கட்டுரை, ஆரோக்கியம், வாழ்வியல், வரும் முன் காக்க 5 நிமிட வாசிப்பு

நெஞ்சில் வலி ஏற்படுவது ஏன்?

கு.கணேசன்
26 Nov 2023, 5:00 am
0

நெஞ்சில் வலி வந்தால், அது ‘வாய்வு வலி’யாக இருக்கும் என நினைத்து, தகுந்த சிகிச்சை பெறாமல் அலட்சியமாக இருப்பவர்களும் இருக்கிறார்கள். அதேவேளையில் நெஞ்சு லேசாக வலித்தாலே அது மாரடைப்பாக இருக்குமோ என்று பயந்து மருத்துவமனைக்கு ஓடுபவர்களும் இருக்கிறார்கள். 

சாதாரண தசை வலியிலிருந்து இதய நோய் வரை பல நோய்களுக்கு நெஞ்சு வலி ஒரு முக்கிய அறிகுறியாக இருப்பதால், இதை அலட்சியப்படுத்தவும் முடியாது. அதேவேளையில் எல்லா நெஞ்சுவலியும் மாரடைப்பாகத்தான் இருக்கும் என்று எண்ணி, தேவையில்லாமல் பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை. நடைமுறையில் பெரும்பாலான நெஞ்சு வலிக்கு இதய நோய்கள் காரணமாக இருக்காது; வேறு காரணங்கள்தான் இருக்கும். 

காரணம் என்ன?

நெஞ்சு வலிக்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் இரண்டு காரணங்கள் மிக முக்கியமானவை. ஒன்று, ‘ஆஞ்சைனா’ (Angina pectoris) எனும் இதய வலி. மற்றொன்று, மாரடைப்பு (Myocardial Infarction). இவற்றை எந்த வகையிலும் அலட்சியப்படுத்தக் கூடாது. அப்படி அலட்சியப்படுத்தினால், உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.

ஆஞ்சைனா / மாரடைப்பால் ஏற்படுகிற நெஞ்சு வலியானது இதயத் தசையில் உருவாகி நெஞ்சில் உணரப்படுகிறது. இதயத் திசுக்களுக்கு ரத்தம் கொண்டு செல்லும் கொரோனரி தமனிக் குழாய்களில் (Coronary Arteries) கொலஸ்ட்ரால் படிந்து அதன் விட்டத்தைக் குறுகச் செய்வதுதான் இந்த வலிக்கு அடிப்படைக் காரணம். முதுமை காரணமாக தமனிக் குழாய் தடித்துப் போனாலும் இந்த நிலைமை ஏற்படுவதுண்டு. 

இதயத் தமனிக் குழாய் உள்அளவில் சுருங்கும்போது, இதயத் திசுக்களுக்குச் செல்லக்கூடிய ரத்தத்தின் அளவு குறைகிறது. நாம் ஓய்வாக இருக்கும்போது இதயத் திசுக்களுக்குத் தேவையான ரத்தம் கிடைத்துவிடும். ஆனால், உழைப்பு அதிகப்படும்போது இதயத் தசைகளின் தேவையும் அதிகரிக்கிறது. குறுகிவிட்ட இதயத் தமனியால் இந்தத் தேவையை ஈடுசெய்ய இயலாது. இதனால் இதயத் திசுக்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் மற்றும் உணவு கிடைக்காமால் அழியத் தொடங்கும். அந்தநேரத்தில் இதயத் தசைகள் எழுப்புகின்ற கூக்குரலே நெஞ்சு வலியாக உணரப்படுகிறது.

இதய வலி - அறிகுறிகள்

மாடிப் படிகளில் ஏறும்போதும், வேகமாக நடக்கும்போதும் நடுநெஞ்சில் பாரம் வைத்து அழுத்துவதுபோல் வலிக்கும். நடப்பதை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்துக்கொண்டால் அல்லது கிளிசரில் டிரைநைட்ரேட் (Glyceryl trinitrate) மாத்திரையை நாக்கின் அடியில் வைத்தால் நெஞ்சு வலி குறைந்துவிடும். 

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

மாரடைப்பு - அறிகுறிகள்

சிலருக்கு திடீரென்று நெஞ்சு முழுவதும் கயிறு கட்டி அழுத்துவதுபோல் கடுமையாக வலிக்கும். இந்த வலி தாடை, கழுத்து, இடது புஜம், இடது கை விரல்களுக்குப் பரவும். உடல் அதிகமாக வியர்க்கும். ஓய்வெடுத்தாலும் வலி குறையாது. நேரம் ஆக ஆக வலி கூடிக்கொண்டே போகும். மூச்சுத்திணறல் உண்டாகும். மயக்கம் வரும். இதுதான் மாரடைப்பு (Myocardial infarction).

இதய வலியைத் தூண்டும் சூழல்கள்

இந்த வலியை முதன்முறையாகத் தோற்றுவிக்கவும் அல்லது வலியை அதிகப்படுத்தவும் சில சூழல்கள் உதவுகின்றன. அவை: பரம்பரை. அதிக உடலுழைப்பு, கடுமையான அலைச்சல், அதிகமான உடற்பயிற்சி, நெடுநாள் உறக்கமின்மை. அளவுக்கு மீறிய கொழுப்பு உணவு. குளிர்ச்சி மிகுந்த தட்பவெப்பநிலையால் திடீரெனத் தாக்கப்படுவது. உயரமான இடங்களுக்குச் செல்வது. (எ.க) மாடிப்படி ஏறுதல், மலை ஏறுவது. மன அழுத்தம். அதிகமாக உணர்ச்சிவசப்படுவது. (எ.க) கோபம், கவலை, பயம், பீதி, விரக்தி, சண்டை. 

யாருக்கு அதிக வாய்ப்பு?

புகைபிடிப்போர், மது அருந்துவோர், உயர் ரத்த அழுத்தம், ரத்த மிகுக் கொழுப்பு, சர்க்கரை நோய், இதயத் தசை அழற்சி நோய் போன்ற நோயுள்ளவர்கள், உடற்பயிற்சி இல்லாதவர்கள், உடலுழைப்பே இல்லாதவர்கள், ஓய்வின்றி கடுமையாக உழைப்பவர்கள், பரபரப்பான வாழ்க்கை முறையைக் கையாள்கிறவர்கள், முதியோர்கள் ஆகியோருக்கு இந்த வகையான நெஞ்சு வலி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புண்டு. இப்போது இந்தப் பட்டியலில் கரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களும் சேர்ந்திருக்கிறார்கள்.

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

நெஞ்சில் எரிச்சல் ஏற்படுவது ஏன்?

கு.கணேசன் 20 Mar 2022

நுரையீரல் நோய்கள் 

‘நிமோனியா’ எனும் நுரையீரல் அழற்சி நோய், நுரையீரல் உறைக் காற்று நோய் (Pneumo thorax), நுரையீரல் உறை அழற்சி நோய் (Pleurisy), கடுமையான காசநோய் ஆகியவற்றிலும் நெஞ்சு வலி வரும். அப்போது துணை அறிகுறிகளாக இருமல் இருக்கும். இருமும்போது நெஞ்சு வலி அதிகரிக்கும். இழுத்து மூச்சுவிட்டால்கூட வலி அதிகமாகும். காய்ச்சல், சளி ஏற்படும். பசி குறையும். இந்த வலி பொதுவாக இளம் வயதினருக்கும் நடுவயதினருக்கும் வருகிறது. நுரையீரல் 

புற்றுநோய் உள்ளவர்களுக்கும் நெஞ்சில் வலி வரலாம். அப்போது சளியில் ரத்தம் கலந்துவரும். இது பெரும்பாலும் 50 வயதுக்குப் பிறகு வரும். மேற்சொன்ன அறிகுறிகள் மூலம் மாரடைப்பிலிருந்து மற்ற பிரச்சினைகளைப் பிரித்துணரலாம்.

நுரையீரல் ரத்த உறைவுக் கட்டி (Pulmonary embolism) காரணமாகவும் நெஞ்சில் வலி வரலாம். இது பெரும்பாலும் ரத்தக் குழாய் நோயுள்ளவர்கள், சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், நீண்ட காலமாகப் படுத்த படுக்கையாக இருப்பவர்கள், நெடுங்காலம் கருத்தடை மாத்திரைகளைச் சாப்பிடும் பெண்கள், சமீபத்தில் பிரசவித்த பெண்கள் ஆகியோருக்கு ஏற்படுவதுண்டு.

தசை / எலும்பு வலிகள்

மார்புப் பகுதியில் உள்ள தசை, நரம்பு, எலும்பு மற்றும் எலும்பிடைத் தசைகளில் உண்டாகும் நோய்கள் காரணமாக நெஞ்சில் வலி ஏற்படலாம். நெஞ்சில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் இந்த வலி வரலாம். வலியுள்ள பகுதியைத் தொட்டு அழுத்தினால் வலி அதிகரிக்கும். உடல் அசைவின்போதும் மூச்சுவிடும்போதும் வலி அதிகரிக்கும். மார்பில் அடிபடுவது, தசைப் பிசகு, மார்பு / விலா எலும்பு முறிவு போன்றவை இவ்வகை நெஞ்சுவலியை உண்டாக்கும். 

உணவுப்பாதை புண்கள்

தொண்டையில் தொடங்கி இரைப்பை வரை உணவு செல்ல உதவும் உணவுக்குழாய் இரைப்பை, முன்சிறுகுடல் ஆகியவற்றில் புண்கள் ஏற்படும்போது நெஞ்சில் வலிக்கும். பொதுவாக, இந்த நோயாளியிடம் உணவுக்கும் நெஞ்சு வலிக்கும் நெருங்கியத் தொடர்பு இருப்பதை அறிய முடியும். இந்த நோயின் முதல் அறிகுறி நெஞ்சுப்பகுதியில் எரிச்சல் ஏற்படுவதுதான். 

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

நடைப் பயிற்சி எனும் அற்புதம்

கு.கணேசன் 13 Feb 2022

காரணம் என்ன?

நெஞ்செரிச்சலுக்கு அடிப்படைக் காரணம், இரைப்பையில் இருக்கும் அமிலம் தன் எல்லைக்கோட்டைக் கடந்து, உணவுக்குழாய்க்குள் தேவையில்லாமல் நுழைவதுதான். இந்த அமில அலைகள் அடிக்கடி மேலேறி வரும்போது, அங்குள்ள திசுப்படலத்தை அரித்துப் புண்ணாக்கிவிடும். இதனால், நெஞ்செரிச்சல் ஏற்படும். 

மிகவும் இனிப்பான, காரமான, கொழுப்பு மிகுந்த உணவுகளை அடிக்கடி சாப்பிட்டால் உணவுக்குழாயின் கீழ்முனைக் கதவு பழசாகிப்போன சல்லடை வலை போல 'தொள தொள' வென்று தொங்கி விடும். விளைவு, இரைப்பையில் இருக்கும் அமிலம் மேல்நோக்கி வரும்போது, அதைத் தடுக்க முடியாமல் உணவுக்குழாய்க்குள் அனுமதித்துவிடும். இந்த நிலைமையில் உள்ள நெஞ்செரிச்சலுக்குத் தகுந்த சிகிச்சை பெறத் தவறினால், இரைப்பையில் புண் உண்டாகும்.

அப்போது அடிக்கடி புளித்த ஏப்பம் உண்டாகும். பசி இல்லாமல் இருக்கும். குறைந்த அளவு உணவு சாப்பிட்ட உடனேயே வயிறு நிரம்பிவிட்ட உணர்வு உண்டாகும். பிறகு, வயிற்றில் வலி தோன்றும். குறிப்பாக, இரைப்பை காலியாக உள்ள நள்ளிரவு நேரங்களிலும், விடியற்காலையிலும் மேற்புற வயிற்றில் அடிக்கடி வலி வரும். புண் உள்ள இடத்தில் அமிலம் படுவதால், இந்த வலி ஏற்படுகிறது. அதுபோல் உணவு சாப்பிட்ட பின்பும் இதே வலி உண்டாகும். காரணம், புண்ணின் மீது உணவு படுவதால் இப்படி வலி ஏற்படுகிறது. பொதுவாக, சாப்பிட்டதும் வயிற்றுவலி அதிகமானால், அது கேஸ்ட்ரிக் அல்சர். சாப்பிட்டதும் வலி குறைந்தால், அது டியோடினல் அல்சர். இவற்றைத் தவிர, குமட்டலும் வாந்தியும் வரும்.

உளவியல் காரணங்கள் 

குடும்பத்தில் சண்டை, இழப்பு, பொருளாதார நெருக்கடி, வேலைப் பளு, வேலையின்மை, தனிமை, வாழ்க்கையில் தோல்வி, தேர்வு பயம், கோபம் போன்ற காரணங்களால் ஏற்படுகிற மனச்சோர்வு, மன அழுத்தம், மனப் பதற்றம், பரபரப்பான வாழ்க்கைமுறை ஆகியவற்றாலும் நெஞ்சு வலி ஏற்படுகிறது. 

பிற நோய்கள்

மகாதமனிக் குழாய் வீக்கம், இதய வெளியுறை அழற்சி நோய், அக்கி அம்மை, அஜீரணம், கணைய நோய், பித்தப்பை நோய், கடுமையான ரத்தசோகை, தைராய்டு பிரச்சினைகள் காரணமாகவும் நெஞ்சில் வலி வரலாம்.    

இதையும் வாசியுங்கள்... 8 நிமிட வாசிப்பு

மது என்ன செய்யும்?

கு.கணேசன் 27 Mar 2022

பரிசோதனைகள் என்ன?

வழக்கமான ரத்தப் பரிசோதனைகளுடன் ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு ஆகியவை பரிசோதிக்கப்படும். இவை தவிர, மார்பு எக்ஸ்-ரே, இசிஜி, எக்கோ, சிடி ஸ்கேன், டிரட்மில், எண்டோஸ்கோப்பி போன்ற பரிசோதனைகளும் தேவைப்படும். இவற்றின் மூலம் காரணம் தெரிந்து சிகிச்சை பெற்றுவிட்டால் நெஞ்சு வலி விடைபெற்றுக்கொள்ளும்.

இதய வலிக்கு முதலுதவி 

இதய வலி அல்லது மாரடைப்புக்கான அறிகுறிகள் தெரியவரும்போது உடனடியாக ஆஸ்பிரின் 325 மி.கி. அட்டார்வாஸ்டாடின் 80 மி.கி. குளோபிடோகிரில் 150 மி.கி. சாப்பிட்டால், (இதை ‘லோடிங் டோஸ்’ (Loading Dose) என்கிறார்கள்) கொரோனரி தமனி ரத்தக் குழாயில் ரத்தம் உறைவது தடுக்கப்படும். இதன் பலனாக மாரடைப்பின் தீவிரம் குறைந்து நெஞ்சில் வலி குறையும். இந்த முதலுதவியைத் தொடர்ந்து எவ்வளவு விரைவாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுகிறோமோ அந்த அளவுக்கு உயிருக்கு ஆபத்து வருவதைத் தடுக்க முடியும்.

தடுப்புமுறைகள்

  1. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. பான்மசாலாவைப் பயன்படுத்தக் கூடாது.
  2. சரியான உடல் எடையைப் பராமரிக்க வேண்டும்.
  3. தினமும் முறையாக உடற்பயிற்சி / யோகாசனம் / தியானம் செய்ய வேண்டும்.
  4. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொழுப்புக் கோளாறு போன்றவற்றுக்குச் சரியான சிகிச்சை செய்து அவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.
  5. கொழுப்புள்ள உணவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
  6. மாசடைந்த சுற்றுச்சூழலைத் தவிருங்கள். அசுத்தமான காற்றுதான் பல நுரையீரல் நோய்களுக்குக் காரணம்.
  7. அசுத்த உணவுகளைச் சாப்பிடாதீர்கள். 
  8. இரைப்பைப் புண் உள்ளவர்கள் சமச்சீரான உணவை அடிக்கடி சிறிது சிறிதாக சாப்பிடுவது நல்லது. மசாலா மிகுந்த, காரம் நிறைந்த, எண்ணெயில் பொரித்த உணவுகளை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்துச் சாப்பிட வேண்டும். பட்டினி கிடக்கக் கூடாது. விரதம் வேண்டாம். நேரத்தோடு சாப்பிடும் பழக்கம் முக்கியம்.
  9. வேகவைத்த இந்தியப் பாரம்பரிய உணவுகளை அதிகப்படுத்துங்கள். விரைவு உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிக இனிப்புப் பண்டங்கள், புளித்த உணவுகள் ஆகியவற்றை ஓரங்கட்டுங்கள். 
  10. நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் சாப்பிட்டதும் படுக்கக் கூடாது. இரண்டு மணி நேரம் கழித்துப் படுக்கப்போவது நல்லது. படுக்கையின் தலைப்பகுதியை அரை அடியிலிருந்து ஒரு அடி வரை உயர்த்திக்கொள்வது மிக நல்லது,
  11. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகள், ஆஸ்துமா மற்றும் அலர்ஜி நோய்களுக்குத் தரப்படுகின்ற ஸ்டீராய்டு மாத்திரைகள், மூட்டுவலி மாத்திரைகள் போன்றவற்றைத் தேவையில்லாமலும் அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடக் கூடாது.
  12. மன அழுத்தம் தவிருங்கள். 
  13. தேவையான அளவுக்கு ஓய்வும் உறக்கமும் அவசியம்.
  14. நெஞ்சில் அடிபடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325
                          

தொடர்புடைய கட்டுரைகள்

நுரையீரல் புற்றுநோயைத் தடுப்பது எப்படி?
நெஞ்சில் எரிச்சல் ஏற்படுவது ஏன்?
நடைப் பயிற்சி எனும் அற்புதம்
மது என்ன செய்யும்?
உயர் ரத்த அழுத்தம்: புரிந்துகொள்ள எளிய வழிமுறைகள்
குறை ரத்த அழுத்தம்: சமாளிப்பது எப்படி?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கு.கணேசன்

கு.கணேசன், பொது நல மருத்துவர்; மருத்துவத் துறையில் உலகளாவிய அளவில் நடக்கும் மாற்றங்களை ஆழ்ந்து அவதானித்து, எளிய மொழியில் மக்களுக்கு எழுதும் பணியில் ஈடுபட்டிருப்பவர்; ‘சர்க்கரைநோயுடன் வாழ்வது இனிது!’, ‘நலம், நலம் அறிய ஆவல்’, ‘செகண்ட் ஒப்பினீயன்’ உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: gganesan95@gmail.com


1

1





நிரந்தர வேலைபிஜு பட்நாயக்இஸ்லாமிய வெறுப்புபொருளாதாரச் சுதந்திரம்என்.சி.அஸ்தனாஒன்றிய அரசின் அதிகாரங்கள்இல்லாத தலைமை!அரசியல் எழுச்சிசந்துருஅகில இந்திய ஒதுக்கீடுஇயந்திரமயம்காதல் - செக்ஸ்தகவல்கள்எப்படி இருந்தது பண்டைய தமிழகம்?ஜின்னாசனாதனம்பார்க்கின்சன் நோய்க்கு நவீன சிகிச்சை!சமஸ் விபி சிங்ஹிஜாப் தடைமகுடேஸ்வரன் கட்டுரைவிநாயக் தாமோதர் சதுர்வேதிதேசிய அரசியல் கட்சிஏழு கடமைகள்கரோனா வைரஸ்பிரதமரின் மௌனம்திருப்பதி லட்டுபுவியியல் அமைப்பு எனும் சவால்ஸ்பைவேர்ஸ்டார்ட் அப்இந்தியா

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!