்கரை வந்துகொண்டே இருக்கிறது. சிறுநீரகமும் சளைக்காமல் அதைச் சிறுநீரில் வெளியேற்றிக்கொண்டே இருக்கிறது.
நீரிழிவு நோயுள்ளவருக்கு அடிக்கடி அதிகமாகச் சிறுநீர் கழிய இதுதான் காரணம். ஒரு கட்டத்தில் சிறுநீரகத்தால் இந்த வேலைப்பளுவைச் சமாளிக்க முடிவதில்லை. விளைவாக, பகலில் வேகமாகவும், இரவில் மெதுவாகவும் சிறுநீரை வடிகட்டக்கூடிய வடிகட்டிகள் செயலிழக்கின்றன. இதனால் இரவிலும் சிறுநீர் அதிகமாகப் போகிறது. நீரிழிவு உள்ளவர்கள் இரவிலும் அடிக்கடி சிறுநீர் போகிறார்கள் என்றால் இதுதான் காரணம்.
அடுத்ததாக, உடலுக்குத் தேவையில்லாத கழிவுகளை மட்டும் வெளியேற்றுகிற தன்மை இயல்பான சிறுநீரகத்துக்கு உண்டு. ஆனால், நோயின் காரணமாகச் சிறுநீரகம் இந்தப் பண்பையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து, உடலுக்குத் தேவையான தண்ணீர், தாதுக்களையும்கூட வெளியேற்றிவிடுகிறது. அதனால்தான் நீரிழிவு உள்ளவர்களுக்கு அதிக தாகம் எடுக்கிறது. அடுத்தகட்டமாக, வடிகட்டிகள் இன்னும் அதிகமாகச் சிதைவதால், உடலுக்கு மிகவும் அவசியமான அல்புமின் நுண் புரதமும் (Micro Albumin) சிறுநீர் வழியே வெளியேறுகிறது. களைப்புக்குக் காரணம் இதுதான்.
சாதாரணமாக, இந்தப் புரதம் சிறுநீரில் வெளியேறுவது இல்லை. சிறுநீரகம் பாதிக்கத் தொடங்கியதும்தான் இது வெளியேறும். சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிவிக்கும் முதலாவது அறிகுறி இதுதான். நாட்கள் ஆக ஆக இந்தப் பாதிப்பு அதிகமாகும். அப்போது ‘வெண்புரதம்’ (Albumin) வெளியாகும். 24 மணி நேரச் சிறுநீரில் ஆல்புமின் 20 மி.கி.வரை வெளியேறினால், அது நுண்புரதம் என்றும், 200 மிகி.க்கு மேல் வெளியேறினால் அதை வெண்புரதம் என்றும் கூறுகிறார்கள். வெண்புரதம் வெளியேறத் தொடங்கும்போது ரத்தத்தில் யூரியா அதிகமாகும். இந்தக் கட்டத்திலாவது சரியான சிகிச்சை கிடைத்துவிட வேண்டும். தவறினால், சிறுநீரகம் ஒட்டுமொத்தமாக தன்னுடைய வடிகட்டும் வேலையை நிறுத்திவிடுகிறது. அப்போது சிறுநீர் சிறிதளவும் பிரியாத அளவுக்கு நிலைமை மோசமாகிவிடுகிறது. அதுதான் கிட்னி ஃபெயிலியர்..... சிறுநீரகச் செயலிழப்பு!
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
யாருக்கு வாய்ப்பு அதிகம்?
நீரிழிவு நோயுள்ள அனைவருக்கும் சிறுநீரக பாதிப்பு (Diabetic Nephropathy) வந்துவிடாது. கீழ்க்காணும் பட்டியலில் இடம் பெறுகிறவர்களுக்கு அந்த வாய்ப்பு அதிகம். இவர்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 1. நீரிழிவைச் சரியான முறையில் கட்டுப்படுத்தத் தவறுபவர்கள். 2. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள். 3. அடிக்கடி சிறுநீரகத் தொற்று ஏற்படுபவர்கள். 4. புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள். 5. நீரிழிவு நோய் 15 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளவர்கள். 6. சிறுநீரகப் பாதிப்பு உள்ள பரம்பரையில் பிறந்தவர்கள்.
என்னென்ன அறிகுறிகள்?
இதுவரை நீரிழிவு மட்டும் இருந்து, உயர் ரத்த அழுத்தம் இல்லாதவர்களுக்குக்கூட சிறுநீரகம் பாதிக்கத் தொடங்கிய உடனேயே ரத்த அழுத்தமும் அதிகரிக்கும். பாதங்களில் வீக்கம் உண்டாகும். காலையில் கண் விழிக்கும்போது இமைகளுக்குக் கீழ் வீக்கம் உண்டாகும். சிறுநீர் பிரிவது குறையும். பசிக்குறைவு, களைப்பு, மூச்சுத் திணறல், நாக்கில் உலோகச் சுவையுணர்வு போன்ற பிற அறிகுறிகளை வைத்தும் சிறுநீரகப் பாதிப்பைத் தெரிந்துகொள்ளலாம். நோயை உறுதிப்படுத்த வேறு பரிசோதனைகளும் தேவைப்படும்.
பரிசோதனைகள் என்னென்ன?
சிறுநீரில் நுண்புரதப் பரிசோதனை, வெண்புரதப் பரிசோதனை, ரத்தத்தில் யூரியா, கிரியேட்டினின், தாதுக்கள் போன்றவற்றின் அளவுகளைப் பரிசோதிக்க வேண்டும். சிறுநீரில் புரதம் வெளியேறுவது தெரிந்தாலும் யூரியா 40 மி.கி.%க்கு அதிகமாகவும் கிரியேட்டினின் 1.2 மி.கி.%க்கு அதிகமாகவும் இருந்தால், சிறுநீரகப் பாதிப்பு உறுதிப்படும். தவிர, இஜிஎஃப்ஆர் (eGFR) அளவும் சிறுநீரக அல்ட்ரா சவுண்ட் பரிசோதனையும் சிறுநீரகத்தின் நிலைமையைக் காட்டும்.
இந்தப் பரிசோதனைகளை ஆண்டுக்கு ஒருமுறையாவது செய்துகொள்ள வேண்டும். அப்போதுதான் சிறுநீரகப் பாதிப்பின் அறிகுறிகள் வெளியில் தெரியும் முன்னரே, சிறுநீரகத்தின் நிலைமையைத் தெரிந்துகொண்டு, சிகிச்சை பெற்று, சிறுநீரகத்தைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
என்ன சிகிச்சை?
நோயின் தீவிரத்தைப் பொறுத்து சிகிச்சை அமையும். நோயின் ஆரம்பநிலையில் ரத்தச் சர்க்கரையையும் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தினாலே சிறுநீரக நோயும் கட்டுக்குள் வந்துவிடும். கடுமையான சிறுநீரகப் பாதிப்புக்கு ரத்தச் சுத்திகரிப்பு (Dialysis) தேவைப்படும். இந்தச் சிகிச்சையின்போது ஒரு இயந்திரத்தினுள் நோயாளியின் ரத்தத்தைச் செலுத்தி, அதில் உள்ள கழிவுகள் நீக்கப்பட்டு, சுத்தப்படுத்தி, மீண்டும் நோயாளியின் உடலுக்குள் செலுத்தப்படும். மீட்க முடியாத சிறுநீரக பாதிப்புக்குச் 'சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை' (Kidney Transplantation) தேவைப்படும்.
தடுப்பது எப்படி?
முதலில் இனிப்புள்ள உணவுகளைத் தவிர்க்கவும். மருத்துவரின் பரிந்துரைப்படி குடிக்கும் தண்ணீரின் அளவைக் கட்டுப்படுத்த வேண்டும். உணவில் உப்பின் அளவையும், புரதச் சத்துள்ள உணவுகளையும் குறைத்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக, நாளொன்றுக்கு 5 கிராமுக்குக் குறைவாக உப்பின் அளவு இருக்கட்டும். பால் மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட உணவுகள், பருப்பு, பயறு வகைகள் வேண்டாம். வத்தல், வடகம், சிப்ஸ், கருவாடு, ஊறுகாய், கிழங்குகள், வேர்கள், சாஸ் வேண்டாம். இறைச்சி உணவுகள் குறைவாக இருக்கட்டும். அரிசி, ரவை, கோதுமை போன்ற மாவுப்பொருளில் தயாரிக்கப்பட்ட உணவுகளையும் குறைத்துக்கொள்வது நல்லது. காய்கறி, பழங்களை அதிகப்படுத்தவும்.
புகை, மது வேண்டாம். மூட்டுவலி, முதுகுவலிக்கு வலி மாத்திரைகளைச் சுயமாக வாங்கிச் சாப்பிடும் பழக்கம் வேண்டாம். ஆஸ்துமாவுக்கு மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் ஸ்டீராய்டு மாத்திரைகளைச் சாப்பிட வேண்டாம். நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, யோகா உதவும். சிறுநீரகத் தொற்று, சிறுநீரகக் கல், புராஸ்டேட் வீக்கம் ஆகிய பிரச்சினைகள் இருந்தால் உடனே சிகிச்சை பெறுங்கள். சீரான கால இடைவெளிகளில் முழு உடல் பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள். சரியான வாழ்க்கைமுறைகளே சிறுநீரகத்தைப் பாதுகாக்கும் அரண்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்!
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
சூ.ம.ஜெயசீலன் 3 years ago
அருஞ்சொல் அணியிணருக்கு வணக்கம்! ஒரு குறிப்பிட்ட நாளுக்கான கட்டுரை ஒன்று நீங்கள் குறிப்பிட்டுள்ள மின்னஞ்சலுக்கு அனுப்பினேன். அந்த நாளும் கடந்துவிட்டது! கட்டுரை கிடைத்ததா இல்லையா? அருஞ்சொல்லில் வெளியிடும் தரம் உள்ளதா, இல்லையா என்கிற எவ்வித பதிலும் உங்களிடமிருந்து இல்லை! தகவல் வேண்டி, மீண்டும் மின்னஞ்சல் செய்தேன்…. வாட்சப் மற்றும் மெசெஞ்சரில் தகவல் அனுப்பினேன், அலைபேசியில் அழைத்தேன்… எதற்கும் பதில் இல்லை! எனவே, நான் அனுப்பிய கட்டுரையை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்! உங்கள் நாகரீகம் கண்டு வியக்கிறேன்! அணுகுமுறைக்கு நன்றி!
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.